கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 10,824 
 
 

“இவடத்தில துறையடிக்குப் போய், அம்பது ரூபாக்கு என்னெண்டாலும் மீன வாங்கித்து வாங்க!’ என்று ஐம்பது ரூபா நோட்டைக் கணவனிடம் நீட்டினாள் மனைவி பொன்னம்மா, அதை வாங்கியவர் அவளிடம் சொன்னார்.

‘இந்த நாளையில அம்பது ரூபாக்கு ஆர் மீன் தரப்போறானுகள்?’ கெளுத்தி மீனும் வாங்கேலா!’

“நீங்க என்ன கத கதைக்கிaங்க? நேத்து முந்தனாத்தெல்லாம் துறையடியில சரியான மீனாமே! அம்பது ரூபாக்கு ரெண்டு சூரன் மீன் குடுத்தவனுகளாமே! இதால நம்மட றோட்டால வாங்கித்துப் போன சனமெல்லாம் சொன்னதுங்கள்!”. “நேத்து முந்தனாத்தெல்லாம் கந்தசஸ்டி விரதமெலுவா! விக்காமக் கிடந்த நாத்த மீனெல்லாத்தையும் அள்ளிக் குடுத்திருக்கிறானுக’ ‘உங்கட கதையும் நீங்களும்! இவர் நாகலிங்கத்தார்ட கரவலையில உம்பாரமான சூரமீன் பட்டு சனத்துக்குக் குடுத்ததுபோக மிச்சத்தையெல்லாம் உழவு மெசின் பொட்டியில ஏத்திக்கொண்டு போனவனுகளாம்’. “அத நானும் பாத்தனான் தான். சூரன் மீன் மட்டுமில்ல சாளச்சூட, அறலி மீனெல்லாம் பட்டு கடக்கரை நீளத்துக்கும் கருவாடு போட்டிருக்காங்களாம்’”

“பாத்தீங்களா! இன்டைக்கும் கரவலையில மீன்படும், சுணங்கித்து நிக்காமக் கெதி பண்ணிப் போங்க!”

“நேத்துப்பட்ட மீன்போல இண்டைக்கும் படுமென்டுற என்ன நிச்சயம்? இது என்னவோ கடலுக்கடியில பூமி நடுக்கும் உண்டாகப் போகுதுபோல கிடக்கு. அதுதான் மீனெல்லாம் இவ்வளவு பெருவாரியாககர ஒதுங்கியிருக்கு. சுனாமி வாற அறிகுறி மீனுக்கெல்லாம் நல்லாத் தெரியுமாமே!’

“இதென்னப்பா நீங்க மீன வாங்கித்து வரச் சொன்னா நீங்க சுனாமி அது இதெண்டு பூச்சாண்டி காட்டுறயள்?” கிழம் புடிச்ச எனக்கு மச்சத் தண்ணியோட சோறு தின்னோணும் போல சோட்டையா இருக்கு. இஞ்ச காசக் கொண்டாங்க பாப்பம் நான் போய் வாங்கித்து வரப்போறன்”

இப்படி கணவர் பொன்னரும், மனைவி பொன்னம்மாவும் பேசிக் கொண்டிருந்த போது அங்கே திராய் விற்பனை செய்யும் ‘செண்பகப் பெத்தா’ உரபேக் நிறைய திராயைக் கட்டித் தலையில வைத்துச் சுமந்தபடி ‘திராய்விராய்’ என்று சத்தம் போட்டப்படி வந்தாள்.

“என்ன பெத்தா, ரெண்டு மூணு நாளா இந்தப் பக்கமே ஆளக் காணல்ல? பாரத்தக் கீழ இறக்கன்” என்றாள் பொன்னம்மா.

“ஒம்புள்ள திராய்புடுங்க தூரத்துக்குப் போக வேணும். இப்ப வெள்ளாமச் செய்யிறதால அங்கெல்லாம் போக ஏலா! இவடத்த திரும்பெரும் துறப்ப பக்கம் போய்க் கிடந்த தப்புடுங்கித்து வாறன்” என்றபடி உரபேக்கை அவிழ்த்தாள். அதற்குள்ளே சொப்பிங் பேக்குகளில் திராயைப் பக்குவமாகக் கட்டி வைத்திருந்தாள்.

“ஒரு பேக் எவ்வளவு பெத்தா?”

“இருபது ரூபாபுள்ள. நான் என்ன செய்யட்டும் புள்ள. இதாலதான் என்ட சீவியம் ஓடுது. வெள்ளாமச் செய்யிறதால அதுவும் கெட்டுப் போயித்து”

“எனக்கொரு பேக் தாங்க”

பேக்கை பொன்னம்மா வாங்கிக் கொண்டு அதற்கான பணத்தை எடுத்துவர வளவிற்குள் போனாள்.

“என்னம்பி, இப்ப வேலைக்குப் போறல்லையா?”

“இல்ல பெத்தா. எங்கட வேலத் திட்டம் முடிஞ்சி பொயித்து, இன்னும் ரெண்டொரு மாசத்தில வேறவேல வரும். அது வரைக்கும் வீட்டதான் நிக்க வேணும்” என்றான் பொன்னன்.

“நேத்து முந்தனாத்தெல்லாம் இஞ்சால உங்கட பக்கம் நல்ல மீனாமே! நீங்க வாங்கல்லயாம்பி?”

“இங்க இவள் விரதம், அதால நீட்டுக்கும் ஒரே மரக் ககறிதான். இண்டைக்காவது மச்சம் கூட்டுவமென்றால் மீன் வாங்கிற பெரும்பாடாயிருக்கு! மீன் விற்கிற மாதிரியா விக்கிறானுகள்? தங்கம் வாங்கினாலும் மீன் வாங்கேலா”

“ஓண்டாம்பி, வாய்க்குக் கைக்கு ருசியாக ஒரு மீனை வாங்கித் தின்ன எனக்கு ஒரே ஆசை. எப்பிடி வாங்கிற தெண்டுதான் யோசிக்கிறன்”

“நேத்து வாங்கியிருக்கலாம்”

“ஓண்டாம்பி தப்ப உட்டுத்தன். காச றெடியா வச் இருக்கன். இப்பிடியான நேரத்தில் அண்டையப் போல மீன்புடிபட்டா விருப்பம் போல ஒண்ட வாங்கிருவன்”

இவ்வேளை பொன்னாச்சி திராய்க்கான பணத்தைக் கொண்டு வந்து பெத்தாவிடம் கொடுத்தாள். அப்போது இரண்டு மூன்று பெடிகள் கைகளில் இரண்டு மூன்று சூரன் மீன்களைத் தூக்கிக் கொண்டு உஷாராக நடந்து வந்தார்கள்.

“இந்த மீனெல்லாம் எவ்வளவுக்குடா வாங்கி வாaங்க?” என்று பொன்னாச்சி ஆவலோடு கேட்டாள்.

“கரவல இழுத்ததுக்குக் கரவல முதலாளி சும்மா தந்தவர். துறையடியில போய்ப் பாருங்கவன் மீன் கும்பத்த” என்று சொல்லியடியே அந்தப் பெடிகள் வேகமாக நடந்தார்கள்.

“சுனாங்கித்து நிக்காம நீங்களும் ஓடுங்க. இந்தாங்க காசி”.

பொன்னாம்மா பணத்தைக் கொடுத்து, மீண்டும் கணவனை உஷார்படுத்தினாள்.

பொன்னர் மறுபேச்சுப் பேசாமல் துறையடியை நோக்கி வேகமாக நடந்தார்.

“இருங்கபுள்ள. நானும் போய் ஒரு பெரிய மீனாப்பாத்து வாங்கப் போறேன்” என்றபடி பெத்தா, திராய் பேக்கைச் சுமந்தபடி விறுவிறுவென நடந்தாள்.

அந்த அளவில் பொன்னம்மா வந்து, குசினிக்குள் கொறுக்கா இருக்கிறதா என்று பார்த்தாள்.

கடல் மீன்களுக்குக் கொறுக்கா போட்டுச் சமைத்தால்தான் ருசியாவிருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். போத்தல் நிறையக் கொறுக்கா இருந்தது.

இனி மீனை பொன்னார் கொண்டு வருவதுதான் பாக்கி.

அவர் வரும் வரைக்கும் திராயை எடுத்துக் கந்தப் பார்த்தாள்

குசினிக்குள் இருந்தபடியே அவள் கண்கள் பனை மட்டை வரிச்சியின் ஊடாக தெருவையே பார்த்துக் கொண்டிருந்தன.

அப்படி ஒரு பாடாக பொன்னர் இளைக்க இளைக்க கைகளில் இரண்டு பெரிய சூரன் மீன்களைப் பிடித்தபடி வந்து சேர்ந்தார்.

“இந்தாபுடி உன்ட கலிதீர வெட்டி ஆக்கு”

“இதென்னத்துக்கப்பா இந்தப் பெரிய ரெண்டும் மீனும்?”

“ஒண்ட இண்டைக்கு வெட்டி ஆக்கு. மத்தத வெட்டி அவிச்சிவை. நாளைக்கு உதவும் தானே!”

“ரெண்டு மீனும் எவ்வளவு”

“கரவல முதலாளி சும்மாதான் தந்தவர். எனக்கு மட்டுமில்ல பொன்னம்மா அங்க நிண்ட எல்லாருக்கும் சும்மா தான் குடுத்தவர். இது எங்கதான் கிடந்து வந்த மீன் கிளையோ தெரியா! என்ட சீவியத்துக்கும் இப்படி மீன்புடிபட்டத நான் கண்டதே இல்லை”

“ஏன் சுனாமிக்கு முதலும் புடிபட்டதானே”

“இது நல்லதுக்கில்ல. என்னவோ ஆபத்து வரத்தான் போகுது”

‘வந்தா வரட்டும். நாமதான் என்ன செய்யிற! அதுக்கு முதல் மீன் வெட்டி ஆக்கித் தின்னும். அதுசரி, இவசெண்பகப் பெத்தா மீன் வாங்க வாமெண்டு ஓடி வந்தாலே வாங்கித்தாவா?”

“கரவல முதலாளி அங்க நீண்ட சனங்களுக்குச் சும்மா குடுத்த பிறகு, மிச்சத்தையெல்லாம் யாவாரிமார்களுக்கு நிறுத்துக் குடுத்துப் போட்டார். அவனுகள் உழவு மெஷினில புள்ளா ஏத்திப் போட்டானுகள். அப்ப மெசினுக்குப் பக்கத்தில் செண்பகப் பெத்தா நீண்டதக் கண்டன். வாங்கினாவோ என்னவோ தெரியா!”

“பாவம் பெத்தா! வாங்காட்டி நம்மட்ட இருக்கிறதக் குடுப்பம். வயது போன காலத்தில் அவட ஆசைய நாமெண்டாலும் தீத்து வைப்போம்”

இப்படி இவர்கள் பேசிக் கொண்டு நின்ற போது, “புள்ளே” என்று செண்பகப் பெத்தாவின் குரல் கேட்டது.

என்னவோ எதுவோ? என்று இருவரும் தெருப்பக்கம் பார்த்தார்கள்.

அங்கே பொன்னர் கொண்டு வந்த மீன்களின் சைசில் ஒரு மீனை அவள் கையில் பிடித்துக் கொண்டு நின்றாள்.

“அடிபுடிப்பட்டு ஆசைக்கு ஒரு மீன வாங்கித் தன் புள்ள”

“திராய் பேக்கக் காணல்ல?”

“வித்து முடிச்சிப் போட்டான்”

“பேக்கக் காணல்ல?”

“ஒரு யாவாரி மீன் போட யாமெண்டு கேட்டான். பாவமெண்டு குடுத்துப் போட்டான். அவன்தான் இந்த மீனையும் தந்தவன்”

“சும்மாவா?”

“சும்மா தாறதுக்கு இந்த நாளையில ஆருபுள்ள இருக்காதுகள்? அந்தக் காலம் மலையேறிப் போயித்து! நூத்தம்பது ரூபா அந்தக் காலம் போட்டான்”

“என்ன மனிசனுகள் இவனுகள்? இந்த யாவாரி, மேனி இருபது இருபத்தஞ்சி ரூபாக்குத்தான் வாங்கியிருப்பான். அநியாய விலைக்கு உங்களுக்கு வித்திருக்கான்”

“ம்… என்ட பேரச் சொல்லிப் புழச்சித்துப் போகட்டும் வெயிலேறுது புள்ள. நேரத்தோட கொண்டு போனாத்தான் வெட்டியெடுத்து என்னெண்டாலும் செய்யலாம். நான்வாறன்

“இப்படியான அநியாயத்தாலேதானே முன்பொருக்காச் சுனாமி வந்த! அப்படிச் சுனாமி வந்தும ஒருத்தனுமே திருந்தல்லையே பெத்தா”

“அது நடக்காது புள்ள. இன்னுமொரு சுனாமி வந்து முழுச் சனத்தையும் அழிச்சாத்தான் எல்லாம் சரிவரும்” என்றபடியே பெத்தா அவசரமாக நடந்து போவதை இவர்கள் அனுதாபத்தோடு பார்த்தா ர்கள்.

– 2009/11/22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *