மாமன் மனசு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 6,406 
 

ஆர்த்தி மனசுக்குள் ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம், உறுத்தல்.

‘ இன்றைக்கு எப்படியும் இதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் ! ‘ – என்று நினைத்தவள் அருகில் நின்ற அம்பிகாவை அழைத்துக் கொண்டு தனிமையில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்த சோமசுந்தரம் அருகில் சென்று நின்றாள்.

” மாமா…! ” அழைத்தாள்.

” என்னம்மா…? ” அவர் வாசிப்பை நிறுத்தி இருவரையும் அன்னாந்து பார்த்தார்.

” எங்களுக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சரியா பதில் சொல்லனும்….”

” கேளு….”

” மாமா.! உங்களுக்கு ரெண்டும் ஆம்பளைப் புள்ளைங்க. ரெண்டு பேருக்கும் எங்களை மருமகள்களாகத் தேடி…..எட்டு, ஆறு வருசம் ஆச்சு. தம்பதிகளுக்குள் குறை இல்லேன்னாலும்….இதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்குமே குழந்தைகள் இல்லே. ஆனாலும்….நீங்களும் அத்தையும் இதைப் பத்தி கொஞ்சமும் வருத்தப்படாமல் பெத்த அம்மா அப்பாக்களைவிட எங்க ரெண்டு பேர் மேலும் ரொம்ப அன்பு, பாசமாய் இருக்கீங்க, தலைமேல் வைச்சு கொண்டாடுறீங்க. ஏன்…..நாங்க குழந்தை ஏக்கத்தில் குலைந்துவிடக் கூடாது என்கிற அக்கரையா ? இல்லே…பெண் பிள்ளைகள் இல்லே என்கிற உங்க சொந்த ஏக்கத்தில் இப்படி நடந்து கொள்கிறீர்களா .? எப்படி ?” கேட்டு ஆர்த்தி அவரை ஆழமாகப் பார்த்தாள்.

அருகில் நின்ற அம்பிகாவும் அவரை அப்படியேப் பார்த்தாள்.

” அதுவா..? நீங்க நெனைக்கிற காரணமெல்லாம் இல்லே. ”

” பின்னே..? ”

” குழந்தை இல்லாதது உங்க குறை இல்லே. அது ஆண்டவன் கொடுக்க வேண்டியது. அவன் கொடுத்தாலும் கொடுப்பான் கொடுக்காமலும் போவான். அப்படி இருக்கும்போது…. என்னைக்கோ பொறக்கப்போறதை எதிர்பார்த்து ஏங்கி வருத்தப்படுறதைவிட பிறந்த உங்களை அப்படி நெனைச்சி கொண்டாடினால் என்ன என்கிற நினைப்பு. என்ன ஒரு வித்தியாசம்….அந்தக் குழந்தைகளைப் பச்சை மண்ணாய் கையில எடுத்துக் கொஞ்சறதுக்குப் பதில் உங்களைப் பருவப்பெண்ணாய் கொஞ்சறோம். அவ்வளவுதான்.! அடுத்து…. அந்தப் புள்ளைகள் என் பையன்கள் வழியாத்தான் எங்கள் கைக்கு வருவாங்க. நீங்களும் அப்படித்தான் அவர்களால் எங்களுக்குக் கிடைச்சிருக்கீங்க. சரியா… பேத்திகளா ? ” என்று சிரித்தார்.
அவ்வளவுதான், ” மாமா….ஆ! ” சடக்கென்று இருவரும் நெகிழ்ந்து அவர் காலில் விழுந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *