உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 21, 2016
பார்வையிட்டோர்: 12,841 
 
 

மின் விசிறி சத்தமில்லாமல் சுழன்று கொண்டிருந்தது. சிவராமன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வெளிர் நீல நிறத்தில் வெள்ளையில் குறுக்குக் கோடுகள் போட்ட சட்டை அணிந்திருந்தார். எண்ணெய் வைத்த படிய வாரிய தலை. அவருக்கு முன்னால் செவ்வக வடிவில் பெரிய மேஜை . மேஜையின் இடது ஒரத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் காற்றில் லேசாய் பட படத்துக் கொண்டிருந்தது. வலது பக்கத்தில் ப்ரொளன் நிற முன் அட்டை போட்ட கனமான புத்தகம் ஒன்றும், அதன் மேல் நீல நிறத்தில் ஒன்றும் சிவப்பு நிறத்தில் ஒன்றும் என இரண்டு பேனாக்கள் இருந்தன. மேசையின் நடுவே சிறிய வெள்ளை நிற பேர் பலகை ஒன்று இருந்தது. அதில் கருப்பு நிறத்தில் “டாக்டர் ஆதிகேசவன் – மன நல மருத்துவர்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அந்த பலகையின் பின்னே, டாக்டர் ஆதிகேசவன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். முடிகளற்ற முன் தலை. பின்னந்தலையில் நேர் கோடாய் வெள்ளை முடி. கறுப்பு நிறத்தில் வட்ட வடிவ கண்ணாடி. கையில் வைத்திருந்த கோப்பின் பக்கங்களைப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தார். படிப்பதை நிறித்தி விட்டு சிவராமனைப் பார்த்தார்.

“சிவராமன், எனக்கு எப்படி சொல்றதுனு தெரியலை. யூர் டாட்டர்….ஷி ஹஸ்… டிஸ்லெக்சியா.”

சிவராமன் விழித்தார்.

“நீங்க என்ன சொல்றீங்கனு புரியல டாக்டர்.”

ஆதிகேசவன் கையில் இருந்த கோப்பை மேஜையின் மேல் வைத்தார்.

“சிவராமன், உங்க பொண்ணு போர்த் ஸ்டாண்டார்ட் தானே படிக்கறா?”

“ஆமா டாக்டர்.”

“அடிக்கடி ஸ்கூல் மாத்தியிருக்கீங்க போல.”

இதற்கு தான் காத்திருந்தவர் போல் மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிவராமன்.

“ஆமாம் டாக்டர். எந்த ஸ்கூல்லயும் அவளுக்கு பாடம் சொல்லி கொடுக்க யாரும் விரும்பல டாக்டர். எல்லா ஸ்கூல்லயும் அவ மேல எக்கச்சக்க கம்ப்ளெயிண்ட். ஒழுங்கா படிக்க மாட்டேங்கறா. பென்சில் கூட இன்னும் ஒழுங்கா பிடிக்க தெரியல. இங்க்லீஷ்ல ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக். புக் படிக்க சொன்னா பாதி லைன் படிக்கறதே இல்ல. மேக்ஸ்ல நம்பர்ஸ்லாம் தலை கீழா படிக்கறா. ஹேண்ட் ரைட்டிங் சுத்த மோசம். எதுவுமே ஞாபகம் வைச்சுக்க மாட்டேங்கறா. இன்னும் என்னலாமோ சொல்றாங்க டாக்டர். அவ போர்த் தான் படிக்கறா. அவ என்னவோ காலேஜ் படிக்கற மாதிரி படுத்தி எடுக்கறாங்க. இது போறாதுனு இந்த புது ஸ்கூல் பிரின்ஸ்பல், என் பொண்ணுக்கு என்னவோ மன நோய் மாதிரி உங்க கிட்ட அனுப்பி டெஸ்ட்டலாம் பண்ண வைச்சிருக்காங்க.”

ஆதிகேசவன் சிவராமன் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

” நாங்க அவ சின்ன பொண்ணு, வளர வளர சரியாயிடுவானு நினைச்சோம். ஆனா அவளுக்கு எதோ ப்ரச்சனை இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. நீங்க வேற புதுசா ஏதோ பேர் சொல்றீங்க. இது ஏதாவது பெரிய வியாதியா டாக்டர்?” சிவராமன் குரல் உடைந்து, தழுதழுத்தது. “கல்யணம் ஆகி பதிமூணு வருஷம் கழிச்சு தான் அவ பொறந்தா டாக்டர். அவளுக்கு போய் இந்த மாதிரி…….”

ஆதிகேசவன் கண்ணாடியை கழற்றி மேசையில் வைத்தார். இரு கைகளாலும் முகத்தை தேய்த்துக் கொண்டார்.

“சிவராமன், டிஸ்லெக்ஸியாங்கறது டிஸீஸ் இல்ல. இட் இஸ் அ டிஸெபிலிட்டி. அதாவது இயலாமை. டிஸ்லெக்சியா பாதிக்கபட்ட குழந்தைகள் பாக்கறதுக்கு நல்லா ப்ரைட்டா, இண்டெலிஜெண்டா இருப்பாங்க. ஆனா படிக்கறது, எழுதறுது, வர்ட்ஸ் ஸ்பெல் பண்றது எல்லாத்துலயும் கொஞ்சம் பின் தங்கி இருப்பாங்க. இப்ப உங்க பொண்ண எடுத்துக்கங்க. நல்லா பாடறா. பஸ்ல்ஸ் குடுத்தா வேகமா ஸால்வ் பண்ணிடறா. ஒரு கதை சொல்லிட்டு க்விஸ்டின் கேட்டா, டக் டக்னு பதில் சொல்றா. ஆனா எழுதறதும் படிக்கறதும் மட்டும் அவளால முடியாது. அவ எப்படி எழுதுவா, படிப்பானு உங்களுக்கே தெரியுமே.”

“இதுக்கு ஏதாவது மருந்து இருக்கா, டாக்டர்?”

ஆதிகேசவன் சின்னதாய் சிரித்தார்.

“இது மருந்தால குணமாகறது இல்ல, சிவராமன்.”

மருந்தால் குணமாகாது என்ற சொன்ன டாக்டரை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா. கண்களில் குளமாய் கண்ணீர். வாயை மடித்து அழகையைக் கட்டு படுத்திக் கொள்ள முயன்று, முடியாமல் தோர்த்துப் போனாள்.

“அப்ப எங்கப்பாவுக்கு இனிமே என்னையோ, எங்கம்மாவையோ ஞாபகமே வராதா டாக்டர்? ”

மீண்டும் உடைந்து அழ ஆரம்பித்தாள். தன் முன் அழும் பெண்ணைப் பார்த்தார் டாக்டர் காஞ்சனா. தூரிகை பிடித்து வண்ணங்களை வாரி இறைத்து ஒவியங்களுக்கு உயிர் கொடுக்கும் பெண், இப்பொழுது யாரோ கலைத்த ஒவியமாய் உருகி உடைந்து கொண்டிருப்பது அவர் வயிற்றைப் பிசைந்தது. இந்த இருபத்தியாறு வயதில் அவள் ஓத்த பெண்கள் வேலை, வாழ்க்கை, திருமணம் என்று ஒடிக் கொண்டிருக்க, இவள் தந்தையை நோயிடமிருந்து மீட்க போராடிக் கொண்டிருக்கிறாள்.

“நித்யா, நான் டாக்டரான இந்த முப்பது வருஷத்துல எத்தனையோ அல்சைமர் பேஷண்டஸ பாத்துருக்கேன். ஆனா உங்கப்பா இஸ் வெரி டிஃபரண்ட். அல்சைமர்னால அவரால எதுவும் ஞாபகம் வைச்சுக்க முடியறதில்லை. எங்க இருக்கோம்னு தெரியல. ஒழுங்கா பேச முடியல. . ராத்திரிக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரியல. இவ்வளவு இருந்தாலும் ஃபிஸிக்கலி நல்லா இருக்கார். அவர் ப்ளட் ரிப்போர்ட் எல்லாம் நார்மலா இருக்கு.”

அவள் ஒன்று கேட்க தான் ஒன்று சொல்வதாய் டாக்டர் காஞ்சனாவிற்கு தோன்றியது.

“டாக்டர், ஒண்ணு தெரியுமா? அவர் என் பேர் சொல்லி கூப்ட்டேரொம்ப நாளாச்சு …” தொண்டை அடைத்து மீண்டும் அழுகை வர, கட்டுப் படுத்திக் கொண்டாள். ” எனக்கு என்னோட பழைய அப்பா திரும்ப வேணும். நான் யாருனு அவருக்கு தெரியணும். என் கை பிடிச்சு ட்ராயிங் வரைய கத்துக் கொடுத்த அந்த அப்பா எனக்கு திரும்ப வேணும். அவரோட நான் நிறைய பேசணும். என் கூட அவர் நிறைய பேசணும். அவர் கை பிடிச்சு நடந்து போகணும். அவரோட உக்காந்து சாப்படணும்……”

“நித்யா…..” அவள் இட்ட பட்டியலில் ஏதேனும் ஒன்று நடப்பதற்கு கூட சாத்தியக் கூறுகள் குறைவு என்று அவளுக்கே தெரிந்திருந்தாலும் தான் சொன்னால் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்று தெரிந்து வார்த்தைகளை கவனமாக கோர்த்தார் டாக்டர் காஞ்சனா. “உலகத்துல என்னலாமோ அதிசயம் நடக்குது. அத மாதிரி நமக்கும் நடக்கட்டுமே. நீயும் உங்கம்மாவும் உங்கப்பாவோட நிறைய பேசுங்க. அவர வீல் சேர்ல உக்காத்தி வைச்சு வெளில கூட்டிட்டு போங்க. அவருக்கு பாட்டு பிடிக்கும்னா வீட்டுல பாட்டு போட்டு விடுங்க. உன் ட்ராயிங்க்ஸ்லாம் அவர் கிட்ட காட்டி ஏதாவது பேசு. இதெல்லாம் நீ ஆல்ரெடி பண்ணிட்டு இருந்தாலும், இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எஃபர்ட் எடுத்துக்கோ. லெட் அஸ் ஹொப் ஃபார் த பெஸ்ட்.”

“லெட் அஸ் ஹொப் ஃபார் த பெஸ்ட்” என்ற டாக்டர் ஆதிகேசவனின் வார்த்தைகள் சிவராமனுக்கு ஆறுதல் அளித்தது.

” உங்க பொண்ணுக்கு மத்த எல்லா பசங்களுக்கும் சொல்லித் தரா மாதிரி பாடம் சொல்லித் தர முடியாது. கொஞ்சம் எக்ஸ்ட்ரா அட்டன்ஷன் குடுத்து சொல்லித் தரணும். ஃபார் எக்ஸாம்ப்ல், வைட் சாக்பீஸ்ல எழுதறாதோட கலர் சாக்பீஸ்ல எழுதினா அவளுக்கு புரிஞ்சுக்கறதுக்கு ஈசியா இருக்கும். நான் இந்த ஸ்கூல் ப்ரின்ஸ்பால்க்கு ஒரு லெட்டர் தரேன். அவங்க கிட்ட குடுங்க. ஷி வில் அண்டர்ஸ்டாண்ட். நீங்களும் வீட்ல என்ன பண்ணனும் சொல்லித் தரேன். அத ஃபாலோ பண்ணுங்க. அதுவும் தவிர இந்த மாதிரி பசங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்துல இண்ட்ரஸ்ட் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும். உதாரணத்துக்கு உங்க பொண்ணுக்கு பாட்டுல இண்ட்ரஸ்ட் இருக்கு. அவள என்கரேஜ் பண்ணுங்க. வருங்காலத்துல அவ பெரிய சிங்கர் ஆகலாம். நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறதுக்கு க்யூல நிக்கலாம்…….”

“டாக்டர்……” இடைமறித்தார் சிவராமன். ” நீங்க சொல்றது எல்லாம் நல்லா தான் இருக்கு. இதெல்லாம் நடக்குமா?”

” ஏன் நடக்காது ? நம்ம ஆல்பர்ட் ஐன்ஸ்டைண்,ஐசக் ந்யூட்டன், க்ராஹாம் பெல், வால்ட் டிஸ்னி இவங்க எல்லாருமே டிஸ்லெக்சியாவால பாதிக்கப் பட்டவங்க தான். அவங்களால சாதிக்க முடிஞ்ச போது உங்க பொண்ணால சாதிக்க முடியாதா? நம்பிக்கையோட இருங்க. கட்டாயமா உங்க பொண்ணு ஒரு நாளைக்கு நல்லா வருவா.”

டாக்டரின் வார்த்தைகளை சிரமேற்கொண்டார் சிவராமன். ஆல்பர்ட் ஐண்ஸ்டைனையும், ஐசக் ந்யூட்டனையும் மனதில் வைத்துக் கொண்டார். வீட்டிற்குச் செல்லும் வழியில் கரும்பலகை ஒன்றையும், பல வண்ணத்தில் சாக்பீஸ்களையும் வாங்கிக் கொண்டார். சுவரொட்டி ஒன்றில் பிரபல கர் நாடக சங்கீத பாடகி ஒருவரின் இசைக் கச்சேரியைப் பற்றிய விவரங்களைக் கண்டவர், தன் பெண் வருங்காலத்தில் இசையில் கொடிக் கட்டிப் பறப்பது போல் நினைத்துப் பார்த்தார். கண்கள் பனிக்க வீடு நோக்கி பித்துப் பிடித்தவர் போல் விரைந்தார் சிவராமன்.

“கண்ணம்மா……” செருப்பை அவிழ்த்தபடி குரல் கொடுத்தார். மனைவியின் அடுக்குடக்கான கேள்விகள் அவருக்குக் கேட்கவில்லை. பத்து வயது கண்ணம்மா அவரை ஓடி வந்து கட்டிக் கொண்டது.

“இத பாத்தயா, உனக்கு போர்ட்டும், கலர், கலரா சாக்பீஸும் வாங்கிட்டு வந்திருக்கேன்,” கடை பறப்பினார் சிவராமன்.

“ஹை..கலர் சாக்பீஸ். எங்க ஸ்கூல்ல எப்பவும் வைட் சாக்பீஸ் தான்….” என்று சொல்லியபடியே சாக்பீஸால் கரும்பலகையில் ஏதோ கோடு கிழித்தது.

“நானும் எழுதட்டுமா?”

“அந்த ப்ளூ கலர் சாக் எடுத்துக்கோ,” நிமிர்ந்து பாக்காமல் பேசியது.

நீல நிற சாக்பீஸில் தொடங்கியது பயணம். தன் பெண் எழுதுவதை அவர் கற்றுக் கொண்டார். பின்னர் அவர் எழுதுவதை பெண் கற்றுக் கொண்டது. புத்தகம் படிக்கும் வழக்கமே இல்லாதவர், அவளுடன் உட்கார்ந்து புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தார். அப்பாவுடன் புத்தகம் படிப்பது அந்த குட்டிப் பெண்ணிற்கு மிகவும் பிடித்து போனது. எழுத்துக்கள் முன்னும் பின்னும் காட்சி அளித்து படிப்பதே கடினமாய் இருந்தாலும், தப்பும் தவறுமாய் படித்த போதிலும் விடாமல் புத்தகங்களாய் படித்து தள்ளியது. பள்ளியில் நடந்தவைகளை மிகுந்த சிரமத்துடன் நினைவில் வைத்துக் கொண்டு,அவரிடம் வந்து சொன்னது. பெண் ஒரு படி முன்னேற , சிவராமன் இரண்டு படி முன்னேறி அவளுக்காக காத்துக் கிடந்தார். அவரின் உலகம் மகளாய் மாறிப் போனது. தந்தையிடம் பாடம் கற்ற பெண், தாயிடம் பாட்டுக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. தாயிடம் கற்றதை தந்தையிடம் பாடிக் காட்டியது. சங்கீதத்தைப் பற்றி ஏதும் தெரியாவிட்டாலும், தன் பெண் பாடுவதை ஆர்வத்துடனும், ஆனந்தத்துடனும் ரசித்தார். தலையசைத்து ரசித்த தந்தையை பார்த்து அந்த பெண் சிரித்தது.

“நான் நல்லா பாடறேனாப்பா?” தந்தையின் இடது கை விரல்களை ஆராய்ந்த படி கேட்டது.

“அருமையா பாடற கண்ணம்மா” சிவராமன் பெண்ணின் தலையை வாஞ்சையுடன் வருடினார்.

“இந்த பாட்டு உனக்கு பிடிச்சுருக்கா?”

இந்த பாடல் பிடித்திருக்கிறதா என்று நித்யா கேட்க, அவள் தந்தை இதழ் விரித்து குழந்தை போல் சிரித்தார். ஒடிந்த தேகம். ஒடிந்த தேகத்துக்கு சந்தன நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் உயிர் கொடுத்தது. தும்பைப்பூவாய் நரைத்த முடி. நெற்றியில் மெல்லிய கோடாய் விபூதி. கனமில்லாத கருப்புக் கண்ணாடி. எங்கோ போவதற்கு தயாராய் இருப்பது போல் சோஃபா விளிம்பில் அமர்ந்திருந்தார். வாயை அசைத்து பற்களை ஒன்றொடொன்று கடித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்து அமர்ந்தாள் நித்யா. அவளைப் புரிந்து கொள்ள அவரால் இயலவில்லை.

“நீ யாரு?” குழறலாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

தினம் கேட்கும் அதே கேள்வி. தினம் அவள் படும் அதே பாடு. தான் யார் என்று விளக்கி சொன்னாலும், புரிந்து கொள்ளாத நிலையில் அவர். துக்கம் சிறு பந்தாய் தொண்டையை அடைத்தது. மனதை மாற்ற நினைத்தாள்.

“இந்த பாட்டு யார் பாடிருக்கா, தெரியுமா அப்பா?”

“ரவி நிக்கறான் பாரு. அவன இங்க வர சொல்லு,” கையை அசைத்து யாரையோ வரும்படி செய்கை செய்தார். அவர் காண்பித்த திசையில் யாரும் இல்லை. எப்பொழுதோ தன்னுடன் வேலைப் பார்த்த ரவியை நினைவில் வைத்திருக்கும் அவருக்கு, பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண்ணைத் தெரியவில்லை.

“ரவிய நாளைக்கு வர சொல்றேன். நீ சாப்ட்டாச்சா? அம்மா…” சமையலறைப் பக்கம் பார்த்து கூப்பிட்டாள்.

“நீ வரதுக்கு முன்னாடி தான் சாப்ட்டார்…..” சொல்லியபடியே அம்மா வெளியில் வந்தாள்.

“அது யாரு?” தன் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

“நீ சொல்லு.”

“அம்மா”

“யாரோட அம்மா?”

“என்னோட அம்மா,” குழறலாய் பேசிய படியே சிரித்தார்.

தொண்டை பந்து உருகி கண்களில் நீராய் தேங்கியது. “நான் உன் பொண்ணுபா, அது உன் மனைவிப்பா, நிஜத்துக்கு வாப்பா” என்று அவரை உலுக்கிக் கதற வேண்டும் போல் இருந்தது. வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எதிரே மேஜை மேல் இருந்த பத்திரிக்கைகளிலிருந்து ஒன்றை எடுத்து சர சரவென பிரித்தாள். ஒரு பக்கம் வந்ததும் நிறுத்தி அவரிடம் காண்பித்தாள்.

“இதாம்ப்பா, இந்த வார தொடர்கதைக்கு என்னோட ட்ராயிங்.”

அவள் காமித்த பக்கத்தில் அழகாய் ஒரு ஒவியம். அந்த ஒவியத்தில் கோட்டு, சூட்டு,டை, அணிந்த ஒரு மத்திம வயது ஆண் மகன். அவன் எதிரில் சட்டையில்லாத ஒரு கிராமத்து மனிதன், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தான். பிண்ணனியில் ஒரு சிறு கோவில். அந்த ஒவியத்தின் கீழே வலது புறத்தில் “நித்யா” என்று கருப்பு மையில் எழுதப் பட்டிருந்தது.

“அப்பா, இந்த கோட்டு போட்டுருக்காரே அவர் உன்னை மாதிரியே இருக்கார் இல்ல? உன் சின்ன வயசு ஃபோட்டோவ பாத்து தான் வரைஞ்சேன். அந்த வயசுல நல்லா இருப்ப அப்பா. இப்ப தான் தலை எல்லாம் நரைச்சு, ரொம்ப ஒல்லியா போயிட்ட. ஏம்ப்பா இப்படி பண்ற? ”

அவள் சொல்வதை எதுவும் காதில் வாங்காமல் இடது கையால் வலது கையை திருப்பிக் கொண்டிருந்தார்.

“பத்திரிக்கை ஆஃபிஸ்லேந்து ஃபோன் பண்ணாங்கப்பா. படம் ரொம்ப நல்லா வந்திருக்குனு சொன்னாங்க. அந்த பெரிய ஆர்ட்டிஸ்ட் காய்சினவேந்தன் இல்ல, அவர் கூட ஃபோன் பண்ணி ரொம்ப அருமையா வந்திருக்குனு சொன்னாங்க அப்பா. ஆனா, நீ மட்டும் எதுவேமே சொல்ல மாட்டேங்கற. நீ தான வரைய சொல்லிக் குடுத்து, என்ன ட்ராயிங் க்ளாஸ்க்கு கூட்டிட்டு போய், என்ன என்கரேஜ் பண்ணி, காம்பட்டிஷன்ல சேத்து, என்ன ப்ரைஸ் வாங்க வைச்சு……” அதற்கு மேல் சொல்ல முடியாமல் அவள் தொண்டை அடைத்தது. “நீ என்ன பாத்துகிட்ட அளவுக்கு, நான் உன்ன பாத்துகறனானு தெரியலையேப்பா,” கைகளால் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

கைகளால் முகம் புதைத்து அழும் மகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் விழித்தார் சிவராமன்.

“கண்ணமா, எதுக்கு இப்படி அழற?”

கண்களைப் புறங்கையால் துடைத்துக் கொண்டது.

“அப்பா…..” பெரிதாய் தேம்பிற்று. “என் க்ளாஸ்ல எல்லாம் நல்லா படிக்கறாங்கப்பா. எனக்கு மட்டும் படிக்கவே வரல.”

சிவராமன் விக்கித்துப் போனார்.

“நீ நல்லா படிக்கறேயேமா. நல்லா எழுதற. யார் சொன்னா நீ நல்லா படிக்கலனு?”

“என் களாஸ் ரம்யா சொன்னா. எனக்கு படிப்பு வரலையாம். என்னோட அவ நல்லா படிக்கறாளாம். என்னோட அவ நல்லா பாடறளாம். என்னால எதுவுமே கத்துக்க முடியாதாம்….”

“அவ சின்ன பொண்ணுமா. ஒண்ண பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது கண்ணம்மா…..”

“அப்பா, எனக்கு இனிமே பாட்டு கத்துக்க வேணாம்……” என்று சொல்லிய படியே அவரிடம் ஒரு காகிதத்தை காண்பித்தது.

காண்பித்த காகிதத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த தந்தைக்கு விளக்கம் சொன்னாள் நித்யா.

“இந்த வருஷம் சித்திர கலா அகாடமியோட “சிறந்த ஒவியர் ” விருதுக்கு என்ன செலக்ட் பண்ணிருக்காங்களாம். அதான் எழுதிருக்கு அந்த பேப்பர்ல. அந்த விருது வாங்கும் போது இரண்டு வார்த்தை என்ன பத்தி சொல்லணுமாம். என்ன பத்தி சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லபா. உன்ன பத்தி தான்பா சொல்லணும். நிறைய சொல்லணும். நீ முதல் முதலா கலர் சாக்பீஸ் வாங்கிட்டு வந்தயே, அதுலேந்து சொல்லணும்ப்பா……”

பேசுவதை நிறுத்தி விட்டு அவருக்கு ஏதாவது நினைவிற்கு வருகிறதா என்று அவரை உற்றுப் பார்த்தாள்.

தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார் சிவராமன்.

“யார் இந்த ட்ராயிங் வரைஞ்சுது?” அவள் காட்டிய காகித்தில் இருந்த அழகான ஒவியத்தைப் பார்த்துக் கேட்டார்.

“நான் தான்பா. நான் நல்லா வரையரேனு எங்க டீச்சர் கூட சொன்னாங்கப்பா. நான் ட்ராயிங் க்ளாஸுக்கு போகட்டும்மா? பாட்டு வேணாம்ப்பா. போர் அடிக்குது.”

பெரிய பாடகியாக வருவாள் என்று நினைத்தார். ஆனால், இன்று பாட்டை விட்டு ஓவியம் தீட்ட ஆசைப்படுகிறாள். ஏமாற்றம் எட்டிப் பார்த்தாலும், அவள் எது செய்தாலும் அதற்கு உறுதுணையாக இருந்து, அவளை உயரச் செய்வதே தன் கடமை என்று முடிவெடுத்தார்.

“அதுக்கு என்னம்மா. தாரளாமா கத்துக்கோ. இங்க பக்கத்துல ட் ராயிங் சொல்லித் தரவங்க யாராவது இருக்காங்களானு பாக்கறேன்.”

“நல்ல அப்பா,” கன்னத்தைக் கிள்ளியது. “நான் நல்லா ட்ரா பண்ண கத்துபேன். அப்புறம் எல்லாரும் என் ட்ராயிங் எல்லாம் பாத்துட்டு ரொம்ப சூப்பரா இருக்குனு கைத்தட்டுவாங்க.”

கைத்தட்டலால் அந்த அரங்கம் நிரம்பியது. சத்தம் அடங்கும் வரை காத்திருந்த நித்யா பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு என்ன பேசறதுனு தெரியல. நான் பேசறது கோர்வையா கூட இருக்காது. வீட்டுலயே ப்ரிப்பேர் பண்ணி எழுதிட்டு வந்து இங்க பேசிருக்கலாம். ஆனா உங்க எல்லார் மாதிரியும் என்னால எழுத முடியாது. நான் எழுதறதுல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கும். சரி, அப்படியே எழுதிட்டு வந்தாலும், என்னால கட கடனு படிக்க முடியாது. ஏன்னா நான்…..எனக்கு டிஸ்லெக்சியா இருக்கு…..” இரண்டு வினாடிகள் மொளனமானாள்.

“ரொம்ப ஈஸியா இன்னிக்கு சொல்றேன் எனக்கு டிஸ்லெக்சியா இருக்குனு. ஆனா சின்ன வயசுல ரொம்ப கஷ்ட்டப் பட்டேன். “பி”க்கும் “டி”க்கும் என்னால வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. டீச்சர் “நிலா” னு போர்ட்ல எழுதினா என்னால படிக்க முடியாது. ரெண்டே வார்த்தை தான். ஆனாலும் என்னால படிக்க முடியாது. இதெல்லாம் விட ரொம்ப கஷ்ட்டம் என்னால ஸ்கூல் புக் எல்லாம் படிக்க முடியாது. நாலு வார்த்தை கஷ்ட்டப்பட்டு படிக்கறதுக்குள்ள முதல் ரெண்டு வார்த்தை மறந்து போயிடும். ஸ்கூல்ல டீச்சர்ஸ் திட்டுவாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நான் படிக்கறத பாத்து கலாட்டா பண்ணுவாங்க…..” அன்று பட்ட அவஸ்தைகள் இன்று நினைவில் வந்து தொண்டையை அடைத்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“இன்னிக்கு டிஸ்லெக்சியா பத்தி இருக்கற அவர்னஸ் இருவது வருஷத்துக்கு முன்னாடி இருந்ததானு எனக்கு தெரியல. அந்த இருவது வருஷத்துகு முன்னாடி எனக்கு டிஸ்லெக்சியானு கண்டு பிடிச்ச டாக்டர் ஒரு பெரிய வரம். அதுக்கும் மேல என் அப்பா. என் கூடவே எனக்க்காக அவரும் கஷ்ட்டப் பட்டார். எனக்கு எழுத்துக்கள கூட்டி படிக்கறது கஷ்ட்டங்கறதால, படம் வரைஞ்சு எனக்கு சொல்லிக் கொடுத்தார். என் கூடவே உக்காந்து நிறைய புக்ஸ் படிப்பார். கூடவே தான் படிக்கறது ஆடியோ கேஸ்ட்ல ரெக்கார்ட் பண்ணுவார். அவர் இல்லாத சமயங்கள்ல நானும் என் அம்மாவும் அந்த கேஸ்ட்கள போட்டு படிப்போம். இன்னும் எவ்ளவோ பண்ணிருக்கார்…….” கண்களில் நீர் வர நெற்றி முடியை சரி செய்வது போல் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“அவர் அடிக்கடி சொல்வார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், க்ராஹம் பெல் இவங்க எல்லாருமெ பெரிய மேதைகள்னு தான் உலகத்துக்கு தெரியுமே தவிர அவங்களுக்கு டிஸ்லெக்சியா இருந்ததுனு யாருக்கும் தெரியாது. அவங்கள மாதிரியே நீயும் ஒரு நாளைக்கு பெரிசா வருவ, அப்ப உன் டிஸ்லெக்சியா பத்தி யாரும் பேசமாட்டாங்க. எங்கப்பா சொன்ன மாதிரியே இன்னிக்கு பெரிசா வந்துட்டேன். சிறந்த ஒவியர்னு பட்டம் வாங்கிட்டேன். ஆனா அவருக்கு எதுவும் தெரியாது. எதையும் புரிஞ்சுக்கற நிலமைல அவர் இல்ல. பழசெல்லாமும் மறந்துட்டார். என்னையும் சேர்த்து…..” அனுமதி இல்லாமல் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டாள். “இந்த மேடைல சக்கர நாற்காலில உக்காந்து இருக்காரே, அவர் தான் என் வாழ்க்கையின் வெற்றிக்குக் காரணமானவர். என் அப்பா சிவராமன்……”

நடப்பது எதுவும் புரியாமல் எங்கோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் சிவராமன்.

1 thought on “உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

  1. கதை மிகவும் மனதைத் தொடும் அளவிற்கு இருந்தது.எதனுடைய தாக்கத்தால் நீங்கள் இக்கதையை எழுத ஆரம்பித்தீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *