கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 408 
 
 

அதிகாரம் 7-9 | அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-15

அதிகாரம் 10 – வேடச்சிறான்கை மாடப்புறா

சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் மேனகா இருந்த அறைக்குள் நுழைந்த மகம்மதியனுடைய வயது சற்றேறக்குறைய இருபத்தேழு இருக்கலாம். சிவப்பு நிறத்தைக் கொண்ட நீண்டு மெலிந்த சரீரத்தை உடையவன். அவன் முகத்தில் சிறிதளவு மீசை மாத்திரம் வளர்த்திருந்தான். தலையின் மயிரை ஒரு சாணளவு வெட்டி விட்டிருந்தான். ஆதலின் அது நாய் வாலைப்போல முனை மடங்கி அவனுடைய கழுத்தைச் சுற்றிப் பரவி முகத்திற்கு அழகு செய்தது. கருமையாய்ச் செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த இரண்டு புருவங்களும் இடைவெளியின்றி இயற்கையிலேயே ஒன்றாய்ச் சேர்ந்திருந்தமையாலும், கண்களில் மை தீட்டப்பட்டிருந்தமையாலும் அவனுடைய முகம் பெண்மை யையும் ஆண்மையையும் ஒருங்குகூட்டி மிக்க வசீகரமாய்த் தோன்றியது. வாயில் வெற்றிலை அணிந்திருந்தான். உடம்பிலும் உடைகளிலும் பரிமளகந்தம் கமழ்ந்து நெடுந்தூரம் பரவியது. அவனுடைய இடையில் பட்டுக் கைலியும், உடம்பில் பவுன் பொத்தான்களைக் கொண்ட மஸ்லின் சட்டையும், தோளில் ஜரிகை உருமாலையும் அணிந்திருந்தான். கையிற் பல விரல்களில் வைரம், கெம்பு, பச்சை முதலியவை பதிக்கப்பெற்ற மோதிரங்கள் மின்னின.

அவ்வித அலங்காரத்தோடு தோன்றிய நைனாமுகம்மது மரக்காயன், மேனகாவுடன் நெடுங்காலமாய் நட்புக் கொண்டவனைப்போல அவளை நோக்கி மகிழ்வும் புன்முறுவலுங் காட்டி, “மேனகா! இன்னமும் உட்காராமலா நிற்கிறாய்? இவ்வளவு நேரம் நின்றால் உன் கால் நோகாதா? பாவம் எவ்வளவு நேரமாய் நிற்பாய்! அந்த சோபாவில் உட்கார். இது யாருடைய வீடோ என்று யோசனை செய்யாதே. இது உன்னுடைய வீடு. எஜமாட்டி நிற்கலாமா? எவனோ முகமறியாதவன் என்று நினைக்காதே. உன்னுடைய உயிருக்கு உயிரான நண்பனாக என்னை மதித்துக்கொள் என்றான்.

அவன் தனது பெயரைச்சொல்லி அழைத்ததும், ஆழ்ந்த அன்பைக் காட்டியதும், அவனுடைய மற்றச் சொற்களும், அவனது காமாதுரத் தோற்றமும் அவளுக்குக் கனவில் நிகழ்வன போலத் தோன்றின. அது இந்திர ஜாலத்தோற்றமோ அன்றி நாடகத்தில் நடைபெறும் ஏதாயின் காட்சியோ என்னும் சந்தேகத்தையும் மனக் குழப்பத்தையும் கொண்டு தத்தளித்து, அசைவற்றுச் சொல்லற்றுக் கற்சிலைப்போல நின்றாள். நாணமும் அச்சமும் அவளுடைய மனதை வதைத்து, அவளது உடம்பைக் குன்றச் செய்தன. அன்றலர்ந்த தாமரை மலர் காம்பொடி பட்டதைப் போல முகம் வாடிக் கீழே கவிழ்ந்தது. வேறொரு திக்கை நோக்கித் திரும்பி மௌனியாய் நின்றாள். சிரம் சுழன்றது. வலைக்குள் அகப்பட்ட மாடப்புறா , தன்னை எடுக்க வேடன் வலைக்குள் கையை நீட்டுவதைக் கண்டு உடல் நடுக்கமும் பேரச்சமும் கொண்டு விழிப்பதைப்போல, அவள் புகலற்று நின்றாள். அந்த யௌவனப் புருஷன் மேலும் தன்னிடம் நெருங்கி வந்ததைக் கடைக்கண்ணால் கண்டாள். நெஞ்சம் பதறியது. அங்கம் துடித்தது. அருகிற் கிடந்த கட்டிலிற்கு அப்பால் திடீரென்று விரைந்து சென்று நின்றாள். பெருங் கூச்சல் புரியலாமோ வென்று நினைத்தாள். அச்சத்தினால் வாயைத் திறக்கக் கூடாமல் போயிற்று. அதற்குள் அந்தச் சிங்காரப் புருஷன் கட்டிலிற்கு எதிர்புறத்திலிருந்த ஒரு சோபாவில் உட்கார்ந்து, “மேனகா! நீ ஏன் மூடப் பெண்களைப்போல இப்படிப் பிணங்குகிறாய்? உன்னுடைய உயர்ந்த புத்தியென்ன! அருமையான குணமென்ன! மேலான படிப்பென்ன! நீ இப்படிச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது! நானும் ஒரு மனிதன் தானே! பேயல்ல ; பிசாசல்ல; உன்னை விழுங்கிவிட மாட்டேன். அஞ்சாதே! அப்படி அந்தக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொள். உன் வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து இங்கே நிரம்ப நாழிகையாய் நின்றதனால் களைத்துப் போயிருக்கிறாய்! அதோ மேஜையின் மேல் தின் பண்டங் களும், பழங்களும் ஏராளமாய் நிறைந்திருக்கின்றன வேண்டியவற்றை எடுத்துச் சாப்பிட்டுக் களைப்பாற்றிக்கொள். சந்தோஷமாக என்னுடன் பேசு. நீ இப்படி வருந்தி நிற்பதைக் காண என் மனம் துடிக்கிறது. கவலைப்படாதே. விரோதியின் கையில் நீ அகப்பட்டுக் கொள்ளவில்லை. உன்னைத் தன் உயிரினும் மேலாக மதித்து, தன் இருதயமாகிய மாளிகையில் வைத்து தினம் தினம் தொழுது ஆண்டவனைப்போல வணங்கும் குணமுடைய மனிதனாகிய என்னிடம் நீ வந்த பிறகு உன்னுடைய கலியே நீங்கிவிட்டது. நீ எங்கு சென்றால் உனக்குப் பொருத்தமான சுகத்தையும் இன்பத்தையும் நீ அடைவாயோ அங்கு உன்னை ஆண்டவன் கொணர்ந்து சேர்த்துவிட்டான். நீ உன் வீட்டில் அடைவதைவிட இங்கு ஆயிரம் பங்கு அதிகரித்த செல்வாக்கை அடையலாம். உனக்கு புலிப்பால் தேவையா? வாய் திறந்து சொல்; உடனே உனக்கெதிரில் வந்து நிற்கும்; ஆகா! உன் முகத்தில் வியர்வை ஒழுகுகிறதே! கைக்குட்டையால் துடைக்கட்டுமா? அல்லது விசிறிகொண்டு வீசட்டுமா?” என்றான். அதைக் கேட்ட மேனகாவின் உயிர் துடித்தது. கோபமும், ஆத்திரமும் காட்டாற்று வெள்ளமென வரம்பின்றிப் பொங்கி யெழுந்தன. தான் ஏதோ மோசத்தில் அகப்பட்டுக் கொண்டதாக நன்றாக உணர்ந்தாள். இன்னமும் தான் நாணத்தினால் மௌனங் கொண்டிருந்தால், தன் கற்பிற்கே விபத்து நேர்ந்து விடும் என நினைத்தாள். பிறர் உதவியின்றி தனிமையில் விபத்தில் இருக் கையில் பெண்டீர் நாணமொன்றையே கருதின், மானமும், கற்பும் நில்லாவென எண்ணினாள். புலியின் வீரத்தையும், துணிவையும், வலுவையும் கொண்டாள். தனது சிரத்தை உயர்த்தி, “ஐயா! இது எந்த இடம்? என்னை அழைத்துவந்த மனிதர் எங்கு போயினர்? நீர் யார்? என்னை இவ்விடத்தில் தனிமைப் படுத்தியதின் காரணம் என்ன? தயவு செய்து இவற்றைத் தெரிவித்தால், நீர் இப்போது செய்த உபசரணைகளைக் காட்டிலும் அது பதின்மடங்கு மேலான உதவியாகும்” என்றாள்.

நைனா முகம்மது முன்னிலும் அதிகரித்த மகிழ்ச்சி கொண்டு, “பலே! இவ்வளவு அழகாய்ப் பேசுகிறாய்! உனக்கு வீணை வாசிக்கத்தெரியும் என்று நான் கேள்விப்பட்டேன். நீ பேசுவதே வீணை வாசிப்பதைப் போலிருக்கிறதே! இன்னம் வீணை வாசித்துப் பாடினால் எப்படி இருக்குமோ! மூடப்பெண்களைக் கலியாணம் செய்து, பிணத்தைக் கட்டி அழுதலைப்போல ஆயிரம் வருஷம் உயிர் வாழ்வதைவிட மகா புத்திசாலியான உன்னிடம் ஒரு நாழிகை பேசியிருந்தாலும் போதுமே! இந்தச் சுகத்துக்கு வேறு எந்தச் சுகமும் ஈடாகுமோ! மேனகா! நீ கேட்கும் கேள்வி ஆச்சரியமா யிருக்கிறது; இப்போது இங்கு வந்த உன்னுடைய தாயும், அண்ணனும் உன்னை ரூபா பதினாயிரத்துக்கு என்னிடம் விற்றுவிட்டது உனக்குத் தெரியாதா? அவர்கள் உங்களுடைய வீட்டிற்குப் போய்விட்டார்களே! அவர்கள் உண்மையை உன்னிடம் சொல்லியிருந்தும் நீ ஒன்றையும் அறியாதவளைப் போலப் பேசுகிறாயே! பெண்களுக்குரிய நாணத்தினால் அப்படி பேசுகிறா யென்பது தெரிகிறது. நீ பொய் சொல்வதும் ஒரு அழகாய்த்தான் இருக்கிறது! பாவம் இன்னமும் நிற்கிறாயே!
முதலில் உட்கார்ந்துகொள். பிறகு பேசலாம். நிற்பதனால் உன் உடம்பு தள்ளாடுவதைக் காண, என் உயிரே தள்ளாடுகிறது. அந்த மெத்தையின் மீது உட்கார். என் பொருட்டு இது வரையில் நின்று வருந்திய உன் அருமையான கால்களை வருடி இன்பங் கொடுக்கட்டுமா? அதோ மேஜைமீது காப்பி, ஷர்பத், குல்கந்து, மல்கோவா, செவ்வாழை, ஆப்பிள், ஹல்வா, போர்ட்டு ஒயின், குழம்புப்பால் முதலியவை ஏராளமாய் இருக்கின்றன. நான் எடுத்து வாயில் ஊட்டட்டுமா! என் ராஜாத்தி! பிணங்காதே; எங்கே; இப்படி வா! உனக்கு வெட்கமா யிருந்தால், நான் என் கண்ணை மூடிக்கொள்கிறேன்; ஓடிவந்து ஒரு முத்தங்கொடு. அல்லது நீ கண்ணை மூடிக்கொள்; நான் வருகிறேன்” என்றான். அவனுடைய மொழிகள், அவள் பொறுக்கக்கூடிய வரம்பைக் கடந்து விட்டன. ஒவ்வொரு சொல்லும் அவளுடைய செவியையும், மனத்தையும் தீய்த்தது. இரு செவிகளையும் இறுக மூடிக்கொண்டாள்; கோபமும், ஆத்திரமும் அணை பெயர்க்கப்பட்ட ஆற்று வெள்ளமெனப் பொங்கி யெழுந்தன; தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிந்தது. கோபமூட்டப்பெற்ற சிறு பூனையும் புலியின் மூர்க்கத்தையும் வலுவையும் கொள்ளு மென்பதற்கு இணங்க அவள் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து, அவனுடைய தலையை உடலினின்று ஒரே திருகாய்த் திருகி யெறிந்து அவன் அதற்கு மேல் பேசாமல் செய்துவிட நினைத்தாள். அவன் கூறிய சல்லாப மொழிகளைக் கேட்டதனால் அவளுடைய மனதில் உண்டான பெருஞ்சீற்றம் அவளது இருதயத்தையும், தேகத்தையும், அவனையும், அந்த மாளிகையையும் இரண்டாகப் பிளந்தெறிந்து விடக்கூடிய உரத்தோடு பொங்கியெழுந்தது. உருட்டி விழித்து ஒரே பார்வையால் அவனை எரித்துச் சாம்பலாக்கித் தான் சாம்பசிவத்தின் புதல்வி யென்பதைக் காட்ட எண்ணினாள். அவன் உபயோகித்தகன்னகடூரமான சொற்களைக் காட்டினும், பெருந்தேவியம்மாளும், சாமாவையரும் தன்னை விற்றுவிட்டார்கள் என்னும் சங்கதியே பெருத்த வியப்பையும், திகைப்பையும் உண்டாக்கியது. அவள் பைத்தியங்கொள்ளும் நிலைமையை அடைந்தாள். என்றாலும், அபலையான தான், அன்னியன் வீட்டில் அவனுடைய வலுவை அறியாமல் தேகபலத்தினால் மாத்திரம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்தல் தவறென மதித்தாள். மேலும், என்ன நடக்கிற தென்று அறிய நினைத்து தனது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக்கொண்டாள். தன் கணவனையும் தன் குடும்பச் தெய்வமான ஸ்ரீநிவாசப் பெருமாளையும் நினைத்து மனதிற்குள் ஸ்தோத்திரம் செய்தாள். இனித் தன் கணவனுக்கும் தனக்கும் உறவு ஒழிந்தது நிச்சயமென்று மதித்தாள். அந்தப் பிறப்பில் தான் கணவனுடன் வாழ்க்கை செய்தது அத்துடன் அற்றுப்போய் விட்டது நிச்சயமென்று எண்ணினாள். எப்பாடு பட்டாயினும் தன் உயிரினும் அரிய கற்பை மாத்திரம் காத்து அவ்விடத்தை விடுத்து வெளியிற் போய்க் கிணற்றில் வீழ்ந்து உயிர் துறந்துவிடத் தீர்மானித்தாள். அவனிடம் முதலில் நயமான சொற்களைக் கூறி அவன் மனதை மாற்ற நினைத்து, “ஐயா! நீர் படிப்பையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் பெருமைப் படுத்துவதிலிருந்தே, நீரும் படித்த புத்திமான் என்று தோன்றுகிறது. நான் அன்னிய புருஷனுடைய மனைவி. நானென்ன உப்பா புளியா? என்னை விற்கவும் வாங்கவும் யாருக்கு அதிகாரம் இருக்கிறது? என்னை விற்க என்னுடைய புருஷனுக்குக் கூட அதிகாரமில்லையே! அப்படி இருக்க, நீர் வஞ்சகமாக என்னைக் கொணர்வதும், என்னால் சந்தோஷ மடைய நினைப்பதும் ஒழுங்கல்ல. நீர் நல்ல ஐசுவரிய வந்தனாய்த் தோன்றுகிறீர். உங்களுடைய ஜாதியில் புருஷர் பல பெண்களை உலகம் அறிய மணக்கலாம். என்னைப் பார்க்கிலும் எவ்வளவோ அழகான பெண்கள் அகப்படுவார்கள். அவர்களை மணந்து உம்முடைய பொருளாக்கிக் கொண்டால் உமது இச்சைப் படி அவர்கள் நடப்பார்கள். கல்வி, வீணை முதலியவற்றைக் கற்றுக் கொடுத்தல் அரிய காரியமல்ல. பணத்தைச் செலவிட்டால், இரண்டு மூன்று வருஷங்களில் அவற்றைக் கற்றுக் கொடுத்துவிடலாம். பிறகு நிரந்தரமாய் நீர் சுகப்படலாம். இந்த அற்பக் காரியத்திற்காகப் பிறன் மனைவியை வஞ்சகமாய்க் கொணர்ந்து சிறைச்சாலைக்குப் போகும் குற்றம் செய்யலாமா? இது புத்திசாலித்தனம் ஆகுமா? இப்போதும் உமக்கு மனைவிமார் இருக்கலாம். அவர்கள் இருக்க வேண்டிய இடமல்லவா இது? போனது போகட்டும். நீர் சிறுவயதின் அறியாமையால் செய்த இந்தக் காரியத்தை நான் மன்னித்து விடுகிறேன். இதைப்பற்றி நான் வேறு எவரிடத்திலும் சொல்லமாட்டேன்; நிச்சயம். தயவு செய்து என்னை உடனே வெளியில் அனுப்பிவிடும். உலகத்தில் எல்லாப் பொருளிலும் பெண்களே மலிவான பொருள். மற்ற பொருட்களைப் பணம் கொடுத்தே கொள்ள வேண்டும். பெண்களைப் பணம் கொடாமலும் பெறலாம். பெண்களைக் கொள்வதற்காகப் பணமும் பெறலாம் ஆகையால், நீர் உலகறியப் பெண்களை மணந்து கொள்ளலாம். அதில் விருப்பம் இல்லையாயின், வேசையரைத் தேடி வைத்துக் கொள்ளலாம். அவர்களும் உம்மீது ஆசை காட்டுவார்கள். நான் அன்னிய புருஷனுடைய மனைவி. சொந்தக் கணவனையன்றி மற்றவரை நான் விஷமென வெறுப்பவள். என்னிடம் நீர் ஆசையையும், அன்பையும், இன்பத்தையும் பெற நினைத்தல், நெருப்பினிடம் குளிர்ச்சியை எதிர்பார்ப்பதைப் போன்றது தான். உம்முடைய நினைவு என்னிடம் ஒரு நாளும் பலியாது. என்னை அனுப்பிவிடும். உமக்குப் புண்ணியமுண்டு” என்று நயமும் பயமும் கலந்து மொழிந்தாள்.

நைனா முகம்மது புன்னகை செய்து, “உன்னைக் கொஞ்சும் கிளிப்பிள்ளை யென்றாலும் தகும். நீ கோபித்துக் கடிந்து கொள்வதும் காதிற்கு இனிமையாய் இருக்கிறது. நான் எத்தனையோ பெண்களைப் பார்த்தாய்விட்டது. எல்லோரும் முதலில் இப்படித்தான் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் எப்படி மாறினார்கள் தெரியுமா? நான் அவர்களை விட்டு ஒரு நிமிஷம் பிரிவதாயினும் அப்போதே அவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள். அத்தகைய கண்மணிகளாயினர். அப்படியே நீயும் செய்யப்போகிறாய். பெண்களென்றால் இப்படித்தான் முதலில் பிணங்கவேண்டும் போலிருக்கிறது. எனக்கு உன்மீது ஆழ்ந்த காதல் இருக்கின்றதா என்று பார்த்தது போதும். நான் அல்லா ஹுத்தாலா மீது சத்தியம் செய்கிறேன். இனி நீயே என் உயிர். நீயே என் நாயகி. நீயே என் செல்வம். நீயே நான் தொழும் ஆண்டவன். இந்த உடல் அழிந்தாலும் நான் உன்னையன்றி வேறு பெண்களைக் கண்ணால் பார்ப்பதில்லை; உன் மீது எனக்குள்ள ஆசையை நான் எப்படி விரித்துச் சொல்லப்போகிறேன்! நாம் நூறு வருஷம், ஆயிரம் வருஷம், கோடி வருஷம் , இந்த உலகம் அழியும் வரையிலும், ஒன்றாய்க் கூடியிருந்து இன்பம் அனுபவித்தாலும் அது தெவிட்டுமோ? என் ஆசை குறையுமோ? நான் இறந்தாலும் “மேனகா” என்றால் என் பிணம் எழுந்து உட்காரும், என் உடம்பு மண்ணோடு மண்ணாக மாறினும், மேனகா வருகிறாள் என்றால், அவளுடைய பாதம் நோகுமோ என்று அந்த மண் நெகிழ்ந்து தாமரை இதழின் மென்மையைத் தரும்” என்றான்.

மேனகா:- பாத்திரமறிந்து பிச்சையிட வேண்டுமையா; இவ்விடத்தில் உதவியின்றி அகப்பட்டுக்கொண்டேன் ஆகையால், உம்மை நான் ஒரு மனிதனாய் மதித்து மரியாதை செய்து மறுமொழி தருகிறேன். இத்தகைய அடாத காரியத்தைச் செய்த நீர், எனக்கு உதவி கிடைக்கும் வேறிடத்தில் இருந்தீரானால் உம்மை நான் மனிதனாகவே மதித்திரேன். கேவலம் நாயிலும் கடையாய் மதித்து தக்க மரியாதை செய்தனுப்பி யிருப்பேன். அவ்வாறு உம்மை அவமதிக்கும் என்னிடம் நீர் ஆசை கொள்வதனால் பயனென்ன! உலகத்தில் என்னுடைய கணவன் ஒருவனே என் கண்ணிற்குப் புருஷனன்றி மற்றவர் அழகில்லாதவர், குணமில்லாதவர், ஆண்மை யில்லாதவர், ஒன்று மற்ற பதர்கள். உம்மைக் கொடிய பகைவனாக மதித்து வெறுக்கும் என்னை வெளியில் அனுப்புதலே உமது கௌரவத்துக்கு அழகன்றி, என்னை நீர் இனி கண்ணெடுத்துப் பார்ப்பதும் பேடித்தனம்.

நைனா:- (புன்னகை செய்து ) என் ஆசை நாயகி யல்லவா நீ! நீ எவ்வளவு கோபித்தாலும் எனக்கு உன் மீது கோபம் உண்டாகும் என்று சிறிதும் நினைக்காதே. ஒரு நிமிஷத்தில் நீ என்னுடைய உயிரையும், மனதையும், ஆசையையும் கொள்ளை கொண்டுவிட்டாய். உன் புருஷன் உன்னை எவ்வளவு வைது அடித்துச் சுட்டுத் துன்புறுத்தினாலும் நீ அவனையே விரும்புகிறாயே. அப்படி நீ என்னை இழிவாய்ப் பேசுவதும், கடிந்து வெறுப்பதும் எனக்கு இன்பத்தைத் தருகின்றனவன்றி துன்பமாகத் தோன்றவில்லை. வீணில் பிடிவாதம் செய்யாதே; நீ எவ்வளவு தந்திரமாகப் பேசினாலும், அல்லது வெறுத்துப் பேசினாலும் நான் உன்னை விடப்போகிறதில்லை. என் படுக்கைக்கு அருகில் வந்த பெண்மயிலை நான் விடு வேனாயின் என்னைக் காட்டிலும் பதர் எவனும் இருக்க மாட்டான். நீ எப்படியும் என்னுடைய ஆலிங்கனத்திற்கு வந்தே தீர வேண்டும். அதை நீ வெறுப்போடு செய்வதைவிட விருப்போடு செய்வதே உனக்கும் நன்மையானது; எனக்கும் நன்மையானது. உங்களுக்கு ஒரே புருஷன் மீதுதான் விருப்பம் என்பதென்ன? எங்களிடம் வெறுப்பென்ன? அந்த ஆசை என் மீதும் உண்டாகும் என்பதை நான் உனக்குக் காட்டுகிறேன். ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்கும். அதைப் பற்றிக் கவலைப்படாதே. மாற்றமில்லாத தங்கமல்லவா நீ! இவ்வளவு பாடுபட்டுக் கொணர்ந்த உன்னை விட்டு விட என் மனம் சகிக்குமா? இன்றைக்கு நான் உனக்கருகிலும் வருவதில்லை. நீ ஏதாயினும் ஆகாரம் செய்துவிட்டு சுகமாய்ப் படுத்துக்கொள். இரண்டொரு நாளில் நீயே என்னை விரும்புவாய்.

மேனகா:- (கோபத்தோடு) உமக்கேன் அவ்வளவு வீண் பிரயாசை? இருப்பதை மாற்றவும் இல்லாததை உண்டாக் கவும் உம்மால் ஆகுமா? நாயின் வால் ஏன் கோணலாய் இருக்கிறதென்று நீர் கேட்க முடியுமா? அல்லது அதை நிமிர்க்க உம்மால் ஆகுமா? மனிதன் சோற்றில் கல்லிருக்கிறதென்று அதை நீக்கிவிட்டு ஏராளமாகப் போர் போராய் அகப்படுகிறதென்று வைக்கோலைத் தின்பதுண்டா? என் புருஷன் என்னைக் கொடுமையாய் நடத்துகிறார். நீர் கொள்ளை கொள்ளையாய் ஆசை வைக்கிறீர். அதனால் என்னுடைய உயிருக்குயிரான நாதனை நான் விலக்க முடியுமா? அது ஒரு நாளும் பலிக்கக் கூடிய காரியமல்ல. நீர் என்னை இப்படி வருத்துதல் சரியல்ல; விட்டு விடும். உம்முடைய கோஷா மனைவியை வேறு ஒருவன் அபகரித்துப்போய்த் தனக்கு வைப்பாட்டியாயிருக்க வற்புறுத்தினால் அது உமக்கு எப்படி இருக்கும்? இது ஒழுங்கல்ல, வேண்டாம்; விட்டு விடும். இதுகாறும் நீர் உம்முடைய மனைவியிடத்தில் அனுபவிக்காத எவ்விதமான புதிய சுகத்தை நீர் அயலான் மனைவியிடம் அடையப் போகிறீர்? இந்த வீணான பைத்தியத்தை விடும்.

நைனா:- (புன்சிரிப்போடு) நீ வக்கீலின் பெண்டாட்டி யல்லவா! வக்கீல்கள் இரண்டு கட்சியிலும் பேசுவார்களே. நீ இது வரையில் உன் புருவுன் கட்சியைத் தாக்கிப் பேசினாயே. இப்போது என் கட்சியைக் கொஞ்சம் பேசு. நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் ரூபாய் பீஸ் (கூலி ) தருகிறேன். நான் உன் புருஷன் கட்சியைப் பேசுகிறேன். நீ என்னிடம் வந்து விட்டபடியால் உன் புருஷன் பெண்சாதி இல்லாமையால் வருந்துவான். உனக்குப் பதிலாக என்னுடைய மனைவியை அனுப்பி விடுகிறேன். கவலைப்படாதே. நீ இங்கே இருந்து விடு; எவ்வளவோ படித்த நீ உங்கள் புராணத்தை படிக்கவில்லையா! முன் காலத்தில் திரௌபதி ஐந்து புருஷரை மணந்து திருப்தி அடையாமல் ஆறாவது புருஷன் வேண்டும் என்று ஆசைப்பட்டாளே. அவளை பதி விரதைகளில் ஒருத்தியாகத் தானே நீங்கள் நினைக்கிறீர்கள். என்னைத் தவிர நீ இன்னம் நான்கு புருஷர் வரையில் அடையலாம். அதற்கு அப்புறமே நீ பதிவிரதத்தை இழந்தவளாவாய்; அதுவரையில் நீ பதிவிரதைதான். கவலைப்படாதே. உன்னுடைய கணவன் அறியவே நீ இதைச் செய்யலாம். கோபிக்காதே. நான் அருகில் வந்து உபசாரம் செய்யவில்லை என்று வருத்தம் போலிருக்கிறது! அப்படி நான் கௌரதை பாராட்டுகிறவன் அன்று; இதோ வருகிறேன்; நான் உனக்கு இன்று முதல் சேவகன். இதோ வந்து விட்டேன். என்ன செய்ய வேண்டும் சொல்; முத்தங் கொடுக்கட்டுமா? உன் கணவன் கொடுக்கும் முத்தத்தைப் போல இருந்தால் வைத்துக்கொள். கசப்பா இருந்தால் அதைத் திருப்பிக் கொடுத்து விடு” என்று மகிழ்ச்சியை அன்றிக் கோபத்தைச் சிறிதும் காட்டாமல் வேடிக்கையாகப் பேசிய வண்ணம் எழுந்து அவளைப் பலாத்காரம் செய்யும் எண்ணத்துடன் காமவிகாரங்கொண்டவனாய் அவளை நோக்கி நடந்தான். அவனது நோக்கத்தைக் கண்ட மேனகாவின் உடம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் கிடுகிடென்று ஆடியது. உடம்பெல்லாம் வியர்த்தது. உரோமம் சிலிர்த்தது. மயிர்க்கா லெல்லாம் நெருப்பாக எரிந்தது. கடைசியான விபத்துக் காலம் நெருங்கிவிட்டதாக நினைத்தாள். அந்தத் தூர்த்தனது கையில் அகப்படாமல் எப்படித் தப்புவதென்பதை அறியாமல் கலங்கினாள். அவன் தனக்கு அருகில் வருமுன் தனது உயிரைப் போக்கிக் கொள்ள வழியிருந்தால், அந்நேரம் அவள் பிணமாய் விழுந்திருப்பாள். ஆனால், என்ன செய்தாள்? பெண்டுகளின் ஆயுதமாகிய கூக்குரல் செய்தலைத் தொடங்கினாள். “ஐயோ! ஐயோ! இந்த இடத்தில் யாருமில்லையா! இந்த அக்கிரமத்தைத் தடுப்பார் இல்லையா! ஐயோ! ஐயோ! வாருங்கள் வாருங்கள், கொலை விழுகிறது” என்று பெரும் கூச்சலிட்டவளாய் பதைபதைத்து அப்பால் நகர்ந்தாள். நைனா முகம்மது அலட்சியமாக நகைத்து, “இந்த இடம் பெட்டியைப் போல அமைக்கப்பட்டது. நீ எவ்வளவு கூச்சலிட்டாலும், ஓசை வெளியில் கேட்காது. ஏன் வீண்பாடு படுகிறாய்? குயிலோசையைப் போல இருக்கும் உன் குரலால் பாடி எனக்கு இன்பம் கொடுப்பதை விட்டு ஏன் குரலை இப்படி விகாரப்படுத்திக் கொள்கிறாய்! பேசாமல் அப்புறம் திரும்பி நில்; உனக்குத் தெரியாமல் நான் பின்னால் வந்து கட்டிக் கொள்கிறேன்” என்று கூறிய வண்ணம், கட்டிலுக்கு அப்பால் இருந்த மேனகாவை நோக்கி வேகமாய் நடந்தான். அவள் பெரிதும் சீற்றமும் ஆத்திரமும் கொண்டு அவனை வைதுகொண்டே கட்டிலைச் சுற்றிவரத் தொடங்கினாள். “ஆண் பிள்ளையாய்ப் பிறந்து, எவனும் இப்படிக் கொஞ்சமும் வெட்கம், மானம், சூடு, சுரணை ஒன்றும் இல்லாமலிருக்க மாட்டான். எல்லாம் துறந்த மிருகம்! அருகில் வா ! ஒரு கை பார்க்கலாம். நான் உதவியற்ற பெண்ணென்று நினைத்தாயோ நாவைப் பிடுங்கிக்கொண்டு என் உயிரை விட்டாலும் விடுவே னன்றி, என் உணர்வு இருக்கும்வரையில் இந்த உடம்பு உன் வசப்படாது” என்று பலவாறு தூற்றி பௌரஷம் கூறி மேனகா முன்னால் ஓட, மரக்காயனும் விரைவாகப் பெட்டைக். கோழியைத் துரத்தும் சேவலைப்போலக் கட்டிலைச் சுற்றிச் சுற்றிப் பிரதட்சணம் செய்யத் தொடங்கினான். மேனகா அவன் சிறுவனென்று அலட்சியமாக மதித்து, அவனை அவ்வாறே அன்றிரவு முற்றிலும் ஏமாற்றி, அவனுடைய விருப்பம் நிறைவேறா விதம் செய்ய நினைத்தாள். உண்மையில் அவன் ஆண் சிங்கம் என்பதை அவள் அறியவில்லை ; அவளுடைய அற்புதமான அழகில் ஈடுபட்டு நைந்திளகி அவளிடம் கோபத்தையுங் காட்ட மனமற்றவனாய் அவன் அது காறும் அன்பான மொழிகளையே சொல்லி வந்தான். அவள் நெடு நேரமாக ஒரே பிடிவாதமாய்ப் பேசித் தன்னை அலட்சியம் செய்ததைக் காண, கடைசியில் அவனுடைய பொறுமையும் விலகியது. ஒரு பெண்பிள்ளைக்கு இவ்வளவு பிடிவாதமா! இதோ ஒரு நிமிஷத்தில் இவளை என் வசப்படுத்துகிறேன் என்று தனக்குள் நினைத்து உறுதி செய்து கொண்டு, “மேனகா! உன் மனது கோணக்கூடா-தென்று நான் இதுவரையில் தாட்சணியம் பார்த்தேன். உன்னைப் பிடிக்கமுடியாதென்று நினைத்தாயா? இதோ பார்; அடுத்த நிமிஷம் உன் மார்பும் என் மார்பும் ஒன்றாய் சேரப்போகின்றன” என்றான். குறுக்கு வழியாய்க் கட்டிலின் மீதேறி அவளைப் பிடிக்கப் பாய்ந்தான். அவள் அப்போதே தன்னுயிர் போய்விட்டதாக மதித்தாள். கடைசி முயற்சியாக கட்டிலைவிட்டு, அதற்கப்பால் தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த மேஜைக்கப்புறம் விரைந்தோடினாள். அப்போது தற்செயலாய் அவளுடைய கூரிய விழிகள் மேஜையின் மீதிருந்த பொருட்களை நோக்கின. மாம்பழங்களை நறுக்குவதற்காக அதில் ஒரு கத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டாள். அது ஒன்றரைச் சாணளவு நீண்டு, பளப்பளப்பாய்க் கூர்மையாய்க் காணப்பட்டது; கண்ணிமைப் பொழுதில் அவள் அந்தக் கத்தியைக் கையிலெடுத்துக்கொண்டு சுவரை அடைந்து, முதுகைச் சுவரில் சார்த்தி, அவனிருந்த பக்கம் திரும்பி நின்று தனக்குள், ”ஈசுவரனில்லாமலா பொழுது விடிகிறது! நல்ல சமயத்தில் இந்தக் கத்தியைக் கொடுத்தான். அவன் அனாதை ரட்சகனல்லவா. மனிதருக்கு அவனுடைய பாதுகாப்பே காப்பன்றி, அரசனும் சட்டமும் இந்த அக்கிரமத்தைத் தடுத்தல் கூடுமோ? ஒருகாலுமே இல்லை ” என்று நினைத்து, “ஐயா! நீர் இனி வரலாம். நல்ல சமயத்தில் இந்தக் கத்தி எனக்கு உதவி செய்ய வந்தது. நீர் என்னைத் தீண்டு முன் இந்தக் கத்தியின் முழுப்பாகமும், என் மார்பில் புதைந்துபோம். பிறகு என் பிணத்தை நீர் உமது இச்சைப்படி செய்யும் என்றாள்; கத்தியின் பிடியை வலது கையில் இறுகப்பிடித்துத் தனது மார்பிற்கு நேராக விரைந்து உயர்த்திக்கையின் முழு நீளத்தையும் நீட்டினாள். அந்த விபரீதச் சம்பவத்தைக் கண்ட நைனா முகம்மது பேரச்சம் கொண்டவனாய் உடனே நயமான உரத்த குரலில் கூவி, “வேண்டாம், அப்படிச் செய்யாதே, நிறுத்து, நான் வெளியில் போய்விடுகிறேன். இனி உன்னைத் துன்புறுத்துவதில்லை. உன்னை உடனே கொண்டு போய் உன் வீட்டில் விட்டுவிடுகிறேன். கவலைப்படாதே” என்ற வண்ணம் அவளை விடுத்து நெடுந்தூரத்திற்கு அப்பாற் போய் நின்று, “பெண்மணி! நான் உன்னை சாதாரணப் பெண்ணாக மதித்து, அறிவில்லாதவனாய் இப்படிச் செய்துவிட்டேன். மன்னித்துக் கொள். உன்னைப் பதிவிரதைகளுக்கெல்லாம் ரத்தினமாக மதிக்க வேண்டும். இப்படிப்பட்ட மனைவியை அடைந்த வனுடைய பாக்கியமே பாக்கியம்! என் பணம் போனாலும் போகிறது. நீ சுகமாய் உன் கணவரிடம் போய்ச் சேர். இதோ சாமாவையரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி ஒரு கதவைத் திறந்து கொண்டு அப்பாற் போய்க் கதவைத் திரும்பவும் மூடித் தாளிட்டுச் சென்றான்.

மேனகாவுக்கு அப்போதே மூச்சு ஒழுங்காய் வரத் தொடங்கியது. பேயாடி ஓய்ந்து நிற்பவளைப்போல அவள் அப்படியே சுவரின் மீது சாய்ந்தாள். அவன் கடைசியாய்ச் சொன்ன சொல்லை நிறைவேற்றுவானோ அன்றி அது வஞ்சகமோ வென்று ஐயமுற்றாள். தனக்கு திரும்பவும் என்ன ஆபத்து நேருமோ வென்று நினைத்து மேலும் எச்சரிக் கையாகவே இருக்க வேண்டு மென்று உறுதி கொண்டாள். உயிரையும் விலக்க நினைத்தவள் அந்தக் கத்தியைத் தன் கையிலிருந்து விலக்குவாளா? கத்தி முதலியவை கொடிய ஆயுதங்களென்று இழிவாய் மதிக்கப்படுகின்றவை அன்றோ! அது அப்போது அகப்படாதிருந்தால், அவளுடைய கதி எப்படி முடிந்திருக்கும்! பதிவிரதா சிரோமணியான அம்மடமங் கையின் கற்போ, அல்லது உயிரோ, இல்லது இரண்டுமோ அழிந்திருக்கும் என்பது நிச்சயம். இதனால், ஒரு துஷ்டனை அடக்கும் பொருட்டே கடவுள் இன்னொரு பெரிய துஷ்டனைப் படைக்கிறார் என்பது நன்கு விளங்கியது. கடவுளின் படைப்பு வெளித் தோற்றத்திற்கு அரைகுறையாய்க் காணப்படினும், அது எவ்விதக் குற்றமற்ற அற்புதக் களஞ்சியமாய் இருப்பதை நினைத்த மேனகா கடவுளின் பெருமையைக் கொண்டாடினாள். என்றாலும், அவ்வளவு நுட்பமான அறிவைக் கொண்ட அப்பெண்மணி சாமாவை யரை அவன் அனுப்புவான் என்று அப்போதும் மடமையால் நினைத்தவளாய் ஒவ்வொரு கதவிலும் தன் விழியை வைத்து நோக்கிய வண்ணம் இருந்தாள். அந்தக் கொடிய காமதுரனது வீட்டைவிட்டு வெளியில் எப்போது போவோம் என்று பெரிதும் ஆவல் கொண்டு வதைபட்டாள். சாமாவையர் முகத்தில் இனி விழிப்பதும் பாவமென்று நினைத்தாள். சாமாவையர், என்னும் பெயர் அவளது காதிற் படும் படும் போதெல்லாம், நெருப்பு அவள் உடம்பைச் சுடுதலை போலத் தோன்றியது. அந்த மகம்மதியனிலும் அவனே மகா பாவமென மதித்தாள். சாமாவையன் மாமவையனாவனோ என்று வியப்புற்றாள். என்றாலும் முள்ளை முள்ளால் விலக்குதல் போலச் சிறிய வஞ்சகன் வீட்டிலிருந்து வெளிப்படப் பெரிய வஞ்சகனது உதவியைத் தேடுதல் தவறல்ல என்று நினைத்தாள். அவ்வாறு நெடுநேரம் சென்றது. காத்துக்காத்துக் கண்கள் பூத்தன. மகம்மதியனும் வரவில்லை. மாமாவையனும் வரவில்லை. எதிர்ச்சுவரில் மாட்டப் பட்டிருந்த கடியாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டாய் இருந்தது. அவ்வளவு நேரமாயிற்றா வென்று வியப்புற்றாள். கடியாரம் போகாமல் நிற்கிறதோ வென்று அதை உற்று நோக்கினாள். அதில் டிக்டக் டிக்டக் கென்ற ஓசை வந்து கொண்டிருந்தது. மகம்மதியன் சொன்னது பொய்யென்று நினைத்தாள். அவன் தன்னை வெளியில் அனுப்பமாட்டான் என்றும், திரும்பவும் அவன் வந்து தன்னை வற்புறுத்துவான் என்றும் அவள் உறுதியாக நினைத்தாள். இனி தான் அவன் முகத்தில் விழித்தால் தன்னிலும் கேவலமான இழிபரத்தை ஒருத்தியும் இருக்க மாட்டாள் என்று மதித்தாள். அன்றிரவு கழியுமுன் தான் அவ்விடத்தை விட்டு வெளியிற் போய்விட வேண்டும் இல்லையாயின், அந்த வாளால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிரை விட்டுவிட வேண்டும்; என்று ஒரே முடிவாகத் தீர்மானம் செய்து கொண்டாள். வெளியிற் செல்வதற்கு ஏதாயினும் வழி இருக்கிறதோவென்று அவ்வறை முழுதையும் ஆராயத் தொடங்கினாள். கதவுகளை அழுத்தி அழுத்திப் பார்த்தாள். யாவும் வெளியில் தாளிடப்பட்டோ பூட்டப்பட்டோ இருந்தன. வெளியிற் செல்வதற்கு எத்தகைய வழியும் காணப்படவில்லை. என்ன செய்வாள் அப்பேதை? ஓரிடத்தில் கற்சிலை போல நின்றாள். தன் நினைவையும் விழிகளையும் ஒரு நிலையில் நிறுத்தி எண்ணமிடலானாள். “நான் வெளியில் போனால், எவ்விடத்திற்குப் போகிறது? நான் கணவனிடம் போகாவிடில் எனக்கு வெளியில் எவ்வித அலுவலுமில்லை. கணவனிடம் போய்ச் சேர்ந்தால், நிகழ்ந்தவற்றை மறையாமல் அவரிடம் சொல்லவேண்டும். ஸ்திரீகளுடைய கற்பின் விஷயத்தில் புருஷருக்குப் பொறாமையும், சந்தேகமும் அதிகம் ஆகையால் அவர் ஏற்றுக்கொள்வாரோ அன்றி தூற்றி விலக்குவாரோ? நான் என் இருதயத்தை அறுத்து உள்ளிருக்கும் உண்மையைக் காட்டினாலும் அது ஜெகஜால வித்தையோ வென்று அவர் சந்தேகிப்பார். நான் ஒரு சிறிதும் மாசற்றவளாய் இருப்பினும், அவர் என் மீது தம் மனதிற்குள்ளாயினும் வெறுப்பையும் ஐயத்தையும் கொள்வார். அந்தரங்கமான அன்பும் மனமார்ந்த தொடர்பும் இல்லாமற்போனபின், வேண்டா வெறுப்பாய் வாழ்க்கை செய்வதைவிட, நான் உயிரை விடுதலே மேலானது. பாவியாகிய என்னால் பெற்றோருக்கும் பழிப்பு. கணவனுக்கும் தலைகுனிவோடு ஓயாச் சந்தேகம்; ஒழியா வேதனை. எனக்கும் மானக்கேடு. மானம் அழிந்த பின் வாழாமை முன்னினிதே என்றனர் நம் மூத்தோர். இத்தனை தீமைக்கும் நான் உயிரை விடுதலே மருந்து. நான் காணாமல் போனதைப்பற்றி அவர்கள் இப்போது துன்புறுதல் நிச்சயம். நான் திரும்பாமல் போய்விட்டால், அவர்களுடைய துன்பம் ஒரே துன்பமாய்ச் சிறிது காலத்தில் ஒழிந்து போம்; என்னுடைய களங்கத்தோடு நான் திரும்பிச் சென்றால், அவர்கள் யாவருக்கும் அது மீளா வேதனையாய் முடியும்” என்று பலவாறு யோசனை செய்தாள். தான் மகம்மதியன் வீட்டை விட்டு வெளியிற் போனாலும் இறக்க வேண்டியதே முடிவு. வெளியிற் செல்ல வழியில்லாதலின் அந்தக் காமதுர மகம்மதியன் முகத்தில் இன்னொரு தரம் விழிப்பதிலும் பெரிதும் துணிவைக் கொண்டு அந்தக் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு உயிர் விடுதலே தீர்மானமாய்க் கொண்டாள். நிரம்பவும் ஆண்மை வாய்ந்த மகா வீரனைப்போல மனோ உறுதியும் அஞ்சா நெஞ்சமும் விரக்தியும் கொண்டாள். பளபளப்பாய் மின்னிய வாளைக் கையிலெடுத்தாள். போரில் தோற்ற சுத்த வீரன் தனது பகைவன் கையில் அகப்பட்டு மானம் இழக்காமை கருதி இறக்க நினைத்துப் பகைவரின் குண்டு வரும் போது அதற்கெதிரில் தனது மார்பை விரித்து நின்று அதை ஏற்பவன் எத்தகைய மனோதிடத்தைக் கொள்வானோ அத்தகைய துணிவைக் கொண்டாள். இது விந்தையான செயலோ? உண்மையைக் காக்கும் பொருட்டு அரசியல், செல்வம், நாடு முதலிய வற்றையும் நாயகன், புதல்வன் முதலியோரையும் போக்கிய மங்கையர்க்கரசியான சந்திரமதி, இறுதியில் அதன் பொருட்டு தமது சிரத்தை நீட்டினாரன்றோ. அத்தகைய உத்தம மகளிர் திருவவதரிக்க உதவிய புனிதவதியான நம் பூமகளின் வயிறு மலடாய் போனதோ? அல்லது இனி போகுமோ? ஒருக்காலும் இல்லை. எத்தனையோ சீதைகள், சாவித்திரிகள், சந்திரமதிகள், மண்டோதரிகள், தமயந்திகள், கண்ணகியர் தினந்தினம் இப்பூமாதேவின் மணி வயிற்றில் தோன்றிக் குப்பையிற் பூத்த தாமரை மலரைப் போல ஏழ்மையிலும் தாழ்மையிலும் இருந்து தம் புகழ் வெளிப்படாவகையில் அத் திருவயிற்றிற்குத் திரும்பிப் போய்ச் சேர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களின் சரிதத்தைப் பாடுவதற்கு வான்மீகிகளும், கம்பர்களும், புகழேந்திகளும் போதிய அளவில் எங்கிருந்து கிடைக்கப்போகின்றனர்! பதிவிரதா தருமத்திற்கே இருப்பிடமான இப்புண்ணிய உருவும், கற்பின் திரளுமாய்த் தோன்றும். இருபத்தொரு தலைமுறையில் அவர்களுடைய முன்னோர் இயற்றிய மகா பாத்திரங்களெல்லாம் தொலைய அவர்கள் புனிதம் எய்துவர் என்பது முக்காலும் திண்ணம்.

அத்தகைய புகழை நமது நாட்டிற்கு உதவும் பெண் மணிகளில் ஒருத்தியான மேனகா என்ன செய்தாள்? வாளைக் கையில் எடுத்தாள். வெட்டுவோன் வெட்டப்படுவோன் என்னும் இருவரின் காரியத்தையும் ஒருங்கே அவளே செய்வதான அரிதினும் அரிய வீரச்செயலை முடிக்க ஆயத்தமானாள். கத்தியை நோக்கினாள். அதனிடம் ஒருவகை ஆதரவும் நன்றியறிவும் அவள் மனதிற் சுரந்தன. “ஆ! என் அருமைக் கத்தியே! என் ஆருயிர் நண்பனே! நீ நல்ல சமயத்தில் செய்த பேருதவியை நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறப்பேனா? என் உயிர்த்தனமாகிய கற்பைக் கொள்ளை கொள்ள வந்த கொடிய கள்வனை வெருட்டி ஓடிய மகா உபகாரி யல்லவா நீ! இந்த ஆபத்தில் என்னை காக்க என் கணவனில்லாததை அறிந்து, திடீரென்று தோன்றி உதவி புரிந்த உத்தமனாகிய உன்னை நான் கணவனிலும் மேலாக மதித்துக் கடைசிக் காலத்தில் என் மார்பை நீ தீண்ட விடுகிறேன். நீ என் மார்பின் வெளிப்புறத்தை மாத்திரம் தீண்டுதல் போதாது. அதன் உட்புறத்திலும் நுழைந்து அதற்குள்ளிருக்கும் என் இருத யத்தையும் இரண்டாகப் பிளந்து அதற்குள் நிறைந்திருப்பது என்னவென்று பார். அங்கு நிறைந்திருக்கும் என் கணவன் உருவை மாத்திரம் ஒரு சிறிதும் வருத்தாதே; வாளே! ஏன் தயங்குகிறாய்? உன் மானத்தைக் காப்பாற்றியது, உன்னைக் கொல்வதற்குத்தானோ என்று கேட்கிறாயோ? அன்றி, “என் இருதயத்தைப் பிளந்து விட்டால், பிறகு என் கணவன் வடிவத்திற்கு இருப்பிடம் இல்லாமல் போகிறதே என்று நினைக்கிறாயோ?” என்று பலவாறு கத்தியோடு மொழிந்தாள்.

அப்போது அவளுடைய கணவனது வடிவம் அகக் கண்ணிற்குத் தோன்றியது, நெஞ்சு இளகி நைந்தது. இருப்பினும் எஃகினும் வலியதாய்த் தோன்றிய அவளுடைய மனதின் உறுதி தளர் வடைந்து, அவன் மீது வைத்த காதலும் வாஞ்சையும் திரும்பின. கண்களில் கண்ணீர் வழிந்தது. என்ன செய்வாள்? ”ஆ! என் பிராணநாதா! என் மனதிற்குகந்த மனோகர வடிவே! இணையற்ற இன்பம் பாய்ந்த என் மன்மத துரையே! உங்களிடம் இந்த ஐந்து நாட்களாய் நான் அனுபவித்த சுவர்க்கபோகமாகிய பேரானந்த சுகம் ஈசுவரனுக்குக் கூடச் சம்மதி இல்லை போலிருக்கிறது. நான் இந்த உயிரெடுத்து இவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு இந்த ஐந்து நாட்களே நல்ல நாட்கள். இவைகளே பயன் பட்ட சுபதினங்கள். மற்ற நாட்கள் யாவும் சாம்பலில் வார்த்த நெய்போல, அவமாக்கப்பட்ட நாட்கள் தாம். இனி நான் உங்களை எங்கு காணப்போகிறேன்? சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போன்ற உங்களுடைய சொல்லமுதை இனி என் செவி எப்போது அள்ளிப் பருகப்போகிறது? அதனால் என் உடம்பு இனி ஒரு தரமாயினும் பூரித்துப் புளகாங்கிதம் அடையப் போகிறதோ? இந்த சுகம் நீடித்து நிற்கும் என்றல்லவோ பாவியாகிய நான் நினைத்தேன்! தெய்வம் என் வாயில் நன்றாக மண்ணைப் போட்டு விட்டதே! நான் தஞ்சையிலிருந்த ஒரு வருஷத்தில் இறந்து போயிருக்கக் கூடாதா? அப்போது உங்களுக்காயின் வருத்தமில்லாமற் போயிருக்குமே. இப்போது உங்களுக்கு நீடித்த விசனம் வைத்துவிட்டேன். ஆனால், எனக்கு உண்டான இம்மானக் கேட்டை நீங்கள் கேட்டு மீளா வேதனைக்கடலில் ஆழ்தலினும், சாதாரணமாக என்னை இழப்பதன் துயரம் நீடித்து நில்லாமல் விரைவில் தணிந்து போம். தஞ்சையிலேயே உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த நான் உங்களை விடுத்துச் செல்ல மனமற்றுத் தவித்தேனே! இப்போது உங்களிடம் வந்து எவருக்கும் கிடைக்காத பெரும் பேறான உங்களுடைய அந்தரங்கமான வாத்சல்யத்தையும், உண்மையான காதலையும் பெற்றபின் உங்களை விடுத்துப் பிரிந்து போவதற்கு என் மனம் இணங்குமோ? என் நாதா! என் நிதியே! என் உலகமே! என் பாக்கியமே! என் சுகமே! என் உயிரே! என்! தெய்வமே! உம்மை விடுத்துப் பிரிய மனம் வருமோ? நான் வாளால் என் கழுத்தை அறுத்துக் கொண்டாலும் உங்களிடம் சுகம்பெற்ற இவ்வுடம்பை விட்டு என் உயிர் போகுமோ? என்கட்டை தான் வேகுமோ? என் மனந்தான் சாகுமோ? என் செல்வமே ! உங்களை விட்டு எப்படி பிரிவேன்? உங்களுடைய பொருளாகிய கற்பைப் பறிகொடுக்க மனமற்று என் உயிரையே கொடுக்க இணங்கிவிட்டேன். இனி சாகாமல் தப்புவது எப்படி? நாம் இருவரும் ஒன்றாயிருக்கக் கொடுத்து வைத்தது இவ்வளவே. நீங்கள் என் பொருட்டு வருந்தாமல் சௌக்கியமாக இனி வேறொரு மங்கையை மணந்து இன்புற்று வாழுங்கள். அதைப்பற்றி நான் வருந்தவில்லை துரையே! போகிறேன். போகிறேன். பட்சம் மறக்க வேண்டாம். அன்பைத் துறக்க வேண்டாம். நான் பெண்டீர் யாவரிலும் ஏழை. கணவன் சுகத்தை நீடித்து அடையப் பாக்கியம் பெறாத பரம் ஏழை. முன் ஜென்மத்தில் எத்தனையோ பிழைகளைச் செய்து ஈசுவரனுடைய கோபத்திற்குப் பாத்திரமான மகா பாதகி! நான் என் மடமையாலும் பெண்மையாலும், உங்கள் விஷயத்திலும் எத்தனையோ பிழைகளைச் செய்திருப்பபேன்.

“கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி
நில்லாப்பிழை நினையாப் பிழையு நின்னஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையுந் தொழாப்பிழையு
மெல்லாப் பிழையும் பொறுத்தருள்வா யென்றனாருயிரே?”

உங்களுடைய புதிய நட்பில் புதிய மனைவாழ்க்கையில் வருஷத்திற்கு ஒருமுறையேனும் என்னை நினைப்பீர்களா? பாவியாகிய என் பொருட்டு தங்கள் மனம் ஒரு நொடி வருந்துமாயின், நான் கடைத்தேறி விடுவேன். உங்கள் கண் என் பொருட்டு ஒரு துளியளவு கண்ணீர் விடுமாயின் என் ஜென்மம் சாபல்யமாய் விடும். உத்தரவு பெற்றுக்கொள்கிறேன். என் உயிர் நிலையே! போய் வருகிறேன். என் தெவிட்டாத தெள்ளமுதே! போய்வருகிறேன். தேவரீர் பொற்பாத கமலங்களில் ஆயிரம் முறை தெண்டம் சமர்ப்பித்தேன். தேவரீர் பாதமே எனக்குத் துணை. தேவரீரது ஆசீர்வாதம் நீங்காமல் என்மீது இருப்பதாக” என்றாள். முத்துமாலை கீழே விழுதலைப்போலக் கண்ணீர் வழிந்து பார்வையை மறைத்தது. அப்படியே நைந்து இளகி உருகி அன்புக் குவியலாய் ஆசைமயமாய்க் கண்களை மூடி ஒரு நிலையிலிருந்து, தன் கணவன் வடிவத்தை அகக்கண்ணிற்கொண்டு அதில் ஈடுபட்டு நெக்கு நெக்குருகிச் சலனமற்ற தெவிட்டாத ஆநந்தவாரியில் தோய்ந்து அசைவின்றி ஓய்ந்து உலகத்தை மறந்து மனோமெய்களை உணராமல் நின்று அசைந்தாடினாள். அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது. அந்த சமாதி நிலை சிறிது சிறியதாய் விலகத் தொடங்கியது. தானிருந்த அறையின் நினைவும், தன் விபத்தின் நினைவும், தான் செய்யவேண்டு வதான காரியத்தின் நினைவும் மனதில் தலைகாட்ட ஆரம் பித்தன. திரும்பவும் தனது கையிலிருந்த வாளை நோக்கினாள். அவளுடைய உரத்தையும் துணிவையும் கொண்டாள். “கத்தியே! வா இப்படி; நான் இந்த உலகத்திலிருந்தது போதும். களங்கத்தைப் பெற்ற நான் இனி அதிக நேரம் இவ்வுலகில் தாமதித்தால், என் கணவனது ஆன்மாவிற்கு அது சகிக்க வொண்ணாக் காட்சியாகும். ஆகையால், உன் வேலையைச் செய்” என்றாள். தான் பெண் என்பதை மறந்தாள். உயிரைத் துரும்பாக மதிக்கும் வீராதி வீரனைப்போல கத்தியைக் கையில் எடுத்தாள். தந்தத் தகட்டைப் போல மின்னி கண்களைப் பறித்து மனதை மயக்கி அழகே வடிவமாய்த் தோன்றிய அவளது மார்பில் அந்த வாள் வலுவாக நுழையும்படி அதற்கு விசையூட்ட நினைத்து தனது கையை நன்றாக நீட்டி இலக்குப் பார்த்தாள். அதற்குள் அவளுக்கு மிகவும் அருகிலிருந்த ஒரு கதவு படீரென்று திறந்தது; மின்னல் தோன்றுதலைப் போலத் திடீரென்று ஒருவருடைய கரம் தோன்றி அந்தக் கத்தியை வெடுக்கென்று அவள் கரத்தினின்று பிடுங்கிவிட்டது. “ஐயோ! மகம்மதியன் கத்தியைப் பிடுங்கிவிட்டானே! இனி என்ன செய்வேன்?” என்று நினைத்துப் பேரச்சம் கொண்டு பதறிக் கீழே வீழ்ந்து மூர்ச்சித்தாள்.


சற்று நேரத்திற்கு முன்னர் அவளைத் தனியே விடுத்துப் போன நைனாமுகம்மது மரக்காயன் நினைத்தவற்றையும் செய்தவற்றையும் நாம் நன்றாறிய வேண்டுமன்றோ? சாமாவையரின் மூலமாய் அவளை அவளுடைய வீட்டிற்குத் திருப்பி அனுப்பிவிடுவதாக அவன் சொன்னது முற்றிலும் வஞ்சகம்; அந்த அழகிய யௌவன மடமாதைத் தனது பெருத்த செல்வமே போயினும், தன் உயிரே அழியினும் தான் அனுப்பக்கூடாதென உறுதி செய்து கொண்டான்; அவளை விடுத்து வெளியிற் சென்றவன் வேறொரு அறைக்குள் நுழைந்து ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்தான்; கோபத்தினாலும் அவமானத்தினாலும் அவனுடைய தேகம் துடிதுடித்து வியர்த்தது; அவனுடைய மோகாவேசம் உச்சநிலையிலிருந்தது;

“துஞ்சா தயர்வோ டுயிர் சோர்தரவென்
நஞ்சார் விழிவே லெறிநன்னுதலாம்
பஞ்சேரடியா யிழைபா லுறையு
நெஞ்சே யெனை நீயு நினைந்திலையோ?”

என்ன, அவனுடைய மனதும் உயிரும் அறைக்குள்ளிருந்த பொற்பாவையிடத்தில் இருந்தனவன்றி, அவனது வெற்றுடம்பு மாத்திரம் அவனுடன் இருந்தது; வேறு துணையற்று, முற்றிலும் தன் வயத்திலிருந்த கேவலம் மெல்லியவளான ஒரு பெண் தன்னை அன்று ஏமாற்றியதை நினைத்து நெடுமூச்செறிந்தான்; நல்ல தருணத்தில் கத்தியொன்று குறுக்கிட்டு தனது எண்ணத்தில் மண்ணைப் போட்டதை நினைத்து மனமாழ் கினான். எப்படியாயினும் அன்றிரவு கழியுமுன்னம் அவளைத் தன் வயப்படுத்த உறுதி கொண்டான். அவ்வளவு பாடுபட்ட அப்பெண், அன்றிரவு முழுதும் விழித்திருக்கமாட்டா ளென்றும், அவள் நெடு நேரம் விழித்திருக்க முயலினும், இரண்டு மூன்று மணி நேரத்திலாயினும் சோர்வும், துயிலும் அவளை மேற்கொள்ளுமென்றும், அப்போது அவளுக்கருகில் இருக்கும் கதவைத்திறந்து கொண்டு மெல்ல உட்புறம் சென்று அவள் கரத்திலிருந்த கத்தியை பிடுங்கி விட்டால், அவளுடைய செருக்கு ஒழிந்து போமென்றும், தனது எண்ணம் அப்போது நிறைவேறிப்போ மென்றும் நினைத்து மனப்பால் குடித்தான்.

உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்புதலுண்டோ ? எவரும் கண்டறியக்கூடாத தன் சயன அறையில் வந்து அகப்பட்டுள்ள பெண் இனி தப்பிப்போவதுண்டோ! ஒருநாளும் இல்லையென்று நினைத்தான். அவளுடைய அற்புத வடிவமும் இளமையும் கட்டழகும் காந்தியும் இனிய சொற்களும் அவன் மதியை மயக்கி மையலை மூட்டி அவனை உலைத்து வதைத்து வாட்டின. தனக்குள் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமான முள்ள செல்வமெல்லாம் அவள் பொருட்டு அழிந்தாலும் கவலையில்லை. அத்துடன் தனது உயிர் போவதாயினும் இலட்சியமில்லை. அப்பெண்மணியைத் தனது கைக்கொண்டு தீண்டினால் போதும் என்று பலவாறு நினைத்து மதோன்மத்தனாய்க் காமாதுரனாய் ஜூரநோய் கொண்டு இருக்கை கொள்ளா மெய்யினனாய்த் தத்தளித்து உட்கார்ந்தும் நின்றும் நடந்தும் அயர்ந்தும் சிறிது நேரம் வருந்திப் போக்கினான்.

இரையை விழுங்கின மலைப்பாம்பைப் போல நகரமாட்டாமலிருந்த பொழுதும், கால்களில் புண் பெற்றதோ வென்ன மெல்ல நகர்ந்தது. மணி 11, 12, 1, 2 ஆயிற்று. மெல்ல எழுந்தான். ஓசையின்றித் தனது காலைப் பெயர்த்து வைத்து நடந்து மேனகா கடைசியாக கத்தியோடிருந்த இடத்திற்கு மிகவும் அருகில் இருந்த ஒரு கதவை அடைந்தான். அதில் காணப்பட்ட சிறிய இடுக்கில் கண்ணை வைத்து உட்புறம் கூர்ந்து நோக்கினான். கத்தியோடு கடைசியாய் நின்றவிடத்தில் அவள் காணப்படவில்லை. காலடி யோசையேனும் வேறு ஓசையேனும் உண்டாகவில்லை. அந்த இடுக்கின் வழியாக அறையின் மற்றப் பாகத்தை நோக்கக்கூடவில்லை. அவள் எங்கிருக்கிறாளோ , விழித்திருக்கிறாளோ துயிலுகிறாளோ வென்று ஐயமுற்றான். அங்கிருந்து தப்பிப்போக எத்தகைய வழியும் இல்லாமையால் அவள் எப்படியும் உட்புறத்தி லேதான் இருத்தல் வேண்டுமென உறுதி கொண்டான்.

மெல்ல ஓசையின்றி வெளித்தாளை நீக்கிக் கதவைத் திறந்தான். அவனுடைய தேகம் பதறி நடுங்கியது. உட்புறத்தில் தனது சிரத்தை நீட்டினான். கண்ணிமைக்கும் பொழுதில் அவனுடைய விழிகள் அந்த அறை முழுதையும் ஆராய்ந்து, இரத்தின பிம்பம் போலத் தோன்றிய பெண்மணியைக் கண்டுவிட்டன. அவள் எங்கிருந்தாள்? தரையிலிருந்தாளா நாற்காலி சோபாக்களில் இருந்தாளா? இல்லை. அது நம்பக்கூடாத விந்தையா யிருந்தமையால் அவன் பெரிதும் வியப்பையும் திகைப்பையும் அடைந்தான். சற்று முன் தன்னைக் கொடிய நாகமென நினைத்து விலகிய பெண்மணி அப்போது அவளது குணத்திற்கு மாறான காரியத்தைச் செய்திருந்த தைக்காண, அவன் தனது கண்களை நம்பாமல் அவற்றைக் கசக்கி விட்டுத் திரும்பவும் நோக்கினான். அது பொய்யோ மெய்யோ காமநோய் கொண்ட தன் மனத்தின் மகவோ என்று திகைத்தான். ஒரே ஜோதியாய்க் காணப்பட்ட மின்சார விளக்கின் ஒளியில் பளபளவென்ன மின்னிய அவனுடைய கட்டிலின் மீது, வெண் மேகங்களினிடையில் தவழும் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல, அந்த வடிவழகி படுத்திருந்தாள். இன்னமும் அவளோடு போராடவேண்டுமோ வென்னப் பெரிதும் அச்சங்கொண்டு வந்த தனக்குக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டதைப் போல தன் விருப்பம் எளிதில் நிறைவேறியிருத்தலைக் கண்டு பேருவகை கொண்டான். பொற் பதுமையோ வென்னத் தோன்றிய மேனியும், உயர்ந்த பட்டுப் புடவையும், வைர ஆபரணங்களும் ஒன்று கூடி மின்சார வொளியில் கண்கொள்ளாச் சேவையாய் ஜ்வலித்தன. அது தெய்வலோகக் காட்சிபோலவும் அவள் கந்தருவ ஸ்திரீயைப் போலவும் தோன்றக் கண்ட யௌவனப் புருஷன் காதல் வெறியும் கட்டிலடங்கா மோகாவேசமும் கொண்டான்.

ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவளை அணைக்க நினைத்தான். அவள் ஒருகால் தன்னைக் கத்தியால் குத்திக்கொண்டு இறந்து கிடக்கிறாளோ வென்று உற்று நோக்கினான். உதிரமும் சவத்தோற்றமும் காணப்படவில்லை. இதழ்களை மூடிச் சாய்ந்திருக்கும் தாமரை மலரைப்போல அவள் துவண்டு கிடந்த தோற்றம் அவளது துயிலைச் சுட்டியது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி மெத்தையில் மறைத்திருந்தாள். “ஆகா! நாணத்தினால் அல்லவா முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள். கடலின் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; பெண்களின் மனத்தைக் கண்டு பிடிக்க எவராலும் ஆகாது; இவளும் என் மீது விருப்பத்தைக் கொண்டே என்னிடம் இவ்வளவு நேரம் போராடிப் பகட்டெல்லாம் காட்டியிருக்கிறாள். ஆண் பிள்ளைகளே எளிதில் ஏமாறும் மூடர்கள். என் மனதைச் சோதிப்பதற்கல்லவோ இவள் இந்த நாடகம் நடித்தாள். நான் தன்னிடம் உண்மை அன்பைக் கொண்டிருந்தேனோ, நெடுங்காலம் தன்னை வைத்து ஆள்வேனோ, அன்றி மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளென சிறிது காலத்தில் விலக்கி விடுவேனோ வென்று ஆராய்ந்திருக்கிறாள். ஆகா! என் கண்மணி ! உன்னால் நான் எத்தகைய பேரின்ப சுகத்தை அடையப் போகிறேன்! உன்னை நான் விடுவேனா? என் உயிர் உடலிலிருந்து பிரியும்போதே நீயும் என்னிடமிருந்து பிரிவாய்; கண்மணியை இமைகள் காப்பதைப்போல உன்னை நான் என் ஆசை யென்னும் கோட்டைக்குள் வைத்து அனுதினமும் பாதுகாப்பேன் அஞ்சாதே” என்றான்.

மெல்ல அடிமேலடி வைத்துக் கட்டிலிற்கு அருகில் நெருங்கினான். அவனுடைய காமத்தீ மூளையையும், தேகத்தையும் பற்றி எரித்தது. அடக்க வொண்ணாத தவிப்பையும் ஆத்திரத்தையும் கொண்டான். அழகுத் திரளாகிய அந்த அமிர்த சஞ்சீவி கிடந்த தடாகத்தைத் தான் அடுத்த நிமிஷத்தில் அடைந்து தனது ஐம்புலன்களும் மனதும் ஆன்மாவும் களிகொள்ள, அந்த இனிமைப்பிழம்பை அள்ளிப் பருகுவேன் என்னும் உறுதியும் ஆவலும் கொண்டு கட்டிலை அடைந்தான். அப்பெண்மணி தனது புடவையால் கால்கள், கைகள், தலையின் உரோமம் முதலியவற்றை மூடிப் படுத்திருந்தது அதிகரித்த நாணத்தைக் காட்டியது. அவள் உடம்பில் விலாப்பக்கத்தில் சிறிது பாகமும், கன்னத்தில் சிறிது பாகமுமே அவனுடைய கண்ணிற்பட்டன.

அண்டைப் பார்வைக்கு அப் பெண்கள் நாயகத்தின் தேகத்தில் அழகு வழிந்தது; ஒரு சிறிது மாசுமற்ற தந்தப்பதுமை போலவும் வாழையின் மெல்லிய வெண்குருத்தைப் போலவும் அவளுடைய மேனி தோன்றியது. கைகால்கள் அச்சில் கடைந்தெடுக்கப் பட்டவைப்போலக் கரணைகரணையாக் காணப்பட்டன. பேரதிசயமாய்த் தோன்றிய அந்த அற்புதக் காட்சியில் அவன் மனது ஈடுபட்டுத் தோய்ந்தது. மெல்ல அருகில் உட்கார்ந்து கையை அவள் மீது வைத்தான். தன்னைக் குத்தும் எண்ணத்துடன் அவள் கத்தியை இன்னம் வைத்திருக்கிறாளோ வென்று கைகளை சோதனை செய்தான். கத்தி காணப்படவில்லை. அவனது பெருங்கவலை யொழிந்தது. துணிவுண்டாயிற்று. தன் முழு ஆத்திரத்தையும் மோகத்தைங்காட்டி அவளைக் கட்டி அணைத்து அவளுடைய சுந்தரவதனத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்ப முயல, அவள் நன்றாய்க் குப்புறப்படுத்துத் தன் முகத்தை அழுத்தமாக மெத்தையில் மறைத்துக் கொண்டாள்.

“ஆகா! நான் எத்தனையோ உயர்தர மங்கையரின் நாணத்தைக் கண்டிருக்கிறேன்! இவளைப்போன்ற பெண் மானை நான் கண்டதே இல்லை! தொடுவதற்குள் வருதலைவிட இவ்வாறு நாணுதலும் வசீகரமாய்த்தான் இருக்கிறது. இதுவே பத்மினி ஜாதிப்பொண்களின் இயல்பென நான் கொக்கோக சாஸ்திரத்தில் படித்திருக்கிறேன். ஆகா! நானே அதிர்ஷ்டசாலி! என்ன பாக்கியம்! ஆண்டவன் பெரியவன் அல்லாஹுத் தல்லாவின் அருளே அருள். எவ்வளவு அருமையான இந்த நிதிக்குவியலை எனக்கு அளித்தான்! எவர்க்கும் கிடைக்காத இந்த ஆநந்தபோகத்தை எனக்களிக்கும் ஆண்டவனை நான் எப்படித் துதிப்பேன்? இவள் தூங்காமல் என் வரவை ஆவலோடு எதிர்பார்த்தன்றோ வருந்திக் கிடக்கிறாள். நான் என் மடமையால் இந்நேரம் வராமல் உட்கார்ந்திருந்து விட்டேன்; என் கண்ணே ! என் இன்பக் களஞ்சியமே! மேனகா! என்னிடம் இன்னமும் வெட்கமா? இப்படித் திரும்பு; ரோஜாப்பூவையும் வெல்லும் உன் முகத்தை எனக்குக் காட்டக் கூடாதா? என் ஆசைக் கண்ணாட்டி; இப்படித் திரும்பு; சோதனை செய்தது போதும். நான் இனி உன் அடிமை ; இது சத்தியம். என்னுடைய பொருளையும், என்னையும் உன் பாதத்தடியில் வைத்து விட்டேன். உன் விருப்பப்படி பொருளைப் பயன்படுத்தி என்னை ஏவலாம்; இனி நீயே என் தெய்வம்! நீயே இந்த மாளிகையின் சீமாட்டி. கேவலம் கழுதையிலும் தாழ்ந்தவளான என் மனைவி உன் காலில் ஒட்டிய தூசிக்கும் நிகராக மாட்டாள். அந்த மூட மிருகத்தை நான் இனிமேல் கனவிலும் நினைப்பதில்லை. இது சத்தியம்.

அவளை நாளைக்கே அவளுடைய தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன். அல்லது விஷத்தைக் கொடுத்து அவளைக் கொன்றுவிடுகிறேன். புருஷனுடைய மனதிற்கிசைந்த விதம் அவனுக்கு சுகம் கொடுத்து அவனை இன்புறுத்த அந்த மிருகத்துக்குத் தெரியாது. நான் வேறு ஸ்திரீயோடு பேசினால் ஆத்திரமும் பொறாமையும் எரிச்சலும் உண்டாய்விடும். தானும் சுகங் கொடாள்; பிறரிடம் பெறுவதையும் தடுப்பாள். அவளிடம், நான் வேறு பெண் முகத்தையே பார்த்தறியாதவன் என்று ஆயிரம் சத்தியம் செய்து தினம் ஒவ்வொரு புதிய மங்கையை அனுபவித்துவிட்டேன். நீ யாவரினும் மேம்பட்டவளாக இருப்பதால், இனி நீயே எனக்கு நிரந்தரமான பட்டமகிஷி. நான் இனி உன்னை யன்றி பிறர் முகத்தைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. என் மனைவியையும் நாளைக்கே ஒழித்து விடுகிறேன். உன்னுடைய காந்தியல்லவோ காந்தி நூர்ஜஹான் (ஜெகஜ்ஜோதி) என்று என் பெண்ஜாதிக்கு வைத்திருக்கும் பெயர் உனக்கல்லவோ உண்மையில் பொருந்துகிறது! அந்த எருமைமாட்டை இனி நான் பார்ப்பதே இல்லையென்று அல்லா அறியச் சொல்லுகிறேன்” என்று தனது மனைவியை இகழ்ந்தும், மேனகாவைத் துதித்தும், நினைத்த விதம் பிதற்றி அப்பெண்மணியின் அருகில் தலையணையில் சாய்ந்து முரட்டாட்டமாய் அவளை இறுகக் கட்டி அவளுடைய முகத்தைத் தனது பக்கம் திருப்பி விரைவாகத் தனது ஆத்திரத்தை யெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அவள் முகத்தில் முத்தமிட்டான். அதனால் விலக்க முடியாத இன்பத்தைக் கொண்ட அம் மங்கை அருவருத்த புன்னகை காட்டி நெடுமூச்செறிந்து தனது கண்களை நன்றாகத் திறந்தாள். அத்தனையும் பொறித் தட்டுதலைப் போல ஒரு நொடியில் நிகழ்ந்தன.

பசுத்தோலில் மறைந்திருந்த புலியைப் போல, அம் முகம் அவனுடைய மனைவி நூர்ஜஹானின் முகமாய் போய்விட்டது. அவள் மேனகா வன்று; அவனுடைய மனைவி நூர்ஜஹானே அவ்வாறு படுத்திருந்தவள். தின் பண்டம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் கையைவிட, அதிலிருந்து நாகப்பாம்பு புஸ்ஸென்று படமெடுத்துக் கிளம்புதல் எவ்வாறிருக்கும்? அதைப் போல அந்தக் காட்சி தோன்றியது. அவனுடைய வஞ்சகத்தை இன்னொரு வஞ்சகம் வென்றுவிட்டது. அவள் அங்கு எப்படி வந்தாள், மேனகா எப்படி போனாள் , மேனகாவின் புடவை, இரவிக்கை, ஆபரணங்கள் முதலியவை அவள் மீது எப்படி வந்தன என்று பல விதமான சந்தேகங் கொண்டு திகைத்தான். இடியோசையைக் கேட்ட நாகம் போலப் பேரச்சம் கொண்டு பேச்சு மூச்சற்று அப்படியே மயங்கித் தலையணையில் சாய்ந்தான். தண்ணீரில் ஆழ்த்தப்பட்ட கொள்ளிக்கட்டையைப் போல , அவனுடம்பைக் கொளுத்திய காமத்தீ தணிந்து இருந்த இடம் தெரியாமல் பறந்தது. அது காறும் தன் மனைவியிடம் தனது விபசாரங்களை மறைத்துத்தான் பரம யோக்கிய னென்று நடித்து அவளை வஞ்சித்தது அப்போது வெட்ட வெளிச்ச மாயிற்று. அவளை நினைத்த விதம் தூற்றியவை யாவும் அவனுடைய நினைவிற்கு வர அவன் நடுநடுங்கி மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்தான்.

அதிகாரம் 11 – மேனகாவின் கள்ளப் புருஷன்

அக்காள்! அடி அக்காள்!’ என்று பொங்கி யெழுந்த ஆத்திரத்தோடு பெருந்தேவியைக் கூவி அழைத்தவனாய்க் கையிலேந்திய தந்தியுடன் உட்புறம் நுழைந்த வராகசாமி நேராக சமையலறைக்குள் சென்று, “அவள் தஞ்சாவூரில் இல்லையாமே!” என்று பெரிதும் வியப்பும் திகைப்பும் தோன்றக் கூறினான்; அவனுடைய உடம்பு படபடப்பையும், சொற்கள் பதை பதைப்பையும், முகம் அகத்தின் துன்பத்தையும், கண்கள் புண்படும் மனத்தையும் யாவும் பெருத்த ஆவலையும் ஆத்திரத்தையும் காட்டின. பாம்பைக் கண்டு நாம் அஞ்சி நடுங்குகிறோம். பாம்போ நம்மைக் கண்டு பயந்தோடுகிறது. வராகசாமி தனது சகோதரிமாரிடம் அச்சத்தைக் காட்டியதைப் போல், குற்றமுள்ள மனத்தினரான அவ்விரு பெண்டிரும் அவ்விடத்தில் உள்ளூறப் பெரும் பயத்தைக் கொண்டிருந்தனர் என்றாலும், அதை வெளியிற் காட்டாமல் மிகவும் பாடுபட்டு மறைத்து, முகத்தில் அருவருப்பைக்காட்டி ஏதோ அலுவலைச் செய்தவராய் அவனைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். மேனகாவுக்கு அவன் கொடுத்த செல்லத்தினால் அவர்கள் பெரிதும் தாழ்வும் அவமானமும் அடைந்தவரைப் போலத் தோன்றினர்.

பெருந்தேவி மாத்திரம் மெல்ல முணுமுணுத்த குரலில், “தஞ்சாவூரில் இல்லாவிட்டால் இன்னொரு திருவாரூரில் இருக்கிறாள். வீட்டை விட்டு வெளிப்பட்ட கழுதை எந்தக் குப்பை மேட்டில் கிடந்தா லென்ன? அவளுடைய அப்பன் அவளை எங்கே கொண்டு போனானோ? யாருக்குத் தெரியும்? அந்தப் பீடையின் பேச்சை இனி என் காதில் போடாதே யப்பா; நீயாச்சு உன் மாமனாராச்சு; எப்படியாவது கட்டிக் கொண்டாடுங்கள்” என்று மிக்க நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தாட்சண்யம் பாராமலும் கூறினாள்.

வராகசாமியின் மனோநிலைமை எப்படி இருந்தது? எல்லாம் குழப்ப மென்று ஒரே சொல்லால் குறிப்பதன்றி, விவரமாய் எதைச் சொல்வது? எதை விடுப்பது? உலகமே தலை கீழாக மாறித் தாண்டவமாடுவதாயும், அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் சுழல்வதாயும், தானும் தன் வீட்டுடன், சகோதரிமார் சமேதராய், இறகின்றி ஆகாயத்தில் கிளம்பிக் கரணம் போடுவது போலத் தோன்றியது. தான் செய்வது இன்ன தென்பதும், தனது அக்காள் சொன்னது இன்ன தென்பதும் தோன்றப் பெறானாய்த் தனது தெள்ளிய உணர்வை இழந்து, ஆத்திரமே வடிவாய்த் துயரமே நிறைவாய் நிற்க, அவன் வாயில் மாத்திரம் அவனறியாமல் சொற்கள் தாமாய் வந்தன. முகத்தில் கண்கள், நாசி, உதடு, புருவம், கன்னம் முதலிய ஒவ்வொரிடத்திலும் குழப்பம் குழப்பம் குழப்பம் என்பதே பெருத்த எழுத்தில் எழுதப்பட்ட விளம்பரம் போலக் காணப்பட்டது. ” என் மாமனார் பட்டணத்துக்கே வரவில்லையாமே?” என்றான். மழைத் தூறலைக் காற்றானது கலைப்பதைப்போல கோபமும் துக்கமும் பொங்கி மோதி அவனுடைய அஞ்சிய சொல்லைத் தடுத்தன. மலை போல இருந்த மனையாட்டி எப்படி மறைந்து போனாள் என்பதை அவளுடன் கூட இருந்தவர் உள்ளபடி சொல்ல மாட்டாமல் தாறுமாறாய்ப் பேசியதைக் காண, அவனது தேகமும் கட்டிலடங்காமல் துடித்தன.

புதுமையாய்க் காணப்பட்ட அவனுடைய நிலைமை யைக் கண்ட பெருந்தேவி உள்ளூற மருண்டு விட்டாள். எனினும், அதிர்ந்த சொல்லால் வாயடியடித்தே தப்பவேண்டு மென்று நினைத்து அவனைச் சிறிதும் சட்டை செய்யாத வனைப் போல இருந்தாள். முதல்தர வாய்ப்பட்டியான பெருந்தேவியே விழிக்கும் போது கோமளத்தைப் பற்றிச் சொல்வது மிகையாகும். தண்ணீரில் மூழ்கும் நிலைமையில் இருப்பவன் வைக்கோலைப் பிடித்துக் கொள்வதைப் போல அவள், கரியேறிய தவலையொன்றைக்குப்புறத்தள்ளி, அது வாய்விட்டு ஓலமிடும்படி தேய்த்துத் திருவாழ்த்தான் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப்போல எத்தனை நாளைக்குத் தேய்த்தாலும் அது வெளுக்கும் என்னும் அச்சம் சிறிதும் இல்லாமல், ஆடம்பரம் செய்தவளாய்த் தனது முகத்தைச் சுளித்து, மூக்கை வளைத்து, உதட்டைப் பிதுக்கி, வாயால் , “சூ”விட்டு “நன்றாயிருக்கிறது! ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். மாமனாராம் மாமனார் ! இந்தமாதிரி ஆயிரம் மாமனாரையும் பெண்டாட்டியையும் சந்தையில் வாங்கலாம். வெளிக்கு மாத்திரம் பெரிய மனிதர்; உள்ளே பார்க்கப் போனால் அற்பபுத்தி; அவ்வளவும் ஊழல் ; ஊரில் கழிக்கப்பட்ட பிணங்கள் நமக்கா வந்து வாய்க்க வேண்டும்; பெரிய வீடென்று பிச்சைக்குப் போனாலும், கரியை வழித்து முகத்தில் தடவினானாம் என்ற கதையாய் முடிந்தது” என்று கோமளம் தனது கழுத்தில் சுளுக்குண்டானாலும் கவலையில்லையென்று நினைத்து அருவருப்போடு தனது கழுத்தை ஒரு திருப்புத் திருப்பினாள்.

ஆரம்ப நடுக்கத்திலிருந்து தேறித் துணிவடைந்த பெருந்தேவி , “என்னடா! முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறாய்? அவன் பெட்டி வண்டியில் வந்து வாசலில் இருந்தான். வெள்ளி வில்லை போட்டிருந்த அவனுடைய சேவகன் உள்ளே வந்து, ‘டிப்டி கலெக்டர் எசமான் வாசலில் இருக்கிறார்; மகளைக் கூப்பிடுகிறார்’ என்று சொன்னான் இவள் உடனே குடுகுடென்று ஓடினாள்; அப்படியிருக்க அவன் வரவில்லையென்று எந்த முண்டையடா உனக்குச் சொன்னவள்?” என்று தனது குரும்பைத் தலையைக் கம்பீரமாக உயர்த்தித் தாழ்த்தி குட்டைக் கைகளை நீட்டி மடக்கி இலங்கணி அவதாரம் காட்டி அதட்டிக் கூறினாள். அதைக் கண்டு ஒருவாறு அச்சம் கொண்ட வராகசாமி , “அவரே இதோ தந்தியனுப்பி யிருக்கிறார். வாசிக்கிறேன் கேள் :- ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லாவிடங்களிலும் நன்றாய்த் தேடிப் பார்க்கவும். போலீசிலும் பதிவு செய்யவும். நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு வருகிறேன். அவசரம். அசட்டையா யிருக்க வேண்டாம். பெண் அகப்பட்டாளென்று மறுதந்தி வந்தாலன்றி இங்கே ஒருவருக்கும் ஓய்வுமிராது; ஒரு வேலையிலும் துணிந்து மனது செல்லாது” என்று தந்தியைப் முற்றிலும் படித்துவிட்டான்

அதைக் கேட்டுப் பெரிதும் ஆத்திரங்கொண்ட அக்காள், ”நன்றாயிருந்தது நாயக்கரே நீர் வாலைக்குழைத்து ஊளையிட்டது என்றபடி இருக்கிறதே தந்தி! அவன் மகா யோக்கியன்; அவனுக்கு நீ தந்தியனுப்பினாயோ! அந்த நாறக்கூழுக்குத் தகுந்த அழுகல் மாங்காய்தான் நீ! அவன் நம்மைக் கொஞ்சமும் மதியாமல் தன்னுடைய அதிகாரத்தின் மமதையால் பெண்ணை அழைத்துக்கொண்டு போயிருக்கிறான்; நீ அவனுக்குத் தந்தி அனுப்பினாயோ? இப்படிச் செய்தவன் முகத்தில் எந்த மானங்கெட்டவனாயினும் விழிப்பானா? அல்லது அவனுக்குத்தான் எழுதுவானா? இந்த ஆறுநாளில் உன் புத்தி எப்படியாய்விட்டது! நீ எடுப்பார் கைக் குழந்தைதானே! எட்டும் இரண்டும் இவ்வளவென்பதை அறியாத ஒரு சிறுக்கி, பி.ஏ., பி.எல்., பரிட்சை கொடுத்தவனை, ஒருநாள் போட்ட சொக்குப்பொடியில் குரங்கைப் போல ஆட்டி வைப்பாளானால், அது யாருடைய மூடத்தனத்தைக் காட்டுகிறது! எங்களிடம் சொல்லிக்கொள்ள வேண்டாம்; கட்டின புருஷனிடமாவது மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போகவேண்டு மென்று நினைத்தாளா! இப்படிச் செய்தவளை ஆண்மையுள்ள எந்தப் புருஷனாவது மானமில்லாமல் பெண்டாட்டியென்று சொல்லிக்கொள் வானா! உன்னிடம் அடங்கிக் கிடக்க வேண்டியவளுக்கே நீ இலட்சியமில்லாத போது, அவளைப் பெற்றவனுக்கு நீ ஒரு பொருட்டா? நல்ல இளிச்சவாயன் (இளித்தவாயன்) என்று கண்டான். உன் தலையில் வழவழ வென்று மிளகாய் அறைத்து விட்டான்” என்று சம்பந்தா-சம்பந்தமின்றிச் சொற்களையும், கைகளையும், உடம்பின் சதை மடிப்புகளையும் உலுக்கினாள்.

வராகசாமி சிறு வயதிலிருந்தே சகோதரிமாரிடம் ஒருவித அச்சத்தையும் மரியாதையும் கொண்டிருந்தவன். ஆதலின், அவர்களிடம் எதிர்வாதம் செய்தறியான். என்றாலும், கூர்மையான பகுத்தறிவைக் கொண்டவன். ஆதலின், அவர்கள் பொருத்தமற்ற சொற்களைச் சொல்லக் கேட்கும் போதெல் லாம் வெளிப்படையாய் மறுத்துக்கூறும் துணிவின்றித் தன் மனதில் அது தவறெனவே கொண்டு, போனாற் போகிற தென்று விட்டு விடுவான்.

மேனகாவின் மீது அவர்கள் அவன் மனதில் நெடுங் காலமாகப் பகைமையும்
வெறுப்பையும் உண்டாக்கி வந்திருந்தனர். ஆயினும், அவளைத் திரும்பவும் அழைத்துக்
கொள்ளும் படி செய்ய அவன் மனதை அவர்களும் சாமாவையரும் கலைத்து அவள் மீது உண்டாக்கிய ஆசை நிரந்தரமாய் அப்படியே அவன் மனதில் வேரூன்றி விட்டது. அவன் மனதை உழுது பண்படுத்தி கற்களை விலக்கி அவர்கள் நட்ட காதல் விதை முளைக்க, அதை அவ்வைந்து நாட்களில் மேனகா தனது ஆழ்ந்த வாத்சல்யமாகிய உரத்தைப் பெய்து, இரமணீய குணமாகிய நீரைப்பாய்ச்சி, இனிய ஒழுக்க மெனும் பாதுகாப்பினால் செடியாக்கி மரமாக்கி விட்டனள். அக்காதல் மரத்தில் ஆசையும், அன்பும், பட்சமும், இரக்கமும், தயையும் பூக்களாய்ப் பூத்தன. ஒவ்வொரு கொத்திலும் பழங்கள் வெளிப்படத் தவித்துக்கொண்டிருந்தன. ஆதலின், அவள் விஷயத்தில் அவன் மனதில் அசைக்கக்-கூடாத நம்பிக்கையும் அந்தரங்கமான வாஞ்சையும் உண்டாயிருந்தன. அவள் தன்னுடைய அனுமதியின்றி தந்தையுடன் சென்றிராள் என்று உறுதியாக நினைத்தான். டிப்டி கலெக்டர் அனுப்பிய தந்தி உண்மையானது என்றும், அவர் அவளை அழைத்துப் போகவில்லை யென்றும், அவர் அவளை அழைத்துப் போயிருந்து பொய் சொல்வது அவருக்குக் கோட்டையன்றி நன்மையைத் தராது ஆகையால், அவர் அவ்விதம் சொல்ல வேண்டிய முகாந்தரமில்லையென்றும் நிச்சயமாக நினைத்தான். ஆனால், மேனகாவோ வேறு எவருடனும் தனியே போகிறவளன்று; அக்காளோ பொருத்தமில்லாத சொற்களை அழுத்தமாய்ச் சொல்லி அதட்டுகிறாள். மேனகா காணாமற்போன வகைதான் என்ன என்று பலவாறு நினைத்து மனக்குழப்பம் அடைந்து நின்றவனாய், “அவர் இந்த ஊருக்கே வரவில்லை யென்று சொல்லுகிறாரே! அதை நாம் எப்படி பொய்யென்று நினைக்கிறது? அவர் சாதாரண மனிதரல்ல. சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பவர். அவர் ரஜா வாங்கினாரா இல்லையா என்பதைப் பற்றி தஞ்சாவூரில் நம்முடைய சிநேகிதர் யாருக்காயினும் எழுதி உண்மையை ஒரு நிமிஷத்தில் அறிந்து விடலாமே. இந்தப் பொய் நிலைக்காதென்பது அவருக்குத் தெரியாதா? அவர் வந்திருக்கமாட்டாரென்றே தோன்றுகிறது” என்றான்.

அதைக்கேட்ட பெண்டீர் இருவரும், சண்டைபோடும் பொருட்டு முள்ளம்பன்றிகள் தமது உடம்பிலுள்ள முட்கள் சிலிர்க்கப் பதறி நிற்பதைப்போல இருந்தனர். பெருந்தேவி, “ஓகோ! அவன் பொய் சொல்லாத அரிச்சந்திர மகா ராஜாவோ? அப்படியானால் நாங்கள் சொல்வது பொய்யோ? சரிதான் இப்படிப்பட்டவன் என்பதை அப்பாவி அறிந்து கொண்டுதானே அவனும் அவளும் இப்படிச் செய்து விட்டார்கள். திம்மாஜி பண்டிதரென்பது முகத்திலேயே தெரியவில்லையா? அவன் ரஜா வாங்கினானா இல்லையா வென்பதை நீ அறிந்துவிடமுடியுமோ? அவன் இரகசியமாக ரஜா வாங்க நினைத்தால் தஞ்சாவூர் முழுதிலும் தப்படித்து விட்டுத்தான் வாங்குவானோ? பெரிய கலெக்டருக்கு ஒரு கடிதம் எழுதி சேவகனிடம் அனுப்பினால், அவனும் அதன்
பேரிலேயே பதில் எழுதி அனுப்பிவிடுகிறான். இந்த மாதிரி அவன் உன்னுடைய கலியாணத்தில் ரஜா வாங்கினதை நீ மறந்தாலும் நான் மறப்பேனோ? அதெல்லாம் உன்னுடைய குற்றமல்ல. உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் மருந்தின் வேலையாக்கும் இது. அவர்கள் அந்தத் தேவடியா நாரியை இங்கே எதற்காக அனுப்பினார்கள்? மருந்தை உள்ளே செலுத்தத்தானே அனுப்பினார்கள். இனிமேல் உனக்கு அவர்கள் சொல்லுவதுதான் நிஜமாயிருக்கும். இஞ்சி தின்ற குரங்கின் முகத்தைப் போல உன் முகமே நிஜத்தைச் சொல்லுகிறதே! மருந்து பேஷான மருந்து! பாட்டியம்மாள் இலேசானவளா! மருமகள் பேத்தி எல்லோர்க்கும் தாய்க்கிழவி யல்லவா அவள்! பொறித் தட்டுவதைப் போல உன்னை ஒரு நிமிஷத்தில் அவளுடைய மாத்திரைக் கோலால் புது மனிதனாக்கி விட்டாளே! கிழவி சாகவும் மாட்டாள்; செத்தாலும் எமனையும் எத்தி விடுவாள்; பற்றி எரியும் நெருப்பையும் மயக்கி விடுவாளே!

கோமளம்:- ஏனடி அக்காள்! அவள் வந்த மறுநாளே நான் சொன்னேன்; அப்போது எருமை மாட்டைப் போலப் பேசாமலிருந்து விட்டு இப்போது, “பப்பட்டி பப்பட்டி” என்று அடித்துக் கொள்ளுகிறாயே! வராகசாமிக்கு நான் கொண்டு போன காப்பியை என் கையிலிருந்து அவள் பிடுங்கிக் கொண்டு போனாளென்று நான் உடனே சொன்னேனே நீ காதில் வாங்கினாயா? அதில் தானே மருந்தைப் போட்டாள். அப்போதே கையும் மெய்யுமாய்ப் பிடித்துக்கொண்டால் காரியம் இவ்வளவுக்கு வருமா? அவளுடைய ஜாலமெல்லாம் பலிக்குகமா? இப்போது படு; உனக்கு வேண்டும்.

பெருந்தேவி :- நானா அதை கவனிக்க வில்லை ? நீ அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்! நான் நடந்ததை யெல்லாம் கவனித்தேன். அவள் காப்பியை உன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போனதும் தெரியும். படுக்கையறை யிலிருந்த தன்னுடைய டிரங்குப் பெட்டியைத் திறந்ததும் தெரியும். அதிலிருந்து ஏதோ மருந்தை யெடுத்துக் காப்பியில் போட்டதும் தெரியும். அப்போது புது மோகம் தலைக்கேறி யிருந்தது. நாம் சொன்னால் ஐயங்கார்வாளுக்குப் பொய்யாக இருக்கும். எப்படியாவது இரண்டு பேரும் ஒன்றாயிருந்து சுகப்படட்டும். நான் ஏன் அதைத் தடுக்கவேண்டு மென்று பேசாமலிருந்து விட்டேன்; இந்த மாதிரி அடிமடியில் அவள் கைபோட்டது இப்போது தானே தெரிகிறது.

கோமளம் :- இதுவரையில் வராகசாமி நமக்கெதிரில் அவளிடம் நெருங்கிப் பேசவும் கூச்சங்கொள்வான். இந்த ஐந்து நாளிலும் அவளை ஒரு நிமிஷங்கூட விடாமல் அவளுடைய புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலைந்தானே! சுய புத்தியோடு இருக்கிற ஒரு ஆண்பிள்ளை இப்படித்தானா பெட்டைமோகினி பிடித்தலைவான்? அவள் குளிக்கப் போனால் அங்கே இவன் அவளுடன் இளிக்க வந்துவிடுவான். புடவை உடுத்திக்கொள்ள அவள் மறைவிற்குப் போனால் நான் ஆண்பிள்ளை அல்லவென்று சொல்பவனைப்போல இவனும் அவ்விடத்தில் ஆஜர். மிட்டாயிக் கடையைக் கண்ட பட்டிக்காட்டான் என்பார்கள். அப்படி யல்லவா இவன் தேன் குடித்த நரி மாதிரி ஆய் விட்டான். இந்தத் தடவை எல்லாம் அதிசயமாகவே நடந்தது. முன்னேயிருந்த மேனகா தானே இவள்? முன்காணாத எவ்விதப் புதுமையை இவன் இப்போது கண்டு விட்டான்? வித விதமான சகோதரிகள் நாம் இருக்கிறோமே யென்கிற லஜ்ஜை இவனுக்கும் இல்லை, அவளுக்கும் இல்லாமற் போய்விட்டதே!

பெருந்தேவி:- சீமைச் சரக்கு சீனாம் பரத்துக் கற்கண்டுக் கட்டியது அது! தங்கத்தைக் கூட மாற்றுப் பார்ப்பதற்கு உறைப்பார்கள். இவள் அபரஞ்சித் தங்கத்திலும் உயர்வு; கீழே விடாமல் தலைமேலேயே வைத்திருந்தபடியாலே தான், நன்றாய் ஏமாற்றிவிட்டார்கள். நானும் பார்த்தேன்; புருஷனும் பெண்டாட்டியும் இப்படி மானங்கெட்டு அலைந்ததை நான் பார்த்ததே யில்லை. என்னவோ சின்ன வயசில் வேடிக்கை பார்க்கட்டுமே யென்று ஒரு நாள் வாய் தவறி , “நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு போடா” என்று சொல்லி விட்டேன். அதை ஒரே பிடியாய்ப் பிடித்துக்கொண்டானே! துரை துரைசானிகள் என்றே நினைத்துக் கொண்டு விட்டார்கள். கடற்கரைக்குப் போவதும், நாடகத்திற்குப் போவதும், குடும்ப ஸ்திரீகளுக்குத் தகுமா? இவன் தான் கூப்பிட்டால் அந்தக் கொழுப்பெடுத்த கிடாரிக்கு மானம் வெட்கம் ஒன்றும் இல்லாமலா போக வேண்டும்? இவர்கள் கடற்கரையில் செய்ததை எதிர்வீட்டு ஈசுவரியம்மாள் நாட்டுப்பெண் சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறாள். எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருந்தது.

கடற்கரையில் இவர்களை எல்லோரும் பார்த்துப் புரளி செய்யும்படி ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்வதாம்; முத்த மிடுவதாம். இந்தக் கலிகாலக் கூத்து உண்டா ! அடித்தால் கூட அழத் தெரியாத வராகசாமியும் இப்படிச் செய்வானா என்று சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுப் போகிறார்களாம். எனக்கு உயிரே போய்விட்டது.

சிறிது நேரம் சம்பந்தமற்ற அவளுடைய கொடிய சொற்களைக் கேட்க மனமற்றவனாய் நின்ற வராகசாமி, “என்னடி யக்காள் காரியத்தை விட்டு என்னமோ பேசுகிறாயே! அவர் அழைத்துப்போயிருந்தால் அவள் அங்கே இல்லை யென்று எதற்காகச் சொல்லவேண்டும். பெண்ணை மறைத்து வைத்துக்கொள்ள முடியுமா! அப்படி மறைத்து வைத்துக் கொள்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? எவராயினும் தாமே தமது கண்களை அவித்துக் கொள் வார்களா? எவ்விதம் செய்பவரா யிருந்தால் ரூபா. 3000 செலவழித்து ஒரு வாரத்திற்கு முன் அவளை இங்கே அழைத்து வருவாரா? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவர்களுடைய பணத்துக்குத் தான் செலவு செய்ய வழியில்லையா?” என்றான்.

பெரு: இது தெரியவில்லையா உனக்கு? ஆதாய மில்லாத கோமுட்டி ஆற்றோடு போவானா? அல்லது சோழியன் குடுமி சும்மா ஆடுமா? வேறு எதற்காக வந்தான்? உனக்கு சொக்குப் பொடி போடத்தான். அவர்கள் மூடர் களென்று பார்த்தாயோ? நாமே மூடர்களானோம்; உன்னை மயக்கி கைவசமாக்கித் தனிமையில் அழைத்துக் கொண்டால் உன்னையும், பெண்ணையும் எங்காவது தனிக் குடித்தனம் செய்ய அமர்த்தினால் பிறகு தாம் அடித்தது ஆட்டமா யிருக்கலாம் அல்லவா! இந்த இரண்டு மொட்டை முண்டைகளுடைய இடைஞ்சல் இல்லாமல் பெண் தன்னரசாய் வாழலாம் அல்லவா! அதுக்காகத்தான் மருந்து போட அவளை அனுப்பினார்கள். வந்த காரியம் சுலபத்தில் கை கூடிவிட்டது. நீயும் தாசானுதாசனாய் விட்டாய்! திரும்பிப் போய்விட்டாள்; பெண்டாட்டியாத்தே பெரியாத்தே என்று நீ அவளைத் தேடிக்கொண்டு தஞ்சாவூருக்கு ஓடி வருவாய் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். நீ அங்கு வந்தால் அவர்கள் சொற்படி தானே செய்கிறாய். அம்மாள், ”கரணம் போடு” என்றால் “இதோ போடுகிறேன் எண்ணிக்கொள்” என்று செய்கிறாய். “நான் பட்டணத்திற்கு வரமாட்டேன். நீ இங்கே வக்கீல் பலகையைத் தொங்கவிடு” என்பாள். “சரி” என்கிறாய்; இதெல்லாம் அந்த சூனியக்காரக் கிழவியின் யோசனையடா; உனக்கென்னடா தெரியும்? வெளுத்த தெல்லாம் பால் கறுத்த தெல்லாம் நீர்! அடித்தால் உனக்கு ஒழுங்காக அழக்கூடத் தெரியாதே – என்றாள்.

அதைக்கேட்ட வராகசாமியின் மனோ நிலையை என்ன வென்று சொல்வது? பாம்பு கடிக்கப் பெற்றவன் படிப்படியாய்த் தனது தெளிவான அறிவையும் உணர்வையும் இழந்து மயங்கித் தடுமாறுதலைப்போல அவனுடைய நிலைமை மேன்மேலும் பரிதாபகரமாக மாறியது. அது கனவு நிலையோ அல்லது நினைவு நிலையோ வென்பது சந்தேகமாய்ப் போனது. மேனகா போனது கனவா, அன்றி அக்காள் சொல்வது கனவா என்பது தோன்றவில்லை. மேனகா காணாமற்போனதும் உண்மையாய்த் தோன்றியது. அக்காள் சொன்னதும் நிஜமாய்த் தோன்றியது. அடுத்த நிமிஷம் இரண்டும் பொய்யாகத் தோன்றின. அக்காளுடைய யூகத்திற்கும் தந்திக்கும் சிறிதும் பொறுத்தமில்லை யென்பது அவன் மனதில் நன்றாய்ப் பட்டது. அவனுடைய மனதில் வேறு எத்தனையோ சந்தேகங்கள் உதித்தன. அவனுக்கு இயற்கை யிலேயே அக்காளுடைய சொல்லில் நம்பிக்கையுண்டு. ஆகையால், அப்போதும் அவள் சொன்னதை அசட்டை செய்ய அவனது மனது துணியவில்லை. டிப்டி கலெக்டர் அனுப்பிய செய்தியும் பொய்யல்லவென்று தோன்றியது. அது நிஜமா அல்லது இது நிஜமாவென்பதை நிச்சயமாய் அறிய மாட்டாதவனாய்த் தடுமாறினான். “அதிருக்கட்டும் பெண் தமது வீட்டிலிருந்தால் போலீசில் பதிவு செய்யும்படி நமக்கு எழுதுவாரோ? பின்பு அது அவருக்குத்தானே உபத்திரவமாய் முடியும்” என்றான்.

பெரு :- அதெல்லாம் வெளிக்கு ஆடும் நாடகமப்பா; நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு என்னும் கதையப்பா; அது எங்களுக்காக எழுதியனுப்பின சங்கதி யல்லவா; நீ போலீசில் பதிவு செய்ய மாட்டா யென்பது அவருக்கு நன்றாய்த் தெரியுமே; நான் நேற்றை மனிதர்; அவர்கள் எவ்வளவு காலத்துப் பழம் பெருச்சாளிகள்! எத்தனை ஊர் சுற்றினவர்கள்! எத்தனை மனிதரை அபக்கென்று வாழைப் பழத்தை முழுங்குவதைப் போல வாயில் போட்டுக்கொண்ட ஜாம்புவந்தர்கள்! ” என் பெண்டாட்டியை எவனோ அழைத்துக்கொண்டு போய்விட்டா”னென்று எந்த மானங் கெட்டவன் போலீசில் எழுதி வைப்பான்? உன் மாமனாருக்கு இது தெரியாதா? அவர் எமனைப் பலகாரம் பண்ணுகிறவர் அல்லவா! கனகம்மாளோ கொக்கோ! – என்றாள்.

வராக :- அவர் நாளைக்கு வருகிறேனென்று எழுதியிருக் கிறாரே; எத்தனையோ வேலைகளை விட்டு எதற்காக அவர் ஓடிவருகிறது? நான் தான் அங்கே வருவேனென்று எதிர்பார்த் தார்கள் என்றாயே.

பெரு :- நீ தான் போகாமல் தந்தியனுப்பி விட்டாயே; செய்ததை முழுதும் செய்துவிட வேண்டாமா? அதற்காக அவரே வருகிறார். இங்கே வந்து எங்களோடு கட்டி யழுதுவிட்டு உன்னைத் தனியாக அழைத்துப்போய் உன் காதில் மாத்திரம் ஓதினால் நீ சரிதான் என்கிறாய்.

வராக :- அப்படியானால், அன்றைக்கு வந்தவர் அவரே யென்பது சரிதானா?
பெரு:- தடையென்ன! கிழவியைப் பாட்டி யென்று சொல்ல சந்தேகமென்ன! வெள்ளி வில்லை போட்ட அவருடைய சேவகன் வந்து டிப்டி கலெக்டர் மகளைக் கூப்பிடுகிறாரென்று சொல்லி இவளை அழைத்தான். அது இப்போதுதான் என் கண் முன்னால் நடப்பது போல இருக்கிறது! – என்றாள்.

“நீ அவரை உன் கண்ணால் பார்த்தாயா?” என்ற கேள்வி அப்போது கூடத்திலிருந்து உண்டாற்று. இல்லையாயின், அதே கேள்வி வராகசாமியும் அவளிடம் கேட்டிருப்பான். அந்தக் குரல் யாருடையது? வராகசாமியும், சகோதரிமாரும் சமையலறையில் இருந்தனர் என்று முன்னரே சொல்லப் பட்டதல்லவா! அவன் தந்தியை வீட்டு வாசலில் சேவகனிடத்திலிருந்து வாங்கிக்கொண்டு ஆத்திரத்தோடு உள்ளே நுழைந்து சமையலறைக்கு சென்ற போது அடுத்த வீட்டு சாமாவையரும் ஓசையின்றி உள்ளே வந்து, ஊஞ்சலில் உட்கார்ந்து உட்புறம் நடந்த சம்பாஷணையை ஒரு சிறிதும் விடாமல் கேட்டிருந்தார். அவரே மேற்குறிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டவர். தனது சார்பாக சாமாவையர் பரிந்து பேசுகிறார் என்பதைக் கண்ட வராகசாமி, உடனே வெளியில் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து, “அடே சாமா! நீங்கள் என்னவோ கதை சொன்னீர்களே! இந்த தந்தியைப் பார்” என்று கூறி காகிதத்தை நீட்டினான். “தந்தி இருக்கட்டும். நீங்கள் பேசியதை யெல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். உன் மாமனார் வந்ததை இவர்கள் நேரில் பார்த்தார்களா? அவர்கள் உட்புறத்தில் அல்லவா இருந்தார்கள்?” என்று சாமாவையர் வக்கீல் பீஸ் (கூலி) இல்லாமல் வராகசாமியின் கட்சியை எடுத்துப் பேசினார்.

பெரு :- சாமா! நீ கோமுட்டி சாட்சியாய்ப் பேச வந்து விட்டாயோ? அவனை நாங்கள் நேரில் பார்க்க வேண்டுமா? வெள்ளிவில்லை போட்ட சேவகன் வந்து சொன்னானே. அவன் பொய் சொல்வானா? அந்த மண்டையிலே புழுத்த மகா பெரியவர் உள்ளே வராமல் அமர்த்தலாய்ப் பெட்டி வண்டியில் இருந்து கொண்டே சேவகனை அனுப்பும்போது நாங்கள் வெளியில் போய் தூபதீபம் காட்டி வெற்றிலை பாக்கு பூரண கும்பம் மேளம் தாளம் முதலிய உபச்சாரத்தோடு அந்த எச்சிற்கல்லைப் பிரபுவை நேரில் பார்க்கவில்லை என்கிறாயோ? அவன் டிப்டி கலெக்டராயிருந்தால் அது அவன் மட்டிலே; அந்த அதிகாரமெல்லாம் அவனுடைய சேவகரிடத் திலே காட்டவேண்டும். நமக்கென்னடா அவனுடைய தயவு? நம்முடைய வராகசாமியின் காலைப் பிடித்துப் பெண்ணைக் கொடுத்தவன் தானே அவன்; அவன் மரியாதை கொடுத்தால், நாமும் அவனை மரியாதைப் படுத்துவோம். அங்கில்லா விட்டால் இங்கும் இல்லை. அவன் வாசலில் நின்றால் நான் கொல்லையிற் போய் நிற்போம் – என்றாள்.

வராகசாமியின் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட வனைப் போல ஒன்றையும் அறிய மாட்டாதவனாய்த் தத்தளித்து நின்றான். அவன் மனதோ மேனகாவைப் பற்றி கவலை கொண்டு துடித்தது. அக்காள் சொன்னது அவனுக்கு ஒரு சிறிதும் மன அமைதியை உண்டாக்க வில்லை. டிப்டி கலெக்டர் பெண்ணை அழைத்துப் போகவில்லை யென்று எழுதியிருக் கையில், அவரே அழைத்துப் போனவரென்று நினைப்பது பொருத்தமற்ற தென்றும் தவறான விஷயமென்றும் எண்ணிணான். அவளை அவர் அப்படி அழைத்துப்போகக் கூடிய மூடன் அல்ல என உறுதியாக நினைத்தான்.

அவன் இயற்கையில் நற்குணம் உடையவன் ஆதலாலும், அவன் தனது சகோதரிமாரின் மீது வைத்த நம்பிக்கையாலும், “பொய்யுடை யொருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே” என்றபடி பெருந்தேவியும், கோமளமும் வாயடியடித்து உடாய்த்தமையாலும் அவனுக்கு அவர்கள் மீது எவ்விதச் சந்தேகமும் தோன்றவில்லை. மேனகா வேறு எவ்விதம் காணமற்போயிருப்பாளோ வென்று நினைத்து நினைத்து பெருங் குழப்பமடைந்து திகைத்துப் பேச்சுமூச்சற்று உட்கார்ந்து விட்டான். அவனைப் போலவே குழப்பங்களைக் கொண்டு ஒன்றையும் அறியாதவரைப் போல நடித்த சாமாவையர், “அவள் மறைந்து போனது சொப்பனமாக வல்லவோ இருக்கிறது! அவர் இப்படியும் அழைத்துப் போவாரோ? நல்ல பெரிய மனிதரான அவருக்குத் தெரியாத காரியம் உண்டா ? பெண் இனிமேல் புருஷனுடன் வாழவேண்டாமா? அவர் நல்ல படிப்பாளி; கண்ணியம் பொருந்திய மனிதர்; அவர் இவ்விதம் அழைத்துப் போயிருப்பாரா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகத்தைத் தருகிறது” என்றார்.

பெருந்தேவி பெரிதும் ஆத்திரமடைந்து, “போடா; நீ மகா புத்திசாலி ! பெரிய மனிதனையும், படித்த மனிதனையும் நீதான் கண்டவன்! பெரிய மனிதரெல்லாம் யோக்கியர்கள்; சின்ன மனிதர்களெல்லாம் அயோக்கியர்களோ? பைத்தியக் காரா போ; மற்றவர்களுக்கு நீதி போதிக்கவும், மற்றவரை இகழவும் பெரிய மனிதர்களுக்கு நன்றாய்த் தெரியும். தம்முடைய சுபகாரியம் மாத்திரம் வழவழத்தான்; அவர்கள் மற்ற எல்லாருக்கும் புத்தி சொல்லுவார்கள். உலகத்தையே மாற்ற முயலுவார்கள். தம்முடைய பெண்டாட்டியை சீராகப் பயன்படுத்தாமல் விட்டு ஊரிலிருக்கும் விதவைகளுக்கு எல்லாம் கலியாணம் செய்யவேண்டு மென்று சொல்லு வார்கள்; தெய்வமே யென்று தம் பாட்டில் ஒழுங்காயிருக்கும் விதவைகள் மனதில் புருஷனுடைய ஆசையையும் விரக வேதனையையும் உண்டாக்கி நல்லவரைக் கெட்டவராக்கி விடுவார்கள். நம்முடைய வராகசாமியினுடைய பெரிய வக்கீல் இருக்கிறாரே; அவரைவிட உயர்ந்த பெரிய மனிதனும் மேதாவியும் சிங்காரமாய்ப் பேசுகிறவனும் வேறே இல்லை. முதலில் அவருடைய காரியத்தைப்பார். விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து பல்தேய்க்கவும் நேரமின்றி உட்கார்ந் தாரானால், கட்சிக்காரர்களும், தரகுக்காரரும், தபாற்காரனும், நகைக்காரனும். புடவைக்காரனும், பிச்சைக்காரனும், வண்ணானும், அம்பட்டனும், பிள்ளையார் வேஷம், கட்டியக்காரன் வேஷம், இராஜா வேஷம், மந்திரி வேஷம் முதலிய வேஷங்களைப் போல் ஒருவன் மேல் ஒருவனாய் அந்த சுவாமியின் தரிசனத்துக்கு வந்து விழுகிறார்கள். பெரியவர் அவர்களுக்கு நடுவில் புதைபட்டு அஷ்டாவதானம் செய்கிறார்.

மேஜையின் மேல் பரிசாரகன் வைத்த காபியில் அதை கட்சிக் காரர்களான ஈக்கள் மொய்த்துக் கொள்கின்றன. அது அவருடைய வயிற்றை அடையத் தவம் புரிந்து ஆறிப்போய் அப்படியே கிடக்கிறது. பத்து மணிக்கு எழுந்து குடுகுடு வென்று கொட்டுகிறான். இன்னொருவன் அவர் தலையில் ஒரு சவுக்கத்தால் வேடுகட்டி விடுகிறான். பிள்ளையாருக்குப் போட்டு வைப்பதைப் போல வேறொருவன் சந்தனத்தை நெற்றியில் அடிக்கிறான். அப்படியே இலையில் உட்கார்ந்து கை சுட வாய் சுட இரண்டு கவளத்தை வாரி வாயில் அடித்துக் கொள்கிறார். எவ்வளவோ அற்புதங்களை உலகத்தில் சிருஷ்டித்த ஈசுவரன், வயிற்றின் மேல் ஒரு சிறிய வாசலும் கதவும் வைத்திருந்தால், வாயின் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக அரை நாழிகை வரையில் சாப்பிடும் தொல்லை யில்லாமல் முழு ஆகாரத்தையும் அப்படியே வயிற்றில் வைத்துக் கதவைச் சாத்திவிடலாமே; ஈசுவரனுக்கு புத்தியில்லையே; அவனுக்கு வக்கீலின் அவசரம் தெரிய வில்லையே யென்று அவர் அடிக்கடி சொல்லுகிறாராம். எழுந்தவுடன் பரிசாரகன் கை யலம்பி விடுகிறான். அவருடைய பெண்ணோ சட்டை தலப்பாகை முதலியவற்றை ஏந்துகிறாள். தடதடவென்று கச்சேரிக்கு ஓடுகிறார். அங்கே ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத் தூக்கி ஆட்டில் போட்டு, நாய்க்குலைத்து நரியாய் ஊளையிட்டு, நியாயாதிபதியின் முன் நாட்டியமாடி, நரியைப்பரியாக்கி பரியை நரியாக்கி, நட்டுவத்திற்குத் தகுந்தபடி பொய் சொல்லக் கூடாதென்னும் உறுதியால் நாடு , நகரம், அரசு பொருள், மனைவி, பிள்ளை முதலியவற்றையும் இழந்த அரிச்சந்திரனை முட்டாளாக்கி அவனுடைய நாடகத்தைத் தழைகீழாக ஆடுகிறார்.

கட்சிக்காரனுக்கு ஜெயமோ அவஜெயமோ, அவருடைய கட்சி என்றைக்கும் ஜெயம். ஜெயிலுக்குள் போகும் கட்சிக்காரன் அவருடைய பணத்தைக் கொடுத்துவிட்டுத்தான் போகிறான். சாயுங்காலம் அங்கிருந்து, துரைமார் பந்தாடுமிடங்களுக்குப் போய் அவர்களுடைய நட்பை வளர்த்துக்கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்தால் சமாசாரப் பத்திரிகை எதிரில் நிற்கிறது. அதன் பிறகு அடுத்த நாளைக்கு ஆடவேண்டிய நாடகத்தின் ஒத்திகை மனதில் நடக்கிறது. இராத்திரி பன்னிரண்டு மணிக்கு படுக்கை. விடியற்காலையில் எழுந்தது முதல் ராத்திரி கண் மூடும் வரையில் அவருடைய தேகத்திற்கும் மனதிற்கும் ஓயா வேலை ஒழியாக் கவலை. அவருடைய சம்சாரம் கமலாவுக்கு என்ன உத்தியோகம்? இனிமையான கட்டில், வெல்வெட்டு மெத்தை, மேலே கொசுவலை, மின்சார விசிறி, ஊதுவத்தி வாசனை, இந்த வைபவத்திலிருந்து எழுந்திருப்பது காலை ஒன்பது மணிக்கு. பல் தேய்க்க வென்னீர் பற்பொடியுடன் பரிசாரகன் எதிரில் பிரசன்னம். வெள்ளிக் கிண்ணியில் உப்புமாவும் சுடச்சுடக் காப்பியும், தாம்பூலாதிகளும் மேஜையில், “வா! வா!”வென்று அழைக்கின்றன.

கால் பிடிக்க வேலைக்காரி, எண்ணெய் தேய்க்க வெள்ளாட்டி, குளிப்பாட்ட இன்னொரு பாட்டி, புடவை தோய்க்க வண்ணாத்தி, குழந்தை யெடுக்க குசினிக்காரி, பால்கொடுக்க செவிலித்தாய், காலால் இட்டதைத் தலையால் செய்ய ஒரு பட்டாளம்; சிற்றுண்டியானவுடன் ஹார்மோனியம் வாசித்தல், வீணை தடவுதல், பகலில் முதல்தரமான போஜனம்; பிறகு மஞ்சத்தில் சிறுதுயில்; இரண்டு மணிக்கு மறுபடியும் சுடச்சுடக் காபி, லட்டு ஜிலேபி முதலிய ஏராளமாக திண்பண்டங்கள். பிறகு காதலன் காதலியைக் குறித்த தமிழ்நாவலின் இன்பம். மாலையில் கோச்சுவண்டியில் கடற்கரைக்குப் பவனி போதல். அங்கிருந்து வந்தவுடன் 7 1/2 மணிக்கு மாதுரியமான சாப்பாடு, 9 மணிக்குச் சயன உத்சவம். அவ்வளவே அம்மாளின் உத்தியோகமும், உழைப்பும். இவற்றால் தேகத்திற்கும், மனதிற்கும் ஏதாயினும் உழைப்புண்டா? ஒன்றுமில்லை. அவளுடைய சரீரம் கல்லா, கட்டையா? மனித சரீரந்தானே அவளுடையது! அதைப் பயன்படுத்தாமல் சோம்பேறித்தனமே குடிகொள்ள விடுத்து சங்கீதம், இனிய போஜனம், நல்ல காற்று முதலியவற்றால் சுகத்தையும் திமிரையும் ஊட்டி வேலையே இல்லாமல் உட்கார வைப்பது தவறென்று அந்தப் பெரியவர் அறிந்து கொண்டாரா? அறுபது நாழிகையும் நாய் போல அலைந்து பேய்போல உழைத்து ஓய்வே பெறாமல் பாடுபட்டுத் தமது உடம்பையும், மனதையும் வருத்தி வரும் அந்த மனிதரே தாசி வீட்டிற்கும் வேசி வீட்டிற்கும் போக ஆசைப்படுகிறாரே; அவர் கமலாவை எப்படி வைத்திருக் றோம் என்பதை நினைக்கிறாரா? அவளை இப்படி கெடுப்பதுதான் அருமை பாராட்டுவது போலிருக்கிறது. டிப்டி கலெக்டரும் இப்படித் தானே சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கிடாவைப் போலத் தங்கத்தைக் கொழுக்க வைத்திருக்கின்றான்; பெரிய மனிதனாம், நல்ல பெரிய மனிதன்! இனிமேல் பெரிய மனிதனென்றாயானால், நான் பிறகு தாறுமாறாய் ஆரம்பித்து விடுவேன். படிக்கிறது பகவத்கீதை; குடிக்கிறது குடக்கள்” என்றாள்.

சாமா:- சூ! உளராதே; பெரிய இடத்துச் சங்கதி. உன் நாட்டுப்பெண்ணை வைத்து ஆள உனக்குத் திறமையில்லை; ஊராரை யெல்லாம் தூஷிக்கிறாயே! உன்னோடு கூட இருந்தவளை எங்கேயோ பறி கொடுத்துவிட்டாய். என்ன வென்று கேட்டால், மருந்தாம் மாயமாம்; சொல்லாமல் பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், வராகசாமி தனியாக வந்து விடுவானாம்; கொக்கின் தலையில் வெண்ணெய் வைப்பதா? நீ சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா? சென்னப் பட்டணத்தில் கன்னம் வைக்க சீரங்கப் பட்டணத்திலிருந்து குனிந்து வந்த கதையாக இருக்கிறது. வராகசாமியைத் தனியாக அழைத்துக் கொண்டு போக வேண்டுமானால் பெண் இவ்விடத்திலேயே இருந்து இவன் மனதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலைத்துத் தன்னுடைய சொற்படி நடக்கச் செய்து கொண்டு தனிமையில் அழைத்து போவது சுலபமா! நீ சொல்வது சுலபமா! முன் பின் செத்திருந் தாலல்லவா உனக்குச் சுடுகாடு தெரியும். உன் அகமுடை யானுக்கு நீ இப்படித்தான் மருந்து போட்டாய் போலிருக்கிறது. இது மூக்கை நேரில் பிடிக்காமல் தலையைச் சுற்றிப் பிடிப்பதைப் போலிருக்கிறது.

கோமளம் – சபிண்டி தின்றவன் இருக்கும்போது, செத்தது பொய்யென்பது போலப் பேசுகிறாயே சாமா! மலைபோல இருந்த பெண்டாட்டி வீட்டைவிட்டுப் போனது கண் முன் நன்றாய்த் தெரிகிறதே. அவளுடைய அப்பன் அழைத்துக் கொண்டு போகா விட்டால் அவள் எப்படி மாயமாய் மறைந்தாள்? அவளென்ன சருக்கரைக்கட்டியா? நாங்கள் அவளைக் காப்பியில் போட்டு கரைத்துச் சாப்பிட்டு விட்டோமா? அந்தக் கெட்ட கழுதையும், அவளுடைய அப்பனும் இப்படிச் செய்தால் எங்களை என்ன செய்யச் சொல்லுகிறாய்? காரணத்தை யெல்லாம் அவர்களிடம் போய்க் கேள். அவர்களுடைய சூதெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்?

பெருந்தேவி:- அவள் தன்னுடைய டிரங்குப் பெட்டியி லிருந்து எதையோ எடுத்துக் காப்பியிலே போட்டதை நான் கண்ணா ரப் பார்த்தேன். அதற்குத் தகுந்தாற் போல, இவனுடைய புத்தியும் மாறிப் போயிருக்கிறதே. இனி குட்டிச் சுவரில் முட்ட வெள்ளெழுத்தா? அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம். அதைப்போல் தனக்குத்தான் அருமையாக ஒரு டிரங்குப்பெட்டி வந்து விட்டதென்று முப்பது நாழிகையில் முன்னூறு தரம் திறந்து பார்ப்பதும் பூட்டுவதுமே வேலை.

கோமளம்: – மகா அற்ப மனிஷி! அந்தத் திறவுகோலை எங்கேயாவது ஆணியில் மாட்டினால் நாங்கள் பெட்டியைத் திறந்து அதிலிருக்கும் அவளுடைய ஆஸ்தியை எடுத்துக் கொள்வோமாம். பெட்டியைத் திறக்கும் போது கூட தாலிச்சரட்டிலிருந்து திறவுகோலை வேறாய் எடுக்கமாட்டாள்; அப்பா! என்ன சாமர்த்தியம்! – என்றாள்.

சகோதரிமார் இருவரும் ஒரே பிடிவாதமாய் மேனகா தனக்கு மருந்து போட்டுவிட்டாள் என்று கூறியதை அவன் சிறிதும் நம்பாவிடினும், அவளுடைய பெட்டியைத் திறந்து, அதற்குள் சந்தேகநிவர்த்திக்குரிய குறி ஏதாயினும் இருக்கிறதா வென்பதைப் பார்க்க அவன் மனதில் ஒருவித ஆசை உதித்தது. அவன் உடனே, “அடிகோமளம்! அந்தப்பெட்டியை இங்கே எடுத்துக்கொண்டு வா , அதைத் திறந்து பார்ப்போம். அதில் வசிய மருந்தைக் காட்டுங்கள்” என்றான்.

பெரு:- மருந்துதான் உன் வயிற்றுக்குள் போய்விட்டதே; உன் வயிற்றைத் திறந்து பார். பெட்டியில் மிகுதி இருக்கிறதோ இல்லையோ.

கோமளம் : – திறவுகோல்தான் அவளுடைய தாலிச் சரட்டோடு சவாரி போயிருக்கிறதே; பெட்டியை நாம் எப்படித் திறக்கிறது. பூட்டு உறுதியானது. மறு சாவியால் திறக்கவே
முடியாது.

வராக :- திறவுகோலில்லாவிட்டால் பூட்டை உடைத்து விடுவோம் ; பெட்டியை எடுத்துக்கொண்டுவா.

சாமாவையர் :- (நயமாக) சேச்சே! அப்படிச் செய்யாதே. நல்ல உயர்ந்த பெட்டி ; வீணாய்க் கெட்டுப்போகுமப்பா! உனக்குப் பெட்டி என்ன செய்தது? மேனகா அதற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாளா வென்று பார்க்கப்போகிறாயா? பெண்டுகள் குழந்தையைப் போலப் பலவிதமான விளை யாட்டுச் சாமான்களையும் ஆடையாபரணங்களையும் பிறந்த வீட்டிலிருந்து ஆசையோடு கொணர்ந்து மறைத்து வைத்திருப் பார்கள். அதை நாம் பார்க்கக்கூடாதப்பா! உனக்குத் தெரியாது; வேண்டாம்; அப்படிச் செய்யாதே.

பெருந்தேவி – (ஒருவித அச்சத்தோடு) ஆமாப்பா! அவள் பின்னால், அதை வதைத்தேன் இதை வதைத்தேன் என்று பழி போட்டு எங்கள் தலையை உருட்டி விடுவாள். அதை உடைக்க வேண்டாம். நீ செய்வது எங்கள் பேரில் வந்து சேரும். தானில்லாத காலத்தில் இரண்டு மொட்டை முண்டைகளும் உடன் பிறந்தானிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெட்டியை உடைக்கச் சொன்னார்களென்று மண்ணை வாரித் தூற்றுவாள். கோமளம்! நீ பெட்டியைத் தொடாதே – என்றாள்.

அதே காலத்தில் அப்புறந் திரும்பிக் கோமளத்தைப் பார்த்து கண்சிமிட்டிப் பெட்டியைக் கொண்டுவரும்படி சைகை செய்தாள்.

அவள் உடனே பெட்டியைக் கொணர்ந்து வைத்து விட்டாள். அதைத் திறப்பதற்குத் தேவையான ஒரு உளி, குண்டுக்கல், ஆணி முதலியவைகளும் வந்து சேர்ந்தன.

மேனகா தனக்கு மருந்திட்டாள் என்பதை அறிவதற்கு அநுகூலமாக ஏதாயினும் குறிகள் அதில் தென்படுமோ வென்று பார்க்க ஆவல் கொண்ட வராகசாமி, உளியால் அதன் பூட்டை உடைத்துப் பெட்டியின் மூடியைத் திறந்தான். தஞ்சையிலிருந்து வந்தபோது வாங்கிய தாழம்பூவின் மணம் குபீரென்று கிளம்பி எங்கும் இனிமையாய் வீசியது. அந்தப் பெட்டி மிகவும் அகன்று நீண்டும் இருந்தது; இடையில் பொருத்தப்பட்ட ஒரு தகட்டி னால், அதன் உட்புறம் இரண்டு பாகங்களாய்த் தடுக்கப் பட்டிருந்தது. அவைகளில் பல வகைப்பட்ட சாமான்களும் ஆடையாபரணங்களும் கொலு வைக்கப்பட்டவாறு அலங் காரமாய்க் காணப்பட்டன. அதன் தோற்றத்திலிருந்து அவள் நாகரீகமானவள் என்பதும், மகா புத்திசாலியென்பதும் நன்கு விளங்கின. பெட்டியின் ஒரு பகுதியில் அவளுடைய ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பகுதிக்குள் இருந்த பொருள் என்ன வென்பது தோன்றாவாறு அதன்மேல் ஒரு சிறிய பட்டுத் துணி மறைத்துக் கொண்டிருந்தது. மூடிவைக் கப்படும் பொருளைப் பார்க்க ஆவல் கொள்ளுதலே மனிதரின் இயற்கை. ஆதலால், வராகசாமி, ஒரு பகுதியை மூடிக் கொண்டிருந்த பட்டை விலக்கினான். அதில் ஏதேனும் விசேஷம் இருந்ததா? அப்படியொன்றும் காணப்படவில்லை. பட்டுக் கயிற்றால் அழகாகக் கட்டப்பட்ட ஒரு புஸ்தகக்கட்டு ஒரு புறத்தில் இருந்தது. இன்னொரு புறத்தில் 20, 25 அழகான விலை உயர்ந்த பட்டு இரவிக்கைகள் ஒரு கட்டாய்க் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அவளுடைய இரவிக்கையைத் தொடவும் ஒருவகையான அருவருப்பைக் கொண்ட வராகசாமி அந்தக் கட்டில் என்ன புஸ்தகங்கள் இருக்கின்றன வென்பதையும், அதிலிருந்து அவளுடைய மனப்போக்கு எவ்வாறிருக்கின்றது என்பதையும் அறிய ஆவல்கொண்டு அதன் கட்டை அவிழ்த்தான். அதில் கம்பராமாயணம், திருவாய் மொழி, தாயுமானவர் பாடல், பாரதம், பாகவதம், பதார்த்தகுண சிந்தாமணி, சரீர தத்துவ சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், மருத்துவம், பாகசாஸ்திரமும், சுகாதார விளக்கம் முதலிய புஸ்தகங்களும், ஒரு நாவல் புஸ்தகமும் இருந்தது. நமது புராதனப் பழக்க வழக்கங்களிலேயே பயிற்றப்பட்ட மேனகா நாவலும் வைத்திருந்தாளோ வென்னும் சந்தேகம் சிலருக்கு உதிக்கலாம். ஆனால், தற்காலத்தில் நமக்கு ஒழுக்கம் பயிற்றும் நாவலாசிரியர்களால் எழுதப்படும் நிகரற்ற நாவல்கள் எதையும் அவள் வைத்திருக்க வில்லை. தமது சுயப்புலமையால் பெருத்த பண்டிதர்களால் எழுதப்பட்டு ஏராளமான சாற்றுக்கவிகளுடன் பிழையறத் தோன்றும் நாவல்களில் எதையும் அவள் வைக்கவில்லை. தோன்றாத் துணையாயிருந்து உதவும் கடவுளின் அருள்வாக்காய் அமைந்துள்ள கமலாம்பாள் சரித்திரமே அதில்காணப்பட்டது. வராகசாமி அவ்வாறு அவளுடைய புஸ்தகங்களைப் பரிட்சை செய்ததில் அவனுடைய அருவருப்பு அதிகரிக்கவில்லை. அவன் அவள் மீது எவ்விதமான குற்றமும் கூறுதற்கு இடமில்லாமல் போயிற்று. புஸ்தகங்களை முன்போலக் கட்டி வெளியில் வைத்தான். பெட்டியில் புஸ்தகக்கட்டு முதலில் இருந்ததற்கு அடியில் பெருத்த அற்புதமான தந்தப் பெட்டி யொன்று காணப்பட்டது. அதன் வேலைத் திறமும், அழகும் அவனுடைய கண்ணைப் பறித்தன. அந்தப்பெட்டியை மெல்ல வெளியில் எடுத்தான். அது பூட்டப்பட்டிருந்தாலும் அதன் திறவுகோல் அதன் பக்கங்களிலிருந்த வளையமொன்றில் கட்டப் பட்டிருந்தது. அதையெடுத்துப் பெட்டியைத் திறந்தான்.

அதுகாறும் மற்ற மூவரும் வாய் பேசாமல் அருகில் நின்று கவனித்தனர். அப்போது
பெருந்தேவி, “அடே அதை யெல்லாம் திறக்காதே; அதனால் வீண் மனஸ்தாபம் வந்து விளையும்; பணக்காரன் வீட்டுப் பெண்; விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின்றன. ஏதாவது போகும் குறையும்; அந்த வம்பு நமக்கேன்? பேசாமல் வைத்துவிடு!” என்று சொல்லி விட்டு சாமாவையரைப் பார்த்தாள். அவர் சிறிது புன்னகை கொண்டு தம்முடைய இரண்டாவது சதியா லோசனையும் தாம் நினைத்தபடியே நிறைவேறிப் போகும் என்பதை ஒருவாறு காட்டினார்.

அதைக் கவனியாத வராகசாமி தந்தப் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து அத்தர், ஜவ்வாது, முதலியவற்றின் மணம் வீசியது. அதற்குள் என்ன இருந்தது? விலை உயர்ந்த பொருள் வேறொன்றுமில்லை. தபாற் கார்டளவில் புகைப்பட மொன்று காணப்பட்டது. அந்தப்படம் எந்தப் புண்ணிய புருஷனுடையதோ, அந்த மனிதன் முன் ஜென்மத்தில் என்ன பூஜை பண்ணினவனோ வென்று கண்டோர் நினைக்கும்படி பெட்டியாகிய பஜனை மடத்தில் அந்தப் படம் கோலா கலமாய் நறுமலர்களாலும் துளபத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது. வெல் வெட்டினால் தைக்கப்பட்ட சிறிய பஞ்சு மெத்தையின் மேலும் அழகிய திண்டு தலையணை களினிடையிலும் அப்படம் காணப்பட்டது. அதற்குப் பூஜை, தூபம், தீபம், நைவேத்தியம், அலங்காரம், பஜனை முதலியவை பெருத்த உத்சவத்தைப் போல நடத்தப் பட்டிருந்தன வென்பது நன்றாய் விளங்கியது.

மேனகா எந்த சுவாமியை அவ்வாறு வைத்து வழிபட்டு வந்தாள் என்பதை அறிய ஆவல் கொண்ட வராகசாமி மேலேயிருந்த புஷ்பங்களை விலக்கி அப்படத்தை எடுத்துப்பார்த்தான். அது தன்னுடைய படம் என்பதைக்கண்டான். ஒரே நொடியில் அவனுடைய உடம்பு பூரித்தது; மயிர் சிலிர்த்தது; இன்பமாய் நிறைந்தான். கண்களில் கண்ணீர்த் துளிகள் ஆநந்தம் ஆநந்தம் பிரம்மா நந்தமென்று நாட்டியமாடிக்கொண்டு வெளிப் பட்டன. “ஆகா! என்ன மேனகாவின் பைத்தியம்! என்ன இவளுடைய அறியாமை! இவள் ஏதாயினும் தெய்வத்தின் படத்தை வைத்து வணங்காமல் ஒரு மனிதனுடைய வடிவத்தை வைத்துப் பூஜிப்பாளா!” என்று நினைத்தான். “இங்கு இவளிருந்தபோது என்னை நேரில் இவ்விதம் தெய்வமாகத் தானே மதித்து யாவற்றையும் செய்து வந்தாள். ஒருக்கால் இது இவள் தஞ்சையிலிருந்த காலத்தில் செய்து வந்த காரியம் போலிருக்கிறது. ஆகா! இவளைப் போன்ற மனைவி நான் எத்தனை ஜென்மம் எடுத்து என் ஆயுட்காலம் முழுதும் தவம் புரிந்தாலும் கிடைப்பாளோ! என் பாக்கியமே பாக்கியம் ” என்றெண்ணி அன்பு மயமாக இளகி அயர்ந்தான். மற்றவர் முகங்களைப் பார்த்தான். அவர்களும் அதைக்கண்டு ஒரு வித இளக்கமடைந்தவர்களாகத் தோன்றினர்.

“இத்தகைய கண்மணியைப் பறிகொடுத்தேனே! அவள் எங்கு போயிருப்பாளோ! எப்படி மறைந்திருப்பாளோ!” என்று நினைத்து ஏங்கினான். “அது நிஜமோ? அக்காள் சொல்வது நிஜமோ? அல்லது இரண்டும் உண்மையோ ? என்னை அவள் இவ்வாறு தெய்வமாக மதித்திருப்பதனால் என்னைத் தன் வசமாக்க அவள் தனது மடமையாலும் பாட்டி முதலியோரின் துர்போதனையாலும் எனக்கு ஏன் மருந்திட்டிருத்தல் கூடாது? அக்காள் சொல்வது மெய்யாகவே இருக்கலாம். அவள் எனக்கு மருந்திட்டிருந்தாலும் அதை நான் குற்றமாக கொள்வது தவறு. இருக்கட்டும் நாளைக்கு அவர் எப்படியும் வருவார். உண்மையை அறிந்து கொண்டு நானே நேரில் தஞ்சைக்குப் போய், அவளுக்கு நல்ல அறிவூட்டி, அவள் இங்கே இருந்தாலும் அவளைச் செல்வமாகவும் சீராகவும் வைக்கிறே னென்றும், அன்போடும் ஆசையோடும் நடக்கிறேனென்றும் உறுதி செய்து கொடுத்து விட்டு, அழைத்து வந்து விடுகிறேன்” என்று முடிவு செய்து கொண்டு தந்தப் பெட்டியைத் தனக்கருகில் வைத்துக்கொண்டான். மேலே ஆராய்ச்சி செய்தலை நிறுத்தி விட நினைத்தான். அந்த உத்தமியின் மீது எவ்வித ஐயமும் கொள்வதனால் தனக்குப் பெருத்த பாவம் சம்பவிக்கும் என்று அவன் மனது கூறியது. அவள் தன்னைப் பற்றி இன்னும் என்ன புதுமைகளைச் செய்து வைத்திருக்கின்றாளோ என்பதைக் காண ஒருவகை அவா தோன்றி அவனை வதைத்தது. தான் சோதனை செய்த பகுதியின் மற்றொரு புறத்திலிருந்த ரவிக்கைகளின் கட்டையெடுத்து அவிழ்த்தான். ஒவ்வொன்றும், ரூபா 10, 15 பெறுமானமுள்ள 20, 25 அழகிய இரவிக்கைகள் (கச்சுகள் ) கண்ணைப் பறித்தன. ஒன்றை யெடுத்துப் பிரித்தான். உடனே அவளுடைய எழில் வழிந்த கைகளும், முதுகும், மார்பும், கழுத்தும் அவனுடைய அகக்கண்ணிற்குக் கண் கூடாகத் தோன்றி அவன் மதியை மயக்கின. “ஐயோ! என் இனிமை வடிவை எப்போது நேரில் காணப் போகிறேன்?” என்று நினைத்து ஏங்கினான். அந்தக் கச்சு மூட்டையை அப்படியே வாரிக் கண்களிலே ஒற்றிக் கொண்டு முத்தமிட நினைத்தான். அண்டையில் மனிதர் இருத்தலை யெண்ணித் தன்னை அடக்கிக் கொண்டான்.

கச்சு மூட்டையின் கீழ் வேலைப்பாடுகள் அமைந்த சாயப்பெட்டிகள் பல காணப்பட்டன. வட்ட வடிவமாய்த் தோன்றிய ஒரு பெட்டியை எடுத்துத் திறந்தான். வைரங்களும் சதங்கைகளும் நிறைந்த அவளுடைய தங்க ஒட்டியாணம், ”பொய்யோ யெனுமிடையா”ளான தங்கள் செல்வச் சீமாட்டியைக் காணோமே யென்று ஏக்கம் கொண்டு அதில் படுத்திருந்தது. அரைமனதோடு அதைக் கீழே வைத்தான். யாவற்றிலும் பெரியதாய்க் காணப்பட்ட இன்னொரு பெட்டியைத் திறந்தான். வெள்ளை, சிகப்பு, பச்சை முதலிய நிறங்களில் விதைகளைக் கொண்ட மாதுளம் பழத்தைப் பிளந்தவாறு ஏராளமான ஆபரணங்கள் அதில் தோன்றி சுடர்விட் டெரித்தன. அவற்றை அவன் அதுகாறும் பார்த்தவனே யன்று; அவள் அவற்றை ஒரு நாளிலும் அணிந்ததைக் கண்டானில்லை. தமது புதல்வியின் பொருட்டு அவ்வாறு எவ்வளவோ பொருட் செலவு செய்துள்ள அவளுடைய பெற்றோர் அவளது வாழ்க்கையைக் கெடுக்க நினைப்பாரோ? சே! அப்படி நினைப்பது மூடத்தனம் என்று எண்ணினான். ஏராளமான வெள்ளி மைச்சிமிழ்களும், சாந்து வைத்த வெள்ளிக் கிண்ணங்களும், தந்தச் சீப்புகளும், முகம் பார்க்கும் கண்ணாடிகளும் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்து இருந்தன. அவைகளைப் பார்த்தவுடன், அவனுடைய அகக்கண்ணிலிருந்த மேனகாவின் காதளவு ஓடிய மை தவழ் கண்களும், நெற்றியினிடையிலிருந்து அழகுபெற்ற கஸ்தூரித் திலகமும், சுருண்ட கருங் கூந்தலின் ஒளியும் அப்படியே தத்ரூபமாய்த் தோன்றி அவனை வதைத்தன. இன்னொரு பெட்டி நிறையப் பவுன்களும், ரூபாய்களும் இருந்தன. அத்துடன் ஒரு பகுதியின் சோதனையை நிறுத்திவிட்டு அடுத்த பகுதியை ஆராய்ச்சி செய்தான். அதில் ஒவ்வொன்றும் 200, 250 ரூபாய் பெறுமான முள்ள 7, 8 பெங்களுர் பட்டுப் புடவைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டியிலிருந்த ஒவ்வொரு பொருளும் அவளுடைய ஒவ்வொரு அங்கத்தை நினைப்பூட்டி அவனைப் பெரிதும் வருத்தி துயரக் கடலில் ஆழ்த்தியது. புடவைகளின் கீழ் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் செய்யப்பட்ட அழகான பலவிளையாட்டுச் சாமான்கள் காணப்பட்டன. யாவற்றையுங் கண்ட வராகசாமி மேனகாவை நினைத்து நெடுமூச்செறிந்து கண்ணீர் விடுத்தான்.

“என் கிள்ளையே! நீ இவ்வளவு பெருத்த செல்வத்தை அடைந்திருந்தும் நற்குணம், நல்லொழுக்கம், அழகு முதலிய யாவற்றையும் பெற்றிருந்தும் சரியான புருஷனை மணந்து அவனுடன் இன்பம் அனுபவிக்கக் கொடுத்து வைக்காமற் போனாயே! உன் யோக்கியதைக்கும் மேன்மைக்கும் ஒரு சிறிதும் தகாத அதமனிலும் அதமனான என்னை நீ மணந்து தேம்பித் தவிக்கும்படி ஆனதே உன்கதி! இதுவரையில் போனது போகட்டும், இனி உன்னை நான் அன்போடு நடத்தி இன்புறுத்துவேன் என்று உனக்கு உறுதி கூறினேன்! அவ்வாறு நடக்க வில்லையா? நீ ஏன் இப்படித் திடீரென்று சொல்லாமல் போய்விட்டனை? நான் உன்னையும் சேலத்திற்கு அழைத்துப் போகவில்லை யென்ற கோபமா? ஜட்ஜிதுரையைக் கொலைக் குற்றத்திற்காக ஏன் தண்டிக்கக் கூடா தென்றாயே! அத்தகைய மகா சாமர்த்திய சாலியான உன்னை நான் மனையாட்டியாக அடைந்தது பற்றி அப்போது என் தேகம் எப்படிப் பூரித்தது தெரியுமா! அப்போது நான் கொண்ட பெருமை, நான் பி.எல். பரீட்சையில் தேறி விட்டேன் என்று கேட்ட போது கூட எனக்கில்லையே! இனி நான் சுட்டாலும், அடித்தாலும், வைதாலும் தகப்பன் வீட்டையே நினைப் பதில்லை யென்று உறுதி கூறினாயே! அப்போது சொன்னது பொய்யா? அன்றி இப்போது செய்தது பொய்யா?” என்று பலவாறு நினைத்து நினைத்து ஏங்கினவனாய் அவளுடைய பொருட்களை யெல்லாம் திரும்பவும் முன் போலவே வைக்கத் தொடங்கினான். அவனுடைய துயரத்தைக் கண்ட மற்ற மூவரும் தாமும் அவனைப் போலவே முகத்தை மாற்றிக் கொண்டனர் ஆயினும், “இன்னமும் தன்னுடைய எண்ணம் முற்றிலும் பலிக்கவில்லையே” என்று வருந்தி யிருந்தனர்.

யாவற்றையும் பெட்டிக்குள் வைத்த வராகசாமி தனது படமிருந்த தந்தப் பெட்டியை எடுத்தபோது மிகவும் கலங்கினான். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அவனுடைய சதை ஆடியது. “பெண் பிறந்தாலும் இப்படியல்லவா பிறக்கவேண்டும்! உலகத்தை-யாளும் மகாராஜாக்களும் எனது பாக்கியத்தைக் கண்டு பொறாமை கொள்ளத் தகுந்த இந்தப் பெண்ணரசி எனக்கு வந்து வாய்த்தும், இவளிடம் சுகமடையக் கொடுத்து வைக்காத மகா பாவியல்லவோ நான். ஆகா கேவலம் என்னுடைய படத்திற்கு இவ்வளவு பெருமையா! பெருமைப்படுத்தட்டும். பூஜை செய்யட்டும். அதற்கு மெத்தை யென்ன? திண்டுகள் தலையணைக ளென்ன? அடி! பேதையிலும் பேதையே! இதற்காக, கண்டிப்பதா அன்றி கட்டியணைத்து முத்தமிடுவதா! நீ இருந்த போது நான் இந்த வேடிக்கையைப் பார்க்காமல் போனேனே! பார்த்திருந்தால், – ஆகா! உன்னை இதைப் போல உட்காரவைத்துப் பூஜை செய்திருப்பேனே! பயப்படாதே; இனி என் ஆயுட்கால மெல்லாம் என் இருதய கமலத்திலேயே உன்னை வைத்துப் பூஜிக்கிறேன். இது முக்காலும் சத்தியம்” என்று தனது உள்ளத் தினின்று மொழிந்த வண்ணம், தனது படத்தைக் கீழே வைத்து விட்டு அதிலிருந்த பூக்கள், திண்டு, தலையணைகள் முதலியவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து வியப்போடு ஆராய்ச்சி செய்தான். பிறகு யாவற்றிற்கும் அடியிலிருந்த சொகுசான மெத்தையைப் பார்க்க ஆசை கொண்டு அதை மெல்லப் பெட்டியை விட்டு வெளியில் எடுத்து அதன் அழகை நெடு நேரம் பார்த்துப் பரவசமடைந்த பின், அதை வகைக்கப் போகையில் அந்தப் பெட்டியின் அடியில் இன்னொரு பொருள் காணப்பட்டது! மெத்தையை மடியில் வைத்துக்கொண்டு அதை எடுத்தான். அவன் அதை எடுத்த போது மற்ற மூவருடைய தேகங்களும் ஒரே காலத்தில் ஒருவித அச்சத்தினால் நடுங்கின. என்றாலும், ஒன்றையும் அறியாத வரைப் போல முகத்தில் எத்தகைய மாறுபாடும் இன்றி முன்போல இருந்தனர். அது எத்தகைய பொருள்? அது ஒரு பட்டுத்துணியால் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்தது என்ன என்பதை அறிய ஆவல் கொண்ட வராகசாமி அதை ஆத்திரத்தோடு அவிழ்த்தான். பட்டுத்துணிக்குள் ஒரு தடித்த காகிதத்தில் அந்த வஸ்து கட்டப்பட்டிருந்தது; காகிதத்தையும் பிரித்தான். யாவரும் இமைகொட்டாமல் அதையே பார்த்திருந்தனர்; அதற்குள் இருகடிதங்களும், ஒரு புகைப்படமும் இருந்தன. பெரிதும் திகைப்பையும் வியப்பையும் அடைந்த வராகசாமி படத்தைப் பார்த்தான். கடிதங்களில் ஒன்றை எடுத்து யாருக்கு யாரால் எழுதப்பட்டது என்பதைப் பார்த்தான். உடனே அவனுக்கு ஒரு பெருத்த சந்தேகம் உண்டாயிற்று. தான் சோதனை செய்தது மேனகாவின் பெட்டியா அன்றி பிறருடையதா என்னும் சந்தேகம் தோன்றியது. தனது கண்களை நம்பாமல் திரும்பவும் ஊன்றி கடிதங்களையும் படத்தையும் மாறிமாறிப் பார்த்தான். அதற்குள் பெருந்தேவி, ”என்னடா! அது? மறைக்கிறாயே? என்ன இரகசியம் அது? அகமுடையாள் லட்சம் பத்து லட்சத்திற்கு நோட்டுகள் வைத்திருக்கிறாள் போலிருக்கிறது? பாட்டி கொடுத்திருப்பாள். எங்களுக்குச் சொல்லப்படாதோ?” என்று மனத்தாங்கலாகப் பேசினாள். அவளுடைய சொல், பச்சைப்புண்ணில் மிளகாய் விழுதை அப்புதலைப் போல இருந்தது. அவனுடைய முகமும், தேகமும் படபடத்துத் தோன்றின. கண்கள் துடிதுடித்து கோவைப்பழமாய்ச் சிவந்தன. கடிதங்களில் ஒன்றைப் படிக்க முயன்று இரண்டொரு வரிகளை வாய்க்குள்ளாகவே படித்தான். “பெண்மணியும், என்னிரு கண்மணியும், என் மனதைக் கொள்ளைகொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப்பிள்ளை -” என்பது வரையில் படித்தான். அதற்கு மேல் அவனால் படிக்கக்கூடவில்லை. மூளை சுழன்றது. அறிவு மயங்கியது. கையிலிருந்த காகிதங்களும் படமும் கீழே விழுந்தன. அருகில் சுவரோரமாய்ச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கண்மூடிச் சாய்ந்து விட்டான்.

“என்னடா அது? என்னடா அது?” என்ற மிகுந்த ஆவலுடன் கேட்டுக்கொண்டு பெருந்தேவியம்மாள் பெட்டி யண்டையில் நெருங்கினாள். அதற்குள் கோமளம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து படத்தையும் கடிதங்களையும் கையி லெடுத்டு படத்தைப் பார்த்தாள். சாமாவையர் வராகசாமியின் பக்கத்தில் உட்கார்ந்து ஒன்றையும் அறியாதவரைப் போலத் திகைத்தார். படத்தைப் பார்த்த கோமளம், “மைசூர் மகாராஜாவின் படமல்லவா இது! இந்தப் படம் ஊரில் சிரிப்பாய்ச் சிரிக்கிறதே! இதற்கு இவ்வளவு ஜாக்கிரதை யென்ன? இரகசியமாய் வைப்பதென்ன? அக்கா! இந்தப் படத்தைப் பாரடி!” என்று கூறிப் பெருந்தேவியிடத்தில் காட்ட, அவள், “அடி உலக்கைக் கொழுந்தே! போ; இதுதான் மைசூர் மகாராஜாவின் படமோ? அதை நான் நன்றாகப் பார்த்திருக் கிறேனே! அது இவ்வளவு அழகாயுமில்லை. இரண்டுக்குமுள்ள வித்தியாசம் பொட்டையானுக்கு கூடத்தெரியும்” என்றாள். அதற்குள் சாமாவையர், ” எங்கே என்னிடத்தில் கொடுங்கள்; பார்க்கலாம்” என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்து, “படம் எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்த்தாயா பெருந்தேவி? முகவசீகரமும், களையும் எல்லோரையும் மயக்குகின்றனவே! என்ன அலங்காரம்! என்ன ஆடைகள்! இவன் மேலிருக்கும் உடுப்பு மாத்திரம் பதினாயிரம் ரூபாய் பெறும் போலிருக்கிறதே! நகையெல்லாம் வைரம் போலிருக்கிறதே” என்றார்.

கோமளம் :- கழுத்தில் காசுமாலை இருக்கிறதே! ஆண்பிள்ளை காசுமாலை போட்டுக்கொள்வதுண்டோ?

பெருந்தேவி:- ராஜாக்களும், தெய்வமும் எந்த ஆபரணத்தையும் அணியலாம்.
சாமா:- சேச்சே! காசுமாலையா அது? இல்லை இல்லை. தங்க மெடல்களை மாலையாகப் போட்டிருக்கிறார். இவர் யாரோ மகாராஜாவைப் போலிருக்கிறார். ஏதோ ஒரு விஷயத்தில் மகா நிபுணர் போலிருக்கிறது. மெடல்கள் பெற்றிருக்கிறார். அதிருக்கட்டும். கடிதத்தைப் படி – என்றார்.

உடனே கடிதங்களில் ஒன்றை யெடுத்த கோமளம் அடியிற் கண்டவாறு படித்தாள் :

“பெண்மணியும் என்னிரு கண்மணியும் என் மனதைக்கொள்ளை கொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப் பிள்ளை எழுதும் கடிதம் -“

பெருந்தேவி – (திகைத்து) என்னடா இது! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே! – என்றாள்.

சாமாவையர் அந்த அதிசயச் செய்தியைத் தாங்க மாட்டாமற் குழம்பிப்போன தனது தலையைத் தடவிக் கொடுத்து மௌனம் சாதித்தார்.

கோமளம் மேலும் படிக்கிறாள் :

“என் காதற் கண்ணாட்டி! என் அருமைப் பெருமாட்டி! என் ஆசைச் சீமாட்டி! பச்சை மட மயிலே! பவளவாய்ப் பைங்கிளியே! என் மனதிலுள்ள விஷயத்தை உனக்கு எப்படித் தெரிவிக்கப்போகிறேன். நாங்கள் தஞ்சாவூருக்கு வந்த இந்த எட்டுமாத காலம், நாமிருவரும் ஒரு நாள் தவறாமல் சந்தித்துக் கூடி அனுபவித்த பேரின்ப சுகம் எப்போதும் நீடித்திருக்கும் என்றல்லவா நினைத்தேன்; பாவியாகிய எனக்கு நீ ஏன் முதலில் காட்சி தந்து என் மனதையும் உயிரையும் கொள்ளை கொண்டாய்? இந்த ஊரிலேயே இன்னம் நாலைந்து மாதம் இருந்து நாடகம் ஆடிப் பிறகு சென்னைக்குப் போவோமென்று நான் எங்களுடைய கம்பெனித் தலைவரிடம் சொல்லி என்னால் கூடியவரையில் வற்புறுத்திப் பார்த்தேன். இந்த ஊரில் உண்டான நஷ்டத்தையெல்லாம் சென்னையில் உடனே சம்பாதித்து, கடன்களை அடைக்காவிட்டால் படுத்தாக்கள் முதலியவை விற்கப்பட்டுப் போமென்றும், ஆகையால் உடனே சென்னைக்குப் போக வேண்டுமென்றும், அவர் பிடிவாதமாகச் சொல்லிவிட்டார்.

அவருக்கு இந்த ஊரில் ஏராளமாக நஷ்டம் உண்டானது உண்மை. ஆதலால், அவரை இன்னமும் வற்புறுத்துவது தருமமல்ல. என்றாலும், எனக்கு உடம்பு சௌக்கிய மில்லையென்றும், நான் மாத்திரம் இரண்டு மூன்று மாதகாலத்திற்கு பின் வருகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தேன். என்னைப்போல ராஜா வேஷம் போடுவதில் அவ்வளவு சாமர்த்தியம் உள்ளவர் வேறு எவரும் இல்லை. ஆதலால், நான் வரா விட்டால், அவர் தமது கம்பெனியைக் கலைத்து விட்டு எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு இராத்திரியே காரைக்காலுக்கு ஓடிப் போவதே முடிவென்கிறார். அவருடைய நிலை மையும் பரிதாபமாக இருக்கிறது. நான் உன்னை விட்டுப் பிரிந்து போவதோ பரிதாபத்தினும் பரிதாபமாக இருக்கிறது! இந்த எட்டு மாத காலத்தில் எண்ணாயிரம் கோடி முத்தங் கொடுத்து அஞ்சுகம் போற் கொஞ்சிக் குலாவி என்னை எத்தனையோ முறை இன்பசாகரத்தில் ஆட்டிய என் காமக்களஞ்சியமான உன்னை விட்டுப் பிரிய எனக்கு மனம் வருமோ? முந்திய நாளிரவு நாமிருவரும் சந்தித்துப் பேசியபோது, நீ சொன்ன விஷயம் நினைவிற்கு வருகிறது. உன்னை சென்னையிலுள்ள உன் புருஷன் வீட்டிற்கு அனுப்ப உன் தந்தை முதலியோர் முயன்று கொண்டிருப்பதாகவும், உன்னை அழைத்துக் கொள்ள உன் கணவன் இணங்கவில்லையென்றும், அவன் எப்போதும் உன்னை அழைத்துக்கொள்ளாமலே இருந்து விட வேண்டு மென்று ஸ்ரீநிவாசப் பெருமாளைப் பிரார்த்தித்து வருவதாயும் சொன்னாயே; நீ ஒரு தந்திரம் செய், நீயே உன் கணவனுக்கு அவன் மனது இளகும்படி ஒரு கடிதமெழுதி அவன் உன்னை அழைத்துக் கொள்ளும் நிலையில் வைப்பதோடு, அவனுக்கு ஏதாயினும் பணம் கொடுக்கும்படி பாட்டியின் மூலமாக ஏற்பாடு செய்து நீ கூடிய சீக்கிரம் சென்னையில் உன் புருஷன் வீட்டிற்கு வந்துவிடு. நான் அதற்குள் சென்னையில் ஈசுவரனாலும் கண்டுபிடிக்கக்கூடாத இரகசியமான ஒரு இடத்தை வாடகைக்கு அமர்த்தி வைத்துவிட்டு உனக்கு ஆள் மூலமாகச் செய்தி அனுப்புகிறேன். நீ அப்போது என்னிடம் வந்து விடலாம். அதன் பிறகு நாம் இருவரும் இரதியும் மன்மதனும் போலக் கூடிச் சுகித்திருக்கலாம். என் கண்கொள்ளா எழில் வடிவே! என் உயிர் நிலையே! “அப்படியே ஆகட்டு”மென்னும் உன்னுடைய மறுமொழியைப் பெற்றாலன்றி நான் புறப்பட மாட்டேன். இது சாத்தியம். நீ தாமதமின்றி சென்னைக்கு வந்துவிட வேண்டும். நாளையதினம் இங்கே பட்டாபிஷேக மென்பதை நீ அறிவாய். நான் தனிமையில் வாடகைக்கு வைத்திருக்கும் வீட்டில் நான், நாடகம் முடிந்தவுடன் வந்து உன் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன். நீ வீட்டிற்குப் போகுமுன் அங்கு வந்து எனக்குக் கடைசி முறையாக இன்பங் கொடுத்துப் போவாயென்று நம்புகிறேன். அப் போது யாவற்றையும் நேரில் பேசிக் கொள்வோம்.

இப்படிக்கு உன் அடிமை,
மனமோகன மாயாண்டிப்பிள்ளை”

என்று ஒவ்வொர் எழுத்தும் கணீரென்று தெளிவாக வராக சாமியின் காதில் ஒலிக்கும்படி கோமளம் படித்து முடித்தாள். யாவரும் பேச்சு மூச்சற்ற சித்திரப் பதுமைகளைப் போலத் தோன்றினர். கோமளம் விரைவாக இன்னொரு கடிதத்தையும் எடுத்து அடியில் வருமாறு படித்தாள்.

“என் மாங்குயிலே! மடவன்னமே! நான் உன்னுடைய வீட்டிற்கு அனுப்பிய வேலைக் காரியின் மூலமாக உனது விஷயங்களை அறிந்தேன். உன்னுடைய சாமர்த்தியமும், இனிய குணமும் வேறு எவருக்கேனும் வருமோ? நீ புருஷனுக்குக் கடிதம் எழுதி அவனை ஏமாற்றியதும், இங்கு வந்தபின் அவனுடன் கொஞ்சிக் குலாவி அவன் சந்தேகமடையா வகையில் நடந்து அவன் மதியை மயக்கியதும் கேள்விப்பட்டேன். இன்றிரவு உன் கணவன் சேலத்திற்குப் போகிறான் என்பதைக் கேள்விப் பட்டேன். இன்றிரவு எனக்கு அம்பாள் தரிசனம் கிடைக்கப் போவதைக் குறித்து நான் அடையும் ஆநந்தத்தை எப்படி உனக்கு நான் தெரிவிப்பேன்? இன்றைக்கு ராத்திரியே நான் உன்னை அழைத்துக் கொள்கிறேன். இன்றோடு நமது கலி நீங்கப் போகிறது. ராத்திரி ஒன்பது மணிக்கு நானும் என் சமையற்காரனும் ஒரு வாடகைப் பெட்டி வண்டியில் வருவோம்.

நாடகத்தில் சேவகர்களுக்குப் போடும் வெள்ளி வில்லை, சட்டை முதலியவற்றை அவனுக்கு மாட்டிவிட்டு அவனை ஒரு சர்க்கார் சேவகனைப் போலச் செய்து உன்னுடைய வீட்டிற்குள் அனுப்புகிறேன். வாசலில் பெட்டி வண்டியில் உன் தகப்பனாரைப் போலத் தலைப்பாகை முதலியவற்றுடன் நானிருக்கிறேன். உன் தகப்பனார் கூப்பிடு கிறாரென்று என் வேலைக்காரன் உன்னை அழைப்பான். நீ உடனே வந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி சிறிது நேரம் பேசிவிட்டு உடனே வண்டியில் ஏறிப் போய் விடுவோம். சமயம் சரிப்பட்டால், உன் பெட்டியையும் எடுத்து வா , சரிப்படாமற் போனால் பெட்டி தேவையில்லை. வேண்டிய ஆடையாபரணங்களைப் புதியனவ னாய் வாங்கிக்கொள்வோம். இவ்வளவு சாமர்த் தியம் செய்த மகா புத்திசாலியான நீ, இதையும் நிறைவேற்று வாயானால், நாம் இனி என்றைக்கும் நீங்காத நித்தியாநந்த சுகம் அடையலாம். தயங்காதே கண்மணி!

கடைசியாகப் பட்டாபிஷேகத்தன்று நாம் சந்தித்த அந்த இரவின் நினைவே என்னை ஒவ்வொரு நொடியும் ஓயாமல் வருத்துகிறது; உன் கிள்ளை மொழிகள் என் செவிகளில் இன்னமும் ஒலித்து நிற்கின்றன. உனது நெற்றியிலிருந்த கஸ்தூரி திலகமும், துடையிலுள்ள அழகிய மச்சமும் என் மனதில் அப்படியே பதிந்து நின்று என் உயிரைக் குடிக்கின்றன. என்ன செய்வேன்? காமநோய் பற்றி என்னை எரிக்கிறது. உன்னை இன்றிரவு கண்டு உன்னிடத்தில் ஆலிங்கன சுகம் பெற்றாலன்றி நான் படுத்த படுக்கையாய் விழுந்து விடுவேன் என்பது நிச்சயம். உன்னுடைய நாத்திமார்களான மொட்டை முண்டைகள் இருவரும் ஓயாமல் உன்னோடு கூட இருப்பதால் என்னுடைய வேலைக்காரி உன்னுடன் அதிகமாய்ப் பேச முடியவில்லை என்று கேள்விப்பட்டேன். ஆகையால், யாவற்றையும் கடிதத்தில் எழுதியனுப்பி யிருக்கிறேன். கண்ணே ! தவறாதே,

உன் அடிமை
மனமோகன மாயாண்டிப்பிள்ளை

என்று இரண்டாவது கடிதமும் அழுத்தந் திருத்தமாய் படிக்கப் பட்டது. பெரிதும் கோபங்கொண்ட பெருந்தேவி அங்கும் இங்கும் தாண்டிக் குதித்து, “அடே நாடகக்கார நாயே! பாழாய்ப் போன தேவடியாள் மகனே! உனக்கு வந்த கேடென்னடா! மொட்டை முண்டைகளாமே! நாங்கள் உன் முழியைப் பிடுங்கினோமா! இந்தக் கொளுப்-பெடுத்தவளுக்கு வந்த கேடென்ன! அவனுடைய இறுமாப்பென்ன! இப்படியும் நடக்குமோ! அடாடா! வராகசாமி! உன் தலை விதி இப்படியா முடிந்தது! நல்லகாலத்திற்காகவா இந்த சம்பந்தம் நமக்கு வந்து வாய்த்தது! அந்த வக்கீலின் பெண்டாட்டி கூத்தாடியைப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள் , இந்தப் பெரிய மனிதன் பெண் எடுபட்டு ஓடி விட்டாள்” என்று சொல்லக் கேட்டிருந்தேன். அது நமக்கா வந்து சேரவேண்டும்? பாவி வயிற்றில் நல்ல பெண்களும் பிள்ளையும் வந்து பிறந்தோம். நாங்களாயினும் சிறுவயதில் விதவைகளானோம். அது என்னவோ தலைவிதி; அது அவமானமாகாது. இந்த அவமானம் ஏழேழு தலைமுறைக்கும் நீங்காதே; வராகசாமி! நீ வருத்தப்படாதே! எருமைச்சாணி ஹோமத்திற்கு ஆகாது. விட்டுத்தொலை கழுதையை” என்று மகா ஆத்திரத்தோடு கூறினாள்.

கோமளம்:- என்ன ஆச்சரியம்! இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா என்றிருந்தவள் எவ்வளவு பெருத்த காரியம் செய்திருக்கிறாள்! அடே யப்பா! என்ன சாகஸம்!! என்ன வேஷம்!!! ஒரு குறையுமறியாத மகா பதிவிரதையைப் போல வல்லவா நடந்து கொண்டாள்! வராகசாமி இவளோடு தனியாக இருந்தால் விஷமிட்டே இவனைக் கொன்றி ருப்பாள். இப்பேர்ப்பட்டவள் முகத்தில் முழித்தாலும் பெரும் பாவம் வந்து சேரும். கபடமே அறியாத குழந்தையைப் போலிருக்கும் நம்முடைய வராகசாமிக்கு இந்த கொடு நீலி, துரோகி, சாகஸி, தட்டுவாணியா வந்து சேரவேண்டும்! அடே சாமா! எப்போதும் அவளுடைய கட்சியை கீழே விடாமல் தாங்கிப் பேசினாயே நீ! இப்போது ஏனடா வாயைத் திறவாமல் ஆடு திருடின கள்ளனைப்போல் முழிக்கிறாய்? – என்றாள்.
சாமாவையர் நிரம்பவும் விசனக்குறிகளைக் காட்டினார். ஒன்றையும் சொல்ல மாட்டாதவரைப் போலக் கனைத்தும், எச்சிலை விழுங்கியும், வாயிலிருந்த புகையிலை சாமான்களை ஒருபுறம் ஒதுக்கி வழி செய்து கொண்டும் சிறிது தடுமாறி, “நான் வெளிப்பார்வையிலிருந்து சொன்னேனம்மா! பெண்டு களாகிய நீங்கள் இரகசியமாய்ச் செய்யுங்காரியங்களை நான் பார்த்துக்கொண்டா இருக்கிறேன். எனக்கு மாத்திரம் இது கனவாய்த் தோன்றுகிறதன்றி இன்னமும் இது உண்மை யென்று என் மனது நம்பவில்லை. டிப்டி கலெக்டருடைய தந்தி நிஜமா யிருக்க வேண்டு மென்று நாங்கள் சொன்னதை மறுத்து ஏதேதோ தாறுமாறாய் உளறினீர்களே! இப்போது பார்த் தீர்களா? எப்படி முடிந்தது?” என்றார்.

பெருந்தேவி :- அவள் இப்படி போகாமல் டிப்டி கலெக்டருடன் போயிருக்க கூடாதா வென்று இப்போது தோன்றுகிறது. அப்படியானால் அவளை நான் இன்னமும் நம்முடைய பொருளென்று சொல்லிக்கொள்ளவாகிலும் இடமுண்டு. வேண்டுமானால் கண்டித்தோ தண்டித்தோ அவளை அழைத்துக் கொள்ளலாம். இப்போது முதலுக்கே மோசம் வந்து விட்டதே!

சாமா:- (கனைத்துக்கொண்டு) அவளை இப்படியே விட்டு விடுகிறதென்று நினைத்தாயா? நாம் இதைப்பற்றி உடனே போலீசில் தெரிவிக்க வேண்டும். அவர்கள் உடனே அந்த நாடகக்காரனைப் பிடித்துச் சிறைப் படுத்துவார்கள். நாம் மேனகாவை உடனே அழைத்துக்கொண்டு வந்து விடலாம்.

பெருந்தேவி:- அப்படியானால் நீ உடனே போய் அந்தக் காரியத்தைப் பார். மேனகாவை அழைத்து வருவதை யாராவது பார்க்கப்போகிறார்கள்; வண்டியில் ஒரு திரை கட்டி மறைத்து அழைத்துக்கொண்டு வந்துவிடு – என்றாள்.

சாமாவையர் அருகிலிருந்த வராகசாமியை அன்போடு தடவிக்கொடுத்து, “அப்பா வராகசாமி! விசனப்படாதே! என்னவோ வேளைப்பிசகு இப்படி நடந்து விட்டது; விதி யாரை விட்டது அப்பா! ஒரு காரியம் நடக்கு முன், அது நமக்குத் தெரியாமல், நாம் அது நடவாமல் தடுத்துவிடலாம். இப்போது நடந்து போனதில் நான் என்ன செய்கிறது? அதைத் தடுக்க முடியாவிட்டாலும் அது மேலும் கெடாமல் நாம் அதை நல்ல வழிக்குத் திருப்ப வேண்டும். கவலையை விட்டுவிடு. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் எழுதி வைத்து மேல் நடவடிக்கை நடத்தச் செய்து மேனகாவை அழைத்து வந்து விடுகிறேன்” என்றார்.

இரண்டு கடிதங்களையும் படித்தது முதல் தீத்தணலில் புதையுண்டு கிடந்தவனைப் போலிருந்த வராகசாமிக்கு அம்மூவர் பேசியதும் கிணற்றிற்குள்ளிருந்து பேசுதலைப் போலத் தோன்றியது. என்றாலும் அம் மூவரும் பேசிய சொற்களின் கருத்தும் சாமாவையர் செய்த முடிவின் கருத்தும் அவன் மனதில் ஒருவாறு பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகவேண்டா மென்னும் உறுதி தோன்ற, வராகசாமி சாமாவையரின் கையைப் பிடித்து இழுத்து சைகை செய்தான்.

அதை உணர்ந்த பெருந்தேவி, “ஆமடா சாமா! போலீசில் சொல்ல வேண்டாம். அது அவமானமாய்ப் போகும். நீ ஒரு காரியம் செய்; நீயே நேரில் போய் அந்தப் பயல் எந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடித்து மெல்ல அவனுடைய இருப்பிடத்தை அறிந்துகொள். அவனிடம் போய் போலீஸ்காரனை அழைத்து வந்து சிறையிலடைப்பதாய் மிரட்டி அவளை மாத்திரம் இரகசியமாய் அழைத்து வந்துவிடு. ஒருவருக்கும் தெரியாமற் போகும். இம்மாதிரி ஓடிப்போன பெண்களை எத்தனையோ பேர் அழைத்துவந்து பந்தியில் ஏற்றுக் கொள்ள வில்லையா? வராகசாமியிடம் ஒன்றும் கேட்காதே. அவன் அப்படித்தான் தடுப்பான்; நீ போய் அவளை அழைத்துக்கொண்டு வந்துவிடு.

சாமாவையர்:- போனது வந்தது தெரியாமல் அவளைக்கொண்டு வருவது என் பொறுப்பு; அதைப்பற்றி நீ கவலைப்படாதே. நான் போகிறேன். நீங்கள் யாரிடத்திலும் விஷயத்தைச் சொல்லாதேயுங்கள். கோமளம்! உன்னுடைய ஓட்டை வாய் ஜாக்கிரதை – என்று சொல்லிக் கொண்டு எழுந்தார். வராகசாமி அப்போதும் சாமாவையரை விடாமல் ஒரே உறுதியாய்த் தடுத்தான்.

பெருந்தேவி :- அடே சாமா! வராகசாமிக்குக் கொஞ்சம் கோபம் தணியட்டும். அதற்கு மேல் இவனுடைய யோசனையின் மேல் செய்ய வேண்டுவதைச் செய்வோம். நீ உடனே இவனுடைய பெரிய வக்கீலிடம் போய், இவனுக்கு உடம்பு சரியாக இல்லை. ஆகையால், இன்றைக்கு இவன் கச்சேரிக்கு வர முடியவில்லை யென்று சொல்லிவிட்டு வா – என்றாள்.

உடனே சாமாவையர் எழுந்து வெளியிற் போய் நல்ல மூச்சாய் விட்டுக்கொண்டு தம்முடைய வீடு சேர்ந்தார். வராகசாமி எழுந்து கடிதங்களையும் படத்தையும் எடுத்துக்கொண்டு தன் சயன அறைக்குள் நுழைந்து கதவை மூடிவிட்டுத் தன் கட்டிலில் படுத்தான்.

அதிகாரம் 12 – பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்

அவன் மனதில் அப்போதைய நிலைமையை அற்ப வல்லமையுடைய மிக்க பயனுடைய
சொற்களால் கேட்டறிதலினும் அதை மனதால் பாவித்தலே மிக்க பயனுடைத்தாம். அன்று அவன் சேலத்திலிருந்து வந்து வீட்டில் நுழைந்த முதல் அதுவரையில் தான் அயர்ந்த துயிலிலிருப்பதையும் அதில் மகா பயங்கரமான கனவைக் கண்டு கொண்டிருப்பதாயும் நினைத்தானேயன்றி எதிர்பார்க்கத் தகாத அத்தனை புதிய விஷயங்களும் தனக்கு அவ்வளவு சொற்ப காலத்தில் உண்மையில் நிகழக் கூடியவை அன்று என மதித்தான். அவன் உலகத்தையும் அதன் சூதுகளையும் வஞ்சனைகளையும் தீமைகளையும், ஒரு சிறிதும் அறியாதவன். ஆதலின், அவன் மனதில் உண்டான புதிய உணர்ச்சிகளும் அனுபவங்களும் மிக்க உரமாய் எழுந்து அவன் தேகத்தையும் மனதையும் கட்டிற்குக் கட்டிற்கு அடங்காமல் செய்துவிட்டன.

கன்றைப் பிரிந்த தாயெனப் பெரிதும் கனிந்து இரங்கிய மனதோடு மேனகாவைக் காண ஆவல் கொண்டு ஓடி வந்தவனுக்கு அவளைக் காணாத ஏக்கம் முதலாவது இடியாக அவன் மனதைத் தாக்கியது ; அந்நிலைமையில் தத்தளித்திருந்தவனுக்கு அவள் சொல்லாமல் தந்தையோடு போய்விட்டாள் என்ற செய்தி கேட்டது இரண்டாவது இடியானது. பிறகு அவள் தனக்கு மருந்திட்டாள் என்றதும் மூன்றாவது விந்தையாய் இருந்தது. அவளுடைய பெட்டியைத் திறந்தபோது தன் படம் வைக்கப்பட்டிருந்த நிலைமையைக் கண்டது நான்காவது அதிர்ச்சியாக முடிந்தது. கடைசியாக வெளியான கூத்தாடியின் விஷயம் மற்ற யாவற்றிலும் கொடிய பேரிடியாகத் தோன்றி அவன் நல்லுணர்வைச் சிதற அடித்துவிட்டது. காட்டாற்று வெள்ளத்தில் அகப்பட்டவன் மலையுச்சியிலிருந்து பாதாளத்தில் வீழ்த்தப்படுவதும், மடுகளிலும் சுழல்களிலும் புறட்டப் படுவதும், கற்பாறைகளில் இளநீரைப்போல மோதப் படுவதும், முட்களிலும், புதற்களிலும் சொருகப்படுவதும், வெள்ளத்துடன் வரும் கறுவேல மரங்களின் கிளைகளுக்குள் அகப்பட்டு அதனுடன் மாறிமாறி உட்புறம் ஆழ்த்தப்படுவதும், வெளியில் எறியப்படுவதுமாய்த் தத்தளித்துச் சித்தரவதையாகச் சிறுகச் சிறுக உயிரையும், உணர்வையும் இழப்பதைப் போல வராகசாமிக்கு உண்டான அத்தனை மனோபாவ அதிர்ச்சிகளினால் அவன் நிலைமை பரிதாபத்தினும் பரிதாபகரமாக இருந்தது.

அவள் நாடகக்காரனோடு நட்புக்கொண்டு ஓடிவிட்டாள் என்பதை நிச்சயமென்று அவன் மனது ஏற்றுக்கொண்டு விட்டதாயினும், உண்மையும், அன்பும், நன்னடத்தையுமே ஒன்றாய்த் திரண்டு உருப்பெற்று வந்தது போல இருந்த அவள் அத்தகைய பெருத்த இழிவிற்கு இணங்கினாள் என்ற முரணான செய்தியே அவன் மனதில் இரண்டு மதங்கொண்ட யானைகள் ஒன்றோடொன்று மோதிப் போர் செய்ததை யொத்தது. அன்னிய மனிதன் மீது தன் ஆசை முழுதையும், காதல் முழுதையும் வைத்துள்ள ஒரு பெண் தன் கணவனுடன் கொஞ்சிக் குலாவிச் சிரித்து விளையாடிக் குழந்தையைப் போலக் கபடமேயின்றி இருத்தல் எப்படிக் கூடும்? உலகத்திலுள்ள எல்லா விந்தைகளிலும் இது மேலான அற்புதமாக அன்றோ இருந்தது! காதலும் கோபமும் கரைபுரண்டு எழுந்து, “நானே பெரியவன் நானே பெரியவன்” என்று ஒவ்வொன்றும் தன் தன் புகழைப் பாடி ஆதாரங்களைக் காட்டி தன் தன் கட்சியே உண்மையானது என்று வாதாடியது; வராகசாமியின் மனது ஒரு நியாய ஸ்தலத்தை யொத்திருந்தது. அதில் மேனகாவின் வக்கீலாகிய அன்பு அவளுடைய உண்மைக் காதலையும், மாசற்ற குணத்தையும் உறுதிப் படுத்தும் பொருட்டு மிக்க பாடுபட்டு அப்போதைக்கப்போது அவள் செய்த அரிய செய்கைகளையும், சொன்ன இனிய சொற்களையும் ஒவ்வொன்றாய் விரித்துப் பேசி, அவர்களுக்குள் நடந்த எண்ணிக்கையற்ற அந்தப்புர ரகசியங்களை யெல்லாம் அவன் மனதிற்குக் கொணர்ந்து, “அடே! வராகசாமி! இவள் தங்கமான பெண்ணடா! இவளைப் போன்ற உத்தமி உனக்குக் கிடைக்க மாட்டாளடா? உன்னையே உயிராய் மதித்தவளடா! இவள் உனக்கு இரண்டகம் செய்வாள் என்று எப்படியடா நினைப்பது?” என்று உருக்கமாகப் பேசி அவன் மனதைக் கலக்கி, அவனது கோபத்தைத் தணித்துவிட்டது. எதிர்கட்சி வக்கீலான கோபம் இரக்கமற்ற பயங்கரமான முகத்தோடு கனைத்தெழுந்து, “அடே வராகசாமி! நீ பெருத்த முட்டாளடா! அன்பெனும் இந்தப் பைத்தியக்கார வக்கீல் உளறியதைக் கேட்டு நீ ஏன் இப்படித் தடுமாறுகிறாய்? குற்றவாளி இதற்கு முன் யோக்கியமானவள் என்பதைப்பற்றி இவர் சொன்னாரேயன்றி இப்பொழுது எழுத்து மூலமாக உறுதிப்பட்டுள்ள குற்றத்தை அவள் செய்யவில்லை யென்பதற்கு என்ன ஆதாரம் கட்டினார்? இப்போது அகப்பட்டுள்ள கடிதங்களால் அவளுடைய முந்திய நடத்தைகள் பொய்யென்பது நிச்சயமாகிறது அன்றி முந்திய நடத்தைகளால் இக்கடிதங்கள் பொய்யாகப்படவில்லை. மனிதருடைய மனதும் குணமும் என்றைக்கும் மாறாத பொருட்களா? இன்றைக்கு நல்லவராய் இருப்பவர் நாளைக்குக் கெட்டவராய்ப் போகின்றனர். ஒருநாள் குற்றம் செய்கிறவன், பிறந்த முதலே குற்றஞ் செய்து கொண்டிருப்பவனாக அவசியம் இருக்க வேண்டும் என்பதில்லை அல்லவா? மோகம் பொல்லாதது. நாடகத்திலோ காணப்படுவதெல்லாம் வேஷமும் வெளி மயக்கமுமாம். படித்த மேதாவிகளும், உறுதியான மனதைக் கொண்டவர்களுமான எத்தனையோ புருஷர் நாடகம் பார்ப்பதனால் மதிமயக்கங்கொண்டு அதில் நடிக்கும் பரத்தையர் வலையிற்பட வில்லையா? சில வருஷங்களுக்கு முன் கும்பகோணத்திலிருந்த சப்ஜட்ஜி ஒருவர், நாடகத்தில் பெண்வேஷம் தரித்து நடித்து வந்த ஒரு ஆண்பிள்ளையின் மீது மோகங் கொண்டு ரூபாய் ஆயிரம் கொடுத்து அவனைப் பெண்வேஷத்தோடு தமது வீட்டிற்கு வரவழைத்து ஒருதரம் கட்டி ஆலிங்கனம் செய்தனுப்பினாராம்; அவருடைய பாக்கியம் எவருக்கேனும் கிட்டுமா?

கூத்தாடிகள் காமத்தை உண்டாக்கும் இனிய பாடல்களைப் பாடி ஸ்திரீ புருஷர் இரகசியமாக நடத்தும் காரியங்களை எல்லாம் நாடக மேடையின் மீதே நடித்துக் காட்டினால், எவர் மனதுதான் திரும்பாது? ஆணும் பெண்ணுமல்லாத அலி நபுஞ்சகன் முதலியோரும் அந்தக் கவர்ச்சியை விலக்கக்கூடுமோ என்பதும் சந்தேகம். அப்படியிருக்க, மேனகா கூத்தாடியின் மீது ஆசை கொண்டது ஒரு விந்தையா! அவன் மீது ஆசை கொள்ளாவிடில் அவள் உன்மீது ஆசை கொள்ள ஒரு சிறிதும் நியாயமில்லை. என்னிடம் இருப்பதையும் என்னைக் காதலிப்பதையுமே அவள் பேராநந்த சுகமாய் நினைத்தவளாயிற்றே, என்று நீ சொல்லுகிறாய். அடித்தும், திட்டியும், கடிந்தும், சுட்டும், வருத்தும் மனிதனாகிய உன்னிடத்தில் சிற்றின்பம் அனுபவிப்பதே அவளுக்கு அவ்வளவு இன்பமாய்த் தோன்றினால், “கண்ணே” என்றும் “முத்தே” என்றும் காலடியில் மண்டியிட்டுக் கெஞ்சியும் கொஞ்சியும், பாடியும், பகட்டியும், துதித்தும் உருகியும், ஓய்ந்தும் தனது தயவை நாடக்கூடிய ஒரு மனிதன் – இராஜாவைப் போலப் பளபளப்பான ஆடைகள் அணிந்து அழகே வடிவாய்த் தோன்றும் – ஒரு மனிதன் அவள் மனதிற்கு உன்னைக் காட்டிலும் எத்தனை கோடி மடங்கு உயர்வானவனாய்த் தோன்றுவான்; உன்னிடம் பெறும் இன்பத்தைவிட அவனிடம் பெறும் இன்பம் சுவர்க்கபோகமாக அல்லவோ அவள் மனதிற்குத் தோன்றும். ஆகையால், மேனகாவின் வக்கீலி னுடைய வாதம் உபயோகமற்றது. செல்லத்தக்கதும் அல்ல. கடைசியாக எழுத்து மூலமாய் வெளியானதே உண்மை ; அதை எவரும் அசைக்கமுடியாது. ஆகையால் தீர்ப்பு என் பக்கம் சொல்லப்படவேண்டும்” என்று கூறியது. அவ்வாறே இந்த வக்கீலின் பக்கம் தீர்மானம் செய்யப்பட்டது; அது மேனகாவுக்குப் பிரதிகூலமாயிற்று. என்ன செய்வாள்! அதற்கு மேல் அப்பீல் செய்ய வழியில்லை; தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு வராகசாமியின் மனதிலிருந்த மேனகாவின் பொருளான காதல் முற்றிலும் ஜப்தி (பறிமுதல்) செய்யப்பட்டுப் போனது. அத்தகைய நிலைமையில் வராகசாமியின் மனதில் அடக்கவொண்ணாப் பெருங் கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீட்டி, கடலை வாரி ஆகாயத்தில் எறிந்து, உலக மண்டலங்களை யெல்லாம் அம்மானைக் காய்களாக வீசி, அண்டத்தையும், பகிரண்டத்தையும், நிலத்தையும், நீரையும், மலையையும், மரங்களையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கதம்பம் செய்யத்தக்க சண்டமாருதம் ஒரு சிறிய வீசம் படி உழக்கிற்குள் தனது முழுவல்லமையையும் காட்டுதலைப் போல அவன் மனதில் பெருங் கோபம் மூண்டெழுந்து விவரித்தற்கு ஏலாத் துன்பம் செய்தது. தன் மனதை விட்டு ஒரு நொடியேனும் அகலாமல் பிடிவாதமாய் எதிரில் வந்து நின்ற மேனகாவின் கபடமற்ற கலியாண குணம் ஒளிர்ந்த இனிய சுந்தரவதனத்தைக் காணக்காண அவனுடைய ஆத்திரம் பெருகிக் கட்டிலடங்கா நிலையை அடைந்தது. அந்த வடிவத்தை நோக்கில் பல்லை நறநற வென்று கடித்து உருட்டி விழித்து ஒரே அடியில் அவளுடைய தேகமாகிய வஞ்சகப் பாண்டத்தை உடைத்துப் பொடியாக்கிக் காற்றில் ஊதிவிட நினைத்தான். தாயின் மடிமீதிருக்கும் குழந்தை, அவள் பார்க்கும் முகக்கண்ணாடியை நோக்கி அதற்குள் தன் தாயிருத்தலையறிந்து கண்ணாடியின் பின் புறத்தைத் தடவிப் பார்த்தலைப் போல அவனுடைய அகக்கண்ணில் தோன்றிய வடிவமே அவனுக்கு உண்மை மேனகாவைத் தோன்றியது.

“அடி வஞ்சகி! பரம சண்டாளி! துரோகி” என்ன காரியம் செய்தாய்; உன் புத்தி இப்படியா போனது! சே! என்முன் வராதே; போ அப்பால் பீடையே! முகத்தைப் பார். சிரிப்பென்ன? கொஞ்சலென்ன? யாரிடத்தில் இந்தப் பகட்டெல்லாம்? உன்னுடைய மோசத்தைக் கண்டுகொள்ளக் கூடாத என்னுடைய முட்டாள் தனத்தைத் கண்டு சிரிக்கிறாயோ? பல்லைக் காட்டாதே. பல்லைக் காட்டிக் காட்டி என் உயிரைக் கொள்ளை கொண்டது போதும். கூத்தாடியைக் கட்டிக் கொண்டு அழ நினைத்தால், தஞ்சாவூரிலேயே அவனுடன் தொலைந்து போகாமல் இங்கே வந்து உன் வஞ்சக வலையை வீசி என் மதியை மயக்கி என்னைப் பித்தனாக்கிவிட்டுத்தான் போக வேண்டுமோ? அது என்னுடைய மூடத்தனத்திற்காக உன்னால் கொடுக்கப்பட்ட சன்மானமோ? ராஜா வேஷக்காரனைப் பிடித்தோமே, அவனுக்கு சரியாக ஸ்திரீ வேஷம் போட நமக்குத் திறமை இருக்கிறதா’ என்பதை என்னிடம் பரீட்சை பார்த்தாயோ? அடி கொலை பாதகி! என்ன ஜாலம்! என்ன சாகஸம்! உயிரைக் கொடு என்றால் கொடுத்துவிடுவேன் என்றல்லவோ என்னிடம் பாசாங்கு செய்தாய்! அப்பப்பா! நீ பெண்ணா அல்லது பேயா? உன் தேகம் தசையாலானதா? அல்லது விஷத்தாலானதா? இந்தத் தடவை தஞ்சாவூரிலிருந்து நீ வந்த பின்பே புது மாதிரியாகவல்லவோ நடந்துகொண்டாய். இதற்கு முன் நீ இப்படியா வந்தாய்? இப்படியா நடித்தாய்? இவ்வளவு சாகஸமா செய்தாய்? இதில் ஏதோ சூதிருக்கிறது என்பதை அறியாமல் ஏமாறிப் போனேனே; நீ செய்த இவ்வளவும் என் மூடத்தனத்திற்கு வேண்டியதே; தஞ்சாவூரிலிருந்து வந்த தினத்தன்று இரவில் ஆகா நீ செய்து கொண்டிருந்த அலங்காரமும், நீ காட்டிய தளுக்கும் எப்படி இருந்தன தெரியுமா?

“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடி யளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

என்றபடி யல்லவா இருந்தது. எல்லாம் என்னை மயக்கும் பொருட்டு ஆடிய நாடகம் என்பது இப்போதே நன்றாய்த் தெரிகிறது. கழுதைச் சாதியைச் சேர்ந்த உன்னை நான் பதுமினி ஜாதிப் பெண்ணென்று நினைத்தேனல்லவா ; அதன் பொருட்டு என் புத்தியில் ஆயிரம் தரம் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்; காலையா பிடித்து விடுகிறாய்? அப்படியே மார்பு வரையில் தடவிப் பார்க்கிறாயோ? கழுத்தைப் பிடிப்பதற்கு இன்னம் கொஞ்சந்தான் இருக்கிற தென்று காட்டினாயோ? – உனக்கு என் உடம்பு இளைத்துப் போய் விட்டதென்று எவ்வளவு வருத்தம்! முன்னிருந்த உடம்பில் அரைப்பாகங்கூட இல்லையாம்! அடடா! எவ்வளவு விசனம்!! எதற்காக விசனம்? கொழுத்த கடாவைப் போலிருக்கும் கூத்தாடிக்குக் கால் பிடித்து விடாமல் இவனுக்குப் பிடிக்கிறோமே என்ற விசனமல்லவா அது! தெரிந்தது. இப்போது தெரிந்தது. நீ உடம்பின் முழுதும் வஞ்சகத்தைக் கொண்ட பரம்பரையென் பதை அறியாமல் நான் சேலத்திற்குப் புறப்படு முன் உன்னை ஆலிங்கனம் செய்தேனே; அதை இப்போது நினைத்தாலும் என் மனதில் அருவருப்பு உண்டாகிறது. உன்னைத் தீண்டிய என் தேகத்தை அப்படியே நெருப்பில் போட்டுக் கரியாக்கினாலும் என் அசுத்தம் விலகாது. அணைத்துக்கொண்ட என்னை விடமாட்டேன் என்று சொல்லுகிறாய்! இன்னம் அரை நாழிகையில் உன்னை விட்டு என் ராஜதுரையின் ஆலிங்கனத்திற்குப் போய் விடுவேனே, அதையறியாமல் என்னை அணைத்துக் கொள்கிறாயே என்று சுட்டிக் காட்டினாயோ? அல்லது மனதில் அவனுடைய உருவத்தை வைத்துக்கொண்டு அவனை நினைத்துக் கட்டிக் கொண்டாயோ? என் படத்தை வைத்துப் பூஜைசெய்பவள் போல வெளிக்குக் காட்டி உண்மையில் கூத்தாடியின் படத்தை வைத்துப் பூஜை செய்தவளல்லவா நீ! நீ எதைத்தான் செய்யமாட்டாய்; மையைப் பூசிய திருட்டுக் கண்களால் என்னை மயக்குகிறாயோ? எதிரில் நில்லாதே! நின்றால் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன். இனி நான் ஒரு நாளும் இப்படி ஏமாறுவேன் என்று நினைக்காதே! இரும்பு முள்ளால் குரவளையில் குத்தி இழுக்க முயலும் தூண்டிற்காரன் மாதுரியமான மாமிசத்தைக் காட்டி மீனை வஞ்சிப்பதைப் போல ஒவ்வொன்றுக்கும் குழந்தையைப் போலக் கொஞ்சிக் கொஞ்சியல்லவோ ஏமாற்றினாய்! அம்மம்மா ! யாரை நம்பினாலும் நம்பலாம், புருஷனிடம் சாதாரணமாய் நடவாமல், அநாவசியமான பாசாங்கு செய்து கொஞ்சிப் பேசி ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றிக்கொள்ளும் கொடு நீலியரை மாத்திரம் நம்பவே கூடாதப்பா! நீ எதையும் செய்யத் துணிவாய். நான் நீண்ட காலம் ஊரை விட்டு எங்கும் போகாமலிருந்தால் இந்தக் கூத்தாடியின் வெறியால் என்னைக் கொன்றுவிடவும் நீ துணிவாய். சே! என்ன உலகம்! என்ன வாழ்க்கை ! எல்லாம் மோசம்! எல்லாம் நாசம்! எங்கும் விபசாரம்! ஈசுவரன் முதற்கொண்டு புழுப் பூச்சிகளிலும் விபச்சாரம்! ஆயிரம் ஸ்திரீகளில் ஒருத்தி சுத்தமானவள் என்பதும் சந்தேகம். எவரும் கொஞ்சமும் சந்தேகப்படாத விதத்தில் எவ்வளவு அபாரமான காரியங்களைச் செய்திருக்கிறாய்! உன்னுடைய சாமர்த்தியம் அல்லவா சாமர்த்தியம்! தாசி வேசிகளெல்லாம் உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும் போலிருக்கிறதே! கூத்தாடிகள் எல்லாம் உன் சாகஸத்தைக் கற்க உன் காலடியில் தவம் புரிய வேண்டுமே! பெட்டியில் சாமான்களை நாடகக் காட்சி போல அல்லவோ கொலு வைத்திருந்தாய்! உன் பெட்டியே அதைக் கண்டு சகியாமல் உன் இரண்டகத்தை வெளிப்படுத்தி விட்டதே! அது எனக்கும் நல்லதாகவே முடிந்தது. இல்லையானால் உன்னுடைய திருட்டை அறியாதவனாய் நான் பரத்தையாகிய உன்னை இன்னமும் தேடும்படியான வீண் இழிவு உண்டாயிருக்கும் அல்லவா! இப்போது அது இல்லாமற் போனது. டிப்டி கலெக்டராம்! கையாலாகாத முண்டம். புருஷன் வீட்டிலிருந்து விலக்கப்பட்டு வந்த பெண்ணை எந்த முட்டாளாயினும் வீட்டைவிட்டு வெளியில் அனுப்புவானா? தன் வீட்டில் நடக்கும் இந்தப் பெருந்திருட்டை அடக்க அறியாத மூடன், ஊராரின் உரிமைகளைக் காப்பாற்றப் போகிறானோ! தலைமுறை தலைமுறையா யில்லாமல், இந்தத் துணிவும் நினைவும் உண்டாகுமோ? தாயின் குணமே பெண்ணிடம் இருக்கும் என்று சொல்வது பொய்யாகாது. இவள் ஒரு கூத்தாடியைப் பிடித்துக் கொண்டால், இவளுடைய தாய் ஒரு குரங்காட்டியை வைத்துக்கொண்டிருப்பாள். ஈசுவரா! கர்மம்! கர்மம்! நமக்கு வாய்த்த சம்பந்தம் இப்படியா இருக்க வேண்டும்? இந்தக் கூட்டிக் கொடுக்கும் பயலுக்கு கௌரதை என்ன வேண்டியிருக்கிறது? அதிசாரமென்ன வேண்டியிருக் கிறது? எல்லாச் செல்வத்திலும் மேலான மனைவியின் கற்புச் செல்வம் தனக்கில்லாத மனிதன் மனிதனா? அவன் உயிரை வைத்துக்கொண்டு நடைபிணமாய் உலகத்தில் ஏன் திரிய வேண்டும்! இந்தக் கும்பலே பட்டிக் கும்பல் போலிருக்கிறது! குலம் கோத்திரம் முதலியவற்றை விசாரிக்காமல் பணத்தையும் உத்தியோகத்தையும் மாத்திரம் கண்டு ஆத்திரப்பட்டுச் செய்த கலியாணம் அல்லவா! நமக்கு வேண்டும்; சே! இனி எனக்கு ஆயுட்காலம் முழுவதும் பெண்டாட்டியே வேண்டாம். போதும் நான் பெண்டாட்டியை அடைந்து திண்டாடித் தெருவில் நின்றது. பெண் என்பதே பேய் வடிவம்! நாணம் என்னும் ஒரு வஞ்சகப் போர்வையணிந்து கொண்டு ஆண்பிள்ளைகளை யெல்லாம் ஏமாற்றும் விபசார வடிவம். இதனாலே தான் பெட்டியை அவ்வளவு ஜாக்கிரதையாகப் பூட்டியும் திறவுகோலைக் கழுத்தைவிட்டு நீங்காமலும் வைத்திருந்தாயோ! ஆகா! நீ இங்கே இருந்த காலத்தில் இந்தக் கடிதங்கள் அகப்பட்டிருந்தால், உன்னை உயிரோடு பூமியில் புதைத்திருப்பேன். தப்பித்துக்கொண்டல்லவா போய் விட்டாய்!” என்று அன்று பகல் நெடுநேரம் வரையில் ஆத்திரத்தோடு பிதற்றிக் கொண்டும் வெற்று வெளியை நோக்கி நறநற வென்று பல்லைக் கடித்துக் கொண்டும் புரண்டு புரண்டு வெயிலிற் புழுத் துடிப்பதைப்போல வருந்தினான். அவன் எவ்வளவு அதட்டியும், வைதும், இகழ்ந்தும், வெறுத்தும் பேசினான். ஆயினும் மேனகாவின் வடிவம் இனிமையான புன்னகை தவழ்ந்த முகத்தோடு அவனது அகக் கண்ணை விட்டு அகலாமல் நின்று கொண்டிருந்தது. அந்த வடிவத்தை விலக்க அவன் செய்த முயற்சியால், அது முன்னிலும் அதிகமாக மனதில் ஊன்றி நின்றது. அவள் வஞ்சகி, விபசாரி யென்பதும், கூத்தாடி யோடு ஓடி விட்டாள் என்பதும் அவனுடைய பகுத்தறிவால் உண்மையென்று ஒப்புக்கொள்ளப்பட்டுப் போயிருந்தும், ‘அவள் அப்படியும் செய்வாளோ” என்னும் ஒரு வியப்பு மாத்திரம் இன்னமும் அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது. குழலினும் யாழினும் மிக்க இனிமையாய் மழலை மிழற்றிக் கொஞ்சி விளையாடித் தளர்நடை நடந்து வீட்டிற்கோர் இளஞ்சூரியனைப் போல விளங்கி, மகிழ்ச்சியாகிய கிரணங்களைப் பரப்பித் தானும் இன்பமயமாய் இருந்து தன்னைக் காண்போர்க்கும் இன்பம் பயத்து மனோகர வடிவமாய் விளங்கி மேன்மேலும் வளர்ந்து வாழக்கூடியதாய்த் தோன்றிய நோயற்ற மூன்று வயதுக் குழந்தை, திடீரென்று ஜன்னி கொண்டு ஒரே இழுப்பில் உயிரை விடுமாயின், அதன் பெற்றோர் அது இறந்ததை நம்புவாரோ! அது பேச்சு மூச்சற்றுக் கண்ணிற்கு எதிரில் கிடக்கினும் அது துயில்வதாய் நினைப்பார் அன்றோ ! அது பேசும், அது எழுந்திருக்கும், அது உடம்பை அசைக்கும் என்று பேதமையால் எண்ணிக் கடைசி வரையில், அது இறந்தது என்பதை நம்பார் அன்றோ! அவ்வாறே வராகசாமியின் நிலைமையும் இருந்தது. யாவும் கனவாய்ப் போகக் கூடாதா , மேனகா சமையலறை யிலிருந்து வந்து விடக்கூடாதா என்று நினைத்தான்; சுவரில் மாட்டப் பட்டிருந்த படம் காற்றில் அசைந்தால் மேனகா தான் வந்து விட்டாளோ என்ற எண்ணம் அவன் மனதில் உதிக்கும். இவ்வாறு மேனகாவின் உயிரற்ற வடிவத்துடன் அவன் போராடி மாறி மாறி அவள் மீது ஆத்திரமும், பெரும் கோபமும், இரக்கமும் கொண்டவனாய்ச்சித்தக் கலக்கமடைந்து பிதற்றிக் கிடந்தான்.

பெருந்தேவி, கோமளம் ஆகிய இருவரும் துக்கமும் வெட்கமும் அடைந்தவர் போல நடித்து அன்று பகற் பொழுதிற்குள் மூன்றே முறை போஜனம் செய்து விட்டு, முதல் நாள் தயாரித்த சீடையில் தலைக்கு ஒரு மூட்டை மடியிற் கட்டிக்கொண்டு, துக்கத்தின் சுமையைத் தாங்கமாட்டாமலோ , தமது வயிற்றின் சுமையைத் தாங்க மாட்டாமலோ, அன்றி சீடை மூட்டையின் சுமையைத் தாங்க மாட்டாமலோ சோர் வடைந்தவராய் சாவகாசமாய் அந்த சீடைகளுக்கு வழி சொல்லவேண்டும் என்னும் கருத்தோடு இரண்டு மூலைகளில் உட்கார்ந்து விட்டனர். ஆகா! அவர்கள் அடைந்த விசனத்தை என்ன வென்று சொல்வது! அவர்கள் வாயில் போட்டுக் கொண்ட சீடைகளெல்லாம் கரைந்து உருகித் தாமாய், உள்ளே போய்க்கொண்டிருந்தன வென்றால், அவர்களுடைய துயரத்திற்கு வேறு குறியும் தேவையா? மேனகாவின் பொருட்டு சீடைகளும் மண்டையை உடைத்துக்கொண்டு விழுந்து நெகிழ்தலை உணர்ந்த அவர்களுடைய கண்கள் ஆநந்தக் கண்ணீர் விடுத்தன. மேனகா மோசம் செய்து விட்டு ஓடிப்போனதைக் குறித்து வராகசாமியின் செவிகளில் படும் வண்ணம் அவர்கள் அடிக்கடி வாயில் வந்த விதம் பிதற்றினர். பிரம்மாண்டமான ஒரு தேர் கீழே கவிழ்ந்து போகக் கூடியதாய் விரைந்து ஓடுதலைப் போல அவர்களுடைய கோபமும் ஆத்திரமும் பொங்கி எழுந்து நெடுந்தூரம் செல்லும் ; உடனே சீடைகளாகிய முட்டுக்கட்டைகளைக் கொடுத்து அந்தத் தேரை நிறுத்துவார்கள். விசனத்தைக் குறித்த சொற்களை வாரிவாரி வீசுவார்கள். சீடைகள் இடை இடையில் முற்றுப் புள்ளிகளாகவும், கேள்விக் குறிகளாகவும் , நிறுத்தல் குறிகளாகவும் இலக்கணப் பிழையின்றித் தோன்றி அழகுப் படுத்தும்.

அவமானத்தினாலும், வெட்கத்தினாலும், மடியிலிருந்த சீடை மூட்டைகளின் தேகம் அடிக்கடி குன்றிக் குறுகிப்போனது. என்ன செய்வார்கள்! பொறுமைப் பொறுத்தவர்கள்; அலுப்பைப் பாராமல் ஒவ்வொரு தடவையும் சீடை பாத்திரம் இருந்த இடத்திற்குப் போய் மடியை நிரப்பிக் கொண்டு வருவார்கள். சாப்பாட்டுக்கு வரும்படி நெடுநேரமாகப் பெருந்தேவி வராகசாமியை அழைத்தும், அவன் அதைக் கவனியாமல் இருந்து விட்டான்.

பெருந்தேவியம்மாள், “அந்தக் கொழுப் பெடுத்த லண்டி ஒரு தடிப்பயலைத் தேடிக்கொண்டு ஓடினால் அதற்காக நீ ஏனடா பட்டினியாய்க் கிடந்து சாகிறாய்? இப்பேர்ப்பட்ட பெண்டாட்டி போனதைப் பற்றி விசனப்படுவது கூடப் பாவமடா? எழுந்து வா!” என்று கடுமையாக அழுத்தி நூறாம் முறை கூறினாள்.

வராகசாமி அதைக் கேட்கப் பொறாமல், ” எனக்குப் பசியில்லை, நீங்கள் சாப்பிடுங்கள். பசி உண்டாகும் போது வருகிறேன்” என்று அருவருப்பாக மறுமொழி கூறினான்.

பெருந்தேவியா அவனை உயிரோடு விடுகிறவள்? “காலை முதல் காப்பி கூட சாப்பிட வில்லை; மணி இரண்டாகிறது. இதென்ன பெருத்த வதையாயிருக்கிறதே! பசிக்க வில்லையாமே! இவ்வளவு நாழிகை பசியாமலிருக்க நீ எதைச் சாப்பிட்டாய்? சேலத்திலிருந்து பசியா வரம் வாங்கிக்கொண்டு வந்தாயா? கிடக்கிறது எழுந்துவா; கொஞ்சமாக சாப்பிட்டு விட்டுப் போய் படுத்துக் கொள்கிறது தானே? உன்னை யார் விசனப்பட வேண்டாம் என்று சொல்கிறார்கள்?” என்று அன்போடு அதட்டி மொழிந்தாள்.

வராக :- அக்காள்! என்னை வீணாக ஏன் உபத்திர விக்கிறாய்? எனக்கு இப்போது சாப்பாட்டில் மனம் நாட வில்லை. இராத்திரி வேண்டுமானால் பார்த்துக்கொள்வோம்.

கோமளம் :- இராத்திரி வரையில் உபவாசமிருந்தால் போனவள் வந்துவிடுவாளா? அல்லது இந்த ஒரு வேளைப் பட்டினியோடு இந்த அவமானம் நீங்கிப் போகுமா?

பெருந்தேவி :- இனிமேல் அவள் ஏன் வருகிறாள்? அவள் வந்தாலும் நாம் அவளைச் சேர்த்துக்கொண்டால் நம்முடைய வீட்டில் நாய் கூடத் தண்ணீர் குடிக்காதே (கையை மோவா யோடு சேர்த்து வியப்புக்குறி காட்டி) அடி என்ன சாகஸமடி! என்ன சாமர்த்தியமடி! அந்தத் தடியனை டிப்டி கலெக்டரைப் போல வரச்சொல்லி இந்தப் பட்டி முண்டை மகா தந்திரமாய்ப் போய்ச் சேர்ந்து விட்டாளே! எனக்கு இப்போது நன்றாய் ஞாபகம் உண்டாகிறது; இந்த ஒரு வாரமாக நான் கவனித்தேன். கொள்ளு கொள்ளென்று இருமிக்கொண்டு ஒரு கிழட்டு முண்டை நம்முடைய வாசல் திண்ணையில் அடிக்கடி உட்கார்ந்திருந்ததை நான் கண்டிருக்கிறேன். இந்த இருமல் இவளை வெளியில் வரும்படி அழைத்த ஜாடை போலிருக்கிறது.

கோமளம்:- ஆமாம்! எனக்குக் கூட இப்போது ஞாபகம் உண்டாகிறது. வராகசாமி சேலத்திற்குப் போன அன்றைக்கு மத்தியானம் எச்சிலை எடுத்துப் போய் வாசலில் எறியப்போன மேனகா அவளுடன் என்னவோ மெதுவாய்ப் பேசிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டவுடன் உள்ளே வந்துவிட்டாள். நான் போய், “நீ யாரடி?” என்று கேட்டேன். “நான் கூலி வேலை செய்கிறவள். களைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். தாகத்துக்கு ஜலங் கேட்டேன்; இப்போது உள்ளே போன அம்மாள் ஜலங் கொடுத்தால் சேஷமாய்ப் போய் விடும்” என்று சொல்லி விட்டார்கள். ”உயிர் போகிறது; நீங்கள்தான் கொஞ்சம் ஜலம் கையில் வாருங்கள்” என்றாள். “நாங்கள் கொடுக்கக் கூடாது” என்று சொல்லி வந்து விட்டேன். அவள் தான் தூதுவளாயிருக்க வேண்டும்; பகல் வேளையிலேதான் அவள் வருகிற வழக்கம். அவள் நாளைக்கு வந்தால் பிடித்துப் போலீசில் அடைத்து உள்ளதைச் சொல்லும்படி நசுக்கினால் உடனே எல்லாம் வெளியாகிறது.

பெரு:- அடி பைத்தியக்காரி ! போ; அவளுக்கு இனி இங்கே என்ன வேலை இருக்கிறது? அவள் வந்த காரியம் முடிந்து போய் விட்டது. (வருத்தமாக) அடே வராகசாமி! உடம்பு கெட்டுப் போகுமடா; இதில் உனக்கு மட்டுந்தானா விசனம்? எங்களுக்கு விசனமில்லையா? எவ்வளவோ அருமையான மனிதர் ஐந்து நிமிஷத்தில் வாந்தி பேதியில் போகிறதில்லையா? அந்த மாதிரி நினைத்துக் கொள்; எழுந்து வா; இல்லாவிட்டால் நான் சாதத்தை வெள்ளிப் பாத்திரத்தில் பிசைந்து உள்ளே கொண்டு வரட்டுமா?

வராக :- (ஆத்திரத்தோடு) அக்காள்! ஏன் என்னை வீணாய்க் கொல்லுகிறாய்? எனக்கு இப்போது சாதம் வேண்டாம்; சாப்பிடாததனால் நான் செத்துப்போயிட மாட்டேன்.
பேசாமலிரு – என்றான்.

அவள் ஓயாமற் சொன்ன உபசார வார்த்தைகள் அவனுக்குப் பெருந்தொல்லையாய் இருந்தன. மேனகாவும் தானும் நிகரற்ற இன்பம் அனுபவித்திருந்த சயனத்தில் இருந்ததும் நரக வேதனையாய்த் தோன்றியது. அந்த இடத்தைவிட்டு எங்கேயாயினும் போனால் தன் மனத்தின் குழப்பமும் கொதிப்பும் வேதனையும் தணிவடையலாம் என்று நினைத்து எழுந்து கூடத்திற்கு வந்து, “நான் ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு விட்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வெளியிற் போய்விட்டான்.

பெரு:- (கோமளத்தை நோக்கி) இன்றைக்கு இப்படித்தான் இருக்கும்; எல்லாம் இன்னம் நாலைந்து நாளில் சரியாய்ப் போகிறது. பழைய பெண்டாட்டி போனால் புதுப் பெண்டாட்டி வரப் போகிறாள். விசனமென்ன? புதியவளால் பெரிய ஆஸ்தி கிடைக்கப் போகிறது. நாளைக்கே வீடு வாங்கப் போகிறோம். அந்த நன்மை யெல்லாம் இவனுக்கு இப்போது தெரியாது; பின்னால் சுகப்படும் போது மேனகா போனது நல்லது என்பது விளங்கும்.

கோமளம்:- அப்போது! நிஜத்தை நாம் இவனிடம் சொன்னாற் கூட, இவன் கோபித்துக் கொள்ள மாட்டான்.

பெரு :- சேச்சே! நிஜத்தை நாம் ஒருநாளும் இவனிடம் வெளியிடக் கூடாது. குடி கெட்டுப்போம்; இவன் இப்போது முன்மாதிரி இருக்க வில்லை. சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை யல்லவா! நாம் ஏதோ ஒரு பெருத்த நன்மையை உத்தேசித்து அவளை விற்றுவிட்டோம். இனிமேலும் இவனிடம் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டால் நம்மை ஓட்டி விடுவான்; சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாம் ஒழுங்காக நடந்து வரவேண்டும் – என்றாள்.

அப்போது அவளுடைய சீடைமூட்டையும் குறைந்து போயிற்று. அடிக்கடி அதை நிரப்புவதற்கு எழுந்து போவதும் தொல்லையாயிருந்தது. வராகசாமிக்கு அடிக்கடி வாய் உபசாரம் சொல்லும் துன்பமும் தீர்ந்தது. ஆகையால், சீடைப் பாத்திரத்தையே எடுத்து வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள்.

அப்போது சாமாவையர் கனைத்துக்கொண்டு ஆடி அசைந்து மதயானையைப் போல நடந்து உள்ளே வந்தார். மூவரும் புன் சிரிப்பால் தமது வெற்றியையும் மகிழ்ச்சியையும் காட்டிக் கொண்டனர்.

பெரு :- அடே சாமா! சீடை கொஞ்சம் எடுத்துக் கொள்ளடா! நன்றாயிருக்கிறது. வாயில் போடுமுன் கரைந்து போகிறது.

சாமாவையர்:- (சந்தோஷ நகை நகைத்து) உன் காரியத்திற்குச் சொல்ல வேண்டுமா அம்மா! எனக்குப் பத்து எட்டு கொடுப்பது போதாது ; ஒருபடி நிறைய கொடுக்க வேண்டும்.

பெரு:- தேவையானது இருக்கிறது. இரண்டு படி வேண்டுமானாலும் சாப்பிடு – என்றாள்.
அதற்குள் கோமளம் ஒரு வெள்ளிக் கிண்ணியில் சீடையை நிரப்பி அவரிடம் நீட்ட, அவர் அதை வைத்துக்கொண்டு ஊஞ்சற் பலகையில் உட்கார்ந்து அதை உள்ளே உருட்டி விடத் தொடங்கினார்.

சாமா:- வராகசாமி எங்கேயோ போகிறானே! எங்கே போகிறான்?

பெரு:- சாப்பிடவே மாட்டேனென்கிறான். காப்பி சாப்பிட ஹோட்டலுக்குப் போகிறான்.

சாமா:- எல்லாம் இரண்டு மூன்று நாளில் சரியாப் போகிறது. அவள் மருந்து போட்டாளென்று நீ ஆயிரம் உறுதி சொன்னாயே; இவன் நம்பினானா பார்த்தாயா! கடிதங்களைக் கண்டவுடனே நம்பி விட்டானே. என்னுடைய யோசனை எப்படி வேலை செய்தது பார்த்தாயா?

பெரு:- ஆமாம்; நல்ல யோசனைதான்.

சாமா:- (இறுமாப்பாக) இதனால்தான் எல்லாவற்றிற்கும் என் யோசனையைக் கேட்டுச் செய்யுங்கள் என்று சொல்வது. இன்னொரு முக்கியமான விஷயம். அநேக வீடுகள் பார்த்தேன். சிறிய பன்றி குடிசைகளுக் கெல்லாம் நாலாயிரம் ஐயாயிரம் கேட்கிறார்கள். ஒன்றும் சரிப்படவில்லை. மைலாப்பூரில் ஒரு பங்களா இருக்கிறது. கரையோரம், பலே சொகுசான இடம், இருந்தாலும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். ஓயாமல் கடல் காற்று. ஒரு பக்கம் புஷ்பத் தோட்டம், இன்னொரு பக்கத்தில் வாழை, பாக்கு, தென்னை, மா, மாதுளை, எலுமிச்சை, பலா, கமலா முதலிய மரங்களின் பழங்கள் குலுங்குகின்றன. அவற்றில் கிளிகள் கொஞ்சுகின்றன. ஒரு பக்கத்தில் தடாகம்; மரங்களிலெல்லாம் ஊஞ்சல் ; உட்கார எங்கு பார்த்தாலும் சலவைக்கல் மேடைகள்; எங்கும் மணல் தரை; பெருத்த பங்களா; அதன் மணல் கரையைக் காணும்போது வயதான கிழவர்களுக்குக்கூட அதில் ஓடி விளையாட வேண்டு மென்னும் ஆசை உண்டாகும். குருடன் கூட இருபதினாயிரம் கொடுத்து விடுவான். தோதாக வந்திருக்கிறது. நம்முடைய நைனா முகம்மது இருக்கிறா னல்லவா; அவன் சிற்றப்பனுடைய பங்களா இது. அவன் நாகைப்பட்டினத்தில் கப்பல் வியாபாரி; இது அவனுக்கு இலட்சியமே இல்லை. இதை வந்த விலைக்கு விற்று விடும்படி எழுதியிருக்கிறான். சுலபத்தில் தட்டிவிடலாம். இது கிடைத்துவிடுமானால் நல்ல அதிர்ஷ்டந்தான்.

கோமளம் :- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான்.

பெரு :- இருபதினாயிரம் ரூபாய்க்கு நாமெங்கடா போகிறது? விற்பதற்கு இன்னம் மூன்று மேனகாக்கள் வேண்டுமே?

சாமா:- அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவனுக்கு இந்த ஊரின் விலையேற்றம் தெரியாது. இது பன்னிரெண் டாயிரத்துக்கு மேல் போகாதென்று நான் அவனுக்கு முன்னொரு கடிதம் எழுதினேன். வேறு யாருக்காயினும் வேண்டுமானாலும் அந்த விலைக்கு வாங்கிக் கொடுத்து விடலாம். நான் எனக்கே வேண்டுமென்று சொன்னால், அவன் எனக்கு இரண்டாயிரத் தைந்நூறு ரூபாய் குறைத்து விடுவான். என்ன செய்கிறது? நம்முடைய தரித்திரம் கையில் பணமில்லை. நைனாமுகம்மது கொடுத்த ஐயாயிரமும் என்னிடம் பவுன்களாக இருக்கிறது. இன்னும் நாலாயிரத் தைந்நூறு ரூபாய் வேண்டும். அதாவது இன்னம் 300 பவுன்கள் சேர்த்து எல்லாவற்றையும் பவுன்களாகக் கலகலவென்று கொட்டினால் மரக்காயன் மஞ்சள் காசுகளைக் கண்டு வாயைப் பிளப்பான். நாம் பங்களாவை உடனே அடித்துவிடலாம்.

பெரு :- அப்படியானால் பங்களா இருபதினாயிரம் பெறுமா? அவ்வளவு உயர்வானதா?
சாமா:- நீ அங்கு வந்து அதற்குள் நுழைவாயானால், அப்புறம் இந்த வீட்டிற்கே வரமாட்டாய்! ரிஷி ஆசிரமம் போல இருக்கிறது. பாக்கியலட்சுமி தாண்டவ மாடுகிறாள். நீ கொடுத்த பணத்திற்கு அதில் உண்டாகும் ஒட்டு மாம்பழம் மாத்திரம் இரண்டு வட்டிக்குக் கட்டிக்கொள்ளும். மற்றப் பழங்கள், தேங்காய் முதலியவை இருக்கின்றன. குடியிருக்கும் இடம் வேறு இருக்கிறது. நாம் போடும் முதல் பணமே நாலு வருஷத்தில் வந்துவிடும்.

கோமளம் :- கோடாலிக் கறுப் பூரான் பங்களாவைப் பார்ப்பானானால் தேன் குடித்த நரியைப்போல மயங்கிவிட மாட்டானா?

பெரு:- உன்பேரில்தான் வீட்டை வாங்கவேண்டுமா?

சாமா:- ரூபாய் பன்னிரண்டாயிரம் கொடுப்பதானால் உன் பேரில் வாங்கத் தடையில்லை. என் பேரில் வாங்கினால் இரண்டாயிரத்தைந்நூறு குறையும்.
பெரு:- அதுவும் நமக்கு இப்போது அநுகூலமான காரியந்தான். இப்போது திடீரென்று என் பேரில் இவ்வளவு பெரிய பங்களாவை வாங்கினால் வராகசாமி சந்தேகப் படுவான். நீயே வாங்கினதாக இருக்கட்டும். அதில் நீ எங்களை இனாமாக குடிவைப்பதாக இருக்கட்டும். வேறு கலியாணம் ஆகும் வரையில் அங்கு நாமிருக்க வேண்டும் என்றும், அது எங்களுடையது என்று சொல்லிக் கொள்ளும் படிக்கும் வராகசாமியிடம் தெரிவித்தால், அவன் சந்தேகப்பட மாட்டான். நடக்க நடக்க மேலே யோசனை செய்து கொள்வோம்.

கோமளம்:- (சிரித்துக் கொண்டு) தோட்டம் நிலைத்தல்லவா தென்னம் பிள்ளைவைக்க வேண்டும். முதலில் பணம் வேண்டுமே. இன்னும் முன்னூறு மஞ்சள் காசு வேண்டாமா? அதற்கு யார் வீட்டில் கன்னம் வைக்கிறது?

சாமா – வெள்ளையப்பன் இருந்தால் தான் எல்லாம். இல்லாவிட்டால் சருக்கரை சருக்கரையென்று சொல்லி வெறும் வாயைச் சப்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
பெரு :- (சிறிது யோசனை செய்கிறாள்) சரி. அதையே முடித்துவிடு. மிகுதிப்பணம் நான் தருகிறேன். உனக்கு 300 பவுன்களாகவே தருகிறேன். இன்றைக்கே தந்தியடித்து மரக்காயனை வரவழைத்து நாளைக்குப் பத்திரத்தை முடித்து அதைக் கொண்டு வந்து என்னிடம் கொடு.

சாமா:- சரி , பணமிருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறேன். அவன் கோடீசுவரன்; இங்கே வரமாட்டான். நான் நேரில் போய் அங்கேயே பத்திரத்தை முடித்துக்கொண்டு வரவேண்டும். நீ இப்போது பணத்தைக் கொடுத்தாலும், நான் இன்று ராத்திரி மெயிலில் போய் நாளைக்கே காரியத்தை முடித்துக்கொண்டு நாளை மறுதினம் பத்திரத்துடன் வந்து விடுகிறேன் – என்றார்.

அதைக் கவனியாதவள் போலத் தோன்றிய பெருந்தேவி எழுந்து உள்ளே போய்த் தனது இடையில் சேலைக்குள் மறைத்துக் கட்டித் தொங்கவிட்டிருந்த பவுன் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். “இதோ இருக்கிறது முன்னூறு பவுன் எடுத்துக்கொள். உடனே காரியத்தை முடி’ என்றாள்.

சாமா:- (ஆச்சரிய மடைந்து) பெருந்தேவியின் சமர்த்து யாருக்கு வரும்? இத்தனை வருஷமாக நான் சினேகமா யிருக்கிறேன்; தான் பணக்காரி யென்பதைக் கொஞ்சமும் இவள் காட்டிக் கொள்ளவே இல்லையே!

கோமளம்:- (பெருத்த ஆச்சரியத்தோடு) நான் இராத்திரிப் பகல் இவளுடன் கூடவே இருக்கிறேன். இதை எனக்கே காட்டவில்லையே! அக்காள் மகா கெட்டிக் காரியடா சாமா!

சாமா:- அடி பெருந்தேவி! இதென்ன பீதாம்பரையர் ஜாலமா? இல்லாவிட்டால் நிஜமான சங்கதியா? கோமளம்! இவள் இவ்வளவு இரகசியமாக மறைத்து வைத்திருந்ததை வெளியில் கொண்டுவரும்படி நான் செய்தேன் பார்த்தாயா? இவளை விட நான் கெட்டிக்காரனில்லையா? – என்று சந்தோஷ நகை நகைத்தார்.

அவ்விரு பெண்டீரும் பெருமகிழ்ச்சி கொண்டு அவருடன்கூட நகைத்தனர்.

சாமா:- பங்களா விற்குப் போனவுடன் கலியாணத்தையும் முடித்துவிடவேண்டும். பெண்ணின் அம்மான் முன்பு வந்தாரே, அவர் இன்னும் ஒரு வாரத்தில் வருகிறார். வந்தவுடன் காரியத்தை முடித்துவிடுவோம். அதற்குள் வராகசாமியைச் சமாதானப்படுத்தி அவன் மனதைத் திருப்ப வேண்டும்.

பெரு:- போதுமப்பா! முன்பு மேனகாவை அழைத்து வருகிறதற்காக அவன் மனதில் ஆசையை உண்டாக்கினோம், அது இப்போது ஆபத்தாய் முடிந்தது. தலைவலி போகத் திருகுவலி வந்தது. அவனுக்கு இப்போது அவளுடைய பைத்தியமே பெருத்த பைத்தியமாய்ப் பிடித்துக்கொண்டது. இப்போது அதை மாற்றுவது கடினமாய் இருக்குமென்று தோன்றுகிறது.

சாமா:- நாம் புதுப்பங்களாவிற்குப் போனால் கூடிய சீக்கிரம் அவனைச் சரிப்படுத்தி விடலாம். நான் இன்று ராத்திரியே போய்க் காரியத்தை முடித்து விடுகிறேன். வராகசாமியை நாம் இப்போது வெளியில் அதிகமாக விடக்கூடாது. நான் போய்த் தேடி அவனை அழைத்து வருகிறேன் – என்று சொல்லிவிட்டு பவுனை எடுத்துப் பையிற் போட்டுக் கொண்டு வெள்ளிப்பாத்திரத்தில் இருந்த சீடைகளை வயிற்றில் போட்டு நிறைத்துக்கொண்டு ஒய்யார நடைநடந்து தாம் அத்தனை வருஷங்கள் பாடுபட்டதற்குக் கூலி அந்த மூன்று நாட்களிலேதான் கிடைத்ததென்று நினைத்துப் பேருவகை கொண்டு தம்மை மறந்து தமது வீடு சென்றார்.

திடீரென்று தமக்குப் பெருத்த தொகைகள் கிடைக்கத் தாம் பணக்காரராய் விட்டதை தமது மனைவி மீனாட்சியிடம் சொல்லவும், பவுனையே கண்டறியாத அவளுக்கு அத்தனை பவுன்களையும் காட்டவும் பெரிதும் ஆவல் கொண்டார். அவருடைய கட்டுக்கடங்கா ஆத்திரத்தில் அவளிடம் விஷயத்தைச் சொல்லவும் அவளைத் தனிமையில் வா என்று கூப்பிடவும் மனம் பொறுக்க வில்லை; தாழ்வாரத்தில் நின்ற பெண்டாட்டியை குழந்தையைத் தூக்குவதைப் போல சுலபமாய்த் தூக்கிக்கொண்டு அறைக்குள் போய்விட்டார்.

– தொடரும்…

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது.

– மேனகா (நாவல்) – முதல் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *