கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 6,629 
 

” பொண்ணுக்குப் புருசன் அமையறது இறைவன் கொடுத்த வரம் ” – நான் உள்ளே நுழைந்ததுமே ராக ஆலாபனையை ஆரம்பித்தாள் என் மனைவி மகிழினி.

” என்னடி சொல்றே. .? ” புரியாமல் விழித்தேன்.

” சொல்றேன் சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு. தாம்பத்தியம்…. நீங்க நினைக்கிற மாதிரி வெறும் படுக்கை சமாச்சாரம் மட்டுமில்லே. அதுக்கும் மேலே. ஒருத்தருக்கொருத்தர் அன்பு, அனுசரணை, துணை. ”

” புரியும்படி சொல். .? ” எனக்குள் சின்னதாய் கடுப்பு.

” உங்க நண்பர் முத்து… அவர் பொண்டாட்டிகிட்ட எவ்வளவு அல்லல், கஷ்டப்பட்டார்ன்னு நீங்க என்கிட்ட சொல்லிச் சொல்லி வருத்தப்படுவீங்க.”

” ஆமாம். அதுக்கென்ன. .? ”

” இன்னைக்கு… நான் அவர் வாழ்க்கையையும், என் வாழ்க்கையையும் சேர்த்து வீணடிச்சுட்டேன். இந்த மாதிரி புருசன்னு தெரியாம ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். இனியும் நான் அவருக்குச் சிரமம் வைக்கக்கூடாது. சீக்கிரம் போய்ச் சேர்ந்துடணும்ன்னு ஆண்டவன்கிட்ட வேண்டறேன்னு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி உருகிறாள். ” என்றாள்.

என்னால் நம்ப முடியவில்லை.

” நிசம்ங்க. நம்ப முடியாட்டி நீங்களே நேர்ல போய் பார்த்துட்டு வாங்க. ” சொல்லி நகர்ந்தாள்.

முத்து என் ஆர்த்மார்த்தமான நண்பன். பால்ய சிநேகிதன். ஆறு மாதங்களுக்கு முன் வரை நானும் அவனும் சக ஊழியர்கள். அவன் நல்லவன் அழகன்.

ஆனால் அவனுக்கு வாய்த்த மனைவி சித்ராதான் சரியில்லை.

திருமணமான புதிதில் இரண்டு பிள்ளைகள் பெறும்வரை கணவன் – மனைவி சந்தோசம். அதன் பின்தான் சறுக்கல்.

முத்து கலகலப்பானவன் எல்லோரிடமும் சரளமாகப் பழகுவான். அவனுக்கு அலுவலகத்தில் பெண் உதவியாளினி உண்டு. அலுவலக விஷயமாக அவர்கள் பேச்சு, பழக்கம் சாதாரணம். சித்ராவிற்கு இது எப்படி பட்டதோ தெரியவில்லை.

” நீங்க அவளை வைச்சிருக்கீங்க. .! ” ஒரே போடாகப் போட்டாள்.

மறுபடியும் மறுபடியும் அவளிமிருந்து அதே பேச்சு. இவன் மறுப்பு.!!

சித்ரா அவனையும் நம்பாமல்…. ” உங்க நண்பர் எனக்குத் துரோகம் செய்யிறார்ங்க” என்று என்னிடமும் சொன்னாள் .

நானும் இல்லையென்று சொல்லி அவன் நிலைய எடுத்துரைக்க. ..

” நீங்க நண்பருக்குச் சாதகமாத்தான் பேசுறீங்க. .” என்று என்னையும் நம்பவில்லை, .

முத்துவிற்கு நிம்மதி இல்லை. நிலைமையை என்னிடம்தான் சொல்லி வருத்தப்பட்டான்.

சித்ராவைப் பெற்றவர்கள் நல்லவர்கள். அவர்கள் மாப்பிள்ளை யோக்கியம், குணாதிசயம் தெரிந்தவர்கள். பெண்ணுக்குப் புத்தி சொன்னார்கள்.

அதுவும் அவளிடம் எடுபடவில்லை.

தினம் அவனுக்குத் தொல்லை.

ஆறு மாதங்களுக்கு முன்புதான் அந்த விபத்து.!!

பாத்ரூமில் வழுக்கி விழுந்த சித்ராவிற்கு எசகுபிசகாய் அடிபட. .. வைத்தியம் பார்த்தும் அவள் படுத்தப் படுக்கையாகி விட்டாள். கட்டிலோடுதான் சாவு என்று டாக்டர்கள் கை விரித்து விட்டார்கள்.

முத்துவிற்கு இது பெரிய இடி. சுமை. இந்த நேரத்தில் எனக்கு மாற்றல் வர. .. நானும் அவனும் பிரிவு. நாங்கள் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் வழி இல்லாமல் வேளை பளு. என்னால் முடியாத பட்சத்தில்தான் போய் பார்த்துவர என் மனைவியை அனுப்பினேன். அவள் திரும்பி வந்து சேதி இப்படி.

சித்ரா கணவனைச் சந்தேகத் தீயால் கொடுமைப்படுத்தியது அவள் காலம். இப்போது இவன் காலம். அவள் பேசிய பேச்சு, கொடுமைக்கெல்லாம் தண்டனையாய் அவள் கண் முன்னாலேயே எத்தனைப் பேரை வைத்து குடும்பம் நடத்தலாம். அது செய்யாமல் இது என்ன உதவி. .?

‘ நல்லவனைக் கெட்டவனென்று கொடுமைப் படுத்தியத்திற்கு சின்ன எதிர்ப்பு, காழ்ப்புக்கூடக் காட்டாமலிருந்தால் தப்புக்குத் தணடனையே இல்லையா.? இறைவன் கொடுத்ததுதான் தீர்ப்பா.?! இந்த படுக்கைதான் அவள் கொடுமைக்கெல்லாம் தண்டனை என்று நினைக்கிறானா. .? ‘ – எனக்கு யோசிக்க யோசிக்க குழப்பம்.

மறுநாள் அந்த அதிசய பிறவியைப் பார்த்து வருவது என்று தீர்மானித்து புறப்பட்டேன்.

நான் வீட்டில் நுழையும்போது முத்து கட்டிலிலிருந்த தன் மனைவியை நெஞ்சில் சாய்த்து, அணைத்து ஒரு கையால் அவள் வாயில் டம்ளரை வைத்து பால் புகட்டிக் கொண்டிருந்தான்.

என் தலையைக் கண்டதும். .. ” வாடா. .! ” என்று வரவேற்றான்.

என்னைக் கண்ட சித்ரா முகத்தில் பலவீனமான புன்னகை. படுத்தப் படுக்கை என்பதால் பாவம் அவள் உடல் ரொம்பவும் உடைந்திருந்தது.

வாயில் வழிந்த பாலை முத்து துடைத்து விட்டு, பால் இறங்க அவள் நெஞ்சுப் பகுதியை வருடி விட்டான். பிறகு ஒரு குழந்தையைப் போல் படுக்கையில் அவளைச் சாய்த்து தன்னை விடுவித்துக்கொண்டான்.

” ஒரு நிமிசம் இரு வர்றேன் ! ” சொல்லி அவள் புடவையை ஒழுங்கு படுத்திவிட்டு வந்து பால் டம்ளரைக் கழுவி வைத்தான்.

” தற்போதைக்கு எல்லா வேலையும் முடிஞ்சுது. வா கொஞ்சம் வெளியில போகலாம் ! ” அழைத்து நடந்தான்.

வீட்டை விட்டு இருவரும் வெளியில் நடந்தோம்.

‘ என் மனைவி சொன்னதெல்லாம் நிஜம். இவன் கஷ்டப்படவேப் பிறந்தவனா. .?. பிறந்த பிறப்பா. ..?!’ – எனக்குள் கேள்வி.

” முத்து. .” அழைத்தேன்.

” சொல்லு. .? ”

”உன் மனசுல துவேசம் இல்லியா. .? ” மெல்ல சொன்னேன்.

” எதுக்கு. .? ” அவன் திருப்பிக் கேட்டான்.

” சித்ரா செஞ்சதுக்கு. அவள் உன்னை நொங்க நொங்க பேசி பலவிதத்திலும் கஷ்டப்படுத்தி, தினம் நிம்மதி இல்லாம படுத்தினத்துக்கு. ..”

”…………”

” முத்து ! அவள் முறை முடிஞ்சு போச்சு. இது உன் முறை. நானா இருந்தால் இப்படிப் பட்டவளைத் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டேன். தாலி கட்டின கடமைக்காக ஒரு வேலைக்காரியை அமர்த்தி அவளுக்கு உதவச் சொல்லிட்டு. .” சித்ரா ! இதோ பார். நீ அன்னைக்குச் சொன்னதை நான் இன்னைக்கு நடைமுறைப்படுத்துறேன்னு அவள் கண் முன்னாலேயே தினம் ஒருத்தியைக் கொண்டு வந்து பழி வாங்குவேன். நண்பா ! நீ புத்திசாலி இல்லேடா. முட்டாள். ! கஷ்டத்தைத் தானா வரவழைச்சுக்கிறே. தப்பைக் கண்டிக்கனும், தண்டனையும் கொடுக்கனும். அவன்தான்டா மனுசன் ! நீ மண் ! ” காட்டமாய்ச் சொல்லி நிறுத்தினேன்.

வெகுநேர அமைதிக்குப் பின்…..

” நான் மனுசன் இல்லேன்னு உனக்கு யார் சொன்னது. .? ” அவன் என்னைத் திருப்பிக் கேட்டான்.

நான் அதிர்ச்சி, வியப்பாய்ப் பார்த்தேன்.

” எல்லா மனுசனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கு. ஆனா அவனவன் கையாள்ற விதம்தான் வேற….. .”

” ……………..”

” குணா ! நான் மகாத்மா இல்லே. மனுசன்.! நீ சொன்ன மாதிரி சித்ரா முறை முடிஞ்சி இது என் முறை. பயன்படுத்திக்கிட்டு வர்றேன். ! ”

” என்னடா சொல்றே. .?!! ” நான் திடுக்கிடலாய் அவனைப் பார்த்தேன்.

” குணா ! வெறுப்பைக் கொட்டியவளுக்கு நாம நெருப்பைக் கொட்டக்கூடாதுன்னு முடிவுக்கு வந்தேன். அதனால் வேலைக்காரி இருந்தாலும் அவளை விடாமல் என் மனைவிக்கு எல்லா உதவிகளையும் நான் பார்த்துப் பார்த்து செய்யறேன். அவள் படுக்கையில் மலம் ஜலம் கழித்து அசிங்கப்படுத்தினாலும் வாரி வழிக்கிறேன். பாத்ரூம் கொண்டு விடறேன். கொஞ்சம்கூட அசூசைப்படாமல் எல்லாம் செய்து அன்பும் செலுத்தறேன். இந்த அன்பு, அக்கறை அவளை உருக்கும் விசயம் என்கிறது நீயோ அவளோ அறியாத சேதி. இப்போ சித்ரா என்னை ரொம்ப உயர்வா நினைக்கிறா .”

” குணா ! நல்லவனை என்னைக்கும் கெட்டவனாய் மாத்த முடியாது. அப்படியே மாறினாலும் அவனுக்குள் இருக்கிற மிருகத்தை நல்லவிதத்துல நடத்திதான் தண்டனையை நிறைவேற்றுவான். காந்தி… மகாத்மா!! அவருக்கு வெள்ளைக்காரன் எதிரி. நம் நாட்டை விட்டு விரட்டணும்ன்னு அவருக்குள் வேகம். அவர் தனக்குள்ளிருந்த மிருகத்தைச் சாத்வீகமாய் மாத்தி ஆயுதமாய் ஏந்தினார். வெற்றி அடைஞ்சார். அவர் வழியைத்தான் நான் பின்பற்றேன். அன்பு வெல்லும் புரிஞ்சுக்கோ. ” நிறுத்தினான்.

எனக்கு முத்து மனம்தெரிய. .. ஆடவில்லை அசங்கவில்லை. உறைந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *