கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 5,763 
 
 

சுவாசிக்கும் காற்றே நுரையீரலை அறுப்பதான குளிர். அது ஒஸ்த்மார்க்காவின் நடுப்பகுதி. பச்சைமரங்கள் வெள்ளையாகிப் பனி துருத்திக்கொண்டு நிற்கும் கோலம். வெள்ளைக்குள்
ஒளிக்கவேண்டிய வில்லங்கமான நேரம். அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ஐம்பது மீற்ரர் தொலைவில் உலாச் செல்லும் பாதை. அந்தப் பதை தெரியாதவாறு சிறிய குன்றும் மரங்களும் மறைப்பாக. இவர்கள் தங்கும் இடத்திற்குப் பக்கத்தால் ஒற்றையடிப் பாதை ஒன்று. அந்த ஒற்றையடிப் பாதையோடு ஒட்டிய மறைவான இடத்தில் இவர்கள் இரகசிய இருப்பு. இப்படி இருப்பதுதான் இன்று பாதுகாப்பு தரும் என்று சுதன் எண்ணிக்கொண்டான். சுதனுக்குச் சலிப்புத் தட்டியது. நாட்டில் இருந்து ஓடத்தொடங்கிய கால்கள் இன்னும் ஓயவில்லை. சில ஈழத்தமிழருக்கு ஓடுவதே வாழ்க்கை ஆகிவிட்டது. தானும் அதில் ஒருவன் என்கின்ற ஆற்றாமை அவனுக்கு.

சொரு சொரு என்று தோல் உறைந்து போகும் வேதனை. உறைந்த தோல் வெடிப்பதான உணர்வு. வீட்டில் குசன் மெத்தையில் டீனரைப் போர்த்துக்கொண்டு படுக்க வேண்டிய நேரம். தலையைக்கூட மூடிக்கொண்டு படுப்பது அபினேசின் பழக்கம். இங்கு பிறந்து வளர்ந்தாலும் அவனுக்குக் குளிர் என்றால் ஒருவித பதட்டம். நிறைய உடுப்பு அணியாது அவன் வெளியே புறப்படுவதில்லை. இன்று காரில் உலாப் போவதுதானே என்கின்ற எண்ணத்தில் வழமையாக அணியும் ஆடைகளில் அரைவாசி அவன் அணிந்திருந்தது மாலதிக்குக் கவலை தந்தது. சுதன் யோசித்துக் கொண்டே இருந்தான். தனது மகனையும் மனைவியையும் மற்றவர்கள் போல் வாழ வைக்க முடியாத அதிஸ்ரத்தை எண்ணி அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். வாழ்க்கை என்பது சிலருக்கு விபத்துகளாய் இருக்கும். சிலருக்கு அதிஸ்ரலாபச் சீட்டைப் போல இருக்கும். சுதனது வாழ்க்கை விபத்தாகியது. அதில் அவனது மொத்தக் குடும்பமும் சிக்கிக் கொண்டது. அதிஸ்ரம் வரும் என்கின்ற அவன் நம்பிக்கை உறைந்து போய்விட்டது. சூது விளையாடிய ஈழத்தமிழினமும் அதில் பிறந்த நாங்களும் என்பதாகச் சுதன் அலுத்துக் கொண்டான்.

அந்த நடுக்காட்டில்கூட அங்கும் இங்குமாக மனித நடமாட்டம். இயற்கையை விரும்பும் இந்த மனிதர்கள் எங்கும் கால்பதித்த தடங்கள். இருட்டிய பின்பும் பயமற்று உலாப் போகும் உல்லாச மனிதர்கள். அவர்கள் போகும் சத்தத்தைக் கேட்க சுதனுக்கு மருட்சி. யாராவது கண்டு காவலோடு தொடர்பு கொண்டால் தங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்கின்ற கிலி. அவன் சிறிது பின்னால் நகர்ந்து கொண்டான்.

அபினேசைப் பார்த்த சுதன் தனது மேலங்கியைக் கழற்றி அவனுக்கு அணிவித்தான். அபினேஸ் அதற்கு மறுப்புத் தெரிவித்தான். அதை அவன் பொருட்படுத்தவில்லை. குளிர் சய பதின்மூன்றில் நின்றிருக்கும். அது உடலின் வெப்பத்தை உறிஞ்ச இரத்தம் குளிர்ந்து போவதைச் சுதனால் உணர முடிந்தது. கால்கள் விறைக்கத் தொடங்கிவிட்டன. மலைப்பாம்பு போல குளிர் அப்படித்தான் விழுங்கத் தொடங்கும். ஒரு கட்டத்திற்கு மேல் நாங்கள் நினைத்தாலும் அதில் இருந்து தப்பிவிட முடியாது. ஒரு அங்குலம்கூட நகர்ந்து கொள்ள முடியாது. மலைப்பாம்பு காலை சுற்றத் தொடங்கியது.

நடந்து திரிந்தால் உடல் சூடாக இருக்கும். மரங்களின் பின்னால் ஒளிந்து இருக்கும் இடத்தை விட்டுவிட்டு வெளியே செல்லச் சுதனுக்குப் பயமாக இருந்தது. இந்தப் பாதுகாப்பான இடமும் பறிபோனால் என்கின்ற பதட்டம் அவனிடம்.

இருட்டிய பின்பு வெளிநாட்டவர்கள் காட்டிற்குள் நிற்பது சந்தேகத்தைத் தரலாம். இன்று யார் கண்ணிலும் படாமல் இருப்பதுதான் மிக முக்கியமெனச் சுதன் எண்ணிக் கொண்டான்.

ஒரு நல்ல வாழ்வைத் தனது குடும்பத்திற்குக் கொடுக்க முடியாத வருத்தம் அவனுக்கு. தனது மகனையாவது பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவனது ஆதங்கம். இன்றைய இரவு இந்தக் குளிரில் உயிர்வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் மீண்டும் அவனைப் பயமுறுத்தியது. பனியைத் தோண்டிக் குகை அமைத்துத் தங்கி இருக்கலாம். அதற்கும் சவள் கொண்டு வரவில்லை.

இப்படியும் நடக்கலாம் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். எதிர்பார்க்கவில்லை. அசண்டையீனமாய் இருந்துவிட்டாய் என்கின்ற குற்ற உணர்வு அவனை நோண்டியது. குகையமைத்துத் தங்கினால் குளிர் அதிகம் பாதிக்காது. திறந்த வெளியில் தங்குவது ஆபத்து. அதற்கு மாற்று வழி காணமுடியாதவனாய் அவன் தவித்தான்.

சுதன் தங்கி இருந்த வீட்டிற்கு அவர்கள் திடீரென்று வந்து நிற்பார்களென எவரும் எதிர் பார்க்கவில்லை. நல்ல வேளையாகச் சுதன் மகனோடும் மனைவியோடும் கடைக்குச் சென்றிருந்ததால் பிடிபடவில்லை. அவர்கள் வந்து போன பின்பு அமுதன் போன் பண்ணி அந்தச் சுரங்கரத நிலையத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறினான். அவன் வீட்டிற்கு இவர்கள் திரும்பிப் போக முடியாது. அது ஒருவருக்கும் சாதகமாய் அமையாது.

அந்தச் சுரங்கரத நிலையத்தில் அவனைச் சந்தித்த போதுதான் அவர்கள் தேடி வந்ததையும், இனி தனது குடும்பம் அங்கே தங்குவது பாதுகாப்பில்லை என்பதையும் சுதனால் அறிய முடிந்தது. இன்று அமுதனுக்குப் பின்னேர வேலை. வேலைக்குப் போகவேண்டி அவதியில் அவன் நெளிந்தான். வீட்டில் தங்குவது ஆபத்து. அதனால் இரவுப் பொழுதை வேறு எங்காவது இரகசியமாய் கழிக்க வேண்டும் என்பதாக அவன் அறிவுரை கூறினான். நாளைக் காலை வந்து மூவரையும் அழைத்துச் சென்று துறண்கெய்ம்மில் உள்ள தனது நண்பன் வீட்டில் விடுவதாக உறுதியளித்தான். பின்பு எல்லோருமாய் சேர்ந்து எப்படி இதைச் சமாளிக்கலாம் என்று யோசிப்போமென அவிப்பிராயப்பட்டான்.

சுதனுக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. பின்பு அவன் கூறுவதில் உள்ள உண்மை விளங்கியது. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு அமுதனை அதே சுரங்கரத நிலையத்திற்கு வருமாறு கூறினான். பின்பு அங்கிருந்த கடையொன்றில் சாப்பிடுவதற்கு வணிசும் குடிப்பதற்குக் கோலாவும் வாங்கிக்கொண்டான்.

பிரதான சாலையைத் தாண்டி காட்டுப்பக்கம் நடக்கத் தொடங்கினார்கள். வெளி நாட்டவர் இங்கே காட்டிற்குள் உலாப் போவது இலங்கையில் வெள்ளைக்காரரை வயலில் பார்ப்பது போல. மூவரும் நடந்தார்கள்.

நடக்கும் போது குளிரவில்லை. உலாத்து நன்றாகவே இருந்தது. நடையை நித்திய பின்பு அந்த உல்லாசம் தலைகீழாக மாறிவிட்டது.

வாங்கிவந்த கோலா இப்போதே அரைவாசி உறைந்து போயிற்று. வணிஸ் மென்மை இழந்து கல்லாகிப் போனது. மாலதி சாப்பிடவில்லை. சுதனாலும் சாப்பிட முடியவில்லை. அபினேஸ் சிறிது சாப்பிட்டான். கோலா குளிர்ந்ததால் குடிக்கவில்லை. நெருப்பு மூட்ட முடியாது. அதுவே தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்கின்ற பயம். குளிர் மலைப் பாம்பாக காலை விழுங்கி மேலே நகரத் தொடங்கியது. சுதன் காலை உதறிக்கொண்டு எழுந்து, நின்ற இடத்தில் நின்றபடி லெப் றைற் போட்டான்.

இப்படி இன்று இங்கே ஒளிந்திருக்கத் தேவையில்லை. எல்லாம் அரசியல். நோர்வேயின் உச்ச நீதிமன்றம் பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்திருந்தாலும் அவர்களைத் திருப்பி அனுப்பலாம் என்று தீர்ப்புக் கூறியிருந்தது. அதற்குப் பிறகுதான் கோழி பிடிப்பது போல அகதிகளைப் பிடிக்கிறார்கள். பிள்ளைகள் இங்கே பிறந்ததோ, அல்லது நோர்வேயை தாய் நாடக எண்ணிப் பல ஆண்டுகளாக வாழ்வதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. இந்தப் பிள்ளைகளுக்கு தெரிந்த ஒரேயொரு மொழி நேர்வே மொழிதான். இந்த பிள்ளைகளுக்குத் தெரிந்த ஒரேயொரு கலாச்சாரம் நோர்வேக் கலாச்சாரம்தான். அதைக்கூட ஊத்தொய்யாவிற்காக அழுத மனிதர்கள் மறந்து போய்விட்டார்கள். அரசியலுக்காய் கண்ணீர் விடுபவர்கள் மனிதாபிமானத்தின் மேல் வெந்நீர் ஊற்றுகிறார்கள்.

இந்தப் பிள்ளைகளை எந்தத் தொடர்பும் இல்லாத ஏதோ ஒரு நாட்டிற்கு நாடுகடத்தலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையைப் பற்றிப் பெற்றோர்கள்
மட்டும்தான் கவலைப்பட வேண்டும் என்கிறது அது. வாக்கு வேட்டையில் விழுந்த அரசியல்வாதிகள் மனிதத்தையே தொலைத்து விட்டார்கள். வெறுப்பு என்னும் விசம் மெல்லப் பரவுகிறது. நீதித்தராசில் மனிதாபிமானம் நிறையற்றுப் போய்விட்டது. நீதிபதிகளுக்கும் சட்டத்தை வளைத்து மனிதம் காண்பதில் இன்று சலிப்பு உண்டாகிவிட்டது.

இன்றைய இரவுப் பொழுது விரைவாகக் கழிந்துவிட வேண்டும். எங்கு ஒளிந்து இருப்பது என்றாலும் பருவாய் இல்லை. இப்படித் திறந்த வெளியில் குளிருக்குள் அகப்பட்டிருக்கக் கூடாது. காலம் சரியில்லை. அலமலக்கத்தில் மூளை நன்றாக வேலை செய்யவில்லை. அகப்பட்டாயிற்று. சமாளித்துக்கொள்ள வேண்டுமெனச் சுதன் எண்ணிக்கொண்டான். மாலதியும் நல்ல உடுப்பு போடவில்லை. கடைக்குப் போகும் போது அமுதனின் மனைவி அவர்களை காரில் அழைத்துச் சென்றாள். வரும்போது மட்டும்தானே என்கின்ற அலட்சியத்தில் அவள் மெல்லிய சுவேட்றர் அணிந்துகொண்டாள். அவளது மேலங்கியும் மலிவு விற்பனையில் வாங்கிய மட்டமான பொருள். இந்தக் குளிரைத் தாங்காது என்பது புரிந்தும் தாங்க வேண்டும் என்பது அவன் பிரார்த்தனை ஆகிற்று.

‘என்ர ஜக்கெற்றப் போடுங்கப்பா. ஜக்கெற் இல்லாமல் எவ்வளவு நேரம் நிப்பியள்? விறைச்செல்லே சாகப்போறியள்.’

‘ம்… உன்ர கன்சரே உனக்கு ஒழுங்கா இல்லா. நீ மாத்திரம் ஜக்கெற்றில்லாமல் படுப்பியே? என்ர கன்சர் எண்டாலும் பருவாய் இல்ல. பேசாமல் படு. காலக் கையை ஆட்டிக்கொண்டு படு… குளிர் ஏறாமல் இருக்கும்.’

‘உங்க ஏதும் கித்தை இருக்காதே அப்பா?’

‘அவன் படுத்திட்டான். எங்க இருக்குமோ தெரியாது. யாரும் கண்டாலும் சந்தேகப் படுவினம்.’

‘எனக்கு ஏதோ பயமா இருக்கப்பா. இந்தக்குளிரிக்க… இந்த காட்டிற்க…. எவ்வளவு நேரம்…?’

‘பயப்பிடாத இன்னும் ஒரு ஆறு எழு மணித்தியாலம். விடிஞ்சா எழும்பி நடந்து திரிவம். அப்ப கொஞ்சம் உடம்பும் சூடா இருக்கும்.’

‘நல்ல காலம் பனிகொட்டேல்ல.’

‘அதுக்குப் பதிலா திறந்த வானமா இருக்குது. அதுதான் இப்பிடிக் குளிருது.

ஒண்டில்லாட்டி இன்னொண்டு பிரச்சனையா இருக்குது. சீ எங்களுக்கு எல்லாமே பிரச்சனையாத்தான் இருக்குது.’

‘ஓமப்பா… நீங்கள் சொல்லுறது உண்மை. முதல் இந்த இரவு விடியோணும்.’

‘ம்… போசாதையும். வாயத் திறந்தாலே உடம்பின்ர வெக்கை போயிடும்.’

‘ம்… ஒன்பது ஓட்டை.’

‘ம்…’

அதன் பின்பு அவர்கள் பேசிக் கொள்ளவில்லை.

இரவு நெடியதாக… கொடியதாக…

அடுத்த நாள் காலை…

காடே அதிரும்படி அபினேசின் ஓலம் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *