“சாரு.. சீக்கிரம் எழுந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு ”
தூங்கிக் கொண்டிருந்த மகளை அன்பாக எழுப்பினாள் நித்யா.
வழக்கத்தை விட அன்று முன்னதாகவே எழுந்து விட்ட நித்யா சாருவையும் எழுப்பி குளிப்பாட்டி பள்ளிக்குச்செல்ல தயார் படுத்தினாள்.
“அம்மா இன்னைக்காச்சும் அப்பா என்ன ஸ்கூலுக்கு கூப்ட்டுப் போவாரா ?”
“நாளைக்கு கண்டிப்பா போகலாம் செல்லம் ”
“எப்பவும் இதான் சொல்ற . ஆனா அப்பா வரதே இல்ல . போ ”
சலித்துக்கொண்டே பள்ளி வேனில் ஏறிச் சென்றாள் சாரு ,
அவள் சென்றவுடன் தலை குளித்து முடித்து பீரோவை அலசி தன் திருமணச் சேலையை எடுத்து மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டு நீண்ட நேரம் தன்னை அலங்கரித்து கொண்டாள். வழக்கத்தை விட அன்று மிக அழகாகத் தெரிந்தாள் நித்யா. காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் இதே தினத்தில் தான் அவளுக்கும் வருணுக்கும் திருமணம் ஆனது. காதல் திருமணம் தான்.
அவள் எதை கேட்டாலும் மறுக்காமல் வாங்கித் தந்து விடும் அவள் அப்பா மூர்த்தியால், வருணைக் கல்யணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்டதையும் மறுக்க முடியவில்லை. மகளின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக் கூடிய பாசத்தந்தை மூர்த்தி. அன்று சொர்க்கத்தையே அடைந்து விட்டது போல் ஆனந்தமாய் இருந்தாள் நித்யா. இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் வெகு விமரிசையாக நடந்தது.
ஆனால் அன்று இருந்த மகிழ்ச்சியில் பாதி கூட இன்று அவளிடம் இல்லை . காரணம் வருண் இல்லாமல் அவள் மட்டும் தனியாக இருப்பது ..
வருண் ..
திறமையான இளைஞன். வறுமையான குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து ,தனது தீராத உழைப்பால் இன்று ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறான். பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்கையின் வெற்றி என நினைக்கும் இந்த காலத்து இளைஞன்.
பணத்தின் மீது அவனுக்கு இருந்த தீராத பற்றின் காரணமாக மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டுமென இரவு பகல் பாராமல் அலுவலகமே கதி என்று கிடந்தான். வார விடுமுறை நாட்களில் கூட வேலை தான். எப்பொழுதும் அர்த்தராத்திரியில் தான் வீட்டிற்கு வருவான். சில சமயங்களில் அதுவும் வர மாட்டான்.
நித்யாவும் வருணும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் தான். திருமணத்திற்குப் பிறகு நித்யா வேலையை விட்டுவிட, வருணுக்கு அதில் துளியும் விருப்பமில்லை . இருவரும் சம்பாதித்தால் தான் பிரச்சனையின்றி வாழ முடியும் என்பது அவன் வாதம். ஆனால் நித்யா சம்மதிக்கவில்லை. குடும்ப நலனே முக்கியமென வாதிட்டாள். பின்பு சாருவும் பிறந்துவிட வேறு வழியில்லாமல் போனது வருணுக்கு .
“வெல்டன் வருண் . உங்களால நம்ம கம்பெனிக்கு நல்ல லாபம் கெடச்சிருக்கு அதனால உங்களை டீம் லீடரா ப்ரோமோட் பண்ணி இருக்கோம்” – மேனேஜர் பாராட்டினார்
“தாங்க்யூ சார் ”
“இன்னும் கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்ணா அடுத்து நீங்க தான் ப்ராஜெக்ட் மேனேஜர் ”
“ஷ்யூர் சார் ”
ஆனந்தக் கடலில் மிதந்தான் வருண். நினைத்த மாதிரி ஒரு வேலை , ஆசைப்பட்ட பெண்ணே மனைவி,அந்த அன்புக்குப் பரிசாக சாரு , கை நிறைய சம்பளம், கார், வீடு, இதோ இப்பொழுது இன்னுமொரு ப்ரோமோஷன் வேறு. உண்மையில் தான் ஒரு சாதனையாளன் என்ற எண்ணமே அவனுக்கு மேலோங்கியிருந்தது . அந்த ஆனந்தத்துடன் நேராக கடைக்குச் சென்று விலை உயர்ந்த பட்டுச் சேலை நித்யாவிற்கும் ,சாருவுக்கு நான்கு கவுன் மற்றும் பல பொம்மைகளும் வாங்கிக் கொண்டான்.
கோவிலில் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிய நித்யாவின் கண்களில் நீர் அரும்பியிருந்தது.. எப்போதும் வருணுடன் கோவிலுக்கு செல்லத்தான் விரும்புவாள். ஆனால் ஒவ்வொரு முறையுமே தனியாகத் தான் வர முடிந்தது அவளால். தான் காதலித்து கல்யாணம் செய்த வருணின் முகத்தைஅவள் சரியாக பார்த்தே பல நாட்களாகின்றன. இதோ இன்று கல்யாண நாள் என்பது கூட நினைவில்லாமல் அலுவலகத்துக்குச் சென்று விட்ட வருணை நினைத்து வெறுமையாகச் சிரித்தாள்.
நேற்று சாருவின் டீச்சர் சொன்னது இன்னமும் கேட்டது அவளுக்கு .
“சாரு நல்ல தான் படிக்கிறா. ஆனா மத்த பசங்களோட சகஜமா விளையாட மாட்றா. எப்பவுமே சோகமா இருக்கா. ஏன்? என்ன பிரச்சனை அவளுக்கு ?”
“ஒண்ணும்மில்லை டீச்சர்”
“குழந்தைங்களுக்குப் படிப்ப விட மன ஆரோக்கியம் தான் முக்கியம் . அதை மொதல்ல பாத்துக்குங்க”
வருணை நினைத்து தான் சாரு ஏங்கி போயிருக்கிறாள் என்று எப்படி சொல்வாள் அவள் ?
வருணுடன் விளையாட ,பைக்கில் ரவுண்டடிக்க, அவனிடம் கதை கேட்க ,அவனை கட்டிப் பிடித்து தூங்க, சாருவுக்குக் கொள்ளை ஆசை. ஆனால் வருணுக்கோ இதெற்கெல்லாம் நேரமே இல்லை . அவனுக்கு எப்பொழுதுமே ஆபீஸ் ஆபீஸ் தான்.
நித்யாவிற்கும் வருண் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டுமென்றுதான் ஆசை. அவள் வளர்ந்த சூழல் அப்படி. தன் அப்பாவிடம் அவளுக்கு அளவு கடந்த பிரியம். வேலையில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் மனம் விட்டுப் பேசுவதில் அது அத்தனையும் பறந்து போகும் அவளுக்கு . வீட்டில் எது நடக்கிறதோ இல்லையோ அப்பா மகள் அரட்டை மட்டும் தவறாமல் நடக்கும். அதில் அவளுக்கு ஒரு மன ஆறுதல் கிடைத்தது.
அதே பழக்கத்தை வருணிடமும் எதிர்பார்த்தாள் நித்யா. தினம் தினம் அதற்காக ஏங்கி, பின்பு ஏமாந்து போவதால் தன் ஆசைகளை அடக்கிக் கொள்ள கற்று கொண்டாள். ஆனால் சாரு? . சிறு குழந்தையாயிற்றே , என்ன புரியும் அவளுக்கு?.
தினமும் சாரு கேட்கும் ஒரே கேள்வி ” இன்னைகாச்சும் அப்பா எனக்கு கத சொல்ல வருவராம்மா?”
“நீ ஒழுங்கா சாப்ட்டு , நல்ல படிச்சா கண்டிப்பா அப்பா வருவார் ”
தினமும் இப்படி ஏமாற்றியே சாருவை தூங்க வைப்பாள். இப்படியாக வருணையும் ,சாருவையும் நினைத்து கடவுளிடம் புலம்பி விட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அன்று வருண் சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான்.
சாரு தூங்குவதைப் பார்த்துவிட்டு நேராக சமையலறையில் இருந்த நித்யாவிடம் வந்தான்.
“ஹாய் நித்யா. இன்னைக்கு என்ன ஸ்பெஷல். சாரு ஏன் சீக்கிரம் தூங்கிட்டா? முகம் கூட ஒரு மாதிரி இருக்கே ?”
“ஒண்ணும்மில்லை அவளுக்கு உடம்பு சரியில்ல அதான் டாக்டர் கிட்ட போய்ட்டு வந்தேன்.”
“ஏன்? என்னாச்சு?”
“அப்புறம் சொல்றேன் . நீங்க என்ன இவ்ளோ சீக்கிரமா வந்துடீங்க?”
“ஒரு சந்தோஷமான விஷயம் நித்யா . “எனக்கு ப்ரோமோஷன் கெடச்சிருக்கு. முன்ன விட நாலு மடங்கு இன்க்ரீமென்ட்! இந்தா ஸ்வீட், புது டிரஸ், உனக்கும் சாருவுக்கும்” – ஆசையாகக் கொடுத்தான் வருண்.
“ரொம்ப சந்தோஷம்ங்க” மேலுக்குச் சிரித்தாள் நித்யா .
“இனிமே தினமும் கொஞ்சம் ஓவர் டைம் வொர்க் பண்ணா பெரிய பொசிஷனுக்கு போகலாம் ,நெறைய இன்க்ரீமென்ட் வரும்னு பாஸ் சொன்னாரு . இன்னும் ஆறு மாசத்துல பாரு நித்யா நாம எங்க போக போறோம்னு ” குதூகலித்தான் வருண் .
அமைதியாக இருந்தாள் நித்யா .
“என்னாச்சு நித்யா ? .. ஏன் ஒன்னும் சொல்ல மாட்ற?”
“வருண் நான் ஒன்னு சொன்னா கோவிச்சிக்க மாட்டீங்களே..?”
“என்ன நித்யா ?”
“இந்த ப்ரொமோஷன வேணாம்னு சொல்ல முடியுமா ?”
என்ன உளர்றே? எவ்ளோ கஷ்டப்பட்டு வாங்கனது , ஈசியா வேணாம்னு சொல்ல சொல்ற. ஏன்?- சீறினான் வருண்.
“இன்னைக்கு டாக்டர் என்ன சொன்னாங்க தெரியுமா ?”
“என்ன சொன்னாங்க?”- கோபம் அடங்காமலே கேட்டான் வருண்.
“சாருவுக்கு ஏதோ மன உளைச்சலாம். அதான் அவ ரொம்ப ஏங்கி போய் இருக்காளாம்”
“வாட் நான்சென்ஸ் ! சின்ன குழந்தைக்குப் போய் என்ன மன உளைச்சல் அது இதுனு சொல்லிட்டு. அவளுக்கு நான் என்ன குறை வச்சேன்? அவளுக்குத் தேவையானதை செஞ்சிட்டு தான இருக்கேன். அவ கேட்ட பொம்மை ,ட்ரெஸ், சாக்லெட் இதெல்லாம் வாங்கி தரலயா? இல்ல நீ தான் அவள பீச், சினிமான்னு கூப்ட்டுட்டு போகலையா? இப்படி தேவைக்கு அதிகமாவே செய்யற குழந்தைக்கு என்ன ஏக்கம் வர போகுது?”
“ஆமாம் வருண். நீங்க அவளுக்கு எல்லாமே வாங்கி குடுத்துருக்கீங்க, நான் இல்லனு சொல்லல. ஆனா முக்கியமான ஒன்னு நீங்க வாங்கி தரலை”
“என்ன அது?”
“அப்பா”
“……..”
“ஆமா வருண் அவளுக்கு தேவை நீங்க தான். உங்க பாசமும் அரவணைப்பும் தான். இந்த பொம்மையும் காரும் இல்ல. உங்கள கட்டி புடிச்சு தூங்கறது, நீங்க சொல்ற கதைய கேக்கறது , உங்க கூட விளையாடறது , பைக்ல போறது, இது ,இதெல்லாம் தான் சாரு ஆசைப்படறது. இதெல்லாம் எப்பயாச்சும் செஞ்சிருக்கீங்களா நீங்க ?”
“இதெல்லாம் நான் செஞ்சா யார் வேலைக்கு போறது? யார் சம்பாதிக்கிறது? நம்ம குடும்பத்துக்காக தானே நான் இவ்ளோ கஷ்ட படறேன் எல்லாம் உங்க சந்தோஷத்துக்காக தான நித்யா?”
“எதுங்க சந்தோஷம்? லட்ச லட்சமா பணம் சம்பாதிக்கிறதா? இல்ல சொத்து சுகம் சேக்கறதா? இல்ல பணக்கார அந்தஸ்த்தோட வாழறதா… இல்லைங்க . சந்தோஷம்ங்கிறது அன்போட நீங்களா எங்களை அரவணைக்கிறதுல இருக்குது, எங்க கூட நீங்க ஆசையா கொஞ்ச நேரம் பேசறதுல இருக்கு, சாருவை நீங்க பாசமா கொஞ்சறதுல இருக்கு . இதுல கிடைக்கிற சந்தோஷத்தை விடவா இந்த சொத்து சுகத்துல கிடைச்சிடப் போகுது? சாருவுக்கு நீங்க ஆசையா கதை சொல்லி ,சாப்பாடு ஊட்டி விடறத விடவா சந்தோஷம் இந்த பொம்மையும் ,சினிமாவும், குடுத்துட போகுது?”
மௌனமாக இருந்தான் வருண். மெல்ல உண்மை விளங்கியது அவனுக்கு.
“நூறு ரூபா சம்பாதிச்சாலும் அது மனசுக்கு நிம்மதி தரணும்ங்க.. அந்த நிம்மதியில்லாம எத்தனை லட்சம் சம்பாதிச்சாலும் அதனால ஒரு பிரயோஜனமும் இல்லையே. இப்படி வெளியில பார்க்க ஆடம்பரமாவும் உள்ளுக்குள்ள உயிரோ, உணர்ச்சியோ இல்லாத ஜவுளிக்கடை பொம்மை மாதிரி ஒரு வாழ்க்கை நமக்கு தேவை தானா வருண்?”
சாட்டையால் அடித்தது போல் இருந்தது வருணுக்கு. பணம்,பணம் என ஓடியதில் தன் மகளின் ஆசையைப் புரிந்துக்கொள்ளாமல் அவளைத் தவிக்க விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் அவன் உள்ளம் துடித்தது. தான் இவ்வளவு சம்பாதித்தும் , குழந்தைக்கு சந்தோஷத்தையும் மனைவிக்கு நிம்மதியும் தர இயலவில்லையே என எண்ணி தன்னையே நொந்துக் கொண்டான் வார்த்தை வராமல் கண்ணீரே பதிலாக வந்தது அவனிடம்..
“இப்ப நீங்க வாங்கற சம்பளமே நமக்கு அதிகம் தான் .இதுக்கு மேல நமக்கு எதுவும் வேணாம்ங்க. நம்ம குழந்தை சந்தோஷம்தான் முக்கியம். அவளுக்காக இந்த ப்ரோமோஷன வேணாம்னு சொல்லுங்க வருண். ப்ளீஸ்”
நித்யாவின் வார்த்தைகள் அவன் அகக் கண்களை திறந்ததால்,கண்ணீர் மல்க கூறினான் வருண்.
“என்ன மன்னிச்சிடு நித்யா. பணம் சம்பாத்திக்கிறது மட்டுமே சந்தோஷம்னு நினைச்சு வேறெதையுமே கவனிக்காம வாழ்ந்துட்டேன் . ஆனா நம்ம குடும்ப நிம்மதிய அடகு வச்சி தான் அந்த பணத்தை சம்பாதிச்சேன்னு நீ எனக்கு புரிய வச்சிட்ட. இனிமே எனக்கு நீயும் சாருவும் தான் முக்கியம் ..உங்களத் தவிர வேறெதுவுமே எனக்கு பெரிசில்லை .”
கலங்கிய கண்களுடன் மனதை திறந்து பேசிய தன் கணவனை ஆசையாக அணைத்து கொண்டாள் நித்யா ..
“என்ன சொல்றீங்க வருண் ?”
“.இதுக்கு மேலயும் என்னால கஷ்ட பட முடியாது சார். எனக்கு இந்த ப்ரோமோஷன் வேணாம்”
“இல்ல வருண். இப்படி ஒரு வாய்ப்பு வேற யாருக்கும் கிடைக்காது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க” – மேனேஜர் வலியுறுத்தினார்
“சாரி சார் . ப்ளீஸ்” – வேகமாய் வெளியேறினான் வருண்.
“ஒரு காட்ல ஒரு சிங்கம் இருந்துச்சாம்.. அந்த சிங்கத்துக்கு…… “
” அப்புறம் என்ன சொல்லுப்பா” – ஆசையாகக் கேட்டாள் சாரு.
சாருவின் பழைய உற்சாகம் திரும்பி விட்டதை கண்ட நித்யா அன்பாக வருணை அணைத்துக் கொண்டாள்.
சாருவின் மழலைச் சிணுங்கல்களை ரசித்தபடி , நித்யாவின் அரவணைப்பில் வாழ்வின் அற்புதத்தை “முதன் முதலாய் ” உணரத் தொடங்கினான் வருண்.
——–இல்வாழ்க்கை இனிதே தொடங்கியது——-