கல்லூரி வாழ்க்கை பாதியிலேயே நின்று போன பிறகு பானுவுக்கு லெளகீக மயமான நினைவுச் சுவடுகளில் தடம் பதித்து நிலை கொள்ள முடியாமமல் அக சஞ்சாரமாக அவளுக்கு ஒரு புது உலகம் அது அவளுடைய பாட்டு உலகம் சங்கீதம் கற்றுத் தேறியல்ல இயல்பாகவே அவளுக்குப் பாட வரும் நல்ல குரல் வளம் கொண்ட ஒரு கலைத் தேவதை அவள் கேட்ட பாடலைச் சுருதி சுத்தமாகப் பாடுவது அவளுக்குக் கை வந்த கலை அந்தக் கலையை மேலும் வளப்படுத்திப் பிரகாசிக்கச் செய்வதற்$கு நிச்சயம் ஓரு குரு தேவை
இது அப்பாவினுடைய அனுமானம்.. அதற்கான தேடலில் வந்து அகப்பட்டவன் தான் இந்த சங்கரன். ஆதி குருவே வந்து வாய்த்தது போல கர்நாடக சங்கீதத்தில் பூரண கலை ஞானம் கொண்டவன் அவன்.. சிவனே நேரில் வந்து காட்சி கொடுப்பது போல அவன் தரிசனம் இருக்கும் நிறைந்த கலை வழிபாடு இருப்பதால் அவன் முகம் அதீத களையுடன் மின்னுவதாக பானுவிற்கு அவனைக் கண்டால் தேகம் புல்லரிக்கும் அவனின் காலைத் தொட்டு நமஸ்கரிக்கத் தோன்றும் அதனால் அவளுக்கு அவன் மீது காதலென்று தவறாக யாரும் ஊகிக்க வேண்டாம் இது வெறும் உடற் கவர்ச்சியால மட்டுமே வருகிற தசை உணர்வுக் காதலேயல்ல அதற்கும் அப்பாற்பட்ட உடல் நினைவு தாண்டிய தெய்வீகமயமான ஒரு பரவச உணர்ச்சி அது
அவன் இன்னும் கல்யாணம் கூடச் செய்து கொள்ளவில்லை/ சங்கீதமே உலகமென்று இருப்பதால் அது அவனுக்கு இரண்டாம் பட்சம் தான் அளவெட்டியிலிருந்து தினமும் பானுவிற்குப் பாட்டுக் கற்றுக் கொடுக்கச் சையிக்கிளிலேயே வந்து போகின்றான். வீட்டு முன் வராந்தாவிலேயே அவர்களின பாட்டு வகுப்பு அரங்கேறும். சுருதிப் பெட்டி இசைத்தவாறே கம்பீரமான உரத்த குரலெடுத்து அவன் பாடுவது ஒரு தேவ கானமாக ஊர் முழுக்கக் கேட்கும் கூடவே குரல் இழைந்து பானுவும் பாடுவாள். சுமார் ஒரு வருட காலமாக அவனிடம் அவள் பாட்டுக் கற்று வருகின்றாள்
முதலாம் வகுப்புப் பரீட்சையிலும் அதிக மதிப்பெண் வாங்கி அவள் தேறிய பிறகு தான். அந்த விபரீதத்தை அவள் எதிர் கொள்ள நேர்ந்தது அவளுக்கும் சங்கரனுக்குமிடையிலான அந்தப் புனிதமான தெய்வீக உறவைக் கொச்சைப்படுத்தி வேண்டாத யாரோ அவர்களைப் பற்றிக் கிளப்பி விட்ட மிக ஆபாசமான வதந்தி ஊர் முழுக்கக் காட்டுத் தீயாய்ப் பரவிக் கொண்டிருந்தது. பானுவிற்குச் சங்கரன் மூலமாக ஒரு குழந்தை பிறந்திருப்பதாகத் தன்னை வகுப்பில் கேள்வி மேல் கேள்வி கேட்டு நிலை சரிய வைத்து விட்டதாகப் பானுவின் தங்கை வாணி, கண்களில் அழுகை மழை கொட்ட அம்மாவிடம் ஓடி வந்து கேட்டாள்
“அம்மா! ஊரெல்லாம் அக்கான்ரை கதை நாறுது மெய்யேயம்மா அக்காவுக்கு உண்மையிலேயே குழந்தை பிறந்ததா?
“சீ! வாயை மூடு அப்படியெண்டு ஆர் உனக்குச் சொன்னது?”
“என்னை வகுப்பிலை கூடக் கேட்டவை குழந்தை பிறந்ததைக் கண்ணாலை கண்ட மாதிரி அவையள் என்னெல்லாம் கேட்டினம் தெரியுமே?”
“வெளியிலை போட்டு அப்பாவும் முகம் விழுந்து போய் வாறார் “பொறு அவர் என்ன சொல்லுறாரென்று கேட்பம்”
“இனி நான் சொல்ல என்ன இருக்கு வெளியிலை தலை காட்ட முடியேலை. .எல்லாம் போச்சு பானுவை இனி எவன் கட்டுவான்? இனி மேல் அவள் சங்கீதம் படிச்சுக் கரை கண்ட மாதிரித் தான் “
அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டீருந்த போது உள்ளிருந்து அதைக் கேட்க நேர்ந்த பாவத்தை எண்ணி மனம் நொந்து ரணகளமாகப் பானு வெளிப்பட்டு வந்து அவர் காலடியில் விழுந்து கதறியழுத சத்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு கனதியாய்க் கேட்டது
“அப்பா நீங்களுமா இதை நம்புகிறியள்?”
“நான் அப்படி நினைக்கேலை மாசற்ற உன்ரை பெண்மையை நான் சந்தேகிப்பேனா?அதிலும் சங்கரன் மகா உத்தமன் கலையை மட்டுமே வழிபடத் தெரிந்த ஓர் ஆன்மீக புருஷன் அவன். இருவரையும் இணைத்து வாய் கூசாமல் ஊர் கதைக்கிற இந்தப் பொய் குறித்து நான் சொல்ல என்ன இருக்கு? இதனால் ஊரே அழுகிப் போகும். இருந்தாலும் ஒரு மன வருத்தம் சங்கரன் இதை எப்படித் தாங்கப் போகிறானோ? அவன் ஆண் என்பதாலே பெரிய பாதிப்பு இல்லாமல் போனாலும், ஓரு பெண்ணாயிருக்கிற உன்னைத் தான் இது பெரிசாய் பாதிக்குமென்று எனக்கு ஒரே கவலையாக இருக்கு”
“ ஓ! எனக்குக் கல்யாணம் நடக்காதென்று சொல்ல வாறியளோ? போகட்டும் விடுக்கோவப்பா நான் இப்படியே இருந்திட்டுப் போறன்”
“நீ சொல்லுவாய் அது எவ்வளவு கஷ்டமென்று அனுபவிக்கேக்கை தான் உணர்வாய்”
“அப்பா! ஒருவேளை நான் அப்படித் தான் கல்யாணத்துக்கு உடன்பட்டாலும் ஆர் என்னைக் கட்டுவினம் சொல்லுங்கோவப்பா!”
“ஏன் நான் கட்டமாட்டேனா?”
வாசலிலே அவர்களுக்குப் பரிச்சயமான ஒரு குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிற போது சங்கரன் எதிலுமே பட்டுக் கொள்ளாதவன் போல், அதே பழைய களையுடன் அவர்களை நோக்கிக் கம்பீரமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது . பானுடவுடன் தனக்கேற்பட்ட அபகீர்த்தி விழுக்காட்டைப் பொருட்படுதாமல் அவளை வாழ வைக்கும் பெருங்கருணையுடன் அவன் கூறிய வார்த்தையைக் கேட்டுப் பானு வெகுவாகப் புல்லரித்துப் போனாள். எனினும் அவன் சொல்கிறானேயென்று அதற்கு உடன்படுவது நியாயமற்ற ஒன்றாய், அவளை வதைத்தது .அமானுஷ்ய உயிர்க் களையுடன் எல்லாம் துறந்த ஒரு ஞானி போல இருக்கிற அவனைக் களங்கப்படுத்திச் சகதி குளிக்கச் செய்வதற்கென்றே, யாரோ செய்த சதிக்கு அவன் பாவம் என்ன செய்வான். தன்னை மணக்க நேர்ந்தால் கால் முளைத்துப்
பறக்கிற அந்த வதந்தியை உண்மையென்று நிரூபிக்க அது போதும் மனதால் கூட அடி சறுக்கித் தன் மீது சபலம் கொள்ளத் தோன்றாத அவனை இப்படித் தண்டிப்பது ஒரு குற்றச் செயலாகவே அவளுக்கு உறைத்தது. அதனால் தீர்க்கமான முடிவோடு அவனை நிமிர்ந்து பார்த்து அவள் குரல் உயர்த்திச் சொன்னாள்
“வேண்டாம் சங்கர் என்னை ஏற்றுக் கொள்வதாலே நீங்களே தவறு செய்த மாதிரியாகி விடும். அது என்னையே தண்டிக்கிற மாதிரிப் பெரிய கொடுமையில்லையா? எவ்வளவு காலம் சென்றாலும் நான் காத்திருப்பன். நான் களங்கமற்றவளென்ற என்ரை புனிதத் தன்மையை நம்பி என்னை மணப்பதற்கு ஒரு யுக புருஷன் கிடைக்காமலா போய் விடுவான். நிச்சயம் கிடைப்பானென்று நான் நம்புகிறேன்”
“இவ்வளவு நடந்த பிறகும் மனிதன் குறித்து நீங்கள் கொண்டிருக்கிற இந்த நம்பிக்கையை எண்ணி நான் பெருமிதம் கொள்ளுறன் இது நடக்க வேண்டுமே”
“நடக்கும் கட்டாயம் நடக்கும்”
அது கனவுப் பிரக்ஞையாய் வானத்திலிருந்து வருவது போல் அவனுக்குக் கேட்டது அதைப் பார்த்து விட்டு பானு கேட்டாள்
“என்ன சங்கர் யோசிக்கிறியள்?”
“இல்லை பானு இது நிறைவேறுவதிலை நிறையச் சவால்களை நீ எதிர் கொள்ள நேரிடும் அப்படித்தான் பெரிய மனசோடு யாரோ ஒருவன் உன்னை மணக்க முன் வந்தாலும் அவனைத் திசை திருப்பி உனக்கு எதிராகத் தூண்டி விடச் சதி செய்யக் கூடிய மனிதர்களை நீ மறந்து விட்டியே அவர்களை எதிர்த்துப் போர் செய்து உன்ரை புனிதத் தன்மையை நீ எப்படி நிரூபிக்கப் போறாய்” இதையெல்லாம் யோசிச்சுப் பார்க்கிற போது நான் உன்னை ஏற்பததைத் தவிர வேறு வழியில்லை”
“ஐயோ! சங்கர் என்ன கதை கதைக்கிறியள்? நீங்கள் என்னை ஏற்றுக் கொள்வதாலை எனக்கு வாழ்வு கிடைக்கிறதோ இல்லையோ வீணாக உங்கள் பெயர் கெடும் நான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டன் இப்படி உங்களைத் தண்டிக்கிறதை விட பேசாமல் நான் தூக்கிலை தொங்கி உயிரை விடலாம் இப்படி உங்கடை பெயர் காற்றிலை பறக்கிறதை நான் விரும்பேலை எனக்காக ஒரு யுக புருஷன் வரட்டும் என்ரை கற்பின் புனிதத்தை நம்புகிறவர் வீண் வதந்திகளை நம்பி ஒரு போதும் என்னைக் கை விட மாட்டார். நான் அது வரைக்கும் காத்திருக்கிறன் இது தான் என்ரை முடிவு”
“சரி பானு நீ இவ்வளவு நம்பிகையோடு இருக்கும் போது இனி நான் சொல்ல என்ன இருக்கு எனக்காக நீ செய்ய முன் வந்திருக்கிற இந்தத் தியாகத்தை எண்ணி நான் பெருமிதம் கொள்ளுறன் உன்ரை இந்த ஆசை எதிர்பார்ப்பு கட்டாயம் நிறைவேறும் இதற்காக நான் பிராத்தனை செய்கிறன்”
அதை ஏற்றுக் கொண்டு வழிபடுகிற பாவனையில் அவள் முகம் மலர்ந்து கரம் கூப்பி வணங்கினாள் அதன் பிறகு அவர்கள் பேசவில்லை உயிர் இளகிய மெளனத்தில் இருவரும் ஒன்றிப் போனார்கள்
– மல்லிகை (ஜனவரி 2010)