மூன்றாம் பாலினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,930 
 
 

சுதர்சன் எம்.டெக் படித்துவிட்டு, தொடர்ந்து யுபிஎஸ்சி எழுதி பாஸ் செய்தான். தற்போது அதற்கான போஸ்டிங் ஆர்டர் வரவேண்டும். இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

சின்ன வயசு. பகலில் வீட்டினுள் சும்மா அடைந்து கிடப்பது என்பது மிகக் கொடுமையான விஷயம். ஒரு பெண்ணின் அருகாமைக்காக மனசும் உடம்பும் ஏங்கியது. விரகதாபம் அவனை வதைத்தது.

அவன் வீட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றுக்கு போகிற வழிக்கு இரண்டு பாதைகள் உண்டு. ஒன்று ஜனரஞ்சகமான பாதை. எப்போதும் மக்கள் சாரி சாரியாக குளிக்கப் போவதும், வருவதுமாக இருப்பார்கள்.

இன்னொன்று சற்று குறுகலான அழுக்கான மண்ரோட்டுப் பாதை. அந்தப் பாதையில் ஜன நடமாட்டமே இருக்காது. முட்புதர்கள் அதிகம். தவிர, அந்தப் பாதையிலிருந்து சற்று விலகி வலது பக்கம் ஒரு முட்டுச்சந்து இருக்கிறது.

அந்த முட்டுச் சந்துக்குள் நான்கைந்து குடும்பங்கள் இருக்கின்றன. . அவர்கள் அனைவரும் மூன்றாம் பாலினத்தவர்கள். அவர்கள் எப்போதும் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு வீடுகளின் வாசலில் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள். சிலர் பேன் எடுத்துக் கொண்டிருப்பார்கள். பலர் கண்ணாடியில் முகம் பார்த்து பவுடர் அப்பிக்கொண்டு அழகு பார்த்துக் கொண்டிருப்பார்கள். .

அதுதவிர, போகிற வருகிற ஆண்களைப் பார்த்து மார்பை விரித்துப் போட்டுக்கொண்டு சிரிப்பார்கள். சிலர் கைகளால் சைகைசெய்து அழைப்பார்கள். பல ஆண்கள் சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தும் விடுவார்கள்.

இதை சுதர்சன் நிறைய தடவைகள் பார்த்திருக்கிறான். அவனுக்கும் தான் ஒருமுறை அவர்களிடம் போய்விட்டு வந்தால்தான் என்ன என்கிற எண்ணம் சமீப காலங்களாக அடிக்கடி ஏற்படுகிறது. ஒரு வித்தியாசமான அனுபவத் தேடல்.

அதற்காக வெள்ளோட்டம் பார்க்க, இரண்டு மூன்று தடவைகள் அந்த முட்டுச் சந்தின் வழியாக அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, நமட்டுச்சிரிப்புடன் கடந்திருக்கிறான்.

அப்போது அவர்களும் இவனை நட்புடன் பார்த்து கரகர குரலில் “என்னப் பார்வை உந்தன் பார்வை?” எனப் பாடுவார்கள். இவனுக்கு வெட்கமாகவும், ஒருவித பதட்டமாகவும் இருக்கும். விறுவிறென வேகமாக நடந்து அந்த முட்டுச் சந்தை தாண்டிச் சென்றுவிடுவான்.

அந்த மூன்றாம் பாலினத்தவர்களில் ஒருத்தி மட்டும் ரொம்ப அமைதியாக இவனைப் பார்ப்பாள். அவள் ரொம்பச் சிவப்பாக, ஒல்லியாக, அழகாக இருப்பாள். ஒரு சினிமா நடிகையின் ஸ்டைலும், மேக்கப்பும் அவளிடம் அதிகம் காணப்படும். சுதர்சனுக்கு அவளை ரொம்பப்பிடிக்கும். அவளுடன் ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்கிற எண்ணம் அவனுள் தீயாக மூண்டது.

ஒருநாள் பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் அந்த முட்டுச்சந்துப் பக்கம் மெதுவாகப் போனான். வீடுகளின் வாசலில் அந்த அழகியும் தன் பரிவாரங்களுடன் அமர்ந்திருந்தாள். அவர்கள் சுதர்சனைப் பார்த்து எப்போதும்போல கிண்டலாகப் பாட ஆரம்பித்தார்கள். சுதர்சன் சற்று தைரியத்தை திரட்டிக்கொண்டு அந்த அழகியிடம் சென்று, “உங்க பேரென்ன?” என்றான்.

“ரேணுகா” என்றாள் அமைதியான புன்சிரிப்புடன்.

அங்கிருந்த ஒருத்தி, “ஏம்பா…எங்க பேரையும் கேட்க மாட்டியா?” என்று தடித்த குரலில் இவனைக் கேட்டாள்.

அவ்வளவுதான். சுதர்சன் அந்த இடத்தைவிட்டு விறுவிறுவென கடந்து சென்றுவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும் தனக்குள் “ரேணுகா…..ரேணுகா” என்று இரண்டுமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான். சுகமாக இருந்தது. ஒருநாள் அவளிடம் கண்டிப்பாக போய்விட வேண்டும் என்று தனக்குள் உறுதி பூண்டான்.

மறுவாரம் அவனுக்கு யுபிஎஸ்சியிலிருந்து போஸ்டிங் வந்தது. போபாலில் போட்டிருந்தார்கள். எங்கு இருந்தால் என்ன? வேலையை ஒப்புக்கொள்ள முடிவு செய்தான். அடுத்த மாதம் பத்தாம்தேதி போபாலுக்கு ரயிலில் முன்பதிவு செய்துகொண்டான்.

போபால் போவதற்குள் ஒருமுறையாவது ரேணுகாவைத் தொட்டு விடவேண்டும் என்று நினைத்துக்கொண்டு ஆவலாக காத்திருந்தான்.

அன்று ஒருபுதன் கிழமை.

பகல் இரண்டு மணிக்கு அந்த முட்டுச்சந்துக்கு கிளம்பிச் சென்றான். பலர் அமர்ந்திருந்தார்கள். ஆனால் ரேணுகா மட்டும் அங்கில்லை. சரி நாளை வரலாம் என நினைத்து அந்த இடத்தைக் கடக்கையில், ஒருத்தி முரட்டுத்தனமாக இவனது கையைப்பிடித்து வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள். மற்ற இருவர் அவன் முதுகைத் தள்ளி உள்ளே கடத்திச் சென்றனர். கதவை ஒருக்களித்துச் சாத்தினர்.

“ரேணுகா பேரை அன்னிக்கி கேட்டீல்ல….இன்னிக்கி எங்க பேரையும் தெரிஞ்சுக்க.”

வீட்டினுள் இருட்டாக இருந்தது. ஜன்னல் எதுவும் இல்லை. வெப்பமாக இருந்தது. பயங்கரமாக முடை நாற்றம் அடித்தது. உடம்பு வியர்த்தது. இவனைச் சுற்றி தடித் தடியாக வாட்ட சாட்டமாக மூன்றுபேர். அருகில் பார்த்தபோது அவர்கள் முகம் கரடுமுரடாக இருந்தது. ஏராளமாக மீசை முளைத்திருந்தது.

சுதர்சன் பயத்தில் நடுங்கினான். ஒருத்தி இவனது சட்டைப்பையில் கையைவிட்டு அதிலிருந்த நூறு ரூபாய்த்தாளை எடுத்துக் கொண்டாள்.

இன்னொருத்தி “நூறு ரூபாய்க்கு நீ எங்களில் ஒருத்தியை கட்டித்தான் பிடிக்க முடியும்….வேறு எதுவும் செய்யமுடியாது. சீக்கிரம் முடிச்சிட்டு போய்யா.” என்றாள்.

சுதர்சன் தன்னை மிகக் கேவலமாகவும், அசிங்கமாகவும் உணர்ந்தான்.

அப்போது திடீரென்று கதவு திறக்கப்பட்டு அந்த ரேணுகா உள்ளே வந்தாள்.

“அவர விடுங்கடி…” என்று அதட்ட, அனைவரும் விலகி நின்றனர்.

பின்பு நிதானமாக இவனைப்பார்த்து, “நீ படிச்சவன்தான? உனக்கு அறிவு வேண்டாம்? அன்னிக்கி உங்க பேரென்னன்னு என்னை நீ மரியாதையுடன் கேட்டப்பவே எனக்கு தெரியும் நீ படிச்சவன்…..நல்ல பேமிலி பேக்ரவுண்டுன்னு….”

“……………………….”

“எங்களைப்பற்றி நீ என்ன நெனச்ச? எங்களில் பெரும்பாலோர் படிச்சு முன்னுக்குவர ஆரம்பிச்சாச்சு… தயவுசெய்து எங்களையும் ஒரு சராசரி மனித உயிராக மதியுங்கள். நாங்கள் அர்ச்சுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்த அரவாண் வழி வந்தவர்கள். அதனால் நாங்கள் அரவாணிகள் என்று அழைக்கப் படுகிறோம்.

“எங்களுக்கும் அரசியல் சாசன உரிமைகள் பொருந்தும் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது. அதனால் தமிழக அரசு மூன்றாம் பாலினத்தாரை அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் முதல் காவல்துறை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி எனும் திருநங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எங்களுக்கும் சமத்துவ உரிமைகள் கிடைக்கும் சகாப்தம் தொடங்கிவிட்டது.”

“யக்கா அவன்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்லிக்கிட்டு?”

