வேண்டாதவர்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 4,489 
 

வெகு நாட்களுக்குப் பிறகு….. எனக்கு முள்ளின் மீது அமர்ந்திருக்கும் அவஸ்தை, உறுத்தல், தவிப்பு.

அப்போதும் போல் இப்போதும் அதே புகைவண்டிப் பயணம். அன்று என் எதிரில் அமர்ந்திருந்தவன் என் எதிரி.! சம வயது. இன்று அப்படி அமர்ந்திருப்பவர் அப்பாவின் எதிரி. எனக்குப் பிடிக்காதவர். வயதானவர்.

அப்போது இவர் எங்கள் ஊர் கிராமவாசி. பெயர் ‘ எமட்டன் ‘ என்று சொல்வார்கள். உண்மை பெயர் சுப்ரமணி. வாலிப வயதில் இவர் நல்ல திடகாத்திரமான உடம்பு. நெடிது வளர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம். இந்த ஆள் உறவுக்காரரென்றாலும் எங்கள் குடும்பத்திற்கும் இவர் குடும்பத்திற்கும் ஆகாது. பேச்சு வார்த்தை இல்லை. காரணம்…அவர் ஏழை. நாங்கள் மிராசு என்கிற உயர்வு தாழ்வு வித்தியாசமென்று எண்ணியிருந்தேன். ஆனால்… அது தவறு. ஆளை அடிக்கும் காரணம் இருப்பது அப்புறம்தான் புரிந்தது. பன்னிரண்டு வயதில் தெரிந்தது.

எங்கள் நிலத்தில் உழைக்கும் விவசாயக் கூலி ஒருத்தன் சரக்கைப் போட்டுக் கொண்டு வந்து என்னிடம் தனியே உளறிய செய்தி அது.

” ராத்திரி எமட்டனை அடி பின்னிட்டேன்லே….” – என்றான்.

” ஏன்…? ”

”மடைத்தகராறு ..”

” அதுக்காக அடிக்கிறதா…? ”

” ரொம்ப நாள் வஞ்சம்….! ”

” உங்களுக்கா…???! ”

” உங்கள் அப்பாவுக்கு…! ”

” புரியல…”

” இவன் நம்ப அப்பாவுக்கு எதிரி…”

” அப்பாவுக்கு எதிரியா..?! ” வியப்பாய் இருந்தது.

” அட..! நம்ப வீடு புகுந்துட்டான் தம்பி…”

” எதுக்கு…?! ”

” அட ! நீங்க சின்ன புள்ள. விபரம் தெரியாது. உங்ககிட்ட போய் உளறுறேன் பாரு. நான் ஒரு மடையன். இந்த படவாவுக்கு ஆச்சி மேல ஒரு கண்..! ”

” என் அம்மா மேலேயா…?!!…”

” அட ! ஆமாம்ன்றேன்..!! ”

அம்மா ரொம்ப அழகு. சிவந்த நிறம்.

எனக்கு இடியாய் இருந்தது.

அவன் தொடர்ந்தான்.

” அப்போ நீங்க இன்னும் விபரம் தெரியாத வயசு. சின்னக்குழந்தை. மூணு வயசு இருக்கும். அப்போ எமட்டன் இருக்கிற குச்சு வீட்டுக்குப் பக்கத்துலதான் உங்க வீடு. ஒரு நாள் அப்பா ஊர்ல இல்லாத சமயம். ராத்திரி வீடு புகுந்துட்டான். ஆச்சி ஐயோ.. ஐயோன்னு கத்த ….ஊரே முழிச்சிக்கிட்டு வந்து இழுத்துப் போட்டு ஆளைப் புரட்டி எடுத்துச்சி. அப்போ போலீஸ், வழக்கு, விசாரணையெல்லாம் கெடையாது. அப்பா வந்து… அவர் பங்குக்கு வேற உரிச்சு எடுத்தார். அன்னைக்கு முறிஞ்ச உறவு. பேச்சு வார்த்தைக் கிடையாது. இன்னைக்கும் அப்பாவுக்கு இவனைக் கண்டால் ஆகாது. அவரைப் பார்த்தால் இவன் ஒரு அடி தள்ளிப் போவான். எனக்கும் ஒருநாளைக்கு இவனைக் கருவறுக்கனும்ன்னு வெறி. உங்க வீட்டு உப்பைத் தின்னு வளர்ந்த உடம்பு தம்பி இது. நன்றி விசுவாசம் வேணாம்..! உங்க அப்பாவுக்கு ஆகாதவன் எனக்கும் ஆகாதவன். என்னைக்காவது மாட்டுவான், வெறியைத் தணிச்சிக்கலாம்ன்னு நினைச்சேன் . ராத்திரி மாட்டினான். ஆளை வெளுத்து வாங்கிட்டேன். ” சொல்லி சுமையை என் மீது இறக்கிவிட்டுச் சென்றான்.

‘ அம்மாவைப் பெண்டாட வந்தவன் (ர் ) ! ‘ – அந்த கணத்திலிருந்து இந்த ஆள் மீது எனக்கு வெறுப்பு, கசப்பு. பார்த்தாலே எரிச்சல். இதன் தொடர்ச்சியாய் எங்கள் பள்ளியில் படிக்கும் பரமசிவம் … அவர் மகன் என்னைவிடச் சிறியவன். அவனைக் கண்டாலும் வெறுப்பு, பேசப் பிடிப்பதில்லை. பேசுவதும் இல்லை. இந்த ஆள் சுப்ரமணி எதிரில் வந்தால் ஆத்திரம் வரும்.அடிக்கண்ணால் பார்ப்பேன்.

‘ சம்பவம் நடந்த அன்னைக்கு…. நான் வயசுக்கு வந்த இளைஞனாய் இருந்திருந்தால் நீ செத்தேடா மவனே..! ‘ – வார்த்தைகளோடு சேர்ந்து மனசும் மளமளவென்று எரியும்.

எங்கள் வீட்டு வெறுப்பு, சாபம், வயிறெரிச்சல் எல்லாம் ஒன்று சேர்ந்து சுப்ரமணியைத் தாக்கியதோ என்னவோ…..கொஞ்ச காலத்தில் அந்த குடும்பமே வறுமையில் பிடிபட்டு ஊரைவிட்டே காணாமல் போனது.

அதன்பிறகு இதோ சந்திப்பு.

தற்போது எனக்கு வயது 40. அவருக்கு அறுபதுக்கு மேல். தோலெல்லாம் சுருக்கம் விழுந்து, தலை வெள்ளையாய் நரைத்து…

எதிரெதிரில் எங்களைத் தவிர அக்கம் பக்கம் யாருமில்லை.

சுப்ரமணி கண்களை இடுக்கிக் கொண்டு என்னைப் பார்த்தார்.

அவர் என்னை அடையாளம் கொண்டிருப்பார் போல … நான் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு வெளியே பார்த்தேன்.

சிறிது நேரத்தில்…..

” தம்பி நீங்க…? ” என்னைப் பார்த்து இழுத்தார்.

நான் பேசவில்லை.

” மூவலூர்… கிராமம்தானே..! ”

பதில் சொல்ல விருப்பம் இல்லை. அடுத்த இடம் போகலாமென்று எழுந்தேன்.

” சொல்லுங்க தம்பி..? ” கையை நீட்டி மறித்தார்.

‘ எதிரியாய் இருந்தாலும் இனியும் ஒரு மனிதனிடம் பேசாமலிருப்பது அநாகரீகம். நன்றாக அடையாளம் வேறு கண்டு கொண்டார். என்ன பேசப் போகிறார்..?’ – நினைத்து வேண்டா வெறுப்பாக அமர்ந்து….

” ஆமாம் ! ” என்றேன்.

” மகேந்திரன் மகன்தானே..? ! ”

” ம்ம்ம்…”

” அப்பா சௌக்கியமா…? ”

”சௌக்கியம் ! ”

” அம்மா…? ” – என்று அடுத்து அவர் கேட்டால்…” படவா..! ” என்று ஓங்கி ‘ பளார் ! அறைய எனக்குள் ஆவேசம்.

கேட்கவில்லை.

” எங்கே போறீங்க..? ” – கேட்டார்.

ஆவேசம் மாறியது.

” சென்னைக்கு…”

” ஏன்…?? ”

” அங்கே வேலையில இருக்கேன்.! ”

” ஏதோ… நல்ல மனசு நல்லா இருங்க..” என்று வாழ்த்தியவர், ” ஏதோ நான்தான் கெட்டுப்போய்ட்டேன். ! ” வருந்தினார்.

‘ ஏன்…???…’ – கேட்கவில்லை.

” தம்பி ! நாங்க அந்த ஊரைவிட்டு கெட்டு முறிஞ்சி வெளியூர் போனதும் என் மனைவி செத்துப் போச்சு. புள்ள…? அவன்தான் பரமசிவம்…கொஞ்ச நாள்ல எவளையோ புடிச்சி இழுத்துக்கிட்டு எங்கேயோ ஓடிப் போய்ட்டான். இன்னும் அவன் இருக்கிற இடம் தெரியல. ஆள் இருக்கானா இல்லியான்னும் தெரியல. நான்தான் ஒண்டிக்கட்டையாய் உலாவிக்கிட்டு இருக்கேன். விழுப்புரம் மவ வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன். ” சொன்னார் .

இந்த ஆள் கதை எனக்குத் தேவை இல்லாதது. வலிய சொல்கிறார். ஏன்…??

மெளனமாக காது கொடுத்தேன்.

தொடர்ந்தார்.

” நீங்க பேசமாட்டீங்க. உங்களுக்குத் சின்ன வயசிலேர்ந்து என் மேல வெறுப்பு. பழி அப்படி ! ” மிகவும் நொந்து போனவராக பெரு மூச்சு விட்டார்.

”……………………………..”

” உண்மையிலேயே உன் அம்மா மேல எனக்கு ஆசை கிடையாது. உன் அத்தை மேல.!! அதாவது….உன் அப்பா தங்கச்சி மேல.!” சொல்லி நிறுத்தினார்.

செய்தி புதுசு. !! – துணுக்குற்றுப் பார்த்தேன்.

” அப்போ நாங்க ரெண்டு பேரும் செறுவயசு. ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். அதான்… ‘ அண்ணன் இல்லே. ராத்திக்கு வா ..’ ன்னு அவள்தான் எனக்கு சாடையில சொன்னாள். நான்தான் இருட்டுல அடையாளம் தெரியாம அம்மா கையைப் புடிச்சுட்டேன். ஆள் கத்தி அலறிய பிறகுதான் அம்மான்னு தெரிஞ்சு உடல் நடுங்கிப் போச்சு. ‘ உனக்காக வரல. உன் நாத்தனாருக்காக வந்தேன் ‘ னு சொன்னா எடுபடுமா…?! என்ன சொல்றதுன்னு தெரியாம விழிக்க… அதுக்குள்ளே அக்கம் பக்கம்… ஊரே புரண்டு வந்து என்னைப் பிண்ணிடுச்சு.ஆள் அழைக்கிறாள்ன்னு அடுத்தவன் வீடு புகுந்தது தப்புன்னு பொறுத்துக்கிட்டேன்.தெரிஞ்சோ தெரியாமலோ அடுத்தவன் மனைவியைத் தொட்டது தப்புன்னு உன் அப்பா கொடுத்ததையும் வாங்கிக்கிட்டேன். ஆனா…. உன் அம்மா புத்திசாலி, விஷயாளி. சம்பவத்துக்குப் பிறகு… ஆள் தனக்காக வரல. நாத்தனாருக்காக வந்திருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டாங்க . அவ.. ஏழையான எனக்கு வாக்கப்படக்கூடாது. பொண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போய் மானம் போயிடக்கூடாதுன்னு நெனைச்சி உன் அத்தைக்கு அவசர அவசரமா ஒரே மாசத்துல திருமணம் முடிச்சாங்க. அப்புறம்…. ஆள் இங்கே போக்குவரத்து தப்பித்தவறி தொட்டு தொடர்பு கூடாதுன்னு இந்த இடமும் சரிபாடாதுன்னு உங்க குடும்பம் அடுத்தத் தெருவுக்கு மாறிப்போச்சு. அப்புறம்… கிடுகிடுன்னு ரொம்ப வசதியாகிட்டீங்க. கொஞ்ச நாள்ல நானும் திருமணமாகி குடும்பம் , குடித்தனம் ஆனேன்.

என்மேல் உங்களுக்கு வெறுப்புன்னு எனக்கு என்னைக்கோத் தெரியும். சொன்னா.. புரியற வயசா அது..? கல்லால அடிப்பீங்க. பிற்பாடு என்னைக்காவது ஒருநாள் உங்களுக்கு உண்மையைச் சொல்லனும்ன்னு ஆசை. சொல்லிட்டேன். ” நிறுத்தி நீண்ட பெருமூச்சு விட்டு வலி வந்தவர் போல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு முகம் சுளித்தார்.

‘ அம்மாவிற்காக வரவில்லை ! ‘ என்று புரிய ஆரம்பித்ததுமே…. அவர் ,மேல் இருந்த வெறுப்பு கசப்பு என்னையும் மீறி தானாய்க் காணாமல் போனது.

உடல் இச்சையோ, காதலோ, காமமோ……. அத்தை அழைக்க இவர் சென்றிருக்கிறார். இருட்டில் விசயம் விபரீதம் ! ‘ என்று எனக்குள் புரிய… வெறுப்பு கசப்பெல்லாம் சுத்தமாக மறைய அவர் மேல் அனுதாபம் வந்தது.

” என்ன செய்யுது பெரியவரே….? ” கேட்டேன்.

” ஒன்னும் செய்யல. மவ கல்யாணத்துக்காகக் கிட்னி வித்தேன். அது இப்போ பிரச்சனை பண்ணுது. அதான் கடைசி மூச்சையாவது பொண்ணு மடியில விடலாம்ன்னு போறேன் ” சொன்னார்.

சட்டென்று எனக்கு இதயம் கனக்க…. புகை வண்டி விழுப்புரத்தில் நின்றது. !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *