கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 25, 2019
பார்வையிட்டோர்: 10,557 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அபிராமி. அன்றொரு நாள், கிணற்றில் குடி ஜலம் மொள்ள வந்தாயே, நினைவிருக்கிறதா? எத்தனையோ முறை வந்திருக்கிறாய்? ஆனால் நான் குறிப்பிடுவது அந்த ஒரு நாளைத்தான்.

உன் திருமணத்தன்று, உன் கடைசிப் பிரயாணத்தில் உன் வீட்டுக் கிணற்றடிக்கு நீ போகும் வழியில் என்னைப் பார்த்த பார்வைக்கு இன்னமும் அர்த்தம் படித்துக் கொண்டிருக்கிறேன். உன் மணப்பந்தலின் தோரணங்கள் என்மேல் உராய்ந்து கொண்டிருக்கும் பிரமை இன்னும் தட்டுகிறது.

நாம் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வயது ரெண்டுங்கெட்டான் வயது. அதில் ஆண்களின் அவஸ்தை ஒருபாடு. பெண்கள் உங்களின் மன ஆழம் உங்களைப் படைத்த ஆண்டவனும் அறிய இயலாதது. நான் எம்மாத்திரம்?

என்றுமே நீ எனக்குத் தூரதர்சனி. இப்பத்தான் நீ உன் நக்ஷத்ரக் கூட்டுக்குள் புகுந்து விட்டாயே!

நானும் கொல்லைப்புறம் வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தேன். நீ தவலையை நிரப்பிவிட்டு, கிணற்றுச் சுவர் மேல் இருந்த தவலையை இடுப்பில் ஏற்றிக்கொள்ளத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாய்.

நீ கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து, “என்னா பார்க்கறே?”.

என்ன பார்த்துக் கொண்டிருந்தேன், உனக்குத் தெரியும். என் வயதில் நீ பெண். உன் உடல்வாகில் உணர்வு வாகில் என்னைவிடத் தெரிந்தவள் அல்லவா?

ஆனால் நான் பார்த்ததை கேட்டும் சொல்ல எனக்கு நா எழவில்லையே! நாக்கு வாய்க் கூரையை முட்டி, நான் தவித்த தவிப்பு கண்டு, நீ வாய் விட்டு சிரித்து விட்டாய். தவிப்பு என்னுடையது. அதைத் தாண்டிய குரூர இன்பம் உன்னுடையது.

சட்டென்று தலையை சாய்த்து, கிணற்றுள் ஜலத்தைச் சிந்தி, அதில் தெரிந்த நிழல்களை கணத்தில் அழித்து விட்டு மறுபடியும் கக்கடகடவென உன்சிரிப்பு. தவலையை இடுப்பில் ஏற்றிக்கொண்டு, வேணு மென்றே முதுகை என் பக்கம் திருப்பிக் கொண்டு, சொகுசாய் இடுப்பை ஒடித்து ஒடித்து நடந்து போனாய்.

அந்த நேரத்தை உன் திருமண தினத்தன்று, உன் கடைசி பிரயாணத்தில் உன் வீட்டுக்கிணற்றடிக்கு நீ போகும் வழியில் என் மேல் வீசிய பார்வையில், நினைவு மூட்ட முயன்றாயோ? நான் நினைத்துக் கொள்வதுதான். ஆனால் நான் நினைத்துக் கொள்வதன் அகில் மணம் நக்ஷத்ரங்கள் வரை எட்டுகிறது.

நீ அப்படி என்பக்கம் முதுகைக் காட்டி, வேண்டு மென்றே இடுப்பை ஒடித்து ஒடித்து கடந்து செல்கையில், உன் பின்னலில் குடியிருந்த பூச்சரத்தினின்று ஒரு தாழம் பூ மடல் கிழிசல் பூமியில் உதிர்ந்தது. அதை எத்தனை நாள் எனக்குப் பிரியமான புத்தகத்தில்-பூரீராமகிருஷ்ண பரம ஹம்ஸரின் உபதேச மொழிகள்-பொத்தி வைத்திருந்தேன்-தெரியுமா?

அந்தச் சின்னத்திற்கு அந்த இடம் தகுதி தான் என்று அச்சமின்றிச் சொல்வேன். முதல் மோகம், முதல் தாகம், முதல் தாய்மை, முதல் அர்ப்பணம், அம்பாளுக்கே உரித்தானது. உன் கூந்தலினின்று உதிர்ந்த பூ பொய் சொல்லாத பூ. ஆனால் நீ ஏன் பொய்த்தப் போனாய்?. இருந்து வாழ்பவர் ஒன்றும் சாதித்து விடவில்லை. ஏதும் அறியா அபிராமி, நீ கடைசியாக எடுத்த துணிவு கூட உனக்கு ஒரு கேலியாகத்தான் இருந்திருக்கும் என்றுத் தோன்றுகிறது. அந்த வயதில் வாழ்க்கையைக் கேலி காட்டிய நீ ஞானியா, பேதையா? உன் உயிரைப் போக்கிக் கொள்ள உன் உரிமையை நிலை காட்டிய ஸ்வதந்தரியா?

அபிராமி, வானத்தில், இந்த நக்ஷத்ரக் கொள்ளையில் எங்கு இருக்கிறாய்? உன் கூடு எங்கே?


நினைவின் சருகுகள் சலசலக்கின்றன. அவை மேல் யாரோ நடந்து செல்கின்றார்கள். யாரேனும் நடந்து சென்று கொண்டே தானிருப்பார்கள். பாதை ஒருவருக்கு மட்டும் சொந்தமல்லவே!

காதல்-ஊஹூம். இந்தப் பெயர் எனக்குச் சரியாகப் படவில்லை. மீறிப்போன உதவுபடியில் அவலமாகி விட்டது. அது சுமக்கும் பொருள் கனம், வீச்சுக்கு ஓசையின் கார்வை எப்படி இருக்கவேண்டும்! காதல்!-சத்தத்தில் உப்பு சப்பு இல்லை. ஆனால் சொல்ல வந்தது இது அல்ல. வயது முற்ற முற்ற அனுபவம் கண்ட உண்மை. காதல் என்பது ஒருவரே பிடித்துக்கொண்ட கோட்டை அல்ல. நிரந்தரமாக ஒருவர் மேல் மட்டும் அது பதிந்திருக்க முடியாது. அது இயற்கையுமல்ல. மனிதனின் உண்மையுமல்ல. அப்போது அதன் பெயர் அதுவுமல்ல.

ஒரு கவிதா நேரம் தருணோதயத்தின் அனுக்ரஹம். லோகோஸ்ருதியினின்று தெறித்த ஒரு சொட்டு. பட்ட இடம் கன்றிப்போ. இந்த நேரங்கள், தெறிப்புகள் அவ்வப் போது நேர்ந்து கொண்டேயிருக்கும். பட்டவர் சுட்டவர் பாக்யவான்கள்,

த்யானம் என்பது என்ன? எண்ணங்களைப் போடும் அசையில், அவை ஒரே எண்ணத்தின் விழுதாகத் திரள் துவதானே! பிரிகளைத் திரித்து ஒன்றாக்கிய திருவடம்.

அவகாசத்தில் இந்தக் கவிதா நேரங்கள், தாமாக நினைவுக்கு வந்தோ, வரவழைத்தோ, புழுங்கிப் புழுங்கி, காதலே தியானமாகி விடுகிறது.

ஆகவே அபிராமி, வயது முற்ற முற்ற அனுபவம் கண்ட உண்மை, என் காதல் உன் மேல் மட்டும் சிறை கொள்ளவில்லை. யாழ் மீட்டுகிறது. உதிரும் காதங்களில் நீ ஒன்று, நான் ஒன்று, ஒன்றொன்றாய் ஒன்றுகள், ஒன்றின் ஒன்றுமணிகள். ஜன்மாவின் ஜபமாலை. கோர்க் காமல் சிதறுண்ட மணிகள் ஒன்றொன்றாய் பொறுக்குகிறேன். சிறியதும், பெரியதுமாக சிந்திக்கிறேன். ஒவ்வொன்றாய் உச்சரிக்கிறேன். ஒவ்வொன்றாய் நழுவி நினைவில் மூழ்கி விடுகிறது. அது அது அதனதன் படுகையில் ஜ்வலிக்கின்றது. அவை மேல் வரா. அவைகளின் ஆழம் அப்படி.

சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறேனோ? சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும். அலுக்காத வரை. இதுவேதான் என் கீதம். உள்ளமும் உடலும் ஒன்று நெகிழ்ந்த கற்கண்டு நேரங்களை விரும்பாதவன் இல்லை. ஒருதரமேனும் ருசி காணாதவன் இல்லை.

காதலுக்கு வியாக்யானம் பண்ற வயசைப்பாரு! காடு வா வாங்கறது.

காதல் உயிர்ச்சாம்பல் பூ.


வீட்டுக் கிணற்றைச் சமீபத்தில், தார் வாரும்படி ஆகி விட்டது. சென்றுபோன மாதங்களில், கிணற்றுச் சுவரி லிருந்து உள்ளே விழுந்து விட்ட சோப்புக் கட்டிகள், ஒன்றிரண்டு துவாலைகள், வேப்பங்கிளையினின்று உதிர்ந்து உள்ளே அழுகிக் கொண்டிருக்கும் இலைகள், ராட்டின தூலத்தின் மேலிருந்து பறவையினங்கள் அவ்வப் போது சிந்திய பிரசாதங்கள்…

மறுநாள் காலை, பூஜையறையில்-இருக்கிற உழக்கு அது பெட்டி அறை, படங்கள் சுவர்களில் தொங்குகின்றன. ஒரத்தில் சிறு மேடைமேல் குத்துவிளக்கு, புவனேஸ்வரி படம், பூஜாதிரவியங்கள்-நான் மூக்கைப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கையி ல் என்னென்னவோ பண்ணிப் பார்க்கிறேன். இமைத்திரையில் ஒடுவது நான் நினைக்க முயல்வது அல்ல, வேறு ஏதேதோ-சாரு பரக்கப் பரக்க ஓடி வந்தாள். அவள் கண்களில் தனி ஒளி, திடீரென சாரு அழகாகி விட்டாள்.

“தோ பாருங்களேன்! இதோ பாருங்கோளேன்!! அவள் கைகள் நடுங்கின. குவிந்த உள்ளங்கைகளில்-“கிணற்றிலிருந்து வாரிக்கொட்டிய கும்மி சேற்றை கிளறிண்டிருந்தபோது கிடைச்சது!”

இன்று சோமவாரமுமதுவுமாய்-

நின்று கொண்டிருக்கிறார். காலடியில் வாஹனம். லக்ஷணமான முகம், அந்தக் கண்களில் தான் எப்படி உயிர் சிந்துகிறது! கிரீடத்தின் நுனியில் ஒரு இம்மி மூளி. ரொம்ப ரொம்ப இம்மி. தேடிப் பார்த்தால்தான் தெரியும்.

சாரு குழந்தையாகி விட்டாள். முன் வாசற்படியை ஒட்டிச் சின்னகோயில் கட்டுவதில் முனைந்துவிட்டாள். எங்கிருந்துதான் சிமிட்டியும் செங்கலும் இறங்கினவோ? என்னிடமிருந்து ஒரு பைசா பெயர வழியில்லை. தன் கையாலேயே………

அவளே கண்பட்டால் கை செய்யும் சுபாவத்தினள். ஆனால் முனைந்த காரியத்தை முடிக்கும் கையினள் என்று சொல்லமாட்டேன். ஆரம்ப உற்சாகம் ஒடுங்குமுன் எடுத்த காரியம் முடிந்தால் அதிர்ஷ்டம்.

பரவாயில்லை. ப்ளானாய்த்தான் கட்டுகிறாள். இரண்டு குட்டி வாசற்படி தாண்டி, குட்டிக் கர்ப்பக்ரஹம் நிறுவன விழாவை நோக்கி வசூல் வேறு தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு அவள் சைன்யம் இருக்கிறது. சந்தோஷமாய் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.

“சாரு மாமிக்கு அதிர்ஷ்டத்தைப் பாருடி! இனிமேல் அவளுக்கென்ன குறைச்சல்.”


நடு கிசி, கலைந்துவிட்ட தாக்கம் மீள மறுத்து விட்டது. கூடத்தின் சுவரொட்டிக் கடிகாரம், பெண்டுலம் தான் அதன் ஜபமாலை நொடிகளை சொடுக்கிக் கொண்டிருக்கிறது.

யாரோ என்னை அழைக்கிறார்கள். பேரைச் சோல்லி இல்லை மோனமானதோர் விளிப்பு சைகை அல்ல. உள்ளத்தில் உத்தரவின் எதிரொலிப்பு. கட்டுப்படாத வசியத்தில், அது ஈர்க்கும் வழி செல்கிறேன்.

டக் டக் டக்-நொடிகள். நொடிக்கு ஒரு நாமம். கோடி நாமம். நாமகோடி கொடியே நாமம்.

குறுகிய கூடத்தில், தூக்கத்தில் விதவிதமாய் மலர்க் திருக்கும் உடல்களைத் தாண்டி, பூஜை அறையுள் நுழைகிறேன்.

மேடை மீது, குத்து விளக்கில், சுடர் லேமுத்து. தொந்தியைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு நிற்கிறார். ஒரு கையில் தும்பிக்கையின் கனத்தை மோதகத்துடன் தாங்கிக் கொண்டிருக்கிறார். கண்கள் பளபளக்கின்றன. அவைகளில் எப்படி உயிர் சிந்துகிறது: மார்பு மிதக்கிறதா? உடல் பரபரக்கிறது. கைகள் கூம்புகின்றன,

உத்திரவு?

