கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 3,146 
 
 

‘வாயை வைத்துக் கொண்டு சும்மா இரு !’ – என்று யாருக்குச் சொன்னார்களோ இல்லையோ… எனக்குச் சரியாய்ச் சொல்லி இருக்கிறார்கள் ! – என்பதுதான் என்னைப் பொறுத்தவரை சரி.

இல்லையென்றால் நான் ஏன் இப்படி முழி பிதுங்குகிறேன்…!!

சரி. விசயத்திற்கு வருகிறேன்.

இன்று காலை சரியாய் 10. 10. மணிக்கு ஆட்டம் தொடக்கம்.

தினமும் குளியலறையில் வசதியாய் குளிக்கும் என் மனைவி…அபிநயா…

“ஆத்துல புது தண்ணி வந்திருக்கு. குளிக்க ஆசையாய் இருக்கு. போகலாமான்னு..?” ஆர்வமாய் க் கேட்டாள்.

‘கிராமத்துக்குக் குப்பைக் காட்டில் இருந்து கொண்டு…. தன் சிவந்த பளீர் மேனியை வெளியில் கொண்டு காட்டப் போகிறேன் என்கிறாளே..! விசயம் தெரிஞ்சாலும் தெரியாது போனாலும்… அங்கே போற வர்ற குப்பைக்காட்டுப் பசங்க…. நாக்கைத் தொங்க போட்டுக்கிட்டு இக்கரையிலோ அக்கரையிலோ குளிப்பதாய்ப் பாவலாய்ப் பண்ணிக்கொண்டு பார்ப்பானுங்களே .!’ நினைக்க எனக்கு நறுக்கென்றது.

ஆனாலும்…..

‘பண்ணையார் வீட்டுப் பணக்கார மருமகள் என்கிற மரியாதையில் அப்படி எல்லாம் நடக்க மாட்டார்கள் !’ நினைப்பில்………

“சரி. போய் வா !” தலையசைத்தேன்.

வந்தது கேடு..!

போய் ஒன்றரைமணி நேரம் குளித்து விட்டுத் திரும்பியவள்… ஈரச் சேலையைக் கூட அவிழ்த்து மாற்றாமல்… ஈரம் சொட்டச் சொட்ட என் முன் வந்து….

“ஏங்க..! நம்ம தெருவுல அந்த ஏழாவது வீட்டுக் காரன் இருக்கானே ! அவன் என்ன செய்தான் தெரியுமா…?” திடீரென்று கோபமாகக் கேட்டு என் தலையில் குண்டைப் போட்டாள்.

“என்னடி செய்தான்…???!!…” பதற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டேன்.

“அவனும், அடுத்தத் தெரு ராமேசும் ஆத்துக்கு அக்கரையில் இருக்கிற வயல்வெளிகளுக்குப் போய் வந்தவனுங்க… இக்கரைக்கு வராம அரை மணி நேரமா அங்கேயே நின்னானுங்க.”

“ஐயையோ..! அப்புறம்…?” நான் பதறினேன்.

“அவனுக கண்ணுல கொள்ளிக்கட்டையை வைக்க.!! நான் அவனுகளை விடக் கில்லாடி. உடம்பைக் காட்டுவேனா…? அவனுக அந்தண்டை போற வரைக்கும் கழுத்தளவு தண்ணியிலேயே நின்னு வந்தேன்!” சொன்னாள்.

அவள் அதோடு விட்டிருக்கலாம்…தொந்தரவு வந்திருக்காது.!

‘நான் அப்பாடி !’ என்று மனசு ஆறுவதற்குள்…

“இதோ பாருங்க. அவனுங்களை நீங்க சும்மா விடக் கூடாது. போய்… என் பொண்டாட்டிக் குளிக்கிறதை நீங்க எப்படிடா பார்க்கலாம்ன்னு ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வாங்க…” சூடாக சொல்லி எனக்குள் சூட்டைக் கிளப்பினாள்.

‘பட்டப் பகல்ல நாலு பேர் போறவர்ற படித்துறையில் குளிச்சா பார்க்கத்தான் செய்வானுங்க. அதிலும்… பொம்மனாட்டி, பெரிய பண்ணைவீட்டு மருமகள் குளிக்கிறாளேன்னு சட்டு புட்டுன்னு ஆத்துல இறங்காம, போகட்டுமேன்னு நின்னு அப்புறம் கிளம்பி போயிருக்கானுக. அவனுங்க கிட்ட போய்.. எப்படி பார்க்கலாம், நிக்கலாம்ன்னு கேட்கிறதோ, சண்டை போடுறதோ எந்த விதத்துல நியாயம்…?’

இது என் மனசுல தோண……நான்…

“கிராமத்துல இதெல்லாம் சகஜம். உனக்குத்தான் தெரியுமே..இந்தப் படித்துறையில் பொம்மனாட்டிங்க குளிச்சா.. அடுத்தத் துறையில ஆம்பளைங்க.. குளிப்பாங்க. அடுத்து மாடுகள் குளிக்கும்ன்னு.. இதைப் பெரிசு பண்ணிக்கிட்டு . விட்டுத் தள்ளு..” சொன்னேன்.

“விட்டுத்தள்ளுன்னு சும்மா விடுறதாவது…? அதுக்காக ஒரு பொம்மனாட்டி குளிக்கும்போது விவஸ்த்தை இல்லாம வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கிட்டு எருமை மாதிரியா நிக்கிறது..? நீங்க அவனுங்களைப் போய் கேட்கப் போறீங்களா இல்லை…?” கடுமையாக சத்தம் போட்டு பாய்ந்தாள்.

விட்டால்….. இவளே அவர்களிடம் போய் சண்டை போடுபவள் அவ்வளவு ஆக்ரோசம், கோபம்.

இதற்கும் நான் அசரவில்லை, அசையவில்லை. மாறாக…

“ஏன்டி! ஏற்கனவே அந்த ஏழாவது வீட்டுக்காரனுக்கும் நமக்கும் சண்டை…. ஆகாது. இப்போ இதை போய் கேட்டால் வீண் சண்டைதான் வரும். பகை மேல பகை வேணாம். விட்டுத் தள்ளு. வேணும்ன்னா ஒன்னு பண்றேன். அவன் பொண்டாட்டி ஆத்துல குளிக்கும்போது இவனைப் பழிக்குப் பழி வாங்கறாப்போல நான் போய்… அரை மணி நேரத்துக்கும் ஒரு மணி நேரம் நின்னு நிதானமாய் பார்த்து வர்றேன்!” ன்னு சத்தியமா என் மனைவி மனசை சாந்தி செய்யவும், சமாதானம் செய்யவும் மட்டுமே சொன்னேன்.

மத்தபடி மனசுல எந்தவித கல்மிசனும் கிடையாது.

அதுக்கு என் மனைவி….

நான் சொல்லி முடித்த சூட்டோட சூடாய்…

“என்ன சொன்னீங்க…? ! அந்த சிறுக்கியை நீங்க வைச்சிருந்ததால்தானே அவகிட்ட சண்டை போட்டு நமக்கும் அவுங்களுக்கும் தகராறு, பகை. இன்னுமா அவ நெனப்பு உங்களுக்கு இருக்கு..?” – என்று பாய்ந்து பார்த்தாளே ஒரு பத்ரகாளி பார்வை.

அவ்வளவுதான் !! என் எண் சாண் உடம்பும் ஒரு சாணாக கூனி குறுகிப் போச்சு. !!

இப்போ சொல்லுங்க….?

‘வாயை வைச்சுக்கிட்டு சும்மா இரு’ ன்னு சொல்றது சரியா..?’ இல்லே…

‘தவளை தன் வாயால் கெடும்’ன்னு சொல்றது சரியா..? ?

என் மனைவியிடம் இருக்கும் இந்த… ஆட்டம், பாட்டம், ஆக்ரோசம் எல்லாம் அடங்க வெகு நாட்களாகும். !! அதுவரை…….????? –

என்னமோ போங்க..!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *