(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிங்காதனத்தில் சேரமன்னன் வீற்றிருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பது அவன் பெயர். அவனுக்குப் பின் ஒராசனத்தில் அவனுடைய குமரர் இருவரும் அமர்ந்திருந்தனர், மூத்தவன் செங்குட்டுவன். இளையவன் பெயர் இளங்கோ என்று சொல்வார்கள். சின்ன ராஜா என்று அதற்கு அர்த்தம். மந்திரிகளும் வேறு பெரியவர்களும் அரசனுடைய அவையில் இருந்தார்கள்.
அப்போது ஜோசியம் சொல்கிறவன் ஒருவன் அங்கே வந்தான். அவனை நிமித்திகன் என்றும் சொல்வார்கள். அங்க அடையாளங்களைக் கண்டே அவன் ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் ஆற்றல் படைத்திருந்தான். அரசனிடம் தன் திறமையைக் காட்டிப் பரிசு பெறலாம் என்ற விருப்பத்தோடு அவன் அரச சபைக்கு வந்திருந்தான்.
அவன் தன்னுடைய பிரதாபங்களே எல்லாம் சொல்லிக் கொண்டான். “அந்த ஊருக்குப் போனேன். அந்த ராஜாவைக் கண்டேன். அவர் முகத்தைப் பார்த்தே ஜோசியம் சொன்னேன். இன்ன இன்ன பரிசுகளைப் பெற்றேன்” என்று விரிவாகச் சொன்னான். சபையில் இருந்த அனைவருக்கும் தங்களைப்பற்றி ஜோசியம் கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. அரசன் வீற்றிருக்கும்போது அவர்கள் எப்படிக் கேட்பது!
ஜோசியன் சுற்று முற்றும் பார்த்தான். அரசகுமாரர்கள் இருவரும் வீற்றிருக்கும் ஆசனத்தில் அவன் பார்வை சென்றது. தேசு தவழும் முகத்தையுடைய இளைய குமாரருடைய திருமேனியைக் கூர்ந்து கவனித்தான். அவரைப்பற்றி ஜோசியம் சொல்லத் தொடங்கினான்.
“அரசே இதோ வீற்றிருக்கிறாரே, இவருடைய அங்க அடையாளங்களைப் பார்த்தேன். இவர் ஒர் அரசுக்குத் தலைவராவார். அதற்கு ஏற்ற குறிகள் இவர் முகத்தே காணப்படுகின்றன” என்று சொன்னன்.
அதைக் கேட்டுச் சபையில் உள்ளவர்கள் திடுக்கிட்டார்கள். ‘இவன் இவ்வளவு தைரியமாகப் பேசுகிறானே! யாரிடம் எதைச் சொல்கிறோம் என்று யோசித்துப் பேச வேண்டாமோ!” என்று பெரியவர்கள் எண்ணினார்கள்.
மூத்த குமாரளுகிய செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியிருந்தான் அரசன். அவனே நெடுஞ்சேரலாதனுக்குப் பின் அரசனுக வருவதற்கு உரிமை உடையவன். அதுதான் முறை. அப்படியிருக்க, அவன் தம்பிக்கு எப்படி அரசு கிடைக்கும்!
‘ஒருகால் செங்குட்டுவன் குறையாயுள் பெற்றவனோ! அப்படியானால் இந்தப் பைத்தியம் அதை இவ்வளவு பேருக்கு நடுவில் சொல்லலாமோ’ என்று சிலர் கவலைப்பட்டார்கள்.
சில கணங்கள் சபையில் எவரும் ஒன்றும் பேசவில்லை. அரசனும் ஒன்றும் சொல்லவில்லை. செங்குட்டுவன் என்ன எண்ணினான் என்பதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இளங்கோவின் முகம் மாத்திரம் சிவந்தது. கண், கனலைக் கக்கியது. அவர் அந்த நிமித்திகனை நோக்கி, “நீர் பெரிய ஆரூடம் சொல்லிவிட்டதாக எண்ணிப் பெருமை அடைய வேண்டாம். உம்முடைய ஜோசியத்தை நான் பொய்யாக்கப் போகிறேன்” என்று சொன்னார். அவர் குரலில் கோபம் தொனித்தது.
சபையினர், அவரையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். இந்தத் தர்மசங்கடமான நிலையில் அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லோரும் காதை நெறித்துக்கொண்டு கேட்டார்கள்.
“நீர், முறை அறியாமல் கூறினீர். என் தமையனர் இருக்கும்போது நான் அரசைப் பெறுவதாவது அப்படி எந்தக் காரணத்தாலும் நேர இடம் இராது. இதோ நான் சொல்வதை யாவரும் கேளுங்கள். நான் துறவு பூண நிச்சயம் செய்துவிட்டேன்! எனக்கும் இந்தக் குடிக்கும் உள்ள உறவு முறையையும் துறந்துவிட்டேன்! ஞானப் பேரரசைக் கைகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு, தவம் புரிந்து, என் வாழ் நாளைக் கழிப்பேன். செங்குட்டுவன், இந்த நிமித்திகன் பேச்சைப் பொருளாகக் கருதவேண்டாம்!” என்று சிங்கம் முழங்குவதுபோல அவர் பேசினர். சபையில் உள்ளோர் மிக்க அமைதியுடன் அதைக் கேட்டனர். சேர அரசன் பிரமித்துப்போனன். செங்குட்டுவனோ ஒன்றும் தெரியாமல் விழித்தான்.
“இதோ இப்போதே அரசர் பெருமானிடம் விடை பெற்றுக் கொள்கிறேன். இனி எனக்கு இருப்பிடம் அரண்மனை அல்ல. இந்த மாநகரத்தின் கீழ்வாயிலில் உள்ள மடம் இருக்கிறதே, அதுவே என் வாழ்க்கை இடமாக இருக்கும்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டார்.
இப்படித் துறவு பூண்டவரே இளங்கோவடிகள் என்னும் புலவர். அவர் சேரர் குலத்தில் உதித்தாலும் அரச குமாரர்களுக்குரிய இன்ப வாழ்க்கையில் ஈடுபடாமல் அதைத் தியாகம் செய்து விட்டுத் தவ வாழ்க்கையை மேற்கொண்டார். அதனால் அவருக்கு இளங்கோவடிகள் என்ற பெயர் உண்டாயிற்று. இப்பொழுதெல்லாம் சுவாமிகள் என்று சொல்வதில்லையா? அதே பொருள் உடையதுதான் அடிகள் என்ற சொல்லும்.
இளங்கோவடிகள் நல்ல தமிழ்ப் புலமை உடையவர். கோவலன் கண்ணகி கதையை அழகிய காவியமாகப் பாடினார். அதற்குச் சிலப்பதிகாரம் என்று பெயர். தமிழ் நாட்டில் இருந்த சேரசோழ பாண்டியர் என்னும் மூன்று மன்னர்களைப்பற்றியும் மூன்று நாடுகளைப் பற்றியும் அவர் விருப்பு வெறுப்பு இல்லாமல் பாடியிருக்கிறார், அந்தக் காலத்துத் தமிழ் நாட்டில் கலையும், தொழிலும், இசையும் இயலும் கூத்தும் விளையாட்டும் நாகரிகமும் பண்பாடும் எப்படி வளர்ந்தன என்பதை அவர் நூலில் நன்றாகக் காணலாம். அதில் இயல், இசை, நாடகம் என்ற மூன்று வகையான தமிழும் இருப்பதனால் அதை முத்தமிழ்க் காப்பியம் என்று சொல்வார்கள். கண்ணகியினுடைய பெருமையை அது மிக நன்றாக எடுத்துச் சொல்கிறது.
இளங்கோவடிகள், மண்ணை ஆளும் அரசைத் துறந்தாலும் ஞானச் செல்வத்தை ஈட்டினார். புவியரசராக வாழாவிட்டாலும் கவியரசராக வாழ்ந்தார். அதைவிடப் பெருமை வேறு ஒன்று உண்டா!
– கவிஞர் கதை, கலைமகள் வெளியீடு