வாழப்பழகிவிட்டாள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 8,009 
 
 

ஏனம்மா என்னை இலண்டன் அனுப்பினீங்க சொல்லுங்கம்மா!எனக்கு இங்க பிடிக்கல்ல அம்மா நான் உங்களுடனும் அம்மம்மாவுடனும் தாத்தாவுடனும் அப்பம்மாவுடனும் நல்லா ஜாலியா இருந்தேன்.இங்க ஒரே போர் அம்மா.எனக்கு பிடிக்கல்ல அம்மா என்னை கூட்டிட்டு போங்கம்மா பிளீஸ் ….எனகண்களில் நீர் முட்ட ஸ்கைப்பில் விம்மினாள் ஆராதனா.

தாயுள்ளம் தவியாய் தவித்தது.இந்த மூன்று வயதுக்குழந்தைக்கு எதை எப்படிச் சொல்வேன்.இறுக்கத்துக்குப் பழக்கப்படுத்திவரும் மனதுடன் இங்க பாரு ஆரா…

நீ மாமாவுடனும் அத்தையுடனும் இருந்து நல்லா படி நான் கெதியில வேலையெல்லாம் முடிச்சுட்டு எல்லாரையும் கூட்டிட்டு வந்திடுவன்.என் செல்லக் குட்டியில்ல..

நீங்க பொய் சொல்லாதீங்க!

மாமா சொன்னாங்க பொய்சொல்வது பெரிய தப்பாம்.நீங்க ரீச்சர் பொய்சொன்னா பெரிய….தப்பு என்று கண்களை அகல விரித்து ஆசைகாட்டினாள் ஆரா.

குழந்தையின் அகல விழியை பார்த்த போது ஆசையாக அள்ளி கைக்குள் அடக்கி முத்தமழை பொழிய தாயுள்ளம் ஏங்கியது.ஆனால் விடைதெரியா வாழ்வியல் விழிபிதுங்க வைத்தது.

சுருதி பேச்சை மாற்றினாள்.

சரி … உங்க தோழி கிறிஸ்டினா எப்படி இருக்கிறா?

குழந்தைக்கே உரிய தன்மையில் அம்மா …அவ என்னை பேர்த்டேய்க்கு கூப்பிட்டிருக்கா..

நானும் போவேன் .மாமா கூட்டிட்டு போவார்.ஒரே ஜாலி…என கலகலத்தாள் ஆராதனா.

சரி குட்டி விளையாடுங்க மாமாகூட பேசிட்டு கூப்பிடுகிறேன் என்றவள்,தனது தம்பியின் முகம் பார்த்து இறுகினாள்.அக்கா யோசிக்காதீங்க நாங்க இருக்கிறோம். அம்மா..என்ற ஏக்கம் அவளுக்கு அதிகமாக இருக்கு இந்த ஒரு வருடத்தில் அவளிட்ட எந்த மாற்றத்தையும் காணவில்லை.எதிலும் அவளால் ஒட்டமுடியவில்லை.அந்தக் கோழி..வண்டில்..இதைத்தான் அவள் மனம் கேட்குது.சரியாயிடும் பார்ப்போம்,

அப்பா அம்மா Ok தானே என்றவன்;எந்தப் பதிலும் அக்காவிடம் இருந்து வராது என்று தெரிந்து சரி பார்த்துக்கோ என்று தொடர்பை வலியுடன் துண்டித்தான்.

அம்மா கூட்டிட்டு போங்க ..என்ற வார்த்தை காதுகளில் இறைந்து கொண்டே இருந்தது.இவளைப்போல தானே இருபத்தைந்து வயதுப் பெண் நானும் அவள் அப்பாவிடம் அடம் பிடித்தேன். நிரஞ்சன் பொறு பொறு என்று சமாதனப்படுத்திய நாட்களை யோசித்துப்பார்க்கிறாள்.

நிரஞ்சன் ,சுருதி இருவரும் பக்கத்து வீட்டு குடும்ப நண்பர்கள்.திருகோணமலையில் சம்பூர் என்ற கிராமத்தில் வாழ்ந்தார்கள்.வயலும் பசுமையும் இயற்கையும்,இயல்பான மனித உள்ளங்களும் கொண்ட வாழ்வியலில் வண்ணப்பறவைகளாக பறந்தனர்.நிரஞ்சனின் அப்பா அரச பாடசாலையில் அதிபராக இருந்தார்.இரண்டு அண்ணன்கள் அவனுக்கு.மூவருமே படிப்பில் கெட்டிக்காரன்கள்.சுருதியின் அப்பாவும் அரச திணைக்களம் ஒன்றில் லிகிதராக வேலை செய்தார்.இவளுக்கு ஒரு தம்பி உண்டு.இரு குடும்பமும் உறவுக்காரர் போலவே உறவுடன் வாழ்ந்தனர். காலோட்டத்தில் நிரஞ்சனும் சுருதியும் காதலர்களாக கையொப்பம் இட்டபோது இருவர் மனதிலும் ஒரு பயம், கள்ளத்தனம் தொற்றிக்கொண்டது.அப்போது உயர்தரம் படித்துக்கொண்டிருந்தனர்.

நிரஞ்சன் எனக்கு பயமா இருக்கு வீட்ட தெரிஞ்சா…

ஏய் லூசு அப்படியெல்லாம் ஆகாது நானும் அண்ணாக்கள் போல கெம்பஸ் போய்டுவன்.அதுக்குபிறகு டொக்டர் ! மாமனாருக்கு கசக்குமா?

இப்படிச்சொல்லி சமாதானம் செய்வான்.

ஆனால் எதற்கும் காத்திருந்து பதில் சொல்ல காலத்துக்கு நேரமில்லை போலும்!

ஐயோ….ஐயோ…என்று செல்லா மாமா வீட்டில் அழுகுரல் கேட்டு பதறியடிச்சுக்கொண்டு ஒடியது இவள் குடும்பம்.விறாந்தையில் இருந்துகொண்டு ஆண் என்றதை மறந்து தந்தையாக நிரஞ்சனின் அப்பா குலுங்கி குலுங்கி அழுதார்.ஒன்றுமே புரியாது உள்ளே சென்ற சுருதி குடும்பம்;

அண்ணன் என்ன நடந்தது ?என்று பதற்றத்துடன் கேட்டார் அப்பா.

ஐயோ சுகந்தனையும்,மாறனையும் இன்னும் பத்து பதினைந்து பெடியன்களை ஆமிக்காரன்கள் கெம்பசுக்குள் புகுந்து கூட்டிட்டு போய்ற்றாங்கள்.இப்பதான் போன் வந்தது !ஐயோ என்ன செய்ய..

ஓரத்தில் அடியற்றமரமாக சாய்திருந்தார் ராணி மாமி .

சரி யாழ்ப்பாணத்துக்கு போவோம். இங்க இருந்து ஒன்றும் செய்யமுடியாது.என்று அப்பா சமாதானப்படுத்தினார்.அன்றே இரு குடும்பத்தினரின் பெற்றோர்களும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட நிரஞ்சனுக்கு சுருதி ஆறுதலாக இருந்தாள்.

ஒன்றும் நடக்காது விசாரிச்சுப்போட்டு விட்டுவிடுவாங்கள்.அவங்கட அடையாளட்டை திருகோணமலைதானே..அதனால் பயமில்லை! என்றாள்.

ஆனால் நிரஞ்சன் இல்ல சுரு அவங்கள் விடமாட்டாங்கள் என்றான் .

ஏதோ அழுத்தமான குரலுடன் .

ஏன் அவங்க மருத்துவமாணவர்கள் தானே அதிலும் மூத்த அண்ணா கடைசி வருசம்,மற்றவர் மூன்றாம் வருசம் எந்த தொடர்பும் இல்ல.. பின்னர் ஏன் விடமாட்டாங்கள்?ஐயோ ….சொல்லுங்க என்றால் பீதியுடன்.

சுரு அண்ணாக்கள் வீட்டுக்கு வரும்போது ஏதோ இரகசியமா பேசுவார்கள்.நான் கேட்டால்

படி படி என்று மழுப்பிவிடுவார்கள்.ஆனால் ஒருமுறை நான் என்ன இரண்டு பேரும் மறைக்கிறீங்க என்ற போது.நாங்க தமிழன் தமிழன் என்று சொன்னால் காணாது அதை நிருபிக்க வேண்டும்.அதுதான் பேசுறோம்.

என்றார்கள் .

அந்த நிமிசம் புரிஞ்சுது இவங்களுக்கு இயக்கத்துடன் தொடர்பு இருக்கு என்று ஆனால் அவர்கள் சிந்தனையிலும் நிறைய உண்மை உண்டு என்று விட்டிட்டன்.இப்ப இவங்கள் ஏதோ செய்து மாட்டிட்டாங்கள்.

என்றான் பாசமும் வேதனையும் கலந்த குரலுடன்.

சுருதிக்கு திக் என்றது .முதலே மாமாட்ட சொல்லியிருக்கலேமே…

இப்ப இப்படி நடந்திருக்காதே என்றாள் கோவத்துடன்.!

என்னத்த ….?

என் அண்ணன்கள் உண்மையான தமிழ்பால் குடிச்சவங்க.மற்றவங்க போல கோழை இல்ல. எல்லோரும் போல இந்த சிங்களவங்கள்ன்ற செருப்பைத் துடச்சி வாழ்ற வாழ்க்கையை அவங்களால் வாழமுடியாது.ஏன் என்னாலும் முடியாது.அப்படி எத்தனையோ தமிழர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்குத் தேவை தமது இனத்துக்கான மதிப்பும் சுயமும் தான்.

அவனது கண்களில் பொறித்துச்சிதறிய வீர உணர்வை பாரத்தபோது அவனுக்காக ஆயுளுக்கும் எந்த துன்பத்தையும் அனுபவிக்கலாம் என்றது அவள் மனம்.

இரண்டு நாட்களின் இடைவெளில் …

இன்னும் வலிக்கிறது அந்த நாளின் கொடுரம்.

யன்னல் வெளியே வெறித்துப்பார்த்தாள் சுருதி உயரமான பனைமரங்கள் ஒய்யாரமாக காட்சியளித்தன.இந்த ஒய்யார மரங்களும் அன்று கண்ணீர் விட்டிருக்குமோ!

எப்படி கொடுரமாக அந்த வேலையை செய்தார்கள்.மொத்தமாக பதினைந்து மருத்துவ பீட மானவர்களையும் பனை மரங்களில் கட்டிவைத்து உயிருடன் எரித்தார்கள் அந்த காட்டுமிராண்டிகள்.யாரோ ஒருவர் தொலைபேசியில் நிரஞ்சனுக்கு அறிவித்தார்.நிரஞ்சன் ஒரு துளி கண்ணீரும் விடவில்லை.இன்றும் அந்த முகம் மனத்திரையில் இருக்கிறது.ஐயோ நிரஞ்சா என்று வாய்விட்டு அழுதாள் சுருதி.ஆனால் ஏன் இப்படி இருக்கிறீங்க சொல்லுங்க சொல்லுங்க…என்ற போது

எத்தனை பேரை இப்படி எரிப்பார்கள் ?என்றான் வெறியுடன்.

அந்தக்காதலன் எங்கே?இந்த வீரன் யார்?

ஒரு மனிதனுக்குள் எத்தனை முகங்கள்!

இருவருக்கும் எண்ணங்கள் ரீதியாக ஒரு இடைவெளி வந்ததாக உணர்ந்தாள் சுருதி.

அவள் நினைத்த மாதிரியே யாவும் போராட்டமாக மாறியது.

கருகிய உருவங்களுக்கு இரு குடும்பங்கள் கண்ணீரை தாரைவார்த்து விட்டு உணர்விழந்த பெற்றோர்களாக வந்தனர்.ராணிமாமி வீட்டில் சிரிப்பு சந்தோஷம் எதுவுமே ஏன் விளக்கு கூட எரிவதில்லை. ஒரு வருட காலத்தில் செல்லாமாமா மாரடைப்பில் மகன்மாரைத்தேடிச்செல்ல ராணிமாமி பேசுவதை நிறுத்திக்கொண்டார்.நிரஞ்சனிடம் எந்த காதல் உணர்வையும் எதிர்பார்க்க முடியவில்லை.உயர்தரப்பரீட்சையில் அவன்சித்தியடையவில்லை.ஆனால் ஏதோ தீவிரமாக யோசனையில் இருந்தான்.

இவளுடன் கண்களால் கதைபேசியவன் எங்கோ தொலைந்து போனான்.அந்த விழிகளை இப்போது காதலுடன் பார்க்கத்தோன்றவில்லை சுருதிக்கு..

இந்தச் சூழலில் காதல் தேவைப்படவில்லை.அமைதி மட்டுமே தேவைப்பட்டது முழு மனதுக்கும்.ஆனால் அதற்கான வாய்ப்பு இந்தப்பிறப்பில் இல்லையென்று இப்ப புரிறது.

இந்தச்சூழலில் சுருதியின் அப்பா, தம்பி குமரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்க போராடினார்.இனியும் ஒரு இழப்பை அவர்மனம் ஏற்கத்தயாரில்லை.அதனைப்போலவே நிரஞ்சனையும் தன் மகனாகவே கருதினார்.எனவே இருவரையும் அனுப்புவதற்கான தம் நிலபுலன்களை விற்றார்.அதற்காக பாஸ்போட் எடுக்க கொழும்பு போகனும்.எனவே நிரஞ்சனை கூப்பிட்டு இப்ப சரியான பிரச்சனை.இனி நீங்கள் இங்க இருக்க முடியாதுது.ஆமி சுத்திவளைப்பு,செக்கிங் கூடிற்று.அதுதான் நீங்க இரண்டு பேரும் முதல் இலண்டன் போங்க..

நாங்க அம்மாவைப்பார்போம்.பிறகு சுருதியை கூப்பிடுங்க!

இப்படி நீண்ட கற்பனையில் சொல்லிக்கொண்டிருந்தார்.நிஜத்தின் வலிமை தெரியாது.

மாமா நான் போகல்ல!

குமரனை அனுப்புவோம்.பிறகு பார்ப்போம்.

இருக்கிற காசை எல்லாம் ஏசன்சிக்கு கொடுத்துப்போட்டு என்ன செய்றது?

இவனை அனுப்புங்க…என்றான் பீடிகையுடன்.

ஏன்?

என்றவருக்கு இன்னும் கொஞ்சக்காலம் அம்மாவுடன் இருந்தால் அம்மா மாறிடுவா

அப்போது எனக்கும் நிம்மதியாக இருக்கும் என்று சாக்குப்போக்கு சொன்னான்.

அப்பா நம்பினார்.

ஆனால் சுருதியால் நம்பமுடியவில்லை.ஏனென்றால் அன்பினால் அவனை அணுவணுவாக அவதானித்துகொண்டிருப்பவள்.

குமரனும் எண்ணற்ற சிரமங்களிடையே இலண்டன் சென்றான்.

ஏதோ விடிவு வருவதாக இவள் வீட்டில் உணரத்தொடங்கினார்கள்.ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லையென நிரஞ்சனின் செயல் அமைந்தது.அதிகாலைப்பொழுதில் இராணுவச்சைற்றிவளைப்பு சம்பூர் முழுவதும்.தமிழர் மனதில் தண்ணீர் இல்லை !சின்னச்சேட்ட போடு ,ஸ்கூல் அடையாள அட்டையை எடு ,தலை இழுக்காத இப்படி ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் கழுகு விழியில் தமிழனாக சிக்கக்கூடாது என்று போராடினர்.

தலையாட்டி முன் ஆண்கள் தனியே பெண்கள் தனியாக நின்ற போது எந்த வேறுபாடுமின்றி ஒவ்வொருவரும் செத்துப்பிழைத்தனர்.நிரஞ்சன் தலையாட்டி முன்னே..தூரத்தில் தெரிந்த அவன் உருவத்தை கண்களுக்குள் அடக்கி ஏட்டிக்கு போட்டியாக பதைபதைக்கும் மனதை அடக்க முடியாமல் தவித்தாள் ஒரு தாயாக.

அவன் முதுகைப்பிடித்து தள்ளி ஓயாட்ட கொட்டியா …ஓயாட்ட கொட்டியா..என பின்னே தள்ளிவிட்டான் ஒரு ஆமிக்காரன்.ஐயோ என்றது மனம்.ஆனால் எதுவும் நினைத்த மாதிரி நடக்கவில்லை.சிலரை விசாரனை என்று அழைத்துச்சென்றனர். அழுது புலம்பிய உறவுகளுக்கு நாளைக்கு வீட்டுக்கு வருவார்கள் என்று வாக்கு கொடுத்து விட்டு வானரங்கள் மறைந்து விட்டன.இன்றும் வரவில்லை அந்த உறவுகள்.அது தான் கடைசி சுற்றிவளைப்பு.பயத்தின் காரணமாக குடும்பம் குடும்பமாக இடப்பெயர்வு ஆரம்பித்தது.

நிரஞ்சனின் நலன் கருதி எங்கள் வீட்டினரும் யாழ்ப்பாணம் வந்தனர்.

அங்கு ஒரு வாடகை வீட்டில் வாழ்வியலுக்கு உயிர்ப்பு கொடுக்க அப்பாவும் அம்மாவும் போராடினர்.தம்பி இனி நீங்களும் அம்மாவும் இங்கேயே இருங்க.

எப்படியும் நீங்கள் என் வீட்டில் ஒருத்தர் தானே என மறைமுமாக மகளின் மனதுக்கு பதில் சொன்னார்.ஆனால் வானத்துக்கு பறக்குமளவிற்கு இவளுக்கு சிறகு விரியவில்லை.நிரஞ்சனும் பார்வையைக்கூட இவள் பக்கம் செலுத்தவில்லை.அதே நேரம் அப்பா வார்த்தைக்கு எதிர்ப்பும் சொல்லவில்லை. அதனைத்தொடர்ந்த நாட்களில் நிரஞ்சன் வெளியில் தங்க ஆரம்பித்தான்.கேள்வி கேட்ட அப்பாவிடம் இல்ல மாமா… சுருதி இருக்கும் போது…என்று இழுத்த போது அப்பாவும் அப்பாவியாக நம்பினார்.

திடீரென ஒருநாள் நிரஞ்சனிடம் பதற்றம் தெரிந்தது.சுருதியை தனியாக அழைத்தவன் நீ தைரியசாளி எல்லோரையும் பார்த்துக்கோ உயிருடன் இருந்தால் உன்னைத்தேடி வருவன்.என்றவன் இதமாக நெற்றியில் முத்தமிட்டு பனைவடலிக்குள் மறைந்திருந்த மோட்டார்சைக்கிள் காரனுடன் மாயமனான்.

அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை சுருதியால்.ஆனால் அவள் எதை ஊகித்தாலோ அது சரியாக நடந்துள்ளது.அப்பா அம்மாவிடம் சொன்னபோது வாய்விட்டு தனது காதலுக்காகவும் சேர்த்து அழுதாள்.ராணிமாமி ஓடிவந்து இவளை அணைத்து வாழப்பழகிக்கோ என்று சொன்னவார்த்தைதான் இன்றும் என்னை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.தொடர்ந்து இழப்புக்களைச் சந்தித்து மௌனமான ராணிமாமி ஏறக்குறைய இருவருடங்களின் பின்னர் பேசிய வார்த்தை வாழப்பழகிக்கொள்.

தனித்து விட்ட உணர்வுடன் தவியாய் தவித்த மனதுடன் வயதான மூன்று உள்ளங்களின் மகிழ்ச்சிக்காக சிரிக்க கற்றுக்கொண்டாள்.காலவோட்டத்தில் பயிற்றப்பட்ட ஆசிரியையாக சேவையில் ஈடுபடத்தொடங்குகையில் நேரத்தின் கணம் குறைவதாக இருந்தது.ஆனால் இரவு என்பது எமனைப்போல பயமுறுத்தியது.வெறித்த பார்வையில் இழந்த உள்ளங்களை தேடுவாள்.நடுவே சிரிக்கும் நிரஞ்சன் இவளை விசும்ப வைப்பான்.ஆனாலும் வாழப்பழகினாள்.

நடுச்சாமம் கட்டிய நாய் கழுத்தை அறுப்பது போல குரைத்தது.வெளியில இரவு எட்டுமணிக்குப் பிறகு கடந்த நான்கு வருடமாக யாரும் நடமாடுவதில்லை.வேற்றுலகமாக இரவு நீளும்.விடியும் போது அங்க பிரச்சனை,இங்க சுற்றிவளைப்பு,இங்க குண்டுவெடிப்பு என்ற செய்தி பரவும். ஆனால் வழமையான நிகழ்வில் ஒன்றாக மக்களுக்கும் மாறிவிட்டது.

ஏன் இன்றைக்கு இப்படி குரைக்குது.வெளியே சென்று பார்க்கவும் திராணியில்ல.அதே வேளை விழித்துக்கொண்ட அப்பா வாயில் கைவைத்து அமைதியாக இருக்கும்படி சைகைசெய்தார்.இப்போது யாவருமே உறைந்திருந்தோம்.வீட்டின் பின்புறம் சரு என்று அழைத்த குரல் நிச்சயமாக நிரஞ்சனுடையதே…

இப்போதும் வயிற்றில் ஒரு வலி பரவுகிறதே…

அப்பா நிரஞ்சன் என்றாள்.சந்தேகத்துடன் முன்னே சென்றவர் யாரு ?என்றார் !

மாமா நான் என்றபோதும் துரோகிகள் உலகில் நிஜத்தை நம்ப மறுத்தார்.நான் என்றால்? நிரஞ்சன் என்றான் !

இதற்குமேல் அவனது குரலை அவளால் சந்தேகிக்க முடியவில்லை

பாய்ந்து சென்று கதவைத்திறந்தாள்.

உள்ளே வந்தவனை இறுக்க் கட்டிக்கொண்டாள்.பெரியோர்கள் கண்ணீரால் ஆசிர் வதித்தனர்.எப்படி நிரஞ்சாக்குட்டி இருக்கிறாய் என்று ராணி மாமி மகனை பார்த்து கேட்டபோது நிலமை உணர்ந்து பிரியமனமின்றி பிரிந்தாள்.

பின்பு நேரம் கிடைக்கும் போது மறைமுகமாக இவர்களை பார்க்க வருவான்.இதனால் நிரஞ்சனுக்கு பிடித்த உணவே வீட்டில் சமையலாக மாறியது. சில வேளை மூன்று மாதகாலங்களுக்கு அதிகமாகவும் அவனை காணும் வரம் கிடைக்காது.ஆனாலும் அந்த சின்ன வீட்டில் சிறு ஒளி பரவியது.

இவ்வாறு ஒருநாள் வந்தவன் நிலமை கைமீறுவதாக கூறினான்.ஆனாலும் முடிவு வந்துவிடுமென்று நம்பினான்.இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினாள் சுருதி.

இல்ல கொஞ்சம் பொறு கிட்ட வந்திட்டம்.இனி நல்லகாலந்தான் என்றான்.ஆனால் திட்டமிட்ட துரோகங்கள் யாவற்றையும் தலைகீழாக மாற்றியது. திடீர் சண்டை உக்கிரம்,சமாதான போலி வாக்குமூலம் என எது நடக்கிறது என்பதை உணராதவர்களாக உறவுகள் துன்பப்பட்டனர்.இந்த வேளை ஒரு நாள் வீட்டுக்கு வந்தவன் திடீரென தனது தாயின் கழுத்தில் தொங்கிய சங்கிலியை கழட்டி சுருதி கழுத்தில் போட்டு இவள் என்மனைவி என்றான்.

யாருமே அதிர்ச்சியடையவில்லை சுருதியைத்தவிர.இது தான் எனது திருமணமா?சிந்திக்கும் முன்பே பெரியவர்கள் வாழ்த்துமழையுடன் ஒதுங்கிக்னொண்டனர்.

அவனது மார்பில் தலைவைத்து தூங்கிய அந்த மூன்று மணிநேரங்கள் இனியும் கிடைக்குமா?

விருட்டென கிணற்றடிக்கு சென்றவள் தண்ணீரை அள்ளி முகத்தில் வீசி அடித்தாள்.ஒற்றைப்பறவையாக மாமரத்தில் இருந்த குயிலின் குரல் இவளைப்போல ஏக்கத்தில் குரல் எழுப்புவதாக தோன்றியது.

பிள்ள என்ன இங்க நிற்கிறாய்.அப்பா கண்ணாடி தேடுறார் என்றாள் ராணிமாமி.

ஓ…வரேன் மாமி என்றவள் விருட்டென நடந்தாள்.அவளது முதுகை வெறித்துப்பார்த்த ராணிமாமி இந்த கொடுமைக்குச் சரி ஒரு விடிவு காட்ட மாட்டியா கோணேசா என்றாள் வானத்தைப்பார்த்து.

உள்ளே சென்று அப்பாவின் கண்ணாடியை எடுத்துக்கொடுக்கும் போது பிள்ள ஆரா குட்டி எப்படி கஷ்டப்படுகிறாள்.ஐந்தறிவுடைய மிருகங்களுக்கே தாய்ப்பாசம் தேவையாக இருக்கும் போது அந்த பச்சமண்ணுக்கு

கொஞ்சம் யோசி…

என்றார் வெளியே முட்டிவந்த அழுகையை அடக்கி.பதிலேதும் சொல்லாமல் அறைக்குள் புகுந்தாள் சுருதி.

மீண்டும் அவனது வாசம் நாசியில் பரவுவது போல…

கதவைச்சாத்திவிட்டு ஓவென அழுதாள் .வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பழகிப்போச்சு.எப்போது மகளுடன் பேசுவாளோ அன்று இந்த கொடூரத்தை யாவரும் அனுபவிப்பர்.ஆனால் யாருக்கும் சமாதானம் செய்யத்தோன்றாது.இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் அவள் உயிருடன் வாழ்வதே அதிசயம்.இதில் அழுவது ஒன்றும் அதிகமில்லை என்று எண்ணி யாவரும் ஒவ்வொரு மூலையில் தஞ்சமாவர்.

நிரஞ்சன் என்னையும் கூட்டிட்டு போங்க என்று எப்படி கெஞ்சினேன்.ஏன் என்னை விட்டு போனீங்க?

இப்ப தனியா நம்ம பிள்ளை ..

நான்…

ஏன் விட்டிட்டு போனீங்க என்று வாய்விட்டு அழுதாள்.

அந்த ஒலியில் வெளியில் இருந்தவர்களும் துடித்தனர்.

அழுது அழுது ஓய்ந்து தரையில கிடந்து கண்மூடுகிறாள்.

ஏய் நான் போகனும் என்றான்.

ம்… போய்ற்று வாங்க என்றாள்.

ஏய் சுரு கவணமாக இரு என்றபோதுதான் அவன் சொன்ன போகனும் என்றதன் அர்த்தம் புரிந்தது.நிரஞ்சன் நான் உங்க மனைவி இனி நீங்கள் என்னை தனியாகவிட்டுப்போகமுடியாது என்றாள்.அவன் கண்களை இடுக்கிப் பார்த்தவன் என்றும் என் மனைவி நீதான்.அதுபோலதான் என் மக்களும் நாடும் என்றவன்.பதிலுக்கு காத்திராது சேட்டைபோட்டான்.அப்படியென்றால் என்னையும் கூட்டிட்டு போங்க என்று சின்னக்குழந்தையாக ஆனால் உறுதியுடன் அடம்பிடித்தாள் சுருதி.பெற்றவர்கள் என்ன சொல்வது என்று அறியாது இன்றைக்குத்தான் கலியாணம் நடந்தது அதுக்குள்ள என்றனர் ஒருமித்து.ராணிமாமி மகனின் கையைப்மிடித்து என்னடா நீ என்றாள்..

அம்மா நான் வருவேன்.உங்களுக்கு ஒரு நிம்மதிக்குத்தான் இந்த திருமணம்.அதைவிட அவள் மேல் வைத்த காதல் இந்த நாட்டிற்கு ஒப்பானது என்பதை அவள் புரியவேண்டும்.சுரு படிச்சவ புரிந்துகொள்வாள்.மனதை குழப்பாமல் தூங்குங்க

வெளிச்சம் வந்திட்டால் போவது கடிணம்.

சரி என்றவன் என்றுமில்லாதவாறு கணவனாக முத்தமிட்டு கதவை மூடினான்.

விடியப்புறம் ஐந்து மணி இருக்கும் அசந்து தூங்கியவள் கொட்டியா ..என்ற வார்த்தையில் துடித்து எழுந்தாள்.வீட்டைச்சுற்றி ஆமி ஏதோ சிங்களத்தில் கதைத்தவர்கள் ஒவ்வொருவராக விசாரிக்கத் தொடங்கினர்.சுயத்துக்கு வரமுடியாது தடுமாறுகையில் ஒரு தமிழ் குரல் இவனைத்தெரியுமா என்றது ? அந்த உருவம் கைகாட்டிய திசையில் திரும்பியவள் நிரஞ்சனின் மனைவியாக இல்லை என்றாள்.!

எல்லோரும் அதே பதிலை அளித்தனர்.பலமணிநேர சோதனை ,விசாரிப்பின் பின் அவர்கள் மாயமானர்கள்.ஓடிவந்து வீட்டின் கதவை சாத்திய நான்கு உள்ளங்களும் தலையணையால் வாயை மூடி அழுதனர்.சுருதி மயங்கியே விட்டாள்.மயக்கம் தெளிந்த போது …பைத்தியமாக இருந்த அப்பாவும் அம்மாவும் ராணிமாமியும் நிழலாக தெரிந்தனர்.

மீண்டும் அந்த உருவம்…இரத்தம் தோய்ந்த சேட்டுடன் கண் திறந்த நிலையில் என் நிரஞ்சா…

இதுக்காகவா எனக்குள் உங்களை அடையாளப்படுத்தினீங்க!.உங்க மனைவியாக எனக்கு நீங்க கொடுத்த பலம் எப்படி அவர்கள் முன் பொய் சொல்ல வைத்தது.

மூன்றுமணிநேர நமது வாழ்வு இந்த உறுதியை எனக்கு கொடுத்ததா?

உண்மையைச்சொல்லி இருந்தால் வீட்டில் உள்ள வயதானவர்கள் ஏன் உங்கள் மனைவி என்னையும் சிதைத்து இருப்பார்கள்.கல்லாக மாற்றி உங்கள் மனைவியின் கற்பை காப் பாற்றி விட்டீர்கள்.

ஆனால் நான் இனி…

பல நாட்கள் அந்த வீடு மயானமாகவே இருந்தது. ஒருமாத கால இடைவெளியில் மீண்டும் பாடசாலைக்கு செல்லத்தொடங்கினாள்.அன்று அதிகாலை திடீரென குமட்டல் ஏதோ புரிந்தது.என் நிரஞ்சன்…அம்மா ,மாமி என்று கத்திக்கொண்டு ஓடினாள்.அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்டு என்ன பிள்ளை என்றனர் பதறியபடி.

அவர்கள் கையைப்பிடித்து தனது வயிற்றில் வைத்தாள்.ஐயோ..என் பிள்ளை சாகல்ல சாகல்ல என்று கதறினாள் ராணிமாமி.

ஆனால் அம்மாவின் முகத்தில் ஒரு வித விரக்தியை உணர்ந்தாள்.ஆனால் தாயாக மாறினாள் சுருதி.அவளுடன் இணைந்து கொண்டாள் ராணிமாமி.வீட்டின் சூழல் நாளடைவில் மாறியது.சின்ன சிரிப்பின் ஒலி அலைமோதியது அந்த இல்லத்தில்.ஆனால் தாய்மைக்குரிய வயிறு மெல்ல மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பத்தில் நோட்டவிட்ட கண்களை சுருதியால் உணரமுடியவில்லை.

ஆனால் இவளது வாந்தி,சோர்வு மறைமுகமாக கேள்வி கேட்க வைத்தது.என்ன சுருதி பூச்சியோ என்றனர் சக ஆசிரியைகள்.இல்லை ஏன்? என்றாள் அப்பாவியாக

பிறகு ஏன் ஒரு மாதிரி சோர்ந்து இருக்கிறாய்

வயிறு வேற வீங்கி இருக்கு

என்றனர்.

ஐயோ நான் பிரக்னட் என்றாள் வெட்கத்துடன்.

என்ன என்றவர்களின் அதிச்சிகலந்த ஒலியில் சுதாகரித்தவள்.ஏன் என்றாள்?

எப்ப கலியாணம் நடந்தது ?

என்ற நக்கல் வார்த்தையில் குறுகிப்போனாள்.

எப்படி என்னவென்று சொல்வது.பதில் கூறாது நகர்ந்து வகுப்பறைக்குச்சென்றவள்.தாயின் விரக்திப் பார்வையின் அர்த்தம் என்ன என்று உணர்ந்தாள்.

சிறிய சந்தோஷமும் ஓடிஒழிந்துகொண்டது.வீட்டுக்கு வந்தவள் மாமியின் மடியில் தலை வைத்து அழுதாள்.ஏனம்மா சுருதிக்குட்டி

இந்த நேரத்தில் அழக்கூடாது.என்னம்மா என்றாள் தயவாக.எல்லோரும் எப்ப கலியாணம் முடிஞ்சுது என்று கேட்கிறாங்க மாமி..

நான் எப்படி…

தாயால் தாங்க முடியவில்லை .ஏன் இந்தக் கொடுரம் எங்கள் குடும்பத்துக்கு.எத்தனை கோவில்,யாருக்குமே நாங்கள் மனதாலும் தீங்கு செய்யவில்லையே…

அருகில் வந்த அப்பா வாயை மூடுங்க!

சனம் ஆயிரம் சொல்லும் அதுக்கு

தூக்கிக்கொடுத்தோமே மூன்று உயிர்களை தூக்கி கொடுத்தோமே யாருக்காக எங்களுக்காகவா?

இந்த சமூகத்துக்காக அல்லவா?

இதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு பாரதிப்பெண்ணா எழுந்து நிமிர்ந்து நில் சுருதி.உன் பிள்ளை வீரனுடையது.வீரக் குடும்ப வாரிசு.

அப்பாவைப்போல உறுதியாக உருவாக்கு என்றார்.ஏதோ உந்த விருட்டென எழுந்தவள்.முகம் கழுவி தலை வாரி பொட்டிட்டு சுருதியாக மாறினாள்.அன்றிலிருந்து எத்தனையோ வசைமொழி,குத்துக்கதைகள் எதையும் காதில் அவள் வாங்கவில்லை.தனது மகவுடன் தந்தையின் நினைவுகளை பகிர்ந்து நிம்மதியாக காலம் கழித்தாள்.

ஆராதனா பூமியைத் தொட்டபோது பெரியவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.அம்மா வாய்விட்டே சொன்னாள் நல்லகாலம் பொம்பிள்ளப்பிள்ளை.இல்லாட்டி பின்னுக்கு குழந்தை வளர வளர நெருப்பை வயிற்றில் கட்டினமாதிரித்தான் இருக்கும் என்றாள்.

நிரஞ்சனை உரிச்சு வைத்திருந்தாள் ஆராதனா.

நாளொரு வளர்ச்சி நாலும் பேசியவர்களின் வாயை அடைக்க வைத்தது.காரணம் நடு வீட்டில் நிரஞ்சனின் குடும்ப படம் தொங்கியது.வீட்டுக்கு வருகிறவர்களுக்கு இவர்தான் ஆராதனாவின் அப்பா என்பாள் ..மீதமானதை அழுகையுடன் சொல்லி முடிப்பாள் மாமி.தமது செய்கைக்கான மன்னிப்பை அன்பால் அள்ளி வழங்கினர் அயலவர்களும் ,ஆசிரியர்களும்.எதற்கும் வாழப்பழகிவிட்டாள் சுருதி.

தனது தம்பி விடுமுறைக்கு இலங்கை வந்த போது அவனது திருமணமும் நடந்து முடிந்தது.ஆனால் அக்காவின் கோலம் அவனை வாட்டியது.அப்போதுதான் கேட்டான்.

அக்கா ஆராதனாவை இலண்டன் கொண்டு போறன் ..

அவளது வாழ்க்கை சரி படிப்பு,மகிழ்ச்சி என்று நிம்மதியாக இருக்கும்.இந்த நாட்டு நிலமை மாறாது..நீ இவங்களைப்பார்ப்பியா? வேலைக்கு போவியா ?பிள்ளையை பார்ப்பியா?

அவள் வளர்ந்து அப்பா எங்க என்று கேட்டால் நாட்டுக்காக போராடினவர் இப்ப இல்ல என்று சொல்லப்போறியா?

என்று பலகேள்வி கேட்டு அவளை குழப்பினான்.யோசிக்கிறேன் என்றவள் சில மாத இடைவெளியில் ஓம் கூட்டிட்டு போ என்றாள்.பெரியவர்கள் பலகேள்வி கேட்டபோதும் என்போல் அவள் வாழ்வும் மாற வேண்டாம் என்றாள் ஒற்றையாக!

ஆனால் தம்பி வரும் நாள் கிட்டகிட்ட தவித்தாள்.தனக்கான ஒரு வேசத்தை போட்டுக்கொண்டு வீட்டில் இருப்பவரின் வாயை மூடிவிட்டாள்.

எதையுமே பலமுறை யோசிப்பவள் ஏன் இப்படி செய்கிறாள் என்று மனைவியிடம் வினாவியவரிடம்.சும்மா பேசாமல் இருங்க..

கொஞ்சம் மாறிட்டே வாராள்.சின்னவயசு கூட

கொஞ்ச நாள் போக ஒரு கலியாணத்தை கட்டிவைப்போம் என்றாள் தாய்.

ராணிமாமி விறைத்த நின்றாள்.என் பிள்ள அப்படிச்செய்ய மாட்டாள் என்றாள் கண்ணீரும் உரிமையுமாக.இங்க பாருங்க அக்கா எங்களுக்கும் எங்கட பிள்ளை சந்தோஷமாக வாழனும் என்று இருக்காதா?என்ன செய்ய உங்கள் மகனுக்கு கொடுத்துவைக்கல்ல என்றாள்.

இது எதுவுமறியாது தன் மகளையும் அவளது அன்புக்கு உரியவனின் அடையாளத்தையும் எப்படி பிரிந்து இருப்பேன் என்று புலுவாகத்துடித்தாள் சுருதி.

அந்த நாள் …

மாமாவுடன் கடைக்கு போய்ற்று வாங்க என்று தனது தம்பியின் கையில் மகளை தூக்கிக்கொடுத்தவளை அம்மா…அம்மா..என்று கையைநீட்டி தனக்கு இஷ்டமில்லை என்று சைகைகாட்டினாள் ஆராதனா.குழந்தைதானே சரியாகிவிடுவாள் என்றபோதும் தனது வீட்டை விட்டு கார் மறையத்தொடங்க மயங்கிவிழுந்தாள் சுருதி.

அம்மா சுருதி எங்க போறாள் உன் தம்பியோட சந்தோஷமாக நிம்மதியாக வளர.கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும் என்ன செய்ய?

நிரஞ்சனை விட்டு வாழப்பழகவில்லையா?

காலப்போக்கில் சரியாயிடும் என்றாள் அம்மா.

என் மகள் சந்தோஷமாக இருக்கவேண்டும் இது மட்டுமே அவளது மனதில் இருந்தது.ஆனால் வீடு முழுவதும் ஆராதனாவின் சிரிப்பும் அழுகையும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.அவளுக்கு உணவூட்டுகையில் முற்றத்தில் வந்து நிற்கும் பெட்டைக்கோழியும்.அப்பா செய்து கொடுத்த நுங்கு வண்டிலும் ஆராதனாவை ஞாபகப்படுத்தியது.கோழி,வண்டில் இரண்டுமே ஆராதனா அதிகமாக உச்சரிக்கும் வார்த்தை.ஆனால் எதுவுமே இல்லாத வெறுமையை உணர்ந்தாள்.

அம்மா ஊர்முட்டை என்று கதவைத்தட்டிய முட்டைக்காறியை பார்த்த போது வேண் டாம் இருக்கு என்றாள் அம்மா.பதிலில் திருப்தி இல்லாத முட்டைக்காரி கோழி அடையாயிற்று அதான் ..முட்டை இல்லை.வேற யார்ட்டையும் வாங்கிறீங்களா என்றாள்.

இல்ல இப்ப அவளுக்கு முட்டை ஒத்துவருதில்லை என்று பொய் சொன்னாள் அம்மா.

சரி என்றபடி நகர்ந்தாள் முட்டைக்காரி.

அம்மா குற்ற உணர்வுடன் குசினிக்குள் நுலைய

அப்பா வேண்டா வெறுப்பாக பேப்பரை புரட்டினார்.

ஆனால் ஆராதனா இலண்டன் போன இந்த ஒருமாதத்தில் ராணிமாமி பேச்சை குறைத்துக்கொண்டாள். எங்குமே வெறுமை …

ஆனாலும் அவள் நன்மைக்கே என்று சமாதனம் செய்வாள்.இரவானால் ஒட்டிக்கிடந்த அந்த பால்மனம் உயிரைக்கொள்ளும்.இந்த ஒருவருடகாலத்தில் நடைபிணமாகவே சுருதி மாறிவிட்டாள்.அவளது கோலத்தை பார்த்த தாய் செய்வதறியாது ராணிமாமிடம் ஓடினாள்.நீங்கதான் அவளுக்கு புத்திசொல்லனும் நான் என்ன செய்ய ஆசையாய் தவம் இருந்து பெத்த பிள்ள இப்படி கஷ்டப்படுவதை பார்க்கத்தோனல்ல அக்கா…

என்று வாய்விட்டு அழுதாள்.

ராணிமாமி அசையவில்லை.

கல்நெஞ்சம் பிடிச்சவ

இன்னொரு கலியாணம் கட்டப்போறாள்

ஏதோ இந்தப்பிள்ளையை தப்பா..

என்ற எண்ணற்ற வசைமொழிகளை மீண்டும் சுமக்கத்தொடங்கினாள் சுருதி.ஆனால் அவளுக்கு இப்போது வலிக்கவில்லை.

மாறாக இன்னும் எந்தன் சமூகம் விளிப்படையவில்லையே என்றுதான் யோசித்தாள்.

காலச்சக்கரம் இன்று உருண்டோடி ஆராதனாவை மூன்றுவயதுச்சிறுமியாக பேசவைக்குது.ஆனால் மனதின் வலியில் எந்த மாற்றமும் இல்லை

வரமாட்டான் என்ற நிரஞ்சனை தேடுகிறாள்.

பிரிந்த குழந்தைக்காக தவிக்கிறாள்.

எத்தனைநாள் இந்த நரகம்..

அன்று பாடசாலை விளையாட்டுப்போட்டி முடிந்து வீடு வந்துகொண்டிருந்தாள்.அதே முட்டைக்காரி.எப்படி ரீச்சரம்மா நல்லா இருக்கிறீங்களா என்றாள்.

ஓம் நீங்க ..

குட்டிக்கு முட்டையே வாங்கிறது இல்ல நீங்க..

என்றால் கேள்விக்குப்பதிலாக

இல்லம்மா அவ இங்க இல்ல இலண்டனில என் தம்பி கூட இருக்கிறா என்றாள் துயரத்தை விழுங்கிய உணர்வுடன்.

என்ன ரீச்சரம்மா அந்த சின்னப்பிள்ளையை எப்படி நீங்க பிரிஞ்சி இருக்கிறீங்க?

என் புருஷன் கோட்டைச்சந்தியில வெடிச்ச குண்டு வெடிப்பிலதான் செத்தார்.கோழி விற்க போன மனுசன் உடம்பை கொத்திப்போட்டிருந்தது குண்டு.

என் அம்மா இந்த நிற்கிறாளை இவள கூட்டிட்டு வீட்ட வா என்றா

நான்போகல்ல

சரி இந்தப்பிள்ளையை தம்பி வீட்ட விடு அவங்க பிள்ளையுடன் மூன்று நேரம் சாப்பிடும் என்றா அதையும் நான் கேட்கல்ல

நான் உயிரோடு இருக்கிறேன் என்பிள்ளையை வளர்க்கமுடியும்.இந்த பொம்பிள்ள பிள்ளையை எங்கையோ விட்டு வளர்த்தா அம்மா மாதிரி நல்லது கெட்டது சொல்லி அவங்க வளர்ப்பாங்களா?

நாயும் பூனையும் எப்படி பார்க்குது குட்டியை.நாம மனுசங்க

நான் செத்தா கூட்டிட்டு போங்க என்று முடிச்சிட்டன்.

தலையில் சம்மட்டியால் யாரோ அடித்தது போல உணர்ந்தாள் சுருதி.

நேராக முட்டைக்காரியைப்பார்த்து இன்னும் ஒருமாதத்தில் முட்டை கொண்டுவாங்க என்ற படி நிமிர்ந்த நடையுட் வீடு சென்றவள்.

தம்பியுடன் தொடர்பு கொண்டாள்.

அக்கா சொல்!

ஆராதனாவை என்னிடம் கொண்டு வந்து சேர்த்திடு என்றாள்

மறுபேச்சின்றி அதுதான் சரியான முடிவு அக்கா என்றவன்

என்றுமில்லாதவாறு தனது அக்கா தெளிவாக இருப்பதை பார்த்தவன்.இளமுறுவல் செய்தான்.

இந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த அப்பா நுங்கு வண்டிலை துடைத்தார் தனது சால்வையால்

ராணிமாமி சொன்னாள் சுருதி நீ வாழப்பழகிட்ட

படத்தில் ஒழிந்திருந்த நிரஞ்சன் நீ தைரியசாளி என்றான் மாறாத புன்னகையுடன்.

முற்றும்.

வாணமதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *