வானம் கார்மேகத்துடன் காட்சியளிக்க, சில்லென்று தென்றல் காற்று வீச, சிறு மழைத் துளிகள் மண்ணில் விழ, காலை பதினோரு மணிக்கு மத்திய சிறைச்சாலையின் கதவு திறக்கிறது. சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில். “ஐயா பேருந்து நிலையத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும்” எனக் கேட்டு, பதிலை பெற்றுக்கொண்டு, அங்கு சென்றார். அவர் செல்ல வேண்டிய இடமான திருப்பூர் பேருந்தில் ஏறி அமர்ந்தார். பேருந்தின் உள்ளே தொண்ணூறில் வெளியான இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்க, அதை கேட்ட அவன் மனம் அமைதியானது. அந்த இசை அவன் மனதை வருடியதோடு, அவனின் வாழ்க்கையை பின்னோக்கி யோசிக்க வைத்தது.
தான் ஆசை ஆசையாய் காதலித்து, மணம் முடித்த மனைவியை, தலை பிரசவத்தில் குழந்தையோடு இழந்தார். அத்துயர் தாங்க இயலாத அவர் மனமாற்றத்திற்காக திருப்பூருக்கு வந்தார். அவன் பக்கத்து வீட்டு குழந்தை சுபா அவன் துக்கத்திற்கு மருந்தானாள். தான் பெற்ற குழந்தையைப் போலவே அவளை பாவித்தான். குழந்தை சுபாவை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளும் செந்திலின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாள். செந்தில் தினமும் வேலை முடிந்ததும், சுபாவுக்கு பிடித்த தின்பண்டங்கள், விளையாட்டு பொருட்கள் என அவளுக்கு வாங்கிவருவான். இப்படியே நாட்கள் அழகாக நகர்ந்தது.
சுபாவின் தாய் தந்தைக்கு அவள் செந்திலுடன் பழகுவது பிடிக்கவில்லை. தினமும் பத்திரிகை, தொலைக்காட்சி என நாளும் வரும் செய்திகளில் குழந்தை பலாத்காரம், கொலை என வருவதைக் கண்டு, விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என எண்ணி, சுபாவின் ஒவ்வொரு விடயத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
ஆனால் சுபா பொழுதை செந்திலுடன் கழித்தாள். இப்படியே செல்கையில், சுபா பூப்படைந்தாள். அதன்பின் அவளை அவளின் பெற்றோர் செந்திலுடன் பழகுவதை நிறுத்தி கொள்ளுமாறு கண்டித்தனர். ஆனால் செந்திலின் மீதான பாசம் அவர்களின் பேச்சை மீறியது. அதனால் அவர்கள் வேறு இடத்திற்கு வீட்டை மாற்றிச் சென்றனர். சுபா செந்திலை பார்க்க முடியாததால் வருந்தினாள்.
ஒரு மாதம் கழித்து செந்தில் சுபாவுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டு அவளை காணச் சென்றான். சுபாவின் வீட்டில் ஏதோ சத்தம் கேட்க, அவசரமாக உள்ளே ஓடி வந்தான். அங்கே அவளின் பெற்றோர் வீட்டில் இல்லா வேளையில் சுபாவை முகமறியா ஒருவன் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். செந்தில் அவனை அடித்து உதைத்து சுபாவை காப்பாற்றினான். ஆனாலும் அக்காமக்கொடூரன் அவளை விடவில்லை. செந்திலுக்கும் அக்கொடூரனுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த வேளையில் சுபா செய்வதறியாது, அவனை அருகிலுள்ள ஒரு கட்டையால் அடித்து விடுகிறாள். எதிர்பாராத விதமாக சம்பவ இடத்திலேயே இறந்து விட்டான். சுபாவின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, சுபாவிடம் “நடந்ததை யாரிடமும் கூற வேண்டாம்” என செந்தில் தான்தான் கொலை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தான். நடந்த அனைத்தையும் சுபா தன் பெற்றோரிடம் விவரித்தாள்.
சுபாவும் அவளின் பெற்றோரும் செந்திலை காணச் சென்றனர். அவளின் பெற்றோர் செந்திலிடம் நன்றி கூறினர். செந்திலுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை கிடைத்தது. அவன் சுபாவிடம் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தி விடைபெற்றான். செந்திலின் அந்நிலை கண்டு சுபா கதறி அழுதாள். தன்னால்தான் செந்திலுக்கு இப்படி ஒரு நிலை வந்ததை எண்ணி கலங்கினாள். அவளின் பெற்றோரும் செந்திலின் தியாகத்தையும் சுபாவின் மீதான அவனின் பாசத்தையும் கண்டு வியந்தனர். இசையும் முடிந்தது; பேருந்தும் திருப்பூர் வந்தடைந்தது. செந்திலும் தன் கடந்த கால நினைவலையிலிருந்து வெளியே வந்தான்.
நேராக சுபாவின் வீட்டிக்குச் சென்றான். வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உள்ளே நுழைந்தவுடன் சுபாவை கேட்டான். அவளுக்கு அன்று திருமணம் என்றும் தெருமுனையில் உள்ளே கோயிலில் இன்னும் சில நிமிடங்களில் திருமணம் நடைபெறவுள்ளது என்றும் கூறினர். வேகமாக செந்தில் அங்கு செல்ல, மணக்கோலத்தில் இருந்த சுபாவின் கழுத்தில் மாங்கல்யமும் ஏறியது. அவ்வேளையில் அந்நேரம் கண்ட காட்சியினால் அவன் கண்களில் ஆனந்த கண்ணீர் ஒடியது. திருமணம் இனிதே முடிந்தது. ஐய்யர் – “மாப்பிளையும், பொண்ணும் சாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வாங்கோ” என சொல்ல சுபா ஓடி வந்து செந்திலின் காலில் விழுந்தான். ஐய்யர் – “அம்மா நான் உன்னை சாமிகிட்ட … ஆசிர்வாதம் வாங்க சொன்னேம்மா!” என்றார். உடனே சுபா “எனக்கு இவர் தான் சாமி” எனக் கூற, செந்தில் கண்கள் மகிழ்ச்சி மிகுதியால் கண்ணீரால் நிரம்பியது. அவளின் அவ்வார்த்தை செந்திலின் ஏழு ஆண்டு சிறை வாழ்க்கையை ஒரு நொடியில் மறையச் செய்தது.
“குழந்தையும் தெய்வமும் ஒன்று”ன்னு சொல்லுவாங்க ஆனால் நீங்க தெய்வமா பார்க்காவிட்டாலும், குழந்தையை குழந்தையாகவாவது பாருங்க. இது போன்ற குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடுவோம்!