கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 13,021 
 
 

இத்தனை காலமும் மனசுக்குள்ளிருந்து ஒரு பார்வை. ஒரு திருப்தி எல்லாமே திடுதிப்பென்று அசைவது போலிருந்தது வினிதாவுக்கு.

உண்மையில் தன் கணவர் தனக்குத் துரோகம் செய்கிறாரா? அதுவும் தன் தோழியுடன்…?

இந்த அதிர்ச்சிமிக்க ஒரு விஷயத்தை அவளால் நம்ப முடியவில்லை. அவளால் நம்ப முடியவில்லை என்பதைவிட நம்ப விரும்பவில்லை என்று சொல்வதுதான் உண்மை.

கணவர் வசந்த் ஒரு உல்லாசபிரியர் என்பது அவளுக்குத் தெரியும். பெண்களிடம் சகஜமாக பழகுபவர் என்பதும் அவளுக்குத் தெரியாமலில்லை. ஆனால் அந்த பழக்கம் மனைவிக்கே துரோகம் செய்யும் அளவுக்கு செல்லக்கூடியது என்று அவளால் நினைக்கமுடியவில்லை.

அப்படி நினைத்துப் பார்க்கவே அவளுக்கு ஒரே திகிலாக இருந்தது. எனவே அந்த நினைவுக்கு தன்னை கொண்டு போகமல் கட்டுப்படுத்தி போராடிக் கொண்டிருந்தாள்.

பின் ஏன் அவர் மஞ்சு வீட்டுக்கு போயிருந்தார்?

மஞ்சு பேரிலும் சந்தேகம் வரவில்லை வினிதாவுக்கு. மஞ்சு அப்படிப்பட்ட பெண்ணே அல்ல. தனக்கு ஆயிரம் புத்திசொல்பவள் அவள் அப்படி நடப்பாளா?
குழப்பத்துக்கும் தானே வருவித்துக் கொள்ளும் பிடிவாதமான தைரியத்துக்கும் இடையே நெளிந்து கொண்டிருந்தாள்.

வாசலில் ஹøரோ ஹோண்டா வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அவரா?

ஜன்னல் வழியே பார்த்தாள். வசந்த்தான்.

மனசுக்குள் ஒரு வேதனை! இத்தனை நேரமும் இன்னொரு பெண்ணிடம் தனியே இருந்து விட்டு வரும் கணவரை சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு.
வசந்த் வழக்கம் போல் சீட்டியடித்துக் கொண்டே உற்சாகமாக வந்தான்.
எந்த மாற்றமும் தெரியவில்லையே. புதிதாக தவறு செய்திருந்தால்… முகம் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் அவர் நிச்சலனமாக இருக்கிறாரே! அவளுக்குள் ஒரு மயக்கம்.

“என்ன டார்லிங். எங்கேயாவது வெளியில் புறப்பட்டுகிட்டு இருக்கியா. புது டிரஸ் போட்டிருக்கே?”

வழக்கத்தைவிட வசந். உற்சாகமாக இருப்பதுபோல் தோன்றியது அவளுக்கு.

“வெளியிலிருந்துதான் வர்றேன்” என்றவளுக்கு ‘மஞ்சு வீட்டுக்குத்தான் வந்திருந்தேன்’ என்று சொல்ல வாய் வந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“உங்களுக்கு ஆபீசிலே ரொம்ப லேட்டாயிட்டோ?” ஆழம் பார்த்தாள்.

“நோ… நோ… ஆபீசை விட்டு கிளம்பிட்டேன்”.

“யாரையாவது பார்க்க போயிருந்தீங்களா?”

“யாரையாவது இல்ல, உன் பிரண்ட் மஞ்சு வீட்டுக்குப் போயிருந்தேன்.” பளிச்சென்று சொன்னான்.

அந்த வினாடியே வினிதாவுக்கு தன்னைச் சுற்றியிருந்த சந்தேக மேகங்கள் கலைந்து மறைந்து போனது.

இவரையா சந்தேகப்பட்டோம். சே! தன்னையே நொந்து கொண்டாள்.
வினிதாவுக்கு வசந்த்தின் சாமர்த்தியங்களில் அவ்வளவு பரிச்சயம் கிடையாது.
எப்போதும் எதையும் மறைப்பவன்தான் மாட்டிக் கொள்வான். தவறைக்கூட பகிரங்கமாகச் செய்தால், ரொம்ப வெளிப்படையானவன், தப்பு தண்டா இருக்காது என்று யாருடைய கவனமும் தீவிரமாக இருக்காது. இது வசந்த்தின் சாமர்த்தியங்களில் ஒன்று.

“தினமும் மஞ்சு வீட்டுக்கு போக வேண்டியிருக்கு. ஆபிஸ் கணக்கில் சில சந்தேகங்கள் எனக்கு. அவளும் நானும் அமர்ந்துஅதை சரி பார்க்கிறோம். இது மானேஜருடைய கட்டளை. என்ன செய்வது மீற முடியலே, அதான் லேட்டு’ சொல்லிக் கொண்டே மேலே மாடிக்கு போனான்.

பிரச்னையே வராமல் இருப்பதை விட இப்படி ஏதாவது வந்து அது சுவடு இல்லாமல் தீரும்போது ஏற்படுகிற சுகமே அலாதி.

அடுக்களையில் சென்று காபி கலந்து கொண்டு வந்தவளுக்கு ஏதோ ஞாபகம் இன்று அம்மாவிடம் வருவதாக சொல்லியிருந்தாள். அதைப் பற்றி அம்மாவிடம் பேசி அவசியமானால் இன்று வரவில்லை என்று சொல்லலாம்.
போனை எடுத்தாள்.

அச்சமயம் போனில் ஏதோ பெண் குரல் கேட்டது. வசந்த்திடம் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

“என்ன மஞ்சு…?”

“இன்றிரவு பத்து மணிக்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்”.

“ஏய்… இன்னிக்கு முடியாது போலிருக்கே…”

“ஏன் வசந்த்?”

“என் மனைவிக்கு சந்தேகம் வந்திருக்குன்னு நினைக்கிறேன். கேள்வியெல்லாம் கேட்கிறாள்.”

“எனக்கு அதெல்லாம் தெரியாது. உங்க சாமர்த்தியத்தால உங்க மனைவியை சமாளிக்க முடியும்னு எனக்கு தெரியும். கண்டிப்பா பத்து மணிக்கு வர்றீங்க. நான் காத்துகிட்டு இருப்பேன்”.

“ஓ,கே…ட்ரை பண்றேன்…”

“தாங்க் யூ டார்லிங்” என்று முத்தம் கொடுத்தாள் மஞ்சு.

தன் முகத்தில் யாரோ காறி உமிழ்ந்தது போல் உணர்ந்தாள் வினிதா.

கனத்த கால்களுடனும், கையில் காபியுடனும் மாடிப்படி ஏறினாள். வசந்த் இப்போது வழக்கம் போலில்லை. ஏதோ பரபரப்புக்குள்ளானவன் போல்…

“டெலிபோன் மணி அடிச்சுதே… நான் பாத் ரூமில் இருந்தேன். பேசினது யாரு?” என்று மெதுவாக கேட்டாள் வினிதா.

“கேட்டேன், யாரோ ராங் நம்பர்” என்று புளுகினான் வசந்த் படபடப்புடன்.

கலைந்த மேகங்கள் திடீரென்று ஒன்று கூடி அவள் தலையையே கவிழ்த்துக் கொண்டதுபோல் இருண்டு போய் நின்றாள் வினிதா. ‘ராங் நம்பர் தன் கணவர் மட்டுமல்ல, தோழியும்தான்’ என்று இடிந்து போனாள்.

– வாரமலர், பிப்ரவரி 1, 2004.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *