வேப்ப முத்து

0
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 5,623 
 
 

வேப்ப முத்துஉள்ளேயிருந்து மீன் குழம்பின் வாசனை வந்து கொண்டிருந்தது. நாவூறியது மீனாவுக்கு. ஞாயிறு மதியம் வீட்டுக்கார வசந்தாக்கா அசைவம் சமைத்தால், ஊருக்கும் மணக்கும். ஆனால், சமைத்து முடித்து வீட்டினர் சாப்பிட்டப்புறம் மீனா சாப்பிடும் போது மணி இரண்டாகி விடும். இப்பொழுதிருக்கிற பசிக்கு, யாருக்கும் தெரியாமல் சிறியதாய் தேங்காயிலிருந்து கீறி எடுத்து வந்ததை கைக்குள் வைத்து கொல்லைப்பக்கம் போய், வேப்ப மரத்தின் கீழ், முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டாள். கொல்லைப் பக்கம் முழுக்க வேப்ப மரத்தின் நிழல். பறவைகள் பழுத்த வேப்பம் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் எச்சம் மேலே விழாமல் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் மீனா.

மீனாவுக்கு எட்டு வயது வரை, பெற்றோர் வீட்டில் இருந்த போது மீன் குழம்பு சாப்பிட வழி இருக்கவில்லை. ஆனாலும், இங்கே வந்து இரண்டு வருடங்களில் நல்ல சாப்பாட்டு ருசி கண்டாயிற்று. வசந்தாக்கா தன் இரட்டைக் குழந்தைகளை கவனிக்க, தன் உறவுக்கார வள்ளியின் மகளான மீனாவைக் கொண்டு வந்து வைத்திருந்தார். எட்டு வயதுத் தன்னம்பிக்கையோடு மீனா தன் தம்பி மணியை கவனிப்பது போலவே இரட்டைக்குழந்தைகள் ராஜேஷ், ராஜஸ்ரீ இருவரையும் கவனித்துக் கொண்டாள். அந்த பாசத்துக்காக, வசந்தாக்காவும் மீனாவிடம் அன்போடு இருப்பாள். யாரும் கவனிக்காத போது எப்போதேனும் மீனாவுக்கு மிட்டாய் வாங்க காசு கிடைக்கும். மாமியாரும் குழந்தைகளும் தூங்கி, வசந்தாக்காவின் கணவர் சுரேஷ் மாமா கடையை கவனிக்கப் போன மதியப் பொழுதுகளில், வசந்தாக்கா மீனாவுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாள்.

ஆனாலும், விழித்துக் கொண்டிருந்த போதெல்லாம் வசந்தாக்காவின் மாமியாரின் கண்கள் மீனாவையே கவனித்துக் கொண்டிருக்கும். மாமியார் நடக்க முடியாதென்றாலும், உட்கார்ந்த இடத்திலிருந்தே அதிகாரம் செய்து கொண்டிருப்பார். அது தான், மீனாவுக்குக் கொள்ளைப்பசியாய் இருந்தாலும், சின்ன தேங்காய்க்கீற்றை ரகசியமாய் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கத்தில் மீனா சாப்பிட்டுக் கொண்டிருந்ததன் காரணம்.

தேங்காய்க் கீற்றை கையில் மறைத்துச் சாப்பிட்டுக் கொண்டு கொல்லைப் பக்கம் இருந்தவளை, வசந்தாக்கா கூப்பிட்டாள். குழந்தைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தனர். வசந்தாக்காவுக்குக் கூட மாட மீனா உதவி செய்து விட்டு, மாமியாருக்கும் சுரேஷ் மாமாவுக்கும் பரிமாறி, வசந்தாக்கா சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, தனக்கும் உணவைத் தட்டில் இட்டுக் கொண்டாள் மீனா. சாப்பிட்டுக் கொண்டே இருந்த போது, புரை ஏறியது. “அம்மா நினைக்கிறா அக்கா ” என்றாள் மீனா. புரை எறினதற்காக மீனாவின் தலையைத் தடவிக் கொடுத்த வசந்தாக்கா, “உங்க அம்மா வந்து போயி ஒரு மாசமாச்சில்ல, உன்னைப் பாக்க வருவாளாயிருக்கும்!” என்றாள்.

“அம்மாவுக்குக் கடுதாசி போட்டேன் அக்கா, போன வாரம்! நாளை, இல்லயின்னா மக்கா நாள் அம்மா வந்திடும் பாரேன்!” என்றாள் மீனா. சாப்பிட்டு, சாப்பிட்ட இடங்கள், சமையலறை எல்லாம் துப்புரவு செய்து நிமிரும் போது, குழந்தைகள் விழித்துக் கொண்டிருந்தார்கள். சுரேஷ் மாமா வண்டியை எடுத்துக் கொண்டு கடைக்குப் போகிறேன் என்று கிளம்பி விட்டார்.

குழந்தைகளுக்குச் சாப்பாட்டைக் கொடுத்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கும் போது மணி நான்கு. ஆணும் பெண்ணுமாய் இரட்டைக் குழந்தைகள் என்றாலும், பெரியவள் ராஜஸ்ரீ துறுதுறு என்று ஓடிக் கொண்டிருந்தாள். அக்கா பின்னாலேயே சின்னவன் ராஜேஷ் “ஜாஜி” என்று கத்திக் கொண்டே ஓடுவான். அவர்களை மேய்ப்பது மீனாவின் வேலை. ஊரில் தம்பி மணியை மேய்க்காததா? பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது, வகுப்புத் தலைவி என்று மீனாவைத் தானே ஆரோக்கியமேரி டீச்சர் சொல்லுவார்? வகுப்பில் அத்தனை குழந்தைகளையும் அடக்கிச் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பதும் மீனாவுக்கு எளிதாய்த் தான் இருந்தது.

வாயிலில் ஏதோ சத்தம் கேட்க எட்டிப் பார்த்தாள் மீனா. ஊரிலிருந்து வசந்தாக்காவின் கணவரின் சித்தி வந்திருந்தார். ‘போச்சுரா, இவங்க வந்தா இன்னும் வேலை சொல்லுவாங்க’ என்று நினைத்துக் கொண்டாள் மீனா.

வசந்தாக்கா ஊரிலிருந்து வந்திருந்த சித்தியிடம், “மாமியார் இப்பிடி இருக்காங்களேன்னு உங்க அக்காவை நான் பார்த்துக்கிடறேன். ஆனா இந்த ரெட்டைப் புள்ளங்கள கவனிக்க வேணாமா? அதுக்குத் தான் குழந்தைகளைப் பார்த்துக்க மீனாவ அவங்கம்மா வள்ளி கொண்டாந்து விட்டுட்டுப் போச்சு. அப்பா செத்துப் போயி, வேற வழி இல்லாத ஏழைங்க, ஏதோ, நம்ம சோத்தத் தின்னுட்டுப் போவட்டும்…” என்றாள். சித்தி, குரல் தழைத்து, “கை சுத்தமா? அது தாண்டி முக்கியம்” என்றவர் இன்னும் குரல் தழைத்து, “பத்து வயசாயிருச்சி, இன்னும் கொஞ்ச நாளில வயசுக்கு வந்திச்சுன்னா, அது இன்னுமொரு கஷ்டம். இவளை ஊருக்கு அனுப்பிச்சிட்டு, வேற யாராச்சும் 40 வயசுக்கு மேல இருக்காங்களா பாரேன். எனக்குத் தெரிஞ்சவங்க வயசானவங்க வரேன்னு சொல்றாங்க!”, என்றார்.

மீனாவுக்கு இது காதில் விழாமல் இல்லை. சித்தி ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பாள். அதனால், சித்தி ஏவுகிற வேலைகளைச் செய்தாலும், மீனா கொஞ்சம் மெதுவே தான் செய்வாள். அந்த கோபம் சித்திக்கு. அது மட்டுமா? தான் சொல்லி வைத்திருந்த பெண்ணை இங்கே வீட்டு வேலைக்கு வைத்திருந்தால், இன்னும் வீட்டு விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். இந்த மீனாள் வாயைத் திறந்து வீட்டு விஷயங்களைச் சொல்கிறதா என்ன?

சித்தி அப்படி என்றால், மீனாவுக்கு இந்தச் சித்தி பற்றியும் மாமியார்ப்பாட்டியின் அதிகாரம் பற்றியும் கொள்ளைப் புகார்கள் இருந்தன. அந்தப் புகார்களை, மாதந்தோறும் வரும் அம்மாவிடம் சொன்னால், “அன்னலட்சுமி, உன்ன வேலைக்கு வச்சி சாப்பாடு போட்டு மாசா மாசம் பணம் கொடுக்கிறாங்க. சும்மாருடி” என்று அடக்கி விடுகிறாள்..

“ஏண்டி மீனா, வந்திட்டா பாரு உங்கம்மா” என்றார் சித்தி. ”மாசா மாசம் துட்டு வாங்க வந்திடுவாளாக்கும் உங்கம்மா” என்று சொல்லி முடித்துக் கொண்டார் சித்தி. அவர் திருப்தி அவருக்கு. பதில் வரப் போவதில்லை என்றாலும், எளியாரைத் தாழ்த்துவதில் ஏதோ சுகம் இருக்கத் தானிருக்கும் இவர்களுக்கு!

மீனா எட்டிப் பார்த்தாள். நிசமாகத் தான் அம்மா வந்திருந்தாள். அம்மாவின் வலது மூக்குத்தி ஓட்டையில் மூக்குத்தில் இல்லாமல், ஒரு குச்சி வைத்திருந்தாள் என்றாலும் அந்த குச்சியும் மின்னுவது போல் அம்மாவின் முகத்தில் ஒரு பொலிவு. சின்னப் பையைச் சுற்றிக் கையில் வைத்திருந்தாள். எப்போதும் அதில் கடலை மிட்டாயும் கொய்யாக் காய்களும் இருக்கும். அம்மா பின்னால் தம்பி மணி ஒளிந்து ஒளிந்து எட்டிப் பார்த்தான். எப்போதுமே வராத மணி இன்று வந்ததும், இத்தனை நாள்கள் அவனைப் பார்க்காத பாசம் பொங்கியது மீனாவுக்கு. மீனாவுக்கு ஐந்து வயதாயிருக்கும் போது பிறந்த பிள்ளை. அவள் மடியில் மூத்திரம் பெய்து, அழுது ஆகாத்தியம் செய்து வளர்ந்தவன். போன வருடம் தீவாளிக்கு அம்மா கூட்டி வந்திருந்தாள். அப்புறம் அவனை இப்போது தான் பார்க்கிறாள் மீனா.

“மணி!” என்று கத்தி விட்டாள் மீனா. “மாசா மாசம் வந்து காச வாங்கிட்டுப் போவியாக்கும்?” என்றார் சித்தி. “ம்” என்று சித்தியை ஏறிட்டும் பார்க்காமல் சொன்ன அம்மா, “மீனா, மணியப் பாக்கணும்னு சொல்லிட்டே இருந்தியே, அது தான் கூட்டிட்டு வந்தேன்” என்றாள். என்ன நினைத்தாளோ, சித்தி காதில் விழுவது போல உரக்க “பக்கத்து வீட்டம்மாவும் திருவிழாக்கு ஊருக்குப் போறேன்னு சொல்லிச்சு. எங்கிட்டு விடறது மணிய? அதாங் கூட்டிட்டு வந்தேன்” என்று சொன்னாள்.

சித்தி முகவாயைத் தோளில் இடிக்காத குறையாக சிணுங்கிக் கொண்டு உள்ளே போனார். வசந்தாக்கா, “அத்தே, சித்தி பத்தித் தான் தெரியுமில்லே? இந்தா மீனா, காபியக் கலந்து கொடு அம்மாவுக்கு. வள்ளியத்தே, காபிய எடுத்திட்டு பின்னால போயி பேசிட்டு இருங்க…” என்றாள், கண்ணால் சித்தியைச் சுட்டிக் காட்டி.

மீனா, அம்மாவுக்குக் காபியைக் கலந்து கொடுப்பதற்குள், “காபி க்ளாஸ் ஏன் இம்புட்டு பெரிசா இருக்கு வசந்தா? மீனா, இத்தனை சக்கரையா போடுவ ஒங்கம்மாவுக்கு” என்று ஒவ்வொன்றுக்கும், சித்தி நாட்டாமை செய்தார். அவசரமாய் காபியை எடுத்து வந்த மீனா, குழந்தைகள் அருகில் அமர்ந்திருந்த வசந்தாக்கா முகத்தைப் பார்த்தாள். அதைப் பார்த்துச் சிரித்த வசந்தாக்கா, “ஏண்டி எனக்குன்னா நினைச்சே காபி? அம்மாவுக்குடி, கொடு!” என்றார். உள்ளே திரும்பி, “பாருங்க சித்தி, தன் அம்மாவுக்கு காபி கொடுக்கக் கூட யோசிக்குது!” என்று சொல்லிவிட்டு, வசந்தாக்கா தன் வாயில் விரலால் ‘சத்தம் போடாதே’ என்று காட்டி, கொல்லைப் பக்கம் போகச் சொன்னார்.

கொல்லைப் பக்கம் காபியைக் குடித்துக் கொண்டே அம்மா விஷயத்தைச் சொன்னார்: அம்மாவின் அண்ணன் மனைவி இறந்து விட்டார். அம்மாவை வந்து தன் குடும்பத்தைக் கவனிக்கும்படி மாமா கேட்டுக் கொண்டிருக்கிறார். அம்மா மீனாவையும் கையோடு அழைத்துச் சென்று விட வந்திருக்கிறார்.

“அம்மா, மாமா குடிச்சிட்டு வந்திச்சின்னா எல்லாரையும் அடிக்கும். நான் வரல” என்றாள் மீனா. மாமி இருந்த வரை, அம்மாவும் மாமியும் சண்டை போடுவார்கள். மாமா குடித்து விட்டு ரோட்டில் கத்திக் கொண்டிருப்பார். இந்த கூப்பாட்டில், மாமாவின் மகள்கள் இருவரும் பேன் பார்த்துக் கொண்டும் சினிமாப் பாட்டு பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். மீனா போனால் கேலிப் பேச்சு தான் இருக்கும்.

“அடச்சீ, எச்சிக்கல இல்ல தின்னுட்டு இருக்கே இங்கே? வாடி என்னோட. அண்ணன் சம்பளத்தை எங்கையில குடுத்திடுவேன்னு சொல்லியிருக்கு. அவரு புள்ளங்க, நீங்க எல்லாம் நல்லா சாப்பிட்டு இருப்பீங்க. தங்கம்ல நீயி?” என்றாள் அம்மா.

”அம்மா, சும்மனாச்சும் சொல்லாதே நீயி. மாமிக்கும் ஒனக்கும் சண்டை வந்திட்டே இருந்ததாலே தான் அந்தப் பக்கமே போவாம இருந்தே. இப்ப மாமி பொண்ணுங்க சும்மா விட்டுருமா? எப்ப பாரு என்ன கேலி அடிச்சிட்டே இருக்கும்…. இங்கிட்டாவது ஒழைச்ச காசுக்கு சாப்பிடுறேன். வசந்தாக்கா மிச்ச காச ஒனக்கு அனுப்பிடுது… நீ பாட்டுக்கு மாமா வீட்டுக்குப் போ. மணிய அழைச்சிட்டுப் போ. நா இங்கியே இருக்கேன். வசந்தாக்கா எனக்குப் படிக்கச் சொல்லிக் கொடுக்கேன்னுருக்கு”. என்றாள் மீனா.

காபியை மளக் என்று குடித்த அம்மா, அதே வேகத்தில் மீனாவை அறைந்தாள். “கேடு கெட்டவ. எனக்கே புத்தி சொல்றியா நீயி?” என்றாள்.

மீனாவுக்கு அழுகையாக வந்தது. அப்பா இறந்து போகாமல் இருந்திருந்தால், இப்போது ஐந்தாம் வகுப்புப் படித்திருக்கலாம். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கோயிலுக்குப் போகலாம். அப்பா தூக்கி விட, கொய்யாக்காய் பறிக்கலாம். எல்லாம் இல்லாமல் போய் விட்டது. அம்மா எப்போதும் அடிப்பவள். அம்மா அடிக்கிற வலி இந்த வசந்தாக்காவின் வீட்டுக்கு வந்ததிலிருந்து இல்லை என்றாலும், சமாதானப்படுத்த அப்பா இல்லை என்று தான் அழுகை பொங்கிற்று மீனாவுக்கு.

சித்தி தன் பருத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு கொல்லைப் பக்கமே வந்து விட்டார். “ஏண்டி மீனா அழுவுற? அங்க வசந்தாக்கா உங்கம்மாவக் கூப்பிட்டுச் சோத்தப் போடுன்னு சொல்லுது. இத்தனை பாசமா பெத்த மகன் கூட இருக்கிறதில்லை. ஒங்க அம்மா கிட்ட என்ன சொல்லி ஒப்பாரி வைக்கிறே? நீ என்னடி நீலிக்கண்ணீர் விடறியா? இல்ல என்னைப் பத்தி குத்தம் சொல்லிட்டிருக்கியா?” என்றார்.

சித்தியின் குரலை விட ஓங்கி அம்மா எதிர்த்துக் கத்த, சித்தி “ஏண்டி எங்கிட்டியே மாய்மாலம் போடறியா” என்று சொல்ல, மீனாவுக்கு இன்னும் அழுகை தாங்கவில்லை.

வசந்தாக்கா உள்ளிருந்து ஓடி வந்தாள். “என்ன ஆச்சு?”

மீனா விக்கியவாறே, “அம்மா என்னைய ஊருக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னிச்சு, அதான் அழுதேன்” என்றாள். சொல்லி முடிக்கும் முன் அம்மா ‘ணங்’ என்று தலையில் குட்டினாள். ”ஆமாண்டி, என்னயச் சொல்லு. இதோ பெரிய மனுசங்க வீடேனு வந்து விட்டேன். அவங்க பேசுற பேச்செல்லாம் மரியாதையாவா இருக்கு?” என்று இரைந்தாள் அம்மா.

மீனாவோடு மணியும் இப்போது சேர்ந்து அழ ஆரம்பித்தான்.

சித்தி “பாருடி” என்று உள்ளே போய், படுத்திருந்த வசந்தாவின் மாமியாரிடம் “அக்கா, இந்த மாய்மாலத்துக்குத் தான் அப்பவே சொன்னேன்” என்று குறை சொல்லிக் கொண்டிருந்தது பின்னால் கேட்டது.

”உங்களை அதுக்குத் தான் சாப்பிடக் கூப்பிட்டேன். சின்னப் பையன் சாப்பிடட்டும். அப்புறம் எல்லாம் நிதானமாப் பேசுவோம்” என்றாள் வசந்தாக்கா.

மீனா கைச் சட்டையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள். வசந்தாக்கா எப்படியும் இந்தச் சிக்கலிலிருந்து தன்னைத் தப்ப வைத்து விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது.

மீனா உள்ளே போய் கையைக் கழுவிக் கொண்டு, மணிக்கு பாத்திரத்தில் சோற்றை எடுத்து வைத்தவள், ஒரு பிடி வெந்த பருப்பைக் குழந்தைகளுக்குப் பிசைவது போல் எடுத்து சோற்றின் மேல் வைத்துக் கொண்டாள். வைத்த அடுத்த நிமிடம், கன்னம் எரிந்தது. கீழே பாத்திரத்தில் பருப்பும் சாதமும் விழுந்து கிடந்தது.

சித்தி எட்டு ஊருக்குக் கேட்பது போல், “ஏண்டி, உங்கப்பன் வீட்டுச் சொத்தாடி? நானும் அப்ப இருந்து பார்த்திட்டிருக்கேன். காபி என்னவோ சொம்பு காபி கலக்குறே, சக்கரைய அள்ளிப் போட்டு உங்க அம்மாவுக்குக் கொடுத்தே. சக்கரை, பாலு, பருப்பு விக்கிற விலையில வந்தவங்களுக்கு எல்லாம் கொடுத்தா கட்டுமாடி” என்று கத்திக் கொண்டிருந்தார்.

கொல்லையிலிருந்து அம்மா வேக வேகமாக வந்தாள். ”இதா, இதுக்குத் தான் எம்மாடி சொன்னேன், எச்சக்கலை சாப்பாடு மாரியில்ல பெரியம்மா பேசுறாங்க. எம்முன்னாலியே அடிக்க கை ஓங்கினா, நா இல்லாதப்போ என்ன செய்யிறீங்களோ?”

வாசல் பக்கம் விடுவிடு என்று அம்மா போனாள். ரோட்டு மண்ணை, கையில் கிடைத்ததை அள்ளி வாரி இறைத்தாள். “நல்லா இருப்பீங்களா? சின்னப் புள்ள, பொம்பிளைப் புள்ளைய நம்பித் தானே விட்டுட்டுப் போவுறது?” என்று சத்தம் போட்டுக் கொண்டே மண்ணை வாரி இறைத்து அந்த பழுப்புக் கைகளாலே கண்களைத்துடைத்து கொண்டாள். அவள் செய்கைகளில், அம்மாவின் சுருண்ட முடி, முடிந்து வைத்திருந்த சிறு கொண்டையிலிருந்து அவிழ்ந்து விழுந்தது.

மீனாவுக்கு இந்த நாடகம் முடியும் போது, ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து காணாமல் போய் விட மாட்டோமா என்று இருந்தது. சீதையை அப்படித் தானே மண் விழுங்கியதாம்! சுற்று முற்றும் இருப்பவர்கள் எல்லாரும் வாசலில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீனா வசந்தாக்காவைத் திரும்பிப் பார்த்தாள். மீனா பார்க்கிறாள் என்று தெரிந்தும், வசந்தாக்கா அவளைப் பார்க்காமல் தவிர்த்தாள். வசந்தாக்காவின் முகத்தில் இருந்த அயர்ச்சியைப் பார்த்ததும் இனி இதற்கு ஒரே ஒரு முடிவு தான் என்று தோன்றியது.

மீனா முடிவெடுத்தவளாய், உள்ளே போய் தன் துணிகளை எல்லாம் எடுத்து வந்தாள். துணிகளில் பாதி வசந்தாக்கா கொடுத்தது. அவற்றை கைகளில் வைத்துக் கொண்டு மீனா வசந்தாக்காவைப் பார்த்தாள். “போடி உன் துணிமணி ஒண்ணும் இங்க இருக்கப் படாது. கிளம்பு” என்றார் சித்தி.

மணி அம்மாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். இருவரும் வீட்டுக்குள் வந்திருந்தனர். “கொடுக்க வேண்டிய பணத்தை இப்பவே பைசல் பண்ணிருங்க. கூட ஆயிரம் ரூவாய சேர்த்துக் கொடுங்க. நீங்க அடிச்ச அடிக்கு டாக்டர் கிட்ட தா கூட்டிட்டுப் போவணும்” என்றாள் அம்மா.

வசந்தாக்கா இன்னமும் மீனாவை நேராகப் பார்க்காமலே பேசினார். “எல்லாம் தெரியும். சொந்தக் காரங்கன்னு கொண்டாந்து வச்சது என் தப்பு. நீங்க கிளம்புங்க” என்றார். அம்மாவுக்கு அவர் கொடுத்த பணம் இரண்டாயிரம் இருந்தது.

இழுத்துப் பிடித்த அம்மாவின் கைகளை உதறி, மணியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மீனா. மாமா வீட்டுப் பக்கத்தில் ஒரு வசந்தாக்கா கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

– கெக்கெபிக்குனி(செப்டம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *