கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,344 
 
 

சாதனா ஒன்றும் சின்ன குழந்தையல்ல. அவளுக்கு வயது இருபது. ஆனால், அவள் பாட்டி சொல்வது போல், “ சில வழிகளில், அவள் ஒரு குழந்தை போலத்தான்”

அவளுக்கு திசை போக்கு (direction sense) இல்லை. மூன்று தெரு தள்ளி விட்டால், திரும்பி வர வழி தெரியாது. ஒரு பூட்டைக்கூட சரியாக திறக்கத்தேரியாது. இடது வலது பக்க குழப்பமுண்டு.

சாதனா தன் உடைகளைக்கூட தலை கீழாக போட்டுக் கொள்வாள். அல்லது, உள்புறம் வெளியாக போட்டுக் கொள்வாள். அதை சொல்லவோ அல்லது தெரிந்து கொள்ளவோ கூட அவளுக்கு தெரியாது . தப்பான ஷூவுக்குள் காலை விட்டு விட்டு, அதை எடுக்க தெரியாமல் திணறுவாள். நாய் தன் வாலை கடிக்க தேடி தேடி சுற்றி வருமே ! அது போல !

சாதனா பேசும் போது, கூடவே ஒரு விசில் சத்தமும், துணையாய் வரும் . கேட்க வேடிக்கையாக இருக்கும். குள்ளம், பருமனான விரல்கள், கொஞ்சம் வளைந்த அழகற்ற நகங்கள்,, கண்ணில் பருமனான கண்ணாடி, இதெல்லாம் அவள் பிறப்பு கோளாறு. இதெல்லாம் கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள். கூடவே அவளது மூளைக் குறைவு நோயும் சேர்த்துக் கொள்ளுங்கள் .

அதனாலேயே அவளுக்கு சங்கடம். உறவுகளிடமிருந்து ஒதுங்கினாள். நண்பர்களை தவிர்த்தாள். தனிமையை விரும்பினாள்

ஆனால். அவள் ஒரு இயல்பான பெண். தீவிர சிந்தனையாளர். தன் பாட்டி பேரில் கொள்ளை பிரியம் . அம்மா அப்பா அவள் சிறு வயதிலேயே தவறி விட்டனர். பாட்டி தான் எல்லாம் .

ஆனால், இத்தனை குறைகள் நடுவில், சாதனா நடனமாடுகையில், அவளது அத்தனை குறைகளையும் மறந்து விடுவாள். நடனத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு அவளுக்கு.

அவளுக்கு இயற்கையை பிடிக்கும். உண்டு. பார்க், தோட்டம், இதெல்லாம் பார்க்கையில் தன்னை மறந்து விடுவாள் .

அவளுக்கு கதைகளில் விருப்பம். “கதை சொல்லு பாட்டி” என்று பாட்டியை நச்சரிப்பாள். பாடல் வரிகளுக்குள் பொதிந்து கிடக்கும் அர்த்தத்தை ஊன்றி கவனிப்பாள். சாதனா ஒரு இயற்கை கவிதையாளினி.

ஒரு நாள் பாட்டி காலமாகி விட்டாள். சுற்றமும் நட்பும் கூடியிருந்தது . ஆனால், சாதனாவிடம் எந்த மாற்றமுமில்லை. ஒரு பொட்டு கண்ணீர் சிந்த வில்லை . அழ வில்லை. பாட்டியை பார்த்தாள். என்ன நினைத்தாளோ, திடீரென்று வளைந்து இருந்த அவள் தோரணை மாறியது. நிமிர்ந்து உட்கார்ந்தாள் . அவள் உதடு அசைந்தது . வார்த்தைகள் வெளி வந்தன . கவிதையாக .

மரணம் :

எல்லோர்க்கும் நிச்சயம்.
ஆயினும்
உற்றாருக்கு வாய்த்ததும்
அலறுகிறது மனம்..
ஏன்..?

இறக்கத்தான் மனிதன்
படைக்கப்பட்டான் எனில்
இடையில் பாசம் எதற்கு
பற்று எதற்கு..?

நிலையின்மை பற்றி
நிதம் நிதம் பேசினாலும்
நட்பின் மரணம்
நம்மை நிலை குலைப்பதேன்..?
அண்ணா தம்பிஐயாஅப்பா
நண்பனே அம்மு
எல்லாம் சட்டெனமாறி

சடலம் என்னும்
பொதுப்பெயர் பெறுகிறோம்..

சலனமிருந்தால் சந்தோஷம்
சடலமானால் துக்கம்..

மனிதன்
உயர்பிறவிதானா..?

சிலகாலம் வந்தோம்
சிலகாலம் சிரித்தோம்
சிலகாலம் அழுதோம்
சிலகாலம் மகிழ்ந்தோம்

ஒருநாளில் மறைகிறோம்.
மாயம்தான் வாழ்க்கை எனில்
மனிதன்
உயர்பிறவிதானா..?

சென்றவரெல்லாம் திரும்புவதில்லை
இருப்பவர் அவருடன் செல்வதில்லை

இன்று இறந்தவருக்காய்
நாளை போகுபவர் அழுகிறார்கள்..
மனிதப்பிறவி
உயர்வானது தானா..?

நிலையில்லை வாழ்க்கை
நிலையில்லை மகிழ்ச்சி
நிலையில்லை அழுகை
நிலையில்லை சலனம்
நிலையில்லை ஜனனம்

நிலையானது மரணம்..

மனிதன் உயர்வானவன் ..

மரணம்

அவனினும் உயர்வானது..!

மனிதப்பிறவி
உயர்வானது தானா..?

கூடியிருந்த அனைவருக்கும் ஆச்சரியம். சாதனாவுக்கு வருத்தப்பட தெரியவில்லை. ஆனால், இப்படி கவிதையாய் கொட்டுகிறாளே!

அன்றிலிருந்து சாதனா மாறிவிட்டாள். அவளுக்கு பிடித்த கவிதையை தன் பாட்டியாக ஏற்றுக் கொண்டாள். பாட்டியின் இழப்பை ஏற்றுக் கொண்டாள். அதை இயல்பாக மாற்றிக் கொண்டாள்.

ஒரு நாள், அவள் பார்க்கில் தனியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒரு புதரில் படர்ந்திருந்த பூக்குவியல் மேல் சென்றது. உடனே, ஒரு கவிதை எழுதி பத்திரிகைக்கு அனுப்பினாள். கவிதை பிரசுரம் ஆனது .அன்றிலிருந்து அவள் ஒரு கவிதை சொல்லி ஆகி விட்டாள்.

மற்றொரு நாள், முள்ளிருக்கும் மலரை கண்டாள், உடனே அவளுக்கு ஒரு கவிதை பிறந்தது .

மலர் என்று தான் நேசித்தேன்..!
வலித்த பிறகு தான் தெரிந்தது அது முள் என்று..!
மலரை மறக்கவும் முடியவில்லை..! முள்ளை எடுக்கவும் தெரியவில்லை..!

நாளுக்கு நாள் அவளது திறன் மெருகேறியது. மக்கள் அவளை மதித்தனர்.

இன்று சினிமாவுக்கு பாட்டு எழுதும் அளவுக்கு அவள் மாறி விட்டாள். அவளுக்கு பிடித்த பாதையில், கற்பனையில், இன்று பயணிக்கிறாள் சந்தோஷமாக !

அவள் இன்றும் திக்கு திசை தெரியாதவள் தான். உடற்குறை உள்ளவள்தான். ஆனால், அதையும் மீறி, அவளுக்கு மன நிம்மதியும், மன தைரியமும் கிடைத்துள்ளது. பிறரை சாராமல், தன்னை தானே சார்ந்து இருக்க முடியும், மற்றவர் கையை எதிர்பார்க்க வேண்டியது இல்லை.

நன்றி: கவிதை: வலையில் படித்தது

ஆ.கு:
Choose a Job You Love, and You Will Never Have To Work a Day in Your Life (Confucius)
உனக்கு பிடித்த வேலையை நீ தேர்ந்தெடுத்தால், நீ ஒரு நாளும் உன் வாழ்வில் வேலை செய்ய வேண்டாம் – கண்புசியஸ்

Print Friendly, PDF & Email
முரளிதரன் எனும் எனது இயற்பெயரில் நான் 2012 அக்டோபர் முதல் சிறுகதை எழுதி வருகிறேன். நான் அரசுடைமை வங்கியில், பணி புரிந்து விருப்ப ஒய்வு பெற்றவன். கோவன்சிஸ், மற்றும் வெளி நாட்டு வங்கிகளில், ரிஸ்க் ஹெட் மற்றும் ஆடிட்டராக பணி புரிந்த அனுபவம் உண்டு. மன வளம், கணிணி மற்றும் வணிக சம்பந்த கதை எழுத ஆவல். நல்ல கருத்து கூற விருப்பம். குங்குமம், குமுதம் போன்ற பத்திரிகைகளில் எனது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *