முடிவு நம்ம கையில இல்லீங்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 8,117 
 
 

மைதிலி மருத்துவமனையில் இருக்கிறாள் என்ற செய்தியே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் என்னவென்ன காரணங்களுக்குத் தான் அரளிக் கொட்டையை அரைத்துக் குடிப்பார்கள் என்ற விபரமெல்லாம் சரிவர தெரிவதேயில்லை. அப்போதைக்கு எது எளிதாக கிடைக்கிறதோ அதை அவர்களின் இறப்பை நிறைவேற்றிவிடுமென தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். போன மாதம் ஒரு முட்டாள் பெண் பக்கத்து ஊரில் சீமெண்ணெயை குடித்து விட்டது. அதுவும் மருத்துவமனை சென்று தப்பித்துக் கொண்டது. அது என்ன காரணத்துக்காக சீமெண்ணெயை தேர்ந்தெடுத்து வயிறு ரொம்ப குடித்தது என்பது நான் சொல்லப்போகும் சம்பவத்திற்கு சம்பந்தமே இல்லாதது. எனவே அதை விட்டு விடுவோம்.

பொதுவாக கிராமங்களில் பெண்கள் அரளிவிதையை அரைத்து சத்தமில்லாமல் குடித்து விட்டாலும் கூட யாரோ ஒரு நெருங்கிய தோழிக்கோ தோழனுக்கோ தகவலை சொல்லி விடுகிறார்கள். உயிர் என்பதால் சீக்கிரம் விசயம் பரவி தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வீட்டின் முன்பாக கூட்டம் கூடி விடுகிறது. நாயின் கழிசலை கூசாமல் யாரேனும் கையிலெடுத்து குண்டானில் போட்டு தண்ணீரில் கலந்து வீட்டினுள் நுழைந்து விடுவார்கள். அந்தப்பெண் என்னதான் துள்ளினாலும். வாயை திறக்கவே கூடாதென இறுக்கிக் கொண்டாலும் பயல்கள் விட மாட்டார்கள். எப்படியும் அந்தப் பெண்ணின் வாயினுள் நாயின் கழிசல் கரைசலை ஊற்றி விழுங்க வைத்து விடுவார்கள்.

அந்தப்பெண் சற்று நிமிடத்தில் தன் குடல்களையெல்லாம் வெளியே துப்பி விடுவது போல வாந்தியெடுத்து திரு திருவென முழிக்கும். சன்னமாய் கூட்டம் கலைந்து விடும். பெரும்பாலும் வீட்டில் அம்மா திட்டியது என்றும், காதலனுடன் சண்டை என்றும், தீபாவளிக்கு துணி எடுத்துத் தரலை என்பதற்காகவும் பெண்கள் அரளி விதையை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள். சமீப காலங்களில் ஓரளவு தற்கொலைச் சம்பவங்கள் குறைந்து விபத்துகளின் எண்ணிக்கை தான் அதிகமாகி விட்டன.

மைதிலி அரளிக் கொட்டையைத் தான் அரைத்து குடித்து விட்டதாக அவள் பெரியம்மா சொல்லக் கேட்டு ஊரார் தெரிந்து கொண்டார்கள். இருந்தும் அரசாங்க இலவச வேன் ’கொய்ய்ங் கொய்ய்ங்’கென சப்தமெழுப்பிக் கொண்டு ஊருக்குள் வந்து விட்டது. அரசாங்க மருத்துவமனைக்கு தான் பாடிய கொண்டு போறாங்க! என்று தகவல் சொன்னவன் அவனாகவே முடிவெடுத்து மைதிலியை பாடியாக்கி விட்டான். அதுவேறு எனக்கு கருக்கடையாக இருந்தது. இருக்கும் பிரச்சனையில் இனி இது வேறு.

‘அந்தம்மா உன் பேரைத்தான் சொல்லிட்டு இருந்துச்சு முருகேசா! நீதான் சித்த முந்திப்போயி அந்தப் பிள்ளையை மிரட்டி அடிச்சுப் போட்டு வந்துட்டியாமா? நீ அடிச்சங்காட்டி தான் அது அரளிக் கொட்டையை அரைச்சு குடிச்சுடுச்சாம்ல!’

அடப்பாவிகளா! பாடிங்கறான், சித்த முந்திப்போய் அடிச்சேங்கறான். எப்படி எல்லாம் அரைமணி நேரத்திற்குள் மனிதனுக்கு பீதியாகிறது பாருங்கள். மணி வேறு மாலை ஆறு தாண்டியிருந்தது. ஒருமணி நேரமாகவே எனக்கு பிரச்சனை மேல் பிரச்சனையாக இருக்கிறது. பள்ளிக்கு சென்றிருந்த மீனாவை வேறு காணோம்.

இந்தப் பட்டிக்காட்டில், அப்படி சொல்ல மாட்டாளே கீதா.. ம்! ஒடக்கான் கூட முட்டையிடாத ஊரில் மனுஷி இருப்பாளா? பொழைக்கத் தெரியாத மனுசன் கூட மனுஷி இருப்பாளா? இப்படி தொட்டதற்கெல்லாம் மனுஷி இருப்பாளா? என்று கேட்டுக் கேட்டே போன வருடம் முடியாது சாமி என்று புகுந்த வீடு போய் விட்டாள் கீதா. ஆறாவது முடித்து ஏழாவது சென்று கொண்டிருக்கும் மீனாவைக் கூட இந்த ஒரு வருடத்தில் அவள் பார்க்க வரவில்லை. நகரில் அவள் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சென்று வருவதாக அவள் தம்பி ஒருமுறை சொன்னதோடு சரி.

மைதிலி கிராமத்திலிருந்து ஒன்னரை கிலோ மீட்டரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு இருபது குழந்தைகளை கூட்டிசென்று விட்டு விட்டு மாலையில் அதே போல பள்ளிக்குச் சென்று பத்திரமாக உள்ளூர் குழந்தைகளை வீட்டுக்கு கூட்டி வந்து கொண்டிருந்தாள். காட்டு வேலைக்கு நேரமே அலையும் ஊர்க்காரர்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவதற்கான நேரமெல்லாம் கிடையாது. போக பேருந்து வசதியும் இல்லாத ஊர் இது. பேருந்துக்கு செல்ல வேண்டுமென்றால் இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்தாக வேண்டும்.

இப்படி சிறப்பான ஊரில் படித்த பெண்ணான கீதா எப்படி என்னுடன் குடும்பம் நடத்துவாள்? என் வேலை என்ன என்றே சொல்லவில்லை பாருங்கள்! வேலை இருந்தால் தானே சொல்வதற்கு! பஞ்சு விற்க கிளம்பினால் மழை கொட்டும் என்பது மாதிரி பல வேலைகள் செய்து பார்த்தும் இன்னும் ஒன்றில் கூட உருப்படியாய் இல்லை. இப்போதைக்கு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது மூன்று வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் நான் கணித்த ஜாதகங்கள் வெற்றி பெறவே ஏதோ வெளியூர் வரை கொஞ்சம் பேருக்கு இப்போது பரவியிருக்கிறது. திருமணப் பொருத்தம் பார்ப்பதில் கைராசிக்காரனாகி விட்டேன். இப்போது தான் ஒரு டிவியெஸ் மொபெட் ஒன்றை மூன்றாம் கையாக வாங்கியிருக்கிறேன்.

வீட்டில் அம்மா போய்ச் சேர்ந்து வருடம் மூன்றாகி விட்டது. அம்மா இருக்கும் வரை வீட்டின் பின்புறமிருக்கும் காட்டில் எதாவது போட்டு வளர்த்திக் கொண்டே இருக்கும். மரம் வளர்ப்பதில் அம்மாவுக்கு ரொம்பவே பிரியம். எலுமிச்சை மரம் மூன்று இப்போது காய்ந்து விட்டது. முருங்கை மரம் ஐந்தாறு உருப்படியாய் நிற்கிறது. அப்புறம் அது செய்த எல்லாமும் பட்டுப் போய் விட்டது. தண்ணீர் ஊற்றக்கூட ஆள் இல்லை. வீட்டுக்கு ஒத்தை ஆள் நான். தனித்துக் கிடக்கக் கூடாதென நினைத்துத் தான் கீதா தன்னோடு மீனாவை கூட்டிப்போகவில்லை போல.

என் டிவிஎஸ்சில் அரசாங்க மருத்துவமனை வந்த போது, எப்படா வருவான்? என்றே காத்திருந்தது போல மைதிலியின் பெரியம்மா என்னை பிடியாய்ப் பிடித்துக் கொண்டாள். மைதிலிக்கு எப்பிடி இருக்கு? என்று கூட கேட்க முடியவில்லை.

‘என்னால முடியாது சாமி இவளை இனி ஊட்டுல வெச்சிருக்க! நீ எப்ப வந்து அவளை கையை நீட்டி அடிச்சியோ அப்பவே நீயே இவளை கூட்டிட்டு போயி உம்மட ஊட்டுல வச்சிக்கோ! இவ அப்பனும் ஆத்தாளும் செத்த கையோட என் ஊட்டுல வந்து கிடந்தா! சரி பாவம் எங்க போவாள்னு நான் வச்சிருந்தேன். என் பிள்ளைகளை கட்டிக் கொடுத்து தாட்டி உடவே தாவு தீந்து போச்சு எனக்கு. இப்ப என்னடான்னா நீ புள்ளையக் காணமுன்னு வாசப்படியேறி வந்து இவளை அடிக்கிறே! யாரு கட்டுவா இவளை? நீயே வச்சுப் பொழை!’ அது சத்தம் போட்டுக்கொண்டே போய் விட்டது மருத்துவமனையை விட்டே!

மைதிலி ஒரு பாவப்பட்ட பெண் என்பதால் தான் மாதம் ஒருமுறை ஊராரே ஐம்பது ரூபாயை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மைதிலியின் அப்பாவும் அம்மாவும் ஒரு பேருந்து விபத்தில் இறந்து போனது நான்கு வருடம் முன்பு. அப்படித்தான் இவள் இந்த கிராமத்திற்கு வந்தாள். முப்பது வயதுக்கும் மேலாகக் கூட இருக்கும். பாவம் என்று தான் ஊராரே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவளது பெரியம்மாவுக்கு வீட்டு வேலை செய்ய கூலியில்லாமல் ஒரு பெண் கிடைத்த மாதிரிதான் இவள் வந்து சேர்ந்தாள். எப்படியிருந்தாலும் மீனாவைக் காணோமென்றதும் நேராக இவளைத் தேடித்தான் சென்றேன்.

அவளோ மீனாவை பள்ளியிலேயே காணோமென்றும், அவளது டீச்சரிடம் சொல்லிக் கொண்டு தான் வந்ததாகவும் பேசினாள். இதுவா பதில்? வந்த கோபத்தில் ஒரு அப்பு கன்னத்தில் போட்டு விட்டேன். குழந்தைகளை பத்திரமாய் அழைத்து வருவது தானே இவள் வேலை.

படுக்கையில் மைதிலி ஒரு உலர்ந்த சருகு மாதிரி படுத்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் கண்களில் பொல பொலவென கண்ணீர் கொட்டியது. பாப்பா கிடைச்சிட்டாளுங்களா ஜோசியகார்ரே! என்றாள். இல்லை என்று தலையாட்டினேன்.

‘நான் நீங்க அடிச்சதுக்காக இப்படி செய்யலைங்க! பெரியம்மா நீங்க போன பிற்பாடு கண்டபடி என்னை பேசிடுச்சு! அது எப்பயும் பேசும் தான். இருந்தாலும் இன்னிக்கு ஜாஸ்த்தி பேசிடுச்சு! உயிரோட இருக்கறதுக்கு போயி சாவுடின்னு சொல்லிடுச்சு! நீங்க போலீஸ் ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துடுங்க ஜோசியகார்ரே! நானே உங்க வீட்டுக்கு வந்து சொல்லி ஸ்டேசனுக்கு போலாம்னு தான் இருந்தேன். அதுக்குள்ள என்ன என்னமோ நடந்துடுச்சு!’ என்றாள்.

‘நான் அதுக்குத்தான் வந்தேன் மைதிலி. பொண்ணைக் காணோம்னு ஒரு கோவத்துல அடிச்சுட்டேன்! விவரமான பொண்ணு தான் மீனா! அப்படியெல்லாம் திடீர்னு சொல்லாம காணாமப் போக மாட்டா! அதனால தான் பயமாயிருக்கு. இப்ப நீ வேற இப்படி பண்ணிட்டதால ஊரே என்னை குத்தம் சொல்லும் போல இருக்குது.’

‘அது எங்க பெரியம்மா பண்ண வேலை. அது அப்படித்தான் சொல்லும். நீங்க மொதல்ல போய் ஸ்டேசன்ல கம்ப்ளெய்ண்ட் குடுங்க! அப்புறம் அவ எங்க போவாள்னு யோசனை பண்ணுங்க! டீச்சர் கிட்ட கேட்டதுல மீனா மதியத்துல இருந்தே பள்ளிக் கூடத்துல இல்லைன்னு சொன்னாங்க! சரி வீட்டுக்கு மதியமே தனியா வந்துட்டாளோன்னு தான் நான் நினைச்சு மத்த பிள்ளைங்களோட வந்துட்டேன்.’

‘மைதிலி இப்ப உனக்கு பரவால்லியா? உனக்கு துணைக்கு கூட நிற்க ஆள் இல்லையே! உன் பெரியம்மா உன்னை வீட்டுப்பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிட்டு போகுதே!’

‘எனக்காக கவலப்படாதீங்க நீங்க, எனக்கு இங்க டவுன்ல ஒரு தொண்டு நிறுவனம் இருக்கிறது தெரியும். அங்க அநாதையின்னு சொல்லி நான் சேர்ந்துக்குவேன்.’ அவள் சொல்லச் சொல்ல எனக்குத்தான் அப்படி வருத்தமாய் இருந்தது. இருந்தும் இப்படியான விசயங்கள் நாடு முழுக்க நடந்து கொண்டு தான் இருக்கிறது. தனிமனிதன் அதற்காக என்ன செய்து விட முடியும்? ஸ்டேசன் வரை சென்று வந்து விடுவதாக சொல்லி விட்டு வெளியில் வந்தேன்.

பார்த்தால் என் மச்சினனும் கூடவே என் மகள் மீனாவும் வந்து கொண்டிருந்தார்கள். கீதா வந்திருக்கிறாளா? என்று பார்க்கும் சமயமே அவளும் தூரத்தே வந்து கொண்டிருந்தாள். மச்சினன் தான் எனக்கு விளக்கமாய் சொன்னான். மீனா பயந்து போய் அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

மீனா வயிற்றை வலிக்கிறதென்று மதியமே பஸ் ஏறி விட்டாளாம் அம்மாவை பார்க்க. இப்படி முன்பாகவே இரண்டு முறை பஸ் ஏறியிருக்கிறாளாம். ஆனால் பள்ளி விடும் சமயம் சரியாக திரும்பி விடுவாளாம். இன்று மாத்திரைகள் போட்டும் வலி நிற்காமல் போய் விட்டதாம். என் செல்போனுக்கு தகவல் சொல்ல மச்சினன் அழைத்த போதெல்லாம் அது செத்துக் கிடந்ததாம். அது எப்படி எடுக்கும்? அந்த போன் தான் தண்ணீரில் விழுந்து நாசமாகி விட்டதே! வேறு எண்ணைத்தானே ஆறேழு வருடமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் நான்.

கடைசியாக இங்கே நான் பயந்து விடுவேனென்று கார் போட்டு வந்து விட்டார்களாம். இவன் விளக்கிக் கொண்டு இருக்கையில் கீதா மைதிலியைப் பார்க்க சென்று விட்டாள். அவள் பின்னே மீனாவும் ஓடி விட்டாள். வீடு போய் பார்த்து விட்டு தகவலறிந்து தான் இங்கு வந்தார்களாம். ஒரு வார்த்தை பெற்ற பெண், அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா! என்று சொல்லவில்லை பாருங்கள். எனக்குத் தெரியாமலே முன்பாகவே பேருந்து ஏறிப்போய் அம்மாவை பார்த்து விட்டு வந்திருக்கிறாள் பாருங்கள்.

மச்சினன் இப்படி பொறுப்பாய் என்னிடம் நின்று பேசுவதெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. முன்பாக, வாங்க மாமா! என்று மாமனார் வீடு சென்றாலும் ஒரு வார்த்தை வந்தவனை விசாரிப்பதோடு சரி. மத்தபடி அதிகம் ஒட்டுறவாய் பேசிப்பழக்கம் இல்லாதவன். காலேஜில் அபோது கடைசி வருடம் சென்று கொண்டிருந்தான். இப்போது எங்கோ கம்பெனியில் வேலை கிடைத்து சென்று கொண்டிருப்பதாய் கேள்விப்பட்டிருந்தான். சம்பாதிக்க ஆரம்பித்த்தும் பக்குவம் வந்து விட்டது போலும்.

நல்லவேளை அக்காவை கொடுமைப்படுத்தியவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! சம்பாதிக்க துப்பில்லாதவன் என்று நினைக்காமல் இருக்கிறானே! இப்போதைக்கு மீனாவின் வயிற்று வலி நின்றிருப்பதாகவும் என்ன என்று காலையில் வெறும் வயிற்றில் வந்தால் தான் ஸ்கேன் செய்து பார்த்து சொல்ல முடியுமென்று டாக்டர் சொல்லி விட்டதாகவும் உபரி தகவல் சொன்னான்.

எனக்கு மீனாவை காட்டி விட்டு கூட்டிப் போகும் ஐடியாவில் தான் வந்திருக்கிறார்கள் போல இருக்கிறது இருவரும். சரி மீனா மீது அவளுக்கும் பாசம் இல்லாமலா போய் விடும். கொஞ்சம் நேரத்தில் அவர்கள் வந்த காரிலேயே கிளம்பினார்கள். கீதாவும் மீனாவும் ஒரு வார்த்தை என்னிடம் பேசவில்லை. அட போயிட்டு வர்றேன்னாவது சொல்லிச் சென்றிருக்கலாமே! பெண் பிள்ளைகளுக்கு அப்பாவின் மீது தான் பாசம் அதிகம் என்று எவன் சொன்னான் என்று தெரியவில்லை. சொன்னவனை கூட்டி வந்து ரை என்று ஒன்று விட வேண்டும். தப்பு தப்பாவே சொல்லி வச்சுட்டு போயிடறாங்க சார்.

சரி போகட்டும். நான் மைதிலியிடமே திரும்பி வந்தேன். மைதிலிக்கு இரவு உணவாக என்ன வேண்டுமென கேட்டுப் போய் வாங்கி வர வேண்டும்.

‘ஜோசியகார்ரே! உங்க மனைவி தங்கமா பேசுறாங்க. ஏன் இப்படி பிரிஞ்சு ஆளுக்கு ஒரு திசையில வாழுறீங்க? ஒன்னுமே புரியலை!’ என்றாள் மைதிலி. அவளுக்கு புரியாமல் இருப்பதே சரி.

கீதா முன்னை விட கொஞ்சம் ஒரு சுற்று பருத்திருந்தாள் போல இருந்தது. கம்பெனி வேலை அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அப்பா அம்மாவோடு இருப்பது மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கைநிறைய சம்பளம் வாங்குவது கூட மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எத்தனை மிகிழ்ச்சி இருந்தென்ன? அட மாமனாருக்கும், மாமியாருக்குமா அறிவில்லை. இது தப்பு என்று சொல்லி தாட்டி விடாமல் என்ன பொழப்பு இது? பெண்ணை வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருப்பதற்கு அவளை ஏன் கட்டிக் கொடுக்க வேண்டும்? சரி பெண்ணிடம் கிராமத்திற்கு வாழ்க்கைப்பட்டு போறதுக்கு சம்மதமா? என்றாவது கேட்டிருக்க வேண்டுமல்லவா! கடைசியில் ஒத்தையில் கிடந்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பவன் நானாயிற்றே!

எனக்கு சற்று முன்பு கூட மைதிலியின் துயர நிலையை எண்ணி அவளுக்கு ஒரு வாழ்க்கை கொடுத்து விடலாமா! என்று கூட சிந்தனை வந்தது. பின் ஒரு மனிதன் அதைத் தானே செய்ய முடியும். எத்தனை நாளைக்கு இப்படி? சோதிடம் பார்த்து கணித்து மற்றவர்களுக்கு சொல்பனுக்கே நிலைமையைப் பாருங்கள். தேடி வரும் சாதகமெல்லாம் நன்றாகவே இருக்கிறது. இனி நான் தான் என் ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஒரு நல்ல ஜோதிடரைத் தேடிச் சென்று பார்க்க வேண்டும். இப்படியே வாழ்க்கை கழிந்து விடுமா? என்று.

சரி இப்போது என்ன கெட்டு விட்டது? கட்டின பொண்டாட்டி மருத்துவமனை வந்து விட்டு பேசாமல் செல்கிறாள் என்றால் நானாவது எப்படி இருக்கே கீதா? என்று கேட்டிருக்கலாம். ஒரு வீம்பு தான். கடைசியாக மச்சினன் தன் அலைபேசி எண்ணை கொடுத்து சென்றானல்லவா!. அதற்கு போன் போட்டு ரெண்டில் ஒன்று கேட்டு விட வேண்டும்.

அந்தக் கார் அவள் ஊருக்கு சென்றதென்றால் அதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த சங்காத்தமே வேண்டாம். அப்போது தான் அடுத்தகட்ட நடவடிக்கையை சீக்கிரம் செய்ய முடியும். காலம் பொன் போன்றதாமே! கிழவாடி ஆன காலத்தில் கஞ்சிக்கு கூட வழியில்லாமல் சாவதற்குத் தான் வழி தேட வேண்டும். என்னமோ தெரியவில்லை இந்த மூளை இன்று அப்படி வேகமாய் இயங்க ஆரம்பித்து விட்டது.

மைதிலிக்கு இட்லி பார்சல் வாங்கி வருவதாக சொல்லி விட்டு வெளிவந்தேன். பெண்டாட்டி கீதா ஒரு புரோட்டா ரசிகை. வெளியே டவுன் பக்கம் வந்தால் அவளுக்கு புரோட்டா பார்சலோடு தான் செல்ல வேண்டும். மல்லிகைப்பூ வாங்கிச் சென்றால் சத்தம் தான். இதை தலையில் வைத்துக்கொண்டு ஊருக்குள் இருக்கும் நாலு வீதியையா சுற்றி வருவது? என்பாள். உண்மை தான். இவள் தலையில் பூ வைத்துக் கொண்டு ஊருக்குள் நடந்தால் பார்ப்பதற்கு கூட ஆட்கள் இருக்க மாட்டார்கள். எல்லாரும் வேலை வெட்டிக்கு சென்றிருப்பார்கள்.

ஆனது ஆகட்டும் காரைப் போடுகிற சப்தத்தில் திருப்பி விடலாம் கிராமத்துக்கு, என்று அலைபேசியை எடுத்து விட்டேன். கீதாவோடே வாழ்வா? இல்லை மறுமணமா? எதிர்முனையில் சொல்லுங்க மாமா! என்றான் மச்சினன்.

‘எங்க கார் சத்தத்தையே காணமே!’

‘அதை அப்பலையாவே தாட்டி உட்டுட்டமே! பந்தக்கால்ல சாவி இருந்துச்சு எடுத்து வீட்டை நீக்கிட்டோம் மாமா. அக்கா அடுப்பை பார்த்துட்டு இருக்குது. மீனா பெரிய மனுஷி ஆயிட்டா மாமா! உங்களை கூப்பிடலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே எனக்கு கூப்புட்டீங்க!’, என்றான் மச்சினன்.

இந்தச் சிறுகதை ஒரு தவறான இடத்தில் ஆரம்பமாவதற்கு நானே காரணம். வேண்டுமென்றே தேவையற்ற ஒரு இடத்தில் ஆரம்பமான இந்தக்கதை சுற்றி வளைத்து வந்து முடிகிறது. சொல்லல் முறை ஒன்று மட்டுமே இந்தக்கதையை காப்பாற்றி இருக்கவேண்டும். போக சிக்கலான இடத்தில் ஆரம்பித்து முடிக்க இயலுமா? என்ற முயற்சியை மேற்கொண்டதால் தான் இப்படி! நேரான இடம் எது? என்பது வாசகர்களுக்கு புரியலாம் அல்லது புரியாமலும் போகலாம். ஆனாலும் இப்படி என்னை நானே சங்கடப்படுத்தி எழுதிப் பார்ப்பது நடந்தேறி விடுகிறது.
அன்போடே என்றும்
வா.மு.கோமு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *