கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 7,597 
 
 

தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக அறிவிக்க உள்ளார்.

சின்னையன் காலையிலிருந்தே பரபரப்பாக காணப் பட்டார். சின்னயன்தான் தலைவருக்கு எல்லாமும். பேசி தீர்க்கும் கலாச்காரத்தை மாற்றி தீர்த்துப் பேசும் கலாச்சாரத்தைத் தலைவர் தொடங்கிய காலத்திலிருந்து சின்னையந்தான் அவருடைய இடது கை வலது கை. பெரிய கூலிப் படை ஒன்றை உருவாக்கி தன் பிடியில் வைத்திருக்கிறார். அவர் மேல் இது வரையில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள். தலைவரின் எதிரிகளை அவர்கள் வாக்கிங் செல்லும் நேரத்தில் போட்டு தள்ளுவதால் அவருக்கு வாக்கிங் சின்னையன் என்று ஒருஅடை மொழிப் பெயரும் உண்டு.

“ இளம் தலைவர் பொறந்த நாளும் அதுவுமா இங்கயே இருக்கீங்களே தலைவர் வீட்டுக்கு போகலியா?” என்றாள் அவர் மனைவி சம்பூரணம். அதில் ஒரு நக்கல் எட்டிப் பார்த்தது.

“ குத்திப் பேசற வேலை செஞ்ச சொருகிடுவேன் “ என்றார் சின்னையன்.

“ என் வாயை அடை. பேருதான் பெரிய பேரு. உன்னைக் கடைசி வரையிலும் அடியாளாவே வச்சுப்புடாரேய்யா. ஒரு பதவி உண்டா? நாய்க்குப் பொற போடுறா மாதிரி ஊருக்கு வெளியில ரெண்டு கிரௌண்ட் நிலம், இதான் அவருக்கு நீ உழச்சதுக்கு கூலி. எத்தினி வாட்டி தலைவருக்குன்னு ஜெயிலுக்கு போயிட்டு வந்திருப்ப. வீட்டை பாரு. காரை பேந்து மழை பெஞ்ச ஒழுகிகிட்டு…” சம்பூர்ணம் கூவத் தொடங்கினாள்.

“ உன் மகனைக் கிளம்பி ரெடியா இருக்க சொன்னேன் அந்த பய நைட்டு பூரா ஊரை சுத்திட்டு எப்ப வந்து படுத்தானோ தெரியலை. அவனையும் கூட்டிப் போகலாம்னு இருக்கேன். அவனை எழுப்பிக் கூட்டிட்டு வா” என்றார் சின்னையன்.

“ உன் புள்ளதானே எங்க ராக்கொத்து அடிச்சிட்டு வந்திருக்கானோ? “

சின்னையனின் மூத்த மகன் குமரேசன் என்ற குமாரு கண்களை கசக்கியபடி அப்பா முன்னால் வந்து நின்றான்.

“ எங்கடா போயிருந்த? “ என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் கூடத்தின் மூலையில் சாத்தி வைத்திருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு போய் குழாயடியில் கழுவினான். ரத்தக் கரையுடன் நீர் சென்றது.

“ என்னடா இது? “ என்றார் சின்னையன்.

“ இளைய தலைவருக்கு ஒரு பில்டிங் காண்ட்ராக்டர் தொந்தரவு கொடுத்துக் கிட்டே இருந்தான். கிச்சிப்பாளயம் ஏரியாவில நேத்து நைட்டு போட்டு தள்ளிட்டோம் “ என்றான் மகன்.

“ போலீஸ்ல மாட்டிக்காம பாத்துக்கடா” என்றார் தந்தை.

இருவரும் ஒரு புல்லட் வண்டியில் தலைவர் வீடு நோக்கி பயணமானார்கள்.

தலைவர் வீடு திருவிழா கோலம் பூண்டிருந்தது. ஊரின் முக்கிய பிரமுகர்களின் கார்கள் வீதி முழுவதையும் அடைத்தபடி நின்றிருந்தன. தொலைக்காட்சி நிருபர்கள் மொய்த்துக் கொண்டு நின்றனர். தெரிந்த முகங்களுக்கெல்லாம் சல்யூட் அடித்தபடி கூட்டத்தை விலக்கியபடி சின்னையன் மகனுடன் உள்ளே சென்றார்.

இளைய தலைவர் சிம்மாசனம் போன்ற அழகிய நாற்காலியில் அமர்ந்திருந்தார். தலையில் மலர் கிரீடம்; கழுத்தில் இரண்டு மூன்று ரூபாய் நோட்டு மாலைகள்.கைகளில் பூங்கொத்து. அருகில் தலைவரும் சரிசமாக அமர்ந்திருந்தார்.

“ வாரிசு அறிவிச்சுட்டாங்களா?’ என்று சின்னையன் கட்சிக் கார ஒருவரிடம் விசாரித்தார்.

“ இனிமேத்தான்”

அதற்குள் தலைவரின் பார்வை சின்னையன் மேலும் இளைய தலைவரின் பார்வை குமாரு மேலும் விழுந்தது. பார்வைகளால் அழைக்கப்பட்டனர்.

சின்னையன் கையை வாயில் வைத்து குனிந்த பாவனையில் தலைவரின் அருகில் பவ்யமாக நின்றார்.

“ டிவில ஸ்க்ரோலிங் ஓடுதே நிஜமா? “ என்றார்.

“ ஆமாம்”என்றார் சின்னய்யன்.

“ மாட்டிக்காம செய்யச் சொல்லு”என்றார் தலைவர்.

சொல்லிவிட்டு சின்னய்யனைப் பார்த்தார்.

உனக்கு என்ன வயசு இருக்கும்?

“ அறுபத்தி ஒண்ணுங்கய்யா”

“இனிமே கட்சி தலைமைப் பொறுப்பை என் மகன்கிட்ட விட்டுடலாம்னு இருக்கேன். உனக்கும் வயசாவுது.. உனக்கும் இனிமே இளைய தலைவரை நிழலா தொடர முடியும் வெட்டு குத்துன்னு ரகளை பண்ணி அவனை பாதுகாக்க முடியும்னு தோணலை. ஒண்ணு செய்யி உன் மகனும் உன்ன மாதிரியே சிங்கமா வந்துட்டான். இனிமே உன் வேலையை உன் மகன் கிட்ட கொடுத்துடு.” என்று சின்னயனைப் பார்த்து தலைவர்” என்ன சம்மதம்தானே?” என்றார்.

ஜென்மசாபல்யம் அடைந்த சின்னையன் “ சரிங்கய்யா” என்றார்.

சின்னையனின் வாரிசு தலைவரின் வாரிசுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான்.

– அக்டோபர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *