தேவ புருசன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 1,088 
 

நந்தவனத்தில் பூத்த மலர்களின் நறுமணம் நாசியை மகிழ்வித்தது. இடை விடாமல் இசை போல் ஒலிக்கும் வண்டுகளின் ரீங்காரம் செவிகளின் பசியைப்போக்கியது. பசுமையான புல்வெளி கண்களைக்குளிர்ச்சியாக்கியது. கன்வனின் கைகளின் வருடல் மொத்த உடலையும் சிலிர்க்கச்செய்தது. அவன் கொடுத்த அமிர்தம் நாக்கின் சுவை மீதிருந்த பேராசையைப்போக்கியது. ஆக ஐம்புலன்களும் ஒரு சேர திருப்தியடைந்திருந்தன.

கார தேசத்து இளவரசி கனிகாவுக்கு முதற்கண்ட நிகழ்வுகள் நடந்ததை வான தேவதை மேலிருந்து பொறாமையாகப்பார்த்ததால் ஏற்பட்ட திருஷ்டியோ, என்னவோ மரக்கிளை முறிந்து கீழே நின்றிருந்த கன்வன் மீது குறி வைத்தது போல் விழுந்ததில் அதிசயத்தக்க வகையில் அவனுக்கு காயம் ஏதுமாகவில்லை. பதிலாக இளவரசிக்கு முகத்தில் கீரலாகக்காயம் பட்டு ரத்தம் வடிய, அரண்மனையே அல்லோல கல்லோலப்பட்டது. கன்வன் யார் கண்களிலும் படாமல், தன் உருவத்தை இளவரசிக்கு மட்டும் தெரிவது போல், மற்றவர்களது கண்களுக்குத்தெரியாதது போல் மறைத்தும், மறைந்தும் நின்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

கன்வன் தேவலோகத்தில் வாழ்பவன். அசுரர்களுடன் தேவர்களும் கூடி பாற்கடலைக்கடைந்த போது திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை உண்டதால் பிறப்பு, இறப்பு இல்லாதவன். உருவமாகவும், அருவமாகவும் மாறும் தன்மை கொண்டதோடு எவ்வுலகிலும் நினைத்த மாத்திரத்தில் சஞ்சாரம் செய்யக்கூடியவன். 

வானமார்க்கமாக பூலோகத்தைக்கடந்த போது இந்த அரண்மணை நந்தவனத்தில் பூத்த மலர்களின் நறுமணத்தால் ஈர்க்கப்பட்டு கீழே வந்தவனுக்கு நந்தவனத்தில் மலர்களோடு மலர்களாக பூஜைக்கு மலர்களைப்பறித்துக்கொண்டிருந்த இளவரசி மீது காதல் கொண்டான். 

இளவரசியும் கடந்த வருடம் நடந்த சுயம் வரத்தில் தேவலோக புருசன் போல் தனக்கு வரன் வேண்டும் எனக்காத்திருந்தவளுக்கு, வந்தவர்களில் அப்படிப்பட்ட லட்சணம் கொண்டவர்கள் யாரும் இல்லாததால்  ‘இந்த பூமியில் என்னைக்கவரும் அளவுக்கு யாரும் பிறந்திருக்கவே வாய்ப்பில்லை. எனவே எனக்கு திருமணமே வேண்டாம்’என சொன்னவளுக்கு கன்வனைப்பார்த்த மாத்திரத்தில் பிடித்துப்போனது.

“உனது பெயர்…?”

“கன்வன்”

“கள்வன் என வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்”

“ஏனோ…?”

“உன்னை நான் கண்ட மாத்திரத்தில் எனது மனதைத்திருடி விட்டாயே….? அது மட்டுமல்ல, அந்நியர்கள் யாரும் வர முடியாத நந்தவனத்துக்குள் பிரவேசித்துள்ளாயே…? யாராலும், எப்படிப்பட்ட வீரனாலும் நுழைய முடியாத முதலைகள் நிறைந்த அகழியைக்கடந்து, காவலர்கள் கண்களில் மண்ணைத்தூவி, அரண்மனைக்குள் நுழைந்து, அந்தப்புரப்பணிப்பெண்களின் கண்களில் படாமல் இங்கு வருவது சாத்தியமில்லை! நீ எப்படி வந்திருப்பாய் ?என நினைக்கும் போதே மயக்கம் வருகிறது. நீ யார்…? எந்த தேசம் உன்னுடையது…? நீ பார்ப்பதற்கு மன்னர் மகன் போல் இருக்கிறாய்! ஆனால் ஒரு மந்திரவாதியைப்போல் நடந்து கொள்கிறாய்….”

“எந்த தேசம்? எனக்கேட்கக்கூடாது”

“பின்னே…?”

“எவ்வுலகம்? எனக்கேட்பது பொருத்தமாக இருக்கும்.”

“வேறு உலகமா…?! நீங்கள் வேற்றுலகவாசியா?” மயக்கம் வருவது போல் உணர்ந்து சுதாரித்துக்கொண்டு, “அப்படியென்றால் எவ்வுலகம்….?”

“தேவர் உலகம்….”

“தேவர் உலகமா….?!” கேட்டு வியந்து, அதிச்சியடைந்து, மயங்கிச்சரிந்தவளை தனது மடியில் கிடத்தி, நீர் தெளித்து மயக்கம் போக்கினான்.

கண் விழித்தவள் காண்பது கனவா? நனவா? என யோசிப்பதற்குள் மரக்கிளை முறிந்து கள்வன் மீது விழ, அவனது கைகளைப்பற்றி இழுத்தாள். அவனுக்கு நேராகத்தான், அவனைக்குறி வைத்தது போல் தான் விழுந்தது கிளை! ஆனால் அவனுக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. தள்ளி நின்ற இளவரசிக்குத்தான் சாறுகாயம் ஏற்பட்டது. இச்சம்பவம் மேலும் அவளை வியக்க வைத்தது.

அதற்குள் பல பேர் கூடி விட்டார்கள். இளவரசியை பல்லக்கில் வைத்து அரண்மணை அந்தப்புரத்துக்கு கொண்டு சென்று, பெண் வைத்தியரை அழைத்து சிகிச்சையளித்தனர்.

சோர்வினாலும், காயத்தின் வலி தெரியாமலிருக்கக்கொடுக்கப்பட்ட உறக்க மூலிகைச்சாறு அருந்தியதாலும் கண நேரத்தில் உறங்கிப்போனாள் இளவரசி கனிகா.

காலையில் கண் விழித்து எழுந்த போது தன்னை தன் கண்களாலேயே நம்ப முடியாதபடி உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக்கண்டு ஆச்சர்யப்பட்டதோடு, மகிழவும் செய்தாள்.

அறைக்கு வெளியே சென்ற போது அவளது தாய் சாரா தேவி கூட அந்நியப்பெண்ணைப்பார்ப்பது போல பார்த்தாள். தனது மகளையே அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் எதுவும் பேசாமல் கடந்து சென்றாள்.  தந்தையின் அறைக்குச்சென்ற போது அறிமுகமில்லாத யாரோ தனது அறையில் அத்துமீறி நுழைந்து விட்டதாகக்கருதியவர், சற்று யோசித்து கனிகா பேசிய பேச்சால் தன் மகள் தான் இவளென்று புரிந்து தானும் பேசினார்.

“என் அருமை மகளே… என்ன கோலம் இது?! கடல் கடந்த மேற்கு தேசத்து பெண்களைப்போல் உனது தோலின் நிறம் வெண்மையாக மாறியுள்ளதே…? பார்க்க நன்றாகத்தான் இருக்கிறாய்! இருந்தாலும் தமிழ் பெண் போல இல்லையென்று பலர் சந்தேகிக்கக்கூடுமே…? நான் எவ்வாறு மாப்பிள்ளை பார்ப்பது. முன்பு உனக்கிருந்த நிறத்திற்கேற்ப சுயம்வரத்தில் மாப்பிள்ளை ஒருவரும் இல்லையென்று ஒதுக்கிய, ஒதுங்கிச்சென்ற நீ தேவலோகப்பெண் போல மாறிய பின் தேவலோக மாப்பிள்ளை தான் வேண்டுமென அடம்பிடித்தால் நானொன்றும் விஸ்வாமித்திரர் இல்லையே…. தேவலோகம் வரை செல்லும் திறனும், அதற்க்கான வழியும் எனக்குத்தெரியாதே…?”என வருந்தினார்.

“கவலையை விடுங்கள் தந்தையே… தேவ புருசன் ஒரு நாள் உன்னைத்தேடி வருவான் என அடிக்கடி என்னிடம் கூறுவீர்களே….உங்கள் வாக்கு நேற்றே பலித்துவிட்டது. நேற்று என்னைத்தேடி வந்து சென்றார். அவரது ஸ்பரிசம் என் மீது பட்டதற்கே நானும் தேவலோக மங்கையாக மாறிவிட்டேன் எனும் போது அவரை மணம் புரிந்தால் பறக்கும் சக்தியும், உடலையே மறைக்கும் சக்தியும் கிடைக்கும் என நம்புகிறேன் “எனக்கூறிய போது மன்னரும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கியே விட்டார்.

“தனது மருமகன் தேவலோகவாசியா? புராணங்களிலும், இதிகாசங்களிலும் தேவலோகம் பற்றி எழுதப்பட்டிருக்கும் செய்தி உண்மை தானா? என இருந்த சந்தேகம் இன்றோடு அகன்றது” என்றவர், “மாப்பிள்ளையை இப்போது வரவழைக்க முடியுமா?” என்று கேட்டார்.

“நான் நந்தவனத்தில் மலர் பறித்துக்கொண்டிருந்தபோது அவராகவே வந்தார். மரக்கிளை முறிந்து அவர் மீது விழுந்த போது அவர் லாவகமாகத்தப்பித்ததோடு அருகிலிருந்த என்னைத்தொட்டுத்தூக்கி காப்பாற்றியவர் பின் அங்கிருந்து சென்று விட்டார். இல்லையில்லை மறைந்து விட்டார். ஆனால் என்னை மறந்திருக்க மாட்டார் எனக்கருதுகிறேன். தற்போது அவரை எவ்வாறு வரவழைப்பது எனும் உபாயம் எதுவும் தெரியவில்லையே…? அந்தப்புறத்திலேயே அவரை நினைத்து தியானம் செய்கின்றேன். வருவதற்கு வாய்ப்பு உண்டு என்றவள் தனது அறைக்குள் சென்றாள்.

சிறிது நேரத்தில் அவள் முன் தோன்றிய கன்வன் நேற்று பார்த்ததை விட கூடுதல் அழகுடன் காட்சியளித்தான். அவளைக்கட்டித்தழுவினான். அவளது பெற்றோரை சந்தித்து இளவரசியை திருமணம் செய்து கொள்ளவதாக சம்மதம் தெரிவிக்க, தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடந்தன. இளவரசியை தேவலோகத்தைச்சேர்ந்த ஒருவன் திருமணம் செய்து கொள்ளப்போவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவனது மேனியழகைப்பார்க்கவே பல்லாயிரம் பேர் கூடி விட்டனர். மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

அந்தப்புற முதலிரவு அறையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் பூரித்துப்போய் கணவனான கன்வனை நெருங்கினாள் இளவரசி கனிகா.

அவனது முகம் அக்னி நட்சத்திர வெயிலில் வாடியிருக்கும் மலர் போல் வாடியிருந்தது. ‘தேவலோக மனிதனான தான் அங்குள்ள மனைவியை மறந்து, அவளுக்கு துரோகம் செய்து பூலோகவாசியை திருமணம் செய்து அவளோடு கூடி மகிழ்ந்திருக்கப்போவதைத்தெரிந்தால் சாபம் விட்டு விடுவாளோ? அதனால் தனது உருவம் மாறி விட்டால் இங்கும் வாழ முடியாமல், அங்கும் செல்ல இயலாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போல் ஆகி விட நேருமோ?’ எனும் கவலையால் குழப்பமான மன நிலையிலும் இளவரசியான தனது பூலோக மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற அருகில் சென்று அணைத்துக்கொண்டான். 

கணவனாகிய கன்வனின் அணைப்பே உடலைத்தாண்டி உயிரையும் மகிழ்வித்ததாக உணர்ந்தவள், இந்த நிலையிலேயே எப்போதும் இருக்க முடியுமென்றால் கூட தனக்கு பூரண சம்மதம் தான். உலகில் வேறு அனைத்தையும் மறக்கச்செய்யும் வல்லமை காமத்துக்கு மட்டுமே உள்ளது. பூலோகவாசி ஒருவனாலும் தன்னை இந்தளவுக்கு மகிழ்வித்திருக்க முடியாது’ என நினைத்தவள் தன்னை முழுமையாக அவனிடம் இழந்தாள்‌. கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தைப்போல் அறிவின் கட்டுப்பாட்டைக்கடந்து மனதுக்கு பிடித்தபடி இன்ப உலகத்துக்கே சென்று வந்தாள். 

சகஜ நிலை திரும்பியதும் அவனது பேரழகை முழுவதுமாக ரசித்துக்கொண்டிருந்த சமயம் அவனது உடல் ஒரு பாம்பின் உருவமாக மாறுவதைக்கண்டு திகைத்தாள். முழுமையான பாம்பாகவே மாறிய கன்வன் தன்னை விழுங்கப்பார்ப்பதைக்கண்டவள் “வீல்” எனக்கத்தி அலறிட, அரண்மனையே அதிர்ந்து எச்சரிக்கை மணிகள் ஒலித்தன.

பணிப்பெண்கள் அனைவரும் ஓடி வர, அரமணைக்காவலர்கள் தேடி வர, மன்னரும்  மகாராணியும் நாடி வர, ஒரு பேடியைப்போல் முகமெல்லாம் வியர்த்துக்கொட்ட, திக் பிரமை பிடித்தவள் போல் தனியாக அமர்ந்திருந்த இளவரசியை அரண்மனை பெண் வைத்தியர் வந்து மூலிகை நீரை முகத்தில் தெளித்ததால் சுய நினைவுக்கு வந்தாள்.

“புராணங்களையும், இதிகாசங்களையும், சொர்க்கலோக கதைகளையும் சிறு வயதிலேயே சொல்லித்தரக்கூடாது என்று நான் படித்துப்படித்துச்சொன்னதை நீங்கள் கேட்டீர்களா? இப்போது பாருங்கள் கனவிலேயே திருமணம் செய்து முதலிரவு வரைக்கும் போயிருக்கிறாள் உங்கள் அருமை மகள்! கற்பனையில் தேவலோக புருசனையே நினைத்துக்கொண்டு எந்த நாட்டு இளவரசனையும் சுயம் வரத்தில் பிடிக்காமல் பிடிவாதமாக இருந்ததுக்கு அவளோட அளவுக்கதிகமான கற்பனைதான் காரணம். இப்படியே போனால் திருமணமாகாத கன்னியாகவே இருந்து விடப்போகிறாளோ என்று எனக்கு மிகவும் பயமாக உள்ளது. சக மனிதர்களை வெறுத்திடுவாளோ என்று நடுக்கமாகவும் இருக்கிறது. உடனே மறுபடியும் ஒரு சுயம் வரத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என மகாராணி சாரா தேவி கண்டிப்புடன் தன் கணவனும் கார தேசத்து சக்கரவர்த்தியுமான கார வேலனிடம் கூற, அதனை ஏற்ற மன்னர் மந்திரிகளை அழைத்து கட்டளையிட்டார்.

இளவரசியின் கனவில் நடந்ததும், அரண்மனையே அதிர அபய ஒலி எழுப்பியதுமான செய்தி ஒற்றர்கள் மூலமாக பல தேசங்களுக்கு தீயாய் பரவியிருந்தது. ‘தேவலோக புருசனைப்போன்றவன் தான் தனக்கு கணவனாக வர வேண்டும்’ எனும் ஆசை கொண்ட இளவரசியைக்கைப்பிடிக்க பல தேசங்களிலிருந்து இளவரசர்கள் வந்திருந்தனர்.

பலர் இளவரசிக்கு தங்களைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக தேவலோக புருசனைப்போல வேடமிட்டும் வந்திருந்தனர். 

சுயம் வரத்தில் அனைத்து இளவரசர்களையும் பார்வையிட்ட இளவரசி, அனைவரும் தன் விருப்பத்திற்காக தேவலோக புருசனைப்போல் வேடமிட்டு தன்னை ஏமாற்ற வந்துள்ளனர், போலியாக நடிக்கின்றனர் என்பதை பணிப்பெண்கள் மூலமாக அறிந்து கொண்டு, கடைசியாக வேடமேதும் போடாமல் சாதுவாக அமர்ந்திருந்த  வேழ தேசத்து சிற்றரசன் கங்கனின் மகனான கனகனைப்பிடித்திருக்கிறது எனக்கூறியபோது, மன்னரும், மகாராணியும் உட்பட சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைத்து தேசத்தினரும் அதிர்ந்து போயினர். அங்கு வந்திருந்தவர்களிலேயே அழகு மிகவும் குறைந்தவன் அவன்.

“உனக்கென்ன பைத்தியமா…? உன் கண்களில் கூட அழகற்ற இவன் படக்கூடாது என்பதாலும், சிற்றரசுகளின் இளவரசர்கள் ஒருவரையும் விடாமல் சுயம் வரத்துக்கு அழைக்கவேண்டும் என்கிற சட்ட விதிமுறைகளாலும் ஒரு போருக்கு கூட போகாத அவனை கடைசியாக உள்ள இருக்கையில் பேருக்காக அமரச்செய்திருந்தோம். சென்ற சுயம் வரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்றரசுகளின் இளவரசர்களிலேயே மிகவும் அழகான, பல போர்களில் நம் படைகளுக்கு உதவி புரிந்த சேது தேசத்து ‘சிற்றரசுகளின் சிங்கம்’ என்ற பட்டப்பெயர் பெற்ற மாவீரன் நரசிம்மனையே நீ நிராகரித்து விட்டாய். அவனும் நீ மனம் மாறுவாய் என நினைத்து இன்னும் மணம் புரியாமல் இன்றும் சுயம் வரத்தில் கலந்து கொண்டுள்ளான். ஆனால் நீயோ….. உனக்கு மெய்யாலுமே பைத்தியம் தான் பிடித்துள்ளது. முன்பு நடக்காததைக்கேட்டாய். இப்போது நடக்கக்கூடாததைக்கேட்கிறாய் ” என மன்னராகிய தந்தை கவலையுடன் கடிந்தபடி தன் மகள் கனிகாவிடம் மிகுந்த கோபத்துடன் அதிர்ந்து பேசினார்.

நிறைந்த வெளியுலக அனுபவம் இல்லாத மன்னர் மகள் கனிகா சிறு வயதிலிருந்து ஓலைச்சுவடிகளில் படித்த கதைகளை உண்மையென நம்பியதால் அதிகம் எதிர்பார்த்து சென்ற சுயம்வரத்தில் மனித புருசர்களை நிராகரித்தவள், தற்போது இரவு கனவு கண்டு பயம் கொண்டதால் தேவலோக புருசனை மட்டுமில்லாமல், அவனைப்போல் இருப்பவர்களும் பாம்பாக மாறி விடுவார்களோ? எனும் நீங்காத பயத்தால் சாதாரணமாக இருக்கும் கனகனைத்தேர்ந்தெடுத்தாள். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *