யாருக்காக?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 1,527 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நல்லி…நல்லி…எந்திரிம்மா…மணியைப்பாரு. ஆறரையாவுது…ம்…சீக்கிரம்மா. என் கண்ணுல்ல” என்றபடி பாட்டி ஒரு குரல் கொடுத்ததும் தலை வரை மூடியிருந்த போர்வையைக் கண்வரை மெல்லக் கீழிறக்கி, சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தவள்,

“இரு பாட்டி… இன்னும் ஒரு பத்தே பத்து நிமிஷம்!” என்று கொஞ்சலுடன் கெஞ்சுவாள். இது வழக்கமான பல்லவி. ஆனால் இன்றோ,

“ஏன் என் உயிரை எடுக்கிறீங்க?ஸோ பேட்” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெறுப்பை அள்ளிக் கொட்டினாள், நல்லி.

அதைக் கேட்டதுமே அந்தப் பாட்டிக்கு அன்றைய வெள்ளிக்கிழமை காலை, பொருளில்லாப் பொழுதாகத் தோன்றியது. அவரது ஒரே மகள் வயிற்றுப் பேத்தியான நல்லி ‘ஏன் இப்படிப் பேசுகிறாள்? என்ன ஆயிற்று? நான் ஏதேனும் குறை வைத்து விட்டேனா? என்று தனக்குள் பலவாறு கேட்டபடி ஒரு குட்டிப் பட்டிமன்றத்தையே நடத்தி விட்டாள். இருந்தும்கூடப் பேத்தியின் அருகில் போய், அவள் தலையைத் தன் காய்ப்பேறிய விரல்களால் கோதியபடி, “என்னம்மா ஏன் இன்னிக்கு இப்படிப் பேசுற? பாட்டி உனக்கென்ன கொறை வச்சிருக்கேன்? ஏன் இப்படி வையிற?” என்று மிகத் தாழ்ந்த குரலில் கேட்டாள்.

“ஆமா என்ன குறை? அம்மா அப்பா இல்லாத அனாதை மாதிரி என்னை ஆக்கிட்டீங்களே! எல்லாரும் என்னைப் பாவப்பட்டவமாதிரி, என்னமோ ஏதுமில்லாதவ மாதிரி பாக்கிறாங்க. அதுதான் இன்னிக்கு, இன்னிக்குதான் பட்டாசு பட்டுப்பட்டுனு வெடிக்கறது மாதிரி முடிவாகப் போகுதே! அதுக்குக்கூட நான் போவமுடியாதா? இவ்வளவு இருக்கும்போது நான் என்ன சந்தோஷத்துல துள்ளியா வெளயாட முடியும்?” என்றாள் நல்லி.

எல்லாம் புரிந்த பாட்டியால், கண்ணிலிருந்து நீரைத்தான் பதிலாகத் தர முடிந்தது. அவரும்தான் இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்வார்?

இளம் வயதிலேயே தந்தையை இழந்த மகள் ராதாவை, அதுதான் நல்லியின் தாயை, தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி வளர்த்து, படிக்கவைத்து குமாருக்குத் திருமணம் செய்து தந்தாள். ஆனால், விதி செய்த சதியோ அல்லது மதி கெட்ட நிலையோ தெரியவில்லை. கடந்த மூன்றாண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். குமாரும் நல்லவர்தான். நல்ல பணியில் இருப்பவர்தான். ஏனோ இந்த ராதா, திருமணமானதும் ஆடம்பரத்தில் அதிக நேரத்தையும் பணத்தையும் கண்மண் தெரியாமல் தண்ணீராகச் செலவு செய்வதில் மும்முரமாய் இருந்தாள். சம்பாதித்த பணத்தை அளவிட்டுச் செலவிட வேண்டியவள் குழந்தையையும் ஓரளவுதான் கவனித்தாள். சொல்லையும் சில நேரங்களில் தரையில் மிதித்தாள். இந்த நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. முடிவு, கத்தரிக்காய் முற்றினால் கடைசியில் கடைத்தெருதானே. கணவன் குமாருக்கு, அவளது நடவடிக்கைகள், அவனது உறவினரிடம் அவள் வாங்கிய கடன்கள் ஆகியன பூதாகர உருவெடுத்தது தெரிய வந்தது. விளைவு, கோபம், பூசல். மனைவியை வெறுக்கத் தொடங்கினார். அவளோ மகளைத் தாயிடம் விட்டுவிட்டு, ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்குமா என்பதுபோலத் தன் போக்கில் போனாள்.

ராதா தன் ஓய்வு நேரத்தில் தன் ரத்தத்தின் பரிசைப் பார்க்கக்கூட நேரமில்லாமல் ஷாப்பிங் அது இது என நன்கு சுற்றினாள். எல்லாம் அறிந்த குமார் மேலும் வெம்பி மனத்துக்குள் அழ, அவனது ஒரே உறவான அக்கா இதுதான் நேரம் என்றெண்ணி ராதாவை வெட்டிவிடும்படி கூறினாள். விளைவு, விவாகரத்துக்கு மனு போட்டனர். போட்டனர். இது, நல்லி தொடக்கநிலை ஐந்தில் படிக்கும்போது நிகழ்ந்தது.

மனுவைப் போட்ட நாள் முதல், வாரம் மூன்று மணி நேரம் எனத் தவணை முறையில்தான் நல்லி, தன் தந்தையைத் தரிசனம் செய்தாள். குமாருக்கு மகள் மீது கொள்ளைப்பாசம். ஆனாலும் பருவம் அடைய விருக்கும் மகளைத் தனியே தன்னுடன் வைத்து வளர்க்க இயலாததால், ராதாவின் வீட்டில் தங்க விட்டார். எனினும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும். அந்த மூன்று மணி நேரம் அவருக்கு பெரும் இன்ப சொர்க்கம். அது நல்லிக்கும்தான். அந்த மகளைப் பற்றி அசைபோட்டபடி ஓட்டி விடுவார், தந்தை.

பள்ளியில் படும் அவஸ்தைதான் நல்லியின் கையளவு இதயத்தை ரணகளமாக்கி விடுகின்றது. இடைவேளை நேரத்தில் தோழிகள், தம் பெற்றோர் பற்றிப் பெருமையாகப் பேசும்போது, “என்ன செய்றது என் நிலைமை இப்படியாயிட்டுதே படிப்பில் முதல் ஆளா வந்து என்ன பிரயோஜனம்?” என வருந்துவாள். அதற்காகத் தாயினை எதிர்த்துப் பேசவும் துணிவில்லை. பத்து மாதம் தன்னைப் பொத்தி வைத்துச் சுமந்த நன்றியையும் மறக்கவில்லை. ராதாவின் தாய்க்கும் அதே நிலைதான். மகளை எதிர்த்துப் பேசினால் மேலும் வழிதவறி விடுவாளோ என்ற பயம். மறுபக்கம், குமாரோ வாழ்வில் பிடிப்பின்றி வாழ்ந்தார். மனைவியுடன் வாழ்ந்த அன்னியோன்யமான வாழ்க்கை அவரை அடிக்கடி வந்து ஆசை காட்டியது. எனினும் அக்காவின் பிடி மேலும் இறுகியது.

தொடக்கநிலை இறுதிவகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் திறமைக்கும் தகுதிக்கும் பெயர் பெற்ற பள்ளியில் உயர்நிலையைத் தொடர்ந்தாள். எனினும் தினம் தினம் அவளது கவலை அவளைப் போட்டு வாட்டி எடுத்ததுதான், மிச்சம். அழகான அப்பாவின் ரோவரில் பெருமையாகப் போய், மற்றத் தோழிகள் போலப் பள்ளியில் இறங்க முடியவில்லையே? இடைவேளையில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகிழ்ச்சியுடன் போன் செய்ய முடியவில்லையே? என்ன செய்ய? எல்லாவற்றுக்கும் மேலாக, அவளது பள்ளியில் உள்ள சமூக சேவை அமைப்பைச் சேர்ந்த கவுன்சிலர் எனப்படும் ஆலோசகரையும் போய்ப்பார்க்க வேண்டும். தன் குடும்பக்கதையைக் கடைவிரித்துக் காட்டுவது போல எடுத்துக் கூற வேண்டும். வகுப்பில் அவள் எப்போதும் விரக்தியுடன் எதையோ பறிகொடுத்ததுபோல் இருப்பதாகக் கூறி வகுப்பாசிரியர் அனுப்பி வைத்ததை எண்ணிக் கோபப்படவும் முடியாது. உள்ளுக்குள் உருகினாள்.

“டீச்சர், இட்ஸ் நாட் மை பிராப்ளம்! இட்ஸ் மை பேரண்ட்ஸ் பிராப்ளம்! தண்டனை அனுபவிக்கிறேன். நான் ஏற்கெனவே அப்செட் ஆகியிருக்கேன். என் வாழ்க்கை நல்லாவே இல்லை. இப்போதைக்குப் படிப்புதான் என் துணை!” என்று தன் இயலாமையை ஆசிரியரிடம் சிலநேரம் விளக்குவாள்.

கோபமாகப் பேசிய பேத்தியை மறுபடியும் வந்து எட்டிப்பார்த்தார் பாட்டி. அதையும் பார்த்தப்படி தன் நினைவுலகில் தொடர்ந்து செயல்பட்டாள் நல்லி.

ஆம், எல்லாவற்றுக்கும் இன்றுதான் முடிவு. இன்றுதான் அவளது பெற்றோர் இறுதியாக முடிவான பிரிவுக்கு உட்படுகிறார்கள். அவளும் யாரிடம் நிரந்தரமாகத் தங்கப்போகிறாள் என்று கேட்கப் படுவாள். ஆம்! ஏசு, சிலுவையில் அறையப்படும்போது பட்ட அவதியை இவளும் அனுபவிக்கப் போகிறாள். பல்வேறு சொல் அம்புகளால், கேள்விகளால் துளைத்தெடுக்கப்படப் போகிறாள். என்ன செய்ய?

ஏதோ நினைத்தவள் ‘சரி சரி!’ என்ற எண்ணத்துடன் “பாட்டி!” என்றாள். கண்ணில் துளிர்த்த நீருடன் வந்த பாட்டியைக் கட்டிப்பிடித்தபடி, ” அழுவாதே பாட்டி! நான் இன்னிக்கு பள்ளிக்கூடம் போவல! கோர்ட்டுக்குப் போறேன்” என்றவள் நேராகக் குளியலறைக்குப் போய், பல் விளக்கிவிட்டு வந்து, வாசலில் இருந்த பக்கத்து வீட்டுச் சீனரின் மாதுளஞ்செடியைப் பார்த்தபடி நினைவுலகில் சஞ்சரிக்கத்தொடங்கினாள். ஒரு தாளை எடுத்து எழுதத் தொடங்கினாள்.

இயல்பாகவே பெண் குழந்தைக்குப் பிடித்த உறவாக அமையும், தன் உயிருக்கு உயிரான அப்பாவுக்கு எழுதினாள்

“அன்புள்ள அப்பா நீங்க எனக்கு உயிர். ஆனால், உங்களுடன் நான் நிரந்தரமாகச் சேர்ந்து வாழ வேண்டும். இது முடியுமா? உங்களுடன் பக்கம் உட்கார்ந்து உங்கள் நெஞ்சில் தலை சாய்த்துப் பேச வேண்டும். உங்களுடன் ரோவரில் போக வேண்டும். முடியுமா? நடக்குமா? நான் இப்போ பதினாலு வயசுப்பெண். நான் சின்னப் பெண்ணா இருந்த போது, நல்லா தூக்கிக் கொஞ்சினீங்க. என்னோட ட்ரீம் ஃபாதரா இருந்தீங்க. ஒரு முறை ஊருக்குப் போயிருந்தபோது, கருமாரியம்மன் கோயிலில் நான் திடீரென டாய்லெட் போனபோது, கையில் டிஷ்யூ பேப்பரோ பக்கத்திலே தண்ணியோ இல்லாத நிலையிலே கையிலேயே அள்ளிப்போட்டீங்களே மறந்துட்டீங்களாப்பா! ஒருமுறை நான் ஏதோ ஒரு மாத்திரையை மிட்டாயா நினைச்சுச் சாப்பிட்டப்போ பத்து நாள் எனக்காக ஆஸ்பத்திரியிலே இருந்து பாத்துக்கிட்டீங்களே! அப்படிப்பட்ட உங்களால எப்படிப்பா இத்தனை வருஷம் பிரிஞ்சிரிக்க முடிஞ்சது? இனிமேலயும் அப்படியிருக்க உங்களால முடியுமா? நான் யாரோட வாழறதுன்றது எனக்குப் பெரிய இடியா இருக்குப்பா!

சின்ன வயசுல நீங்க சொல்லித்தந்த இராமாயணக்கதை மட்டுமில்ல காந்தி, நேரு கதையெல்லாம் கேட்ட என்னை இப்படி உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் தவிக்கவிடலாமாப்பா? என்னை, ரெண்டு பேரும் சேர்ந்து பெத்துட்டு, இன்னைக்கு வெட்டி வீசப் போறீங்களா? அப்பா, இப்பல்லாம் நான் ஹோம் இகானமிக்ஸ் படிக்கிறேன். அதுல் ஒருபெண் எப்படியெல்லாம் குடும்பத்தில் பொறுப்பாக இருக்கவேண்டும் எனச் சொல்றாங்க. அப்பா, என்கூட அம்மாவும் இருந்தா எனக்கு அந்த விஷயங்களை எல்லாம் இன்னும் நல்லா புரிஞ்சுக்க முடியும்தானே! அவங்கள ஒரு நல்ல ரோல்மாடலாப் பாக்க முடியும்தானே! நானும் நல்லா வீட்டைப் பாத்துக்க முடியும்தானே! எனக்காக நீங்க ரெண்டு பேரும் சேர எனக்காக யோசிச்சுப் பார்க்க முடியுமா? முடியுமா? விரைவில் பதில் தர முடியுமா?” என்று பல முடியுமாக்களைப் போட்டு எழுதி முடித்தாள்.

தன் எதிர்காலத்துக்காக அப்பா எதையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் எழுந்தாள். இவ்விஷயம் ஏதும் தெரியாத பாட்டி குளித்துக் கொண்டிருக்க, நல்லி தன் அப்பாவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, நீதிமன்றத்துக்குச் சீக்கிரமாக வரும்படி கூறினாள்.

நீதிமன்றத்துக்குப் பாட்டியும் பேத்தியும் வந்தாயிற்று. தன் மகள் இப்படிச் செய்து, இந்த நிலை வரை கொண்டுவந்து விட்டுவிட்டாளே என்று பாட்டியும், தன் வாழ்க்கையில் தான் பெருமையின்றி இருப்பதுடன், தன் பெற்றோரை அன்புடன் வாழ வைக்க முடியவில்லையே அவர்களது அன்பைப் பெற முடியவில்லையே என்று பேத்தியும் நாணிக்கோணி கவலையும் அவமானமும்

ஒருசேர வாட்ட ஓரமாக நின்றனர். குமார் தூரத்தில் வருவதைக் கண்ட நல்லி, நான்கு வயது. மலர் நடப்பதைப்போலத் துள்ளிக்குதித்து ஓடிக் கடிதத்தைத் தந்தாள். பிறகு தூரமாக வந்து நின்று தன் தந்தையின் முகமொழியை வாசித்தாள். பாட்டி அத்தனையையும் பார்த்தாள். அப்பா விம்மியதை நல்லியால் நன்கு உணர முடிந்தது. அதே விம்மல் அவளிடமும் தொடர்ந்தது.

உரிய நேரத்துக்கு அலுவலகத்தில் அனுமதி கேட்டு அம்மா வந்தாள். “அம்மா கூட அழகா டிரெஸ் பண்ணியிருக்காங்க!” என்று பாட்டியிடம் ரசித்து ருசித்துச் சொன்னாள் மகள். “ஆமா! அது ஒன்னதான் நீ மெச்சிக்கணும்!” என்று பாட்டி விரக்தியில் வெறுப்புடன் கூறினார்.

நீதிமன்றத்தில் நீதிபதி இவர்களது விவாகரத்துத் தொடர்பான செய்திகளைக் கூறிவிட்டு, முடிவு கூறுமுன் குமாரின் வழக்கறிஞர் எழுந்து, தான் எழுந்து, தான் ஒரு செய்தியைக் கூறவிருப்பதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கேட்டார். நீதிபதி அனுமதித்ததும் என் கட்சிக்காரர் தன் மகளின் வளமான ஒளிமயமான எதிர்காலத்துக்காகத் தன் மனைவியை மன்னித்து, அவருடன் சேர்ந்து வாழப்போவதாகத் தெரிவிக்கிறார் என்று கூறியதுதான் மிச்சம். குமார், ராதா, நல்லி, பாட்டி, நீதிபதி உட்பட நீதிமன்றத்தின் அந்த அறையிலிருந்த அனைவர் முகத்திலும் மட்டுமல்ல அந்த அறையின் சுவர்களிலும் கூட மகிழ்ச்சி ஒளி, வெள்ளமாய் வழிந்தோடியது. அத்துடன், அதில் அன்பு, பரிவு, பாசம் அத்தனையும் ஒருசேரப் பரிணமித்தன.

– 1996, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *