மருத்துவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2020
பார்வையிட்டோர்: 7,557 
 
 

செல்வி வெகுநேரமாக தனக்கு குழந்தை இல்லையே ஏன் என்ற சிந்தனையிலேயே இருந்தாள், இருவருக்கும் எல்லா மருத்துவரிடமும் போய் பார்த்தாச்சு, இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிட்டாங்க, கல்யாணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, பிறகு ஏன் எங்களுக்கு குழந்தை இல்லை.

“செல்வி என்ன ரொம்ப நேரமா யோசித்துக் கொண்டிருக்கிறாய், இன்னைக்கு கோயிலுக்கு போகலாம் என்று சொன்னேன்ல மறந்துவிட்டாயா, ஏன் இன்னும் கிளம்பாம இருக்கிறாய்”

“இல்லை ஸ்ருதி மறக்கவில்லை, கோயிலுக்கு போய் என்ன பலன் கிடைக்குது, கல்யாணமாகி மூன்று வருடமாகிறது, இன்னும் குழந்தையில்லை இந்த கடவுளிடம் கேட்டு கேட்டு ஒன்றுமில்லை, எதுக்கு தேவையில்லாமல் கோயிலுக்கு போகனும்”

“என்ன செல்வி பைத்தியம் மாதிரி பேசிக் கொண்டிருக்கிறாய், கடவுள் யார் யாருக்கு எப்போது செய்யனும்னு நினைக்கிறாரோ, அப்போது கண்டிப்பாக செய்வார், அதுவரை நாம்தான் பொறுத்திருக்கனும், அதற்காக கடவுளை பலிக்கக் கூடாது”

“ஸ்ருதி அதுக்காக அவர் பத்து வருடம் கழித்து தருவார் அதுவரை காத்திருக்க முடியுமா”

“காத்திரு அதைவிட வேறு என்னடி, கடவுள் நமக்கு சில சோதனைகளை தருவது நாம் அவரிடம் வருகிறோமா, நினைக்கிறோமா என்று தெரிந்து கொள்ளதான், உனக்கு உள்ள சோதனையில் அவரை பலிப்பது தவறு, அவரிடம் மனதார கேள், கண்டிப்பாக தருவார்”

“என்ன ஸ்ருதி அதுக்குள்ள எனக்கு வயதாகிவிடாதா”

“ஆகட்டுமே உனக்கு இப்போது இருபத்தி ஒன்பதுதானே ஆகுது, நாற்பது ஐம்பது வயதில் குழந்தை பெற்றுக் கொண்டவர்களும் இருக்காங்கதானே”

“இப்போ நீ என்ன சொல்ல வரே ஸ்ருதி”

“மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் பொறுமையாக இரு, உனக்கு நல்லதே நடக்கும்”

“ம்ம்……. சரி ஸ்ருதி, ஐந்து நிமிடம் பொறு கிளம்பி வருகிறேன்”

இருவரும் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோயில் வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர், “ஏய் செல்வி ஸ்ருதி எப்படி இருக்கீங்க, உங்களை இங்கே எதிர்பார்க்கவேயில்லை” என்றாள் உமா.

“அட உமா நாங்க கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறே, நீ எப்படி இங்கே”,

“என் கணவர்க்கு மாற்றலாகிவிட்டது, அதனால் இந்த ஊர் வந்துவிட்டோம்”,

“எல்லோரும் வந்து இருக்கீங்களா, எங்கே எல்லோரும்”

“இல்லைடி நான் மட்டும்தான் வந்தேன், இரட்டைக் குழந்தைங்க எனக்கு, அவங்களை தூக்கிக் கொண்டு வரனும்னா இரண்டு பேர் வேண்டும், மாமியாரால் தூக்கிக் கொண்டு ரொம்ப நேரம் நடக்க முடியாது, அதனால் நான் மட்டும்தான் வந்திருக்கிறேன்”

“இரட்டைக் குழந்தைகளா? எப்படி இருக்காங்க இரண்டு பேரும்”

“ஆமாண்டி எனக்கு கல்யாணமாகி நான்கு வருடம் ஆகியும் குழந்தையில்லை, மருத்துவர்கள் எல்லாம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லிட்டாங்க, இருந்தாலும் வயதாகிக் கொண்டே இருக்கிறதே என்று சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிக் கேள்விப் பட்டேன், அந்த சிகிச்சை எடுத்த பிறகு பிறந்த குழந்தைகள்தான் இவர்கள்”

“அது என்ன சிகிச்சை என்று சொல்லுடி, நானும் சென்று பார்க்கிறேன்”

“செல்வி அமைதியாக இரு, உமா அதெல்லாம் எதுவும் சொல்லாதே வேண்டாம்”

“ஏண்டி என்னடி பிரச்சினை, அவ சொல்லச் சொல்றா, நீ வேண்டாம் என்கிறே”

“உமா எனக்கு கல்யாணமாகி மூன்று வருடமாகிறது, ஆனால் இதுவரை குழந்தை இல்லை, ஸ்ருதி பொறுமையாக இரு என்கிறாள்”

“இதுல எந்த பிரச்சினையும் இல்லே ஸ்ருதி, நீ எதுவும் கவலைப்படாதே, செல்வி உனக்கு நான் பிறகு கால் பண்ணுகிறேன், உன் கை பேசி எண்ணைக் கொடு, குழந்தைகளை சமாளிக்க முடியாம மாமியார் கஷ்டப்படுவாங்க” என்று சென்றாள்.

“செல்வி சிகிச்சை எல்லாம் வேண்டாம் சொல்வதைக் கேள், நீ உமாவிடம் இது பற்றி எதுவும் கேட்காதே, சிலருக்கு நல்லவிதமாக இருக்கும், சிலருக்கு பிரச்சினை ஆகிவிடுகிறது, நம்ம வீட்டுக்கு அருகில் இருக்கும் பவி அக்காவுக்கு பிறந்த குழந்தை சிகிச்சை முறையில் பிறந்ததுதான், உனக்கே தெரியும் அந்த குழந்தை மாற்றுத் திறனாளி என்று அவசரப்படாதே”

“என்ன ஸ்ருதி அவங்களுக்கு அப்படி இருக்கு என்பதற்காக, எல்லோருக்கும் அப்படியே ஆகிவிடுமா”

“நான் அப்படிச் சொல்லவில்லை செல்வி, அப்படி ஆகிவிடக் கூடாதே என்றுதான் சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக இரு, உனக்கு குழந்தை பிறக்கும்”

“சரிடி வீட்டுக்கு போகலாம், நான் அவளிடம் எதுவும் கேட்கவில்லை”

வீட்டிற்கு வந்ததும் உமாவை ஸ்ருதி கைபேசியில் அழைத்து, “செல்வி சிகிச்சைப் பற்றி என்ன கேட்டாலும் சொல்லாதே”

“ஏண்டி வேண்டாம் என்கிறே குழந்தை இல்லையென்று என்று அவள் எவ்வளவு கஷ்டப் படுகிறாள்”, “எனக்கும் புரியுது உமா சிகிச்சை முறையில் குழந்தை வேண்டாம், அதனால் அவளிடம் அது பற்றி எதுவும் சொல்லாதே” என்று கைபேசியை அணைத்தாள்.

ஒருவாரம் கழித்து உமா, செல்வியை கைபேசியில் அழைத்து சிகிச்சை முறைப் பற்றி அனைத்தையும் சொன்னாள், எந்த மருத்துவமனை, எந்த மருத்துவரை பார்க்க வேண்டுமென்ற எல்லா விபரங்களையும் சொன்னாள், அதுமட்டுமில்லாமல் ஸ்ருதி இது பற்றி எதுவும் சொல்லக் கூடாது என்றதையும் சொன்னாள்.

ஸ்ருதிக்கு தெரிந்தால், தன்னை தடுத்துவிடுவாள் என்று, அவளிடம் எதுவும் சொல்லாமல், தன் கணவன் குமாரை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு மருத்துவர் சொன்ன, சிகிச்சையை எடுத்துக் கொள்ளத் தொடங்கினாள்.

ஸ்ருதியிடம் இது பற்றி எதுவுமே சொல்லவில்லை, மூன்று மாதங்கள் ஆனது செல்வி மிகவும் சோர்வாகவே இருந்தால் ஸ்ருதி, “ஏன் இப்படி இருக்கிறே?” என்று பல முறைக் கேட்டும், “நல்லாதானே இருக்கேன்” என்று செல்வி எதுவும் சொல்லவே இல்லை.

சமையல் பண்ணிக் கொண்டிருந்த செல்வி திடீரென்று மயக்கம் போட்டு விழ, அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினான் குமார், அங்கு அவளுக்கு மஞ்சள்காமலை இருப்பதாகவும் அதுவும் நுரையீரல் வரை பரவி விட்டது எனவும் சொன்னார்கள்.

“மஞ்சள் காமாலையா எப்படி டாக்டர்” என்று குமார் கேட்க,

“இனிமேல்தான் தெரியும், எல்லா பரிசோதனையும் பண்ணச் சொல்லியிருக்கிறோம், உங்கள் மனைவி மாத்திரைகள் எதுவும் எடுத்துக் கொள்கிறார்களா, எதற்கு?”

“ஆமா டாக்டர் குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாள்”

“அந்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் உங்களிடம் இப்போது இருக்கா”

“இருக்கு டாக்டர்” என்று குமார் அதைக் கொடுக்க, “சரி நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்” என்றார்.

ஸ்ருதிக்கும் விடயத்தை கூறினான், அவளும் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்ததால் பார்க்க அனுமதிக்கவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து மருத்துவர் குமாரை அழைக்க ஸ்ருதியும் உடன் செல்ல, “குமார் உங்கள் மனைவி குழந்தைக்காக எடுத்துக் கொண்ட சிகிச்சைக்காக, அவர் சாப்பிட்ட மாத்திரைகள்தான் மஞ்சள்காமாலை வரக் காரணம், இந்த மாத்திரைகள் எதுவும் உங்கள் மனைவியின் உடம்புக்கு ஏற்றுக் கொள்ளவில்லை”

“டாக்டர் இப்போது எப்படி இருக்கிறாள், நாங்கள் அவளைப் பார்க்கலாமா”

“நீங்கள் யாரும் இப்போது பார்க்க முடியாது, அவர் ரொம்ப மோசமான நிலையில் இருக்கிறார், மஞ்சள்காமாலை நுரையீரல் வரை பரவியுள்ளதால், நாங்கள் முடிந்த அளவு சிகிச்சை கொடுக்கிறோம், அதற்கு மேல் கடவுள் கையில்தான் உள்ளது”

குமாரும் ஸ்ருதியும் அதிர்ச்சியில் வெளியே வந்தனர், “குமார் அவள் என்ன சிகிச்சை எடுத்தால், ஏன் இதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை”

“உனக்கு தெரியாதா ஸ்ருதி உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா, உங்கள் தோழி உமா சொன்னதாக சொல்லிதான் சிகிச்சைக்காக சென்றோம், சரி ஸ்ருதி நீ கிளம்பு குழந்தையை விட்டுவிட்டு வந்திருப்பாய், தேவை என்றால் உன்னை அழைக்கிறேன்”

“இல்லை குமார் இருவரும் என்னிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, உமா முதலில் இதைப் பற்றிச் சொல்லும் போதே நான் வேண்டாம் என்று சொன்னேன், அதனால் என்னிடம் மறைத்திருப்பார்கள், சரி குமார் நான் கிளம்புகிறேன்” என்று சென்றாள், வீட்டிற்கு போனதும் உமாவை கைபேசியில் அழைக்க,

“ஏய் உமா, குழந்தைக்காக செல்வியிடம் சிகிச்சைப் பற்றிச் சொல்லாதே என்று சொன்னேன்ல, ஏண்டி சொன்னே, இப்போ அவள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள், அவளுக்கு மட்டும் எதுவும் ஆகட்டும், உன்னை சும்மாவிட மாட்டேன்” என்று திட்டிவிட்டு கைபேசியை அணைத்தாள்.

அன்று இரவு முழுவது அவளுக்கு தூக்கமே இல்லை, கடவுளே செல்வியை காப்பாற்று என்று முனகிக் கொண்டேயிருந்தாள், அவள் கணவன் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவள் தூங்குவதாகவே இல்லை புலம்பிக் கொண்டேயிருந்தாள், அதிகாலை ஐந்து மணியளவில் குமார் ஸ்ருதியை கைபேசியில் அழைத்தான், “ஸ்ருதி உன் தோழி செல்வி நம்மையெல்லாம் விட்டுட்டு போய்விட்டாள்” என்று அழுதான்.

செல்வியின் இறுதிச் சடங்கிற்கு ஸ்ருதி சென்று, “எத்தனை தடவை சொன்னேண்டி சிகிச்சை வேண்டாமென்று, ஏண்டி நான் சொன்னதை கேட்கவில்லை, இப்படி எங்களையெல்லாம் விட்டுட்டு போய்டியேடி, ஏண்டி குழந்தை இல்லையென்றால் தத்தெடுத்திருக்கலாமே, இப்போது உயிரை விட்டு விட்டாயேடி” என்றுச் சொல்லி அழுதாள்.

“செல்வி இந்த நிலைமைக்கு காரணம் உமாதான், அவளை நான் சும்மாவிடமாட்டேன்” என்று எழுந்தாள், அவள் கணவன் தடுத்தான், “ஸ்ருதி சொல்வதைக் கேள், அவசரப்படாதே அமைதியா இரு” ஆனால் அவள் கேட்பதா இல்லை.

குமார் அவள் அருகில் வந்து, “ஸ்ருதி அண்ணன் சொல்வதைக் கேள், உமா சொன்னாலும் அதைப் பற்றி, நாங்களும் விசாரித்து இருக்கனும் செய்யவில்லை, நீ சொன்னதையாவது அவள் கேட்டிருக்கனும் கேட்கவில்லை”,

“உமாவுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள், நாம் உமாவுக்கு தண்டனை கொடுத்தால் அந்த குழந்தைகளுக்கும் சேர்த்துதான் கொடுக்க வேண்டும், அந்த குழந்தைகள் என்ன செய்தார்கள் தண்டனை அனுபவிக்க சொல்லு, தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் தவறாகதான் இருக்கும், இனிமேல் நாம் என்ன செய்தாலும் செல்வி நம்மிடம் வரப் போவதில்லை ஸ்ருதி” என்று குமார் அழ, அவனுடன் சேர்ந்து ஸ்ருதியும் அழத் தொடங்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *