புழுவல்ல பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2014
பார்வையிட்டோர்: 9,043 
 
 

“வேலையிலிருந்து வீடு திரும்ப இவ்வளவு நேரமா? ஆறரை மணிக்குப் பள்ளிக்கூடம் விடுது. இப்போ என்ன மணி, பாத்தியா?”

இரண்டு பஸ் பிடித்து, இரவு எட்டு மணிக்குமேல் வீடு வந்திருக்கும் மனைவிக்கு வழியில் என்ன அசௌகரியமோ என்ற ஆதங்கம் கிஞ்சித்தும் இல்லை கேசவனிடத்தில். `இவள் எப்போது சமையல் ஆரம்பித்து, நான் எப்போது சாப்பிடுவது!’ என்ற வயிற்றுப்பசியே அப்போது பிரதானமாகப்பட்டது.

ஒன்றும் பேசாது, அவனெதிரிலேயே நின்றபடி இருந்தாள் விமலா, தன் நைலக்ஸ் புடவையின் நுனியைத் திருகிக்கொண்டு.

வார்த்தைக்கு வார்த்தை எதிர்பேச்சுப் பேசும் மனைவியா இது!
நம்ப முடியாது அவளைப் பார்த்தான் கேசவன்.

துடிக்கும் கீழுதட்டைப் பல்லால் கடித்தபடி, மெல்ல நிமிர்ந்தாள் விமலா. “என்னை டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறீங்களா?” தீனமாக ஒலித்தது குரல்.

“எதுக்கு? தலைவலி, காச்சலுக்குத்தான்..,” அவன் மேலே எதுவும் சொல்வதற்குமுன், முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அவளுடைய கரங்களிலிருந்த நகக்கீறல்கள் அப்போதுதான் அவன் கண்ணில் பட்டன.

`நடக்கக் கூடாதது நடந்துவிட்டது!’

வலுக்கட்டாயமாக அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு, “யாராவது கைப்பையை பறிச்சுக்கிட்டுப் போயிட்டாங்களா?” என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்வதுபோல் கேட்டவனுக்கு, விமலாவின் பலத்த அழுகைதான் பதிலாகக் கிடைத்தது.

“உட்காயம் எதுவுமில்லே. ரெண்டு தையல் போட்டிருக்கேன். ஒரு ரிபோர்ட் குடுக்கிறேன். நல்லவேளை, உடனே வந்திருக்கீங்க. போலீசிலேயும் புகார் குடுத்துடுங்க!” அறிவுரை கூறிய டாக்டரை ஒரு அலட்சியப் பார்வை பார்த்தான் கேசவன்.

ஏன், நாளைக்கே எல்லா மொழி தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாக வருவதற்கா!

`என் மனைவியை எவனோ கெடுத்துவிட்டான்!’ என்று தமுக்கா அடிப்பார்கள்?

“பின் சீட்டில ஒக்காந்துக்க!” உத்தரவு பிறப்பிப்பதுபோல வந்த வார்த்தைகளைக் கேட்டு விமலா துணுக்குற்றாள்.

பார்க்கப்போனால், இவளுடைய சம்பாத்தியம் இல்லாவிட்டால், அவன் கார் வாங்கி இருக்க முடியுமா? ஆனால் அவளைப் பஸ்ஸில் போகச் சொல்லிவிட்டு, அவன் காரைத் தனதாக்கிக் கொண்டிருக்கிறான்!

(`ஏங்க? நானும் கார் ஓட்டக் கத்துக்கட்டா? ஆசையா இருக்கு!’

`அந்தப் பேச்சே வேணாம். அப்புறம், எனக்குத் தனியா ஒரு காடி வாங்கிக் குடுன்னு கேப்பே!’)

இப்போது அவனருகில் உட்காரும் அருகதையைக்கூட அவள் இழந்துவிட்டாளா! கண்ணாலும், மூக்காலும் அவளுடைய துயரம் வெளிப்பட்டது.

“ஏய்! என்ன சும்மா மூக்கை உறிஞ்சிக்கிட்டு! நடந்தது நடந்திடுச்சு. வெளியே தெரிஞ்சா ஒனக்குத்தான் அவமானம். இதைப்பத்தி யார்கிட்டேயும் மூச்சு விடப்படாது, சொல்லிட்டேன்,” என்று மிரட்டியவன், “பாதி முதுகும், வயிறும் தெரிய, சினிமாக்காரி மாதிரி மெலிசான புடவை கட்டிட்டுப்போனா அது யாரோட தப்புன்னு ஒன்னைத்தான் ஏசுவாங்க!” என்று அவளே வலியப்போய் எவனோ ஒருவன் கையைப் பிடித்து இழுத்ததுபோலப் பேசினான்.

பயத்தால் உறைந்து போனவளாய், விமலா பின்னால் சாய்ந்துகொண்டாள்.

வீடு திரும்பியதும், சாப்பிடும் எண்ணமே எழவில்லை இருவருக்கும்.

“நான் வெளியே போயிட்டு வரேன். என்கிட்ட சாவி இருக்கு!”

வாரத்தில் ஐந்து நாட்கள் கேட்கும் வாக்கியங்கள்தாம். முன்பெல்லாம், `இப்படி ஓயாமல் சிநேகிதர்களுடன் சேர்ந்து கொட்டமடித்து, குடித்துக் குடித்து, காசோடு, உடலையும் பாழாக்கிக்கொள்கிறாரே!’ என்று ஆத்திரப்பட்டு இரையும் விமலாவுக்கு அன்று நிம்மதியாக இருந்தது.

ஏன் இப்படி ஒருவனைத் தனக்குக் கட்டி வைத்தார்கள் என்று பெற்றோர்மேல் ஆத்திரப்பட்டாள்.

எவனோ ஜோசியன் சொன்னானாம், `இந்தப் பெண்ணுக்குத் தாலி பாக்கியம் இல்லை!’ என்று! பலரும் அஞ்சி விலக, இவன் ஒருத்தன் மட்டும், `எனக்கு இந்த ஜாதகம், ஜோசியம் இதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது!’ என்று பெரிய மனது பண்ண, பள்ளி இறுதிப் படிப்பையே முடிக்காத அவனது கல்வித் தகுதி அதிலே அடிபட்டுப் போயிற்று. அவனைப்பற்றி வேறு எதையுமே விசாரிக்கவும் தோன்றவில்லை அவர்களுக்கு.

`எத்தனை காலம் இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை வாழப்போகிறோம்!’ என்று அவள் எண்ணாத நாளே கிடையாது.

“நான் எங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?”

`இருந்தா கேசவன் மாதிரி இருக்கணும். ஒய்ஃப் படிச்சவங்க! பிடிப் பிடியா சம்பாரிச்சுக்கொண்டு வருவாங்க. இவன் வாரி விடுவான்!’ என்று புகழ்வதைப்போல, நாசுக்காக அவனுடைய குறைவான படிப்பையும் சம்பளத்தையும் குத்திக்காட்டும் நண்பர்களை நினைத்துக்கொண்டான் கேசவன்.
`பெரிய படிப்பு! இன்னொருத்தனா இருந்தா, கெட்டுப்போனவகூட ஒரே வீட்டிலே இருப்பானா?’ என்று எண்ணமிட்டவனுக்கு, தான் என்னவோ பெரிய தியாகம் செய்வதுபோல் பட்டது. எப்படியோ, முரட்டுக் குதிரையாக இருந்தவள் அடங்கினாளே என்ற மகிழ்ச்சியும் எழுந்தது. வினயமாக, தன் உத்தரவை அல்லவா கேட்கிறாள்!
எப்போதும் காரில் அவளைக் கொண்டுபோய் விடுபவன், அதிகாரமாகப் பேசிப் பார்த்தான். “எனக்கு இப்போ லீவு கிடைக்காது. நீ பஸ்ஸிலே போய்க்க!”

அப்படியும், குரலை உயர்த்தாமலேயே, “சரிங்க. டிக்கட் எடுத்துடறீங்களா, முன்னாலேயே?” என்று அவள் வேண்டுகோள் விடுத்தது அவனது ஆண்மைக்குப் பூரிப்பாக இருந்தது.

“வாடி!” என்று வரவேற்றதோடு சரி. அவளுடைய தாய்க்கு அவளுடன் பேசக்கூட நேரம் கிடைக்கவில்லை.

“நான்தான் வேலைக்குப் போறவ. நீங்க ஒரு தடவை என்னை வந்து பாத்திருக்கக் கூடாதாம்மா?” என்று ஏக்கத்துடன் கேட்ட மகளை அதிசயமாகப் பார்த்தாள் தாய்.
“நல்லா கேட்டியே! ஒங்கப்பாவுக்கு மணிக்கொரு வாட்டி கோப்பி கலக்கிக் குடுக்கணும். குளிக்க சுடுதண்ணி வெச்சுக் குடுக்கணும். அதோட, இருக்கவே இருக்கு சமையல்!” என்றவளின் குரலில் ஆயாசமில்லை. `கணவரை ஒரு குழந்தையைப்போலப் பார்த்துக் கொள்வதுதான் தனக்குப் பெருமை’ என்பதுபோல் விகசித்திருந்தது அவள் முகம்.

விமலாவுக்குத் திடீரென ஆத்திரம் வந்தது. “நீங்க என்னம்மா, அப்பா வெச்சிருக்கிற வேலைக்காரியா? எதுக்காக இப்படி அவருக்கு அடிமையா உழைக்கறீங்க?” என்ற மகளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தாய்.

“ஒன்னைப் படிக்க வெச்சது தப்பாப் போச்சு. இதிலே என்னடி அடிமைத்தனம்? பொண்ணாப் பிறந்தவளோட கடமை இது. அப்பா எனக்குச் சோறு போட்டு, இருக்க இடம் குடுத்து, முக்கியமா சமூகத்தில ஒரு கௌரவமும் குடுத்திருக்காரில்ல!”

பாலும், சோறும் அளித்துப் பராமரிக்கும் எஜமானர் அடித்தாலும், வாலைக் குழைத்துக்கொண்டு வரும் நாய்தான் விமலாவின் மனக்கண்முன் தோன்றியது. ஒன்றும் பேசாமல் எழுந்தாள்.

“ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமா, விமலா?” அம்மா குரலைத் தாழ்த்திக்கொண்ட விதத்திலேயே ஏதோ வம்புதான் என்று ஊகித்தாள் விமலா.

அம்மாவின்மேல் பரிதாபம் ஏற்பட்டது. வீட்டு வேலையையும், வம்புப் பேச்சையும் தவிர வேறு எதைக் கண்டாள், பாவம்!

“என்னம்மா?” என்று கேட்டுவைத்தாள், அசுவாரசியமாக.

“பக்கத்து வீட்டில குடியிருந்தாளே, செம்பகம்! அவ புருஷன் அவளைத் தள்ளி வச்சுட்டு, இன்னொருத்தியோட போயிட்டான்!” அம்மா எக்காளமாகச் சிரித்தாள்.
தன் வாழ்வே சிரிப்பாய் சிரிக்கிறது. இதில் மற்றவர்களிடம் குறை காண தனக்கு என்ன யோக்கியதை என்று தோன்றியது விமலாவுக்கு.

“இவ லட்சணம் என்னவோ! அதான், பாவம், அவனால தாங்க முடியல, தப்பிச்சுக்கிட்டு ஓடிட்டான்!”

விமலா யோசித்தாள். அந்த செம்பகம் நல்லவளாகவே இருக்கக்கூடும், அவளை மணந்தவன்தான் நடத்தை கெட்டவன் என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை?

கட்டியவளைத் தவிக்க விட்டுவிட்டு, இன்னொருத்தியுடன் போனது அந்த ஆண்மகன். ஆனால், பழி அந்தப் பெண்ணின்மேலா?

வீடு திரும்பியபோது, விமலாவுக்குப் புதிய தைரியம் வந்தது போலிருந்தது.
“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறீங்க?” நெடுநாட்களுக்குப் பிறகு அவள் குரல் பலமாக ஒலிக்க, கேசவன் எச்சரிக்கையானான்.

தன் பயத்தை வெளிக்காட்டாது, “பின்னே? ஒன்கூடப் படுக்கணும்னு ஆசையா?” என்றான் ஏளனமாக. மாற்றான் கை பட்டபோது, அவளுடைய உணர்ச்சிகள் மரத்துப் போயிருக்குமா, என்ன! முகம் தெரியாத எவனுடனோ காலமெல்லாம் போட்டிபோட அவன் தயாரில்லை.

அடிபட்டதுபோல் துடித்தாள் விமலா. “நீங்கதானே நடந்ததை நினைச்சுக்கூடப் பாக்காதேன்னு சொன்னீங்க?” துக்கத்தில் தழுதழுத்த குரலைக் கனைத்துக் கொண்டாள். `என்னை ஏன் இப்படி ஒரு புழுவைவிடக் கேவலமாக நடத்தறீங்க?’ என்று மன்றாட வாயெடுத்தாள்.

சட்டென உண்மை உரைத்தது. இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்துக்காகத்தானே காத்திருந்தார்!

தான் மேன்மையாக இருந்தபோது பொறாமையும், இப்போது அவமானத்தில் துடிக்கையில் ஒரு குரூரமான திருப்தியும் அடையும் இவனெல்லாம் ஒரு துணைவனா!

ஒரு முடிவுக்கு வந்தவளாக, பெட்டி படுக்கையுடன் புறப்பட்டாள்.

“ஏய்! எங்கே புறப்பட்டே, எங்கிட்டகூடக் கேக்காம?”

நிதானமாக ஒரு பார்வை பார்த்தாள் விமலா. “நான் போறேன்!” குரலில் தீர்மானம்.
அவனைத் திரும்பியும் பாராது, வாசலை நோக்கி அவள் அடியெடுத்து வைக்கும்போதுதான், நிரந்தரமாகத் தன்னைவிட்டு விலகத் தயாராகிவிட்டாள் என்ற உண்மை கடுமையாகத் தாக்க, `என் ஒருத்தன் சம்பளத்திலே எப்படி இவ்வளவு வசதியா காலந்தள்ளறது!’ என்ற அச்சம் பிறந்தது கேசவனுக்கு.

“போ! போ! நாலு பேர் சிரிச்சா, தானே புத்தி வரும்!” பெரிய குரலெடுத்து அலறினான். மாரை வலிப்பதுபோல் இருந்தது.

`யாரோ நாலு பேருக்காக நான் ஏன் போலியா வாழணும்? என்னைக் கெடுத்தவன் தப்பிச்சுட்டான். ஆனா, அவன் செய்த குத்தத்துக்குக் காலமெல்லாம் தண்டனை அனுபவிக்கிறது நானா!’ இதைப்போய் இவரிடம் சொல்லிக் கொண்டிருப்பானேன், புரியவா போகிறது என்று தோன்ற, வாய் திறவாது, வெளியே நடந்தவள்….

“ஆ!” என்ற அலறல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். கீழே விழுந்து கிடந்தான் கேசவன்.

`ஐயோ!’ மனைவிக்குரிய குணங்கள் என்று அவளையறியாமல் பதிந்திருந்த ஏதோ அவளை அதிரச் செய்தது. அவசரமாகக் கணவனுக்கருகே செல்ல யத்தனித்தாள்.
ஏதோ உறைத்தது.

அவளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இது கேசவனது இன்னொரு முயற்சியாக இருக்கலாம்!

இப்போது விட்டுக்கொடுத்தால், பின்பு எப்போதுமே தனியே போகும் தைரியம் தனக்கு வரப்போவதில்லை.

திரும்பிப் பாராமல் வெளியே நடந்தாள் விமலா.

(நயனம், 9-5-1993 — முடிவை மாற்றி யிருக்கிறேன்).

Print Friendly, PDF & Email
நிர்மலா ராகவன் (பிறப்பு: அக்டோபர் 17 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஓய்வு பெற்ற இடைநிலைப் பள்ளி ஆசிரியையான இவர் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதக்கூடியவர். மின் அஞ்சல் முகவரி: nirurag@ashleydamico78 எழுத்துத் துறை ஈடுபாடு 1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியாவின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *