வலிந்த புன்னகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 2,030 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரயில் பயணங்களில் அதிகமான ஆலமரங்களை காணமுடியும். ஒரு காலத்தில் என் பால்யத்தை ஞாபகப்படுத்தின அந்த மரங்கள். ஊஞ்சலாக ஆடிய அதன் விழுதுகள் பின்னர் ஜடா முடியாகிவிட்டன. ஜெயகாந்தனின் விழுதுகள் என்ற குருநாவல் ஆலமரங்களை எனக்கு ஓங்கூர் சாமிகளாக மாற்றிவிட்டன. 

இன்றைய பயணத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகள் குறித்து விவாதிக்கலாம் என முடிவெடுத்தேன். பெரும்பாலான ஞாயிற்றுக் கிழமைகளில் எங்களின் பொழுதுபோக்கு ரயிலில் பயணம் செய்வதுதான். திருச்சியில் இருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, நாகூர் போகும் ஏதாவது ஒரு பாசஞ்சர் ரயிலில் கூட்டமில்லா பெட்டியாய் பார்த்து ஏறி நினைக்கும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கு நிழலில் யாருமற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சிமெண்ட் பெஞ்சுகளில், ஆலமரங்களின் அடியில் அமர்ந்து அரசியல், சினிமா, சமூகம், கலை இலக்கியம் சார்ந்த விஷயங்களை பரிமாறிவிட்டு திரும்பி வரும் ஒரு ரயிலில் மாலை அல்லது முன்னிரவு மீள திருச்சி வந்தடைவோம். மதிய உணவு என்பது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. பழங்கள், பிஸ்கெட், வெரைட்டி ரைஸ், பரோட்டா இப்படி ஏதாவது கிடைத்ததை உண்பது வழக்கமாகிப்போனது. மெதுவாக நகரும் பயணிகள் ரயில் எங்களின் காலத்தை வேகமாக கடத்தியது. அது எங்களுக்கு இஷ்டமாகிப் போனது. 

அன்று நாகூர் வரை டிக்கெட் எடுத்துக் கொண்டு ஏறி அமர்ந்தோம். ஜெயகாந்தனின் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்ற சிறுகதையை பற்றி நண்பர் சாமி என்கிற சாமித்துரை பேசிக்கொண்டு வந்தார். கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளில் ஏழெட்டு தடவை படித்து விட்டதாகவும் பாத்திரங்கள் எல்லை மீறிப்போகும் கதையென்றும் புதிய புதிய விழுதுகள் தரையில் இறங்கி கிளைகள் நீண்டு பூமியை மறைக்கும் அளவுக்கு அந்த ஆல மரம் வளர்வதாகவும் சொன்னார். நாகை ரயில் நிலையம் வந்தது. 

“இங்கே இறங்கிடுவோமா சார்?” என்றேன். 

“சரி” என்றார் சாமி. 

ஆசுவாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க ஏற்ற அங்கு இல்லையென இறங்கியதும்தான் தெரியவந்தது. மேய்ந்த கண்களுக்குள் தண்டவாளங்களைத் தாண்டி மறுபுறம் ஒர் ஆல மரமும் அடியில் ஓடுகள் வேயப்பட்ட கட்டடத்துடன் ஒரு கோவில் தட்டுப்பட்டது. பக்கத்தில் இருந்த கடைக்குப்போய் மதிய உணவுக்கான பிஸ்கெட்கள் மற்றும் இரண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கொண்டோம். தண்ணீர் என்றால் குடிநீரை இங்கே குறிக்கும். ரயில் பாதையை கடந்து அந்த ஆல மரத்தடிக்குப் போனோம். கடப்பா கற்களுடனான சற்று நீளமான ஆறு இருக்கைகளும் காலியாக இருந்தன. கோவில் பூட்டிக் கிடந்தது. முனியப்பசாமிக் கொவில் என்பதை தெரிந்து கொண்டோம். 

இருவரும் கடப்பா கல் பெஞ்சில் அமர்ந்தோம். 

“எதைப்பற்றி பேசலாம்” என்றேன். 

“உங்களைப் பற்றி பேசலாமென இருக்கிறேன்” என்றார். 

“என்னைப் பற்றிதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே. என்ன பேசுறதுக்கு இருக்கு?” 

“உங்களோட எதிர்காலம் பற்றி” 

“டூமாரோ வில் நாட் கம் சார்” என்றேன். 

“அந்த தத்துவம் எல்லாம் இப்ப வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு பெண்ணு பாத்திருக்கேன். டிஸ்ட்ரப் பண்ணாம கேளுங்க. அப்பறம் உங்க கருத்தை சொல்லலாம்” 

“சரி சொல்லுங்க. டயம் வேஸ்ட் ஆவுது அதான் சொன்னேன்” 

“எங்க ஸ்கூல வேலை பாத்த ஒருத்தர் டூ இயர்ஸ் பேக் இறந்துட்டார். அவரோட மனைவிய நீங்க வாழ்க்கை துணையா ஏத்துகிட்டா என்ன? அவங்க இப்ப அவங்க அம்மா வீட்டுல இருக்காங்க. வேற யாரும் அவங்களுக்கு இல்ல. ஒரு விதவைக்கு வாழ்க்கை கொடுத்ததா எடுத்துக்கிட்டாலும் சரி. இப்ப சொல்ல வேண்டாம். யோசிச்சி மெதுவா சொல்லுங்க” என்றார். 

“நான்தான் மேரேஜ் பண்ணிக்கவே போறதில்லங்குற முடிவுல இருக்கேனே. அப்புறம் எதுக்கு இதெல்லாம்?” 

“எல்லாம் மறு பரிசீலனை உட்பட்டதுதான். கல்யாணமே வேண்டாங்குறத்துக்கு பல காரணங்கள் இருக்கலாம். பண்ணி கிடலாங்குறதுக்கு ஒரு காரணமே போதும்” 

என்ன பேசுவதென்றே தெரியாமல் விக்கித்து இருந்தேன். அவரே தொடர்ந்தார். 

“ஏன் நீங்க அந்த பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கக்கூடாதான்னு என்னை கேக்கத் தோணும். என் மனைவியோட நினைவுலயே வாழ்ந்து முடிச்சிடலாம்ன்னு இருக்கேன். மறுபரிசீலனை செய்யக்கூடாதான்னு கேட்டாலும் இந்த பெண்ணுக்கும் எனக்கும் நெறைய வயது வித்தியாசம் கூட” என்று நான் பரிசீலனை செய்வதற்கு உகந்தது என நியாயம் கற்பித்தார். 

விவாதம் நீண்டுகொண்டே போனது. வீடு திரும்பியபோது வழக்கமான கலகலப்பு இல்லை. ஏற்கனவே திட்டமிட்ட படியான இலக்கியம் குறித்த விவாதம் இல்லை. ஏதோ ஒரு புதிய தீவுக்கு கட்டுமரம் கொண்டு பயணிப்பது போல பட்டது எனக்கு. 

நான் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வத்ததன் காரணத்தை சுருக்கமாக வேணும் சொல்லியே ஆகவேண்டும். யாரும் பெண்கொடுக்க முன்வரவில்லை. அல்லது எனக்கு ஏற்ற பெண்ணாக நான் பார்க்கவில்லை. எப்படியேனும் வைத்துக்கொள்ளலாம். 

ஆரம்பத்தில் முதன் முதலாக ஒரு பெண் பற்றிய பேச்சு வார்த்தைகள் ராணுவ ரகசியம் போலத்தான் நடைபெற்றது. முதலில் நாங்கள் பெண் வீட்டிற்குச் சொன்று இரு தரப்புக்கும் பிடித்துப்போக எங்கள் வீட்டிற்கு நடைமுறை ரீதியில் அடுத்த புதன் கிழமை வருவதாக பேசி முடித்தார்கள். 

அதற்கிடையில் என்னைப் பற்றி உள்ளூர் வார்டு முன்னாள் கவுன்சிலரிடம் பெண் வீட்டார் விசாரித்திருக்கிறார்கள். 

‘அவனுக்கா ஒங்க பொண்ண கொடுக்குறிங்க. அதுக்கு ஒங்க பொண்ண ஓடுற ஆத்துல வெட்டி விடலாமே’ என்றனாம் அவன். நான் ரௌடியாம். 

ரவுடி குருப் ஒன்று ஊரில் இருந்தது உண்மைதான். அதில் நான் உறுப்பினர் இல்லை. நான் அதில் இருந்த உறுப்பினர்களின் நண்பன். ஆனால் நான்தான் அந்த குழுவுக்கு மாஸ்டர் மையின்ட் என சிலர் சொல்லி வந்ததை காற்று வாக்கில் நானே கேட்டிருக்கிறேன். அந்த குழுவின் எதிர்வினையால்தான் அந்த முறை தேர்தலில் அவன் தோற்றுப் போனான் என்பது உண்மை. அதற்கு என்னை பழிவாங்கிவிட்டான். 

அடுத்த ஒரு பெண்ணை எனது நண்பர் முயற்சியில் பெண் வீட்டாருடன் பேசி நானும் அவரும் பெண் வீட்டிற்குப் போனோம். மெதுவடையும் காப்பியும் கொடுத்தார்கள். பெண்ணை காட்டினார்கள். என் அழகிற்கும் அவள் அழகிற்கும் நல்ல பொருத்தம். ஆனால் இருவருக்கும் ஏழு வயது வித்தியாசம் உள்ளது, எனது தம்பிக்கு வேண்டுமானால் தர சம்மதம் என மறுநாள் நண்பனிடம் சொல்லி ஊத்தி மூடிவிட்டார்கள். வயதை முன்னரே கேட்டு இருந்திருக்கலாம். அவருக்கு மெது வடையும் காப்பியும்தான் நஷ்டம். வாடகை கார் எடுத்துப் போனதில் எனக்கு செலவு இரண்டாயிரம் ரூபாய். 

மேலும், இரண்டு பெண்களில் ஒன்று குண்டாக இருந்ததால் எனக்கு ஒத்து வராது என்றார்கள். மற்றோன்று நிரந்தர அரசு வேலை. நான் அப்போது தற்காலிக வேலை செய்தேன் என்று தர இயலாது என்றார்கள். நான்கு இன்னிங்ஸிலும் டக் அவுட். 

அத்தோடு பெண் பார்க்கும் வெட்டி வேலையை நிறுத்திக்கொண்டேன். எனக்காக யாரும் பெண்பார்க்க வேண்டாம் என வீட்டாருக்கு முசுட்டுத்தனமாக கட்டளையிட்டேன். தற்காலிக வேலையும் காலியாக மெட்ராஸ் நோக்கிப் போனேன். அப்போது சென்னை என்பது மெட்ராஸ். வேலை தேடி மட்டும் போகவில்லை. கல்யாணமே வேண்டாம் என்ற வெறுத்த மனதோடு மதுரையின் அருகில் உள்ள எனது குக்கிராமத்தில் இருந்து வேறோடும் தூரோடும் பிடுங்கிக் கொண்டு கிளம்பினேன். என் அவமானம் வருத்தம் எனக்குத்தான் தெரியுதும். அது என்னோடு இருக்கட்டும். எனக்கேற்ற பெண்ணை பார்க்கவில்லை என்பதாலும் என் மீதான வெறுப்பாலும் வீட்டில் உள்ளவர்கள் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டு மெல்ல மெல்ல என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். 

மெட்ராஸ் சென்னையாக மாறிய போதுதான் அரசு வேலை கிடைத்தது. திருச்சியில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகிறேன். இங்குதான் ஆசிரியராக பணிபுரியும் சாமித்துரை எனக்கு அறிமுகமானார். 

அவரது கதை வேறு மாதிரியானது. தலைப் பிரசவத்திற்காக மனைவியை மருத்துவ மனையில் சேர்த்திருந்தார்களாம் சுய பிரசவத்திற்கான சாத்தியப்பாடுகள் இல்லாதுபோக சிசேரியன் செய்ய மருத்துவர்கள் ஆயத்தமான நிலையில் ‘இப்போது வேண்டாம் நான்கு மணிநேரம் கழித்து ஆப்ரேஷன் செய்யலாம்’ என மனைவி தெரிவித்துள்ளார். 

அதற்கு அவள் சொன்ன காரணம் வேடிக்கையானது. அவளுக்கு அது பிரதானமானதாக பட்டிருக்கிறது. அப்போது ஆயில்ய நட்சத்திரம் நடப்பில் இருந்துள்ளது. குழந்தை ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தால் மாமனுக்கு ஆகாது என யாரோ சொல்ல தன் சகோதரன் மீது கொண்ட பாசத்தில் அந்த நட்சத்திரம் முடியும் வரை பிரசவத்தை தள்ளிப்போட கட்டாயப்படுத்தி இருக்கிறாள். அதற்கு அவளது அண்ணனே ஒத்துக் கொள்ளாமல் உடன் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். படுக்கையில் கிடத்தி அறுவை சிகிச்சை அரங்கிற்கு எடுத்து செல்கையில் பிடிவாதம் செய்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்து வலியைத் தாங்கிக் கொண்டு படுக்கையிலிருந்து இறங்கி வார்டுக்கு நடந்தே போய்யுள்ளாள். 

இதற்கிடையில் சற்று நேரத்தில் குழந்தை வயிற்றினுள் இறந்துவிட்டதை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதை அப்புறப்படுத்த அரங்கத்திற்கு அழைத்து சென்றவர்கள் உள்ளே நுழைந்த சில நிமிடத்தில் பரபரப்புடன் வெளியே வர எல்லோருக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ளும் வகையில் தாயும் இறந்துவிட்டது தெரிய வந்தது. சாமி மயக்கமுற்று கீழே விழ பரிசோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து ஹார்ட் அட்டாக் வந்துள்ளதாக தீவிர சிகிச்சை அளித்து மனைவியின் இறுதிச் சடங்கில் கூட பங்குபெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார். 

மனைவி தவறியமைக்கு தானும் மறைமுகமான குற்றவாளியாக இருந்திருப்பாரோ என்று எப்போதுமே சாமிக்கு தன்மீதே வருத்தம். எட்டு ஆண்டுகள் உருண்டு ஓடிப்போனாலும் ஒரு குற்ற உணர்வு அவருக்கு இன்னும் விட்டுப்போகவில்லை. கட்டாயப்படுத்தி சிசேரியன் செய்ய வைத்திருக்கலாம். அவளது அண்ணனின் குடும்ப நலனில் தனக்கு அக்கறை இல்லையென மனைவி சொல்லக்கூடும் என்று மழுப்பலாக இருந்துவிட்டார். இப்படி நடக்கும் என்று யார் அறிவார். நம் ரேகைகள் விதியின் கைகளில் அல்லவா ஓடிக்கொண்டு இருக்கின்றன. தன்மீது அதீத காதல் கொண்டவளின் நினைவில் வாழ்தலே போதுமென எல்லாவற்றையும் கடந்து கொண்டிருக்கிறார். 

ஒரு வாரமாக மன குடைச்சல். திடீரென தீயை பற்ற வைத்துவிட்டு சாமி அமைதியாகிவிட்டார். வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்மணியின் வீட்டிற்கு போகலாம் என்றார். வேண்டுமா வேண்டாமா என்பதே என் மனப் போராட்டம். எனக்கென்று யாரும் இல்லையென்றே சொல்லலாம். நான் எப்படி வாழ்ந்தாலும் பெற்றோரோ சகோதரனோ எந்த அதிர்ச்சியோ ஆனந்தமோ படப்பொவதில்லை. கடித போக்குவரத்து நின்று போய் கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஓடியே போய்விட்டன. 

வாழ்க்கைத் துணை என்ற ஒன்று தேவையில்லாமலும் வாழலாமென்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டேன். இப்போதென்ன புதிய சபலம். இது அவள் மீதுள்ள இரக்கம் சார்ந்ததா? இரக்கம் மட்டுமே என்றால் என்னைத் தவிர ஒரு கைம்பெண்ணை ஏற்றுக்கொள்ள இந்த லோகத்தில் யாருமே இல்லையா? ஏராளமாக இருக்கிறார்கள். காலம் மாறிவிட்டது. 

என்ன? இல்லற விருப்பமா? வாழ்க்கைத் துணை தேடலா? உடல் ரீதியான ஆசைகளின் நிறைவேற்ற ஏற்பாடா? எதுவும் இருக்கலாம். என்னால் எனது மன நிலையை ஆராயவோ முடிவு சொல்லவோ தெரியாத வாழ்க்கை மீதான புதிய அனுகுமுறையாகப் பட்டது. 

மனக்கட்டுப்பாட்டுடன் கூடிய பிரமச்சாரிய வாழ்க்கையில் ஆற்றல் பன்மடங்காகிறது என்று ஞானம் கொண்டவர்களின் சொற்கள் வழியே கேட்டிருக்கிறேன். நான் இன்னும் அந்த மன காட்டுக்குள் முழுமையாக ஐக்கியமாகவில்லை. பயிற்சியும் தேவையான வைராக்கியமும் என்னை இன்னும் ஆட்கொள்ளவில்லை. 

ஆணி அறைந்ததுபோல் பிரமச்சாரியத்தை தேர்ந்தெடுத்து விட்டேன் என தைரியமாகச் முடிவெடுக்காமல் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்று மட்டும்தானே தவறாக கொக்கரித்துள்ளேன். அது தவறு என்பதைவிட இது சரியா என யோசிக்கத் தொடங்கினேன் 

அவளது தாயாரிடம் பெசிவிட்டதாக தெரிவித்தார். வேண்டாம் என்று என்னை வெறுக்க வில்லை. என்னையும் ஏற்றுக்கொள்ள ஒரு ஜீவன் இந்த லோகத்தில் இருப்பதாக மனம் உணர்த்தியது. நிரந்தர உத்தியோகம் இருக்கிறது. அனுபவ முதிர்ச்சி இருக்கிறது. இது ஒருவகையான வாழ்க்கை முறை. உடல் பந்தமும் உள்ளடக்கியதுதான். மறுநாள் அவளது வீட்டிற்கு போகலாமென முடிவு செய்து சாமிக்கு தகவல் கொடுத்துவிட்டேன். 

அவள் தாயார்தான் எங்களை வந்து வரவேற்றார். பழங்காலத்து ஓட்டு வீடு. திண்ணையில் அமர்ந்திருந்தோம். காப்பி கொடுத்து உபசரித்தார். பின்னர் மகளை அழைத்தாள். ஒரு கைக்குழந்தையோடு உள்ளே இருந்து வந்து வரவேற்றாள். அறிமுகப்படுத்திக் கொண்டோம். 

குழந்தை இருப்பதை சாமி சொல்லவே இல்லை. அவருக்கே முதல் நாள்தான் தெரியுமாம். இனி சொல்லி என்ன, பார்க்கும்போது தெரிந்து கொள்ளட்டும் என இருந்துவிட்டதாக பின்னர் தெரிவித்தார். 

“மறுமணத்தில் எனக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்துச்சி. ஆனால் அம்மாவோட பிடிவாதம். வயதும் பெருசாயிடல பண்ணிகிடலாமென முடிவுக்கு வந்துட்டேன்” என்று ஆரம்பித்தாள். 

“உன்மையிலேயே உங்களுக்கு இப்ப விருப்பம் இருக்குல்ல. அல்ல அம்மாவுக்காக ஒத்துகிட்டிங்களா? சும்மா ஃப்ராங்கா பேசுங்க. எதையும் ஏத்துகிடுற வயசு அனுபவம் எனக்கு இருக்கு” என்றேன். 

தாயார் எழுந்து வெளியே சென்றுவிட்டார். மகள் சங்கோசம் இல்லாமல் பேசட்டுமே என்ற எண்ணமாக இருக்கலாம். 

“அவரோட நினைவிலேயே வாழ்ந்திடலாமுன்னுதான் பாத்தேன். முடியாதுபோல. மறுமணம் பண்ணிக்கிடலாமென யோசனை வந்துச்சி” 

“ம்” 

“உங்களுக்கு ஒரு கைக்குழந்தை இருக்குன்னே எனக்கு நேத்தைக்குதான் தெரியும். அதைகூட சார்கிட்ட சொல்லல” என்றார் சாமி. 

“அம்மாகிட்ட எல்லாத்தையும் தெளிவா சொல்லச் சொல்லிட்டேன். அவங்க யார்கிட்டயோ சொல்லி யாரோ உங்கிட்ட சொன்ன கம்யூனிகேஷன் கேப்ல விடுபட்டு போச்சு போல. வெரி சாரி” 

“நே நே. நே ப்ராப்லம்” என்றேன். 

“நீங்க வந்துட்டு போனதாலயோ வேண்டாம்னு சொன்னாலோ நான் கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன். என் குழந்தை நாளைக்கு ஏதேனும் இடையூறாக பொய்டக்கூடா தில்லையா?” 

“நம்ம கொழந்தைன்னு சொல்லுங்க” என சிறு புன்னகை கலந்த வார்த்தைகள் என் மனதிலிருந்து வாய் வழியாக வந்தன. 

“அப்ப என்ன; சார் பச்ச கொடி காட்டிட்டார். மனசு எல்லாம் நெரஞ்ச மாதிரி இருக்கு” என்றார் சாமி. 

பதிவு திருமண ஏற்பாடுகளை சாமிதான் மேற்கொண்டார். 

இடையில் நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 

“வணக்கம்” நான் 

“வணக்கம் சார்” அவள். 

“ஆமா நான் உங்கள எப்படி கூப்பிடுறது?” 

“பாக்கியலெட்சுமிய பாக்கியான்னு. அல்ல, பக்கின்னாலும் சரி” 

“சாரி. அது என்ன பக்கி. அப்படியெல்லாம் இனி வேண்டாம்.” 

“எப்படின்னாலும். உங்களுக்கு புடிச்சது போல” 

“பாக்யா. என் பாக்கியம்.” 

“நீங்கள்.” 

“சந்தோஷ் சிவம்” மேபி எப்படின்னாலும் ஓகே. 

“சந்தோஷ்” 

“சந்தோஷம்” 

“சந்தோஷமுன்னா?” 

“நே. சந்தோஷமா இருக்குன்னேன்.” 

என்னைப் பற்றி கேட்டாள். தன்னைப் பற்றிச் சொன்னாள். 

திருமணமாகி ஆறாண்டுகளாக குழந்தையில்லை. கணவர் இறந்தபோது மூன்று மாத கர்ப்பமாக இருந்துள்ளாள். 

எவ்வளவு லாவகமாக நகர்த்தி வெட்டிய காய்களை பெட்டிக்குள் அடைத்து விடுகிறது காலம். 

“இன்னோருத்தரோட வாழ்ந்தவதானே என்ற எண்ணம், உணர்வு உங்ககிட்ட இல்லையா?” 

“இல்ல” 

“ஏன் அப்படி?” 

“மனைவியை இழந்த எத்தனையோ பேர் இரண்டாவதா கல்யாணம் பண்ணும்போது இந்த கேள்விய யாரும் கேக்குறதில்ல..” 

“அப்போ பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்குறதில் உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லைபோல” 

“சுதந்திரம்ங்குறது கொடுக்குறதில்லை. அது உரிமை. மறுத்தால் எடுத்துக்குறது” 

“போகப்போக வர வாய்ப்புள்ளதுங்குறேன்” 

“எது?” 

“இன்னொருத்தரோட வாழ்ந்தவதானே என்ற உணர்வு” 

“அது அவங்க அவங்க சுபாவத்தைப் பொருத்தது. பெரும்பாலும் வர வாய்ப்பு இருக்கு. ஆனா எனக்கு வராதுங்குறது, எனக்கு என் மீதுள்ள நம்பிக்கை” 

“அப்படின்னா பிரச்சனையே ஏற்படாதா?” 

“அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கு. வராம பாத்துகிட காம்பர்மைஸ் இருக்கு. தோல்விய நேசிக்கணும். அந்த தோல்விதான் வெற்றியே” 

“சாமி! எனக்கு அவ்வளவு பேச வராது” 

“சாமி சார் இருக்காறே அவர் கிட்ட நெறைய தெரிஞ்சிகிடலாம். எனக்கு குருவே அவருதான்.” 

“கேஷ்வலா பேசமாட்டாரொ?” 

“ப்ராக்டிகலா பேசுவார். நிறைய பேசுவார். தேவையிருந்தா மட்டும் பேசுவார்” 

பரபரப்பான பாக்யாவின் நிமிடங்கள் அவை. 

மூன்று மணிக்கு கிளம்புவதாக கூறியிருந்தாள். நான்கரை மணிக்குள் வந்துவிடும்படி பதிவாளர் அலுவலகத்தில் தெரிவித்திருந்தார்கள். 

மூன்றரை மணிக்குதான் கிளம்பியிருக்கிறாள். மணப்பாறையிலிருந்து காரில் வர அதிக பட்சமாக அரை மணி நேரம்தான் ஆகும். 

நான்கு மணிவாக்கில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறாள் என்றது என் கைபேசி. கடந்தகால நிகழ்வுகளை விட அது எனக்கு சற்று படபடப்புடனே இருந்தது. ஒரு செடியை முளையில் கிள்ளி எறிவதற்கும் வளர்ந்து பூக்கும் தருவாயில் சிரமப்பட்டு வெட்டி சாய்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது அது. சாமி சார் அலுவலரை சந்தித்து காலதாமதமாவதை தெரிவிக்க உள்ளே போனவர். பரவாயில்லை. ஐந்து மணிக்குள் வந்தால் போதும் தாங்கள் கூடுதல் நேரம் காத்திருப்பதாக தெரிவித்ததாக தகவல் தத்தார். இருபது இருபத்தி ஐந்து முறை தொடர்புகொள்ள முயற்சித்து கைபேசியை கோபத்துடன் பைக்குள் செருகிவிட்டு ஓரமாக கிடந்த உடைத்து போட்ட ஒரு சிமெண்ட் கட்டையில் அமர்ந்தேன். 

நான்கரை மணிக்கு என் கைபேசியில் அழைப்பு வந்தது. 

“என்னம்மா எங்க இருக்கிறிங்க? வந்துட்டிங்களா?” 

“திருச்சியிலதான்” 

“அதான் எங்கே?” 

“ஆபீஸுக்கும் அடுத்த தெருவில இருக்கும் பார்க்ல” 

“என்னாச்சி, எனி ப்ராப்லம்?” 

“ஒண்ணுமில்ல. பார்க்குக்கு வரமுடியுமா?” 

“ஓய்?. வாரனே” 

விபரத்தை சாமியிடம் சொல்லிவிட்டு பூங்காவிற்குப் போனேன். கார் டிரைவரிடம் வாடகையை கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் வந்திருந்தாள். குழந்தையை அம்மாவிடம் விட்டு வந்திருப்பாள் போல. என்ன பேசுவதென்று தோன்றவில்லை. இருவருக்குமே என்று சொல்லலாம். சற்றே மௌனம் நீண்டது. 

மற்றவர்களுடன் பூங்காவில் பிரவேசம் செய்ய, சாமிதான் இறுக்கத்தை உடைத்தார். “வாட் ஹேப்பன்ட்? அம்மா வரலயா?” 

“ஐ’ம் சாரி” என்றாள். தொடர்ந்து அவளால் அவளது கணவரின் நினைவிலிருந்து விடுபட முடியவில்லை என்பதை தமிழில் சொல்வதற்கு அச்சப்பட்டு “ஐ ஹேவ் நாட் லெப்ட் இட் மைசெல்ப் ஃப்ரம் சம் மெமரிஸ்” என்றாள். 

“என்ன முடிவுல வந்திங்க?” 

“சாரி சொல்லலாம்ன்னு வந்தேன். என்னால முடியலன்னு நேரில மன்னிப்பு கேக்கலாமுன்னு வந்தேன்” 

அரிதாய் சாமியிடமிருந்து வெளிப்படும் கோபம் அன்றும் வெளிப்பட்டது. “வாட் எ சில்லி ஒன். கேஸ் இட் கம் நௌ இட்செல்ப் ஆர் ஆன் பிஃபோர்?” என்று வார்த்தைகளை வீசி எறிந்தார். எரிந்த வார்த்தைகள் அவரவர்களின் மனதுக்குத் தக்கவாறு சுட்டது. 

கோபத்தின் ஆழம் அவர் வண்டியின் கிக்கரை உதைக்கும் ஆவேசத்தில் வெளிப்பட்டது. வேகமாக வெளியேறிப்போனார். 

சாட்சிக்காக வந்த என் சக ஊழியர் “சாரி சார். நாளை பார்ப்போம்” என விடைபெற்று, ஒருநாள் விடுப்பு வீணாகிப்போனதோடு காத்திருந்த வெறுப்பை காட்டிக்கொள்ளது நடிக்க முடியாமல் நகர்ந்தார். நாங்கள் தனிமைப்பட்டுப் போனோம்.

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *