மனப் புயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2022
பார்வையிட்டோர்: 3,892 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வருணனும் வாயுவும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பலப் பரீட்சையில் இறங்கிய போது. உயிருக்கும் பயிருக்கும் உலை வைக்க வேண்டுமென்ற குலை நடுங்கச் செய்யும் நயவஞ்சக எண்ணத்துடன் உருவாகிக் கொண்டிருந்த புயலை அந்தத் தேவர்கள் அறவே மறந்து விட்டார்கள்! இயற்கையின் பிரதிநிதிகளாகிய அந்தப் பரோபகாரிகளே இத்தகைய கேவலமான நிலைமையை அடைந்து விட்ட போது மனித வர்க்கத்திலே முளைக்கும் சுயநலக்காரர்களைக் கண்டிப்பதற்கு இனி யார் தாம் துணிவார்கள்?

விர் விர்ரென்று காற்றுப் பலமாகச் சுழன்று சுழன்று வீசத் தொடங்கியவுடன், சுளீர் சுளீரென்று ஜயகோஷத் துடன் மழை தாக்க ஆரம்பித்ததுதான் தாமதம். திருத் துறைப்பூண்டி, தரித்திரப் பூண்டியாக மாறத் தொடங் கியது. பூரிப்பில் திளைத்து நின்ற புன்செய் , புகலிடம் காணாது புலம்பியது. அறுவடையை எதிர்நோக்கி நெளிந் தாடிய நன்செய், தான் நிர்மூலப் பாதையில் உந்தப்படு வதை நினைந்து நடுங்கித் தலை சாய்த்தது.

கரைகள் உடைந்தன; கூரைகள் சரிந்தன ; ஓடுகள் சல்லிகளாயின ; ரோடுகள் மேடுகளாயின. ‘ஏ வருணா நீயா கருணை பொழிபவன்?’ என்று பிரலாபித்துக் கொண்டே தென்ன மரங்கள் சாய்ந்தன.

அட வாயு, போதுமப்பா உன் வெறியாட்டம் என்று ஓலமிட்டு வாழைமரங்கள் சிதறி வீழ்ந்தன.

ஊழிக் காலத்து நிகழ்ச்சிகள் வெளியுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் மனம் அஞ்சாது அறிவு கலங்காது புயலின் அட்டூழியங்களை வெறித்துப் பார்த்துக்கொண் டிருந்தாள் காத்தூன். ‘இதுவும் ஒரு புயலா!’ என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் குமிழியிட்டுக் கிளம்பியதை அவள் அதரங்களில் மிதந்து மறைந்த முறுவல் பறை சாற்றிற்று. உள்ளத்திலே உருவான சண்டமாருதத்தில் அவதிப்பட்ட அவள் தடுமாற்றத்துடன் பனை மரத் தூணை இறுகப் பிடித்துக்கொண்டு திண்ணையில் நின்று கொண் டிருந்தாள்.

‘காத்தூன், எங்கே போயிட்டே? ஹம் ” என்ற ஓர் ஆணின் மெல்லிய குரல், மழையின் பேரிரைச்சலை ஊடுருவிக்கொண்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தது. அதைக் கேட்ட காத்தூனின் முகம் சுருங்கியது. எரிச்சலும் வெறுப்பும் அவள் நுதலில் கூத்தாடின.

என் வாழ்வு தளிர்க்கும் போதே அதைக் கிள்ளிவிட் டார்களே என்னைப் பெற்றவர்கள். அந்த மஸ்தானுக்கே வாழ்க்கைப்பட்டிருந்தால் என் வாழ்வு இந்தச் சீரழிந்த நிலையிலா இருந்திருக்கும்?’

நெடுமூச்சு அவள் புண்பட்ட நெஞ்சைக் கீறிக் கொண்டு கிளம்பியது.

“காத்தூன், கொஞ்சம் என் அருகில் வாயேன்” என்று உட்புறத்திலிருந்து எழுந்த அந்த ஆணின் வேண்டு கோள் அவள் செவிகளில் நாராச ஒலி போல் வீழ்ந்தது.

‘மஸ்தானுக்கு என்ன குறைச்சல்? இப்போது என் குரல்வளையைப் பிடித்திருக்கும் ஒன்றுக்கும் உதவாத புருஷனைக் காட்டிலும் எவ்வளவோ மேல் ! அவர் அந்நியர் கூட இல்லையே. மாமன் மகன் தானே! சிறு குழந்தை முதல் அவருக்குத்தான் என்னை முடிச்சுப் போடப் போவ தாக ஆசை வார்த்தைகள் சொல்லிச் சொல்லி என்னைக் கடைசியில் ஏமாற்றிவிட்டார்களே அப்பாவும் அம்மா வும் ! ஒரு வேளை மஸ்தான் வீட்டில் இல்லாவிட்டால் அவரைத் தேடிக்கொண்டு வரும்படி எனக்குத்தானே அவர்கள் கட்டளையிடுவார்கள்? நானும் எவ்வளவோ குஷியுடன் குதித்துக்கொண்டே வெளியே ஓடிச் சாயாக் கடையில் பீடி குடித்துக்கொண் டிருக்கும் அவரைக் கையோடு அழைத்து வருவேன். வழியெல்லாம் என்ன என்னவோ தமாஷாகப் பேசிக் கலகலவென்று என்னைச் சிரிக்க வைப்பாரே அவர் “

அவள் மேனி துவண்டது. வாடி வதங்கிய வதனம் ஜொலித்தது. அங்கமெல்லாம் ஒரு புத்துணர்ச்சி ஊடுருவிப் பாய்ந்தது. காற்றில் சிக்கி மது அருந்தியவர் போல் சுழன்றாடும் தென்னமரங்கள் தன் இன்ப நாட்களை எண்ணி ஆடுவதாக நினைத்தாள். சரேல் சரேலென்று அடிக்கும் சாரல் கைகொட்டி எக்களிப்பதாக எண்ணினாள்.

“ஏ காத்தூன், நான் ‘மௌத்’ ஆயிட்டேன்னு நினைக்காதே. என் உசிரு இன்னும் இளுத்துக்கிட்டுத்தான் இருக்கு. உன் புருசன் கெஞ்சுறதைக் கேட்கிறியா? கிட்ட வந்து உதவி செய்யேன்” என்று அந்த ஆண்குரல் மிக்க வேதனையுடன் மன்றாடுவதைக் காத்தூன் செவி மடுத்ததாகக் காணோம்.

மஸ்தானோ அநாதை. அவரைக் கட்டுப்படுத்த யாரும் இல்லாமற் போனார்கள். கயிறு கட்டாத காளை போல ஆகிவிட்டார். கெட்ட சகவாசம் அவரைக் கெடுத்துவிட்டது. காலாடிகள் தொடர்பு அவரைச் சமூ கத்திலிருந்து கல்தா’ கொடுத்தது. வாலிபப் பருவம். அவர் என்ன செய்வார் ! மீன்காரி ஹஸீனாபீயைச் சொல்ல வேண்டுமா? எத்தனையோ மீன்களைச் சிக்கவைத்த சிறுக்கி அவள் ! இந்தச் சுறாமீனும் அவள் மோகவலையில் வீழ்ந்து விட்டதில் என்னதான் ஆச்சரியம் கண்டார்களோ! ஊரார் சிரித்தார்கள். வாப்பாவும் அம்மாவும் தமுக்கடித்து வாய்விட்டுச் சிரித்தார்களே / கடைசியில் என்ன நடந்தது? தலை கவிழ்த்துக் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு என் வீட்டின் முன்னாலே வந்து நின்றார். உண்மையான அன்பு என்னிடம் இருந்ததால் தானே அவர் அப்படிச் செய்தார்? இதை ஏன் என் வாப்பா புரிந்துகொள்ளவில்லை? ‘அயோக்கியன், பேமானிப் பயல்” என்று அதட்டிக் கதவைத் தடாலென்று சாத்திவிட்டாரே!’

அவள் மனமொடிந்து நின்றாள். காற்றின் உக்கிரத் மோதிக்கொண்டு இரைச்சலை உண்டாக்கின.

“காத்தூன், எத்தனை தடவை நான் கூப்பிடுவேன்? எனக்குத்தான் கை இல்லை; கால் இல்லை. உனக்குமா அப்படி ஆகிவிட்டது? இந்த நோயாளிமீது பார்வையைத் திருப்பேன்” என்று அந்த ஆண் குரல் கெஞ்சி ஓல மிட்டது.

பட்டுப்போன சம்பவங்களை அவள் மனக்கண் துழாவித் துழாவி நோக்கிக்கொண் டிருந்தபோது புறக் கண்கள் உண்மையிலே பார்வையை இழந்த நிலைமை யில் இருந்தன.

“அவர் ஆண்பிள்ளை. ரோசக்காரர். வாப்பா கதவைச் சாத்தியவுடன் வாசற்படியை விட்டு இறங்கிச் சென்று விட்டார். நான்கு மாதங்களாகியும் அவர் திரும்பவே இல்லை. நானும் பொறுத்திருந்தேன். அந்தப் பயங்கரச் செய்தி என் காதில் விழுந்த பிறகுதான் அவர் போதாத காலத்தில் தவிக்கிறார் என்று தெரிந்து கொண்டேன். ஹமீது, ‘கேடி’ என்பது இந்தச் சீமை பூராவும் தெரிந்த விஷயம். அவன் கள்ள நோட்டுகள் போட்டால் இவர் ஏன் அச்சடிக்கத் தம் வீட்டைக் கொடுத்தாரோ? ஹமீ துக்கு இரண்டு வருஷம் கொடுத்தது அநியாயம். இருபது வருஷம் கொடுத்தாலும் என் மனம் ஆறாது. மஸ்தான் கழுவி விட்டாரே! எத்தனை நாள் தான் போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுக்க முடியும்? யோசித்துத்தான் ஓடினாரா? என்னை அடியோடு மறந்துவிட்டாரா?”

அவள் உள்ளம் விடை காணாமல் தவித்தது. “காத்தூன், கூரையிலிருந்து ஒழுகும் தண்ணீர் என் படுக்கை முழுவதையும் நனைச்சுடுச்சு. என்னைத் தூக்கி அப்புறப்படுத்தேன். எங்கே தொலைஞ்சே நீ? உன் புருசன் இன்னும் கொஞ்ச நாளிலே குழியிலே இறங்கி விடுவான். அப்புறம் நீ எங்கேயாவது போய்விடு” என்று ஆண்குரல் எரிச்சலுடன் பிரலாபித்தது.

‘தலைமறைவாக இருந்த மஸ்தான் வருவார் வருவார் என்று எத்தனையோ நாள் காத்திருந்தேன். எனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று எத்தனையோ தடவை வாப்பாவுக்கு எதிராக நின்றேன் பலன் என்ன? ஊர் பேர் தெரியாத நாடோடி போல வந்த ஒருவருக்கு என்னை நிக்காஹ் செய்து கொடுத்துவிட்டார் பைத்தியக்கார வாப்பா. குணம் தங்கமென்று சொல்லிப் பசப்பினார். அது பீங்கான் என்று தெரிந்து கொண்டேன். யோக்கியன் என்றார். பாதி ராத்திரியிலே படுக்கையை விட்டு மறைந்து போனதைப் பார்த்தேன். அவரோடு நான் நடத்திய ஒரு வருஷ வாழ்வு ஒன்பது வருஷ வாழ்வுபோல அலுத்துவிட்டது.

‘இதே மாதிரி அன்றொருநாள் மழை விடாது அடித் துக்கொண் டிருந்தது. பாதி ராத்திரியிலே போனவர் காலை யில் வெளித் திண்ணையிலே வெறுங் கட்டாந் தரையிலே படுத்திருப்பதைப் பார்த்தேன். கூப்பிட்டேன். ஜவாப் கொடுக்கவில்லை. சைகை காட்டினார். வலது காலும் வலது கையும் முடங்கிக் கிடந்ததைக் கண்டு மனம் பதறி அலறினேன். அது பாரிச வாயுவாம். அன்று ஆரம் பித்த அழுகை இன்னும் ஓயவில்லை. ஒரு காசும் சம்பா திக்க முடியாதவர் , நடக்கவும் புரளவும் முடியாதவர் இந்த நோயாளிப் புருசனைக் கட்டிக்கொண்டு என் கால மெல்லாம் கழிக்க வேண்டுமே, அல்லாவே!

“எதிர் வீட்டு ஆயிஷா என் வயசுதான். அவளுக்கும் அதே மாசத்திலே தான் நிக்காஹ் ஆச்சு. எவ்வளவு சந் தோஷமாக அவளும் அவள் புருஷனும் வாழ்கிறார்கள் ! என் பாழும் விதி இப்படியா முடிய வேண்டும்? இந்த மரக் கட்டையை எப்பொழுதும் என் தலையிலே சுமக்கும்படி செய்துவிட்டாயே, யா ரஹ்மான்!

“அந்த மஸ்தானோடு வாழ்வேன். அவர் வருவார். என்னை நெருங்குவார். நான் கொல்லைப்புறம் ஓடுவேன். பின் பக்கமாக வாசற் பக்கம் நுழைந்து அவர் முதுகைத் தட்டுவேன். என் மேலே அவர் தாவுவார். என் கன்னங் களைச் சிவக்கச் செய்வார். என் உதடுகளை ஈரமாக்குவார். அவர் பிடியிலே நான் கெளுத்தி மாதிரி துள்ளுவேன். இப் படி யெல்லாம் கனாக் கண்டேனே. அந்தக் கனாவெல்லாம் ‘வனா’ ஆகிவிட்டதே!”

அவள் மிக்க வெறுப்புடன் நெற்றியிலே ஓங்கி அடித் துக்கொண்டாள். வெளியில் பெய்யும் மழைக்குப் போட்டி யாக அவள் விழிகளிலிருந்து நீர் பொலபொலவென்று வழிந்தோடியது.

“வருத்தப்படாதே. காத்தூன்” என்று ஆறுதலளித்த குரலைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து நின்றாள். எந்த ஆண்மகனுக்காகக் கள்ள மனத்துடன் ஏங்கி நின்றாளோ அவன் கொட்டுகிற மழையில் நனைந்த வண்ணம் அவள் எதிரில் காட்சியளித்தான்!

“எப்படி வந்தீங்க?” என்றாள் காத்தூன் மதி மருண் டவளாய். நரம்புகள் வெடித்து விடும் போல் ரத்த ஓட் டம் அவள் உடலெல்லாம் பீரிட்டெழுந்தது.

“உன்மீது நான் வைத்த அசைக்க முடியாத ஆசை தான் சொல்லும்” என்றான் மஸ்தான். “உன்னையும் என்னையும் அநியாயமாகப் பிரித்த பாதகர்களுக்கு நம் இரண்டு பேருக்குமுள்ள அன்பை எடுத்துக் காட்டத்தான் இந்தப் புயல் கிளம்பியிருக்கிறது, காத்தூன். என் போதாத காலம், மறைந்து மறைந்து ஓர் ஊர்விட்டு ஓர் ஊர் போய் வாழும்படி யாயிற்று. கெட்ட சகவாசம் செய்துவிட்ட காரியம், காத்தூன் ! இந்த அல்பக் காரணத்தை வைத் துக்கொண்டு என்னை உதறிவிட்டு உன்னைச் சாக்கடையில் தள்ளிவிட்டார் உன் வாப்பா. என்ன அக்கிரமம்! உனக்கு வாய்த்தவனின் நடத்தை எனக்குத் தெரியாத சமாசார மல்ல. இப்போது அவன் படுகிற கஷ்டங்கூட எனக்குத் தெரியும். உன் வாழ்வைக் குட்டிச்சுவராக்கிவிட்ட உன் வாப்பாவும் அம்மாவும் சொந்தக்காரர்களும் எங்கே?

“நீயே நினைத்துப் பார். உன் மீதி நாட்களை நீ பாழாக் கிக் கொள்ளக் கூடாது என்று தான் இந்தப் புயலையும் எதிர்த்துப் பல மைல்கள் நடந்து வந்தேன். எந்தப் படு பாவிகள் உன்னை ஏமாற்றி உன் வாழ்வை நாசமாக்கினார் களோ அவர்கள் கண்ணிலே மண்ணைத் தூவி நீயும் தமாஷா பார் என்னுடன் கிளம்பு. எங்கேயாவது போய் விடுவோம்” என்று உணர்ச்சி வசத்தில் சிக்கியவன் போல் சொல்லி அவளை வெறிக்கப் பார்த்தான்.

வீடு, வாசல், புருஷன், புயல் எல்லாம் காத்தூனின் அகக் கண் பார்வையில் மங்கி உருத் தெரியாமல் போய் விட்டன. ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அவள் ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவள் போல் அவள் நின்ற தோற் றம் பிரதிபலித்தது. தூணைப் பிடித்திருந்த அவள் பிடி தளர்ந்தது. வீட்டை விட்டு இறங்கி மஸ்தானை நெருங்கி அவனுடன் நடையைத் துவக்கினாள். ஐம்பது வருஷ கால மாக நின்று கொண் டிருந்த பிரம்மாண்டமான ஆலமரம் சட சட சடாரென்று அவர்கள் முன்னால் முறிந்து வீழ்ந்த பீதி தரும் காட்சி அவர்களுக்கு அச்சத்தை விளைவிக்க வில்லை. அவர்கள் போவதைக் கண்ட செடிகளும் கொடி களும் சலசலப்பை உண்டாக்கி ஏளன நகை புரிந்தன. வெட்கம் தாளாது வாழை மரங்கள் குலைகளுடன் சிரம் கவிந்தன. அந்த அவலட்சணக் காட்சியைக் காணச் சசி யாத கரு முகில்கள் தாவித் தாவி ஓட்டமெடுத்தன.

எங்கும் ஒரே வெள்ளக்காடு . முழங்கால் உயரம் தண்ணீர்த் தேக்கம். கொட்டுகிற மழையையும் முழுப் பலத்துடன் வீசுகிற காற்றையும் துளி கூட லட்சியம் செய்யாமல் அவர்கள் சென்று கொண் டிருந்தார்கள். நேராக நெடும் பலத்தை அடைந்து, அங்கிருந்து வங்கம் சென்று, பிறகு குறுக்கு வழியாக முத்துப் பேட்டையை அடைந்துவிட வேண்டும் என்ற திட்டம் மஸ்தானின் அறிவில் உருவாயிற்று.

அவர்கள் ரெயில்வே கேட்டைத் தாண்டி ஊரின் வரம்பைக் கடந்தபோது ஒரு பயங்கர இருள் எங்கே பார்த்தாலும் சூழ ஆரம்பித்தது. சாலையிலே ஒரு மதகு எதிர்ப்பட்டது. அதன் குறுக்கே ஏதோ கம்பிகள் கிடந்து மின்னுவதை மின்னலின் ஒளியில் கண்டான் மஸ்தான்.

“காத்தூன், நீ இங்கேயே இரு. அந்த வேலியை அப் புறப்படுத்திவிட்டு வருகிறேன். நான் அதைத் தாண்டி விடுவேன். ஆனால் நீ கால் தடுக்கி வீழ்ந்து விடுவாய் என்று தான் பயப்படுகிறேன்” என்று சொல்லிவிட்டு விடு விடென்று நடந்தான். அந்த வேலி’யை அவன் தீண்டி யதுதான் தாமதம்; தடாலென்று எகிறிக் குப்புற வீழ்ந்து விட்டான்.

“சரியாப் போச்சு! நீங்களே குட்டிக்கரணம் போட்டுட்டிங்களே!” என்று ஹாஸ்யமாகச் சொல்லி, உரக்கச் சிரித்துவிட்டாள் காத்தூன்.

“இந்த மழையிலே எங்கே புறப்பட்டே?” என்று பரிசயமான குரல் பின்னால் எழுந்ததைக் கேட்ட காத்தூன் திடுக்கிட்டாள். வெடுக்கென்று அவள் கழுத் துத் திரும்பியது. தன் அண்டை வீட்டுப் பாச்சா மியான் அங்கே நின்றுகொண் டிருப்பதைக் கண்டதும் அவள் தலை கிறுகிறுத்தது. விழிகள் சுழன்றன. உடம்பெல்லாம் வெலவெலத்தது.

“எங்கேம்மா புறப்பட்டே, காத்தூன்?” என்றார் அந்தக் கிழவர் மறுமுறை.

“அவருக்கு மருந்து வாங்க” என்று மழுப்பினாள் காத்தூன், ஒரே பீதியுடன் நாக்குக் குழறியது.

“ஆஸ்பத்திரி எங்கே இருக்கு நீ போற வழி எங்கே?” காத்தூனின் ரத்த ஓட்டம் உறைந்துவிட்டது.

“வா, வீட்டுக்குத் திரும்பு” என்று அந்தக் கிழவர் சற்றுக் கடுமையாகச் சொன்னவுடன் காத்தூன் கலவர மடைந்தாள். அந்தச் சொற்களை மீறுவதற்கு அவளுக்

குத் தைரியமில்லாமல் போயிற்று.

“நடந்த விஷயம் தெரியுமா?” என்றார் கிழவர் கம்மிய குரலில்.

“என்ன?”

“உன் வீடு இடிந்து வுளுந்துடுச்சு.”

“ஆ! அவர் என்ன ஆனார்?” என்று நெஞ்சு பிளந்து விடும்படி அலறிவிட்டாள் காத்தூன்.

“பொல்லாத நேரத்தைப் பாரு. அந்தச் சமயத்திலே நீயும் இல்லை, நானும் அங்கே இல்லை. ஓசையைக் கேட்டுட்டு என் வீட்டுக்காரி அங்கே ஓடி உன் புருசனை அப்படியே இரண்டு கையாலே தூக்கிக்கிட்டு என் வீட்டிலே கொண்டு வந்து போட்டுட்டாள். அந்தக் கிளவிக்கு எப் படித்தான் அவ்வளவு துணிச்சல் வந்துச்சோ ! உசிருக்கு ஆபத்தில்லை, காத்தூன்.”

தன் தலையில் வானமே வீழ்ந்து விட்டது போன்ற பிரமை காத்தூனுக்கு உண்டாயிற்று. அவள் மேனி சிலிர்த்தது. உள்ளம் படபடத்தது. சிறுகுழந்தை போலத்

தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

“நான் பெரும் பாவி, அல்லா! மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டேன். நீ இந்தப் பைத்தியக்காரியை மன்னிச்சுடு, மன்னிச்சுடு!” என்று வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்திக் கதறிக்கொண்டே பித்துப் பிடித்தவள் போல் வீட்டை நோக்கி ஓடினாள். கடகடவென்று எரிச்சலுடன் குமுறிக்கொண்டு கருமேகங்கள் தங்கள் அரு வருப்பை அவள் மீது காட்டத் தொடங்கின. காற்றுத் தன் திசையை மாற்றிக்கொண்டு ‘ஹோ’ என்ற ஓலத் துடன் அவளை விரட்டி விரட்டி ஆறுதலடைய எத்தனித்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்த தினசரியில் திருத்துறைப்பூண்டி நிருபர் பின்வரும் செய்தியை அனுப்பியிருந்தார்.

“கடந்த இரண்டு நாட்களாக அடித்த புயல் திருத் துறைப்பூண்டியைத் துவம்சம் செய்துவிட்டது. ஏராளமான மரங்களும் வீடுகளும் வீழ்ந்துவிட்டன. கால்நடை களுக்குப் பலத்த சேதம். முதல் நாளன்றே மின்சார மெயின் கம்பங்கள் விழுந்துவிட்டன. முதலியார் மத கிடம் அழுகிப்போன கருகிய பிணமொன்று அகப்பட் டது. பிரபலமான கள்ள நோட்டுக் கேஸில் ஈடுபட்ட வரும், தலைமறைவாக இருந்தவருமான மஸ்தானின் உடல் அது என்று கண்டுபிடிக்கப்பட்டது. மதகிடம் கிடந்த மின்சாரக் கம்பி அவரைத் தாக்கியதால் மரணம் ஏற்பட்டதாகப் பஞ்சாயத்தார் முடிவு செய்திருக்கிறார்கள்.”

– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.

– ‘கலைமகளில்’ காட்சியளித்தவை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *