அங்கம் இரண்டு | அங்கம் மூன்று | அங்கம் நான்கு
அத்திபூத்தாற் போல், வெகு காலத்திற்குப் பிறகு லண்டனிலிருந்து வந்த நரேந்திரன், சுந்தரத்தைப் போட்டோ எடுத்துக் கொண்டு, திரும்பி வந்த அந்தச் சம்பவம், மனப் பூர்வமான உறவு நிலைகளுக்கப்பாற்பட்ட, ஒரு வெற்று நாடகமாகவே, துளசியின் மனதை விட்டு அகல மறுத்தது. அதில் ஜீவனோஇ ஆழமோ இல்லையென்பதை, அவள் ரொம்ப அறிவு பூர்வமாகவே உணர்ந்து கொண்டிருந்தாலும், சுந்தரத்தைப் பொறுத்த வரை வாழ்க்கையின் இத்தகைய முரண்பாடுகளையே அடியோடு மறந்து போனவராய், அவர் ஒரு சிறு குழந்தையாகவே மாறி விட்டிருந்தார். அந்தப் பொய்யினின்றும் விடுபட முடியாதவராய், அவர் தனது அந்தப் போட்டோவையே எதிர்பார்த்துக் கொண்டு, தினமும் வாசலிலேயே தவம் கிடக்கிறார்.
அது எப்பொழுது வரப்போகிறது? நரேந்திரன் லண்டனுக்குப் போனதும், இதையெல்லாம் ஒரு கனவு போல் மறந்து போயிருப்பான். அப்பாவின் உயிர் அவனின் கமரா பெட்டிக்குள், வெறும் ஜடமாகவே தூங்கும். அது உயிரா? ஜடமா?
இதை விளக்கித் துளசி அவனுக்குக் கடிதம் எழுதினாள். அவளின் கோபமில்லாத, அறிவு புரியும் படியான அந்த உணர்ச்சிக் கடிதம் ஒரு கனவாகவே அவனைச் சென்றடைந்தது. அவனிடமிருந்து தாமதஅங்கம் இரண்டுமாகவே பதில் வந்தது. வார்த்தைகள் புரியாமலும், மயக்கமாகவும், மனம்புண்படும்படியும். ஏதோவெல்லாம் எழுதியிருந்தான். போட்டோகூட வந்ததே!
சுந்தரம் அதைப் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியுடன் ‘துளசி! நன்றாக இருக்கிறது. இதைப் பெரிசாக்கிக் ஹாலில் தொங்க விடு’ என்றார்.
‘அப்பா! உங்கடை கதையைக் கேட்க, எனக்கு மன வருத்தமாக இருக்கு. அன்பு இல்லாமல் நடந்தேறி விட்ட இதுகூட என்னைப் பொறுத்தவரை வெறும் பொய் தான் இந்தப் போட்டோவைப் பெரிசாக்கிச் சுவரிலே தொங்கவிட்டால், எங்கட உண்மைக்கு கரி பூசுகிற மாதிரிஇ விசுவரூபமெடுத்து நிற்கிற, இந்தப் பொய்யே என்னை எரித்துப்போடும் பரவாயில்லை உங்கட திருப்திக்காக இதை நான் செய்கிறேன்.
பிறகு வெகுநேரம் கழித்து, அவள் கையில் முத்துமாலையோடு திரும்பி வந்தாள். ‘அப்பா! இந்த மாலையைப் பாருங்கோ, இதன் பெறுமதி என்ன?’
‘வெறும் முத்துமாலைதானே’
‘என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள்? இதை எடுத்தால், எனக்கு அன்புதான் ஞாபகம் வருகிறது. உங்கள் போட்டோ மாதிரி வெறும் நாடகமல்ல. இதுக்கு உயிர் இருக்கு!’
அப்படிச் சொன்னவள், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டவளாய், முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு விம்மினாள்.
‘உயிரை நான் எதுக்குத் தேடுகிறன்? அது எங்கெல்லாமோ நிலைத்திருக்கு எனினும் அதிலே மயக்கமிருக்கு! நரேந்திரனண்ணா கூட, அன்பு செய்கிற மாதிரி நல்லாய் நடித்தானே! அவன் எங்களை ஏமாற்றினானா? தன்னை ஏமாற்றிக் கொண்டானா? நான் இதில் ஏமாந்தேனா? இல்லை! எனக்கு மனித குணம் தெரியும். எதிரும் புதிருமாய், வாழ்வின் ஓட்டம் கவிழ்ந்து கொண்டிருக்கு! அலை வீச்சு அப்படி தர்மசிரத்தை இல்லாமல், வாழ்க்கையே திசை மாறிச் சுழன்று கொண்டிருக்கு, இதிலெல்லாம் அகப்பட்ட நாங்கள் துரும்புகளே?’
அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு, நிமிர்;ந்து பார்த்தாள்.
‘அப்பா! விசாகனைத் தெரிகிறதா?’ அவர் பதில் சொல்லாததால், அவளுள் மௌனம் கனத்தது அவள் முகத்தை நிமிர்த்திக் கற்பனையில், ஊறித் திளைத்த கண்களால், வெறும் வானத்தையே, ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேர மௌன இடைவெளிக்குப் பிறகு, அவர் பிரக்ஞை வந்து கேட்டார்
துளசி! உனக்கு என்ன நேர்ந்துவிட்டது. சிலநேரம், இல்லாததைக் கற்பனையில், நினைக்கிறாய்? விசாகனை இப்ப நினைத்து என்ன பயன்? நீ அவனை நினைத்தே, இன்னொரு துருவத்தில், வாழ்க்கையை இழந்து நிற்கிறியே! அதை ஈடு செய்யப் பார்க்கிறியே?’ அவள் வானத்தில் நிலைத்த பார்வையைத் திருப்பி, அவரை கவலையோடு பார்த்துக் கொண்டே, உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள்.
‘வேறு வழியில்லை, வாழ்க்கை என்னை ஏமாற்றி விட்டது. மனிதர்களுக்குப் புத்தி போதாது என்று சொல்ல முடியுமா? அன்பை நினைத்து, வாழ்க்கையைப் பாக்கிறதே குற்றம் ஆனால் அன்பு இல்லாமல், இருக்க முடியேலை. அது இல்லாமல், நான் பொய்யிலே அழிந்தது போதும் உண்மையான அன்பின் உயிர் வடிவத்தைத் தேடிப் பார்க்கிறதென்றால், அன்றைக்கு எங்கள் கிராமத்தில், இந்த வீட்டிலே, என்னுடைய எல்லாமாய், உயிரோடு கலந்து ஒன்றிப் போய் இருந்தானே விசாகன்! அவனை நினைத்துக் கொண்டாலே போதும். என்ரை இழப்பை ஈடு செய்வதற்கு, இந்த அவனுடைய நினைவே போதும். அவனை இப்படி நினைக்கிறதே. என்னைக் கறைப்படுத்தி விட்டுப்போன, அந்தப் பொய்யிலிருந்து, எனக்கு விடுதலை கிடைத்த மாதிரி இருக்கே’
அவள் இதைக் கனமாய் அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்தபோது, வெளிவராந்தாவில், கதவு நிலை வாசலின் அருகே ஒரு நிழல் தெரிந்தது. அதைப் பார்த்து விட்டு அவள் பேச்சை நிறுத்தினாள். அவள் தலை நிமிர்ந்து பார்க்கிற போது, அந்த நிழல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, அதன் மேல், ஓர் உயிர் முளைத்தது. ஈர்க்குக் குச்சி போன்ற ஈனமான உடம் போடு தன் முன்னால் வந்து நிற்கிற, அந்த ஏழைச் சிறுமியைப் பார்த்துவிட்டு, அவள் குரல் கனிந்து கேட்டாள்.
‘என்ன வேணும்?’
‘கொஞ்சம் தண்ணீர் தாறியளேயக்கா!’
‘ஓ! தாறனே’
அந்தச் சிறுமியை உள்ளே அழைத்து வந்து, தண்ணீர் கொடுத்து உபசரித்து, தனக்குப் பக்கத்திலே, அமர வைத்துக் கொண்டு, அவள் சொன்னாள்.
‘நீ யாரென்று எனக்குத் தெரியேலை, ஆனால் உன்னை எப்பவோ பார்த்தமாதிரி இருக்கு. இது வெறும் கற்பனை மயக்கமாய் கூட இருக்கலாம். அதுக்காக உன்னை வெறுக்கப் போறதில்லை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்! உன் பெயரென்ன?’
அந்தச் சிறுமி பதில் சொல்ல வெகுநேரம் பிடித்தது. அவள் வெட்கப்படுகிற மாதிரித் தோன்றியது. எதற்காக என்று புரியவில்லை. அவள் முகம் அழகற்று, நலிந்து ஒட்டிய கன்னங்களுடனும், ஒளி குன்றிய கண்களுடனும், களை இழந்து இருந்தது, கிழிந்து நைந்து போன, அழுக்கு மண்டிய கந்தல் உடைகளோடு, வாழ்க்கைச் சூறாவளிக்குள் சிக்கி வடுப்பட்டு வந்திருக்கும், ஒரு குரூர உயிர்ச்சித்திரம் போல், அவள் தோன்றினாள்.
துளசி இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந் தாள். அவள் சிறிதும் எதிர்பாராத விதமாக, இயல்பான தொனியில், திடீரென்று, அச்சிறுமி பதில் சொன்னாள். அவள் குரல், சோர்வற்று, உற்சாகமாகக் கேட்டது
‘அக்கா! நான் பிறந்து வளர்ந்ததெல்லாம், இந்த ஏழாலையிலேதான், எனக்கு இந்த ஊரை நல்லாய் பிடிக்கும். என்ரை பெயர் ராணி’.
‘அம்மா அப்பா எல்லாம் இருக்கினமே?’
‘அப்பா இல்லை, அம்மா இருக்கு. சந்தைக்குப் பெட்டிஇ கடகம் விற்கப் போனது. இன்னும் வரேலை. அது தான் தேடிக்கொண்டு, வெள்ளவாய்க்கால் வழியாகப் போறன்’இ ‘அவ வந்திடுவா, கவலைப்படாதே! இஞ்சை பார். எனக்குத் துணையில்லை. உன்னை பார்க்க சந்தோஷமாக இருக்கு, இந்த மாலை உனக்குப் பிடிக்கிறதா?’
‘நல்லாயிருக்கு! வெளிநாட்டானோ?’
‘யாருக்குத் தெரியும்?’ ஆனால் இதுக்குப் பெறுமதியிருக்கு. உனக்குத் தெரியுமே? வெறும் ஜடங்களில் கூட உயிர் இருக்கு. இது வெறும் முத்து மாலையில்லை. இதன் ஒவ்வொரு மணி இழைகளிலும், ஒரு மனிதனுடைய இதய ஜீவன், துடித்துக் கொண்டிருக்கு, ரொம்பவும் நம்பிக்கையான, அன்பு நிரம்பிய அவனின் நட்புக்கும், விசாலமான இதயத் துக்கும், இதுவே இன்னும் சாட்சியாக, என் கையிலே திகழ்ந்து கொண்டிருக்கு! உன்னைப் போலக் களங்கமற்ற ஒரு சிறுவனே அவனும். அவன் அன்பை என்னால் மறக்க முடியேலை, அவனை ஒரு துருவநட்சத்திரமாய், நினைத்துப் பார்க்கிற போதெல்லாம், எனக்கு ஒரே சந்தோஷமாக இருக்கு! இப்ப அந்தக்கதை ஏன்? அவனாகவே, இப்ப உன்னை நான் பார்க்கிறன். ராணி! இந்த மாலை உனக்குத்தான். நீ இதைப் போட்டுக் கொண்டு, ஒரு நாளைக்கு இஞ்சை வரவேணும்! எப்ப தெரியுமே, நீ கல்யாணமாகிப் புருஷனோடு வருவியே அப்ப…’
‘அக்கா! நீங்கள் நல்லாய்த்தான் ஏமாந்து போனியள் எனக்கு ஏது கல்யாணம்? நான் அது வரைக்கும் இருக்கமாட்டன் இன்றைக்கோ, நாளைக்கோ, நான் சத்தியமாய் செத்துப் போடுவன். அம்மா இதை நினைத்து ஒரே அழுகைதான், நான் அழுகிறேலை. சிரித்துக் கொண்டே செத்திடுவேன்’
‘ஏன் ராணி! உனக்கென்ன?’
‘நெஞ்சிலே ஓட்டை இருக்கு. ஓப்ரேசன் செய்யவேணும், அப்பகூட நம்பிக்கையில்லை, எனக்கென்னவோ நான் எப்ப செத்தாலும், சிரித்துக் கொண்டே சாவேன் போலத்தான் இருக்கு. நான் சாவை நினைச்சுப்
பயப்படப் போறதில்லை’ துளசிக்கு அவள் கதையைக் கேட்க, ஆச்சரியமாக இருந்தது. மரணத்தை நினைத்துப் பயந்து சாகிற மனிதர்களே அதிகம். எவ்வளவு காலம் வாழ்ந்து அனுபவித்தாலும், உலகத்தைவிட்டுப் போக மனம் வருவதில்லை. இவ்வளவு வயதாகியும் அப்பா கூட இன்னும் வாழவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் இந்தச் சின்னஞ்சிறு பெண்ணுக்கோ, மரணம் கூட அச்சத்தை தோற்றுவிக்காமல், விளையாட்டாகவே படுகிறது. அப்படி மரணத்தை துச்சமாக நினைக்கிற இவளை, ஞானியென்றே கொண்டாடலாமே என்று தான், துளசிக்குப்பட்டது.
– தொடரும்…