மெழுகுப் பொம்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 6,847 
 
 

கீதாவிற்கு, பரம்பரை, பரமபரையான ராகவ் குடும்பத்தின் மூர்க்கத்தனத்தை, வேலைக்காரி சின்னம்மா சொன்னதைக் கேட்டதும் உடலெல்லாம் வியர்த்து வெடவெடத்தது, நெஞ்சிலே காயம்பட்டது போன்று வேதனை கிளம்பியது.

ராகவின் குடும்பம் ஒரு வீரப்பரம்பரை என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருந்தாள். மற்ற ரகசியங்கள் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. பெரிய இடமென்றாலே அதில் பல மர்மங்கள் நிறைந்திருக்கும் என்பதைக்கூட அறியாத பேதையாக இருந்தாள் கீதா.
வீரப் பரம்பரையாக இருந்து விட்டுப் போகட்டும், அதற்காகத் தனக்குக் கிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் அந்த மூர்க்கத்தனத்துக்குப் பெயர் வீரமா?

கடவுளே. அப்படியானால் ராகவின் மூர்க்கத்தனம் குழந்தையிடமும் அல்லவா படிந்துவிடும். இரண்டு வயது கார்த்திக் தோற்றத்தில் மட்டுமல்ல பாவனைகள், உணர்ச்சிகளில் கூட ராகவ் மாதிரியே இருக்கிறான்.

குழந்தையை இங்கேயே வளரவிட்டால் கணவரின் குணம் படிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தன் குழந்தை மீது கணவனின் வாடையே படாதபடி வளர்க்கவேண்டும் என்று முடிவெடுத்தாள். ஒருவன் நல்லவனாவதும், கெட்டவனாவதும் சூழ்நிலையால் தானே!

ஆரம்பத்திலேயே நறுக்கிவிட்டால் தான் நல்லது. குழந்தையை எப்படி மீட்பது என்று சிந்தித்தாள்.

சிந்தித்ததின் முடிவுதான் இன்று கார்த்திக் வெளியூரில் உள்ள நல்ல கான்வென்டில் படித்துக் கொண்டிருக்கிறான்.

லீவிற்கு வீட்டிற்கு வருவதோடு சரி. ராகவ் எத்தனையோ தடுத்தும், சாமர்த்தியமாகப்பேசி அவனை மடக்கி கான்வென்டில் சேர்த்தாள்.
தன் ஒரே மகனைப் பிரிந்து இருப்பதில் அவளுக்கு வருத்தந்தானென்றாலும் பிள்ளையினிடத்தில் கணவனின் மூர்க்கத்தனம் படரக்கூடாது என்ற நல்ல எண்ணத்திற்காகத் தான் அப்படிச் செய்தாள்.

இதோ, ஒருவருடப் படிப்பு முடிந்து நீண்ட லீவில் வரப்போகிறான் கார்த்திக்.

கீதா, கார்த்திக்கிற்காக அவனுக்குப் பிடித்த ஸ்வீட்டுகளையும், காரங்களையும் செய்துவைத்துக் காத்திருந்தாள்.

வந்து இரண்டு நாட்களுக்கெல்லாம் கார்த்திக்கிற்குப் போரடித்தது. விளையாட ஆளில்லாமல் தவித்தான்.

அவன் தவிப்பை உணர்ந்த கீதா, தன் தோழியை லீவிற்கு அவள் மகனை அழைத்துவரும்படி எழுதியிருந்தாள். அதன்படியே கீதாவின் தோழி பிருந்தா தன் மகன் வசந்தை அழைத்துவந்திருந்தாள்.

கார்த்திக்கிற்கு ஒரே மகிழ்ச்சி தன்வயதொத்த வசந்திடம் எளிதாக ஒட்டிக்கொண்டான். பிள்ளைகள் இருவரும் விளையாடத் தோழிகள் இருவரும் தங்கள் பழையகால நினைவுகளை பகிர்ந்துகொண்டிருந்தனர்.

திடீரென வசந்த் வீறிட்டு அழுததைக்கேட்டுத் தோழிகள் இருவரும் பதறி ஓடினர்.

“ஏய், கார்த்திக், வசந்த் ஏன் அழறான்?” கேட்டாள் கீதா.

“தெரியலை” என்றான் கார்த்திக் முறைத்தபடி.

அதற்குள் வசந்த் “வாம்மா நம்ம ஊருக்குப் போவோம். கார்த்திக் எனக்கு விளையாட அந்த மெழுகு பொம்மையைத் தரமாட்டேங்கிறான்” என்று சொல்லியழுதான்.

“டேய், கார்த்திக் நீ சமர்த்தில்லையா, சித்தநாழி அவன்கிட்டே கொடு பொம்மையை” என்று கீதா சொல்ல-

“இதை மட்டும் நான் தரமுடியாது, வேறு சாமான்களை வைச்சு விளையாடச்சொல்லு”

“நம்ம வீட்டிற்கு வந்திருக்கிறான் வசந்த். உனக்கு இதே மாதிரி மெழுகு பொம்மை நாளைக்கு வாங்கித்தருகிறேன். அதை அவனிடம் கொடு” என்று கீதா எத்தனையோ சொல்லியும் அவன் கொடுக்க மறுத்ததால் கீதா கோபம் கொண்டு அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்போனாள்.

அதற்குள் கார்த்திக் “சரி என்னோடு வா தருகிறேன்” என்று சொல்லி அழைத்துப்போனான் வசந்தை. ஆவலோடு அவனைப் பின்தொடர்ந்தான் வசந்த்.

சட்டென்று ஒரு தீக்குச்சியைக் கிழித்து அந்தப் பொம்மையின் மேல் வைக்க மெழுகுபொம்மை கரைந்து உருகிப்போனது. அதைப்பார்த்து வசந்த் அழுதான்.

இந்தக் காட்சியைப் பார்த்த சீதா அதிர்ச்சியால் உறைந்து போனாள்.
உலகத்தின் எந்த மூலைக்குப் போனால் என்ன? பரம்பரை குணம் போகாது என்பதை உணர்ந்து கொண்டாள் கீதா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *