மனசு, அது ரொம்பப் பெரிசு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 7,953 
 

கடற்கரைக்குச் செல்லும் சாலையில் நீள நெடுக நடந்து கொண்டிருந்தார் நடராஜன். காலை வீசிப் போட்டு நடக்கும் இந்த நடைப்பயிற்சி தான் எவ்வளவு சுகமாக இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். கூடவே மனதிற்கும் அல்லவா பயிற்சி? ‘சள சள’வென்று பேசிக்கொண்டே ஒரு குழுவாக ‘வாக்கிங்’ செல்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும் அவருக்கு. தனிமையில் வாய் மௌனம் சாதிக்கும்போது மனதின் கதவு திறந்து விடுகிறதே? மனதோடு பேசிக்கொண்டே நடப்பது எவ்வளவு ருசிகரமான அனுபவம்?

நிழல் கவிந்த சாலை! ஒரு இருபது வருடங்களுக்கு முன் அவரும் அந்தத் தெருவில் இருந்தவர்களும் முனைந்து தெருவின் இரு புறங்களிலும் வைத்துக் காப்பாற்றிய மரங்கள் இப்பொழுது நெடிதுயர்ந்து வளர்ந்து அவர்களுக்கே குளிர்ச்சியான நிழலைத் தருகின்றன. அவர்களில் எத்தனை பேர் இன்னும் இந்தத் தெருவில் இருக்கிறார்கள் என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. கணக்குப் போட்டால் தன்னைத் தவிர கணேசன், அண்ணாமலை, டேவிட், அன்னம்மாள் என்று நாலைந்து பேர்கள் தான் தேறுவோம் என்று தோன்றியது. மீதியுள்ளவர்களில் இயற்கை எய்தியவர்களைத் தவிர மற்றவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டோ, விற்று விட்டோ குழந்தைகளுடன் அயல் நாடுகளில் சென்று ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். ஒரு வீடு இருந்த இடத்தில் இப்போது பல மாடிக் கட்டிடங்கள்! இப்பொழுதும் தெருவில் இரண்டு வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் உள்ளன. ஒரு வருடத்திற்குள் அங்கே அடுக்கு மாடி குடியிருப்பு வந்து விடும். இப்படி ஒரு மாற்றம் வரும் என்று யாரும் அன்றைய தினத்தில் நினைக்கவேயில்லை. நினைக்க நினைக்க பிரமிப்பாக இருக்கிறது.

மனித வாழ்க்கை நிரந்தரமானதல்ல என்பதற்குச் சரியான உதாரணம் ஐ.டி. துறைதான் என்று தோன்றும் நடராஜனுக்கு. சென்னையில் ஒரு கம்பெனியில் பணியில் சேர்ந்து விட்டு, ‘ப்ராஜக்ட்’ என்ற பெயரில் அயல்நாடு பயணம். அங்கேயே எவ்வாறாவது நீடிக்க முடியுமா என்று பேராசை. அதற்காக பலவகை பிரயத்தனங்களுடன் போராட்டம். கடைசியில் மீண்டும் சென்னைக்குத் தள்ளப்பட்டு இங்கேயும் எந்த ‘ப்ராஜக்ட்’டும் கிடைக்காமல் தான் வேலையில் இருக்கிறோமா இல்லையா என்றே தெரியாமல் பயந்து அனுதினமும் செத்துச் செத்துப் பிழைத்து……………. இந்த அழகில் தற்காலிக அயல்நாட்டு சம்பாத்தியத்தை நம்பி வாங்கிய அறுபது லட்ச ரூபாய் ‘ப்ளாட்’டுக்கு எப்படி மாதாந்திர தவணை கட்டுவதென்று வேறு மண்டையைப் பிய்த்துக் கொண்டு மன அமைதியை இழந்து வாழும் கும்பலாக இருக்கிறதே என்று நினைத்துப் பார்த்துப் பரிதாபப்படுவார். இதில் கொஞ்சம் கூடுதலாக சம்பளம் கிடைக்கிறதென்றால் உடனே அடுத்த கம்பெனிக்கு வேறு தாவி விடுகிறார்கள். இப்போதெல்லாம் ஒரே கம்பெனியிலேயே நிறைய வருடங்கள் வேலை செய்பவர்களை திறமைசாலிகள் என்று மதிப்பதில்லையாம். அப்போ அந்த காலத்திலிருந்து ஒரே அரசாங்க அலுவலகத்திலோ அல்லது ஒரு சிறிய கம்பெனியிலோ கூட வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன்னைப் போன்றவர்கள், அந்த ஸ்தாபனம் முன்னுக்கு வர உழைத்துக் கொண்டிருப்பவர்கள் திறமையற்றவர்களா இல்லை பைத்தியக்காரர்களா?

நடந்து கொண்டே இருந்தபோது நேற்று ‘இஸ்திரி’ செய்யக் குடுத்த புடவைகளை வாங்கி வரச்சொல்லி மனைவி சொன்னது நினைவுக்கு வந்தது நடராஜனுக்கு. தெரு முனையிலுள்ள அடுக்கு மாடி கட்டிட வாசலில் வண்டியை நிறுத்தி இஸ்திரி போடும் குடும்பம் நேற்று இரவு திடீரென்று ஏதோ துக்க செய்தி வந்து ஊருக்குப் போயிருக்கிறதாம். பக்கத்து ப்ளாட் வாட்ச்மேன் சொன்னான். வீட்டுக்கு வந்ததும் பார்வதியிடம் சொன்னார்.

“என்னங்க இது? இப்படியா சொல்லாம கொள்ளாம போவாங்க? அடுத்த வாரம் கல்யாணத்துக்குப் போறதுக்காக ரெண்டு பட்டுப் புடவை வேற கொடுத்திருக்கேனே? தொலஞ்சு போகாம பத்திரமா இருக்குமா? ஏமாத்திட மாட்டானே?” பார்வதி அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டாள்.

“பத்து வருஷமா பழக்கம்! ஒரு நம்பிக்கை வேண்டாமா மனுஷங்க கிட்ட? அந்த ரீதியில யோசிக்காதே! இதோ வந்துடுவான், குடுத்துடுவான்னு நெனைச்சிக்கோ! பாதி ராத்திரியில எல்லா வீட்டு கதவையும் தட்டி சொல்லவா முடியும்? நிச்சயம் ஏதாவது ஒரு வீட்டில எல்லா துணிமணிகளையும் குடுத்துட்டு சொல்லிட்டுத்தான் போயிருப்பான்!” என்றார் நடராஜன் சிரித்துக் கொண்டே. “பாவம்! துக்கத்துக்கு ஊருக்கு ஓடியிருக்கான். என்ன துக்கமோ என்னவோ? அவனுக்கு எவ்வளவு மன வேதனை இருக்கும்?”

“நீங்க இப்படியே ஊரானுக்கெல்லாம் பாவம் பார்த்து பார்த்து வக்காலத்து வாங்கி எல்லாத்தையும் கோட்டை விட்டுடுங்க!” என்று இஸ்திரி போடுபவன் மேல் காட்ட நினைத்த கோபத்தையெல்லாம் அவர் மேல் காட்டினாள் பார்வதி.

வீட்டில் நடராஜனும் அவர் மனைவியும் மட்டுந்தான். குழந்தை பாக்கியமில்லை. எல்லோரையும் போல வீட்டை இடித்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்பது பார்வதியின் ஆசை. “நிமிஷமாக லட்சாதிபதி கோடீஸ்வரர் என்று ஆகிவிடுகிறார்களே? நாம் மட்டும் அன்று இருந்தபடியே இன்றும் வாழ்ந்திண்டிருக்கோமே !” என்று அங்கலாய்த்துக் கொள்வாள்.

அதற்கு நேர்மாறாக, “நாம் த்ருப்தியாகத் தானே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்? நமக்கு என்ன குறைவு? நம் காலம் வரை நமக்கு இது போதுமே? நன்றாக இருக்கும் வீட்டை இடித்துக் கட்ட வேண்டிய அவசியமென்ன? தோட்டத்தோடு கூடிய அழகிய ஒரு வீட்டை ஆறு ப்ளாட்டுகளாக்கி நமக்கு ஆக வேண்டியது என்ன?” என்று நடராஜன் மறுப்பதால் அவருக்கு எந்த விதமான சாமர்த்தியமும் இல்லை என்பது அவளது கணிப்பு. அதை எந்த விதத்திலாவது இடித்துக் காட்டாமல் அவளுக்கு ஒரு நாள் பொழுது கூடப் போகாது. அவள் நினைத்த மாதிரி அவரில்லை. மிகச் சாதாரணமான சாமானிய மனிதராய் அவர் எல்லோருடனும் கலந்து பழகுவது அவளுக்கு ஆகாது. முக்கியமாக அந்தத் தெருவில் யாராவது உதவி என்று கூப்பிடும் குரலுக்கு அவர் உடனே ஓடுவது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது.

மாலையானால் பார்வதி எதிர் வீட்டு அன்னம்மா மாமியோடு பகவத் கீதை சொற்பொழிவு கேட்க பெருமாள் கோவிலுக்குப் போய் விடுகிறாள். “கீதை கேட்டால் மனுஷனுக்கு நல்ல ஞானம் வரும் தெரியுமா? நீங்க நல்லதெல்லாம் கேட்க எங்க வருவீங்க? ஒங்களுக்கெல்லாம் டீவியில் வர்ற அக்கப்போர் ந்யூஸ¨ம், அக்கம் பக்கத்து வீட்டு விவகாரங்களுந்தான் பிடிக்கும்.” என்று அவருக்கு ஒரு நற்சான்றிதழ் பத்திரம் வேறு வழங்கி விட்டு தான் செல்வாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி ஒரு பால் பாக்கெட் காணாமல் போகிறது. பால் போடும் பையன் காலை ஐந்தரை மணியிலிருந்து ஆறுக்குள் மூன்று பாக்கெட்களை அதற்கென்று ‘கேட்’டில் பொருத்தியிருக்கும் பால் போடும் பாக்ஸில் போட்டு விடுவான். அநேகமாக உடனேயே நடராஜன் எடுத்து விடுவார். சில நேரங்களில் சிறிது தாமதமானால் கூட ஒரு பாக்கெட் காணாமல் போய்விடுகிறது. இதைக் கண்டுபிடிப்பதற்காக இப்போது அதிகாலையில் வாசலில் நிற்க வேண்டியிருக்கிறது. அவர் வாசலில் நிற்கும் நாட்களில் பால் பாக்கெட் எண்ணிக்கை குறைவதில்லை.

நடராஜனுக்குப் பக்கத்து வீட்டில் பிரேமா ஆன்ட்டியும் படுத்த படுக்கையாக இருக்கும் அவருடைய நோயாளிக் கணவர் டேவிட்டும் வசிக்கிறார்கள். அவர்கள் பிள்ளை துபாயில் இருக்கிறான். எப்போதாவது தான் வருவான். இது அவனது வீடு தான். வாடகையில்லாமல் இவர்கள் இருக்கிறார்கள். ஏதோ செலவுக்குப் பணம் அனுப்புவானான். அது போதாமல் சிரமப்படுகிறார்கள் என்று அவர்களைப் பார்த்தாலே தெரிகிறது. முன்பு ஆன்ட்டீ வீட்டு வாசலிலும் ஒரு பால் பாக்ஸ் தொங்கும். தினமும் பால் வாங்குவார்கள். இப்பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டார்கள். எப்போதாவது கடைக்கு சாமான் வாங்கப் போகும்போது ஒரு பால் பாக்கெட்டும் வாங்கி வருவாள்.

விடியற் காலையில் தன் வீட்டு வாசலில் வைத்து பராமரித்து வரும் செடிகளுக்கு பைப் மூலம் தண்ணீர் விடுவது பிரேமா ஆன்ட்டிக்குப் பழக்கம். நடராஜன் வீட்டில் அவர் தான் காலையில் காப்பி போடுவார். பார்வதி மூட்டு வலியால் அவதிப் படுவதால் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.

வாசல் வராந்தாவில் உட்கார்ந்து காப்பி குடிக்கும்போது பக்கத்து வீட்டு வாசலில் பிரேமா ஆன்ட்டீயைப் பார்த்தால், “காப்பி குடிக்கிறீங்களா?” என்று கேட்பது அவருக்கு வழக்கம். ஆன்ட்டியும் தவறாமல், “வேண்டாம்! நாங்க கட்டாஞ்சாயா (பால் விடாத கறுப்புத் தேநீர்) குடிச்சாச்சு!” என்று புன்சிரிப்போடு மறுத்து விடுவார். கண்ணுக்கெதிரே பொருளாதாரத்தில் கஷ்டப்படும் அவர்களுக்கு எந்த விதத்தில் உதவமுடியும் என்று நடராஜன் யோசித்துக் கொண்டே இருப்பார். ஏதாவது சமைத்துக் கொடுக்கலாம் என்றால் அவர்கள் சாப்பாட்டு பழக்கம் வேறு விதமானது. படுக்கையாக இருந்தால் கூட டேவிட்டுக்கு மீன் இல்லாமல் சோறு இறங்காது என்று ஆன்ட்டீயே சொல்லுவாள். அவ்வப்போது அவர்கள் வீட்டுக்குப் போய் டேவிட் அருகில் உட்கார்ந்து பேசி விட்டு வருவார். தான் கடைக்குச் செல்லும்போது டேவிட்டுக்கு ஏதாவது மருந்து மாத்திரை தேவைப்படுகிறதா என்று கேட்டு வாங்கி வருவார். சில சமயங்களில் ஆன்ட்டீ, தன் கையில் காசு இருந்தால், கட்டாயப்படுத்தி அதற்கான பணத்தைக் கொடுத்து விடுவாள். பெரும்பாலும் நடராஜனே தான் செலவழித்து வாங்கிக் கொடுப்பார். அதில் அவருக்கு ஒரு த்ருப்தி. இப்போது ‘சர்ச்’ சிற்கு செல்ல முடியாததால் கணவனும் மனைவியும் ரெண்டு வேளை வீட்டிலேயே கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். நோயாளிக் கணவனோடேயே நாள் முழுவதும் அல்லல் படுவதால் ஆன்ட்டீ மன அழுத்தம் தாங்காமல் தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள். சில சமயங்களில் வாசலில் நின்று எதிரே யாரோ நிற்பதைப் போல கையை ஆட்டி ஆட்டிப் பேசுவதையும் நடராஜன் கவனித்திருக்கிறார். பார்வதிக்கு ஆன்ட்டியைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்காது.

“பொம்பிளைன்னா வீட்டுக்குள்ள வேலை இருக்காது? எப்போ பார்த்தாலும் வாசல்லேயே நின்னுக்கிட்டு என்ன வேண்டியிருக்கு?” என்பாள்.

பால் போடும் பையன் அந்த மாதப் பணம் வாங்க வந்தபோது சொன்னான். “நானு பால் போடற சமயம் பக்கத்து வீட்டு பாட்டி தான் நம்ப பால் பாக்ஸ் பக்கம் நின்னுக்கிட்டு செடிக்குத் தண்ணி ஊத்திக் கிட்டிருப்பாங்க! அவங்களை வேணா கேட்டுப் பாருங்க!” என்றான்.

அடுத்த நாள் பால் பாக்கெட் போட்டு விட்டான் என்பதை இவர் வாசல் வராந்தாவிலிருந்தே கவனித்து விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வராமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தார். பிரேமா ஆன்ட்டீ, “பால் வந்திருச்சி!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு பால் பாக்ஸிற்குள் கை விட்டு ஒரு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு விரைந்து தன் வீட்டிற்குள் செல்வதை கவனித்தார். அதிர்ந்து போனார். பாவம்! ஆன்ட்டீக்கு காப்பியென்றால் கொள்ளை பிரியம். பால் வாங்க இயலாமல் தனக்குப் பிடித்ததை குடிக்க முடியாமல் எவ்வளவு பரிதாபம்! தப்பு செய்கிறோம் என்றே தெரியாமல் அடுத்த வீட்டு பால் பாக்கெட்டை எடுக்கும் ஆன்ட்டியைப் பார்த்து நடராஜன் பரிதவித்துப் போனார்.

மறு நாள் வாசலில் நின்று பால்காரப் பையனைப் பார்த்து சொன்னார். “காலையில சைக்கிளை ஓட்டிக்கிட்டு பீச் பக்கம் சில பசங்க வர்றாங்க. அவங்களாத் தான் இருக்கும். பால் பாக்ஸ் பக்கமா வந்தவங்க என்னைப் பார்த்ததும் வேகமா சைக்கிள்ள ஓடிட்டாங்க! ஒரு வாரம் நின்னா, நமக்குத் தெரிஞ்சிப்போச்சுன்னு பயந்துருவாங்க. நா பார்த்துக்கிறேன்!” என்றார்.

ஆன்ட்டீ பால் பாக்கெட் எடுத்துக் கொள்ளும் நாட்களில், காலையில் காய்கறி வாங்கப் போகும்போது ஒரு பால் பாக்கெட் வாங்கி வந்து பார்வதி கவனிக்காத சமயம் ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

‘நாம குடுத்தா நிச்சியமா வாங்கிக்க மாட்டாங்க. நல்ல வேளை அவங்களே வேணுங்கறப்போ எடுத்துக்கிறாங்க. போகட்டும்!’ எந்த விதத்திலாவது பக்கத்து வீட்டில் இருக்கும் அந்த வயதான தம்பதிக்கு உதவ மாட்டோமா என்று நினைத்துக் கொண்டிருந்த நடராஜனுக்கு இப்போது மனதில் அலாதியான நிம்மதி ஏற்பட்டது.

– கலைமகள் தீபாவளி மலர் 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *