வசியமானவர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 29, 2023
பார்வையிட்டோர்: 2,388 
 
 

ரணிகாவுக்கு தூக்கம் வர மறுத்தது. மனித வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களில் சிலருக்கு பலரைப்பிடிப்பதும், பலருக்கு சிலரைப்பிடிப்பதுமான நிலை கொண்டிருப்பது ஏன்?’ எனும் சந்தேகமும், அதற்க்கான தேடலும் அதிகரித்ததே உறக்கம் பிடிக்குள் வராமல் போனதற்க்கு முக்கிய காரணம்.

ஒரு தாயாருக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை தவறு செய்த போதிலும் அதிகம் நேசிப்பதும், உத்தம குழந்தையை ஒதுக்கி விடுவதும் எதனால்? படித்த பலரிடம் கேட்டும் சரியான, நம்பும்படியான விளக்கம் கிடைக்கவில்லை. நூலகத்துக்கு சென்று பல புத்தகங்களைப்படித்தும் தேடலின் தேவைகள் பூர்த்தியாகாமல் சோர்ந்து போனாள்.

“தம்பிக்கு மட்டும் வித, விதமா சமைச்சு போடறே…? மறைச்சு வச்சு செலவுக்கு பணம் கொடுக்கறே…? அப்பாவையும், அக்காவையும், என்னையும் வெறுத்து ஒதுக்கறே…? ஏம்மா.‌‌…?” என தன் தாய் சரிகாவைப்பார்த்து கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் ரணிகா கேட்க, அவளது தாயோ சிரித்துக்கொண்டே ‘தெரியவில்லை’ என மழுப்பி, கீழுதுட்டை நீட்டிக்காட்டியபடி, வீட்டைக்கூட்டிச்சென்றதை ஏற்க இயலவில்லை.

ஒரு முறை அக்காவுக்கு திருமண பொருத்தம் பார்க்க சோதிடரிடம் அம்மா சென்ற போது கார் ஓட்ட ஓட்டுனர் வராமல் போக, ரணிகா ஓட்டிச்செல்லும் நிலை ஏற்பட, தாயுடன் தானும் சென்றாள்.

இதுவரை தொலைக்காட்சிகளில் ராசிபலன்களை தன் ராசிக்கு மட்டும் பார்க்கும் பழக்கத்தால் சோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் சோதிடர் முன்னே தாயின் அருகே அமர்ந்தாள்.

சோதிடர், அக்கா கட்டத்துடன் வரனுடைய கட்டத்தையும் இணைத்து எழுதியவர், “பொருத்தம் தேவையான அளவுக்கு உள்ளது. திசா சந்தி, ஏக திசை வராது. எதிர்காலத்துல யோகதிசையும் வரும். ரெண்டு பேருக்கும் செவ்வாய் தோசம், ராகு கேது தோசம் சமம். ஒரு தடவை ஈரோடு கொடு முடி மகுடேஸ்வரர் கோவில்ல காவிரி ஆத்துல குளிச்சிட்டு வெள்ளிக்கிழமை ராகு காலம் சர்ப சாந்தி பண்ணிட்டு, குலதெய்வ கோவில்ல பொங்கல் வச்சு அபிசேகம் பண்ணி வழிபாடு செஞ்சுட்டு, உள்ளூர் சிவன் கோவில்ல ராத்திரி நடக்கிற பள்ளியறை பூஜைக்கு கால் மண்டலம் பாலும், திணைமாவும் கொடுத்து தீபம்போட்டு அர்ச்சனை வச்சிட்டு, பையன பொண்ணுக்கும், பொண்ண பையனுக்கும் புடிச்சுப்போச்சுன்னா வாங்க முகூர்த்தத்துக்கு பிறந்த நாள், பிறந்த மாசம், பிறந்த நட்சத்திரம் வராம, சந்திராஷ்டமம் ரெண்டு பேருக்கும் வராத நாளா பிரம்மமுகூர்த்தத்துல, நல்ல லக்னத்துல தாராபலன் கூடி வர்ற மாதிரி நாள் குறிச்சுத்தர்றேன். இதுல சிறப்பு என்னன்னா பொருத்தத்துல வசியம் கூடுதலா இருக்கிறதால மாப்பிள்ளை உங்க பொண்ணையே சுத்தி, சுத்தி வருவார் ” என முடித்த போது, அம்மா மகிழ்ச்சியுடன் அவருக்கான கட்டணத்தை கொடுத்து விட்டு எழுந்த போது, ரணிகாவுக்கு பொறி தட்டியது. 

அவருக்காக வேறு யாரும் காத்திருக்கவில்லை என அறிந்தவள் “உங்க கூட கொஞ்சம் பேசனம்” என்றவுடன், “அதுக்கென்ன தாராளமாகப்பேசலாம்” என சோதிடரும் சொல்லி விட, அம்மாவையும் அமரச்சொல்லி தானும் இருக்கையில் அமர்ந்தாள்.

“பொருத்தம் பார்த்த போது வசியபொருத்தம் இருக்கிறதால தம்பதிகள் ஒற்றுமையா இருப்பாங்கன்னும், மாப்பிள்ளை பெண்ணையே சுற்றி, சுற்றி வருவார்னு சொன்னீங்களே..? மற்றவங்களோட ஒற்றுமையா இருக்க மாட்டாரா ?” எனக்கேட்டாள்.

“மனிதப்பிறப்புல இப்படியொரு வித்தியாசம் இருக்கிறத நாம மாற்ற முடியாது. அதுக்கேத்தாப்ல வாழப்பழகிக்கிறத தவிர மாற்று வழி இல்லை. ஒரு ராசிக்கு இரண்டு முதல் நான்கு ராசி வரைக்கும் வசியமாக இருக்கும். வசிய ராசிக்காரங்க பொய் சொன்னாலும் சிரிப்பாங்க. சஷ்டாஷ்டகம்னு சொல்லற ஆறு, எட்டா வருகிற ராசிக்காரங்க கீரியும், பாம்பா இருப்பாங்க. நல்லதச்சொன்னாலும் குத்தங்கண்டு பிடிப்பாங்க. உடன் பிறப்பாவோ, பெற்றோராவோ, குழந்தைகளாகவோ, உறவுக்காரங்களாவோ இருந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது. அனுசரிச்சு தான் போயாகனம். பல பேருக்கு பல நோயி வர்றதுக்கும் பொருத்தமில்லாம கல்யாணம் பண்ணறது தான் காரணம்ங்கிறது என்னோட அனுபவம். கல்யாணத்துக்கு வசியம் மட்டும் போதாது. தினம் உடலாரோக்யம், கணம் பேச்சு ஒற்றுமை, யோனி உடலொற்றுமை, ராசி குழந்தை பாக்யம், ரச்சு மாங்கல்யம்னு பத்துல அஞ்சு ரொம்ப முக்கியம். அதுல ரொம்ப, ரொம்ப முக்கியம் ரச்சு, யோனி. காதலிச்சு கல்யாணம் பண்ணிட்டாலும் இந்த ரெண்டு அவசியம்ங்கிறதும் என்னோட அனுபவம். அதோட வசியம் சேர்ந்தா அற்புதமா வாழ்க்கை இருக்கும். மாமியாரோட ராசிக்கும் மருமகளோட ராசிக்கும் வசியமிருந்துட்டா அந்தக்குடும்பம் ஊரே பார்த்து பொறாமைப்படற மாதிரி ஒற்றுமையா வீட்டுச்சத்தம் வெளில கேட்காம வாழ்வாங்க. குடும்பத்துல உள்ள அத்தனை பேருக்கும் பொருத்தம் பார்த்தா கல்யாணம் பண்ணறதே கஷ்டமாயிடும். இயல்பா அமைஞ்சா அதிஷ்டம்னு சொல்லலாம்” என சொல்லி பெருமூச்சு விட்டார் பிரபல சோதிடர் பரமசிவம்.

ரணிகாவுக்கு தன் எதிர்பார்ப்பு சோதிடர் மூலமாக பூர்த்தியானதாக கருதியவள் “இப்படியொரு நல்ல வழி இருக்கும் போது எதுக்கு எதிர் நிலைகளைக்கொண்டவர்களை திருமணம் செய்யனம்..? இது மனிதர்களுக்கும், மனிதர்களுக்கு மட்டும் தானா? இல்லை மற்ற ஜீவராசிகளுக்கும் பொருந்துமா? ” என இரண்டு முக்கியமான கேள்விகளை முன் வைத்த போது, அவர் யோசிக்க, தாய் சரிகா “ரணி எதுக்கும் ஒரு அளவிருக்குது. எத கேட்கனம், எத கேட்கக்கூடாதுன்னு ஒரு வரைமுறை இருக்குது. வா போகலாம் ” என எழுந்த போது சோதிடர், “இருங்கம்மா, தெரியாமத்தானே கேட்கறாங்க” என்றவர் அருகிலுள்ள தண்ணீர் பாட்டிலிலிருந்து தண்ணீரை எடுத்துக்குடித்தவர் மேலும் பேசினார்.

“அந்தக்காலத்துல வசதிய விட வசியத்தோட முக்கிய பொருத்தம் இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க. அதனால அவங்களுக்கு அஞ்சு, பத்துன்னு குழந்தைகள் பிறந்தாங்க. நூறு வயசு வரைக்கும் நல்லா ஆரோக்யமா வாழ்ந்தாங்க. ஆனா இன்னைக்கு விரும்பறவங்க வசியமாகிறதால மற்ற பொருத்தம் பார்க்காம கல்யாணம் பண்ணி சிரமப்படறாங்க. பெத்தவங்க பார்த்து பண்ணி வைக்கிறவங்க படிப்பு, வேலை, சொத்து இருந்தா முக்கிய பொருத்தம் போக வசியம் இல்லேன்னாலும் பண்ணிடறாங்க. வசியத்தோட முக்கிய பொருத்தம் இருந்தும் வசதியில்லைன்னா பொண்ணைக் கொடுக்கறதில்லை. பின்னாடி பிரச்சினை வந்தா சோதிடர் மேல பழியப் போட்டுடறாங்க. நீங்க கேட்ட இன்னொரு கேள்விக்கான பதிலை ஆராய்ச்சி பண்ணிப்பார்த்திருக்கேன். மற்றவங்களைக்கண்டா முட்ட வர்ற மாடு, என் கிட்ட மட்டும் நேசமா இருக்குன்னா அதோட பிறந்த நேர ராசிக்கு என்னோட பிறந்த நேர ராசி வசியமா இருக்கிறதுதான். இது போலத்தான் நாய், பூனை, கிளி, முயல் எல்லாமே. நாம வீதில நடக்கும் போது சில தெரு நாய்கள் நம்மைப்பார்த்து வாலாட்டுவதும், சில குரைத்து கடிக்க வருவதும், பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ஆதரவாக பேசுவதும், உதவிகள் செய்ய முன்வருவதும், ஒரே வயிற்றில் பிறந்த சகோதரன் பகையாவதும் இதனடிப்படையில் தான்” என்று சோதிடர் கூறிய போது வியப்பின் எல்லைக்கே சென்றாள் ரணிகா. அவளுடைய தாயாருக்கும் இன்னும் சிறிது நேரம் அவரது பேச்சைக்கேட்கலாம் என தோன்றியது.

“நண்பர்களா இருக்கிறவங்க பெரும்பாலும் வசிய ராசிக்காரங்களாகத்தான் இருப்பாங்க. ஆனா அதே சமயம் கெட்ட நடத்தை உள்ளவங்க வசிமாக கூடாது. நம்ம வாழ்க்கையையே பாழடிச்சிடுவாங்க. நீங்க வேணும்னா உங்க நண்பர்களோட ராசிய கேட்டுப்பாருங்க. மேசத்துக்கு சிம்மம், விருச்சிகம்; ரிசபத்துக்கு கடகம், கன்னி, துலாம்; மிதுனத்துக்கு கன்னி; கடகத்துக்கு ரிசபம், விருச்சிகம், தனுசு; சிம்மத்துக்கு மகரம், மேசம்; கன்னிக்கு ரிசபம், மிதுனம், விருச்சிகம், மீனம், என்னோட அனுபத்துல கும்பம் சேர்த்துக்கலாம். துலாத்துக்கு மகரம், ரிசபம்; விருச்சிகத்துக்கு கடகம், கன்னி, மேசம்; தனுசுக்கு மீனம், கடகம்; மகரத்துக்கு சிம்மம், துலாம், கும்பம், மீனம்; கும்பத்துக்கு மகரம், மீனம்; மீனத்துக்கு கன்னி, தனுசு, மகரம், கும்பம் என ஒன்னுக்கொன்னு வசியமாயிடும். ஆனா திருணத்துக்கு வசியம் மட்டுமே போதாது. நட்புக்கு, நடைமுறை வாழ்க்கைல சந்திக்கிற மனுசங்களுக்கு ஒத்து வரும். உதாரணத்துக்கு மளிகைக்கடைக்காரருக்கு உங்க ராசி வசியம்னா பத்துப்பேருக்கு பின்னால நீங்க வரிசைல நின்னாலும் முதலா பொருளைக்கொடுத்து அனுப்புவாரு பாருங்க “என சோதிடர் சொன்னபோது, தனக்கும் நட்புகளோடு ஒத்துப்போகும் நிலையை அவர்களுடைய ராசியை ஏற்கனவே தெரிந்ததால் ஆராய்ந்த போது அதிசயமாகப்பட்டது.

“ஒரே வேலைக்காக பல பேர் காத்துகிட்டிருக்கிற ஒரு கூட்டத்துல நிற்கும் போது தூரத்துல இருந்து நம்மைத்தேடி ஒருவர் வந்து பேசறதும், அவரைப்பத்தி நாம விசாரிக்கிறதும், போன் நெம்பர் வாங்கிக்கிறதும், தினமும் நேரம் போறது தெரியாம பேசறதும், அவங்க வீட்டுக்கு நாம போறதும், நம்ம வீட்டுக்கு அவங்க வர்றதும்னு தொடர்கதையாகும். அதுவே இரண்டு பேரும் ஆண் நண்பர்களாகவே இருந்தா குடும்பத்துலயும், ஊர்லயும் யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆண், பெண் என இருந்துட்டா பரிசுத்தமான நட்பா இருந்தாலும் கதை கட்டி பேரைக்கெடுத்திடுவாங்க. அதனால ஒருவரைப்பார்த்தா திரும்ப, திரும்ப பார்க்கத்தோணுச்சுன்னா பின் விளைவுகளை சிந்திச்சு அளவா பழகிட்டா ஆபத்தில்லைங்கிறது அறிவாளிகளுக்கு மட்டும் புரியும். வெகுளித்தனமானவங்க கெட்டவங்ககிட்ட வசியமாயிட்டா சொத்துக்களை அடமானத்துக்கு கொடுக்கிறது, சேமிப்பைக்கொடுக்கிறது, கடனுக்கு ஜாமீன் போடறது, நகைகளை கழட்டிக்கொடுக்கிறதுன்னு நட்பை நம்பி தனக்குன்னு செலவு செய்யாமலேயே சொத்துக்களை இழந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. உறவுகளிலேயும் வசியமான கெட்டவங்களால ஏமாந்திருக்காங்க. ஆக நல்லவங்க வசியம் நன்மையிலையும், தீயவங்க வசியம் தீமையிலையும் முடியும். கண்மூடித்தனமா வசியமானகிறவங்களை நேசிக்கிறதும் ஆபத்து தான்கிறது என்னோட கருத்து. நெருப்பு மாதிரி தான் கையாளனம்” என தனது சோதிட அனுபவங்களை கொட்டி விட்டு அவள் முகத்தை உற்று நோக்கினார் சோதிடர் பரமசிவம்.

தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்த திருப்தியில், சோதிடம் எனும் பெயரில் நம் முன்னோர்களுடைய ஆராய்ச்சி கண்டு பிடிப்பை எண்ணி ஆச்சர்யம் கொண்டவளாய் சோதிடரைப்பார்த்து கைகூப்பி வணங்கி விட்டு தன் தாயுடன் விடைபெற்றுச்சென்றாள் ரணிகா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *