கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 7,108 
 

அம்மன் கோவில் திருவிழாவில் பொலிஸ், பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டிருந்தது.விதியின் விளையாட்டு போல..சிங்களவர்கள் இருவரையும் பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். பெண்கள், அரைச்சாரியில், மல்லிகைப் பூச்சரம் சூடி,அவர்களே தேடித் தேடி அறிந்திருந்தவைகளை பூசியும்,செருகியும் அலங்காரப் படுத்திக் கொண்டு..தேவதைகளாக வந்திருந்தார்கள்.சமவயது ஆண்களை விட, பெண்கள் அழகில் தூக்கலாக இருப்பார்கள். சந்திரன், பாபு,செல்வன்,ராமன்..சிற்பம் செய்வதற்காக வந்திருந்த கற்களில் இருந்து,கடலையை கொறித்தபடி,கிறங்கிப் போய்..ரசித்துக் கொண்டிருந்தார்கள்.சிங்கள பொலிஸ்காரர்கள்,ஒரு பெண்ணை நிறுத்தி..எதையோ கேட்டார்கள்.அவளோட தோழிகள் பயந்தபடி ஒதுங்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவ்விருவரையும்,பெடியள் பல இடங்களில் இளம் பெட்டைகளைக் கண்டால்,விசர் விசாரணை நடத்துவதைக் கண்டிருக்கிறார்கள்.தமிழ்ப்பொலிஸாக இருந்தால்,வாயாடி விட்டு போய் விடுவார்கள்.சிங்களத் தமிழில் கதைக்கிற போது,திரு திருவென விழித்தபடி இருந்தார்கள். சிங்களவர்கள், கலவரங்களில் …இரக்கமில்லாது எரித்து துன்புறுத்தியவர்கள்.பெடியள்களை 4ம் மாடிக்கு கொண்டு போய் அவலங்களை ஏற்படுத்தியவர்கள்.பெண்களைக் கூட விடுதலையில் ஈடுபட்டவர்கள் என பொய்கள் கூறி,சித்திரவதைப்படுத்தி,தம் காமப்பசியை தீர்த்துக் கொண்டவர்கள்.அரசாங்கம் ,இவர்களை எல்லாம் வளர்த்து விடுவதாகவே இருந்தது,இருக்கிறது.அதனால்,நல்ல சிங்களவர்கள் கூட சந்தேகத்திற்குரியவர்களாகவே இருந்தார்கள்!

“வாடா,போய் பார்ப்போம்”என ராமன்,செல்வனை இழுத்துக் கொண்டு கிட்டவாக போய்,பாராதவர்களாக கதைத்தார்கள்.

“ராலாமிக்கு கடலை வாங்கிக் கொடுக்கிறதில்லையா?உங்களை பாதுகாக்க வந்திருக்கிறோம்.நீ அழகாய் இருக்கிறாய்.”என்று விட்டு,நண்பனிடம் சிங்களத்தில் கீழ்த்தரமாகச் சொல்லிச் சிரித்தான்.ராமனுக்கு விளங்கியது.செல்வனின் காதில் ‘என்ன சொன்னான்’என்பதைச் சொன்னான்.நிகால்,ராமனைப் பார்த்தவன்,உள்ளுணர்வு எச்சரித்ததால்..கலவரமுற்று “நீ, போ”என அவளை போக விட்டான். ராமன்,தனித்தவனாக பொலிஸிடம் சென்று, “அங்கே என்னவோ பிரச்சனை,ஒருக்கா வர முடியுமா?”என சிங்களத்தில் கேட்டான்.காமினியும் திடுக்கிட்டவனாக…ராமனைப் பார்த்தான்.காட்டிய இடம் அண்மையாகவே இருந்தது.கூப்பிடு தூரத்தில் 2 தமிழ்ப் பொலிஸாரும் இருந்தார்கள்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனார்கள்.பெடியள் வியூகம் அமைக்க,சந்திரனும்,பாபுவும் பிரச்சனைப் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

“என்ன பிரச்சனை பண்ணுறது”என்று நிகால் கேட்ட போது,ராமன்,அவன் இரு கைகளையும் பிடித்து, பூட்டு போட்டு விட்டான்.செந்திலும் மற்றவனை மடக்கி,அசையவிடாது செய்தான்.2 பெடியள் அவசரமாக கைலேஞ்சியை வாயில் அடைந்து விட்டார்கள்.அப்படியே,இருவரின் கை துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டார்கள்.சிறிது தூரத்தில் மற்ற பொலிசார் இருந்த போதிலும்,லாவகமாக பெடியள்கள் குவிந்து தெரியாதமாதிரி செய்து விட்டார்கள்.ராமன், “சத்தம் போடக் கூடாது”எச்சரித்தான்.

“எங்கட பெட்டையளோட தணகல் கேட்குதா?”என்று பாபு சிங்களத்தில் கேட்டான்.அவர்கள் இருவரையும் அப்படியே வயல் இருட்டுக்குள் இழுத்துச் சென்றார்கள்.ராமன், “காலுக்கு கீழே சுடடா”என்று மெதுவாக சொன்னான்.செந்தில், “இருட்டிலே தெரியல்லையடா” என்றான்.ரகு,டோஜ் ஒளியை காலுக்கு திருப்பினான்.பட்டாசுச் சத்தங்களுடன் துவக்குச் சத்தமும் கேட்டு மறைந்தன.

“இனிமே,இப்படி ..எங்கையாவது கண்டால் உயிர் இருக்காது”துவக்கை வைத்துக் கொண்டு துரத்தி விட்டார்கள்.வரம்பில் சென்று இருட்டில் கரைந்து போனார்கள்.சைக்கிளை, எடுத்துக் கொண்டு,அப்படியே கிராமத்துக்கு போய் விட்டார்கள்.நொண்டிக் கொண்டு போனவர்கள் தமிழ்ப் பொலிசாரை, கலவரப்படுத்த கேட்க,…மறுத்தார்கள்! பிறகு,நிலையத்தில் இருக்கிற சிங்களவர்களுக்கு அறிவிக்க,சிறிய பட்டாளம் வந்திறங்கியது. உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு,திருவிழாவின் ஒரு பகுதியில்,3,4 பெடியள்களை அடித்து, உதைத்து… சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றார்கள்.பெரிய கோவில் என்பதால்,திருவிழா தொடர்ந்து நடை பெற்றது.அடுத்த நாள் தினசரியில்,முதல் பக்கத்தில் …செய்தி வெளியாகி இருந்தது. ராமன்,செந்தில் பெயர்கள் ஏற்கனவே,தேடப்படுகிறவர் பட்டியலில் இருந்தன. “பொலிசில் பிடிபட்டு விட்டால், அடையாளம் கண்டு விடுவார்கள்’என்பதால்,தூரவாக இருக்கிற ஏதாவது கிராமம் ஒன்றில் போய் இருக்கிறது நல்லம்”என்று நண்பர்கள் யோசனை கூறினார்கள்.

அப்ப தான் ராமன்,விதுரனின் கிராமத்துக்கு வந்தான்.அவனுடைய அக்கா- மாலதி,அரசாங்க பேருந்தில் டிக்கற் கிழிப்பவரைக் கட்டியிருந்தார்.அங்கே வார போது ராமன்,நேர்த்தியாக நீள்கால்ச் சட்டை சேர்ட்டில் இருக்கிறவன்,சாரம் சேர்ட்டை அணிவான்.கட்டிட ஒப்பந்தக்காரர்கள் அழைத்துச் செல்கிற கூலியாக அவ்விடத்துப் பெடியள்களுடன் நகரத்திற்குப் போய் வருவான்.மாலையில்,கால்பந்து விளையாடுவதிலும் பிரியமுள்ளவன்.தாயின் வெள்ளை நிறமும்,சுருட்டை மயிரும்,மலர்ச்சியான முகமுமுடைய அவன்,எல்லாரையும் கவர்ந்திருந்தான்.செந்திலோடு, சிலர்.. அயல் கிராமத்தில் இருந்தார்கள்.விதுரன்,காலையில் பாண் வாங்க ரங்கனின் கடைக்குச் சென்ற போது,ராமன் உதவியாளாக இருந்தான்.ரங்கனின் அப்பா,இளவயதிலே இறந்து விட்டார்.அவனோடு ஒரு தங்கையும்,தம்பியும் இருக்கிறார்கள்.மாமாமார்,அந்த கடையை ஏற்படுத்திக் கொடுத்து,உதவியாக இருக்கிறார்கள்.அவனுக்கும் ஓரளவிற்கு வயது வர,பள்ளிக்கூடம் போவதை நிறுத்தி விட்டு ,கடையை கவனிக்கிறான்.அவனுடைய அம்மாவே கிடைக்கிற நேரத்தில்,உதவியாக நிற்பவர்.பிரச்சனை பெரிசு என்பதால் ராமன்,இம்முறை வேற வேலைக்குப் போகாமல்,அங்கேயே.. நிற்கிறான்.

அன்றிரவு,9மணி போல கைக்குட்டையால் அரைவாசி முகத்தை மறைத்தபடி 4-5 நடுத்தர பெடியள்,விராந்தையில் சுருட்டு புகைத்தபடி இருந்த அப்பரை,சிறிய துவக்கைக் காட்டி மிரட்டி எழுப்பிக் கொண்டு உள்ளே வந்தார்கள்.அம்மா,தங்கச்சி,விதுரன் ..எல்லாரும் திக்பிரமை பிடித்து நின்றார்கள்.

“எங்கே துவக்கை வைத்திருக்கிறீர்கள்.எங்களுக்கு அது வேண்டும்”என்று கரிய உருவம் கேட்டது.அப்பா,கலங்கித் தான் போனார். “துவக்கா?நான் தொட்டது கூட இல்லை,பிழையான தகவலோட வந்திருக்கிறீர்கள்”என சற்று துணிவு பெற்றுச் சொன்னார்.சுருட்டைத் தலைக்காரனும்,மற்றவர்களும் உள்ளே இருப்பவற்றை கிளறி மளமளவென தேடினார்கள்.

“டேய்,உண்மை தான்,இங்கே இல்லை”என்றான். “மன்னிக்க வேண்டும்”என்று விட்டு இருட்டில் மறைந்து விட்டார்கள்.விதுரனுக்கு கூட மூளை வேலை செய்யவில்லை.அந்த ஒழுங்கையில்,கடைசி வீடு அவர்களுடையது. அவர்களுடைய வேலியோடு இருக்கிற ஒடுங்கிய தனியார்பாதையில் செல்ல,உள்ளுக்க மறைவாக ‘சதா மாமாட’ வீடும் இருக்கிறது.அவர்,பறவைகள் வேட்டையாட துவக்கு வைத்திருக்கிறவர்.புதியவர்களுக்கு,அது தெரியாமல் அவர்களுடைய வீட்ட வந்து விட்டார்கள்.அவரின் துவக்கு தப்பி விட்டது.அதில்,ராமனும் இருந்திருக்கிறான்.அப்பா,சிறிது நோய்வாய்ப் பட்டு விட்டார். அதற்குப் பிறகு அவர்கள்,திரும்ப பக்கத்து வீட்ட புகுந்து கலக்கவில்லை.அம்மா,ஆசிரியையாக இருப்பவர்.ராமனின் அத்தான்,பெடியள்களின் மேம்பாட்டிற்காக பள்ளிக்கூடத்தினர் வைக்கிற எல்லாக் கூட்டங்களுக்கும் போறவர்.அவர்,ராமனைக் கண்டித்திருந்தார்.இளைப்பாரிய வனபாதுகாவர் சுப்புராஜன் வீட்டிலேயும் துவக்கு இருந்தது விதுரனுக்கு தெரியும்.அவரது பேரன்,சந்துரு இவனின் நண்பன்.வேட்டைக்கு போறது பற்றி கதை கதையாய்…விதுரனிடம் சொல்லுவான்.பறவை வேட்டை தான்!அந்த கிராமத்து கடற்கரை வெளிகளில்,குறிப்பிட்ட காலங்களில் ‘சைபீரியா வாத்து’ என்கிற அண்டம் கடக்கிற பெரிய பறவை, கூட்டமாக வந்திறங்கும்.சதா மாமா வேட்டையாடி,சைக்கிள் கரியலில் கட்டிக் கொண்டு போறதைப் பார்த்திருக்கிறான்.

பிறகு, ராமனும்,கிராமத்தை விட்டு போய் விட்டான்.ரங்கனின் கடைக்குப் போன போது, “ராமன்,பொலிசிடம் பிடிபட்டு விட்டான்”என்று கவலையோடு தெரிவித்தான்.அவனுக்கு ராமன் மேல் கோபம் இல்லை,பச்சாபப்பட்டான்!

இனி,4ம் மாடிக்கு அனுப்பி விடுவார்கள்.அவனோடு திரிந்தவர்களை பிடிக்கிறது தான்…அவர்களின் குறியாக இருக்கும்! அரசின்,கொள்கையிலுள்ள பிழைகளை எல்லாம் யாருமே,பார்க்க மாட்டார்கள்.அக்கூட்டத்தில்,தமிழர்கள் கூட பதவியிலிருந்து,விசுவாசத்துடன் செயல்படுவது …துரதிஸ்டமானது. சித்திரவதையில் இறக்கிறவர்களை,வீதியில் எறிந்து விட்டு,அவர்களை …கைது செய்யவே இல்லை என்று கையை விரிப்பார்கள்.சிலவேளை,ரகசியமாக புதைத்து விட்டு,காணாமல் போனவர்களாக்கியும் விடுவார்கள். “யாரையுமே,கைது செய்யவில்லை” என்றே சாதிப்பார்கள்.அரசும், அசாத்திய நம்பிக்கைகளை… படை அதிகாரிகள் மேல் வைத்திருந்தது. “அவர்கள் ‘பொய்’சொல்லவே மாட்டார்கள்”என்பார்கள்.பிறகு,யாரிடம் போய் முறையிடுவது?

ஒருநாள்,தினசரியில் ‘சிறையிலிருந்து ..தப்பி ஓடி விட்டார்கள்’ தலைப்புச் செய்தியாக வந்தது. “ராமனும் அதில் தப்பி விட்டான்”என்று மகிழ்ச்சியாக ரங்கன் கூறினான்.நல்ல வேளையாக தப்பி விட்டான்.ஏனெனில்,பிறகு சிறையில்,சிங்கள கைதிகளைக் கொண்டு,அரசே பின்னணியில் நின்று,நிறைய தமிழ்க்கைதிகளை,வெட்டியும்,குத்தியும் கொன்றிருந்த கொடூரம் நிகழ்ந்திருந்தது; தனிநாடு பற்றி கதைத்தவர்களை எல்லாம் சிதைத்திருந்தார்கள்.

மனிதப்பிறப்பை, ‘அரிய பிறப்பு’என்று ஒளவையார் பெரிய ‘பொய்’சொல்லி இருக்கிறார். ‘நல்லபடியாய் வாழுங்கள்’என்பதற்காக அப்படி அளந்திருக்கிறார்.வெளிக்கு நாகரீகமானவன் என மெச்சிக் கொள்கிற மனிதன்,உண்மையில் …அப்படியானவன் இல்லை. ‘அவன்,மிருகத்தைக் கொல்கிறதை விட ,சக மனிதனை குரூரமாக,சிதைத்துக் கொல்கிறதில் ரசனை மிக்கவன்’என்று தத்துவஞானி ரூசோ,சொல்கிறார்.மிருகத் தனத்தைக் குறைப்பதற்காக,அவர்,மூளையைக் கசக்கி பிழிந்து வழிமொழிந்த ஒரு முறை தான், ‘இன்று நாம்,உயர்த்திக் கொண்டாடுற ‘ஜனநாயகம்’! ஜக்கிய நாடுகள் சபை தொட்டு,வல்லரசுகள்…எல்லாம் ‘ஜனநாயகத்தை கொண்டு வாரோம்’என்று அளக்கிற தரம் கெட்ட ஜனநாயகம்!கெட்ட மனிதன்,அதிலுள்ள வழுக்களை …சாதகமாக பயன்படுத்தி,இன்னும் கெட்டவனாகவே மாறி நிற்கிறான்� ஆனால்,தற்போது தொகையாய் செத்துக் கொண்டிருக்கும் மனிதனும் குரூர மனம் படைத்தவன் தான்!,என்பது ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பவர்களின்… புத்திகளுக்குப் புரிவதில்லை. நிதானமாக சீர் தூக்கிப் பார்க்க விழைகிற அடிபட்ட சிறுவர்கள்,பதிலடி பற்றி..சிந்திப்பார்கள்.அவர்களில், உறுதி மிக்கவர்கள்..அலெக்சாண்டர்,அசோகன்,நெப்போலியன்,கிட்லர் போல… தலைமைக்கு வாரது இயல்பாக நடைபெறும்! செயல்படும் காலத்தில்…கொடூரமும்,வீரமுள்ள வீரர்களாகப் பரிணமிப்பார்கள், உள்ளும்,வெளியிலும் கொலைகளை நிகழ்த்துவதற்கு சிறிதும் அஞ்சவே மாட்டார்கள்.எதிரிகள் எல்லாப் பக்கமும் இருக்கிற நிலையில் பயமே அறியாதவர்களாக –தோல்வியடைந்தாலும் கூட-வீரர்களாக தான் மடிவார்கள். புத்தரும்,காந்தியும் பெருகினால் அன்றி இத்தகையப் போக்குகள் …மாறி,மாறி நடைபெறுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.ஏனெனில், ‘மனிதன்’ ஒன்றும் ‘தேவன்’ கிடையாது;மிருகங்களை விட ‘கொடூர’ தன்மை உள்ளவன் தான். கூர்ப்பின்படி ‘நாளைய மனிதன்’, 2-3-4..மடங்கு கொடூரமானவனாக இருக்கப் போகிறது நிச்சியம்.

ராமன்,தப்பியது…நல்ல விசயம்! ஆனால்,சிறையில் மாண்டு விட்டவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடும்?இந்த நிலை தொடரும் என்ற அபாயங்களே பயமுறுத்துகின்றன. ‘தனிநாடு’ தான் ஒரே வழி!என்ற துர்பாக்கிய நிலையிலே 60 வருசம் கடந்த பிறகும்… நாம் நிற்கிறோம்!எங்கே, பிழை நேர்ந்து விட்டது? பிக்குகளை அரசியலில் நுழைய விட்டதும்,கைமுனு வேதம் பேசுற.. மகாவம்ச பைபிள்களும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளும் அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.’ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களின் போராட்டங்களை எப்படியும் அடக்கி விட முடியும்’ என்று நம்புகிறார்கள்.

ஆயுதங்களுக்குமான செலவு, குருவியின் தலையில்,பனங்காயை வைத்தது போன்றது.அது,சாதாரண மனிதனின் நிம்மதியை …அழித்து விடும்.விரயச் செலவு.அதை மக்களின் பிரச்சனைகளுக்காக இறைத்திருந்தால்…பசியோடு இல்லாமலாவது இருக்கலாம்! அரசும்,ராணுவத்தை பெருப்பிக்காமல் …குறைத்து,தமிழர்களையும் மதித்து,இதயசுத்தியுடன் ஆட்சி நடத்தினால்… சிங்கள மக்களும் வசதி வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.தற்போதைய குழம்பிய குட்டையில்,ஓராயிரம் ஜெ.வி.பிக்கள் தான் எழ வாய்ப்பிருந்தது. மகிந்த போன்ற ஆட்களால் மேலும் சீரழியும் நிலையே காணப்படுகின்றது.

அமெரிக்கா ‘ஒரு தடவை அணுகுண்டை போட்டதோடு’நிறுத்தி இருந்தால்..பரவாயில்லையான நாடாக இருந்திருக்கும்.மோசமான விளைவுகளைத் தெரிந்திருந்தும் மறுபடியும் குண்டை வீசிய நாடு!அவர்களிடம் சிறிலங்கா அரசு நாட்டை ‘ஈடா’க வைப்பதும்;தென்னமெரிக்காவின் வரலாறுகளை தெரிந்திருக்கிற JVP,பொறுப்பற்ற முறையில் புரட்சியை விட்டு விலகிப் போவதும்;எத்தகைய பெரிய ஆபத்துக்கள்!

சிங்களவர்கள்,புத்திசாலியாக மாறி , அரசியல் தீர்வை-கூட்டாட்சியை-கட்டி எழுப்பாத வரையில், ‘நீ,சிங்கம் என்றால்! அப்பன் மகனே,இங்காலேயும் சிங்கம் தான்ரா!’என்ற போட்டியே வளரும்,வளர்க்கப்படும்!முட்டாள் தனமாக தமிழர்க்கெதிராக நடத்தப்படுற ‘கலவரங்களா’ல் சிறிலங்காவில் நம்பிக்கையை இழந்த இந்தியா,ஈழத்தமிழர்களில், ஆயுதஅமைப்புக்களை ‘வளர்த்தெடுக்க தீர்மானித்தது.

முன்பும்,பாலாஸ்தீனிய போராட்டத்திற்கு எதிராக..உலக நாடுகள் செயல்பட்ட போதும்,இந்தியா சரியான முடிவெடுத்தது. ‘யசீர் அரபாத்தை’உலக அரசியல் தலைவருக்கு சமமாக… வரவேற்று மதிப்பளித்தது!

30-35 வருசங்கள் கடந்த பிறகே,உலகம்-அதுவும் நயவஞ்சகத்துடன் தான் – ‘யசிர் அரபாத்’தை..ஒரு நாட்டின் தலைவராக �ஏற்றிருக்கிறது. ‘இஸ்ரேல்’நாட்டை உருவாக்கிறதிலும் பார்க்க,பாலாஸ்தினீய போராட்டத்தில்…. நியாயம் இருக்கிறது’என்று “காந்தி”சொன்னதை, இவர்கள் ஏற்றுக் கொள்ள இன்னும் எத்தனை காலம் எடுக்குமோ?

( 2வது அணுகுண்டை போட்ட) அமெரிக்காவிடமே பிரித்தானியா, அவர்களின் பிரச்சனையை …விட்டு விட்டது, ‘அது,தீர்க்க விரும்பவில்லை’என்பதைத் தான் சொல்கிறது.. இந்தியாவில்,அவசரகாலச் சடடத்தை பிறப்பித்து, ‘தனது பெயரைக் கெடுத்தவ’ராக இருந்த போதிலும்,இந்திராகாந்தி,ஈழப்பிரச்சனையில் புத்திசாலித்தனமாகவே செயல் பட்டிருந்தார்.

கர்மவினை,விதியாகி.. வந்து அவர் கொலையுண்டு விட்ட போது,ஈழப்பிரச்சனையும் தொங்கிக் கொண்ட நிலையிலே விடப்பட்டு விட்டது.ஒரு நாட்டை அமைத்துக் கொள்ளா விட்டாலும்,விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,நாட்டை ஆள்கிற வர்களுக்கு சமமானவர்களே1.பிறகு, வந்தவர்கள் அதை கையாளாது விட்டதால்,சிக்கல்களை… அதிகரிக்க வைத்து விட்டார்கள்! ‘பெடியள்களு’க்கு ஆயுதப் பயிற்சிகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வந்ததுஎன்பதே சிறிது நல்ல விசயம்.ஆனால்,பழைய காங்கிரஸ்,இடதுசாரிகளை வெறுத்தது போல,இவர்களும், இவ்வமைப்புகளில் இடதுசாரிப் போக்குகள் எழுவதை விரும்பவில்லை.ஆனால்,அவை தானே,அவற்றுக்கு ஊட்டச் சத்தாக இருக்கின்றன.

ராமனும் அங்குள்ள ஓரியக்கத்தில் பயிற்சி பெற்று,மத்தியக் குழுவைச் சேர்ந்தவனாக உயர்ந்திருந்தான்.அவன்,விடுதலைக்காக போராடும் வேறொரு நாட்டிற்குச் சென்று,அங்குள்ள விடுதலை அமைப்பொன்றில், சேர திரிந்து… ‘6 மாச கால பயிற்சி எடுக்க அனுப்பப்பட்டிருந்தான்.அந்நேரத்தில்,ஒரு முறை அவர்களுடைய குழு,எதிரி வலையில் சிக்கி விட்டது.2-3 பேர்கள் பலியாக,தப்பியவர்களில் அவனும் ஒருத்தன்!சிறிலங்கா ஆமியிடம் பிடிபட்டு சித்திரவதைகளால் பட்ட பாடம்,அவனை பிடிபடாமல் தப்பி ஓடவே செய்கிறது. �

இந்தியாவிற்கு திரும்பிய பிறகு,சிறப்புப் பயிற்சி அளிக்கும் காம்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டான். எல்லாருடனும்‘சகதோழமை’யுடன் பிழங்கியதால்,பெடியள்கள் மத்தியில் விரும்பப் படுறவனாக இருந்தான்.

இந்தியப்பயிற்சி முடித்து விதுரனின் கிராமத்திற்கு திரும்பியிருந்த பத்து, அவனிடம் ராமனைப் பற்றிய துணுக்குச் செய்திகளைச் சொல்லுபவன். “ராமன்,செலுத்துற வாகனம் என்றால்,ஏற மாட்டேன்.ஒரு முறை,தவறுதலாக ஏறி விட்டிருந்தேன். புளுதியை கிளப்பிக் கொண்டு… அசூர வேகம்!உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டிருந்தோம்.ஒரு வளைவில் திரும்புற போது,வாகனம் விலகி,ஈரலிப்புள்ள வயல் காணிக்குள் கவிழ்ந்து விட்டதடா.இவன் பாவி, மரக்கட்டை போல மயங்கிக் கிடக்கிறான். அவனுடைய உடம்பிலும் ஏதோ… பிரசனை இருக்கிறதடா! நாங்கள் சிறிய சீராய்ப்புகளுடன் தப்பி விட்டோம்.எல்லோரும் பயந்து விட்டோம்.அரைமணிக்குப் பிறகு,உணர்வு வந்து ,கண்ணை விழிக்கிறான்.வலிப்பு வாரது போல ‘இப்படி மயங்கி கிடப்பது அவனுக்கு அது முதல் தடவை இல்லையாம்’என்கிறான் சாதாரணமாக…! பாரன்,கடவுள்,ஒவ்வொருவரிலேயும், ஏதோ கிறுக்குத் தனத்தையும் செய்து விட்டு தான்� படைத்திருக்கிறார்!”என்று கமண்ட் அடித்தான்.

அவனுடைய காம்பில்,250 பேர்கள் சிறப்புப் பயிற்சி முடித்து வெளியேறி இருந்தார்கள்.ஆயுதங்கள் மாத்திரம் இருக்குமானால்..இன அரசுக்கு பெருந்தடையாக திகழ்ந்திருப்பார்கள்.இருந்த போதிலும்,இருக்கிற ஆயுதங்களுடன் பயிற்சி பெற்ற சில தோழர்களை கூட்டிக் கொண்டு சிறிலங்கா படைக்கு எதிராக ஒரு முறை தாக்குதலை தொடுதிருந்தான்.அது,தோல்வியில் முடிந்திருந்தது!இவர்கள் தப்பிய வள்ளத்தை நோக்கி,கடற்படை சுட்ட போது,கவிழ்ந்தும் விட்டது.2 தோழர்களை கடல் இழுத்துக் கொள்ள, ..கடலோடியுடன் நீண்ட நேரம் நீந்தி.. தப்பியவர்களில் அவனும் ஒருத்தன்.மரணப் போராட்டங்களுடன் தொடர்ந்து சிக்குப்பட்டுக் கொண்டேயிருக்கிறான்.நல்ல காலத்திற்கு அப்ப எல்லாம் ‘மரக்கட்டை மயக்கம்’ அவனை ஆட் கொள்ளவில்லை.

அவன்,தள நிலமையை பார்ப்பதற்காக சிறு குழுவுடன் வரவிருந்தான்.தளமும்,போதிய ஆயுதங்கள் இல்லாது..கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தது.ஆனாலும்,ஒருவகை பெயரிட்ட ‘கிளமர் வெடியை’ஜெலிக்னைற்றையும்,யூரியாவையும் கலந்த கலவையில் தயாரித்து,வடக்கில் இருந்த ஆமிக்காம்களின் வெளிவட்டத்தில் அவர்களுக்கிருந்த பகுதிகளில், நிலத்திலும்,மரத்திலும்..என பல இடங்களில் மறைத்து வைத்து இரவும், பகலும் காத்திருந்தார்கள்.இவர்களைப் போல மற்றய இயக்கங்களும் ஒவ்வொரு பகுதிகளில் தரித்து நின்று,சுய தயாரிப்புகளுடன்..,மோட்டார் செல்லுகளை அடித்து தலையிடி கொடுத்துக் கொண்டிருந்தன.சக இயக்கம் ஒன்று,தனது தயாரிப்பான மோட்டரைப் பாவித்து ‘செல்’அடித்து பார்த்தது. வெற்றிகரமாக ..காம்புற்குள் விழுந்து வெடித்தது.அவர்களுக்கு சந்தோசம் பிடிபடவில்லை,தொடர்ந்தும் அடித்தனர்.ஒருமுறை சூடேறியிருந்த மோட்டரில் செல்லை போட்ட போது, குழாய்யோடே வெடித்து விட்டது. அதை இயக்கிய 5 பேர்களும் சிதறிப்போனார்கள்.அவர்களுடைய சதைகளையும்,எலும்புகளையும் கூட்டி எடுத்து எரிக்க வேண்டிய இருந்தது. ‘சுயதயாரிப்புகள் எதையும் ‘ஒரு எல்லைக்கு மேலே நம்பக் கூடாது’ என்ற எச்சரிக்கை அடைந்தார்கள். பிறகு எல்லாரும்‘மோட்டரில் அடிப்பதென்றால், ‘திரி’ வைத்து கொளுத்தி விட்டு, பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து விடுவார்கள்.இப்படி… இயக்கங்களில், வீணாக இறந்தவர்கள்..கணிசமாகவே இருந்தனர்!

சிறிலங்காப் படைகள் முன்னைப் போல வெளிய வந்து..திரிவது இல்லாமல் போய்,முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய புதிய நிலை ஏற்பட்டன.அவர்களிடம் தான், வல்லரசுகள் (தமது நலன்களுக்குக்காக… ) வழங்கிய ‘செல்லுகளும், சினைப்பர் பொறுத்திய துவக்குகளும்’நிறைய இருந்தனவே,காம்பிற்குள் இருந்தபடியே நாலா பக்கங்களிலும் ….அடித்தும்,சுட்டுக் கொண்டுமே இருப்பார்கள்.பொதுமக்கள்களுக்கு போதியளவு பாதுகாப்புகள் இருக்கவில்லை.சந்தையில்,திரையரங்குக் காட்சி முடிந்து வெளியேறிய போது…என ஒவ்வொரு தடவையும் 20-30பேர்கள் என தொகையாக சாகிற அவலங்கள் ஏற்பட்டன.தூரத்தில் கூட வீதியை கடப்பவர்களில் 2-3 பேர்கள், சினைப்பர்களால் சதா குறி பார்க்கப்பட்டு, சுடப்பட்டு செத்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் அவசியம் உணரப்பட்டது.ஒரியக்கம்,பதுங்கு குழி அறைகள் வெட்டி, மக்களையும்,வெட்டி… அமைத்துக் கொள்வதற்கு� ஊக்குவித்தது. இன்னொரு இயக்கம்,மணல் மூட்டை அறைகள்,மணல் தடை அமைப்புகள்….என நிலத்திற்கு மேலேயும் அமைத்துப் பரிசீலித்தது.கடைகளின் சீமேந்துக் கூரைகளில் பழைய டயர்களைப் போட்டு மணலைக் கொட்டியு ,வெளிப் புறங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி சுவர் எழுப்பியும் சிறு பாதுகாப்புகளைச் செய்தது.

இச்சமயத்தில் தான் ராமன் தளத்திற்கு வந்தான்.சிறிலங்கா படைமுகாமில் மோட்டரில் செல் போடப்படுற போது ‘குபுக்’ என்ர சத்தம் முதலில் 100 மீற்றர் தூரத்தில்.. கேட்கக் கூடியதாக இருக்கும்.பிறகு,அச்செல் 3-4 நிமிசத்துற்குப் பயணித்ததே… விழுந்து வெடிக்கும்.விதுரனின் இயக்கத்தவர்கள், தொழிற்சாலைகளில், துறைமுகங்களில் இருந்த சைரன்களை எல்லாம் கழற்றி எடுத்து,சென்ரிலேயும்,நகரத்தின் பல பகுதிகளிலும் பொறுத்தி ‘மின்சார வலை’யமைப்பு செய்து வைத்திருந்தார்கள்.சத்தம் கேட்ட மாத்திரத்திலே காவலுக்கு நிற்கிற பெடியள்கள்… மின்சார பொத்தனை அமுக்கி விடுவார்கள்.சைரன்கள் ஒலிக்க ஆரம்பித்து விடும். ‘செல்’விழுந்து வெடிக்க முதல்,மக்கள்,பாதுகாப்பு அமைப்புகளுக்குள் புகுந்து விடுவார்கள்.இதனால்,அவர்களின் சாகிற வீதம் சிறிது குறைந்தது; பெடியள்களின் செல்வாக்கு அதிகரித்தது. அமெரிக்கா, ஈராக்கில் போட்ட செல்லுகளை சிறிலங்காவிற்கு கொடுத்து விட்டால்,இந்த அமைப்பு முறைகள் எல்லாம் பஸ்மம்!வெளிநாடுகளின் அரசியல் நலன் வலைகள் சிறிலங்காவோடு எப்பவும் தொடுக்கப்பட்டே இருப்பதால், ஒன்று மாறி ஒன்று ஆயுதங்களை-ஆபத்தான ஆயுதங்கள் உட்பட- வழங்கிக் கொண்டு தானிருக்கின்றன .தமிழர்களுக்கு சிக்கல்!,ஆயுதப் போராட்டத்தை ஒரு கட்டத்திற்குப் பிறகு,மட்டுப்படுத்தி விட்டு,அரசியல் தீர்வை பெறுவதே …நன்மை பயப்பதாக இருக்கும்.ஆனால்,தீவிர பௌத்த வாதத்தைக் கொண்டதாக,சிறிலங்கா தலைமை எப்பவும் இருக்கிறது.சிங்களவர்கள் பக்கமிருந்து யுத்ததிற்கு எதிரான ‘குரல்’ வலுக்கா விட்டால் தமிழர்க்கு விடிவு கேள்விக் குறியாகவே தொடரும்! தீர்க்கப்படா விட்டால் 2 பக்கங்களிலும் தேவையற்ற கொலைகள் வலுத்துக் கொண்டு போகும் அவலம் இருக்கிறது.

ராமனின் குழு ரகசியமாய் ,கோட்டைப்பகுதிக் காவலைப் பார்க்க வந்தது.அங்கே இருந்த பெடியள்கள்,ராமனை நேரிலே பார்த்தவர்களில்லை, ‘வேற இயக்கப் பெடியள்’என நினைத்து விட்டார்கள்.சிறிது தூங்கி வழியிற நேரத்தில், சத்தமில்லாது.. அவ்விடத்திலிருந்த சைரனை கழற்றி எடுத்து விட்டார்கள்.காலையில், ‘சைரன் காணவில்லை’என்ற பரபரப்பு ஏற்பட்டது.அப்ப தான் ராமன் வந்திருப்பதே தெரிந்தது.அவன்,சைரனை பூட்ட வைத்து விட்டு, “காவலுக்கு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்”என்று கூறினான்.

“யாழ்ப்பாண அமைப்பு மட்டுமே காவலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள்,சமயத்தில் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை,அதனால் ஒவ்வொரு நாளும் சிலர் இருக்க வேண்டி ஏற்பட்டதால்…தூங்கி விட்டார்கள்”என்று தெரிவித்த போது,

“ஏன் மற்றய அமைப்புகளிருந்தும் ஆட்களை எடுப்பதில்லையா?”எனக் கேட்டான்.

பிறகே,ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் 10-10 பேர்களை காவலுக்கு தெரியச் சொல்லி கட்டளை அனுப்பப் பட்டது.

ராமன்,அக்காவைப் பார்க்க விதுரனின் கிராமத்திற்கு வந்தான்.பள்ளிக்கூட ஆட்கள் அன்பு மழையால் அவனை திணறடித்தார்கள்.அவர்கள் சமூகத்தில் ஒரு கிணற்றுச் சண்டையை விதுரன்,பேசி தீர்ப்பதற்காக..அடிக்கடி கூட்டி முயற்சி எடுத்துக் கொண்டிருந்தான்.2 தரப்புகளும் ராமன் மேல் உரிமை பாராட்டுறவர்கள். ‘விதுரனின் செயல்களைப் பற்றி நல்ல மாதிரியே சொல்லியிருந்தார்கள்.ராமன், “யார்?..நம்ம அரசியல் அமைப்பு விதுரன்,அவனை கூட்டி வா”என ஆள் அனுப்பினான்.அவனை,தன் குழுவுடன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு,படுவேகமாக ஒழுங்கையில் புளுதி பறக்க…முருகமூர்த்திக் கோவிலுக்குச் செலுத்திச் சென்றான்.

அவனுடைய ‘வேலைகள்’நல்லாய்யிருப்பதாக’ பாராட்டியவன், “எத்தனைப் பேர் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்?”என்று கேட்டான்.

“2 பேர்கள்..இந்தியாவிலிருந்து திரும்பவில்லை,திரும்பியவர்கள் இருவர் இருக்கினம்.உள்ளூரில் பயிற்சி எடுத்தவர்கள் சுமார் 30-35 பேர்கள் இருக்கிறார்கள்.இதில்,ஒரே வகுப்பைச் சேர்ந்த 15 பேர்கள் ஓரேயடியாய் அள்ளுபட்டவர்கள்”என்றான். “சங்கானை பனை வளவில் …பயிற்சி முகாம் அமைத்து நடத்தப்பட்டது”என்று சொல்லிய போது, “நம்ம கிராமத்திலும் ஒரு பயிற்சி முகாம் நடத்த வேண்டும்!”என்று தன்னுடைய விருப்பத்தை ராமன் தெரிவித்தான். “ஆயுதங்களின் பற்றாக் குறைப் பற்றி கவலைப்படாதீர்கள்,ஒரு நேரம் கிடைத்து விடும்!பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன”என்றான் உற்சாகமாக. 2 கிழமைக்குப் பிறகு ‘ராமன்குழு’ இந்தியாவிற்கு வள்ளம் ஏறி விட்டது.

ராமனின் பேச்சு,தோற்றம்,சுருண்ட தலை மயிர்கள்..ஏனோ விதுரனுக்கு ‘சேகுவாரா’வையே ஞாபகப் படுத்தின.சேகுவாரா சம்பந்தமான 2 புத்தகங்களை அண்மையிலே வாசித்திருந்தான்.அவனை பிடித்து விட்டிருந்தது.அத்தகையவனை நேரிலே பார்த்தது போல ராமன் இருந்தான்.

அவன் சென்ற பிறகு, ‘அவன்’மேலும் ஒரு விமர்சனம் ஏற்பட்டது.வதந்தியாக பேசப்பட்டது.சரி,பிழை தெரியவில்லை.போதியளவு உண்மைகள் இருப்பதாகப் படவில்லை.ஏனெனில் அவனை,பட்டும் படாமலும் தான் பேசினார்கள். காற்று வந்து தாக்கி விட்டுப் போவது போன்ற அந்த விமர்சனம் பற்றி …கதைப்பதற்குப் போதிய தகவல்கள் இருக்கவில்லை.ஒருவேளை உண்மையாக இருந்தால்,அது,அவனுக்கொரு கறுப்புக் கறை தான்..

ராமன், ‘நல்லவன்’என்ற அபிப்பிராயம் விதுரனுக்கு… ஜென்மத்தில் மாறாது;அவனுக்கு மட்டுமில்லை,பள்ளிக்கூட ஆட்களுக்கும் தான்! “உண்மைகள்” அவர்களுடைய நெருங்கியவர்களுக்குத் தான் தெரியும்.

ராமனின் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது,பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் திரும்ப கையிக்கு வர இல்லை.இந்திய உபயக்காரர்களுக்கு, அவர்களுடைய ‘இடதுப் போக்கு’பிடிக்காததே காரணம்.புரட்சிகர அமைப்பு உடைவை சந்தித்தது.சிங்கள பகுதியிலும் ஒரு புரட்சிகர இயக்கம் இருந்தது தான்.அது,சிங்கள தேசியவாதத்தை அதிகமாக தூக்கிப் பிடித்ததால்…ஏற்கெனவே சீரழிந்து விட்டிருந்தது.புரட்சி அமைப்புக்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயல்பட வேண்டும்.புரட்சியின் அவசரப் போக்குகளால் ஏற்படுற பலவீனம்,இருவரையும் நெருங்க விடாது தடுக்கின்றன.என்ன செய்வது?,யதார்த்தம் தான் விதிகளை எழுதுகிறாச்சே! வவுனியாப்பகுதிகளில்,நீலச்சட்டைக்காரர்கள் வீழ்ந்து இறந்து கிடந்தது போல,இவ்வியக்கத்தைச் சேர்ந்த தலைவர்களும் சிங்களப் பகுதிகளில் –தெருப் பகுதிகளில் –இறந்து கிடந்தார்கள்.ராமன் ,புத்திசாலியாக இருந்ததால் ஓரளவு உயிர் பிழைத்திருந்தான்.ஆனால்,நம்பிக்கை நட்சத்திரங்களான இயக்கங்களின் மோதல்களுக்கு ஈடு கொடுப்பது என்பது புத்திசாலித் தனத்தைப் பொறுத்த விசயம் இல்லையே!ஒருமுறை,அவனுடைய வாகனம் செல்கிற பாதையில் வைக்கப்பட்ட கிளமர் வெடியில்-அவனும்,தோழர்களும்,மற்றயவர்களைப் போல-இளம் வயதிலே இறந்து போனார்கள்.

அவனுடைய நினைவுகளை சுமந்தவனாக விதுரன்,புலம் பெயர்ந்தவனாக , சந்தோசமற்றவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்; இல்லை,தொலைந்து போயிருக்கிறான்.

சிலபேர்களுக்கு தான் வாழ்க்கை மதிப்பானது,நேரம் பெறுமதியானது என்பதெல்லாம்!,நிறைய பேர்களுக்கு இல்லை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *