அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை முழுமையாகத் திருப்பித் தந்துகொண்டிருந்தது. ரீசஸ் பீரியடு முடிந்ததும் கிளம்பி வந்திருந்தாள். இந்நேரம் மூன்றாவது பீரியடு தொடங்கியிருக்கும்.
”ஒன்னிய கௌம்பச் சொல்லிட்டேன். கௌம்பு…” – அவளைக் கண்கொண்டு பார்க்க விரும்பாதவன்போல ராஜு கட்டளையிட்டான்.
மாயாவுக்கு, தலை கிறுகிறுத்தது. பிடித்து நிற்கக்கூட ஒரு கொழுகொம்பு இல்லாத நட்ட நடுவீதி. ஒதுங்கி நின்ற வீட்டின் சுவரைத்தான் தொட்டு நிற்கவேண்டி இருந்தது. நல்லவேளை தெருவில் ஆள் நடமாட்டமும் இல்லை. ஊருக்கு மையமான தெருவாக இருந்தாலும், ஒதுக்குப்புறம்போல வாலோடியாக அமைந்த வீதி. அதனாலேயே இவர்களைப்போல பலரது ரகசிய சந்திப்புகளுக்கு ஏதுவாக அந்தத் தெரு இருந்தது.
‘போம்மா…’ – மறுபடியும் மாயாவை அனுப்புவதிலேயே குறியாக இருந்தான்.
அப்போதுதான் அவள் கண்களில் இருந்து நீர் புறப்பட்டது. அதை அவனுக்குக் காட்டாமல் பின்புறமாகத் திரும்பிக்கொண்டு தேம்பினாள்.
‘இப்ப என்னாத்துக்கு அழற?’
‘பின்ன… இத எதுக்கு கழுத்துல கட்ன? இதோட நான் எப்பிடி பள்ளியொடம் போறது?’ – கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறைத் தூக்கிக் காண்பித்தாள்.
‘பிடிக்கலியா?’
மாயாவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அதைச் சாதகமாக்கி மறுபடியும் கேட்டான்…
‘சொல்லு… பிடிக்கலியா?’
‘இப்ப எதுக்கு இதைக் கட்டுன?’ – அந்தக் கயிறை அருவெறுப்பாகப் பார்த்தாள்.
‘வேற வழி இல்லை மாயா…’ என நேற்று பார்த்த சினிமா நாயகனின் பிரதியாகப் பேச ஆரம்பித்தான்.
‘ஒரு வருஷமா காதலிக்கிறோம். காதலிக்கிறோம்ல? வீட்லயும் ஏத்துக்க மாட்டேங்கிறாக… நீயும் ‘உம்’ குடுக்க மாட்டேங்கிற. நான் என்ன செய்யட்டும்?’
”அதுக்காக, இப்பிடியா?’ – சுற்றிலும் பார்த்தாள். ‘யாரும் பார்த்திருப்பாகளோ?’ ஒரே ஒரு காகம் மட்டும் பக்கத்துச் சுவரில் அமர்ந்து இவர்களைக் கூர்மையாகப் பார்த்தது. மாயா, காக்கையின்பால் பார்வையைத் திருப்பியதும் அது ‘கா… கா…’ எனக் கரையத் தொடங்கியது. ‘அய்யய்யோ’ என, காகம் எல்லோரையும் அழைத்துச் சொல்வதுபோல் இருந்தது மாயாவுக்கு. ஏற்கெனவே வீட்டில் ஏழரையாக இருக்கிறது.
‘இதைக் கழட்டிவிடு. ப்ளீஸ்…”
‘மாயா, அது தாலி!” – அவசரமாகச் சொன்னான். எங்கே தானாகக் கழட்டிவிடுவாளோ என்கிற பயம் வந்துவிட்டது ராஜுவுக்கு.
‘இப்பிடியே என்னால பள்ளியொடம் போவ முடியாது. பிள்ளைக கிண்டல் செய்வாளுக. டீச்சர் வோப்ப(வகுப்பு) விட்டே தொரத்துனாலும் தொரத்திவிட்ருவாக’ – ராஜுவிடம் சொல்லும்போது, அப்படி ஓர் அபாயம் இருப்பதை இன்னும் பலமாக மாயா உணர்ந்தாள். தலையைக் குனிந்து கழுத்து வழியாக அதைக் கழற்ற எத்தனித்தாள்.
‘மாயா…” – வேகமாக வந்து, அவளது இரண்டு புஜங்களையும் பிடித்து உலுக்கித் தடுத்தான்.
‘என்னாங்கடா இது! நடுவீதியில வெச்சு கிஸ்ஸிங்கா? அங்குட்டுப் போறீயளா… நாயை அவுத்துவிடட்டுமா? சனியனுக, இது என்ன ஆணு, பொண்ணு நடக்கிற தெருவா… இல்ல லவ்வர்ஸ் பார்க்கா? ஊர்ல ஆப்ட்டதுக பூராம் இங்கன வந்துதே மீட்டிங் போடுதுக. சே… சே…” – தோளில் நெல் அளக்கும் சாக்குகளோடு வீட்டினுள் இருந்து இறங்கிய தரகர் நல்லுச்சாமி காறி உமிழ்ந்துவிட்டு நடந்தார்.
மாயா அவரைப் பார்த்ததும் அப்படியே பம்மினாள். ‘அய்யாவுக்குப் பழக்கமான தரகர்’. அதற்கு மேல் ராஜுவாலும் அந்த இடத்தில் நிற்க முடியவில்லை. இது ராசி இல்லாத இடம் என்ற முடிவுக்கு வந்தான். ‘இந்த இடத்துக்கு எப்போ வந்து எது செஞ்சாலும் பிரச்னைதான்’ என எண்ணியவாறு, அப்படியே மேற்குப் பக்கமாகச் சரிந்த சந்து வழியே கீழ் இறங்கினர்.
அது கோயில்கள் நிறைந்த பகுதி. ‘ஏதாவது ஒரு கோயிலில் நுழைந்துவிடலாமா?’ என்ற சிந்தனையில் இருந்தான்.
‘ஏய்… நான் ஸ்கூலுக்குப் போவணும்ப்பா. ஸ்டடி கிளாஸு. ஏதோ அவசரமா கூப்புட்டியேனு வந்தா, இம்ச பண்றே. இந்தா ஒன் ஃபோனு. ஆள வுடு. லீடர்கிட்ட சொல்லிட்டு வந்தேன். பெல் அடிக்கங்குள்ள போவாட்டி, டீச்சர்ட்ட போட்டுக்குடுத்துருவா. அப்புறம் எக்ஸாம் எழுத முடியாது. புடி!” – நடந்துகொண்டிருக்கும்போதே அவன் தனக்குத் தந்த செல்போனையும், கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறையும் அவிழ்த்து அவனது கையில் தந்தாள்.
‘ஏய்… ஏய்..! இந்தா புள்ள மாயா, சொல்றதக் கேளு. ஏய்… ப்ளீஸ்” என்ற ராஜுவால் உரக்கக் கத்த முடியவில்லை. வீடுகளும் ஜனப் போக்குவரத்தும் உள்ள பகுதி. இதற்குத்தான் ‘கண்மாய் பக்கம் போலாம்’ எனச் சொன்னான். பயப்படுகிறாள். ‘அவனவன் எங்கெங்கோ இழுத்துட்டுப் போறான்; என்னென்னவோ செய்றான். கட்டிய தாலியைக் கழட்டி போட்டுட்டுப் போறாளே’ என்பதுதான் அவன் மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எவரும் பார்க்கும் முன் அதை பேன்ட் பாக்கெட்டில் திணித்துக்கொண்டான். செல்போனையும் தந்துவிட்டாள். ‘இவளுக்காக என்னென்னவோ செய்து, எப்படி எல்லாமோ காசு சேர்த்து இந்த போனை வாங்கிக் குடுத்தா, அதை அலட்சியமா நினைச்சுத் தூக்கி எறிஞ்சுட்டுப் போறாளே’ – நினைக்க நினைக்க, அவனுக்கு நடந்துபோகவே கஷ்டமாக இருந்தது. பெட்டிக்கடையில் ஒரு ஃபில்டர் சிகரெட் வாங்கிப் பற்றவைத்தான். புகை, நெஞ்சுக்குள் குபீரென இறங்கித் திக்குமுக்காடியது. இருமல் வந்து புகையை வெளித்தள்ளியது. கண்களில் நீரும் வந்து ஒரு கணம் ஆட்டிவைத்தது. பீடியானால் இத்தனை புகை வராது. ‘ஒருவேளை கூடுதலாக உறிஞ்சிட்டோமோ!’
2….
”என்னா மச்சான், வேல இல்லியா?” – எதிரில் வந்த திருமுருகன், சைக்கிளை நிறுத்திக் கேட்டான்.
‘பார்ரா… சீரட்டெல்லாம் ஊதுற! அட்வான்ஸ் எதும் செமயா பிடிச்சிட்டியா?’ எனத் தொடர்ந்து கேட்டான்.
அவனுக்கு எந்தப் பதிலும் கூற விரும்பாத வனாக, ‘போலாமா?” என மொட்டையாகப் பதில் சொல்லிவிட்டு எழுந்தான்.
‘எங்க?”
ராஜுவுக்கும் தெரியவில்லை. ‘எங்கே போக..? முதல்ல இந்த இடத்துல இருந்து கிளம்பணும்’ – மௌனமாக நடக்க ஆரம்பித்தான். திருமுருகனுக்கு, ராஜுவின் நடத்தை விளங்காததாக இருந்தது.
‘என்னடா, சத்தம் காட்டாம போற… என்னா விசியம்?’ – அவனுக்கு இணையாக சைக்கிளை உருட்டினான்.
பதில் பேசாமல் சைகையால் ‘வா’ என அழைத்தபடி நடையைத் தொடர்ந்தான். ராஜுவின் அந்த நிலையில் பதில் பெற முடியாது என்பதைக் கண்டுகொண்ட திருமுருகன், ”மாப்ள… நமக்கு ஒரு சீரட்டு வாங்கித் தாடா” என்றபடி சைக்கிளை விரைவாக உருட்டி அவனை மறித்தான்.
அப்போதும் பதில் பேசாமல், தன் கையில் இருந்த எச்சில் சிகரெட்டை ஆழமான ஓர் இழுப்பு இழுத்துவிட்டு அவனிடம் நீட்டினான். இதை எதிர்பார்க்காத திருமுருகன், மௌனமாக வாங்கிக்கொண்டான்.
‘என்னாடா பிரச்னை?’
”சாகப்போறேன்டா’ – பலவீனமான குரலில் சொன்னான்.
”ஏன்டா?”
‘ஆமா, இருந்து ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. போய்ச் சேரவேண்டியதுதேன்’ – தலையைத் தலையை ஆட்டிப் பேசினான்.
‘ஏன்டா, ஆரும் ஏதும் சொன்னாகளா?’
ராஜுவின் இந்த விரக்தியான பேச்சு, திருமுருகனுக்கு அச்சம் தருவதாக இருந்தது. எந்த நேரமும் கலகலப்பாக இருப்பவன். அவன் எந்த இடத்தில் இருந்தாலும், அந்த இடம் தனியாகத் தெரியும். வேலைக்கு அழைத்துப்போனாலும் சவாலான வேலையைத்தான் கேட்பான். இந்த ஊரில் முதன்முதலில் சாரம் கட்டாமல் கயிற்றில் தொங்கியபடி வெள்ளையடித்தவன் ராஜுதான். வயதில் சின்னவன், ஆனாலும் பேச்செல்லாம் பெரிய மனுஷத்தனமாக இருக்கும்.
‘மனுசனுக்கு மானம் முக்கியம்டா.’
‘ஏன்… எவெந் தாலியவும் அத்துப்புட்டியா?’
நண்பர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதில் சரி-தவறு பார்க்காதவன் ராஜு. ”ஓ’னு அழறவன்கிட்ட காரணம் கேட்டுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?” என விளக்கம் கேட்பவர்களுக்கு பதில் சொல்வான். அப்படித்தான் ஆட்டோ ஓட்டுகிற பாக்கியநாதன் போலீஸில் சிக்கியபோது, ‘திருட்டுக்கேஸு’ என அத்தனை பேரும் ஒதுங்கிக்கொள்ள, ராஜு மட்டும் ‘ஃப்ரெண்டு சார்’ என நெஞ்சைக் காட்டிக்கொண்டு முன்னே போக, இவனையும் சேர்த்து ஒரு வாரம் உள்ளே உட்காரவைத்துவிட்டார்கள்.
3….
‘என் தாலிய அத்துட்டாடா” – மிகவும் சோகமாகப் பேசினான்.
”அடக் கண்றாவியே, அப்புறம்..?!’
‘அதேன் ஒண்ணும் புரியல. என்னாடா… பொம்பளைக இப்பிடி இருக்காளுக! எத்தனை கஷ்டப்பட்டு, மூணு நாளா யோசிச்சு, எங்கெங்கயோ பதுங்கி, ஒளிஞ்சு தாலியைக் கட்டினா… அவ பாட்டுக்கு ஈசியா கழட்டிக் கையில குடுத்துட்டுப் போறாடா’ – தாலியைப் பற்றி என்னென்னவோ நினைத்து இருந்தவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
‘மச்சான், அத விடு. தாலியில எதும் தங்கம் இருக்கா?’
‘இல்லடா, வெறும் மஞ்சக் கயறுதேன்.’
‘அப்படின்னா அதைத் தூக்கி எறி’ – ஒட்ட
உறிஞ்சிய சிகரெட்டைத் தூரப் போட்டுவிட்டு பதில் சொன்னான்.
‘என்னடா, நீயும் என்னோட ஃபீலிங் புரிஞ்சுக்காமப் பேசுற. பீர் போடலாமா?’
‘பீர்’ என்றதும், திருமுருகனுக்கு ஆலோசனை வானை முட்டியது.
‘காசே இல்லேன்ன?!’ என்றவன், ”உழவர் சந்தைப் பக்கம் போலாம்’ என்றான். ராஜுவைக் கைப்பிடியாகப் பிடித்துக்கொண்டான். ‘இன்னைக்கு நிலைமைக்கு இவனை விட்டா, வேற வழி இல்லை’ – மனதில் எண்ணிக் கொண்டான்.
4….
11 மணி என்பதால், ஒயின்ஷாப் பாரில் கூட்டமே இல்லை. வாடிக்கையாகிப்போன குடியை விட முடியாத நபர்கள், கடை திறக்கும் முன்பே வந்து காத்திருந்து வாங்கிக்கொண்டு போனார்கள். அடையாளம் தெரியாத ஓரிருவர் மட்டும் ஓரமாக உட்கார்ந்து குடித்துக்கொண்டிருந்தனர். கூட்டம் இல்லாத இடத்தில் இந்த விஷயம் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்ட இருவரும், ஒரு பீரை பார்சல் செய்துகொண்டு கிளம்பினர். வழியில் கிளாஸும் கடலைப் பருப்பும் வாங்கினர். பெரிய கண்மாயின் கரை வழியே நடந்து, அய்யனார் கோயில் மரத்தடியில் சைக்கிளை நிறுத்தினர்.
‘இன்னிக்கி வேலை இல்லியா மச்சான்?’
‘இருக்குய்யா… நாந்தேன் இவளுக்காக லீவ் போட்டேன். ஏன்டா மாப்ள இந்தப் பொம்பளைக நம்பளப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளுக?’
”அப்பிடிச் சொல்லாத மச்சான். லவ்வுன்னா என்னா தெரியும் ஒனக்கு?’
பாட்டிலைத் திறப்பதற்கு முன்பே இந்த வார்த்தையைச் சொன்னதுதான் அவனது தவறு. சுருக்கெனக் கோபம் வந்துவிட்டது ராஜுவுக்கு.
‘நான் என்ன லூஸா? எனக்கும் வயசு இருவது ஆச்சு. பள்ளிக்கூடம் போன காலத்துலயே நாங்களும் பல பேர ஓட்டியிருக்கோம் தெரியுமா? என்னாங்கடா… ஆளாளுக்கு ‘லவ்வுன்னா தெரியுமா, தாலின்னா என்னானு புரியுமா?’னு ரவுசு விட்டுக்கிட்ருக்கீங்க? நான் என்ன ‘சின்னதம்பி’ பிரபுவா? சாக்ரதை…’ – நாக்கை மடித்து பல்லால் மட்டியைக் கடித்துப் பேசினான். பாட்டில் சபைக்கு வரவில்லை.
கண்மாய்ச் சரிவில் இருந்தது அந்தக் கோயில். சூலமும் அரிவாளும் மட்டுமே நிலை குத்தி நிற்க, மூன்று நடுகற்கள் எண்ணெய்ப் பிசுக்குடன் இருந்தன. வலது பக்கம் கண்மாயும், இடது பக்கம் வயலும் கரும்புத் தோட்டங்களும்… சிலுசிலுவெனக் காற்றடித்தபடி இருந்தது. கண்மாய்க் கரை நல்ல அகலமாக இருந்ததால், தோட்டங்களுக்கு அவ்வப்போது போக வர இருக்கும் இரு சக்கர வாகனங்களும் டிராக்டர் சத்தமும் தொடர்ந்தவண்ணம் இருந்தன. ராஜுவிடம் பாட்டிலைக் கைப்பற்றத் தவறிவிட்டதை உணர்ந்தான் திருமுருகன். ஆனாலும் வாங்கிவந்ததைக் காலிசெய்யாமல் போக மாட்டான் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது. அதைவிட ராஜுவின் பேச்சு இன்றைக்கு ஆணவமாகத் தெரிந்தது. ‘அதை முதலில் காலிசெய்யணும்’ என்ற ஆவேசம் நின்றது. திருமுருகன் யார் என்பதைக் காண்பிக்க, இது ஒரு நல்ல சந்தர்ப்பம்கூட.
‘நீ யாருங்கிறது எனக்குத் தெரியும்; நான் யாருங்கிறது உனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் யாருங்கிறது ஊருக்கே தெரியும்’ – சினிமா வசனத்துடன் தொடங்கினான். ”ரெண்டு பேருமே போர்டு ஹைஸ்கூல்ல எட்டாப்பு வரைக்கும் படிச்சவனுகதேன். சரியா? நீ எத்தன பேர ஓட்டுன… நான் எத்தன பேர ஓட்டுனேன்னு ஸ்கூல் வாத்தியாரக் கேட்டா தெரியும்.’
திருமுருகனின் அமெரிக்கையான பேச்சு ராஜுவைக் குழப்பியது.
”பொறுமைடா, நிறுத்திப் பேசு. பொதுக்கூட்டத்துல பேசினாப்ல பேசுற. ஒன்னிய எதுக்கு ஸ்கூலவிட்டுத் தொறத்துனாக… ஞாபகம் இருக்கா?’
ராஜுவின் பையில் இருந்த பீடியை எடுத்துப் பற்றவைத்த திருமுருகன், ”ம்… செக்ஸ் புஸ்தகம் கொண்டுவந்தேன்னு வாத்தியார் பிடிச்சுட்டாரு. நிமிஷத்துல மிஸ்ஸாயிருச்சு. இல்லேன்னா, ஜன்னல் வழியா விட்டு எறிஞ்சிருப்பேன்.’
‘நான் எதுக்கு வெளிய வந்தேன்?’
‘வெளிய வந்தியா? கழுத்தப் பிடிச்சு கேட்டு வரைக்கும் வந்து வாட்ச்மேன் தள்ளிவிட்டாரப்பூ…” – கேவலமான தொனியில் கூவினான்.
‘ரைட்டு. எதுக்குத் தள்ளுனாங்க… சொல்லு!’
அந்தக் காட்சி, ராஜுவின் கண்களைவிட்டு இன்னும் அகலாமல் இருந்தது. மாயாவைப்போல அன்றைக்கு மாரியம்மாள் தன் வகுப்பில் வந்து சேர்ந்திருந்தாள். நல்ல சிவப்பு; துறுதுறுவென எல்லோரிடமும் வம்பு இழுத்துப் பேசிக்கொண்டிருப்பாள். சுபா டாக்கீஸில் எந்தப் படம் போட்டாலும், தான் போகாவிட்டாலும் யாரிடமாவது கதை கேட்டு வந்துவிடுவாள். வாத்தியார் இல்லாத நேரங்களில் மாரியம்மாள் சொல்லும் சினிமா படத்தின் கதைதான் வகுப்பில் ஓடிக்கொண்டிருக்கும்.
அப்படித்தான் ‘மேட்டுக்குடி’ படத்தில் கவுண்டமணிக்காக கார்த்திக் லவ் லெட்டர் கொடுக்கும் காட்சி பல நாட்கள் ஓடிக்கொண்டி ருந்தது. ‘லவ் யூ பேபி’ என ஸ்டைலாக ரோஜா பூவை ஆளுக்காள் நீட்டிக்கொண்டு விளையாடினர். ராஜுவும் துணிச்சலாக லவ் லெட்டர் ஒன்றை நிஜமாகவே எழுதி, மாரியம்மாளுக்கு ஸ்டைலாக நீட்ட, அது ‘மேட்டுக்குடி’ படக் கதையைப்போல வாத்தியார் கைக்குச் சென்றது. உடனே ஹெச்.எம் காதுக்கும் செய்தி போக, ஈவு இரக்கம் இல்லாமல் வாட்ச்மேனால் வெளியேற்றம் செய்யப்பட்டான். அது, ராஜுவின் தாய் – தந்தைக்குப் பெருத்த அவமானமாகவும், இவனுக்கு வரலாற்றுப் பதிவாகவும் அமைந்தது. அதை அவ்வப்போது ஞாபகப்படுத்திக்கொள்வதும், நண்பர்களிடம் சொல்லி இறுமாப்புக்கொள்வதும் ராஜுவின் அன்றாட வழக்கமானது.
5…
இருவரும் ஓர் ஒப்பந்தத்துக்கு வந்தனர். பாட்டில் திறக்கப்பட்டது. சைட் டிஷ் பிரிக்கப்பட்டது. இப்போதைக்கு ராஜு கட்டி, கழற்றப்பட்ட தாலியைப் பற்றி மட்டும் பேசுவது. அப்படிப் பேசும்போது யாரும் யாரையும் கேவலப்படுத்திக்கொள்ளக் கூடாது.
‘இப்படின்னாத்தேன் ஃப்ரெண்டுக்காக உயிரைக் குடுப்பம்ல. அத விட்டுப்புட்டு ஒரண்டை இழுக்கக் கூடாதுல்ல…’ என்றபடி முதல் கிளாஸை ஊற்றி, முகர்ந்து பார்த்தான் திருமுருகன். இது ஃபாரினர் வழக்கமாம். இப்போதைக்கு அவனைச் சீண்டும் நிலைமையில் ராஜு இல்லை.
”அந்தப் புள்ள கழுத்துல தாலியைக் கட்டணுமாக்கும்?’ – பேச்சை ஆரம்பித்தான் திருமுருகன்.
இந்தக் கேள்வி, ராஜுவைக் கொஞ்சம் பயமுறுத்தியது. ‘ ‘ஆமாம்’ எனச் சொன்னால், ஒருவேளை இவனே போய் கட்டிட்டு வந்துடுவானோ! செய்யக்கூடியவன்தான்’ என யோசித்தவாறு ”நான் கட்டணும்’ என அழுத்தமாகச் சொன்னான்.
திருமுருகன் அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. இன்னொரு கேள்வியும் கேட்டான்…
”ஏன், கட்டாட்டித்தேன் என்னா?’
அதற்குள் இருவரும் பாதி டம்ளர்களைக் காலிசெய்து இருந்தனர். திருமுருகனின் கேள்விக்கு நெற்றியைச் சுருக்கிக்கொண்டு பதில் சொன்னான் ராஜு.
”நானும் அந்த நிமிஷம் அப்பிடித்தேன் நெனச்சேன் மாப்ள… ‘இப்படி எல்லாம் அசிங்கப்பட்டுக் கட்டணுமா’னு! ஆனா பாரு, இப்ப தோணுது… ‘அவசியம் கட்டணும்’னு. ஏன் தெரியுமா? அவ என்னா அம்புட்டுப் பெரிய பருப்பா? நான் கட்டுன தாலியை அவுத்துட்டா! என்ன நடந்தாலும் சரி, எம்புட்டு செலவுன்னாலும் சரி, அவ கழுத்துல தாலியைக் கட்றோம்.’
‘மச்சான், பேச்சு ஃப்ளோவுல எனக்கும் அவ, இவன்னு வந்தா தப்பா எடுத்துக்காத.’
”யே… அவ ஒன் தங்கச்சிடா!’
‘ரைட்டு மச்சான். அந்தப் புள்ள நம்ம ஸ்கூல்லதானே படிக்குது?’
‘ஆமா மாப்ள, பத்தாப்பு.”
‘டென்த்தா… ஆனாலும் நீ ரொம்ப லேட்டு மச்சான். எட்டு, ஒம்பதாப்புலயே கரெக்ட் பண்ணிரணும்டா. பத்தாப்பு வந்திட்டாளு கன்னா, வெவரம் பிடிபட்ரும்.’
‘ரொம்பச் சின்னப்புள்ளையா இருக்குடா. பாத்தம்ல! ஆனாலும் நாம ஸ்கூல்ல படிச்சுக்கிட்டிருந்தா வேணுங்கிறதை செலெக்ட் பண்ணிப் பிடிக்கலாம். இதுக்கே எத்தினி நாளாச்சு தெரியுமா?’
மாயாவின் வீட்டுக்கு பெயின்டிங் செய்யப் போன ஒருநாளில் அவளிடம் பேச்சுக் கொடுத்தான். அது அப்படியே பிக்கப் ஆனது. தொடர்ந்து அவள் பால் வாங்க சாமியார் பண்ணைக்கு வருவது தெரிய, ராஜுவும் பால் வாடிக்கையை அதே பண்ணையில் தொடங்கினான். நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த இடத்தில் ஒரு மாதமாக பால் வாங்க வரவில்லை. ஸ்கூலுக்குத் தேடிப் போனான். பால் வாங்க வராத காரணத்தைச் சொல்லாத மாயா, அடுத்த சந்திப்புக்கான இடத்தையும் நேரத்தையும் சொன்னாள். அதில் வேலை கெட்டது. பிறகுதான் செல்போன் வாங்கித் தந்தான்; ரீசார்ஜும் நிறையச் செய்தான். நன்றாகத்தான் பேசினாள். சிரிக்கச் சிரிக்கவே பேசினாள்!
‘அடிக்கடி ஸ்கூல் பக்கம் போகணும்டா.”
‘எங்க மாப்ள… வேலைக்குப் போனப்புறம் டைம் கெடைக்கல. அதுவும் இல்லாம இப்பல்லாம் அந்தப் பக்கம் நடந்தாலே அடிச்சு வெரட்டுறாங்களாம்ல!’
கடைசியாக, மாயாவின் சாதியைக் கேட்டான் திருமுருகன். எதற்கு எனப் புரியாமல் சொன்னான். ‘சும்மா சேஃப்டிக்கித்தேன்” என்றவன், ”சரி மச்சான், நாளைக்கு நாம சேர்ந்து போய்ப் பாப்போம்’ என, அன்றைய சபையை முடித்தான்.
6…
மறுநாளும் வேலையைக் கெடுத்துக்கொண்டு இருவரும் மாயாவைச் சந்திக்கத் திட்டமிட்டனர். காலையில் பள்ளிக்கூடம் போகும்போது மறிக்க முடியாது. ரீசஸ் பீரியடு சரியாக இருக்கும். அந்த 11 மணிக்காக, 9:30 மணியில் இருந்தே பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தனர். அவள் வெளியில் வரவில்லை. பத்தாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ஏதோ எழுத்து வேலை தந்துவிட்டார்களாம். டீயும் வடையுமாகச் செலவழிந்ததுதான் மிச்சம். மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு பள்ளி முடியும் நேரத்தைத் தேர்வுசெய்தார்கள். ‘அப்படியே தனியாக இழுத்துட்டுப் போய் பேசிரலாம்’ என்பது அவர்கள் கணக்கு.
அவள் வழக்கம்போல நான்கைந்து பேருடன்தான் வெளியில் வந்தாள். ராஜுவும் திருமுருகனும் பின்தொடர்வதைப் பார்த்ததும் ‘என்னா?” என எதிரே நேருக்கு நேராக நின்று கேட்டாள்.
‘சாரி மாயா, ஒன்கிட்ட தனியாப் பேசணும்’ – உடன் இருந்த அவளது தோழிகளைப் பார்த்தபடி சொன்னான் ராஜு.
மாயாவும் தன் தோழிகளைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்… ‘நம்ம விஷயம் பூரா இவளுகளுக்குத் தெரியும். சும்மா சொல்லு.’
‘இல்ல, ஒரு அஞ்சு நிமிஷம்…”
‘ஒண்ணும் பிரச்னை இல்லப்பா, அரை மணி நேரம்னாலும் இங்கனயே பேசலாம்.’
‘ஏம்மா, சொன்னா புரிஞ்சிக்கம்மா. ராஜு காரணம் இல்லாமக் கூப்பிட மாட்டாம்மா’ – திருமுருகன் பவ்யமாகப் பேசினான்.
‘மிஸ்டர், நீ யாரு… ஒன் ஃப்ரெண்டா? சாரி. அப்படி எல்லாம் தனியா வர முடியாது. லூஸுப்பய… இன்னொருக்கா தாலியை இறுகக் கட்டிப்புடுவான்.’
‘ஏன்ணே… தாலி மட்டும்தானே கட்டுனீக… வேற ஒண்ணும் நடக்கலீல்ல?’ – ராஜுவிடம் தோழி ஒருத்தி சிரித்துக்கொண்டே கேட்டாள்.
”ரொம்ப ஃபீல் பண்றான் தங்கச்சி. மன்னிச்சுட்டேன்னு சொல்லு.’
மாயா, அவன் இத்தனை இறங்கிவருவான் என எண்ணவில்லை. முதல் நாள் அவன் தாலி கட்டிய இடம் ஏதோ ஊர்வதுபோல உறுத்திக்கொண்டேதான் இருந்தது. மதியம் சாப்பாடுகூட இறங்கவில்லை. துக்கம் தொண்டையில் நிற்க, லீவு போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நினைத்திருந்தாள். ஆனால், அவளுடைய தோழிகள் நிலைமையைப் புரிந்து, அவளை வற்புறுத்தி விஷயத்தைக் கறந்துவிட்டனர்.
மாயாவுக்குச் சொல்லும்போதே அழுகை அழுகையாக வந்தது. சொல்லி முடித்ததும் பிள்ளைகள் ஆளுக்கு ஆள் ஆச்சர்யமாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். ‘எப்படிக் கட்டினான்?’, ‘எத்தனை முடிச்சுப்போட்டான்?’, ‘கட்டும்போது எப்டி இருந்தது?’, ‘கட்டி முடிச்சதும் எப்டி ஃபீல் பண்ணினே?’, ‘வேற என்ன நடந்தது?’… கேள்விகள் மழையாக வந்து விழுந்ததில் துக்கம் அனைத்தும் கரைந்துவிட்டன. சிலர் மட்டும் வீட்டில் சொல்லிவிடும்படியும், ஒருத்தி வாத்தியாரிடம் புகார் தெரிவித்துவிடலாம் என்றும் ஆலோசனை சொன்னார்கள். ஒட்டுமொத்தமாக அதை ஒரு ஜாலியான அனுபவமாக இந்த நிமிடம் வரைக்கும் கொண்டாடினார்கள். ‘இதேபோலத்தான் அவனுக்கும் இருந்திருக்கும். அதுதான் வந்து மன்னிப்புக் கேட்கிறான்’ என எண்ணிக்கொண்டவள், ‘என்ன செய்யலாம்?’ என, தோழிகளிடம் ஜாடையில் கேட்டாள்.
ரோகிணி, இடுப்பில் கையை ஊன்றியபடி… ‘மாப்ளே, இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு. அதைச் செஞ்சா மாயா உங்களை மன்னிச்சிருவா” என்றாள்.
‘ட்ரீட்தான… ஐஸ்க்ரீமா, சினிமாவா?” திருமுருகன் உடனடியாகக் கேட்டான்.
‘ம்… இது கல்யாணச் சமாசாரம்ல… அதனால பிரியாணி வாங்கித் தரணும்’ – மாயாவின் அமைதியைப் பார்த்து ராஜுவும் ஒப்புக்கொண்டான்.
7…
அந்த வாரம் சனிக்கிழமை மதியம் ஸ்பெஷல் கிளாஸை கட் அடித்துவிட்டு, தோழிகளோடு வந்தாள் மாயா. நாகர் ஹோட்டலில் மட்டன் பிரியாணியும், சுந்தரம் தியேட்டரில் மேட்னி ஷோ சினிமாவும் பார்த்தனர். மாயாவும் ராஜுவும் தனியே உட்கார்ந்துகொள்ள, அவளது தோழிகள் அனுமதித்திருந்தனர்.
இடைவேளைவிட்ட சமயம், சோமாஸும் ஐஸ்க்ரீமும் வாங்கினான். மாயா அவனிடம் வகுப்பு லீடர் தங்களைப் பார்த்துவிட்டதாகவும், எப்படியும் கிளாஸை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வந்த விஷயம் திங்கட்கிழமை கிளாஸ் டீச்சருக்குப் போய்விடும் என்றும் வருத்தத்துடன் சொன்னாள்.
‘என்னா மாப்ள?’
பக்கத்தில் இருந்த திருமுருகனிடம் விஷயத்தைக் கடத்தினான் ராஜு.
‘கிளாஸ் டீச்சர் ஆம்பள டீச்சர்தானே? பேசிப் பார்ப்போம். முடியாட்டி அந்தாளப் போட்டுக்குடுத்துருவோம், பொம்பளப் புள்ளைகளைத் தொட்டுத்தொட்டுப் பேசுறார்னு…”
மாயாவின் தோழிகள், பெரும் நகைச்சுவையைக் கேட்டதுபோல தியேட்டரே அதிரும்வண்ணம் கைகொட்டிச் சிரித்தனர்!
– செப்டம்பர் 2015
அடப்பாவிகளா?நீங்க பண்ற அட்டூழியம் பத்தாதென்னு பாா்த்தவனையும் பாேட்டுவிடப் பாக்குறிங்களேப்பா!!