கீச் கீச்- காலடியில் ஒரு மீஞ்சூறு, தன் வாடையை வீசிக்கொண்டு, விழுந்தடித்து ஓடுகிறது.

எல்லாம் ப்ரமையாகவே இருக்கலாம். இருந்துவிட்டும் போகட்டும். ஆனால் அந்தக் கண்களில் ஏதோ அர்த்தம், அந்த அர்த்தம் தரும் சேதி என்னை ஊடுருவுகிறது. அதன்படி, அவரை இரு கைகளிலும் வாரி எடுத்துக் கொண்டு,

பூஜையறையைக் கடந்து

கூடம் கடந்து

முருகன் காலண்டர் ஆணியில் தொங்கும் சாவியை எடுத்துக்கொண்டு

சமையலறையுள் நுழைந்து

கதவைத்திறந்த உடனேயே கிணற்றடி.

கிளுக்-

வேப்பங்கிளையிலிருந்து அர்ச்சனையில், பூக்கொத்தும், இலைகளும் கிணற்றுள் உதிர்கின்றன. சந்திரன் அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருக்கிறான். பகுள பஞ்சமியின் பாலச்சந்திரன். என்னைக் கவ்விக் கொண்டிருந்த அதீத நிலை, படிப்படியாகத் தணிகிறது.

நாளைக்குப் பெரும் ரகளையிருக்கிறது. அவளுடன் சேர்ந்து நான் விக்ரஹத்தைத் தேட முடியாது. சாமி விவகாரம். பொய் கூடாது. அழுவாள், அமர்க்களம் பண்ணுவாள். அவர் கிணற்றுக்குத் திரும்ப விரும்பினார் என்றால், அவள் என்ன புரிந்து கொள்ளப் போகிறாள்?.

காதலும் அப்படித்தான். என்னதான் விளக்க முயன்றாலும் யாரும் புரிந்து கொள்ளப் போவதில்லை. காதல் புரிந்து கொள்வதில்லை.


பிள்ளையாரை மீட்க, சாரு பட்டபாடு பாதாள கொலுசுக்கு விக்ரஹம் பிடிபடவில்லை. பிடிபடாது. வாளியை முங்கி முங்கிப் பார்த்தாள். அதிலே மாட்டிக் கொள்ள மாட்டாரா? பிள்ளையார் மிதந்து கொண்டா இருப்பார் இவளுக்காக? பால்க்காரப் பெருமாள் மூழ்கி எடுக்க மாட்டானா? ஆழம் இருபது அடிக்குப் பஞ்சமில்லை. கிணற்றின் மேல் குனிந்த அவள் முகம், அவ்வப் போது நிமிர்கையில் அவள் கண்கள் என்னைக் குற்றம் சாட்டின. அவைகளில் சாபம் சிந்திற்று. எரிக்க முடிந்தால் இவள்

கோவலனை எரிக்கும் கண்ணகி,

ஆழத்தின் பத்திரத்திலிருந்து சிரிப்பு கேட்கிறது, என் மட்டில்தான். சாரு பிள்ளையார் மேல் காதல் கொண்டு விட்டாள். காதல் சிரிக்கிறது. காதலின் சிரிப்பு, கண்ணிர் மணிகளின் மெல்லிய கிண்கிணி.


ராமனுக்கும் அனுமனுக்கும் இடை உறவு பற்றி இப்போது அடிக்கடி சிந்திக்கத் தோன்றுகிறது. சுந்தர காண்டம் படிப்பதன் விளைவு எனக்கு வேலை உருப்படியாகக் குதிரவேண்டும். நாலு மளிகைக் கடைகளில் கணக்கெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு விறகு மண்டியின் கல்லாவில் மாலை ஒரு மணி நேரம் உட்காருகிறேன். மத்யானம் ஹைகோர்ட் கிழல் ஒதுக்கத்தில் வேறு ஒருவர் டைப்ரைட்டரில் ஜாப் வேலை செய்கிறேன். பிழைப்பு இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மூன்று ஆகிவிட்டன. எனக்கும் உறுதியான வேலைக்கும் ராசி இல்லை. ராசிக்கு வழியில்லை. ஆகவே அனுமார்தான் எல்லாக்காரிய சித்தி.

ராமன் ஹனுமான் எஜமான் வேலைக்காரனா? ஹனுமான் தன்னை ராமனுக்குப் பணியாளாகப் பாவித்துக் கொண்டாலும், ராமன் தன்னை எசமானாக நினைத்துக் கொண்டதில்லையே! ராமன் இல்லாமல் ராமாயணம் இல்லை, ஆனால் அனுமான் இல்லாமல் ராமகாரியமும் நடை பெற்றிருக்க முடியாது. அடிப்படை அனுமான் கடல் தாண்டி சீதையைக் கண்டிராவிட்டால் ராமாயணத்துக்கே திசைமாறிப் போயிருக்கும். பின்னரும் அனுமத் சாதனைகள் ஒவ்வொன்றும் சாமான்யமானவையா? இத்தனையும் செய்து, இனியும் எத்தனை செய்யவும் தயாராக, எதற்கும் கனவில்கூட கைம்மாறு எண்ணாது இது என்ன அனுமனின் தலையெழுத்து? எல்லாரும் அவதாரம் எனும் சமாதானத்தைத் தள்ளு. மனித இயல்பில் சீர் தூக்கிப்பார். இது காலம் பகுத்தறிவினுடையது.

ராமனுக்கும் அனுமனுக்கும் இடையில் இந்த அபிமானம் எந்த வகையைச் சேர்ந்தது?

பக்தி? அன்பு?? விசுவாசம்???

காதல்???? ஆணுக்கும் ஆணுக்குமா கையை ஓங்காதீர்கள். எனக்கு அடைக்கலம் இருக்கிறது. காதலாகிக் கசிந்து. சம்பந்தர் பாடியாச்சு.

ஃப்ராயிடும், ஐங்கும் வந்த பிறகு, மனோதத்துவ ஆராய்ச்சியாளர்க்கு எல்லாமே SEX தான்.

வளையிலிருந்து எட்டிப் பார்க்கிறேன்.


உடல் தாண்டி, அன்பு, விசுவாசம், பக்தி, அபிமானம், நட்பு, சினேக தடங்கள் தாண்டி, வக்கிரம்தாண்டி ஆணுக்கும் ஆணுக்கும் கூட காதல் உண்டு. புரிந்தவர்க்குப் புரியட்டும்.

காதல் யாவரையும் கடந்தது.


நள்ளிரவில் எழுந்து கிணற்றடிக்குச் சென்றேன். பிள்ளையார் அழைக்கவில்லை. நானேதான்.

எட்டிப் பார்க்கிறேன். உள்ளே கும்மிருட்டு, எங்கும் நிசப்தம். அமைதி. என் மனதில் தவிர.ஆழம் இருபது அடி. குழந்தைகள் மூன்று. பெண்டாட்டி, ஊஹூம். எவனும் எனக்கு இரக்கம் காண்பிக்க மாட்டான். கையாலாகாத கப்பி என்று தாற்றுவான். ரோசம் சாவையும் தாண்டி எட்டுமோ? இதென்ன உள்ளிருந்து சத்தம். நச்சென்று தும்முகிற மாதிரி? அச்சமாயிருக்கிறதே. உறைக்கு உறை இடை சந்தில் கிணற்றை வளைத்துப் படுத்திருக்குமா? கிணற்றடியிலிருந்து திரும்புகிறேன்.

வாசற்பக்கம் சிமிட்டி மேடை மீது அமர்கிறேன்: குளிர்ந்த காற்று நெற்றியை ஒற்றுகிறது. காற்றின் வழி அம்மா உனக்கு நமஸ்காரம்.

எட்ட, TENT சினிமாவிலிருந்து பின்னணி இசை, SUSPENSE கட்டம் போலும். டிரம்ஸ் திடு திடும் திடும் திடும், க்றீச்சில் அலறும் ஒற்றை வயலின்.

இந்த சினிமாப் பின்னணி இசையெல்லாம் எந்த ராகத்தைச் சேர்த்தி? ஏதோ சப்தங்களின் அவியல். எனக்குச் சிரிப்பு வருகிறது. உடனே தெளிகிறது. உணர்ச்சிக்கு முக்கியம் கொடுத்து, இதுவும் ஏதோ அடிப்படையில்தான் உருவாகிறது. இன்று வேலை தேடிப்போன இடத்தில் எனக்கு நேர்ந்தது நினைப்பு வருகிறது.

ராக் த்ரோக்.

தூக்கி வாரிப்போட்டது. அப்படி ஒரு ராகம் இருக்கிறதா என்ன?

இருக்கணுமா என்ன?

இதோ உண்டாகி விட்டதே!

துரோகம் இன்றைய வாழ்க்கையின் நியதியிலேயே புகுந்து விட்டது. சின்னச் சின்ன துரோகங்கள் செய்பவர்களுக்குத் தெரியும். செய்யப் பட்ட்வர்களுக்குத் தெரியும். ஆனால் சொல்லிக்காட்ட முடியாது. புதிய தலைமுறை ஏற்படுத்தும் புதிய மதிப்புகள்-வால்யூஸ் என்று எண்ணம்(I)

பெற்றோரிடத்தில் தங்கள் உண்மையான சம்பளத்தைச் சொல்லாத பிள்ளைகள்; போகும் இடம், திரும்பி வரும் நேரம் தெரிவிக்காத மக்கள்; நேரம் ஆக ஆக வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாசலில் நீ உட்கார்ந்திருந்தால் உன் தலையெழுத்து. படு.

நீ கொடுத்த பணத்திற்கு நீ கணக்குக் கேட்டால் உனக்குச் சொல்ல கெளரவம் பார்க்கும் தலைமுறை. செலவு கேட்டால் நான் அல்பன்.

பாடப்புத்தகத்திற்கு நடுவே சினிமாப் பாட்டுப் புத்தகம். இதைவிடப் பெரிய சமாச்சாரங்கள் இருக்கின்றன. வேண்டுமென்றே அவைகளை நான் இழுக்கவில்லை.

சிறு சிறு அலக்ஷியங்கள்- கூப்பிட்ட குரலுக்கு பதில் குரல்? கிடையாது. என்னைப் பாம்பே கடித்திருக்கலாம். ஆனால், “நான் என்ன கண்டேன்? நான் என்ன செய்ய முடியும்?”

புத்திமதி. யார் கேட்டது?

த்ரோக வின்னியாசம். எல்லையே இல்லை. ஆனால் இவைகளை நான் குறிக்கவில்லை. ராக்த்ரோக் (திடும் திடும் திடுதிடும்-ஒற்றை வயலினில் ஒற்றைத் தந்தியின் க்றிச்-இது உருவகத்துக்கு மட்டும்-ஸ்வரங்கள் இன்னும் பிடிபடவில்லை) இவைகளால் உருவாகவில்லை.


வேலைக்குப் பேட்டிக்கு அந்தக் காரியாலயத்தை நான் அடைந்தபோது, முன் அறையில் ஏழுபேர் காத்திருந்தனர். எல்லோரும் டிப்டாப். வண்ணானுக்கு வக்கில்லாமல் தோய்த்துத் தோய்த்து நிறமே மக்கிப்போன என் உடை மீது என்னை அறியாமலே என் கண்ணோட்டம் விட்டதும்-திரும்பப் போய்விடலாமா? இவர்களுக்கு எதிரே எனக்கென்ன சான்ஸ் இருக்கப்போகிறது? தீர்மான மாக ஸ்படிகப்படுமுன்-

“மிஸ்டர் ராதாகாந்த்’ அட அதற்குள்ளேயா? எழுந்து உள்ளே சென்றேன். அவர் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. ஏதோ பேப்பர்களைத் திருப்பிக் கொண்டிருந்தார்.

“ஸிட் டெளன் ப்ளிஸ்”

அவருக்கு ஏறக்குறைய என் வயது மூன்று நான்கு கூட இருக்கலாம். கறுப்பு லேசாய்த் தோய்ந்த மூக்குக் கண்ணாடி எதிரே மேஜை சிறியது. அவர் புரட்டிக் கொண்டிருக்கும் பைலைத் தவிர துடைத்து விட்டிருந்தது. கருங்காலிப் பளபளப்பில் அடியில் பிம்பங்கள் தெரிந்தன. மேஜை இதற்கு மேல் தேவையுமில்லை. பதவி உச்ச உச்ச முக்கியமான ஒன்றிரண்டு கையெழுத்துக்குத்தானே! மிச்சத்தை நொந்து, மண்டையைக் குடைந்துகொண்டு, சத்தைப் பிழிந்து எடுத்துத்தர, கீழ்த் தடவாளங்கள் இருக்கின்றனவே! இவர்களுக்கும் வீட்டுக்கும் ஆபீசுக்கும். என்ன வித்தியாசம்?

ஏஸி, மூலையில் ஃப்ரிஜ், ஒரு தடுப்பு ஸ்கிரீன் பின்னால் வாஷ்பேஸின் பாத் அட்டாச்ட் இவையெல்லாம் என் தரித்திரத்தில், என் பார்வை மூலம் தாக்கீது என்று சொல்லிவிடலாம்.

ஆனால் அவருடைய ஆகர்ஷம் அசாத்யமாக இருந்தது. பணத்துக்கும் ‘பவருக்கும்’ தனிக்களை என்கிற சம்பிரதாய வழக்கைத் தவிர இந்த மனுஷன் தனக்கே உரித்த ஒரு ஒளிப்ரபையுள், அதன் மோனச் சொட சொடப்பில் வீற்றிருந்தான்.

“ஆ, மிஸ்டர் ராதாகாந்த்’ குரல் வெகு அமைதி, அதிகாரம் வெளித் தெரியவில்லை. ஆனால் பட்டை வெட்டும் கூர்மையை மறைத்துக் கொண்டிருந்தது. கோ ஃபீலிங்ஹியர். “பேர் சற்றுப் புதுமையாக இருக்கிறது. அதனால் தான் முதலில் கூப்பிட்டேன். உங்கள் பேர் லிஸ்டில் கடைசிக்கு முதல்.”

“தாங்க்யூ ஸார்”

“உங்களுடைய எக்ஸ்பீரியன்ஸ்? ஹூம், நீங்கள் எங்கும் ஸெட்டில்ட் ஆக இருந்ததாகத் தெரியவில்லையே! குவாலிபிகேஷன்ஸ், பி.யூ.சி.க்கு மேல் இங்கே பேப்பர்கள் காணோம். ஏதேனும் உண்டா? இங்கே வந்திருக்கிற காண்டிடேட்ஸ் எல்லாம் கொம்பன்களாக இருக்கிறார்கள். காரியரைப் புதிதாக ஆரம்பிக்கிற வயசும் தாண்டிட்டீங்க, Already three children-Why-what is the matter with you?”

கூனிக்குறுகி, உள் கூசி ஒட்டி, உலர்ந்து கைப் புண்ணுக்குக் கண்ணாடியா? இவனுடைய சட்டாம் பிள்ளைத் தனத்தைக் கேட்டுக் கொள்ள வென்றே வந்த அவமானம்தான் உறுத்துகிறது. வேலை கேட்க வந்து விட்டு இந்தச் சூடு சொரணையெல்லாம், என்று போமோ, அன்றுதான் கொஞ்சமேனும் விடிவு காணலாம்.

சம்பந்தா சம்பந்தமில்லாமல், சாருவின் உருவம் என் முன் எழுந்தது. பாவம் சாரு தாலிச் சரட்டில் பொட்டு ஒன்றுதான் இருக்கிறது. வரும்போது, முழுச்சீருடன்தான் வந்தாள். ஒரு குறைச்சல் இல்லை. கொஞ்சமாயும் கொண்டுவரவில்லை.

“Speak up man, I haven’t all the day for you?”

எழுந்தேன்.

“Sit down! நான் உங்களை இன்னும் போகச் சொல்ல வில்லை.” Buzz!

ஆள் தோன்றியதும் “மத்தவங்களைப் போகச்சொல் vacancy filled up.”

என்னது? என் தொப்புளிலிருந்து தொண்டைக்கு ஒரு சிட்டுக்குருவி ஒரு தாவு தாவிற்று. தங்க வால் குருவி. நாக்கு நுனிக்கு வந்துவிட்ட கேள்வியை நல்லவேளை அப்படியே விழுங்கிவிட்டேன். தொண்டையில் அடைத்தது. அவசரப்படக் கூடாது. இது ஏதோ எலியுடன் பூனை விளையாட்டு, பெரிய மனுஷாள் விளையாட்டு. “வேலையா? உங்களுக்கா? உங்களுகென்று யார் சொன்னது?” என்று கேட்டு விட்டால் மூஞ்சியை எங்கே வைத்துக் கொள்வேன்?

அடுத்து அந்த ஆள் எங்கள் எதிரே இரண்டு coke, straw-வுடன் வைத்துவிட்டு மறைந்தான். ஒன்றும் புரியல்லே. இதென்ன நெருப்பில் சுட்டு நெய்யில் வதக்கல்? நான் பொரிகிறேன்; அவன் மணத்துக்கு.

அவர் உறிஞ்ச ஆரம்பித்துவிட்டார். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாயடைத்து விட்டது. எழுந்தேன். அவரும் எழுந்தார். பளார் என்று என் தோளில் ஒரு அறை.

“என்னடா ராது? என்னைத் தெரியல்லையா?” அந்தச் சிரிப்பு

“நம்பி!” பூமி மிதப்பலாடிற்று. மாபெரும் இருள் தூலங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ராக்ஷசக் கருஞ்சிலுவையில் கண் எதிரே பாய்ந்தன.

“ஆ, ராது இந்த உலகம் ரொம்பச் சின்னதுதாண்டா! சந்தேகமேயில்லை’

நம்பியேதான். என் நினைவின் தனிக் குளத்தில் அவன் குளிப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, நேரில் கண்டதும் என் அடையாளம் மறந்து போயிற்று.

அவனைச் சிந்தித்துக் கொண்டு நின்றேன். இந்த cokeஜ எடுத்து அந்த முகத்தில் அப்படியே அடித்தால் என்ன? ஆனால் அது சினிமா ஆகிவிடும்.

“ஆ, இப்போ உன் மனசில் என்ன நினைக்கிறே என்று எனக்குத் தெரியும். உன் முகம் சொல்கிறது. முகம் படிப்பதில் நான் தேர்ந்துவிட்டேன் ராது!”

என் புருவங்கள் வினாவில் உயர்ந்தன.

“அன்னிக்கு எவ்வளவு பெரிய ஜோக்’ அவனுடைய அவுட்டுச் சிரிப்பு என்னை எத்தனையோ வருடங்களுக்கு முன் கொண்டுபோய்விட்டது. ஆனால் அவன் நினைவு மூட்டியும் எனக்கு ஏன் கோபம் முள்வில்லை; அங்குதான் நம்பியின் சொக்குப்பொடி ஒரு விசன மேகம் என்மேல் படர்வது உணர்ந்தேன்.

“ஸ்பிக்அப் மேன்! ஸே ஸம்திங்”

ஒருமுறை ஏற இறங்க அவனைப் பார்க்கிறேன். இவன் அழகுதான். ஆனால் என் அழகு நம்பி எனக்குக் கிடைக்கவில்லை. கிடைக்கமாட்டாய். சிறுத்தைக்குத் தன் புள்ளிகளை மாற்ற இயலாது.

“ராது எங்கே போறே, நில் ராது, ராது!?”

திடுதிடுவென்று மாடிப்படிகள் இறங்கி, தெருவில் இறங்கி வேகமாய் நடக்கிறேன். “டேய் ராது எங்கே ஒடறே, கம்பாக்”. அவன் குரல் பால்கனியிலிருந்து துரத்துகிறது. “என்னிடம் தவிர உனக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காது. ராது ராது!!’

போனவிடம்கூடத் தெரியவில்லை. கால்கள் ஒடத் துடித்தன. பகுத்தறிவு தடுத்தது. ஜேப்படித்துவிட்டு ஒடுகிறேன் என்று. ஜனம் நினைத்துக்கொண்டால்? அப்புறம் குற்றுயிர்தான். . . அப்பவும், என்னை மீட்க ‘நம்பி’ தான் வரவேண்டும். அவனுக்குத்தான் வெற்றி மேல் வெற்றி. ‘ஸார்ஜண்ட் லீவ் ஹிம். ஐ கோ ஹிம், இட் ஈஸ் ஆல் ரைட். யெஸ் ஸார்’. அந்த ஜாதக ராசி அப்படி. என் ராதி?.

எனக்கேது ராசி! அதையும் சேர்த்துத் தான், நம்பி விழுங்கிவிட்டானே!’

பார்க்.

மறைவாக இடம் பார்த்து, ஒரு மரத்தடியில் குப்புற விழுகிறேன். அம்மா! அம்மாடி!!

ஒருநாள் கண்ணிரா? இரு நாளையதா?வருடிக்கணத் கில் உறைந்துபோன கண்ணிர்ப்பாறை.

துரோக நம்பி.

நம்பித் துரோகம்.

கண்ணிர் உடைந்துபெருகுகிறதே. இதுதான் ராக்துரோக்.

மரத்தினின்று சருகுகள் மேல் உதிர்ந்து என்னைத் தேற்ற முயல்கின்றன. ைே

நினைவின் சருகுகள்மேல் நடந்து செல்கிறான்.

நம்பிராஜன்.

மேடையில் புரண்டு மல்லார்கிறேன். இப்போது என் கண்கள் வீங்கி விளிம்பு. கட்டிய வரட்சிக்குளங்கள். வீட்டைச் சுற்றி முள்வேலிப் புதர்கள். இரவோடு இழைந்து இதவாய் சலசலக்கின்றன. எங்கோ துார, தண்டவாள மேட்டில் ஒரு வண்டித் தொடர், மலைப் பாம்பு போல், தன் வாலைச் சுற்றிக்கொண்டு, இஞ்சினின் விழிகள் ராக்ஷச ஒளித்தூலங்களை வீசியபடி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இது இப்படி இருக்கமுடியுமோ என்று உண்மையையே சந்தேகிக்கற மாதிரி மாயா வினோதக் கதைப் புத்தகத்திலிருந்து ஒரு பக்கம் உயிர்த்ததுபோல் காக்ஷிநிலை. இதோ இந்த வீடுதான், அதன் விரிசல் வெடிப்புகளுடன், உதிரும் காரையுடன். ஆனால் ததும்பும் உயிருடன் சொந்தமென்ற மிச்சம். இதுவும் இல்லாவிட்டால், குடும்பம் மானத்தோடு பட்டினி கிடக்கக் கூரையுமில்லாமல், நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.

மாமி ரொம்ப நல்ல மாதிரி.

“ஏண்டா, நீ மாத்திரம் இறங்கி வந்துட்டியே, அந்தப் பிள்ளையையும் கூப்பிடேன்”. மாமி குரல் மாடிக்கு எட்டும்.

“அவன் சாப்பிட்டுத்தான் வந்திருப்பான், அம்மா!’

“நன்னாயிருக்குடா. நமக்கு காலையில் பலகாரம், மத்தியானம் சாப்பாடு பழக்கம். அவன் காலையிலேயே சாப்பிட்டிருப்பான். இப்போ அவனுக்கு மறுபடியும் பசிக்க நேரமாச்சு. அழைச்சுண்டு வா!’

மாமி இப்படிச் சொல்வதால், கூடவே பசிக்கும். ஏற்கெனவே தொப்புள் குழியில் பள்ளம் பெரிசாய்த்தானிருக்கிறது. எனக்கென்று எவர்சில்வர் தட்டை அவர்கள் வீட்டில் ஒதுக்கியும் ஆச்சு.

மாமி சொல்லும் வேளைப் பசியைத் தவிர ஏழைப்பசி என்று ஒன்று இருக்கிறது. எவ்வளவு கொட்டினாலும் நிறையாத குழி. கண்ட இடத்தில் கிடைத்தவரை சுருட்டு எனும் கொள்கைப் பசி. சினேகிதத்தின் சலுகையில், பூச்சில், மானங்கெட்ட பசி.

அவர்கள் குடும்பம் பெரிது. நம்பிக்கு ஒரு அக்கா, ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், இரண்டு வேலைக்காரர், சமையல்காரன், சொந்த வீடு, நிலபுலன், வீட்டுச்செலவுக்கு ஊத்துக்குழியிலிருந்து மாதம் ஒரு டின் வெண்ணெய் வரவழைத்தார்கள். டெலிவரி எடுக்க சில சமயங்கள் நான் போவேன். சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போக வர பஸ் செலவு, டிபன் செலவுக்கு அவர்கள் கொடுத்ததை இடுப்பில் நிமிண்டிக் கொண்டு, டின்னைச் சுமந்து நடந்தே வந்து வீட்டில் சேர்ந்திருக்கிறேன். இது என் வாழ்க்கை வளம்!

சித்தாப்பாவுக்குக் கல்யாணமான கையோடு புதுக் குடித்தனம். நம்பி வீட்டுக்கு எதிர் ஸ்டோரில்தான் வந்தோம். ஆம் ஆறாவது ஒட்டு விரல்போல் நான் ஒரு வேண்டாத கொசிர். பி. ஏ. கடைசி வருடம். ஏழை உப காரச் சம்பளம், தகுதி உபகாரச் சம்பளம் என்று என் எட்டாவது வகுப்பிலிருந்து தொடர்ந்து வாங்கி எப்படியோ இந்தவரை, அங்கு இங்கு என்று அயலார் தயவில் தருமத்தில் எட்டிப் பிடித்து விட்டேன்.

சித்தாப்பாவுக்குக் கட்டைச் சம்பளம். வாடகை கொடுத்து மிச்சத்தில் மூன்றுபேர் வயிறு அலம்பியாக வேண்டும். எல்லாம் அப்படி இப்படித்தான். எல்லாவற்றையும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாது.

நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இருபது வருடம் வாழ்ந்தவனுமில்லை. இருபது வருடம் கெட்டவனுமில்லை என்று ஒரு வசனம் உண்டு. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், என் வாழ்க்கை எப்பவும் ஸோ-ஸோ, ஏன் அப்படி? இதுவே ஒரு வேடிக்கையாக இல்லை?

ஆகவே எதிர்வீட்டில் கம்பி எனக்குக் கிடைத்தது என் தனி அதிர்ஷ்டம்தான். சீக்கிரம் ஸ்நேகமாகி விட்டோம். என்னைக் காட்டிலும் நாலு வயது மூத்தவன். ஆனால் இரண்டு பேரும் ஒரே வகுப்பு. அவன் கல்லூரி வேறு. அவன் படிப்பு அவனை இரண்டு மூன்று இடங்களில் சறுக்கு மரம் விளையாடிவிட்டது. காரணம்? எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். முக்கியமானது பணக்கார வீட்டுப் பிள்ளை. நான் அவனுக்குப் பட்ட பாவம் அவன் தனக்குப் பட்டுக் கொண்டானோ சந்தேகம்தான். என் நம்பி. அழகு கம்பி, புத்தகங்கள் வாங்க வக்கு இல்லாத எனக்கு அவன் புத்தகங்கள் பயன்பட்டன.

அந்நாட்கள், எத்தகைய நாட்கள்! என் வாழ்க்கையில் கில்ட்டு எழுத்துப் பக்கங்கள். அவ்வப்பேர்து புரட்டிப் பார்க்கிறேன். பத்திரமாக மூடிக் காக்கிறேன். அடிக்கடி நினைப்பதால் செலவழிந்து போமோ எனும் அசட்டு எண்ணம்கூட.

சில இரவுகள், சாப்பாடு ஆனவுடன்-

நாங்கள் இருவரும் கடற்கரைக்குப் போய், அலை விளிம்பில் ஒரு ஒடத்தடியில் உட்கார்ந்து, அல்லது மணலில் மல்லாந்து படுத்து, அலுக்காது பேசுவோம். அல்லது மெளனமாக படுத்திருப்போம். ஆ, அந்த மெளனம், பேச்சைக் காட்டிலும் என்ன வன்மையான பரிமாறல்!

குளிர் சதையில் உறைக்க ஆரம்பித்ததும் எழுந்து பேசிக்கொண்டே மரினா வழியே..கடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன்-பூர், பாஜி, சேறாட்டம் பால், அதன் மேல் கணிசமான ஏடு. அப்படியே பேசிக் கொண்டே, கோவிந்தப்ப நாயக்கன் தெரு விளக்கு வெளிச்சத்தில் இரவு பகலாகி இருக்கும். மார்வாரிப் பெண்டிர், வளையல்களும், பாதங்களில் தண்டையும் கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில்-இது செளக்கார் பேட் பையா, பிருந்தாவனமா?

அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி-இர்வின் சாலை வழி பேசிக்கொண்டே War Memorial வந்து, இரும்புப்பாலம், மீண்டும் மெரினா. நள்ளிரவு. பட்டை வீறும் நிலா. பேசிக் கொண்டே நடந்து கொண்டே, பைக்ராப்ட்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி, வந்தாச்சு. வீடு, ஏன் வருகிறது?

பேசுவோமோ, பேசுவோமோ, என்ன தான் பேசுவோமோ, பேசுவதற்கு என்னதான் அத்தனை இருந்ததோ, இப்போ நினைவு கூட்டலில் உருப்படியாக ஒன்று கூட நினைவு இல்லை. நெஞ்சின் மடைதிறந்து கொண்டால், வெள்ளம்தான் புரளும். வாய்க்காலா வடியும்?

நம்பி, நட்பு என்பது காதல் தாண்டா, கம்முடைய அந்த வயது நிலை அப்படி. அந்தப் பரிமளம் நீடித்து நிற்கக் கூடியது அல்ல. அந்த லலிதம் அத்தனை நளினம், உள்ளுணர்வுக்கு அப்பவே தெரியும்.

நம்பி, உன்னுடைய, லேசான அலட்சியம் சிந்தும்:கண்களும், எடுப்பான காசியும், நடராஜா சிலையில் காணும் கூரிய மோவாயும், அதில் குழிவும், அலைபாயும் கேசமும் என் அழகு நம்பியை தொடப் பன்முறை எழும் ஆசையை சிரமப்பட்டுத் தான் அடக்கிக் கொள்வேன்.

ஃப்ராய்டு வந்தாலும் வந்தான். பிறகு எல்லாமே லெக்ஸ்தான். ஆனால், இது அது அல்ல. நம்பி சத்தியமாக இல்லை.

இதுபோல் நள்ளிரவு தாண்டி கதவை யிடித்தால், சித்தப்பாவுக்கு ஏன் எரிச்சல் வராது? உனக்கென்ன, ! தனிச்சாவி வைத்திருக்கிறாய்.

“இந்த மாதிரி ராக்கத்து அடித்தால் பரிட்சை என்ன வாகிறது?”

ஆம், மார்ச் நெருங்கிக்கொண்டேயிருக்கிறது. எனக்கு என் தலைவிதியில் திருப்பு முனை. இப்போது இரவு கூடி நம்பி வீட்டிலேயே தங்கல். படிக்கிற சாக்கில் உண்வும் படுக்கையும் அங்குதான்.

“அம்பி, நம்பியை கவனிச்சுக்கோ”-மாமி, பாவம் அப்பாவி. நம்பி பல்லைக்கடிக்கிறான். இரவு அவ்வப்போது ஆவிபறக்க, மணம் வீச ‘டி’ மாடிக்கு வரும்.

“‘டி’க்காகப் படித்தோமோ? படிப்பதற்காகக் குடித்தோமோ?”

ஆனால் நன்றாகத்தான் படித்தோம். நம்பிக்கு கணக்குத்தான் கால் வாரல். ஆகவே அதில் அவனைப் பலப் படுத்துவதில் இருவரும் முனைந்தோம். கடந்த வருடங்களின் வினாத்தாள்களை மீண்டும் மீண்டும் அவனைச் செய்யச் செய்தேன். அதே கணக்கே அடுத்த வருடத் தாள்களில் வருவது புதிதல்ல. அவனோடு நானும் செய்தேன். அவன் தடுக்கி விழுந்த இடங்களை, நான் செய்த வழியில் காட்டி எச்சரித்தேன். பிற சமயங்களிலும் ஆழ்ந்து படிக்க, என் காகிதங்களை அவனுக்குக் கொடுத்தேன்.

ஆனால் நம்பிக்கு கணக்கு மட்டும் சாபம் என்று கண்டு கொண்டேன். சில சமயங்களில் எனக்கு பொறுமை இழந்து வார்த்தை தடிக்கும். அவன் கண்களில் தணல் பொறி பறக்கும். ஆனால் சாளரத்தைச் சட்டென இழுத்து விடுவான். எப்படியும் நாலு வயது மூத்தவன்; தவிர தடம் என்ன?

சொல்லிச் சொல்லி, எதிர்பார்த்து, எதிர்பார்த்து, புலி புலி, புலியும் வந்துவிட்டது.

நெற்றியில் உதிரி விபூதி. உச்சி மயிருள் வீட்டும் பெரியவர்களின் அக்ஷதை, கெஞ்சில் திக்திக்-ஹாலுக்குள் நுழைகிறோம். அவரவர் இடங்களைக் குறித்த எண்களை டெஸ்க்களில் தேடுகிறோம். தற்செயலாக, நம்பியின் இடம் எனக்கு அடுத்த வரிசையில் எனக்கு ரெண்டு சீட் பின் தள்ளி,

பரவாயில்லை, கணக்குப் பரிட்சை கடைசி நாள்தான். மிச்சப் பாடங்களில் நம்பி அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை.

இதென்ன கடைசி நாள். தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் அசட்டு ஆறுதல், தாக்குதண்டனையை ஒத்திப் போடுகிற மாதிரி கடைசி நாள் கதவு மூலையிலேயே ஒளிந்து கொண்டிருக்குமா? வெளியில் வரவே வராதா?

அன்று என்னவோ எனக்கு முன்னரே கம்பீ ஹாலுக்குப் போய்விட்டான். அவன் பதைபதைப்பு அவனுக்கு. அவரவர் பதைபதைப்பு அவரவர்க்கு!

ஆனால் காங்கள் எங்கள் இடங்களில் அமர்ந்தபின். மணி அடித்த பின்னர் வினாத்தாள் வழங்கி அதன்மேல் நான் முதல் கண்ணோட்டம் விட்டதும், அம்மாடி! பெரு மூச்சு என்னுடையது மட்டுமல்ல. என் முன்னேர்களுடையதும் அதில் கலந்திருந்தது. என் பாட்டி உயிரோடிருக்கையில் சொல்வாள், “அம்மா லலிதாம்பிகே, குழந்தையின் பேனா முனையில் இருந்து அவனைத் தேறவை!”

அத்தனையும் லட்டுகள். உடனே எழுத முனைந்து விட்டேன். ஏக் ‘தம்’.

முக்கால்வாசி முடிந்துவிட்டது.

“ஸ்ப்! ஸ்ப்ப்!!’

முன்னிலும் அவசரமாக- “ஸ்ப் ! ஸ்ஸ்ப்ப்!!’

யாரது தலை நிமிர்ந்தேன். கம்பி கையைப் பரக்க பரக்க நீட்டினான், கடித்த் பற்களிடையே.

‘உன் டெஸ்க் அடியில்-‘

திருதிருவென விழித்தேன்.

“யூ ஸ்டுபிட் கொடு அதை!!’

குனிந்து பார்த்தேன்.

ஆம் என்னவோ சொருகி வெச்சிருக்கே? எடுத்தேன். என் கையெழுத்தில்-என்ன இது இங்கே எப்படி வந்-

வெடுக்கென்று என் கையிலிருந்து பிடுங்கப்பட்டது.

‘வாட் ஈஸ் கோயிங் ஆன் ஹியர்?’, குரலின் இடிதான் என்மேல் முதலில் விழுந்தது. வார்த்தைகள் பின்னால்,

‘ஸ்டாண்ட அப்!’

எழுந்து பின்றேன். அம்ருதாஞ்சன் பொம்மை மாதிரி. என் செயல் என்னிட மில்லை.

‘சுப் வித் மி’

என்னைக் கையைப் பிடித்துக் கையும் பிடியுமாக இழுத்துச் சென்றார். எல்லோரும் என்னைப் பார்க்கிறார் கள், நம்பி தவிர, பேப்பரில் என்னவோ அப்படி தலை குனிந்து முனைந்திருந்தான்.

அப்புறமே இன்றுதான். இன்று என்று சொல்வதா நேற்று என்று சொல்வதா, கிழக்கில் சாம்பல் பூக்க ஆரம்பித்து விட்டது. இன்றுதான் கம்பி முகம் பார்த்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை மண்டையைக் குடைந்து கொள்கிறேன். சரியான முன்யோசனையுடன்தான் செய்திருக்கிறான். நான் அகப்பட்டுக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருந்திருக்குமோ இல்லையோ? தான் மாட்டிக் கொள்ளக்கூடாது. அவன் பரீக்ஷையில் என்னவானானோ நினைத்தபடி நடத்திக் கொண்டு விட்டான். அவனுக்கு எப்பவும் மார்ச், செம்டம்பர் மாறி மாறி இருக்கிறது.

சித்தப்பா கடிதம்போட்டு, அப்பா வந்து என்னை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

அடுத்த வார்த்துக்குள் சித்தப்பர் இடமே மாறி, ஆதம்பாக்கத்துக்கு குடித்தனம் போய்விட்டார். திருவல்லிக்கேணியில் எங்கள் சுற்று வட்டாரமே பற்றி எரிகிறதே.

வீட்டில் என்னை நேரிடையாக யாரும் குற்றம் சாட்டவில்லை. கடியவில்லை கேட்கக்கூட இல்லை, விசாரிக்கவில்லை. ஆனால் என்னை நம்பினார்களா, நம்ப வில்லையா? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

அப்பா, நானில்லை!

அம்மா, நானில்லை!

சித்தப்பா, நானில்லை!

வாய்விட்டு அரற்றவில்லை. வாய்விட்டுச் சொல்லாமல், அவர்கள் கண்களில் தெரியும் துயரத்தில், சந்தேக மூட்டத்தில், மூட்டத்துள் மூழ்கிக்கொண்டே மோனத்தின் அலறல்.

நானில்லை!
நானில்லை!!
நானில்லை!!!

Debarred for three years.

அதுவரை அப்பா இல்லை. உள்ளடி நம்பி புண்ணியம்.

அப்புறமே நான் உருப்படவில்லை. உருபட முடியவில்லை. செயலில் ஆற்றல், ஆர்வம் இழந்துவிட்டது என்று நினைக்கிறேன். சில சமயங்கள் வலதுதோள் கனக்கிற மாதிரியிருக்கிறது. கலிபுருஷன் ஸ்திரமாக உட்கார்ந்து விட்டான்.

சே வெறுப்பு வந்துவிட்டது. கதை முடியுமா, முடியாதா?

காப்பியை எடுத்துக்கொண்டு என்னருகில் வந்தாள்.

“நானும் காத்துப் பார்த்தேன், நீங்களா சொல்லுவேள்னு. அதான் பழக்கமே கிடையாதே. நேற்றுப்போன காரியம் என்னவாச்சு?”

ஆதியோடு அந்தமாகச் சொன்னேன். ஒரு கதையே அல்லவா சொல்லவேண்டியிருக்கிறது.

சொல்லி முடித்தபின் இருவரும் மெளனமானோம். எதிரே, கற்பூரவாழைக் கன்றின் மேல் எங்கள் நாட்டம் ஒருமித்து நிலைத்தது. ஆனால் அவரவர் யோசனை தனித் தனி, எங்கெங்கோ…

வாங்கி வந்தபோது, நுனியில் முளை பச்சையாக உக்கிரமாக (?) இருந்தது. கட்டுப் பதினைந்து நாட்களுக்கு மேலாச்சு, ஊஹூம். முளை கருகிக்கொண்டு வருகிறது.

“யார் மேல் தப்போ? (அப்போ நீயும் என்னை நம்பவில்லையா?) இப்போ வேலைதரேன் என்கிறான். ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! முறைப்பா வந்துட்டேள். கலிதீர்க்க வந்த பிள்ளையாரையும் கிணற்றில் தள்ளியாச்சு! இனி இந்தக் குடும்பம் என்ன ஆகப்போறதோ?”

விர்ரென்று போய்விட்டாள்.

அடுத்து அடுப்பங்கரையிலிருந்து அவள் குரல் வந்தது.

“இடம் சொல்லுங்கோ, நான் போய் அவரைப் பார்க்கிறேன்.’

இது எப்படி?

விளம்பித், கயால், ராக்த்ரோக்.

– புற்று (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1989, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *