கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 10,792 
 
 

ஒரு வாரமாகவே எதிர்பார்த்திருந்த செய்திதான் என்றாலும் வந்தபோது அது என்னைக் கடுமையாகத்தான் தாக்கியது. அந்த மத்திய அரசு அலுவலகத்தின் மின்விசிறி சோம்பலாக காகிதத்தை அலைக்கழிக்க, இடதுகையால் அதைப் பிடித்தபடி லீவ் லெட்டரை எழுதி பியூனிடம் கொடுத்தேன். “அய்யாட்ட கொடுத்துரு. நான் போறேன்…”

பியூன் ஆறுமுகம் போலியான பவ்யத்துடன் அதை வாங்கிக் கொண்டு “சரி சார். நீங்க கெளம்புங்க” என்றான்.

சைக்கிளில் ஏறி மிதிக்க ஆரம்பித்தேன்…

-0-

அந்தப் பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்குள் நான் நுழைந்தபோதே முதன் முதலில் அவரில் நான் பார்த்த வெறுப்பு.. இல்லை வெறுப்புக்குக் கூட நான் பாத்தியதை இல்லை, அருவெறுப்பு; அந்தத் தருணத்திலிருந்து அது என் வாழ்க்கை நினைவுகளில் என்றென்றும் ஒன்றாகியது. ஒரு மனித முகத்தால் இத்தனை அருவெறுப்பான குரோதத்தைச் சுமக்க முடியுமா என்ன? முடியும்; முடிந்தது. அதுதான் உண்மை. ஒரு கூடை மலத்தை அவருடைய அறையில் கொட்டியிருந்தால் அவர் முகம் அப்படித்தான் போயிருக்கும். நியாயப்படி அவர் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததற்கு அவர் செருப்பாலேயே என் தோலை உரித்திருப்பார்.

தலைமையாசிரியர் அறைக்குள் நான் நுழைந்தபோது என்றா சொன்னேன்? இல்லையில்லை; இழுத்துச் செல்லப்பட்டபோது என்பதுதான் சரி. தயங்கத் தயங்க, ஏறக்குறைய என் கையை வலுவாகப் பிடித்திருந்த மனிதரால் நான் இழுத்துச் செல்லப்பட்டேன்

“என்ன சார் ஏன் இத்தனை டிலேயாகுது… என்னவாக்கும் உம்ம பிரச்சனை?”

என் கண் முன்னால் அழுக்குப் படிந்த மர மேசையின் சதுரம். என் பக்கவாட்டில் வெள்ளை வேட்டியின் மேல் பளிச்சென இறங்கிய கருப்புக் கோட்டின் விளிம்பு. என் கையைப் பிடித்திருந்த கையின் இறுக்கம்.

”பிரச்சனைன்னு இல்லை பிஎஸ்கே… இந்த ஸ்கூலை நடத்துறதே முக்கியமா நம்ப அக்ரஹார குழந்தைங்களை வைச்சுத்தான்… இப்ப இரண்டு வருஷங்களாத்தான் செட்டியார் குழந்தைங்களே வர ஆரம்பிச்சிருக்கா. இப்ப போய் நான் இந்தப் புள்ளையை சேர்ந்துண்டேன்னா… பிரச்சனையாயிடும் பிஎஸ்கே. புரிஞ்சுக்கோங்கோ… உங்களுக்கு பயந்துண்டு அக்ரகாரத்துக்காரா கூட சரினுண்டுடுவா… ஆனா செட்டியார் என்னைக் கட்டிவைச்சு உரிச்சுடுவார்… வேலை போயிடும்… ஏழை பிராம்மணன் வயத்துல அடிக்காதீரும் பிஎஸ்கே… இவாளுக்கெல்லாம்தான் அமெரிக்கன் மிஷன் ஸ்கூல் இருக்கே… அங்கேயே இவன் படிக்கட்டும் வேணும்னா அவன் படிப்புச் செலவைக் கூட நான் ஏத்துண்டுடறேன்… எல்லாத்துக்கு மேல தர்மம்னும் ஒண்ணு இருக்கோல்லியோ..”

அப்போது தலைப்பாகை கட்டிய இன்னொரு மனிதர் உள்ளே வந்தார்.

”என்ன சொல்றேள் பிரின்ஸிபால் சார்…. மிஷன் ஸ்கூல் போனாவாளெல்லாம் ஹிந்து மதத்தை விட்டே போயிட்டா… நீங்க கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்றேள்.. அவா வாங்கோ வாங்கோன்னு மரியாதையா கைநீட்டிக் கூப்படறா… இதா ஓய் நீங்கெள்லாம் தர்மத்தைக் காப்பாத்துற லட்சணம்… நன்னா இருக்கு. உம்ம தர்ம்ம் ஒழிஞ்சாத்தான் ஓய் தேசத்துக்கே சுதந்திரம் கிடைக்கும்.. ஓய் பிஎஸ்கே! இவரோட பேசிப் பிரயோஜனம் இல்லை. பேசாம ஒக்கூர் போய் நீர் செட்டியார்வாளைப் பாத்துரும். இல்லைன்னா ஒரு கடிதாசி போட்டுடும். அப்பத்தான் ஜோலி நடக்கும்”

தலைமையாசிரியர் வெறுப்புடன் என்னைப் பார்த்தார், ”…ஜெயில் களி தின்னாலும் குடும்பம் சுகபோஜனம் செய்ய பூர்வார்ஜிதச் சொத்து இருந்தா என்ன ரிஃபார்ம்னாலும் பேசலாம். நாளைக்கு இதனால ஸ்கூல்லையே இழுத்து மூடுற நிலை வரலாம்… என் கர்மான்னு நான் சேத்துக்கிறேன் இத்த… இவனை. எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்”

அந்தத் தலைப்பாகை மனிதர் உறுமினார்… ”நாங்க ஒண்ணும் வசதியா வாழ்ந்துடலை… என் சகோதரன் பட்ட தாரித்திரியத்தில் அதனால ஏற்பட்ட அவமானத்தில் நூத்தில் ஒரு பங்கை நீர் பார்த்திருக்க மாட்டீர்… அவன் பாண்டிச்சேரி போனபிறகும் நாங்க பட்ட போலீஸ் தொல்லை… உமக்கு அதெல்லாம் இந்த ஜன்மாவில் புரியாது ஓய்”

என் உமிழ்நீர் கசப்புடன் சுரந்தது எனக்கு நினைவிருக்கிறது. வயிற்றைப் பிசைந்தது. நிற்கவே முடியவில்லை. அப்படியே மடங்கி விழுந்து ஊர்ந்து ஊர்ந்தாவது அந்த இடத்தை விட்டு நழுவி பிறகு ஒரே ஓட்டமாக எங்கள் வீட்டுக்கு வந்து அம்மா மடியில் முகம் புதைத்து அழ வேண்டுமென என் உடலெங்கும் துடித்தது.

ஆனால் அத்தனைக்கும் நடுவில் பள்ளிக்கூடத்தில் நான் சேர்க்கப்பட்டு விட்டேன் என்பது புரிந்தது. பள்ளியில் சேர்ந்த பிறகுதான் ஆரம்பித்தது அந்த நரக வாழ்க்கை. அத்தனை பேர் மத்தியிலும் நான் தனியன், வேறானவன் என்பது ஒவ்வொரு நிமிடமும் எனக்குச் சொல்லப்பட்டு வந்தது. மற்ற எல்லா மாணவர்களும் உயரத்தின்படி உட்கார வைக்கப்பட்டிருக்க, எனக்கு மட்டும் கடைசி பெஞ்ச்.

“சார் ஒண்ணும் தெரியலை மறைக்குது”

“ஆமா ஐசிஎஸ் போப்போறார் மறைக்குது…. டேய் நீ படிக்கிறதே தண்டம்… சரி சரி முன்னால வா… என்ன பெஞ்சிலே உட்கார்றே?… இதா இங்க உட்காருடா… தரைல.. .தரைப்படைத் தளபதி…”

கொல்லென்று எழுந்து, பிரம்பு தட்டலில் அடங்கியமர்ந்தது சிரிப்பு.

மதியம் அவர் வீட்டிலிருந்து எனக்கு ஒரு போணியில் பால் வரும். அதுவே முக்கியமான கிண்டலுக்கான காரணமானது. ஒரு முறை கம்மத்துச் செட்டியாரின் பையன் கோபாலுதான் அந்த பெயர் சூடலை நடத்தினான். ”எச்சில் பால் குடிச்சு வளர்ற பயடா. இனி இவன் பேர் எச்சில்பால்” அதுவே என் பெயராகியது மாணவர்கள் மத்தியில்.

“எச்சில்பால்!”, “டேய் எச்சில்பால்! ஒத்தி நில்லுடா அந்தாண்டை. நாங்க சாப்பிடணும்டா”

“அண்ணைக்கு எங்காத்துல தொக்கு கொடுத்து விட்டா… நான் சாப்பிடும்போது பாத்தா கொள்ளிவாய் பிசாசு மாதிரி எச்சில்பால் பாத்துண்டே இருந்தாண்டா… அன்னைக்கு ஆத்துக்குப் போனதுமே எனக்கு வயத்துவலி வந்துடுத்து”

“ஆமா அவன் கண்ணு கொள்ளிக் கண்ணுடா… தோ எச்சில்பால் பாக்கிறான் பாரு.. டிபன் பாக்ஸை மூடுடா”

என் முகத்துக்கு நேராக டிபன் பாக்ஸ்களை மூடி எனக்கு முதுகு காட்டி உட்காருவதில் அவர்களுக்கு ஒரு குரூர திருப்தி இருந்தது. தமிழாசிரியர் ஒருநாள் வகுப்பில் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு, வகுப்பே நகைத்த போதுதான் நான் முடிவு செய்தேன்.

அன்று அக்ரகாரத்தின் பின்பக்க வழியாக வேகவேகமாக பிஎஸ்கேயின் வீட்டுக்கே சென்று விட்டேன். புழக்கடை திறந்திருந்த. மாரியான் அண்ணன் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அவன் கரும் உடலில் வியர்வை மின்ன கைகளில் மல வாசம் வீசிக்கொண்டிருந்த்து. என்னை என்ன என்பது போல வியப்புடன் பார்க்க, வீட்டின் உள்ளே என்று கை காட்டினேன். பிறகு கொஞ்சம் சத்தமாக “வக்கீல் சாமியைப் பாக்கணும்.”

அடுப்படியில் இருந்து ஓர் அம்மாள் மிகக் கொஞ்சமாக வெளியே வந்து, எதற்கும் தள்ளியே நின்றார். “யாருடா நீ? என்ன வேணும்?”

“நான் … எனக்கு வக்கீல் சாமியைப் பாக்கணும்”

அந்த அம்மாள் எதையோ சொல்ல வாயெடுக்கும் முன்னர் அவரே வந்துவிட்டார். “அடே அம்பி நீயா வாடா வா“ என்றவர் சட்டென தாண்டி வந்து என் கழுத்தில் கையைப் போட்டு ஏறக்குறைய அரவணைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

என் உடல் நடுங்கியது! மாரியான் அண்ணன் கேவல் போல் ஏதோ ஒரு சப்தத்தை எழுப்பினான். வீட்டு அடுப்படியில் ஒரு பாத்திரம், “ணங்” என்கிற சத்தத்துடன் வேகமாக வைக்கப்பட்டது. வீட்டுக்குள் என்னை அவரது கரம் அரவணைத்து இழுத்தபோது வீட்டுச்சுவர்களெல்லாம் கவிந்து, ஒரு பெரும் மௌனமாக, அளப்பரியதோர் அச்சத்தை என்னுள் எழுப்பியது. அந்த மௌனத்தின் உள்ளாக மெல்லிய விசும்பல் ஒன்றும் கேட்டது; அது வீட்டு அடுப்படியிலிருந்து என்பதை நான் உணர்ந்தேன். வீட்டின் உள்ளே குறுகலான ஒரு பாதை நீண்டு கொண்டே போனது. இறுதியில் ஓர் அறையில் முடிந்தது. அங்கே காந்தியின் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. ஒரு சாய்வு நாற்காலி. காலையின் சூரிய ஒளி ஆங்காங்கே கூரை ஓடுகளின் ஊடாகக் கோலம் போட்டிருந்தது. அவர் நாற்காலியில் அமர்ந்தார். அவரது கை மட்டும் தோளில் இருந்து விலகவே இல்லை.

“சொல்லு பாக்கணும்னியாமே ஏன்…”

“நான் இனி ஸ்கூலுக்குப் போகமாட்டேன்… இல்லைன்னா என்னை வேணா ஏசுசாமி ஸ்கூல்லயே சேத்துடுங்க… இந்த ஸ்கூல் வேணாம்” எப்படியோ தைரியத்தை வரவழைத்துச் சொல்லிவிட்டேன்.

அவர் முகம் கடுமையாகச் சுருங்கியது… “ஏன்?”

அத்தனை இனிமையும் போய் கடுமையாகி இருந்தது அவரது குரல்…

“எல்லாரும் …. கணக்கு சார் கூட என்னை ”எச்சில்பால்” அப்படீன்னு கேலி செய்றாங்க. கடைசி பெஞ்ச், எதுக்கெடுத்தாலும் அடி, பிரெண்டே இல்லை.. .எல்லாத்தையும் விட “எச்சில்பால்”னு சொல்லி கிண்டல் பண்றாங்க… உங்க பைசால படிக்கிறனாம். உங்க வீட்டு எச்சில் சாப்பாட்டை துன்றனாம். அது என் ஸ்கூல் இல்லீங்க… ஏசு சாமி ஸ்கூலுக்கே போயிடறேன்”

சாய்வு நாற்காலியில் அமர்ந்த அவரது முகத்தில் இருந்த வருத்தம் என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. மெதுவாக அவர் என்னிடம் சொன்னார்; ஏறக்குறைய கிசுகிசுப்பாக வெளிப்பட்டது அவரது குரல், “எச்சில்பால்னா மட்டம் இல்லடா அம்பி. யார் கொடுத்த எச்சில்பால் குடிச்சேன்னுதான் சிவஹிருதயர் கேட்டார்… உண்மையான ஞானம் உள்ளவாளுக்குத் தெரியுண்டா அது எச்சில் பால் இல்லை ஞானப்பால்னு… ஆனா அஞ்ஞானிகளுக்கு ஞானப்பால் கூட எச்சில்பாலாத் தாண்டா அம்பி” எனக்கு ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்ததால் இன்னும் சமாதானமாகிவிடவில்லை.

அவர் எழுந்த போது அவரது நடையில் இருந்த கம்பீரம் உறுதி எல்லாம் தளர்ந்திருப்பதைக் கண்டேன். ”சரி என் கூட வா… உங்காத்துக்குப் போவோம்” என்றார் அவர்.

வீட்டின் முன் வாசல் வழியாக என்னை அவர் அழைத்துக் கொண்டு சென்ற போதுதான் முதன் முதலாக அந்த வீதியில் கால் வைத்தேன். பிராம்மணர்களின் வீதி. எதிர்வீட்டில் ஒரு முதியவர் சுருக்கங்கள் நிறைந்த முகமெல்லாம் வெள்ளைத் திரையிட்ட கண்களாக விரிய, கையால் வாய் அடைத்துப் பார்த்தார். எல்லாரும் உறைந்து எங்களையே பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. குனிந்த தலையை நிமிர்ந்தபோது என் தோளில் கரத்துடன் நடந்த அவரும் தலை குனிந்தே நடப்பது தெரிந்தது.

வீட்டிற்குப் போவதற்கு முன்னரே உடுப்பி ஹோட்டல் முன்னால் என் தந்தையைக் கண்டோம். அந்தச் சின்ன ஹோட்டலின் வாசலில் என் அப்பா சிரட்டையில் ஊற்றப்பட்ட டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார். என்னையும் அவரையும் பார்த்ததும் சிரட்டையை ஓரமாகப் போட்டுவிட்டு மெலிந்து குறுகிய உடலை இன்னும் குறுக்கி, “வக்கீல் சாமி கும்பிடறேனுங்க பையன் தப்பு பண்ணிட்டானா…” என்றார்.

நிதானமாகவும் அழுத்தமாகவும் அவர் என் தந்தையிடம் பேசுவதை நான் கேட்டேன். “இவனை நான் என் புத்திரனா சுவீகாரம் எடுத்துக்கிறேன். உங்க அனுமதியை யாசகமா கேக்கிறேன். நீங்க தயவு பண்ணனும்”

அன்று என் தந்தையின் கண்களில் அதிர்ச்சியுடன் வழிந்த நீர் இன்றும் என் இதயத்தில் சொட்டிக்கொண்டேயிருக்கிறது. அன்று மாலை என் தந்தை என்னை அவரிடம் கொண்டு விட்டார், “வக்கீல் சாமி இனி நீங்கதான் இவனுக்கு எல்லாம்… வீட்டுக்குப் பின்னாடி தூங்கிகிடுவான்… எப்படியாவது ஆளாக்கிடுங்க… உங்க பிள்ளையா இல்லை, உங்க வீட்டு வேலைக்காரனா வளத்தீங்கன்னா போதும்…”

ஆனால் அவர் என்னை அணைத்துக் கொண்டார், “இல்லை இவன் என் மகன். என் பெயரை நிலை நாட்டப்போகும் என் வாரிசு. எனக்குச் சரிசம்மா இவனை வளக்குறதுதான் என் தருமம்… தெரிஞ்சோ தெரியாமலோ பிறப்பால சக மனுசனை ஒதுக்கி வைக்கிற மகா பாவ காரியத்தை பகவான் பெயராலே தலைமுறை தலைமுறையா செய்றதுக்கான ஒரு சின்ன பிராயசித்தம். உங்களுக்கு நானும் என் குடும்பமும் சந்ததிக்கும் கடமைப்பட்டு இருப்போம்.”

இப்படித்தான் நான் அவர் வீட்டில் வந்து சேர்ந்தேன். அவரோடு உண்டேன். அவரோடு உறங்கினேன். அவர் மறுநாள் பள்ளிக்கு வந்தார். தலைமையாசிரியர் அறைக்குச் சென்றார். அன்று மதியம் நான் கடைசி பெஞ்சிலிருந்து என் உயரத்தின் அடிப்படையில் உட்கார வைக்கப்பட்டேன். அரசாங்கத்துக்கு எழுதி அரசு மானியத்தை நிறுத்திவிடப் போவதாக அவர் மிரட்டியது பின்னாட்களில்தான் எனக்குத் தெரியும். தமிழாசிரியரும் மாறிவிட்டிருந்தார். தேர்வில் தமிழில் முதல் மாணவனாக வந்த போது, வகுப்பு முதல்வனான போது, என்று ஒவ்வொரு முறையும் என் தந்தையும் வளர்ப்புத் தந்தையும் மகிழ்ந்தனர். ஒவ்வொரு மாதமும் நான் என் தந்தையைப் பார்க்கச் செல்லும்போது எங்கள் குடியிருப்புக்கு அவரும் வருவார்.

அவர் வைணவர் என்றாலும் சைவ மரபை மிகவும் மதித்தார். அவரது வீட்டில் தேவார திருவாசகப் பாசுரங்களைப் படித்தேன். பெரிய புராணம் முழுவதுமாக மனனம் செய்தேன்.

அப்போதுதான் கோயில் நுழைவுப் போராட்டம் வெடித்தது. ஹரிஜனங்களை மதுரையில் கோயிலுக்குள் கொண்டு செல்ல ஒரு குழு மானாமதுரையிலிருந்து மதுரை செல்ல வேண்டும். அந்தக் குழுவில் அனைவரும் பிராம்மணர்கள். அந்த குழுவில் இவரும் ஒருவர். இவர் என்னையும் அழைத்து வருவதாகச் சொன்னார்.

தொடங்கியது பிரச்சினை இவர் தெளிவாகச் சொல்லிவிட்டார், என் சுவீகார புத்திரன் இல்லாவிட்டால் நான் வரமுடியாது. அவர்களுக்கோ என்னதான் ஆலய பிரவேசம் பேசினாலும் நான் அவர்கள் அருகில் பேருந்தில் வருவதை சகிக்க முடியவில்லை.

“சீட்டெல்லாம் நிரம்பிடுத்து.. இடமில்லை பாருங்கோ” என்றார் இராகவ அய்யங்கார்.

“அப்படீன்னா ஒண்ணு செய்யுங்கோ… நான் வரலை. என் சீட்டை இவனுக்குக் கொடுத்துடுங்கோ… நான் வந்தா என்ன, என் புத்திரன் வந்தா என்ன…”

அன்று மாலை கிளம்பிய பஸ்ஸில் நானும் அவரும் இருந்தோம். போகிற வழியில் என்னைப் பாடச் சொன்னார் அவருக்கு விருப்பமான பெரியபுராணப் பாடலையே பாடினேன். “..வேத நெறி தழைத்தோங்க…”

மற்றவர்கள் இறுக்கமான அமைதியுடன் கண்களை வெளியே ஓட்டியபடி அமர்ந்திருந்தனர்; நான் அங்கே இருப்பதையே மறந்துவிட விரும்புபவர்கள் போல. பேருந்தில் இருக்கையில் சாய்ந்தபடியே என் தோள்மீது கைபோட்டுக் கொண்டு அவர் சொன்னார்.. ”இதுதாண்டா அம்பி வேதநெறி… எல்லாவனுக்கும் ஞானத்தைக் கொடு… வந்தாவாளுக்கெல்லாம் ஞானத்தை வாரி வழங்கின பூமிடா இது… ஹுவான்சாங்கும் பாகியானும் வந்தாங்க… நாலந்தாவுக்கும் தட்சசீலத்துக்கும் காஞ்சிக்கும் யவனன் வந்து படிக்கலை? ஆனா இன்னைக்கு நம்ம ஸோதராளையே தொடாதே வேதம் படிக்காதேன்னு சொல்ற ராட்ஸங்களா ஆயிட்டோம்.. .டேய் வேதரிஷியெல்லாம் யாருடா? இன்னைக்கு யாரை தீண்டக்கூடாதுன்னு இவா தள்ளிவைச்சிருக்காளோ அவாதாண்டா… அவாகிட்ட இருந்துதாண்டா வேதங்களை இந்தப் புரோகிதக் கும்பல் திருடிண்டுட்டா… புராணம் தெரியுமோன்னோ உனக்கு? யுக முடிவில ராட்சஸால்லாம் வேதங்களை எடுத்து ஒளிச்சி வைச்சுண்டா. அவளாக்கு மட்டும்தான் சொந்தம்னுட்டா… பகவான் அந்த ராட்சஸாளை வதம் பண்ணி வேதமாதாவை மீட்டார். இன்னைக்கு வேதமாதாவை மட்டுமில்ல பகவானையும் கூட இவா மொத்த ஜனசமுதாயத்துட்டேருந்து மறைச்சுட்டா… இவாளோட போலி தருமத்தை வதம் பண்ணி சனாதன தருமத்தை ரக்ஷிக்கணும்டா அம்பி.. வேதநெறியை ரக்ஷிக்கணும்.. சமஸ்த ஜனங்களுக்கும் வேதமும் பகவானும் பொதுங்கிறதை பிரத்யட்சமா நிரூபிக்கணும்…”

அந்த வண்டியில் வந்த பலருக்கு அவர் பேச்சு ரசிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

பிறகு காலேஜில் படித்து பரிசு வாங்கி, மத்திய அரசு உத்யோகத்தில் கெஸட்ட் ஆபீஸராகச் சேர்ந்து, என் பெற்றோர் சொன்னபடி அத்தை பெண்ணையே திருமணம் செய்து ரயிலில் புதுமணத் தம்பதியராக வந்து ஸ்டேஷனில் இறங்கிய போது அடுத்த அதிசயம் எனக்குக் காத்திருந்தது.

அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி! செருப்பு போட்டுக் கொண்டு என் சமுதாயத்தினர் தெருவில் நடந்ததற்காக புளியம் விளாறால் கட்டி வைத்து உதைக்கப்பட்ட ஊரின் வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் நானும் என் மனைவியும் ஊரை வலம் வந்து இறுதியில் அக்கிரகாரத்தில் அவர் வீட்டிலேயே வந்து நின்றோம்.

“வா போகலாம்” என்றார் அவர்.

எங்கே? எனக்குத் தெரியவில்லை. இரட்டை நாதஸ்வரம் இசைக்க என் குதிரை வண்டி புறப்பட்டது. ஊர்வலம் இறுதியில் உடுப்பி ஹோட்டலில் நின்றது. அங்கே என் தந்தை உட்பட மரியான் அண்ணன் வரை எங்கள் உறவினர்கள் எங்கள் பகுதி மக்கள் அனைவரும் நல்ல ஆடைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

“உன் திருமணப் பரிசு”

அனைவரையும் ஹோட்டல் உரிமையாளரே வரவேற்று அனைவருடனும் சரிசமமாக அமரச் செய்து உணவு பரிமாறினார்.

-0-

அவர் வீட்டின்முன் கூடியிருந்த கூட்டம் என்னை நிகழ்காலத்திற்கு அழைத்தது. வீட்டின் முன்னால் சைக்கிளை நிறுத்திவிட்டு அவரிடம் சென்றேன். அதே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். வீங்கியிருந்த கால்களை ஸ்டூலில் வைத்திருந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த அந்த முகத்தின் அனுபவச் சுருக்கங்கள் ஒரு விளக்க இயலாத கம்பீரத்தை அளித்தன.

மெல்ல அவரருகே சென்றேன். விஜயராகவன் அய்யங்கார் மெதுவாக என்னிடம், “உங்களுக்காகத்தான் உயிரை பிடிச்சுண்டிருக்கார். சரம ஸ்லோகம் சொல்லப் போறோம். கங்கா ஜலமா நெனச்சுண்டு கொஞ்சம் பாலை வாயில் மெதுவா ஊத்துங்கோ!” என்றார். பால் டம்ளரை நான் வாங்கினேன். அவர்கள் ஆரம்பித்தனர்.

”சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அகம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச”

அவர் விரல் நடுங்கியபடி அசைந்து என்னை அழைத்தது. நான் அவர் வாயருகில் குனிந்தேன்… “வ்வேத்த ந்நெர்ரிலி…” என்று குழறியது அவர் வாய். எனக்குப் புரிந்தது. மிக மெல்லிய குரலில் இறுதி மூச்சில் மெல்ல உயிரிழந்து கொண்டிருந்த அவர் காதில் பாடினேன்…

“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தன்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.”

[இந்தக் கதை கற்பனை. இந்தக் கற்பனையின் கரு- மானாமதுரையில் கிருஷ்ணசாமி அய்யங்கார் எனும் காந்தியப் போராட்டவீரர், சம்பந்தம் என்கிற தலித் சிறுவனை தனது மகனாக சுவீகாரம் எடுத்து பல சமுதாயp புரட்சிகளை ஏற்படுத்தினார். சம்பந்தம் பெரிய அரசு அதிகாரியாக இருந்தார். அவர் தனது சுவீகாரத் தந்தையைக் குறித்து எழுதிய நூல் “ஹரிஜன அய்யங்கார்”.]

– ஆகஸ்ட் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *