மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், வாஸ்து பார்த்துக் கட்டியதால்தான் தன்னுடைய புதுவீடு ராசியாகி விட்டதாக சொக்கலிங்கம் உறுதியாக நம்பினார். வீட்டைக் கட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிடமும் ஒவ்வொரு மரத்திடமும் கூட அவர் பேசியிருப்பார் அப்படி ஒரு ஈடுபாட்டுடன் அந்த வீட்டைக் கட்டினார். அதிலும் வாஸ்து விஷயத்தில் அவர் காட்டிய அபரிமிதமான ஈடுபாடு சில சமயம் அவர் மனைவிக்குக் கூட சற்று அதிகமாகப் பட்டது.
தெருக்குத்து இல்லாத அந்த காலி மனை, சரியான செவ்வக வடிவிலும், வாஸ்துப்படியும் அமைந்திருந்ததால்தான் சொக்கலிங்கம் அந்த இடத்தையே வாங்கினார். கிழக்குப் பார்த்த பூஜையறை, தென் கிழக்கில் சமையலறை, மேற்கில் பெட் ரூம், வட கிழக்கில் படிக்கும் அறை, மேற்குப் புறம் டாய்லெட், தண்ணீர் தொட்டி, வட கிழக்கில் போர்வெல், என்று அந்த வீட்டின் ஒவ்வொரு அங்கமும், வாஸ்துப்படி கட்டப்பட்டிருந்தது. அதிலும் தன் ஒரே மகனான பிரகதீஷின் படிக்கும் அறையை, சொக்கலிங்கம் கிட்டத்தட்ட ஒரு மாடல் வாஸ்து உலகமாகவே உருவாக்கி இருந்தார். தன் நிகழ்கால வாழ்க்கையை விட தன் மகனுடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக இருந்து ஆசைப்பட்டதில் தவறு ஒன்றும் இல்லையே ? அதிலும் பிளஸ் 2 படிக்கும் பிரகதீஷுக்கு இது வாழ்க்கையின் திருப்புமுனையான வருடமாச்சே !
வீட்டின் வட கிழக்கு ஈசான மூலையிலே அமைக்கப்பட்ட படிக்கும் அறையில் கிழக்குப் புற சுவற்றின் ஓரமாக டேபிள் போடப்பட்டிருந்தது. அந்த டேபிளின் மேல் தென் கிழக்கு ஓரத்தில் ஒரு டேபிள் லாம்ப், டேபிளின் மேல் எனர்ஜி தருவதாக நம்பப்படும் ஒரு சிறிய பிரமிட், மேற்கு சுவற்றில் புத்தக அலமாரி, மேற்கு சுவற்றில் கிழக்குப் பார்த்து மாட்டப்பட்டிருந்த ஃபிரேம் போடப்படாத வாஸ்து விநாயகர், வட கிழக்கில் சிறிய நீரூற்று, வடக்கு சுவற்றில் பென்டுலம் வைத்த வால் கிளாக், அறையின் வடக்கில் வாசல், அதில் போடப்பட்ட இரட்டைக் கதவு என்று எல்லா அம்சங்களும் வாஸ்துவை உள்ளடக்கியே இருந்தது. அந்த அறையில் போடப்பட்டிருந்த டைல்ஸ், ஃபர்னிச்சர்கள், பெயின்ட் கலர் எல்லாமே மகனுடைய ராசி, நட்சத்திரம், வாஸ்து என்று ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து போடப்பட்டவைதான்.
நடுவில் இரண்டு முறை வாஸ்துவுக்கும் ராசிக்கும் சிக்கல் வர இருந்தது. முதல் முறை பிரகதீஷ், அவன் படிக்கும் அறையில் ஒரு டாய்லெட் வேண்டும் என்று பிடிவாதமாக கேட்ட போது வந்தது. படிக்கும் அறையில், டாய்லெட் என்பதை வாஸ்து சாஸ்திரம் பிடிவாதமாக ஏற்றுக் கொள்ளாததால் சொக்கலிங்கம் மகனிடம் பிடிவாதமாக எடுத்துச் சொல்லி சமாளித்து விட்டார்.
இரண்டாவது சிக்கல் சொக்கலிங்கம் ஊரில் இல்லாதபோது, பிரகதீஷ் தன் நண்பர்களுடன் சென்று வாங்கி வந்த முழுக் கறுப்பு நிற புத்தகப் பையினால் வந்தது. கறுப்பு என்பது ராசியில்லாத அபசகுனம் என்று சொக்கலிங்கம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அந்தப் பை அவனாக விரும்பி தேர்ந்தெடுத்தது என்பதாலும், உடன் இருந்த நண்பர்கள் கிண்டலடிப்பார்களோ என்பதாலும் பிரகதீஷ் அந்தக் கறுப்புப் பையை விடுவதாக இல்லை. சொக்கலிங்கத்திற்கு வேறு வழியே தெரியவில்லை. ஒரு நாள் பிரகதீஷ் வீட்டில் இல்லாத சமயத்தில் தெருவில் போய்க் கொண்டிருந்த பழைய சாமான் வாங்குபவனிடம் அந்தப் பையை போட்டு விட்டார். தன் மகனை எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் ராசியில்லாத புத்தகப் பையை காலமெல்லாம் எப்படி சமாளிப்பது ?
அவருடைய நோக்கமெல்லாம் அந்தக் கறுப்புப் பையை வீட்டை விட்டு, … ஏன் ..அந்த ஏரியாவை விட்டே தூரமாக கண்ணில் படாமல் ஒழித்து விட வேண்டும். அவருடய முதல் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் இரண்டாவது நிறைவேறவில்லை. பழைய சாமான்கள் விற்பவன் தன் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு தெரு முனையத் தாண்டும் போது, தெருக் கோடியில் குடிசை வீட்டில் இருந்த அலமேலுவின் கண்களில் பட்டு விட்டது அந்தப் புத்தகப் பை. தள்ளு வண்டிக்காரனிடம் அடித்து பேரம் பேசி 75 ரூபாய்க்கு அந்தக் கறுப்புப் பையை வாங்கி விட்டாள். பாவம் தன் மகன் முருகேசு இரண்டு வருடமாக கிழிந்து போன பையையே வச்சிகிட்டு இருக்கானே ? நானூறு ரூபாய் கொடுத்து புதுப்பை வாங்குவதற்கு கட்டுப்படியாகாதே !
முருகேசுக்கு அந்தப் பை ஒரு எதிர்பாராத பரிசு. பளபளப்பாக புது வாசம் நீங்காத அந்தப் பையை ஏதோ பொக்கிஷம் போல குடிசையின் வடமேற்கு மூலையில் சுவற்றில் ஒரு ஆணியடித்து மாட்டிக் கொண்டான். அந்த வடமேற்கு மூலைதான் அவன் வழக்கமாக உட்கார்ந்து படிக்கும் இடம். வாஸ்துப்படி வட மேற்கு மூலை படிப்பதற்கும், புத்தகப் பையை வைப்பதற்கும் ஏற்றதல்ல என்பதோ, படிக்கும் போது தெற்குப் பார்த்து உட்காரக் கூடாது என்பதோ முருகேசுக்குத் தெரியாது. தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது ?. ஒரே அறையைக் கொண்ட அந்தக் குடிசையில், வீட்டுக்கு அவசியமான பண்ட பாத்திரங்களை அடுக்கி வைத்த பின், அவனுக்கு படிப்பதற்காகக் கிடைத்திருக்கும் ஒரே மூலை அந்த வடமேற்கு மூலைதான். அது மட்டுமின்றி, மழைக்காலத்தில் மஞ்சள் நிற தார்ப்பாலின் துணியால் ஒட்டுப் போட்டிருந்த அந்தக் குடிசையில் ஒழுகாத ஒரே இடம் அந்த வடமேற்கு மூல?!
??தான்.
அந்த வடமேற்கு மூலைதான் முருகேசுக்கு போதி மரம். அங்கே உட்கார்ந்து படிப்பவன், தூக்கம் வரும் போது அங்கேயே காலை நீட்டி படுத்து விடுவான். காலை ஐந்து மணிக்கே எழுந்து அப்பா அம்மா கழுவி வைத்த காய்களையெல்லாம் பிரித்து கூடைகளில் அடுக்கி வைப்பான். பிறகு எல்லா கூடைகளையும் வண்டியில் ஏற்றி வைத்து விட்டு குளிக்கச் செல்வான். ஏழு மணிக்கு அம்மாவும் அப்பாவும் காய் வண்டியைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்றதும் சிறிது நேரம் புத்தகத்தை எடுத்து படிப்பான். எட்டு மணிக்கு இரவு சமைத்து மீதமான பழையதை மோர் ஊற்றி சுண்ட வைத்த குழம்போ, ஊறுகாயோ தொட்டு சாப்பிடுவான். எட்டரை மணிக்கு புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தால் ஒன்பதரை மணிக்கு பள்ளியில் இருப்பான்.
அவன் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளியில் தரப்படும் மதிய உணவுதான் அவனுக்கு அன்றைய நாளின் சத்தான பிரதான உணவு. மாலை 4 மணிக்கு பள்ளி விட்டவுடன் அங்கேயே மரத்தடியில் உட்கார்ந்து 6 மணி வரை படித்து விட்டு வீட்டுக்கு செல்வான். 8 மணிக்கு மேல், அம்மா சூடாக சமைத்ததை சாப்பிட்டு மீண்டும் பத்து மணி வரை தன் வடமேற்கு மூலையில் உட்கார்ந்து படிப்பான். தூக்கம் வந்தவுடன் அங்கேயே காலை நீட்டி படுத்து விடுவான். இந்தத் தினசரி அட்டவணை கிட்டத்தட்ட மாற்றம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. வசதிகள் இல்லாததால், முருகேசுக்கு வேறு பொழுதுபோக்குகள் எதுவும் கிடையாது.
வசதிகள் இருந்தும், நேரம் இல்லாததால் பிரகதீஷக்கும் எந்த பொழுது போக்குகளும் கிடையாது. காலை 5 மணிக்கு எழுந்து 6 லிருந்து 8 வரை டியூஷன். வீட்டுக்கு வந்து குளித்து சாப்பிட்டவுடன் 9 மணிக்கு பள்ளி. பள்ளி முடிந்து மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ். இரவு 7 முதல் 8 வரை படிப்பு மற்றும் ஹோம்வோர்க். இரவு 8 மணி முதல் 9 வரை இரவு சாப்பாடு கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 9 மணி முதல் 10 வரை படிப்பு. இடையில் பள்ளியில் மாதத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள், சிறப்புத் தேர்வுகள் என்று இடைவிடாமல் வந்து கொண்டே இருந்ததால், ஒன்பது மாதங்கள் போனது கூடத் தெரியவில்லை. இப்போதுதான் பள்ளியில் சேர்ந்தது போல இருந்தது. இதோ ! நாளையிலிருந்து பிளஸ் 2 வின் இறுதித் தேர்வும் ஆரம்பம் ஆகிவிட்டது.
மறு நாள் அதிகாலையில் இருந்தே அந்த வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சொக்கலிங்கம் காலை ஆறு மணிக்கு எழுந்து மகனையும் எழுப்பிவிட்டார். அவர் மனைவி ஐந்து மணிக்கே எழுந்து மகனுக்காக சமைக்க ஆரம்பித்து விட்டார். பிரகதீஷ் படித்ததை எல்லாம் ஒரு முறை ரிகர்சல் பார்த்து விட்டு குளித்து தயாராவதற்குள் யூனிஃபார்ம், ஹால் டிக்கெட், புத்தகப்பை, புத்தகம், பென்சில் பாக்ஸ் எல்லாவற்றையும் சொக்கலிங்கம் தயார் செய்து வைத்திருந்தார். பரீட்சைக்கென்றே கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோயிலில் பூஜை செய்யப்பட்டிருந்த மூன்று பேனாக்களும், ஜியோமெட்ரி பாக்ஸும், குங்குமப் பொட்டலமும் புத்தகப்பையில் ஏற்கனவே அடக்கம். பூஜை செய்து, சாமி கும்பிட்டு, நல்ல நேரம் பார்த்து எட்டரை மணிக்கே மகனை வண்டியில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினார். பத்து மணிக்குதான் தேர்வு ஆரம்பம் என்றாலும் ஒன்பத?!
? மணிக்கு மேல் நல்ல நேரம் இல்லையே !
முருகேசு வழக்கம் போல ஐந்து மணிக்கே எழுந்து அப்பா அம்மா கழுவி வைத்த காய்களையெல்லாம் கூடைகளில் அடுக்கி வைத்தான். எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றி, வைக்க வேண்டிய இடத்தில் வைத்து விட்டு குளிக்கச் சென்றான். ஏழு மணிக்கு அம்மாவும் அப்பாவும் காய் வண்டியைத் தள்ளிக் கொண்டு வெளியே சென்றதும் சிறிது நேரம் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தான். எட்டு மணிக்கு பழையதை மோர் ஊற்றி ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட்டான். எட்டரை மணிக்கு பேனாவுக்கு இங்க் நிரப்பிக் கொண்டு, புத்தகப் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். அவன் கிளம்புவதற்கு நல்ல நேரம் எல்லாம் ஒரு கணக்கில்லை. பத்து மணிக்குத்தான் தேர்வு என்றாலும், எட்டரைக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தால்தான் ஒன்பதரை மணிக்கு பள்ளிக்குப் போய் சேர முடியும்.
தேர்வு முடிந்து வீட்டுக்கு வருவதற்குள் காய் விற்றுவிட்டு அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்பதால் வீட்டின் ஒரே சாவியை எதிரில் இருக்கும் அண்ணாச்சி பெட்டிக் கடையில் கொடுத்து விட்டுக் கிளம்பினான். அங்கே, பெட்டிக்கடை வாசலில் பிளாஸ்டிக் கவரில் வரிசையாக கட்டித் தொங்க விட்டிருந்த ஜெல் பேனாவை ஒரு முறை தொட்டுப் பார்த்தான். தன் பள்ளி நண்பர்கள் சிலர் அந்த பேனாவை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறான். பிசிறில்லாமல் எழுதும் அந்தப் பேனா இருந்தால் தேர்வுக்கு நன்றாக இருக்கும் என்று எப்போதுமே நினைத்ததுண்டு. ஆனால் அந்த நாற்பது ரூபாய் பேனாவை வாங்கித்தரச் சொல்லி அம்மா அப்பாவை எப்போதுமே அவன் கேட்டதில்லை. கடைக்கு அவ்வப்போது வரும்போது அந்தப் பேனாவை வெறுமனே தொட்டுப் பார்த்துக் கொள்வதோடு சரி.
கடையை விட்டு வெளியே இறங்கும் போது கடைக்கார அண்ணாச்சி “என்ன முருகேசு ? இன்னக்கி பரீட்சையா ? “ என்றவர் அங்கே தொங்கிக் கொண்டிருந்த பேனாவில் ஒன்றை உருவி “ இந்தா நல்லா பரீட்சை எழுது ! என்று சொல்லி முருகேசு மறுப்பதற்குள் அவன் கையில் அந்தப் பேனாவைத் திணித்து விட்டு தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்.
அந்த ஏழைகளின் உலகம் அப்படித்தான். அந்த உலகத்தில் சகமனிதர்களின் மீதான கனிவுக்கும் கரிசனத்திற்கும் எப்போதும் பஞ்சமேயில்லை.
அந்தப் பேனா திடீரென கிடைத்த மகிழ்ச்சியோ அல்லது அது ஏற்படுத்திய மன நிறைவோ தெரியவில்லை, முருகேசுக்கு எல்லா தேர்வுகளையுமே எதிர்பார்த்ததைவிட நன்றாகவே எழுதியதாகப் பட்டது. அதே போல், சொக்கலிங்கத்திற்கும் கூட தன் மகன் பிரகதீஷ் அவர் எதிர்பார்த்ததைவிட நன்றாக எழுதியிருப்பதாகத்தான் பட்டது. அப்படித்தான் அவன் சொன்னான். இரண்டு மாதம் கழித்து ரிசல்ட் வரும் நாள் வரை அதை நம்பித்தான் ஆகவேண்டும்.
அவர் பற்றத்தோடும், ஆவலோடும் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. பரவாயில்லை ! பிரகதீஷ் ஏமாற்றவில்லை. 1080 மதிப்பெண்கள் பெற்று பாஸாகியிருந்தான். அது சொக்கலிங்கத்தின் எதிர்பார்ப்பை விட கிட்டத்தட்ட 50 மதிப்பெண்கள் அதிகம் என்பதால், மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார். அதில் தன்னுடைய முயற்சியையும் பங்களிப்பையும் சற்று பின்னோக்கிப் பார்த்தார். வாஸ்துப்படி சரியான இடத்தை தேர்ந்தெடுத்து வீட்டைக் கட்டியது, தன் மகனுடய படிக்கும் அறையை வாஸ்துப்படி அமைத்தது, ராசியில்லாத கறுப்புப் பையை ஒழித்துக் கட்டியது, சரஸ்வதி கோவிலில் பூஜை செய்த பேனாக்களை தேர்வுக்காகத் தயார் செய்தது என்று எல்லாமே வாஸ்துப்படியும், ராசிப்படியும் நம்பிக்கையின்படியும் சரியாக இருந்ததுதான் மகனின் வெற்றிக்குக் காரணம் என்று அவர் முழுமையாக நம்பினார்.
அன்று பகல் முழுவதும் சொக்கலிங்கம் தன் சந்தோஷ சாம்ராஜ்யத்தில் இருந்தும் தன் வாஸ்து உலகத்திலிருந்தும் வெளியே வராததால் தெரு முனையில் இருந்த குடிசை வீட்டின் பரபரப்பு அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் மாலையில் தொலைக்காட்சியை பார்த்த போது கிழிந்த மஞ்சள் நிற தார்ப்பாலின் துணியால் கூரையில் ஒட்டுப் போட்டிருந்த அந்த குடிசை வீட்டைத் தொலைக்காட்சியில் பார்த்த உடனேயே அடையாளம் கண்டு கொண்டார்.
அந்தக் குடிசையில் இருந்த முருகேசு என்ற மாணவன் பிளஸ் 2 வில் 1188 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே மூன்றாவதாக தேர்ச்சி பெற்றிருந்ததை எல்லா தொலைக்காட்சி சானல்களும் மாற்றி மாற்றி ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை, சொக்கலிங்கம் கண்மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
மெலிந்த தேகம், கறுத்த உடலுடன் நின்று கொண்டிருந்த முருகேசுவின் பின் புறத்தில் வாஸ்துவுக்கு சற்றும் ஒத்துவராத வடமேற்கு மூலையில் ஆணியில் தொங்கிக் கொண்டிருந்தது சொக்கலிங்கம் தூக்கியெறிந்த அந்த ராசியில்லாத கறுப்பு நிற புத்தகப்பை.