“ஏண்டி, பணம் ஏதாவது இவர்கிட்ட புடுங்கினீங்களா?”

“ஆமாக்க யமுனாதான் புடுங்கி வச்சிருக்கா…”

யமுனா என்பவள் மரியாதையாக அந்த நூருரூபாயை சுதர்சனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

ரேணுகா தொடர்ந்தாள்.

“நானும் ஒரு க்ராஜ்வேட்தான்….விஜய் டிவியில் வருகிற ‘இப்படிக்கு ரோஸ்’ நிகழ்ச்சியில் வரும் ரோஸ் என் சொந்த அக்கா. அவள் மூலமாக நான் இப்போது சினிமாவில் நடிக்கப் போகிறேன். அடுத்தவாரம் ஆடிஷன் டெஸ்ட்….இனிமே இந்தப் பக்கம் வராத….ப்ளீஸ் கோ.”

சுதர்சன் வெட்கித் தலைகுனிந்து வெளியேறினான்.

அதன்பிறகு அவன் அந்தப்பக்கம் போகவேயில்லை.

வருடங்கள் ஓடின….

போபாலிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும், அவனுக்குத் திருமணமாகி ஒரு பெண்குழந்தையும் பிறந்துவிட்டது.

ரேணுகா சினிமாவில் பேய் வேடக் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து புகழ் பெற்றாள். தன் பெயரை ரேணுகாதேவி என மாற்றிக்கொண்டாள். சுதர்சன் அவளைப்பற்றி பத்திரிக்கைகளின் மூலமாக அதிகம் படித்து தெரிந்து கொண்டான். தவிர வால்போஸ்டர்களிலும் அவளை நிறையப் பார்த்தான்.

அன்று அவன் வீட்டினருகே இருக்கும் ஷாப்பிங் மாலில் ரேணுகாதேவி நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

சுதர்சன் அவளைப் பார்க்கும் ஆர்வத்தில் தன் நான்கு வயதுக் குழந்தையுடன் அங்கு சென்றான்.

அவள் ஷூட்டிங் இடைவெளியில், அவளுக்கான ஏசி காரவானில் ஏறி உள்ளே சென்றாள்.

சுதர்சன் பரபரப்புடன் தன் விசிட்டிங் கார்டை எடுத்து அதன் பின்னால், “ஆத்தங்கரை ஓரத்தில் என்னைப் புத்திசொல்லித் திருத்திய தேவதையை பார்க்க வந்துள்ளேன்” என்று எழுதி காரவான் செக்யூரிட்டியிடம் கார்டைக் கொடுத்து ரேணுகாதேவி மேடத்திடம் கொடுக்கச் சொன்னான்.

உள்ளே சென்று திரும்பிய செக்யூரிட்டி “மேடம் உங்களை உடனே வரச்சொன்னாங்க” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

அலங்கரிக்கப்பட்ட பிரத்தியேகமான ஒரு அறையாக அந்தக் கேரவன் காணப்பட்டது. வாசனையாக இருந்தது. உள்ளே அபரிதமான ஏசியில் ரேணுகாதேவி கம்பீரமாக அமர்ந்திருந்தாள்.

குழந்தையுடன் சுதர்சனைப் பார்த்ததும் மரியாதையுடன் எழுந்து நின்று புன்னகைத்தபடி கைகளை கூப்பினாள். அதே புன்னகை.

“என்னை ஞாபகம் இருக்கிறதா?”

“ஓ நன்றாக ஞாபகமிருக்கிறது….எப்படி இருக்கீங்க?”

“மனைவி, குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கிறேன் மேடம். ஒருதடவை என் வீட்டிற்கு வாங்க.”

“கண்டிப்பாக வருகிறேன். யுவர் டாட்டர் இஸ் வெரி க்யூட்.”

குழந்தையை ஆர்வமுடன் அள்ளித் தூக்கிக் கொஞ்சினாள்.

குழந்தைக்கு கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என்று நினைத்தவள், பின்பு சட்டென்று நினவு வந்தவளாக தன்னுடைய வானிடிபேக்கைத் திறந்து, ஷூட்டிங் கன்டினியுட்டிக்காக கழற்றி வைத்திருந்த தன்னுடைய நீளமான தங்கச் செயினை ஒரு கண்ணாடிப் பேழையிலிருந்து எடுத்து குழந்தையின் கழுத்தில் புன்னகைத்தபடி அணிவித்தாள்.

பின்பு குழந்தையின் இரண்டு கன்னங்களிலும் மாறிமாறி முத்தமிட்டாள்.

குழந்தையைப் பார்த்து, “ஆல் த வெரி பெஸ்ட் …. வாட் இஸ் யுவர் நேம்?” என்று கேட்டாள்.

“மை நேம் இஸ் ரேணுகா.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *