கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 4,321 
 
 

(1983ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சாய்ந்த தாமரை | விடுதலை

காலகதி ஒரு மாதிரியாக, ஒரே விதமாக, ஒரே அளவுடன் ஓடிக் கொண்டிருந்தாலும், நேரத்தின் அனுபவம் மட்டும் மனிதனுடைய சிந்தனையைப் பொறுத்ததாகவே அமைகிறது.

ஒரு மனிதரிடம் நாம் இரண்டு நாழிகைகள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் எழுந்து போகும் போது ஏதோ அரை விநாடிதான் பேசிக் கொண்டி ருந்ததாக நினைக்கிறோம். இன்னொருவர் வந்து அரை நிமிஷம் பேசுகிறார். பத்து நாழிகை பேசிவிட்ட அலுப்பு நமக்கு வருகிறது. உரையாடலின் சுவாரஸ்யம், பேசும் மனிதரை நமக்கு எத்தனை தூரம் பிடிக்கிறது என்ற உணர்ச்சி இவற்றைப் பொறுத்து நேரம் அதிக மாகி விட்டதா குறைந்ததா வென்பதை நாம் நிர்ணயிக்கிறோம்.

சாதாரண உரையாடலுக்கே இந்த நியதி என்றால் காதல் அனுபவத்துக்கு நேர நிர்ணயம் ஏது? எத்தனை நேரமும் குறைந்த நேரமாகத் தானே தெரியும்! நேரம் அனாவசியமாக ஓடிவிட்ட எண்ணந்தானே மனத்தில் நிலைக்கும். அப்படித் தானிருந்தது சந்திரமதிக்கும் சத்ருஞ்சயனுக்கும் அந்த இரவில், சிறைச்சாலை மணி மூன்றாவது ஜாமத்தை வலியுறுத்தியபோது.

கணீர் கணீரென மும்முறை மணி ஒலித்ததும் சத்ருஞ்சயனை விட்டு விலகினாள் சந்திரமதி வேகமாக. “தந்தை வரும் நேரமாகி விட்டது” என்றும் வலி யுறுத்தினாள்.

சத்ருஞ்சயன் அடுத்த நிகழ்ச்சிக்குத் தயாராகிக் குறுவாளைக் கையில் ஏந்தி உடையையும் சீர்படுத்திக் கொண்டு எழுந்து நின்று தனது அறைக்கு வெளியே எட்டிப் பார்த்தான். எங்கும் காரிருள் கவிழ்ந்து நின்றது. இரண்டே இரண்டு சிறைச் சாலைக் காவலர் உலவும் பாதரட்சை ஒலி மட்டும் ‘சர் சர்’ என்று ஒரே சீராகக் கேட்டது. அதைப் பார்த்துத் திரும்பிய சத்ருஞ்சயன், “சந்திரமதி! காவலர் இருவர் தானிருக் கிறார்கள்” என்று சொன்னான்.

“இந்தச் சிறைச்சாலையில் என்றுமே காவல் அதிகம் கிடையாது?” என்றாள் சந்திரமதி.

“ஏன்? யாரும் தப்ப மாட்டார்களென்ற நினைப் பா?” என்று கேட்டான் சத்ருஞ்சயன்.

“தப்பியும் பயனில்லை என்ற நினைப்பு. ஒவ் வொரு கோட்டை வாசலும் பலமாகக் காக்கப்பட் டிருக்கிறது. இந்தச் சிறையிலிருந்து தப்பினாலும் கோட்டையிலிருந்து தப்ப முடியாது” என்றாள் சந்திரமதி.

அடுத்து ஏதோ பதில் சொல்ல முற்பட்ட சத்ருஞ் சயன் சட்டென்று பேச்சை நிறுத்திக் கொண்டான். சிறையின் முகப்பு வாசலில் திடீரென ஏதோ நிழல்கள் தெரிந்தன. அடுத்த சில வினாடிகளில் இரு காவலர் களின் பாதரட்சை ஒலி நின்றது. தட் என்று யாரோ விழுந்த சத்தம் மட்டும் கேட்டது. பிறகு அரவம் எதுவும் இல்லை. சிறிதும் சத்தம் செய்யாமல் சில உருவங்கள் சிறைச்சாலைக்குள் புகுந்துவிட்டன. சத்ருஞ்சயன் இருக்கும் அறைக்கு வந்ததும் காலடிகள் நின்று விட்டன. “சத்ருஞ்சயா! எங்கிருக்கிறாய்?” என்று ஒலித்தது மெதுவாக மல்லிநாதர் குரல்.

“இதோ இருக்கிறேன்” என்று கூறிக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தான்.

“இதோ உன் வாள், பிடி” என்று கூறிய மல்லி நாதர் அவன் கையில் அவன் வாளைத் திணித்தார். “சந்திரமதியிடம் இந்த வாளைக் கொடு” என்று இன்னொரு வாளையும் அவனிடம் கொடுத்த மல்லிநாதர், “மகளே!” என்று அழைத்தார்.

சந்திரமதி அவருக்கு அருகில் வந்தாள். அவள் தலையைக் கோதி முதுகையும் வருடிக் கொடுத்த மல்லிநாதர், “சந்திரமதி! உன்னை வளர்த்த பயனை அடைந்து விட்டேன். உன்னை ஒப்படைக்க வேண்டி யவனிடம் ஒப்படைத்துவிட்டேன். இந்தச் சிறைக்கு வெளியே இரண்டு புரவிகள் இருக்கின்றன. வேகத்தில் நிகரற்றவை. நீங்களிருவரும் அவற்றில் ஏறிச் செல்லுங் கள். முதலில் அவசரத்தைக் காட்ட வேண்டாம். மெதுவாகச் செல்லுங்கள். இப்பொழுது கோட்டை வாசலில் காவல் மாறும். புதுக் காவலர் என்னிடம் வித்தை பயின்றவர்கள். நீங்கள் கேட்காமலே உங் களுக்கு வாசல் திறக்கப்படும். வெளியே சென்றதும் தாமதிக்காதீர்கள். புரவிகள் வாயு வேகத்தில் பறக் கட்டும். உங்களை யாராவது தொடர்ந்தால் மறித் தால் வாளிருக்கிறது உங்களைக் காத்துக் கொள்ள” என்றார் மல்லிநாதர்.

“நீங்கள்?” என்று கவலையுடன் கேட்டாள் சந்திரமதி.

“இனி நீ கவலைப்பட வேண்டியது உன் கணவனைப் பற்றி. சதா பிறந்தகத்தை நினைப்பது இந்து தர்மத்துக்குச் சரியாகாது, உங்களை நான் இரண்டு தினங்களில் சந்திப்பேன். இல்லையேல் இந்தக் கோட்டை என் வசமான செய்தி உங்களுக்கு வரும்” என்ற மல்லிநாதர், “உம் வாருங்கள் என்னைத் தொடர்ந்து” என்று சொல்லி முன்னே நடந்தார். அவருடன் வந்த மூன்று சீடர்களும் அவருக்கு முன்னே நடந்தார்கள். சிறைச் சாலை முகப்புத் தாழ் வரையில் இரு காவலர் விழுந்து கிடந்தனர். முஸபர் வாயில் துணியைக் கௌவி உடலுக்குக் குறுக்கே பிணிக்கப்பட்ட கயிறுகளுடன் காட்சியளித்தார். இவற்றையெல்லாம் சத்ருஞ்சயன் கவனித்தாலும் மல்லிநாதர் எதையும் கவனிக்காமல் சிறைச்சாலைக்கு வெளியே நடந்தார்.

சிறைச்சாலைக்கு வெளியே இரு அழகிய புரவிகள் நிற்பதைக் கண்ட சத்ருஞ்சயன் அவற்றிலொன்றைத் தடவினான். பிறகு கடிவாளத்தை அவிழ்த்து ஏறச் சித்தமானான். இன்னொரு புரவியில் சந்திரமதி ஏறி தன் உறையிலிருந்த வாளை ஒரு முறை தட்டிப் பார்த் துக் கொண்டாள். மல்லிநாதரும் அவர் சீடர்களும் அடுத்து அங்கு நிற்கவில்லை. பக்கத்து சந்துகளில் மறைந்து விட்டார்கள்.

சத்ருஞ்சயன் தனது புரவியை நிதானமாக நடத்தி னான்.சந்திரமதியை முக்காட்டால் முகத்தை நன்றாக மறைக்கும்படி கூறி அவளைப் பின்னால் தன் புரவியுடன் நெருங்கி வரும்படி கூறினான். “என்னை யாராவது தடுத்தால் உடனடியாக உனது புரவியைத் துரத்திக் கோட்டைக்கு வெளியே விரைந்துவிடு” என்றும் தெரிவித்தான்.

“நீங்கள்?” என்று வினவினாள் சந்திரமதி.

“எதிர்ப்பவரை வெட்டிவிட்டு வருவேன் மல்லி நாதர் மகளே! இந்த வாள் என்னிடம் வந்த பிறகு என்னை யாரும் ஜெயிக்க முடியாது” என்று பேசிய சத்ருஞ்சயன் புரவியை மெதுவாக நடக்கவிட்டான்.

கோட்டை வாயிலுக்கு வந்ததும் மல்லிநாதர் சொன்னபடிதான் சகலமும் இருந்தது. வாசலில் காவல் மாறிக் கொண்டிருந்தது. ஆனால் அடைக்கப் பட்ட கதவு மட்டும் திறக்கவில்லை. இருப்பினும் பழைய காவலர் சென்று புதுக் காவலர் வந்ததும் கதவு திறக்கப்பட்டது. அதை அடைந்து சந்திரமதி வெளியே சென்றதும் கதவு மெதுவாக மூடத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் துவங்கினான் சத்ருஞ்சயன் தனது நடவடிக்கையை. கதவை மூட முற்பட்ட ஒருவன் கையில் குறுவாளெறிந்து அந்தக் கையை பயனற்ற தாகச் செய்தான். அடுத்து வாளை உருவிக் கொண்டு வாயிலை நோக்கிப் புரவியைப் பாய விட்டான். இடையே வந்த இருவரை அவனது வாள் தடுத்தது. வெகு வேகத்தில் பக்கங்களில் வந்தவரைக் காயப் படுத்தி வீழ்த்திவிட்டு வெளியே புரவியைப் பறக்க விட்டான்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கோட்டை முரசு பலமாக ஒலித்தது. மல்லிநாதர் பத்து வீரர்களுடன் புரவியில் வந்து, “என்ன இங்கே?” என்று வியப்புடன் விசாரித்தார்.

“யாரோ இருவர் தப்பி ஓடுகிறார்கள்” என்றான் ஒரு காவலன்.

அவன், தனது மாணவனில்லை என்பதை உணர்ந்து கொண்ட மல்லிநாதர் மீண்டும் கேட்டார், “யார் அது?” என்று.

“தெரியவில்லை” என்றான் காவலன்.

“அப்படியானால் அவர்களை ஏன் துரத்த வில்லை?” என்று கேட்ட மல்லிநாதர், “மாணவர்களே! வாருங்கள். அநேகமாக ஓடியவர்கள் அடிக்கடி வரும் ராணாவின் ஒற்றர்களாகத்தான் இருப்பார்கள்” என்று கூறி தமது புரவியைக் கோட்டைக்கு வெளியே பறக்கவிட்டார்.

முன்னே சத்ருஞ்சயன் புரவியும் சந்திரமதியின் புரவியும் கண்ணுக்குத் தெரியாததால் திரும்ப முயன் றார் மல்லிநாதர். பிறகு எதையோ நினைத்துக் கொண்டு தனது மகளும் மருமகனும் சென்ற திசைக்கு நேர் எதிர்த் திசையில் தமது புரவியைச் செலுத்தினார். மாணவர்களும் அவர் புரவியைத் தொடர்ந்தனர். அவர்கள் ஓடுவதைக் கண்ட கோட்டைக் காவலர் அந்தக் கூட்டத்தைப் பின் தொடர்ந்தார்கள்.

சத்ருஞ்சயனும் சந்திரமதியும் சிறிது தூரம் புரவி களைத் துரத்திப் பிறகு இனி அவசரமில்லை என்ற நினைப்பில் புரவிகளைச் சிறிது நிறுத்தினார்கள். அவர்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தூரத்தில் ஜஸ்வந்த் நின்றிருந்தான், இரு காவலருடன். “சத் ருஞ்சயா! இதை நான் எதிர்பார்த்தேன்” என்று கூறிக் கொண்டு, வாளை உருவிக்கொண்டு தனது வீரர் இருவருடன் சந்திரமதியையும் சத்ருஞ்சயனையும் நெருங்கினான்.

ஜஸ்வந்தின் தலையில் அப்பொழுதும் கட்டு இருந்ததால் சத்ருஞ்சயன் புரவியிலிருந்து அசைய வில்லை. “ஜஸ்வந்த்! நான் உன்னுடன் போராட முடியாது.நீ காயப்பட்டிருக்கிறாய்” என்றான்.

“என் வாளுக்குக் காயமில்லை” என்று சொல்லிக் கொண்டே ஜஸ்வந்த் சத்ருஸ்சயனை நெருங்கினான்.

அவன் தன்னை அணுகுமட்டும் காத்திருந்த சத்ருஞ்சயன் எதிரி வாள் தன்மீது பாய மேலே எழுந்ததும் தனது வாளைத் திடீரென உருவி எதிரி வாளைத் தடுத்தான். ஒருமுறை அதைச் சுழற்ற அது ஜஸ்வந்தின் கையிலிருந்து பறந்தது.

இப்படி இந்த இருவரும் பொருது கொண்டிருந்த போது சந்திரமதியை அணுகிய இருவரும் திடீரென அலறினார்கள். அவர்கள் கைகள் செயலற்றுத் தொங் கிக் கொண்டிருந்தன.”அவர்களைக் கொல்லாதே சந்திரமதி” என்று கூவிக் கொண்டு அவள் புரவியின் வயிற்றில் உதைத்து அவள் புரவியைப் பறக்க விட் டான் சத்ருஞ்சயன். சத்ருஞ்சயன். அவளை அசுர வேகத்தில் அவனும் பின் தொடர்ந்தான்.

மறுநாள் காலை உதயபூரை அடைந்து குடிசையில் உட்கார்ந்திருந்த தனது தந்தையின் கால்களில் சந்திர மதியுடன் வணங்கினான் சத்ருஞ்சயன்.

“இவள் யார்?” என்று கேட்டார் சலூம்ப்ரா. “மல்லிநாதர் மகள்” என்றான் மகன்.

“மல்லிநாதர் மகளா?”

“ஆம். இவளை எனக்கு மணம் முடிப்பதாக நீங்களும் அவரும் சபதம் செய்து கொண்டீர்களாம்” என்று கதையைத் துவங்கினான் சத்ருஞ்சயன்.

சலூம்ப்ரா சிந்தித்தார். “ஆம். அப்படி ஒரு சபதம் செய்தோம். இப்பொழுது நினைவுக்கு வருகிறது” என்றார்.

“அதை உங்கள் நண்பர் நிறைவேற்றிவிட்டார்.”

“எதை?”

“சபதத்தை”

“எப்படி?”

“அவர் மகளை எனக்கு மணம் முடித்துக் கொடுத்து விட்டார். இவள்தான் உங்கள் மருமகள்” என்ற சத்ருஞ்சயனைச் சீற்றத்துடன் பார்த்தார் பெரிய சலூம்ப்ரா. “நான் உன்னை அனுப்பிய பணி என்ன வாயிற்று?” என்று கேட்டார்.

“முடித்துவிட்டேன்” என்றான் சத்ருஞ்சயன்.

“சந்திரமதியைக் கண்டு பிடித்தாயா?”

“கண்டு பிடித்து விட்டேன்”

இதனால் உற்சாகப்பட்ட பெரிய சலூம்ப்ரா, “எங்கே சந்திரமதி?” என்று கேட்டார்.

“இதோ” என்று தன் மனைவியைக் காட்டினான் சத்ருஞ்சயன்.

“இவளை ராணாவுக்கு மணமுடிக்க உன்னை அனுப்பினேன். நீயே மணமுடித்துக் கொண்டாயா?” என்று சீறினார் தந்தை.

சத்ருஞ்சயன் தர்ம சங்கடத்துடன் அசைந்தான். அந்தச் சமயத்தில் உள்ளே நுழைந்த மல்லிநாதர், “சந்தா! உன் மகனுக்கு என்று முடிவு கட்டிய நீ அவளை ராணாவுக்குக் கொடுக்க முற்பட்டது என்ன நியாயம்?” என்று வினவினார்.

குடிசையிலிருந்து மூவரையும் திரும்பிப் பார்த்த சலூம்ப்ரா வேகமாகக் குடிசையிலிருந்து வெளியேறினார். நேராகத் தமது புரவிமீது ஏறி அமர்மஹாலுக்கு விரைந்தார். அங்கு மஹாலுக்குள் நுழைந்ததும் மன் னனை நோக்கினார் மிகுந்த சினத்துடன்.

அமரசிம்மன் அப்பொழுது தனது சேனாதி பதிகள் புடை சூழ சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பின்னால் அந்தப் பெரிய பிரிட்டிஷ் கண்ணாடி காட்சியளித்தது. அதில் ராணாவின் தலைப்பாகையின் பின்பகுதி மிக அழகாகத் தெரிந்தது. அந்த மஹாலின் நடுவே நின்ற சலூம்பரா வம்சத் தலைவர் தமது மகன் மீதிருந்த சீற்றத்தை மன்னன் மீது திருப்பி, “ராணா! என்று கூவினார்.

ராணா மெதுவாக சலூம்ப்ராவை நோக்கித் திரும் பினார். “என்ன சேனாதிபதி?” என்று வினவினார்.

“இந்தக் கண்ணாடி எதற்கு?” என்று கேட்டார் பெரிய சலூம்ப்ரா.

“தர்பாருக்கு அழகு செய்ய” என்றான் அமரசிம்மன்.

அவ்வளவுதான், சலூம்ப்ராவின் சினம் உச்ச நிலையை எட்டியது. சபையிலிருந்த படைத் தலைவர் கள் மீது ஒரு முறை தமது பெரிய விழிகளைச் சுற்ற விட்டார். மஹாலின் அற்புத சித்திர வேலைப்பாடு களையும் வெறுப்புடன் பார்த்தார். “இந்தச் சுகத்துக்கும் படாடோபத்துக்குமா ராணா பிரதாப் ஆயுள் முழுவதும் போரிட்டு மடிந்தார்? ராணா தூங்குவதற்கு ஓர் அரண்மனை! அதில் ஓர் அழகு தர்பார்! சூழ்ந்து உட்கார்ந்திருக்க உங்களைப் போல் பொம்மைகள்!” என்று கூவி, தரையில் விரிக்கப்பட்டிருந்த பெரிய விரிப்பு பறக்காதிருப்பதற்காக வைத்திருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து ராணாவுக்குப் பின்னாலிருந்த கண்ணாடிமீது வேகமாக வீசினார்.

அனைவரும் அச்சத்தின் வசப்பட்டனர். கண்ணாடி பெருத்த சத்தத்துடன் விரிந்தது பல இடங்களில். அதில் ராணா பலவிதமாகத் தெரிந்தார். அடுத்து சலூம்ப்ரா விரைந்து, சிம்மாசனத்திலிருந்து ராணாவைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, “வாருங்கள் படைத் தலைவர்களே! பிரதாப சிம்மன் மகனை அவமானத்திலிருந்து காப்பாற்றுவோம். பிரதாப சிம்மனுக்கு அவர் மரணத்தின்போது அளித்த பிராமாணத்தைக் காப்போம்” என்று இரைந்து பித்துப் பிடித்தவர் போல் கூவிக்கொண்டு ராணாவை வெளியே இழுத்துச் சென்று புரவிமீது ஏற்றினார். சலூம்ப்ராவின் வீரக் கூச்சல் மற்ற படைத் தலைவர் களையும் ஊக்கவே “ஜேய் ராணா பிரதாப்” என்று கூவிக் கொண்டு தொடர்ந்தனர் சலூம்ப்ராவை. அடுத்து மன்னன் புரவியும் மற்றவர் புரவிகளும் வீர கோஷங்களுடன் விரைந்தன. மீண்டும் மேவாரின் சுதந்திரப் போர் துவங்கியது.

சலூம்ப்ரா சென்றதும் புதுத்தம்பதிகளை தனிமை யில் விட்டு நண்பனைப் பின்பற்றிச் சென்ற மல்லி நாத ரும் போர்க்கூட்டத்துடன் போய்விட்டபடியால் திரும்பவில்லை. குடிசையில் தனித்திருந்த சந்திரமதி “நாம் இனி என்ன செய்வது?” என்று கேட்டாள்.

“நீதான் சொல்லவேண்டும்” என்றான் சத்ருஞ்சயன். “சொல்ல என்ன இருக்கிறது?” என்றாள் சந்திரமதி.

“ஆம் ஆம். ஏதுமில்லை” என்று சத்ருஞ்சயன் அவளை அணுகினான். “இந்தத் தரையில்தான் ராணா பிரதாப் படுத்திருந்தார்” என்றும் சொன்னான்.

“இதைவிடச் சிறநத இடம் ஏது?” என்ற சந்திரமதியின் முகம் அந்திவானத்தைப் போல் சிவந்தது.

  • முற்றும் –

பின் குறிப்பு :

சலூம்ப்ரா கண்ணாடியைக் கல்லெறிந்து உடைத்ததும் சரித்திரம். மன்னனை அரியணையிலிருந்து இறக்கி இழுத்துச் சென்றதும் சரித்திரம். பிறகு நடந்த இரண்டு பெரிய போர்களில் மேவார் தலையெடுத்ததும் சரித்திரம். ஒண்டாலா மேவார் வசமானதும் சரித்திரம். நமது பாரத நாட்டு வீர சரித்திரத்தில் இது ஒரு சிறந்த ஏடு. நமது இளைஞர்களும் பெரிய வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இந்தச் சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. – சாண்டில்யன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *