வாசலில் கவுசல்யா தன் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். பள்ளிப் பேருந்திலிருந்து இறங்கிய ஆதித்யா வீட்டினுள் நுழையுமுன்பே தன் புத்தகப் பையிலிருந்த ஸ்கூல் டைரியை எடுத்து நீட்டினான்.
அம்மா என் டீச்சர் என்னை கவுன்சிலர் சைல்ட் னு சொன்னாங்க தெரியுமா, ஏதோ கவுரவப் பட்டம் கிடைத்தது போல் ஓடும் மகனைப் பார்த்தாள் கவுசல்யா.
கொஞ்ச நாளாகவே அவன் பள்ளியிலிருந்து ஏகப்பட்ட புகார்கள். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் கூட அவன் வகுப்பு ஆசிரியை
உங்கள் மகன் பாடம் எடுக்கும்போது பென்சில் சுண்டி விளையாடிக்கொண்டே இருக்கிறான். கவனிப்பதே இல்லை.
ஒரு இடத்தில் உட்காருவதேயில்லை.
மற்றவர்களைச் சீண்டி விட்டு சிரிப்பது அவனது தினசரி நடவடிக்கை..
உணவுஇடைவேளையில் பாதி சாப்பாடு சாப்பிட்டு விட்டு விளையாடுவது அவன் வாடிக்கை.
எல்லாப் பாட வேளைகளிலும் கழிப்பறைக்கு செல்ல அனுமதி கேட்டு வெளியில் மெதுவாக நடந்து நேரம் போக்குகிறான்.
இப்படிப் பலப் பல புகார்கள் கூறினாள். .
டைரியைப் படித்த கவுசல்யாவிற்கு தலை சுற்றியது. அதில் வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு பள்ளிக் கவுன்சிலரைச் சந்திக்க வேண்டும் என்று எழுதியிருந்தது.
மாலை கணவன் வந்தவுடன் என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும் மனதில் நினைத்துக் கொண்டாள்.
நளின் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் இருவரும் கலந்தாலோசித்து பக்கத்துத் தெருவில் இருக்கும் நளினின் தந்தையைப் பார்க்கச் சென்றனர்.
நளின் புலம்ப ஆரம்பித்தான்.
அப்பா எனக்கு ஒரே மனக் கஷ்டம். நீங்கல்லாம் எவ்வளவு சுலபமா என்னை வளர்த்துட்டீங்க. இப்ப என் மகன நல்லபடியாக வளர்ப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு.
பார்த்துப் பார்த்து பெரிய பள்ளியில சேத்துப் படிக்க வச்சாலும் பிரச்சினை தான் மிச்சம் என ஆதித்யாவின் டைரியைக் காட்டினான்.
பரிதாபமாக எதிரமர்ந்திருந்த மகனிடம் பேசத் தொடங்கினார் நளினின் அப்பா.
நல்லா யோசிச்சுப் பாரு. ஆதித்யா போல மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நீ எப்படி இருந்த னு.
விட்டல் வாத்தியார் கிட்ட வாய்ப்பாடு கத்துக்கிறதுக்காக தலையில எத்தன குட்டு வாங்கியிருப்ப.
பக்கத்து வீட்டு மொட்டை மாடில ஏறி மாங்காய் பறிச்சதுக்காக எத்தன முறை சாமு மாமா தோப்புக் கரணம் போட வச்சிறுப்பார்.
பள்ளிவிட்டு வந்தவுடன் பையை வீசி விட்டு தட்டான் பூச்சி பிடிக்க ஓடுவதுதான் தெரியும். உன்னய தெருவிலேருந்து புடிச்சிவர நாங்க எத்தனை பாடு பட்டிருப்போம்.
டுர் டுர்னு கத்திக் கொண்டே தெரு முழுக்க உன் நண்பர்கள் கூட சைக்கிள் டயர் ரேஸ் உட்டத மறந்துட்டயா.
அவ்வளவு சுதந்திரமா உன் மனசு திருப்திப் படுவதுபோல நீ வாழ்ந்த. ஆனா இப்போ அப்படியா உன் மகன வளக்கற.
நேரப்படி அவன செயல் புரிய சொல்லற. பள்ளியிலேருந்து வந்தவுடனே மூணு மணிலேருந்து நாலு மணி வரை தூக்கம். அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் ஓவிய வகுப்பு. ஐந்து மணிலேருந்து ஆறு மணி வரைக்கும் வீட்டுக்கு வெளிய விளையாட்டு. அதுவும் அம்மா கண்காணிப்போட தான். அதன் பின் டி.வி. பின் இரவு உணவு, உறக்கம்.
என்னோட வீடு முக்கிய சாலை பக்கத்துல இருக்கறதால அவனத் தன்னிச்சையா விளையாட அனுப்ப முடியாது என நீ எத்தன காரணம் சொன்னாலும் அவனோட மனசு அதை ஏற்காது.
அதனால தான் பள்ளி வகுப்பறையில தான் செய்ய நினைச்ச எல்லா செய்கைகளையும் சுதந்திரமாக செய்ய முயற்சிக்கிறான்.
அதனோட விளைவு புகார்கள். இப்போதய ஆசிரியர்கள் விட்டல் வாத்தியார் போல் குட்டவோ, சங்கரன் வாத்தியார் போல் காது திருகவோ முடியாததால பள்ளி கவுன்சிலர் மூலம் அறிவுரை கூற அழைக்கிறாங்க. இதில் என்ன மன வருத்தம்.
உனக்கு ஞாபகம் இருக்கா. தயிர்க் காரி பின்னால அவள மாதிரியே கத்திட்டுப் போவீங்களே.
ஆமாம் உண்மை தான். அப்பாவின் பேச்சில் நியாயம் இருப்பது போல் தோன்றியது.
தயிரு வாங்கலயோ தயிறு தயிறு. சிரட்ட ஐம்பது பைசா தான். நாங்கள் கூவிய பின் அவளின் வசவுகள் தொடரும்.
வாரிய பிஞ்சி போவும். ஒரு சிரட்ட தயிறு ஒத்த ரூவா. படிக்கிற புள்ளங்க எம் பொளப்ப கெடுக்காதீங்க.
அடுத்த நாளும் நாங்கள் பின் தொடருவோம். ஒருவரையும் விட்டதில்லை. ஐஸ் விற்பவர், கீரைக் காரி, காய்கறிக் காரி என எங்கள் லிஸ்ட் நீளம் தான்.
ஆனால் என் மகன் கணக்கு ஆசிரியர் மாதிரியே பேசிக் காட்டுகிறான் என்றவுடன் நான் ஏன் கோபப் பட்டேன். அவனுக்கு என்னைப் போல் வேறு வாய்ப்புகள் இல்லையே.
யோசனையோடு அமர்ந்திருந்த நளினிடம் அவன் அப்பா தொடர்ந்தார்.
என்னப்பா சொன்னது புரிஞ்சிதா. நீ உன் பையன சாவி கொடுத்த பொம்ம மாதிரி இருக்கணும் னு நெனைக்கிற. அது தப்பு. வீட்டுக்குள்ளயாவது அவன இஷ்டப்படி வெளையாட உடுங்க. அதுக்கும் வரையரை போடாதீங்க.
என்ற அப்பாவைத் தெளிவு பெற்ற நளின் வியப்புடன் பார்த்தான்.