நீலா, ராணியல்ல! ஆனால் அவள் ஒரு ராணியைப் போல் தெரிகிறாள். அவளது சிறிய பங்களாவைச் சுற்றிலும் கொய்யா மரங்கள், குடை மல்லிகைச் செடிகள், கூர்க்கா வீரர்களைப் போன்ற செவ்விள நீர் தென்னைகள். அவளுடைய வீட்டுக் காம்பவுண்டு வாசலில் நின்று பார்த்தால் அது ஒரு சோலையாகத் தெரியுமே தவிர உள்ளே மாளிகை இருப்பதே தெரியாது.
நீலாவை அடிக்கடி வெளியிலே பார்க்க முடியாது. காற்று வாங்குவதற்கோ, கடைத்தெருவிற்கோ அவள் போவதில்லை. அவளுக்குக் கூந்தல் மகிழ மல்லிகை வேண்டும்; நெற்றி மகிழக் குங்குமம். இந்த இரண்டையும் வாங்கிவர, அவளுக்குப் பியூன் பொன்னம்பலம் இருக்கிறான். சமையல் வேலைக்கு ஒரு பாட்டி, எடுக்கவும் கொடுக்கவும் ஒரு சிறுமி. இவர்களைத் தவிர அந்த மாளிகையில் வேற்று ஆள் நடமாட்டம் இல்லை.
இவ்வளவு வசதிகளைக் கொண்ட நீலா சில வேளைகளில் பைத்தியம் பிடித்தவளைப்போல சோர்ந்துபோய் சோபாவில் சாய்ந்து விடுகிறாள். அப்படிப்பட்ட நேரங்களில் பாட்டி அவளைத் தட்டி எழுப்பி காப்பி கொடுக்கிறாள். வேலைகளில் மூழ்கியிருக்கும்போது நீலாவை எந்தக் கவலையும் பீடிப்பதில்லை.பள்ளி விடுமுறைகள்தான் அவளைப் பாடாய்ப்படுத்தின. சனி, ஞாயிறுகளில் நீலா நிம்மதியில்லாமல் இருப்பாள்; இசைப் பெட்டியை திருகி பாட்டுக்கேட்பாள். அதையும் சிறிது நேரம்தான் கேட்பாள். நீலா, பாவம்! வாழ்க்கையை அனுபவித்துத் துப்பிவிட்டு பழுத்துப்போயிருக்கும் வேலைக்காரப் பாட்டி, நீலாவிற்கு ஒரு தேவதை போலவும் வாழ்க்கையின் ருசியைப் பருகுவதற்கு பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய பருவத்திலிருக்கும் வேலைக்காரச் சிறுமி இரக்கத்திற்குரியவளாகவும் தெரிந்தார்கள்.
உலகில் ரகசியமில்லாத மனிதர்கள் யாருமில்லை. ஆயிரக் கணக்கான ரகசியங்களை மனதுக்குள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு அசோகன் நாட்டைத் திறம்பட ஆண்டான்.மனதைச்சுடும் சொந்த ரகசியங்களை மறைத்துக்கொண்டே ராணி மங்கம்மா ராஜ்யபாரம் நடத்தினாள். அந்த வரிசையில்தான் நீலாவைச் சேர்க்க வேண்டும். இருபத்தி நான்கு மணி நேரமும் உடனிருக்கும் பணிப்பெண்கள் கூடத் தெரிந்துகொள்ள முடி யாத ஒரு மனச்சுமையை தாங்கிக்கொண்டு நீலா ஒரு பள்ளியின் நிர்வாகத்தை எப்படித்திறம்பட நடத்துகிறாள்!.
புகழ்பெற்ற ராணி கோதை நாச்சியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியின் ஹெட்மிஸ்ட்ரஸ் அவள். ஆயிரம் பிள்ளைகள் பயிலும் மிகப்பெரிய பள்ளி நீலாவின் கையில் பம்பரம்போல் சுழன்று கொண்டிருந்தது.
நீலா என்பது, அவளுக்கு, அவளது பெற்றோர்கள் வைத்த பெயர். ஆனால் அந்தப்பெயரைச் சொல்லி அழைக்க பள்ளியில் யாருக்குத் தைரியம் இருக்கிறது? ‘அம்மா’ என்பதுதான் பள்ளியிலேயே பிரசித்தமான சொல். ஊரிலே ஹெட்மிஸ்ட்ரஸ் என்று சொன்னால் புரியும்!
நீலா பள்ளிக் கூடத்தில் நெருப்பாக இருப்பாள். மற்ற ஆசிரியைகளுக்கு அவளைக்கண்டால் சிம்ம சொப்பனம். ‘அம்மா வர்றாங்க’ என்ற சொற்றொடர். பச்சை குழந்தைகளுக்கு ‘பூச்சாண்டி வர்றான்’ என்று சொல்லுவது போல் பள்ளி மாணவிகளின் இரத்தத்தில் ஊறி விட்டது.
நீலா, உடை உடுத்திக் கொள்வதில் கவர்ச்சியை விரும்புகிறவள். அவள் வெள்ளைப்புடவை உடுத்தினால், வெண்புறாவைப் போல் இருப்பாள். புடவைக்கு இணையாக இளம் ரோஜா வண் ணத்தில் ரவிக்கை போட்டுக்கொள்வாள். சிவப்பு ரத்தினத்தை நொறுக்கிப் பொடியாக்கி நெற்றியில் பூட்டியிருப்பதுபோல் குங்குமம் மின்னும். அவள் கருப்புப்புடவை உடுத்தினால் மின் னும் கருங்குயிலாகத் தெரிவாள். பூப்போட்ட புடவைக்கு அவள் பஞ்சவர்ணக்கிளியேதான்!
அழகு என்பது ஒரு புதிர்; புரியாதபுதிர். அழகு உருவத்தில் உறைந்து கிடக்குமா? உடையில் புகுந்திருக்குமா? பருவத்தில் பூத்து நிற்குமா? மது அருந்தியவன் எல்லோரையும் ரதி என்கிறான்; காம வெறிபிடித்தவன் விளக்கை அணைத்து விட்டால் ராணியும் ஒன்றுதான் தாதியும் ஒன்றுதான் என்கிறான்.படித் தவன் ரோஜாவை அழகிய மலர் என்றால், படிக்காதவன், ரோஜாவைவிட மனோரஞ்சிதத்தில்தான் மயக்கும் வாடை இருக்கிறது, ஆகவே அதுவே எனக்கு அழகாகத் தெரிகிறது என் கிறான். இப்படி அழகு ஒரு தத்துவமாகி விட்டதே!
நீலாவிற்கு வயது முப்பது. அவள் எளிய உடைகளைத்தான் உடுத்துகிறாள். குதிரையைப்போல் கருஞ்சிவப்பு நிறமுடைய வள்தான். ஆனாலும் ஊரில் நீலா குழப்பாத ஆடவர் உள்ளம் இல்லையே! பள்ளியிலே உள்ளவர்கள் அவளது அதிகாரத்திற்கு அடங்கி விடுகிறார்கள்; ஊரிலே உள்ளவர்கள் அவள் தோற்றத் தில் சுருண்டு வலியவந்து மரியாதை காட்டுகிறார்கள்.
எங்கோ பிறந்த நீலா, ராணி கோதை நாச்சியார் உயர் நிலைப் பள்ளிக்கு ஹெட்மிஸ்ட்ரசாக வந்தாள். சேரிப்பகுதியில் இருந்து சீமான்கள் புரம்வரை அவள் பிரபலமாகிவிட்டாள்.
ஆனால் ……….!
தோற்றத்தாலும், தூய நடவடிக்கைகளாலும் ஊரையே தன்காலடிக்குக் கொண்டுவந்த நீலா, தனக்குள்ளேயே அடிக்கடி குமுறிக்கொண்டிருக்கிறாளே, ஏன்? வீட்டில் மாடி அறைக்குள் உட்கார்ந்து கொண்டு கண்களைக்கசக்கிக் கொண்டே இருக்கிறாளே எதற்காக?
பல ஆண்டுகளுக்கு முன்பு நீலாவின் மனத்திரையில் நிகழ்ந்த பழைய சம்பவங்கள் சண்டைப்படங்களைப் போல் நடந்து கொண்டிருக்கின்றன. அது இது-
“நீலா, உனக்கு வேண்டிய சாமான்களெல்லாம் வாங்கி வந்திருக்கிறேன். டில்லியில் எதைப் பார்த்தாலும் உனக்கு வாங்கிப்போக வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை! ஆனால் அவைகளை எப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்றுதான் தெரியவில்லை” மிகுந்த அன்புடன் சொன்னான் கனகசுந்தரம்.
நீலா சிரித்தாள். ஆனால் எப்போதும்போல் அவள் உண்மையாகச் சிரிக்கவில்லை. இதற்குமுன் எத்தனையோ முறை அன் பொழுகச் சிரித்திருக்கிறாள்; கண்டவர் உள்ளத்தில் கெட்ட எண்ணங்களைத் தூண்டும் வகையில் மதுமலர்கள் பூப்பதுபோல் பலமுறை சிரித்திருக்கிறாள். அந்த மலர்ச்சியும், கவர்ச்சியும் போதைத் தன்மையும் இப்போது இல்லை. கனகசுந்தரமும் இதைப் புரிந்து கொண்டான். அவன் மனம் துணுக்குறத்தான் செய்தது. எப்போதுமில்லாத முறையில் நீலா ஏன் இப்படி வஞ்சகமாகச் சிரிக்கிறாள் என்று எண்ணிய கனகசுந்தரம் அடுப் படிப்பக்கமாகப் பார்த்தான். நீலாவின் அன்னை ஊரிலிருந்து வந்திருப்பது அவனுக்குப்புரிந்தது. ஏதோ, வீட்டில் ஒத்திகை நடந்திருக்கிறது என்று அவன் தீர்மானித்துக் கொண்டான் துறவியின் கையிலே பணமும், பெண்களின் மனத்திலே ரகசிய மும் நிற்காது என்பதை உணர்ந்தவன் போல் கனகன் பெரு மூச்சு விட்டுக்கொண்டு கட்டிலுக்கு வந்து உட்கார்ந்தான்.
பொழுது விடிந்தது. கனகத்தின் நண்பர்கள் எல்லோரும் அவனைச் சந்திக்க வந்தார்கள். கனகம் டில்லிக்குப்போய் ஒரு திங்களுக்கு மேலாயிற்று. அன்றுதான் ஊர் திரும்பியிருந்தான். ஆட்டத்தின் சிறப்பு – அதிகாரிகள் சூட்டிய புகழ் மாலை கவர்னர் ஜெனரல் கொடுத்த விருந்து – அனைத்தையும் விரி- வாகச் சொன்னான் சுந்தரம்.
கடைசியாக ஊர்ப்பெரியவர் ஒண்டிப்புலியா பிள்ளை வந்தார். அவர்தான் அந்த ஊருக்ரு நாட்டாண்மை.
“தம்பீ!”
“ஐயா!”
“பிரயாணமெல்லாம் சுகம் தானே!”
“ஒன்றும் குறையில்லை! ரொம்ப நிம்மதி!”
“தங்கச்சி வீட்டிலே தானா?”
“நீலாவைத்தானே கேட்கிறீங்க! அவள் அவங்க தாயார் வீட்டுக்குப் போயிருக்கா! காலையிலே தான் போயிருக்கா!”
பெரியவர் லேசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு கோடிக் கணக்கான குழப்பங்களை விளைவித்தது கனகத்திற்கு! நேற்று அவள் விரக்தியோடு சிரித்தாள்; இன்று இவர் விகடமாகச் சிரிக்கிறார்; விபரீதம் காத்திருக்குமோ?- கனகன் கலங்கத்தான் செய்தான்.
பெரியவர் விடவில்லை. கனகத்தின் தோளில் கை போட்டுக் கொண்டே நடந்தார். மணியக்காரரல்லவா—அவர் நடையில் மிடுக்கு இருக்கத்தானே செய்யும். பெரியவர் கனகத்தை கடைத்தெரு தாண்டி குளத்தங்கரைவரை அழைத்துச் சென்று விட்டு. பிரியப்போகும் சமயத்தில் எதைச் சொல்ல வேண்டு மென்று துடித்தாரோ அந்தச் செய்தியை கனகத்திடம் சொல்லி விட்டார். கனகத்தின் குமுறல், அதனால் அவன் முகத்தில் ஏற்பட்ட பிரதிபலிப்பு – எதையும் அந்தப் பெரியவர் ஏறிட்டுப் பார்க்கவில்லை; தகவலைச் சொன்னதும் பச்சைப் பாம்பைப்போல் நெளிந்து வீட்டுக்கு ஓடிவிட்டார். கடந்த இரவு நீலா அலட்சி யமாகச் சிரித்ததின் பொருளை கனகன் அப்போதுதான் உணர்ந்தான்.
கனகசுந்தரம் சிறந்த கரக ஆட்டக்காரன். சின்னப்பிள்ளையாக இருந்த காலம் தொட்டே அந்தத் தொழிலை அவன் விரும் பிக் கற்றுத் தேர்ந்து மேலோங்கி வந்தவன். அவனது மாமா சிறந்த கரக விளையாட்டுக் காரர். புதுக்கோட்டை சமஸ்தானத் தில் கொன்னையூர் குருபரனின் கரக ஆட்டம் இல்லாத விழாவே இருக்காது; அவ்வளவு கீர்த்தி இருந்தது அவரதுகரக விளையாட் டுக்கு. குருபரனின் ஒரே மகள்தான் நீலா. குருபரன் வாத நோய்க்கு ஆளாகி அல்லல் படுமுன்னரே நீலாவை அவளது பத் தாவது வயதிலேயே கனகசுந்தரத்திற்கு மணமுடித்து வைத் தார். தனது மருமகன் தனது தொழிலையே கற்றுப் புகழ் பெற வேண்டுமென்பது தான் குருபரனின் பிரார்த்தனை. இரண் டாண்டுகளுக்குப் பின் நோய் முற்றி குருபரன் காலமாகிவிட் டார். நீலா படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படித்தாள்.
திருவிழாக் காலங்களில் கனகனுக்கு தொடர்ந்து ஆட்டங் கள் வரும். ஊர் திரும்புவதற்கு பத்து நாட்களாகும்! திரும்பும் போதெல்லாம் நீலாவுக்கு புடவைகள், பட்டுத்துணிகள். பவளச் சரங்கள் வாங்கி வரத்தவறமாட்டான் கனகன். தனது மனைவி படித்து உத்தியோகத்திற்கு வரவேண்டுமென்று எண்ணினான் அவன். மனைவிக்கு அவ்வளவு சுதந்திரமும் மதிப்பும் கொடுத் தான், மயிலை எல்லோரும் மதிக்கிறார்கள்; வர்ணிக்கிறார்கள்; அது கேட்டு அந்த மயில் சிலிர்த்துக் கொள்கிறது. மனிதர்கள் என் தோகையைக் கண்டு மயங்கி நிற்கிறார்கள். அவர்கள் என் சொரி பற்றிய கால்களையும் விகாரமான சொட்டை விழுந்த என் நகங்களையும் ஒரு கணம் பார்த்தால் என்னை விரும்பமாட் டார்கள் என்று நினைத்து மயில் நாணிக்கொள்கிறது. அதுபோல வேதான் பெண்களும்! அவர்களது குணம் அவர்களுக்கு மட்டு மே தெரிகிறது. ஆனால் அவர்களது கவர்ச்சி மட்டும் மற்றவர்வர்களுக்கு வலை வீசுகிறது.
நீலா இப்போது கல்லூரி மாணவியாகி விட்டாள். இரட் டைச் சடைபோட்டு கல்லூரிக்கு போகிறாள்.பட்டுப் பூச்சியைப் போல் அவள் பலரது கண்களை உறுத்திக் கொண்டிருக்கிறாள்.
கனகன் ஊர் ஊராகச் சுற்றி பொன்னையும் பொருளையும் கொண்டுவந்து குவித்தான், ஜடைவில்லை, ஜரிகைப் புடவை, ஒட்டியானம், வைர மூக்குத்தி— எல்லாமே நீலாவுக்கு வந்தவண் ணமாக இருந்தன.
அன்று!
புதுக்கோட்டை மகர நோன்பு ஆட்டம் முடிந்து கனகன் வீட்டுக்கு வந்தான். மன்னர் கொடுத்த தங்கப் பதக்கத்தை அப்படியே கொண்டுவந்து நீலாவின் கழுத்தில் போட்டான். நீலாவின் நெஞ்சம் மலர்ந்து சுருங்கியது.
“ஏன் நீலா? ஒரு கேள்வி! கல்லூரிக்குப் போனபின்னால் நீ குதூகலமாகவே இல்லையே ஏன்?”
“சொல்லுவதற்கு நடுங்கிக் கொண்டிருந்தேன். நீங்களே கேட்டுவிட்டீர்கள்!” என்றாள் நீலா.
“யாருக்காவது பயப்படுவது நல்லது தான். பயந்து நடுங்குவது அபாயகரமானது. அஞ்சி நடுங்கக் கூடியவர்கள், ஒரு காலத் தில், ஆட்டி வைத்தவர்களின் பரமவைரியாக வந்தே தீருவார் கள். பாம்பு ஏன் தீண்டுகிறது? எங்கே அவன் தன் தலையை மிதித்து விடுலானோ என்று பயந்துதான்! சட்டைக்குள் நுழைந்து பின் தப்பிக்க முடியாமல் தவிக்கும் சிற்றெறும்பு வேறு வழியில்லை என்கிறபொழுது மனிதனையே கடித்துப் பார்க் கிறது. ஆகவே நீ நடுங்காதே! என் உயிருக்கு ஆபத்து வந்து விடப்போகிறது!” என்றான் கனகன் செல்லமாக!
நீலா மெதுவாக கனகனின் கொண்டையைத் தட்டினாள். அவன் கொண்டையில் சொருகியிருந்த வெள்ளிக் கொண்டை ஊசி கணீர் என்று தரையில் விழுந்தது.
கனகன் புரிந்துக் கொண்டான். ஆம் நீலாவுக்குக் கனக னின் கொண்டை பிடிக்கவில்லை. அது மட்டுமல்ல, அவனது தொழிலே அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அவனுக்கு சொல்லா மல் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் குறும்புத்தனமாக அவள் அவனது கொண்டையைத் தட்டினாள். அந்த வகையில் நீலா நடந்து கொண்டது கனகனுக்கு திருப்தியைத் தந்தது. ஏனென்றால் கணவன் பக்கத்தில் இருக்கும்போது பெண்கள் கூச்சல் போட்டுப் பேசுவதை அவன் விரும்பாதவன், கணவனின் குரலை மனைவியின் குரல் மிஞ்சும்போது அந்த இல்லத்தின் தலை வாசலுக்கே குதூகலம் தலைகாட்டாது என்பது கனகனின் சிந் தாந்தம். அதில் அவன் அசையாத நம்பிக்கை வைத்திருந்தான்.
“நீலா நீ விரும்புவது தவறல்ல. நீ படித்து பட்டம் பெறப் போகிறாய். உனக்கு ஏற்றபடி நான் இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய் இல்லையா? கிராப்பு வைப்பதற்கும், சில்க் சட் டை அணிந்து துயில்வேட்டி உடுத்துவதற்கும் நேரம் பிடிக்காது. இது சம்பாதிக்கும் காலம்! நீயும் செலவு செய்து பழகிவிட்டாய் திடீரென்று நான் ஆட்டத்தை நிறுத்தினால் நம்கதி என்ன ஆகும்? வீட்டுச் செலவு, படிப்புச் செலவு இவைகளை யெல்லாம் நாம் சரிகட்ட வேண்டாமா? அதற்காக உன் கோரிக்கையைப் புறக்கணித்துவிடவில்லை. விரைவில் நிறைவேற்றி வைக்கிறேன்’
கனகன் உருக்கமாகப் பேசினான். நீலாவின் கண்களில் நீர் பூத் திருப்பதையும் அவன் பார்க்காமலில்லை.
நீலா இப்போது எம்.ஏ. பட்டம் பெற்று விட்டாள்.மகளிர் பள்ளியில் ஆசிரியர் வேலையும் கிடைத்து விட்டது.
கனகசுந்தரம் திருச்செந்தூர் வேலன் திருவிழா ஆட்டத் திற்கு போய்விட்டு அன்றுதான் கொன்னையூர் திரும்பினான். அன்றே அவனுக்கொரு கடிதம் வந்திருந்தது. உடனே திருவனந் தபுரம் புறப்பட்டு வரும்படி! நீலாவின் மனம் கொதித்தது. அவள் தனக்குள்ளேயே ஒரு தத்துவத்தைச் சொல்லிக் கொண் டாள். கதிரவனைக் காண வௌவாலுக்குக் கண் கூசினால் பகற் பொழுது போனபிறகு பசிக்கு என்ன கிடைக்கும்-இதுதான் அவள் மனதுக்குள்ளேயே முணங்கிக் கொண்ட சொற்கள்.
திருவனந்தபுரத்துத் தந்தச் சிற்பங்களோடு ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினான் கனகசுந்தரம்.
“நீலா!” என்று அன்புடன் அழைத்தான். நீலா வெளியில் போயிருப்பதாகப் பக்கத்து வீட்டிலிருந்து தகவல் வந்தது. இரவு பத்து மணிவரை வரவில்லை. கனகனுக்கு அவள் மீதிருந்த அன்பு, குறைந்தது சந்தேகத்தின் சாயல் நூலாடைகட்டிக் கொண்டு வடிவெடுத்தது. நீலா வீட்டுக்கு வரும்போது நடுஜாமம்! இருவ ருக்குமிடையே பேச்சு, மூச்சு இல்லை! விவகாரத்தை விடியற் காலை வைத்துக் கொள்ளலாமென இருவருமே தனித்தனியாகத் தீர்மானித்துக் கொண்டார்கள் போலும்! ஆனால் விடியற்காலை யில் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. கன கன் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் முன்னரே டில்லியிலிருந்து அவனுக்கொரு சேதி வந்திருந்தது. அது டில்லி தமிழ்ச் சங்கத்திலிருந்து கொடுக் கப்பட்ட தந்தி. கவர்னர் ஜெனரல் முன்பாக இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழியினரும் தங்கள் தங்கள் கலையுணர்ச்சியை காட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலைவிழாவிற்குக் கன கன் தமிழ்ச் சங்கத்தாரால் அழைக்கப்பட்டிருந்தான். இந்த வாய்ப்பைத் தட்டிக் கழிக்க கனகனுக்கு மனமில்லை. நெக்குருகும் நீலாவின் நெஞ்சைக்கூடச் சமாதானப்படுத்திவிட அவன் தயாராகிவிட்டான்.
‘இதுதான் கடைசி ஆட்டம். கவர்னர் ஜெனரல் முன்பாக ஆடப்போகிறேன். தடுக்காதே! மகிழ்ச்சியோடு அனுப்பிவை மலரைத் தொட்ட விரல் மணக்கும் என்பார்கள். அதுபோல் என் புகழ் உனக்குப் பெருமைதரத் தவறாது நீலா’. கனகன் நீலாவிடம் பூத்தொடுப்பதுபோல் பேசினான். நீலா பேசவில்லை. அவன் நீலாவின் பதிலை எதிர்பார்க்காமலே பிரயாணத்திற்கு ஆயத்தமாகி விட்டான்.
டில்லியில் கனகன் ஆடிய ஆட்டத்தைப் பத்திரிக்கைகள் புகழ்ந்தன. புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. புதுக்கோட் டையிலிருந்தபடியே நீலா அவற்றைப் படித்தாள். படங்களைப் பார்த்தாள் மகிழவில்லை. மனதுக்குப் பிடிக்காதது கண்ணுக்கு இனிமை தருமா?
கனகன் பெரும் புகழோடு, அரும் பொருள்களுடன் ஊருக்குத் திரும்பி விட்டான். கனகன் டில்லிக்கு போகும்போது அடைத்துக் கொண்டிருந்த சோகச்சுமை திரும்பும் போது அவ னிடம் இல்லை. அதற்குப் பதிலாக கனிரசச் செய்திகளைச் சுமந்து கொண்டு வந்திருந்தான். அப்போது தான் ஊர்த்தலைவர் ஒண்டிப் புலியாபிள்ளை திடுக்கிடும் தகவலை கனகனிடம் தேடி வந்து சொன்னார்.
அரசனை அண்டிப் பிழைப்பதும் அழகியை மணந்து கொள் வதும் ஆபத்தானவை. தொடக்கத்தில் அள்ளி அள்ளிக் கொடுத் துவிட்டு திடீரென்று ஒரு நாளைக்கு உன் தலையைத் தருகிறாயா என்பான் அரசன். ஆசைக் காதல் ராஜா என்று ஓசை நயம் படப் பேசி விட்டு பின்னொரு நாளைக்கு, அதெல்லாம் அந்தக் காலம் என்பாள் அழகி. மனைவியின் ஸ்தானத்தை அன்புமிக்க துணைவியின் ஸ்தானத்திலிருந்து உயர்த்தாமலிருந்தால் அவளது வேலை கணவனை மகிழ்விப்பதும் அவனது களைப்பை தீர்ப்பது மாக இருக்கும். அவளை மயக்கும் மோகினியின் இருப்பிடத்திற் க் கொண்டு போனால் அவளது வேலை கணவனின் உயிரையும் மானத்தையும் வாங்குவதுமாகப் போய்விடும். பெண்மையின் இயல்பு அது!
கனகனின் உள்ளம் ஓயவில்லை. தொடர்ந்து குமுறியது.
“இதற்கு அவள் என்னை வெட்டிக் கொன்றிருக்கலாம்; விஷம் கொடுத்துத் தீர்த்திருக்கலாம். பூவின் மறைவில் இருக் கும் பூநாகத்தை விட புன்னகையில் இடுக்கில் நெளியும் நஞ் சுள்ளம் அவ்வளவு கொடியதா? நான் யாருக்கும் தீங்கு நினைக் கவில்லை. ஆகவே எனக்கு ஒரு போதும் தீங்கு விளையாது! என்னைக் கேவலப் படுத்திய நீலா வெட்கித் தலைகுனியும்படி நான் வாழ வேண்டும். அவள் எதிரிலேயே நான் இன்னொரு பெண்ணை மணக்க வேண்டும். மணந்து குழந்தைச் செல்வங்க ளோடு வாழ வேண்டும்.”
கனகனின் கால்கள் ஒண்டிப்புலியா பிள்ளை வீட்டுக்கு நடந்தன. அவர் பாக்குரலைத் தட்டிக் கொண்டிருந்தார். அந் தப் பெரியவர் கனகனைப் பார்க்கச் சஞ்சலப்பட்டார். ‘நானாக இருந்தால் தூக்குப் போட்டுக் கொண்டு செத்திருப்பேன். ஒரு வேளை நீலா, கனகனைப் பற்றிச் சொல்லியது உண்மையாக இருக்குமோ! ஒரு பெண், தன் கணவனை இதற்குமேல் அவ மானப் படுத்த முடியாது. இதைக் காட்டிலும் கொடிய ஆயுதம் எந்தப் பெண்ணுக்கும் கிடைக்காது” என்று ஒண்டிப் புலியா பிள்ளை தனக்குள்ளே பேசிக் கொண்டார். அப்போது கனகன் உள்ளே புகுந்தான்.
“முடிவுக்கு வந்துவிட்டேன் பெரியவரே! இதற்கு பஞ்சாயத்து அபராதம் எதுவும் நான் கேட்கவில்லை. திருவனந்தபுரத்திற்கு நான் ஆட்டத்திற்காகப் போயிருந்த போது அங்கே ஒரு பெண் வந்திருந்தாள். அவளும் கரகம் ஆடத்தான் வந் திருந்தாள். என்னை பிரம்மச்சாரி என்று நினைத்து அவளை கல்யாணம் செய்துக் கொள்ளச் சொல்லி கெஞ்சினாள். அவளையே திருமணம் செய்துக் கொள்ளத் தீர்மானித்து விட்டேன். அதற்கு உங்கள் ஆசி தேவை” என்றான் கனகன்.
பெரியவர் முதலில் சற்றுத் திகைத்தார். நீலாவின் குற்றச்சாட்டு அவரை உலுப்பி வைத்திருந்தது. புதிதாக வரக் கூடிய வளும் நீலாவைப் போலவே குற்றம் சாட்டினால் அதற்கும் உடந்தையாவதா? இப்படி நினைத்த பெரியவர் பின் தலையசைத்தார்.
மறு திங்கள் கனகனுக்கும், மதுரை மதிச்சியத்தைச்சேர்ந்த முத்தம்மாவுக்கும் மீனாட்சியம்மன் கோயிலில் திருமணம் நடை பெற்றது.
அடுத்த ஆண்டு புதுக்கோட்டையில் மன்னர் பிறந்த நாள். அன்று புதுக்கோட்டை விழாக் கோலம் பூண்டிருந்தது. கனக னும் முத்தம்மாவும் பிரகதம்பாள் ஆலயத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு குதிரை வண்டியில் நீலா வந்து கொண்டிருந்தாள்.
“அத்தான், அந்த வண்டியிலே போகிற பெண் ஏன் நம்மையே பார்த்துக் கொண்டு போகிறாள்” – முத்தம்மா கேட்டாள் கனகனிடம்.
“நம்மைப் பார்க்க வில்லை, நமது குழந்தை கலைமணியைத் தான் பார்க்கிறாள்”.
“என்ன அத்தான்!”
“ஆம் முத்தம்மா!” என்றானே தவிர, கனகன் முழு விவரம் கூறவில்லை.
கனகன் ஆண்மையில்லாத ஒரு அலி என்று நீலா குற்றம் சுமத்தியதை முத்தம்மா அறிந்தவளா?
அப்போது எங்கிந்தோ ஒரு பாடல் ஒலித்தது. அது இது; ‘ஒரு பொய்யை சொல்லி விட்டு வாழ்நாளெல்லாம் துன்பப்படுவதை விட ஒரு உண்மையைச் சொல்லி விட்டு இறந்து விடுவது நல்லது.”
நீலாவின் வாழ்க்கையில் நடந்து முடிந்த இந்தத் துன்ப நிகழ் சிகள் அவளை நிம்மதியாகத் தூங்கவிடவில்லை. அவள் உண்ணும் சுவை உணவு சில வேளைகளில் அவளுக்கு உப்பாகக் கரித்தது. சினிமாக்களில் கரக விளையாட்டு வந்துவிட்டால் இதயம் வெடித்து விடுமோ என்று பயந்து அவள் சினிமா, நாடகம் எதற்கும் போவதில்லை.
பள்ளியிலிருந்த மற்ற ஆசிரியைகள், நீலாவை, கல்யாணமாகாத கன்னிப்பெண் என்று தான் முதலில் எண்ணிக் கொண்டார்கள்; பின்னர் விதவை என்று தீர்மானித்துக் கொண்டார்கள், ஆனால் இறுதி வரை, நீலா, யாரிடமும் உண்மையைச் சொல்லவில்லை; உள்ளத்தையும் இழந்துவிடவில்லை.
அந்தப் பாட்டி, அந்தச் சிறுமி, பியூன் பொன்னம்பலம் – இவர்கள் மத்தியில் என்றும் வாடாத பொன்மலராக இருந்து விட்டாள்.
(இந்தக் கதை, 1947-க்கு முன் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் நடந்தது. மற்ற விவரங்களை விரிவாகக் குறிப்பிடுவது நாகரீகமல்ல.)
– மிஸஸ் ராதா, முதற் பதிப்பு: வானதி பதிப்பகம், சென்னை. திருநாவுக்கரசு தயாரிப்பு