அவசர அவசரமாக தன் வீட்டை சுத்தம் செய்துவிட்டு ஐந்து வயது தங்கை செல்லாயியை கையில் பிடித்துக்கொண்டு தோப்பு வீட்டுக்குச் சென்றாள் மூக்காயி.
“ஏண்டி, இவ்ளோ நேரமா தூங்கிட்டா இருந்தே.வாய என்னடி பாக்குறே. சட்டுப்புட்டுனு மாட்டுச் சாணிய அள்ளி குப்பையில போடு. இன்னிக்கு ஞாயித்துக் கெழம யாகவம் இருக்கல. மாடு நாலையும் குளிப்பாட்ட தண்ணி அடிச்சு வையி” வீட்டுக்காரம்மா சொல்லி முடிப்பதற்குள் சாணங்களை அள்ளி தூய்மை செய்திருந்தாள்.
“அய்யாவும் தொணைக்கி வருவாக” சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் புறப்பட்டாள்.
செல்லாயியை ஓர் இடத்தில் உட்கார வைத்துவிட்டு அடிகுழாயில் தண்ணீர் எடுக்க புறப்பட்டாள் மூக்காயி.
யார் இந்த மூக்காயி !
ரிக்ஷா ஓட்டி சண்முகத்தின் மகள் தான் இவள். தினமும் கிடைக்கிற பணத்தில் முக்கால் பங்கை சாராயம் குடித்தே காலியாக்கி விடுவான். மனைவி வீராயி தான் இவனுக்கு உதை பந்து. இவளின் கன்னம் கண்ணீரோடு தான் அதிகம் உறவாடிக் கொண்டே இருக்கும். பிள்ளைகளுக்காக அஞ்சாறு வீட்டில் பத்துபாத்திரம் தேய்த்துக் காலத்தை கடத்தினாள்.
மூக்காயி மூணாவது படிக்கும் போதுதான் அந்ததுயரம் நிகழ்ந்து. குடிபோதையில் வந்த சண்முகம் சாலையோரமாக நின்ற பழுதடைந்த கார் ஒன்றில் மோதி இறந்தான். இவன் இருந்தும் இவர்களுக்கு பயனில்லை. இல்லாமலும் பயனில்ல.
கெட்ட குடியே கெடும். இது வீராயி குடும்பத்துக்குத்தான் பொருத்தமாக இருந்தது.
“எத்தனை நாளைக்குத் தான் கால் வயிறும் அரை வயிறும்” அல்சர் நோயால் அவதிப்பட்ட வீராயி பாத்திரம் கழுவும் போது வழுக்கி விழுந்தவள் தான். காலும் கையும் ஓடிந்து வீட்டிலே கிடக்கிறாள்.
குடும்ப பாரம் சின்னவள் மூக்காயி தலையில் விழுந்தது. நன்கு படித்துக்கொண்டு இருந்தவள் பாதியிலேயே படிப்பை நிறுத்தினாள். வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தவள் தான். இன்றும் தொடர்கிறாள். எட்டுவயது நிரம்பிய மூக்காயி பள்ளிக்கூடத்தை எட்டிக்கூட பார்க்கமுடியாமல் போனது.
செல்லாயியை படிக்க வைத்துவிடவேண்டும் என்று எண்ணியவள் “அம்மா…” வீட்டுக்கார அம்மாவிடம் மெதுவாக பேச்சை இழுத்தாள்.
“என்னலே! ஒரு மாறியா இழுக்குறே!”
“தங்கச்சிய…”
மூக்காயி பேச்சை முடிப்பதற்குள் “ஏன்டி பொழைக்கத் தெரியாதவளா இருக்கே. இந்த டவுன்ல நீ மட்டும் வேல பாத்து மூணு உசுரு பொழக்கே முடியுமா. அவளும் ஒன்னோட வேலபாத்தா நாலு காசு கூட கிடைக்கும்லே” வீட்டுக்காரம்மா நாசுக்காக சொன்னாள்.
எண்ணம் ஈடேறாததை எண்ணி மௌனமானாள்.
வீதியில் குழந்தைகளோடு ஆசிரியர்களின் சத்தம் கேட்கவும் ஓரமாக சாலையை நோக்கினாள். மாணவர்கள் சிலர்…
“வேலைக்கு விடை கொடுப்போம்”
“பள்ளிக்கு படை எடுப்போம்”
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்று எழுதப்பட்ட கொடிகளை தூக்கிக்கொண்டு சென்றனர்.
சின்னவள் செல்லாயி அந்த பிரச்சாரத்தை ஆர்வத்தோடு கண்டு களித்தாள்.
தன் நிலையை எண்ணி மூக்காயி சிரிக்க ஆரம்பித்தாள். சிரிக்க வழியில்லாமல் கண்ணீர் தான் கசிந்து கொண்டு இருந்தது.
– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.