தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 10,600 
 

“விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’

அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி வீதியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். தலை கலைந்து அலங்கோலமாய் இருந்தது.

விசாலாட்சிதிண்ணையில் உட்கார்ந்து கட்டிக் கொண்டிருந்த பூச்சரத்தை அப்படியே போட்டுவிட்டுப் பதறியபடி எழுந்தேன். அம்மாவின் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை எப்போதும் இல்லாதது.

“பெரிய அத்தைக்கு போன் வந்துச்சாம். சீமெண்ணெயை ஊத்தி பத்த வெச்சிட்டாளாம். பாவிப் பொண்ணு, உடம்பெல்லாம் பொறிப் பொறியா கிளம்பிடுச்சாம். அவளோட அப்பன் ஏதோ சொல்லிட்டானாம்… அதுக்காக இப்படியா…? படிச்ச புள்ளை இப்படியா செய்யறது…?’

அம்மா சொல்லச் சொல்ல மனசு தவித்தது. விசாலாட்சியா இப்படியொரு கோழைத்தனமான முடிவெடுத்தாள்? எப்போதும் வகுப்பில் துறுதுறுவென்று எதையாவது கூறி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறவள். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிற தோழிகளுக்குள் எப்போதும் சமரசக் கொடியை எந்திச் செல்கிறவள். ஒரு வார்த்தைகூட சிடுசிடுப்பாகப் பேசத் தெரியாதவள்.

“நாங்க எல்லோரும் கோயமுத்தூரு போயிட்டு வந்திடுறோம் வேணி… நீ பத்திரமா வீட்டிலிரு… நான் அய்யனுக்கு போன் பண்ணிச் சொல்லிடுறேன்… அவரு அப்படியே கிணத்துக்கடவிலிருந்து வந்திடுவாரு…’

அம்மா சொல்லிக்கொண்டே பாத்ரூமுக்குள் போனாள். முகத்தைக் கழுவியபடி வெளியே வந்தாள்.

“நானும் வர்றேன்மா…’

“நீயெல்லாம் வரக்கூடாதுடி… ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா என்ன செய்யறது…? நான் ஒத்தைப் பொண்ணை வெச்சிருக்கேன்…’

“புரியாத பேசாதம்மா… சின்ன வயசிலிருந்து நானும் விசாவும் தான் ஒண்ணா பழகினோம். படிச்சோம்… இப்படியொரு நிலையில…’

பேச முடியாமல் அழுகை வெடித்துக் கிளம்பியது. அம்மாவை சம்மதிக்க வைக்கப் பெரும்பாடாயிற்று.

பொள்ளாச்சிக்கு அரைமணி நேரப் பயணம். பேருந்தில் அமர்ந்ததும், விசாலாட்சி மனசுக்குள் ஒரு பூஞ்சோலையாய் விரிந்தாள்.

பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில்தான் படிப்பு. கிராமத்தைச் சார்ந்த ஆங்கிலவழிப்பள்ளி. இடைவிடாமல் உழைக்கிற ஆசிரியர்கள். பத்தாம் வகுப்பில் இவர்கள் எதிர்பார்த்ததுக்கும் கூடுதலாகவே மதிப்பெண் பெற்றிருந்தோம்! ஆறாம் வகுப்பிலிருந்து பத்து வரை ஒன்றாகவே படித்ததில் நெருக்கமான நட்பு முளைவிட்டு, அடர்ந்து பரவி, பெருவாசனையாய் முகிழ்த்திருந்தது.

விசாலாட்சி பதினொன்றாம் வகுப்புக்கு அதே பள்ளிக்குத்தான் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ஆசை கருகிப் போயிற்று.

“இங்க… கிராமத்துல படிச்சா ப்ளஸ் டூவுல நல்ல மார்க் எடுக்க முடியாதாம் வேணி… எங்கப்பா டவுன் ஸ்கூல்ல சேர்த்துட்டாரு… ஸ்கூலுக்குப் பக்கத்திலேயே வீடு பார்த்துட்டோம்… எப்பவாச்சும்தான் இனி பார்த்துக்க முடியும்… தினமும் எஸ்.எம்.எஸ். அனுப்புவேன். நீயும் அனுப்பணும் ஓகேவா…’
கிளம்பிப் போவதற்கு முன் வீடு தேடி வந்து சொல்லவிட்டுப் பிரிந்தாள்.

அதற்குப்பிறகு ஓரிரு மாதம், இரவு பத்து மணிக்கு மேல் போனில் பேசுவாள்.

“ப்ளஸ் ஒண்ணுல இப்பவே பாதி பாடம் முடிச்சாச்சு.. ப்ளஸ் மூவுக்கு எது தொடர்ச்சியா வருதோ அதைத்தான்பா நடத்துறாங்க… எல்லாமே வேகம். என்னன்னு புரிஞ்சுக்கிறதுக்குள்ள அடுத்த பாடம் வந்திடுது. கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்குப்பா…’

இதைத்தான் அடிக்கடி புலம்புவாள்.. பத்தாம் வகுப்பில் எப்படியோ சில பகுதிகளை இடைவிடாமல் திபரும்பத் திரும்ப எழுதிப் பார்த்துத்தான் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குத் தயாரானாள். அதே எதிர்பார்ப்புதான் விசாவின் அப்பாவுக்கு இருந்தது. அதனாலேயே பவுன் ஸ்கூலில் சேர்க்க யாரையெல்லாமோ பிடித்து அந்தப் பள்ளியில் சேர்த்தார்.

“எனக்கு கேரம்போர்டுன்னா உசிருன்னு உனக்கே தெரியும்… ஆனால் இப்ப அதெல்லாம் எந்த மூலைக்குப் போச்சுன்னே தெரியல வேணி. அப்பா ரொம்ப மாறிட்டாரு… எப்பப் பாரு படி… படின்னு ரொம்ப டார்ச்சரா இருக்கு. நானும் படிச்சுட்டுத்தான் இருக்கேன். காலையில நாலு ணிக்கே எழுந்திருச்சுத்தான் படிக்கிறேன்… முடியலேப்பா. ஒரு பாட்டு கேட்டு எவ்வளவு நாலாச்சு தெரியுமா…?’

இது அரையாண்டுக்குப் பிறகு ஒருநாள் போனில் விசாவின் புலம்பலாய் இருந்தது.

“என்னம்மா… பிரமை பிடிச்ச மாதிரி இருக்கே. அவளை எப்படியும் காப்பாத்திடுவாங்க. நீ ரொம்ப குழப்பிக்காதீங்க..’

அம்மா தோளை தொட்டு உசுப்புகிற போதுதான் நினைவுக்கு வந்தேன்.

வெளியே பார்த்தேன். பேருந்து கோவில்பாளையம் கடந்து போய்க் கொண்டிருந்தது. பேருந்தில் பாடிக் கொண்டிருந்த பாட்டுக்கூட கவனத்தில் பிடிபடாமல் யோசனையாகவா இருந்திருக்கிறோம்..?
குழப்பமாய் இருந்தது.

விசாவுக்கு பாட்டென்றால் உயிர். ராணி, கவிதா, சுமதி என்று ஒரு கும்பலே விசாவின் பாட்டுக்கு ரசிகர் பட்டாளம். சுமதிக்குத்தான் நன்றாக தாளம் போட வரும். டெஸ்க்கில் ஸ்கேலால் மெல்லிசாய் ஒரு தாளம் வந்து கொண்டேயிருக்க, விசா பாடத் தொடங்குவாள். அதுவும் சோகப் பாட்டுக்கள்தான் அவள் உயிர்.
“வேணி… எப்படிடி இருக்கே… இப்ப ப்ளஸ்டூ போர்ஷன் ஆரம்பிச்சு ரொம்ப வேகமா போயிட்டிருக்கு. பிஸிக்ஸ் புரிஞ்ச மாதிரியும் இருக்கு… புரியாத மாதிரியும் இருக்கு. மார்க்கெல்லாம் ரொம்பக் குறைவாதான் வருது. அதனாலே டியூஷனுக்கு அப்பா ஏற்பாடு செஞ்சுருக்காரு..’

விசாலாட்சி வாரம் ஒருமுறையாவது இப்படி புலம்புவது இயல்பாகியிருந்தது.

காலையில் ஆறு மணியிலிருந்து ஏழு வரை மகாலிங்கபுரத்தில் கெமிஸ்ட்ரி டியூஷன். ஏழே கால் முதல் எட்டே கால் வரை பஸ் ஸ்டாண்ட் பக்கம் ட்யூஷன் சென்டரில் கணக்கு வகுப்பு. அதற்குப்புறம் பள்ளிக்கூடம். மாலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை மறுபடியும் விடுபட்ட பாடங்களுக்கான டியூஷன். இப்படியாக ஒரு செக்குமாடாய் மாறியிருந்தாள் விசாலாட்சி.
விசாலாட்சியின் அப்பா ஒருமுறை ஊருக்கு வந்திருந்தபோது அவர் கூறியது இன்னும் மனத்தில் நினைவில் நெருப்பாகச் சுடுகிறது.

“சனியன்… இருக்கிற பணத்தையெல்லாம் கரைச்சிட்டே இருக்குது… மார்க்குதான் வரமாட்டேங்குது… நானும் வேணுமுங்கிற ட்யூஷனுக்கு ஏற்பாடு செஞ்சு பார்க்கிறேன்… ஒண்ணும் தெரியாத மண்ணுங்க… அந்தப் பெரிய வூட்டு மச்சான். அவன் பொண்ணை டாக்டருக்குப் படிக்க வைக்கிறானாம். நான் என்ன சும்பனா… நானும் படிக்க வைக்கிறேன்… பார்க்கலாம் யாரு பொண்ணு டாக்டர் ஆகுதுன்னு…’

ரத்தம் சூடேறுகிற அளவக்கு, உறவுக் கூட்டத்தில் விட்ட விரிசல், விசாலாட்சியைப் பாடாய்படுத்தியிருக்க வேண்டும்.

“கொஞ்சம் தள்ளி உக்காரும்மா… நானும் உட்காந்திருக்கிறேன்…’
குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தாள். வயதான அம்மா கையில் பையுடன் நின்றிருந்தாள்.

விசாலாட்சியைக் காப்பாற்றி விடுவார்களா…? உயிர் பிழைத்தாலும் உடல் தேற இன்னும் எவ்வளவு நாட்களாகும்? இல்லை மாதங்களாகுமா..? வருடங்களாகுமா…?
உடலில் தீப்பிடித்ததும் எப்படியெல்லாம் அலறியிருப்பாள்…? மனமுடைந்து போயிருந்தால் எப்போதும் புலம்புகிற மாதிரி இப்போதும் புலம்பித் தீர்த்திருக்கக்கூடாதா? இப்படிச் செஞ்சுட்டியே விசா.. மனசு குமுறிக் குமுறி வெடித்தது.
வெகுநாட்கள் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் போக, ஒருநாள் போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுத்தது விசாவின் அப்பா.

“இங்க பாரும்மா… இப்படி போன் செய்யறதும், பொசுக்கு, பொசுக்குன்னு மெசேஜ் அனுப்பறதும் எனக்கு புடிக்கலே… இப்ப அவகிட்டே போன் இல்லே. இன்னும் பரீட்சைக்கு மூணு மாசம்தான் இருக்கு. நீயும் ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு. அவளை நான் டாக்டர் ஆக்கணும். கட் ஆப் குறைஞ்சது நூற்று தொண்ணூத்தி ஒன்பதாவது எடுக்கணும்னு எல்லோரும் இங்க ஆளா பறந்துட்டு இருக்கோம். புரிஞ்சுக்க… நீ போனு… கீனுன்னு எம் பொண்ணைத் தொந்தரவு செஞ்சே… நான் மனுஷனா இருக்க மாட்டேன்…’

பட்டென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதற்குப் பிறகு விசாலாட்சியிடம் இருந்து போன் தகவல் முற்றிலும் இல்லை.
கோவில் கொடைக்கு விசாவின் குடும்பமே ஊருக்கு வநதிருந்தது. அதிசயமாக விசாவையும் அழைத்து வந்திருந்தார்கள். எல்லோருக்கும் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

விசாவும் நானும் னித்திருந்தோம். விசா சட்டென்று மடியில் படுத்து தேம்பத் தொடங்கினாள்.

“டாக்டர் படிப்புதான் உலகத்திலேயே பெரிய கொம்புப் படிப்புõ… வேணி… இல்லே இன்ஜீனியராகத்தான் ஆகணுமா…? அறிவிருந்தா ஒரு பொட்டிக்கடை வெச்சுக்கூட பணக்காரனா ஆகமுடியும். நானும் எவ்வளவோ முயற்சி செய்யறேன். எக்ஸாம் ஹால்ல உட்கார்ந்த கொஸ்டின் பேப்பரைப் பார்த்தாலே எல்லாம் மறந்து போகுது. கிளாஸ் டெஸ்ட்ல ஞாபகம் வருது. மெயின் எக்ஸாம்ல மறந்திடுது. அப்பா எப்பவும் கொலவெறியோடவே பேசுறாரு. வர்றவங்க, போறவங்ககிட்டே எல்லாம் என்னப் பத்தித் தான் புலம்பறாரு… முட்டாளாம்…. தத்தியாம்…. சோம்பேறியாம்… தாங்கிக்கவே முடியலே வேணி…’
நெடும் புலம்பலுக்கு என்னிடம் ஒரே பதில்தான் அவளுக்கான பதிலாக இருந்தது.

“உன்னால் முடியும்….’
அப்படி நடக்கவில்லையென்றோ, நடந்தது என்றோ கூற முடியாது. பொதுத் தேர்வில் விசா பெற்றிருந்தது அவள் திறமைக்கும் சற்றுக் கூடுதல்தான். பொது நோக்கில் பார்த்தால் நல்ல மதிப்பெண்கள்.

விசாவின் அப்பா வேறுமாதிரியாக அவதாரமெடுத்தார். அவள் எழுதிய வினாக்களுக்கெல்லாம் சரியான மதிப்பெண் கொடுத்திருந்தல் குறைந்தது நூற்றி தொண்ணூற்றி ஒன்பது மதிப்பெண் கட்-ஆப் கிடைத்திருக்கும் என்றும், இதை இப்படியே விட்டு விடப் போவதில்லை என்றும் கூறுவதாகவும், விசாவிடம் ஏதேதோ விண்ணப்பங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் தெரிந்தது.

“அம்மணி இறங்கு… இனி இன்னொரு பஸ் பிடிச்சுப் போகணும்….’
அம்மாவின் முகத்திலும் கவலை படர்ந்திருந்தது. உக்கடம் வந்திருந்தது. பேருந்துகளுக்குள்ளிருந்து வருகிற கலவையான பாடல், இசை சப்தமாக மாறியபடியிருந்தது.

“அக்கா… அக்கா… பசிக்குது… ஏதாச்சும் பார்த்துக் கொடுங்கக்கா…’
இப்போது கொடுக்க எதுவுமில்லை. விசா இப்படி யாராவது கையேந்தினால் இருக்கிற காசைக் கொடுத்து விடுவாள். தன்னிடம் இல்லையெனில் யாரிடமாவது வாங்கியாவது கொடுத்து விடுவாள்.

“ஏன் வேணி… கடைசியா உங்கிட்டே பேசும்போது மார்க் அதிகமாயிடுச்சு. டாக்டர் படிப்புக்குப் போறதாத்தானே விசா சொன்னதா நீ சொன்னே…!’

அம்மா சொல்வது உண்மைதான்! பல மாதங்களுக்குப் பிறகு விசாவே கூப்பிட்டுத் தகவல் கூறினாள்.

“ஒரு குட் நியூஸ் வேணி… நான் மெடிக்கல் சேரப் போறேன்.. ரீ டோட்டல்ல எதிர்பார்த்த மார்க் வந்திடுச்சு… அப்பாதான் எல்லா வேலையும் பாத்தாரு… நாளைக்கு கவுன்சிலிங்… மெட்ராஸ் போறோம்… ரொம்ப சந்தோஷமா இருக்குடி…’

“வேணி…’

“இந்த பஸ் பெரியாஸ்பத்திரி போகுமான்னு பாரு வேணி.. நீ இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்கிறது எனக்குப் பயமாயிருக்கு. இதுக்குத்தான் உன்ன வரவேண்டாம்னு சொன்னேன்….’

ஒரிரண்டு பேருந்துகள் கூட்டமாக வந்தன.. “அம்மா இதுல சார்ஜ் அதிகம்தான்… ஆனா கூட்டம் இல்லே.. போயிடலாமா…’

“போயிடலாம்… அப்பாவுக்கு ஒரு போன் போடு… எங்க வந்திட்டாருன்னு…’

“ப்ளீஸ்ம்மா… முதல்ல நாம போய் விசாவைப் பார்க்கலாம்மா… என்னமோ ஏதோன்னு பயமா இருக்கும்மா…’

“சரி… ஏறு பஸ்ல…’

பேருந்தில் அமர்ந்ததும் மனது மறுபடியும் விசாவையே சுற்றியே படர்ந்தது.

அடுத்த இரண்டாவது நாள் தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அது உறைக்கவில்லை. மொத்தமாக ஃப்ளாஷ் நியூஸ் என்று எழுத்துக்களின் நகர்வாயிருந்தது.

மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டு பிடிப்பு… பலர் கைதாகிறார்கள். விரிவான தகவல் திரட்டப்படுகிறது.

மறுநாள்… செய்திதாளில் விசாலாட்சி உட்பட பத்து பேரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. எல்லாரும் போலி மதிப்பெண் பட்டியல்கள் வைத்திருந்ததாகவும், தீவிர விசாரணையில் பத்து லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கலாமென்றும் விரிவான செய்தியாயிருந்தது.
உடனே செல்போனில் தொடர்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இரவுவரை அதே பதிலாயிருந்தது. இரவு வரை அதே பதிலாயிருந்தது. இரவு தொலைக்காட்சி சேனங்களில் பரபரப்பாக இதுபற்றிய விவாதங்களே இடம் பெற்றிருந்தன.
விடிந்ததும்தான் இப்படியொரு இடி வந்திறங்கியது. மருத்துவமனை வளாகம் முழுக்க கும்பல் கும்பலாய்க் கூடியிருந்தார்கள். அவசரமாய் வருகிற ஆம்புலன்ஸ் வண்டிகள்… யாரோ யாருக்கோ செல்போனில் அழுகையுடன் கூறப்படுகிற தகவல்கள்… திடீர்திடீரென்று எழுகிய அழுகைகள்…
விசாலாட்சியின் உறவுகள் எங்காவது தென்படுகிறதா என்று தேடத் தொடங்கினோம்.

“சண்டாளா… என் பொண்ணு வாழ்க்கையே இப்படி மண்ணாக்கிட்டியே… நீ நல்லாயிருப்பியா…? நாசமா போயிருவிடா… கொலகாரப் பாவி…’

பெருங்குரலெடுத்த அலறல் வந்த திசையை மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த எல்லா முகங்களும் பார்த்தன.
விசாலாட்சியின் அம்மாதான்…! கிழிந்த சட்டையுடன் அப்பா நின்றிருக்க… வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட விசாலாட்சி உயிரற்றுப் படுத்திருந்தாள்!

– க.அம்சப்ரியா (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *