(இதற்கு முந்தைய ‘பெண் தேடல்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)
சபரிநாதனின் இந்தப் புதிய பாராமுகம் காந்திமதிக்கு பயங்கர எரிச்சலை மூட்டியது.
“சபரிநாதனுக்கு கல்யாணக் கோட்டி பிடிச்சிருக்கு” என்று என்றைக்கோ கோமதி ஆச்சி சொல்லிவிட்டுப் போனதுதான். அதற்குப் பிறகு அதைப்பற்றி காந்திமதி எதையும் யோசிக்கவில்லை. கல்யாணக் கோட்டி நிஜமா இல்லையா என்பதெல்லாம் காந்திமதிக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது. ‘கோமதி ஆச்சி சொன்னது உண்மையாக இருக்குமோ’ என்று நினைக்கிற மாதிரி, டப்பா கட்டு வேட்டியை இறக்கி விடாமல், இதற்கு முந்தி ஒருநாள் சபரிநாதன் நடந்து கொண்டிருக்கிறார்.
இன்று நன்றாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டே பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் முந்தானையை இழுத்து செருகிக்கொண்டு வேறு பார்த்தாள்! ஆனால் மனுஷர் அவளை ஏறிட்டும் பார்க்காமல் ஆர்மிக்காரன் மாதிரி முகத்தை விறைப்பாக வைத்தபடி போய்க் கொண்டிருந்தார். முன்பெல்லாம் தூக்கிக் கட்டிய வேட்டியின் ‘டப்பாக்’ கட்டை மரியாதையாக கொஞ்சம் இறக்கிவிட்டுப் போவாரே; இப்ப அதெல்லாம் ரொம்பப் பழைய கதை போல! அந்தச் சின்ன மென்மையான புரிதலைக்கூட சபரிநாதன் இப்போது காந்திமதிக்குக் காட்டவில்லை.
காந்திமதிக்கு ஆத்திரம் வந்து விட்டது. ஏற்கனவே அவள் கோபக்காரி. புருஷன் செத்துப்போனதும் மேலும் கோபக்காரியானாள். இப்போது வழக்கமான மரியாதையை சபரிநாதன் கொடுக்காமல் போனதும் அவமானத்தால் கொதித்துப் போனாள். மனதிற்குள் பொருமினாள். “புதுசா உமக்கு என்னவே சிங்கிநாதம்? இப்ப புதுசா வேற ஒரு சிறுக்கியத் தேடப் போறீகளாக்கும்… பாக்கலாம் எந்தச் சிறுக்கி அவன்னு.”
காந்திமதியின் பொருமலில் இப்போதைக்கு வேகம் கொஞ்சம் குறைச்சல்! இனி சிறிது சிறிதாக விஷம் ஏறுவது போல் அது ஏறும். சபரிநாதனுக்கு இனிமே இருக்கிறது பெரிய பெரிய மங்களசாசனம்! “கெளப்பி விடாதீரும் என் ஆத்திரத்தை.. ஏழு கோலம் பண்ணிப் புடுவேன்” என்ற முனகலுடன் இப்போதைக்கு மங்களம் பாடிவிட்டு காந்திமதி தன் வீட்டுக்குள் போக மூஞ்சியைத் திருப்பிக்கொண்டாள்!
காந்திமதியின் ஆத்திரத்தில் கடுகளவைக்கூட உணர்கின்ற மனநிலை இல்லாத ஒருவித செருக்குடன் சபரிநாதன் வீடுபோய்ச் சேர்ந்தார். மனசில் இருந்து அவளை நிராகரித்துவிட்ட ரகசியமான திருப்தி அவருக்குள்.
இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான் அவருடைய கையில் கரண்டி! சபரிநாதன் தன் மனதிற்குள்ளேயே நிச்சயதார்த்தம் நடத்திவிட்டார். இருபத்தேழு, இருபத்தெட்டு வயசில் புதுப் பெண்டாட்டி சீக்கிரம் வந்து விடுவாள். கை நிறைய தங்க வளையல்களின் சப்தத்தோடு இந்த வீட்டில் அவளுடைய சமையல் ஆரம்பிக்கப் போகிறது. முன்பு மரகதத்துடன் இந்தத் தெருவில் நடந்துபோன மாதிரி, சீக்கிரம் புதுப் பெண்டாட்டியுடன் நடந்து போகப் போகிறார். அதை கோட்டைசாமியின் மகளும் பார்க்கத்தான் போகிறாள். சரிதான்; கள்ளப்பார்வை பார்த்த காலத்தில் அவள் காந்திமதி. இப்போது அவள் கோட்டைசாமியின் மகள்! இதைத்தான் சிங்கிநாதம் என்பது…
சபரிநாதன் முக்கியமான இரண்டு தீர்மானங்களுக்கு வந்திருந்தார். தான் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதை கோவில்பட்டி போய் மரகதத்தின் அம்மா வீட்டில் சொல்லிவிட்டு வந்துவிட வேண்டும். அதில் கட்டாயம் எதுவும் கிடையாதுதான்! இருப்பினும் திடீரென்று ஒருநாள் போய் கல்யாணம் என்று சொல்லி பத்திரிகை வைத்தால் அது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். தேவையில்லாமல் எதற்கு அதிர்ச்சி அளிப்பானேன்? – இது முதல் தீர்மானம்.
முதலில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ரிவிட்டு வந்துவிட்டால் இரண்டாவது தீர்மானத்திற்கான காரியத்தில் இறங்கலாம். இரண்டாவது தீர்மானம் பெங்களூரிலும், ஹைதராபாத்திலும் இருக்கிற இரண்டு மகள்களுக்கும் போன் பண்ணி விஷயத்தை வெட்கப்படாமல் சொல்லிவிடுவது..!
சூலம் பார்த்து; ராகுகாலம் தவிர்த்து; நல்ல குரு ஹோரையில் ஒருநாள் சபரிநாதன் வலது காலை எடுத்துத் தெருவில் வைத்தார். முதலில் அவருடைய மாமியார் இருக்கும் கோவில்பட்டிக்கு பஸ் ஏறினார். அவரைப் பொறுத்த வரையில் அவரின் மறுமணத்திற்கு கோவில்பட்டி மாமியார் வீட்டுச் சம்மதம் அவசியம் கிடையாதுதான். ஆனால் இரண்டு மகள்களின் சம்மதம் கட்டாயம் வேண்டும்! மகள்கள் இருவரும் ஒருவேளை சம்மதம் தராவிட்டால், அதற்காக அதை ஏற்றுக்கொண்டு சபரிநாதன் பேசாமல் இருந்துவிடுவார் என்று அர்த்தமில்லை. அவர்களை சம்மதிக்க வைக்கும் வழி அவருக்குத் தெரியும்.
சபரிநாதன் கோவில்பட்டி போய்ச் சேர்ந்தார். கிளம்புகிறபோது ரொம்பக் கம்பீரமாகக் கிளம்பி விட்டரே ஒழிய, கோவில்பட்டி போய்ச் சேர்ந்தபோது கம்பீரம் கொஞ்சம் கம்மியாகிவிட்டது. மாமியார் வீட்டை நெருங்க நெருங்க மிச்சமிருந்த கம்பீரமும் சுத்தமாகக் காணாமல் போய்விட்டது. தலைகூட சிறிது தொங்கினாற்போல தயங்கித் தயங்கி மாமியாரின் வீட்டை நோக்கி நடந்த அவரின் நடையைப் பார்க்க எப்படி இருந்தது என்றால், நேற்றுவரை எதிர்க் கட்சியில் இருந்துவிட்டு இன்று ஆளுங் கட்சியில் சேர்வதற்குப் போகிற அரசியல்வாதியின் நடை போல தொய்ந்து இருந்தது…!
‘கர்த்தர் இல்லம்’ என்று பெயர் சூட்டப்பட்ட மாமியார் வீட்டிற்குள் சபரிநாதன் கொஞ்சம் அதிகரித்த மார்புத் துடிப்புடன் நுழைந்தார். மாமியார் வீட்டார் ஹிந்துக்கள்தான். இருந்தாலும் ஏசுநாதரை அவர்களுக்கு ரொம்பப்பிடிக்கும். அதனால்தான் அந்த வீட்டிற்கு ‘கர்த்தர் இல்லம்’ என்று பெயர்.
வீட்டுக்குள் நுழைந்ததும் சபரிநாதன் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். மரகதம் இறந்த பிறகு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறார். இடையில் இரண்டொரு கல்யாணங்கள் அந்த வீட்டில் வரத்தான் செய்தன. மனைவி இறந்த பிறகு கல்யாணங்களில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தைக் காட்டி சபரிநாதன் வராமல் இருந்துவிட்டார். மாமியார் வீட்டு ஆட்கள் அவ்வப்போது திம்மராஜபுரம் வந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள். இருந்தாலும் முக்கிய இழை அறுந்துபோய் விட்டதை இரண்டு பக்கத்தினரும் உணர்ந்தே இருந்தார்கள். ‘தேரோடு போச்சு திருவிழா, பெத்த தாயோடு போச்சு பொறந்தவீடு’ என்ற பழமொழி நெல்லை மாவட்டத்தில் ரொம்பப் பிரபலம்! அதோடு ‘பெண்டாட்டியோடு போச்சு மாமியார் வீடு’ என்பதையும் இப்போது சேர்த்துக் கொள்ளலாம்…
கோவில்பட்டி போன்ற சிறிய ஊர்களில், வசதியான குடும்பத்தாரின் வீட்டிற்கு, அவர்கள் வீட்டு மாப்பிள்ளை வரும்போது எப்படிப்பட்ட மரியாதையும் வரவேற்பும் கிடைக்குமோ, அதைவிட அதிகமான வரவேற்பும் மரியாதையும் சபரிநாதனுக்கு அங்கு கிடைத்தது. புது மாப்பிள்ளைக்கு உரிய சங்கோஜத்துடன் சபரிநாதன் மாமியாரின் எதிரில் உட்கார்ந்திருந்தார். மாப்பிள்ளையைப் பார்த்ததும் மரகதத்தின் அம்மாவிற்கு அழுகை பொத்துக்கொண்டு வந்துவிட்டது.
நேற்றுத்தான் மகள் செத்துப்போனது மாதிரி சேலைத்தலைப்பால் முகத்தை மூடிக்கொண்டு அந்த அம்மா பெரிதாக ஒப்பாரி வைத்தாள். அதனால் மெளன அஞ்சலி செலுத்துவது மாதிரி மற்றவர்கள் அங்கு அமைதியாக இருக்க வேண்டியிருந்தது. சபரிநாதனின் மனதிற்குள் மட்டும் ஒரு நெருடல். அவர் வந்திருப்போதோ கல்யாண சேதி சொல்ல; அனால் நடந்து கொண்டிருப்பதோ அழுகைக் கச்சேரி.
ஒரு வழியாய் அழுகைக் கச்சேரி எல்லாம் முடிந்து கொஞ்ச நேரம் பரஸ்பர விசாரிப்புகள் தொடர்ந்தன. வரப்போகிற தேர்தலில் திம்மராஜபுரம் தொகுதியில் கள்ளத்தோணி முக்கூடல் கோமதிநாயகம் போட்டியிடப் போகிற செய்திவரை வந்து விட்டது பேச்சு. ஆனால் சபரிநாதனிடமிருந்து எந்தப் பேச்சு வர வேண்டுமோ அது மட்டும் வெளிவரவில்லை. மனசுக்குள்ளேயே கெடந்து முக்கி முனகிக் கொண்டிருந்தது. மரகதத்தின் பெரிய தம்பிக்கு மட்டும் மூக்கில் வியர்த்து விட்டது. ஐந்தாறு வருஷம் வராத மாப்பிள்ளை வீடு தேடி வந்திருக்கிறார். ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு சபரிநாதனின் வாயையே பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்துவுக்கு எதுக்கு கர்த்தரு? தேவையே இல்லையே. இதுக்குப்பேருதான் நாசூக்கா மதம் மாத்துற தந்திரமா? நல்லா இல்லையே.