கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 17, 2023
பார்வையிட்டோர்: 3,455 
 

நேற்று இரவு ஒன்பது மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டவன் காலை ஆறுமணிக்குத்தான் ஊர் வந்து சேர்ந்தான்.

வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்காவது வந்து சேர வேண்டிய பிரயானம் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத தடங்கல்களால் தாமதமாகிவிட்டது.

வீட்டுக்கு வந்த அவனை தங்கையும் கணவரும் வரவேற்றார்கள், சுமார் பத்து வருடங்களின் பின் சொந்தநாட்டுக்கு வந்திருக்கின்றான்,போன புதிதில் வாப்பாவின் இழப்பால் நாட்டுக்கு வரமுடியாமலும் அங்கும் நிம்மதி இல்லாமலும் நாட்களை கடத்தி இருக்கின்றான்,

“கவலப்பட்டு என்ன செய்ய எல்லாம் விதிப்படிதான் நடக்கும்”

“எல்லாம் நன்மைக்குத்தான்”

“உழைக்கத்தானே வந்திருக்கிறோம் கவலைப்பட்டு எதுவும் நடக்கப் போவதில்லை” நண்பர்களின் ஆறுதலில் அமைதியானான போதும், விமான நிலையத்தில் வழி அனுப்பும் போது சிறுபிள்ளை போல் வாய்விட்டு அழுத வாப்பாவை நினைத்து தனிமையில் அவனால் அழாமல் இருக்க முடிவதில்லை, அப்போதெல்லம் தனது படிப்புக்காக, வாப்பா சொல்லும் புத்திமதிகளை எல்லாம் தட்டிக்கழித்த அந்த நாட்களுக்காக தன்னையே நொந்துகொள்வான்.

கூலித்தொழில் செய்யும் தனது வாப்பா, மகன் ஒழுங்காக படிக்க வேண்டும் “தன்னைப்போல் கஷ்டப்படாமல் ஏதாவது அரச உத்தியோகமாவது பார்த்தால்தான் எனக்கு நிம்மதி”, இப்படி எத்தனை நாட்கள் தான் அவனிடம் சொல்லி இருப்பார். அவை எல்லாம் அவனைப் பொறுத்தமட்டில் செல்லாக்காசு மாதிரி தட்டிக்கழித்துவிட்ட அந்த நாட்களுக்காய் இப்போதும் கவலைப்பட்டுக் கொள்வான்.

டியூசன் கிளாசிக்குப்போவதாக சொல்லிவிட்டு சினிமாவுக்கு சென்ற அந்த நாட்கள். புத்தகம் வாங்க வேண்டும் என்று உம்மாவிடம் பொய் சொல்லி பணம் பறித்த அந்த நாட்கள், தனியாக வீட்டில் இருந்து படித்தால் ஒன்றும் விழங்காது சேர்ந்து படித்தால்தான் பரீட்சைக்கு இலகுவாக இருக்கும் என்று சொல்லிவிட்டு நண்பர்களின் வீட்டில் அரட்டை அடித்த அந்த இரவுகள்…

ஒரு முறை புதிதாக வெளியான சினிமாப் படம் பார்ப்பதற்காக வீட்டில் டியூசன் கிளாஸ் கட்டாயம் போகவேண்டும் என்று வீட்டில் உம்மாவிடம் சொல்லி விட்டு நண்பர்களுடன் பகல் காட்சிக்காக சென்றிருந்தான், அதே தியேட்டரில் அவனது தாய்மாமனும் வந்திருந்தமை இவன் அறிந்திருக்கவில்லை. படம் முடிந்து நண்பனின் வீட்டில் இருந்த டியூசன் கொப்பிகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது, நேரில்கண்ட சாட்சியாக மாமா ஒரு புறமும் புதிய பிரம்புடன் வாப்பாவும் வாசலில் நின்றவாறே வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்,

“வாங்க மகன் டியூசனுக்கா போய்வாறிங்க வாங்க,,,”ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது எப்படியும் இன்றைக்கு பிரம்பு பூஜைதான். ஓரமாக ஒதுங்கிப் போனவனை வாப்பாவின் கையில் இருந்த பிரம்பு பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

அதுவும் போதாதென்று “கூடாத கூட்டாளிமார் கனத்தால் அப்படித்தான்” போதாக்குறைக்கு மாமாவும் உரம் போட்டுக் கொண்டிருந்தார், இது மாமாவின் விளையாட்டுத்தான் என்று புரிந்து கொண்டான். முன்பும் ஒரு முறை தியேட்டர் பக்கமாக நண்பர்களுடன் கதைத்துக் கொண்டு நின்றதற்கே பேச்சு வாங்கித் தந்திருக்கின்றார்.

வாப்பாவிற்கு கோபம் வந்தால் யாராலும் அடக்கமுடியாது. அவராக தனிந்தால்தான் அதுவரை பத்திரகாளிஆட்டம்தான்.

உம்மாவின் பேச்சைகூட கணக்கெடுக்கமாட்டார். “உனக்கு பிள்ள வழக்கத் தெரியாதிடி” என்று உம்மாவிற்கும் ஏச்சும்பேச்சுமாய்… அன்றைய இரவே ஒருதரோடு ஒருவர் பேசாமலே விடிந்துவிடும்.

இருந்தபோதும், இரவுச் சாப்பாட்டை தயார் செய்துவிட்டு எவரையும் சாப்பிட சொல்லாமல் உம்மா சோகமாக ஒரு மூலையில் அமர்ந்துவிடுவார்.

வாப்பாவும் எவரிடமும் பேசாமல் சாப்பிடுவார் வழக்கமாக வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிடும். அந்த வழமையான நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும.

“வாப்பாவின் கோபம் ஒனக்குத் தெரியும்தானே ஏன்டா இப்படி நடந்து கொள்கிறாய் தான்படும் கஷ்டம் தனது பிள்ளபடக் கூடாது என்றுதானே அவர் கஷ்டப்படடுகிறார், நீ கொஞ்சமாவது யோசிக்காயில்லையே” எத்தனை நாட்கள்தான் உம்மா என்னிடம் சொல்லி அழுதிருப்பார். “உம்மா நான் இனி அப்படி நடந்துக்க மாட்டன் இது சத்தியம் நீங்க சாப்பிடுங்க உம்மா” இப்படி ஒரு வார்த்தைக்காக காத்திருப்பது போல் உம்மாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். எல்லா சத்தியங்களும் ஒரு சில நாட்கள்தான். புதிதாக றிலிசாகும் திரைப்படங்கள் அவைகளை முறியடித்துவிடும்.

வீட்டுக்கு அவனை தேடி எந்த நண்பரும் வர முடியாது. வந்தால்… பொலிஸ்காரன் கேள்வி கேட்பது போல் வாப்பா குழைந்தெடுத்துவிடுவார், நீ யார் உனது வாப்பா யார், என்ன செய்கிறார், எதற்காக வந்தாய்,வகுப்பில் எப்படி, என்ன நிலை உனது எதிர்பார்ப்பு என்ன, இப்படி பல வினாக்களுக்கு வருபவர்கள் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

இதனால் எவரும் அவனை வீடு தேடிவருவதில்லை. ஆனால் தானாகவே நண்பர்களின் வீட்டுக்கு தேடிப் போவான், “வாங்க தம்பி இருங்க… மகன் ஒங்கள தேடி ஒருத்தர் வந்திருக்கார்”

நண்பர்களின் வாப்பாமார்கள் இன்முகத்துடன் வரவேற்கும்போது அவனக்கு தனது வாப்பாவையே வெறுத்துவிடும், ஏன் எனது வாப்பா மட்டும் இப்படி நடந்து கொள்கிறார், பலமுறை அவனுக்குள் கேட்டுக் கொள்வான், சில வேளைகளில் வாப்பாவை நினைத்தாலே ஒரு வெறுப்பு அவனை அறியாமலே தொற்றிக்கொள்ளும.

இருந்தபோதும், தனக்கு என்ன தேவை என்றாலும் மனம் கூசாமல் நிறைவேற்றும் வாப்பாவை நினைக்கும்போது அந்த வெறுப்புகளெல்லாம் மறந்தவனாய் இரக்கப்படுவான். என்னதான் இருந்தும் வாப்பா என்னோடு பாசமாகத்தான் இருக்கிறார். நான் தான் வாப்பாவுக்கு மட்டுமல்ல உம்மாவுக்கும் துரோகம் செய்கின்றேன் என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொள்வான்.

ஒரு முறை நண்பனின் பிறந்தநாள் என்று சொல்லி, தனது ஊரில் இருந்து பல மைல்களுக்கப்பால் இருக்கும் பாசிக்குடாவிற்கு சென்று குடியும் கும்மாளமுமாய் அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது உம்மா, இவனது வரவை எதிர்பார்த்தவாறு வாசலில்… “ஏண்டா ஒனக்கு இவ்வளவு புத்திகெட்டுப்போச்சி” என்று கண்ணீரோடு நின்றதை அவனால் மறக்க முடிவதில்ல.

பெற்றோரின் சொற்களை தட்டிக்கழித்ததின் தண்டனையாக அவன் பரீட்சைகளிலும் கோட்டை விட்டிருந்தான், கூடித் திரிந்த நண்பர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றிருந்தார்கள்.ஆனால் இவன் உயர்தர வகுப்பிற்கு நுழைவதற்கு கூட தகுதி இல்லாத நிலையில் வெட்கப்பட வேண்டியதாயிற்று.

இனி படிப்பதில்லை வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு காலத்தை கடத்திக் கொண்டிருந்தான்.

இவனை எதிர்பார்த்து ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த வாப்பா அவனது தங்கைக்கு திருமணத்தை நடாத்தி வைத்தார். பொறுப்புவாய்ந்த அரச உத்தியோகம் பார்க்கும் தனது மருமகனின் மூலம் தனது மகளின் வாழ்க்கையாவது சந்தோசமாக இருக்கட்டும என்று அவர் மிகுந்த சந்தோசமடைந்தார்.

நாட்கள் செல்லச் செல்ல மிகவும் கவலைப்பட்டான், இப்போதெல்லாம் முன்புபோல் நண்பர்களை சந்திக்க முடிவதில்லை. அவர்கள் படிப்பு என்றும் டியூசன் என்றும் பிஸியாகிப் போனார்கள். இவன் தனிமையானான் நண்பர்களை மட்டுமல்ல, இந்த உலகத்தையே வெறுத்தான்.

எப்படியாவது வெளிநாடுசெல்ல வேண்டும். பணம் வேண்டும் என்ன செய்யலாம். நடைப்பிணமானான். இறுதியாக தாய்மாமனின் தயவில் வெளிநாடு சென்றான்.

அவனது தகைமைக்கு ஏற்றாப் போல் அங்கு ஒரு காரியாலய சிற்றூழியனாய் வேலையில் சேர்ந்து கொண்டான். கைநி​ைறந்த வருமானம், வீட்டுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இருந்த போதும் தங்கைக்கு மாதாமாதம் ஒரு சிறுதொகையாவது அனுப்பி வைப்பான்,

“எனக்கு எதற்கு பணம். உனது வாழ்க்கைக்கு சேமிக்க வேண்டியதுதானே”, இது தங்கையின் ஒவ்வொரு மாதநினைவூட்டலாய் அமையும. “உம்மாவும் இல்ல வாப்பாவும் இல்ல எனக்கு இருக்கிற ஒரே உறவு நீயும் மச்சானும் மருமகளும்தானே மிச்சம் பிடித்து எதைத்தான் அனுபவிக்க.”

”வட்ஸ் அப்பிலும்”, “ஸ்கைப்பிலும்” தங்கையுடன் கதைக்கும்போது இப்படித்தான் பதில் சொல்வான்.

இருந்தபோதும் தனது சொந்த கணக்கில் சேமிக்கவும் பழகிக் கொண்டான்.

“நான் இண்டைக்கு ஸ்கூலுக்கு போகமாட்டேன் அங்கிளோடதான் இருக்கப்போறன்” அடம்பிடித்தாள் மருமகள்.

“மகள் சொன்னா கேளுங்க அங்கிள் வீட்டிலதான் இருக்கும் ஸ்கூலுக்கு போய்ட்டு வாடா தங்கம்”

“இல்ல இல்ல நான் போகமாட்டன்”

“சொன்னா கேட்கணும் இப்ப அடிதரவா… இல்ல…” வீடே அமர்களமாகியது, தாயும் மகளும் போராடிக் கொண்டிருந்தார்கள். இவன் வெளிநாடு போகும்போது தங்கை நிறைமாத கர்பிணியாக இருந்தாள். இப்போ அம்மா மகள் சண்டை காலம் எப்படித்தான் மாறிவிட்டது.

“பாவம் இன்றைக்கும் மட்டும் போகாவிட்டால் என்ன என்னோடு இருக்கட்டுமே”

அவனது வேண்டுகோளுக்கு எதிர்ப்பு இருக்கவில்லை. சந்தோசத்தால் “குட் அங்கிள்” என்று அவனை கட்டிப் பிடித்துக் கொண்டாள் மருமகள் – நிஹாறா பாணு.

“பாணு நாளைக்கு அடம்பிடிக்கக் கூடாது சரிதானே” தலையாட்டினாள் பாணு எல்லோரும் செல்லமாக பாணு,பாணு என்றுதான் வீட்டில் அழைப்பார்கள்.

“பாணு குட்டி அங்கிள் வாத்றூம் போயிட்டு வாறன் “ரிவி”யை பாத்துக் கொண்டிருங்க அவசரமாக வந்திடுவன் ஓகே”.

“டேய் என்னடா செய்கிறாய் வாத்றூம் போனாகெதியா வரத்தெரியாதா” ஒருமுறை வாப்பா சத்தம் போட்டதும் “ஒங்களுக்கு என்ன அவசரம்” உள்ளே இருந்த வண்ணம் அவன் பதில் கொடுத்ததும் வெளியே வந்தவனுக்கு, வாப்பா பிரம்பால் பதில் சொன்னதும் ஞாபகத்தில் நிழலாடியது.

“அங்கிள் எவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்கிறீங்க கெதியா வாங்க” இப்போ வெளியே மருமகள் பாணு கதவை தட்டிக் கொண்டு நின்றாள்.

“காலைச் சாப்பாடு றெடி மச்சான், மச்சினன், மருமகள் எல்லோரும் வாங்க”

தங்கையின் கையால்… வீட்டுச் சாப்பாடு… திருப்தியாவும் நிறைவாகவும் சாப்பிட்டவன் கடைசியாக வாப்பா இருந்த அறைக்குள் ஒரு குட்டித் தூக்கத்துக்காக சென்றான்.

வாப்பா இந்த அறைக்குள்தான் கடைசி வரை இருந்தார் என்பதற்கு எதுவித ஆதாரங்களோ தடயங்களோ இல்லாமல் மாற்றப்பட்டிருந்தது. வாப்பா உறங்கிய கட்டில், அந்த சாய்வு நாற்காலி, பூட்டுப் போட்ட புத்தக அலுமாரி… வாப்பாவின் ஞாபகத்திற்கு எதுவுமே இல்லை.

“வாப்பாவின் அலுமாரி பாவிக்க முடியாத பழையது. அதற்காக புதிதாக வாங்கி இருக்கிறேன், கட்டிலுக்கு பதிலாக புதிய டிசைனில் தம்றோ கட்டில் ஒன்றும், சாய்வு நாற்காலி… அது உடைந்து போய் விட்டது வீசிவிட்டேன்” என்றாள் தங்கை.

“அடி பாவி”, மனதிற்குள் நினைத்தவனாய் வாப்பாவின் நினைவுகளுடன் உறங்கப் போனான்.

“ஒனக்கு எத்தனை தடவடா சொல்றது படிபடி என்று எப்ப பாத்தாலும் படமும் போணும் நீயெல்லாம் உருப்படமாட்டாய்…”

“படிக்காமல் நான் என்ன படுத்துக் கொண்டா இருக்கன்” தினமும் வாப்பா மகன் சண்டையும் முடிவு இவன் முதுகில் நன்றாக வாங்கிகொள்வான்.

அடுத்தநாள் இவனது முதுகில் இருக்கும் தடயங்களை தடவிக் கொண்டு மகனை கட்டிப்பிடித்து அழுவதும், “அழாதிங்க வாப்பா…” என்று “இவன் அழுவதும்…”

வெளிநாட்டில் கஷ்டப்படும் போதெல்லம் வாப்பாவின் நினைவுகள் தொத்திக் கொள்ளும், இனி வாப்பா வரப் போவதே இல்லை என நினைத்தபோது, அவனது கண்களுக்குள் நீர் கசிந்து கொண்டது.

“தம்பி எத்தனை நாள் வெகேசன்” வெளியே குசினிக்குள் நின்று கொண்டு குரல் கொடுத்தாள் தங்கை.

(கற்பனை)

– September 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *