இரவு 10 . ௦௦. மணி.
நாளை காலை அதிகால முகூர்த்தம். வரவேண்டியவர்களெல்லாம் வந்து மண்டபம் களை கட்டி இருந்தது.
அதிர்ச்சியில் உறைந்து துடித்த… தணிகாசலம் தொங்கிப் போன முகத்தோடு மணமகன் அறைக்குச் சென்றார்.
வாசலில் நின்றார்.
சிவா நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தான்.
அழைக்கவே தயக்கமாக இருந்தது.
“சி…சி…வா !! “அழைத்தார். துக்கம் தொண்டையை அடைத்தது.
“என்னப்பா..? “எழுந்து வெளியே வந்தான்.
அப்பாவின் கலவரமாக முகத்தைப் புரியாமல் பார்த்தான்.
“ஒ… ஒரு விசயம்..”
“சொல்லுங்க…?”
“மணப்பெண்ணை ஏத்தி வந்த கார் லாரி மோதி….”அதற்குமேல் முடிக்க முடியாமல் வாயில் துண்டை வைத்து அழுத்திக்கொண்டு விம்மினார்.
“அப்பா…ஆ …!!… அலறினான்.
“ம…மணப்பெண் அந்த இடத்திலேயே காலி. பெண்ணைப் பெத்த தாய், தகப்பன், உறவு சனம் எல்லாரும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடியிருக்காங்க….”
சிவா சிலையாக நின்றான். அவனுக்குள் அவள் முகம் நிழலாடியது.
சின்னம் முகம். சிரித்த வாய். அகல கண்கள். ஆரஞ்சு உதடுகள். எடுப்பான நாசி. ஒடிந்து விழும் இடை. அரைத்த சந்தனத்தில் பொன்னைக் கலந்த நிறம். மகாலட்சுமி என்கிற பெயருக்கு ஏற்றால் போல் தெய்வீக களை சொட்டும் மங்கள முகம்.
தணிகாசலம் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
மெல்ல அவர் அருகில் வந்த மனைவி சரஸ்வதியும் வழியும் கண்ணீரைத் துடைத்து…
“என்னங்க..! திருமணத்தை நிறுத்த வேண்டியதுதானா..? ! “தொண்டை கரகரத்தாள்.
“வேற வழி..?”
“மண்டபம் வரைக்கும் வந்து இப்படி நடந்து திரும்பிப்போனா… நாளைக்கு நம்ப பையனோட எதிர்காலம்…?”
என்ன சொல்ல…? மெளனமாக நின்றார்.
“பையனுக்குத் தோசமிருக்கு. அதனால… இவன் எந்த பொண்ணைப் பார்த்து பேசி முடிச்சாலும் தொட்டு தாலி கட்டுறதுக்கு முன்னாடி இப்படித்தான் நடக்கும் . அப்படி இப்படின்னு பெயராய்ப் போய்…”முடிக்க முடியாமல் விம்மினாள்.
“அதெல்லாம் பிறகு பார்ப்போம்…”தணிகாசலம் குரல் விரக்தியை வந்தது.
“செத்துப் போனவள் தங்கச்சியைக் கேட்டு இப்பவே முடிக்கலாமா..?”
“எப்படி எப்படி முடியும்.. சரசு..? அங்கே அக்காள் பிணமகள். இங்கே தங்கை மணமகள். இந்த நேரத்துல இது சரியா..? சாத்தியமா..? இப்போ பெண்ணைப் பெத்தவங்களை இப்படி கேட்பதுதான் முறையா..? “பார்த்தார்.
“நம்ம பையன் வாழ்க்கையையும் நாம பார்க்கனும்ங்க..”
“ச்ச்சூ…. “என்று அதட்டி அவள் வாயை அடைத்தவர் அருகில் யாரோ வர… பார்த்தார்.
இறந்தவளின் சித்தப்பா புண்ணியமூர்த்தி !
இவர்கள் அருகில் வந்து நின்று…
“கவலைப்படாதீங்க.. முகூர்த்தம் நடக்கும்..! “மெல்ல சொன்னார்.
சடக்கென்று சரஸ்வதி காதில் தேன் பாய்ந்தது. வயிற்றில் பால் வார்த்தது.
“என்ன சொல்றீங்க சம்பந்தி…? “நம்பமுடியாமல் ஆவலாய்க் கேட்டாள்.
“ஆமாம் நடக்கும். உங்க பையனோட வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கலை. அவள் தங்கச்சிக்கு கொடுத்து வச்சிருக்கு.”புண்ணியமூர்த்தி விசயத்தை உடைத்தார்.
“ஐயா…ஆ… ! “தணிகாசலமும் நம்ப முடியாமல் வாயைப் பிளந்தார்.
“அது பாட்டுக்க அது. இது பாட்டுக்க இது. வேற வழி..? இந்த எதிர்பாராத திடீர் அசம்பாவிதத்தால் முகூர்த்தத்தை நிறுத்தறது யாருக்கும் நல்லதாய்ப் படலை. அதில் விருப்பமுமில்லே.”அவர் குரல் கறாராய் வந்தது.
“ஒன்னும் அவசரமில்லே. வேற நாள் பார்த்து வைக்கலாம்…”தணிகாசலம் சொன்னார்.
“இவ்வளவு ஏற்பாடுகளும் வீணாகிப் போகும். மறுபடியும் முதல்லேர்ந்து ஆரம்பிக்கனும். இப்படி நாலையும் யோசித்துதான் ஒரு சிலரை மட்டும் அங்கே அனுப்பிட்டு மத்தவங்க இங்கே நின்னோம். திருமணத்தை நிறுத்தாமல் முகூர்த்த நேரத்தில் தாலியைக் கட்டி முடிச்சிட்டு மத்தக் காரியங்களை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.”
‘ என்ன தெளிவு ! யோசனை !! ‘ தணிகாசலத்திற்கே பிரமிப்பாக இருந்தது.
சரசுவதியின் சோக முகத்தில் திருப்தி.
எல்லாவற்றையும் கேட்ட சிவா…
“மாமா ..! “அழைத்தான்.
“என்ன மாப்பிள்ளை..?”
“இந்த ஏற்பாட்டில் சின்ன மாற்றம்…”
“சொல்லுங்க..?”
“செத்தவள் கழுத்தில் நான் தாலி கட்டனும். கணவன் என்கிற முறையில் நான் அவளுக்குக் காரியங்கள் எல்லாம் செய்யனும்..”
“மாப்ளெ…”அவர் அதிர்ந்தார்.
“ஆமாம். அதுதான் சரி. முறை.! நான் கணவன் என்கிற நினைவிலேயே அவள் செத்திருப்பாள். அவள் ஆன்மா சாந்தியடைய நான் இதை செய்தே ஆகனும்..”
‘எப்பேர்ப்பட்ட உள்ளம் ! நினைவு !! ‘ – அசந்து போன அவர்…
“நீங்க சொல்றது சரி. உங்க உள்ளம் தங்கம் . நீங்க மருமகனாய் அமையறது எங்க பாக்கியம். “என்ற புண்ணியமூர்த்தி…கொஞ்சம் இடைவெளி விட்டு…
“தம்பி ! முகூர்த்தம் முடிந்த கையோட அடுத்த காரியமா அதைச் செய்யலாம்.”தன் யோசனையைச் சொன்னார்.
சிறிது நேரம் அமைதியாய் இருந்த சிவா….
“ச..ரி …”மெல்ல தலையசைத்தான்.
சுற்றி நின்ற அனைவரின் முகங்களிலும் திருப்தி, நிம்மதி.!!