வேப்பமரத்து வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 27, 2012
பார்வையிட்டோர்: 6,824 
 
யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும். கார்த்திகை மழையும், மார்கழிக் குளிரும் இணைந்து வரும் இந்த மாதம் தரும் ஏகாந்தம் அலாதியானது. கடந்து போன ஆண்டின் நிறைந்து தழும்பும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே அடுத்து வரும் ஆண்டை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொள்ளும் மாதமிது. இப்படியான கவித்துவமான பதிலுக்கும் மேல் உண்மையான காரணம் ஒன்றும் உண்டு. அதுவரையில் தேக்கி வைத்திருக்கும் விடுமுறைகளை எடுத்துக் கழிக்க ஏதுவான மாதமும் டிசம்பர் தான்.

” தம்பி, பல் தேய்ச்சுட்டு இந்த காபிய எடுத்துக்கோ…. மழ பெய்ஞ்சு தண்ணி எல்லாம் குளுந்து போயிருக்கு…. குளிக்கிறதுக்கு உனக்கு வெந்நி வைக்கிறேன். காபி குடிச்சுட்டு சட்டுன்னு குளிச்சுட்டு வந்துடுமா.. ” என்று மணக்க மணக்க ஆவி பறக்கும் காபியை எனக்கேயான கோப்பையில் வைத்தாள். வெள்ளைப் பீங்கான் பின்னணியில் செந்நிற செர்ரிப்பழங்கள் போட்ட இந்த காபி கோப்பை கல்லூரித் தோழி ஒருத்தி பரிசளித்தது.

காபி மணம் சுண்டி இழுக்கவே, வேக வேகமாக பல் தேய்த்துவிட்டு, காபியை எடுத்துக் கொண்டு வாசலுக்குப் போனேன். மழையைப் பார்த்துக் கொண்டே வாசலில் அமர்ந்து அருந்தும் சூடான காபிக்குத்தான் இணையேது. வாசலுக்கு வந்து நின்ற எனக்கு, நான் கண்ட காட்சியைக் கிரகித்துக்கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வுதான் என்ற போதும், அது நிறைவேற்றப்பட்டு விட்டபோது எழும் அதிர்வை எதிர்கொள்வதென்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. எங்கள் வீட்டு வேப்பமரம் தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டிருந்தது. அதன் கொப்புகள் ஒருபுறம் குவிக்கப்பட்டிருந்தன.

வேட்டையாடப்பட்ட ஒரு பறவையின் இறகுகள் போல அதன் இலைகள் வீதியெங்கும் சிதறிக் கிடந்தன. பெய்து கொண்டிருந்த தூறலையும் பொருட்படுத்தாமல் இரண்டு பேர் சேர்ந்து அதனை ஒரு மினிலாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்பா மினிலாரிக்காரனுடன் பேசியவாறே ஏதோ பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுதான் முதன்முதலாய் வாசலில் உட்கார்ந்தபடியே வானம் பார்க்க முடிந்தது. மரத்தில் கட்டப்பட்டிருந்த காக்கைக் கூடொன்றை எவ்வளவு தேடியும், அங்கு காணக் கிடைக்கவில்லை.

வெட்டுப்பட்ட மரத்திலிருந்து வெளிப்பட்ட ஒருவித பச்சை நெடி வீதியெங்கும் நிரம்பியிருந்தது. வீதியில் வருவோர் போவோர் சிந்திய அனுதாபப் பார்வைகள் என்னை மேலும் ஏதோ செய்தன. எங்கள் வீட்டுக்கு அடையாளமாய் இருந்த மரம் கண்முன்னே வீழ்ந்து கிடந்தது. ஒரு சாம்ராஜ்யத்தின் சரிவு கூட இதைப்போல்தான் இருந்திருக்க வேண்டும். எங்கள் தெருவில் வேப்பமரத்து வீடு என்று யாரைக் கேட்டாலும், எங்கள் வீட்டின் முன் நிறுத்திவிடுவார்கள். நானே புதிதாக வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு அடையாளம் சொல்லும் போது அவ்வாறே கூறியிருக்கிறேன். நான் சிறுவயதாக இருந்த போதாவது, மேலும் இரண்டு, மூன்று வீடுகளில் வேப்பமரங்கள் இருந்தன. மின்கம்பம் வைக்க, டெலிஃபோன் ஜங்கன் பாக்ஸ் வைக்க என்று ஏதேதோ காரணம் சொல்லி அவற்றை வெட்டிவிட்டனர். எங்கள் வீட்டு மரத்துக்கும் இப்போது ஒரு காரணம் கிடைத்துவிட்டது.மரத்தின் வேர்களே அதனை சாய்க்கக் காரணமாகி விட்டிருந்ததுதான் இதில் பெரும்சோகம்.

இந்த மரம் நான் பிறந்த இரண்டாவது மாதத்தில் வைத்ததாக அப்பா கூறுவார். 27 வயது மரத்தின் வேர்கள், எங்கள் வீட்டின் அடித்தளம் வரை பாய்ந்து அதன் காரணமாய் வீட்டுச் சுவரில் சிறுசிறு விரிசல்கள் வந்திருந்தன. பாலுக் கொத்தனாரிடம் அப்பா ஒருமுறை இதுபற்றி விசாரிக்கும் போது, மரத்தின் வேர்கள்தான் இவ்விரிசல்களுக்குக் காரணம் என்றும், வேறு எப்படிச் செப்பனிட்டாலும் மரம் இருக்கும் வரை சுவரின் விரிசல்களைத் தவிர்க்கவியலாது என்றும், அதனால் விரைவில் அதை வெட்டிவிடுமாறும் கூறினார். அப்படியிப்படி அது தள்ளிப் போய் நேற்றுத்தான் அப்பா மரத்தை வெட்டுவதற்கு முன் பணம் கொடுத்துவிட்டு வந்திருந்தார். இந்த மரம் வெட்டப்படுவது குறித்து அவருக்கொன்றும் பெரிய வருத்தமிருப்பதாய்த் தெரியவில்லை. சொல்லப்போனால், நீண்ட நாட்களாக தப்பிப்போய்க் கொண்டிருந்த ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்த திருப்தியே அவரிடத்தில் தெரிந்தது.

அம்மாவுக்கும் இது குறித்து வருத்தம் ஒன்றும் இருக்கப் போவதில்லை. அதிகபட்சமாய் அவள் இழக்கப்போவது இந்த மரநிழலைக் காரணம் வைத்து திண்ணையில் கூடும் அவள் சினேகிதிகள் கூட்டத்தைத்தான். அக்கூட்டம் கூட நிழலின் பொருட்டு நேர மாற்றம் செய்யப்படலாமே ஒழிய, அடுத்த வீட்டுக் கதைகள் இருக்கும் வரையில் ஒரேடியாக நின்றுவிடப் போவதில்லை. அம்மாவின் கோலத்தில் இனி காகத்தின் எச்சில் படாது. அது குறித்து அவள் மகிழவேக்கூடும். மரத்தை வெட்டியவர்களின் கண்களிலும் ஊசிமுனை வருத்தமும் இல்லை. எதற்காக வருத்தப்பட வேண்டும். அவர்கள் என்ன கொலையா செய்துவிட்டார்கள்? அதென்ன குருதியோடும் நரம்பு பின்னிய, சதை திரண்ட உயிரா என்ன? பக்கத்துவீட்டு பாக்கியம் அக்காள்தான் இதன்பொருட்டு பெரிதும் மகிழ்பவளாக இருப்பாள். எங்கள் மரத்தின் வேர்களின் பரப்பால், அவள் பதியம் வைத்த செம்பருத்திச் செடிகளும், செவ்வந்திப்பூச் செடிகளும் வளர்ச்சியின்றி பட்டுப்போய்க் கொண்டிருந்தன. இனிமேல், அவள் வீட்டுப் பிள்ளையாருக்கு செம்பருத்திப்பூ வைக்கலாம்.

அப்போதுதான் மளிகைக்கடை செல்வி அக்கா, ஒரு கையில் குடையையும், மறு கையில் தூக்குப்போணியையும் தூக்கிக் கொண்டு ஐயப்பன் டீக்கடையை நோக்கி சென்று கொண்டிருந்தாள். பனைமரத்தில் பாதியிருப்பாள் போலிருக்கிறது. எங்கள் பகுதியில் எந்தப் பெண்ணும் இவளளவு உயரமில்லை. எங்கள் வீட்டைக் கடந்து போன பின்னும் கூட இரண்டுமுறை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போனாள். ஒருமுறை அவளின் இளைய பெண்ணிற்கு அம்மை போட்டிருந்த போது நான் தான் ஏணிபோட்டு இளம் வேப்பிலைகளைப் பறித்துக் கொடுத்தேன். அவளுக்கு அந்நிகழ்வு இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். அவளுக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது. அப்பத்தா கூட அடிக்கடி இதன் வேப்பிலைக் கொழுந்தை அரைத்துக் கொடுத்து என்னை குடிக்கச் சொல்லி கெஞ்சுவாள். வயிற்றுக்கு நல்லது; புழு கடிக்காது; பூச்சியெல்லாம் செத்துவிடும் என்று எதேதோ காரணம் சொல்லி அதைக் குடிக்கவும் வைத்துவிடுவாள். அதற்குப்பின் தருவதற்கு கொஞ்சம் கருப்பட்டிக் கட்டியையும் முந்தானையில் முடிந்திருப்பாள். ஒருவேளை அவள் உயிரோடு இருந்திருந்தால், இதனை வெட்டவே அனுமதித்திருக்க மாட்டாளோ என்னவோ. அவள் ஒரு வார்த்தை சொன்னால் அப்பா அதை மீறி ஏதும் செய்கிறவரில்லை. அப்பத்தாவும் அவர் மறுக்கக் கூடிய ஒரு விசயத்தை அவரிடம் சொல்ல மாட்டாள். அவர்கள் இருவருக்குமிடையேயான புரிந்துணர்வு அப்படி.

நான் கூட அப்பாவிடம் இதை வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை. இந்த வீடு விசயத்தில் மட்டும் அப்பா எப்போதும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டார். அவர்தம் சொந்த சம்பாத்தியத்தில் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இது. இதில் பதித்திருந்த கொல்லஞ்செங்கலை நீக்கிவிட்டு, மார்பிளோ, டைல்ஸோ போடலாமென்று நான் சொல்லியதையே அவர் இன்றுவரை கேட்டபாடில்லை. பைப் மாற்றுவது போன்ற சின்ன சின்ன செப்பனிடும் வேலைகள் வந்தால் கூட, வந்தவர்கள் வேலை பார்க்கும் போது கூடவே இருந்து உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார். சுவரிலோ, தரையிலோ ஏற்படும் சிறு சேதாரத்தைக் கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தானோ என்னவோ அம்மா கூட இந்த மரம் குறித்து அப்பாவிடம் ஏதும் கூறியிருக்க மாட்டாள்.

ஆவி பறந்து காபி இப்போது ஆறிப்போயிருந்தது. நாவின் நரம்புகளுக்கு வேலை வைக்காமல் அப்படியே எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டேன். அதன் பின் குளிப்பது, உடை மாற்றுவது என்று உடல் செய்த வேலைகள் எதிலும் உள்ளம் கலக்கவில்லை. மனம் முழுவதும் மரத்தின் மேலேயே இருந்தது. இத்தனை வருடமிருந்து என்ன பயன்? என்னில் அது ஏற்படுத்திய தாக்கத்தின் ஒரு சிறுபகுதியைக்கூட மற்றவர்களிடத்தில் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதுவும் குறிப்பாக அம்மாவிடம் ஒரு சிறு சலனத்தைக்கூட அதனால் ஏற்படுத்த இயலவில்லை. ஏதோ எனக்கும், அப்பாவிற்கும் செய்து போடுவதற்கே பிறப்பெடுத்தவள் போல சமைத்து அடுக்கியிருந்தாள். அம்மாவிடம் மரத்தைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று வாய் வரைக்கும் வந்த போதிலும், அவளிடமிருந்து வெளிப்படக்கூடிய அலட்சியமான வார்த்தைகள் என்னை மேலும் காயப்படுத்தக்கூடும் என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டேன்.

சிவாவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தால் மனது கொஞ்சம் லேசாகும் என்று தோன்றியது. அவனிடமாவது இந்த மரம் குறித்துப் பேச இயலும். அவனும் கூட சிறிது வருத்தப்பட்டாலும் படலாம். வண்டியை எடுத்துக் கொண்டு சிவா வீட்டிற்கு செல்ல முற்பட்டேன். அந்த நேரத்திற்கெல்லாம் கிழே கிடந்த மரத்தின் கொப்புகளும், இலைகளும் களையப்பட்டு வீடும், வாசலும் வெறிச்சோடிக்கிடந்தது. ஆணிவேர் பிடுங்கப்பட்ட குழியை இட்டு நிரப்பக்கூட அருகே மண் குவிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்தவன் சிவாவின் வீட்டில்தான் நிறுத்தினேன்.
நான் நடந்த நிகழ்ச்சியைக் கூறியதும், சிவா முதலில் உச்சுக்கொட்டினான். அதன்பின் அது குறித்த பேச்சு அவனை அசுவாரஸியப்படுத்தியிருக்க வேண்டும். அதனால், பேச்சை மாற்றிக் கொண்டேன். மதிய உணவை அவன் வீட்டிலேயே முடித்துக் கொண்டு, ஆனந்த் தியேட்டருக்குப் போனோம். படத்தில் என்னால் முழுதும் ஒட்டியிருக்க முடியவில்லை. மரத்தைப் பற்றிய நினைவுகளே என்னை முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தது. ஏன் என்னில் மட்டும் இந்த மரம் இத்தகையதொரு பாதிப்பை, ஒரு அதிர்வை ஏற்படுத்தியதென்று எனக்குப் புரியவேயில்லை.

அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்த மழை சாயுங்காலம் முற்றிலுமாக நின்று போயிருந்தது. வண்டியில் வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, மரம் வெட்டப்பட்ட இடத்திற்கு மிக அருகிலேயே ஒரு சிறு செடி நடப்பட்டிருந்தது தெரிந்தது. கண்டிப்பாக அது ஒரு வேப்பஞ்செடியாகத்தான் இருக்க வேண்டும்.

– யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் ‘டிசம்பர்’ என்பதாகத்தான் இருக்கும். கார்த்திகை மழையும், மார்கழிக் குளிரும் இணைந்து வரும் இந்த மாதம் தரும் ஏகாந்தம் அலாதியானது. கடந்து போன ஆண்டின் நிறைந்து தழும்பும் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே அடுத்து வரும் ஆண்டை எதிர்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொள்ளும் மாதமிது. இப்படியான கவித்துவமான பதிலுக்கும் மேல் உண்மையான காரணம் ஒன்றும் உண்டு. அதுவரையில் தேக்கி வைத்திருக்கும் விடுமுறைகளை எடுத்துக் கழிக்க ஏதுவான மாதமும் டிசம்பர் தான்.

– பெப்ரவரி 15, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *