பிறை தேடும் இரவு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 12, 2024
பார்வையிட்டோர்: 2,833 
 
 

(2014ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-12 | அத்தியாயம் 13-16 | அத்தியாயம் 17-20

அத்தியாயம்-13

“மைல்ட் அட்டாக்தான். இருந்தாலும் இனி கேர்ஃபுல்லா இருக்கணும். இரண்டு நாள் ஹாஸ்பிடலில் அப்சர்வேஷனில் இருக்கட்டும். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்றேன்”. 

சொன்ன டாக்டர். படுக்கையில் கண்மூடி படுத்திருக்கும் அம்சவல்லியை பார்க்கிறார். 

“அம்மா… பயப்படாதீங்க. நீங்க நார்மலாயிட்டீங்க… இஞ்ஜெக்ஷன் போட்டிருக்கு, நல்லா தூங்குங்க. மனசை ரிலாக்ஸா வச்சுக்குங்க”. 

டாக்டர் வெளியேற… 

மனைவியின் அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருக்கிறார் சிவனேசன். 

ஹாஸ்பிடலில் இருக்கும் மாமாவுக்கு சாப்பாடு ரெடி பண்ணி டிபன் காரியரில் வைத்து… தினகரிடம் கொடுக்கிறாள். 

“பிளாஸ்கில் பால் இருக்கு. மாமாகிட்டே சொல்லிடுங்க”.

காரியரை வாங்கியவன், கிசுகிசுத்த குரலில்…

“சுமதி, என்ன பண்றா?”

“அவ ரூமில் இருக்கா…”

“நல்ல வார்த்தை சொல்லுங்க அண்ணி. இந்த கல்யாணம் நடக்கணும். இல்லாட்டி அம்மா ரொம்பவே அப்செட் ஆகிடுவாங்க. ப்ளீஸ் அண்ணி… நீங்கதான் அவ மனசை மாத்தணும்”.

மௌனமாக இருக்கிறாள் சாந்தி. 


“சுமதி எதுக்கு அழுதழுது முகம் சிவந்து உட்கார்ந்திருக்கே? வீட்டின் நிலைமையை தயவு செய்து புரிஞ்சுக்க சுமதி. அத்தைக்கு ஏதாவது ஒண்ணுன்னா குடும்பமே ஆடிப்போயிடும். நல்லவேளை அந்த கடவுள் காப்பாத்திட்டாரு”. 

“இனி இந்த வீடு பழைய நிலைமைக்கு வர்றது உன் கையில்தான் இருக்கு.”

“நான் என்ன செய்யுணும் அண்ணி.”

“அந்த க்ருபாகரனை மறந்து, அத்தை சொல்ற வரனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும்”. 

“அண்ணி நீங்களா சொல்றீங்க?” கண்கலங்க பார்க்கிறாள். 

“வேறு வழி தெரியலை சுமதி. உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்னு நம்பிக்கை கொடுத்தவதான் சொல்றேன். உன் ஒருத்தி சந்தோஷத்துக்காக குடும்பமே நிலை குலைஞ்சு எப்படி சகிச்சுக்க முடியும். மாமாவை பார்க்கவே பாவமா இருக்கு. அந்த நல்ல மனுஷனுக்காகவாவது உன் மனசை மாத்திக்கணும். உன் காதலை இந்த வீட்டில் யாரும் ஏத்துக்க தயாராக இல்லை சுமதி.” 

“அதுக்காக என் க்ருபாவை மறக்க சொல்றீங்களா… அவர் இல்லாமல் நான் எப்படி அண்ணி இருப்பேன். அவரை மறந்து இன்னொருத்தருடன் என்னால் வாழ முடியுமா?” 

சாந்தியின் மடியில் முகம் புதைந்து அழுகிறாள். 

அழுது முடியட்டும் என காத்திருந்தவளாய்.. அவள் முதுகை வருடி…..

“யதார்த்தத்தை ஏத்துக்க சுமதி, க்ருபாகரன் நல்லவர். அவர்கிட்டே. நான் பேசறேன். அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கக்கூட தயாராக இருக்கேன்”. 

“அண்ணி….” 

“எழுந்து முகம் அலம்பிட்டு வா… அத்தையை போய் பார்த்துட்டு வருவோம். உன் வார்த்தைகள் தான் அவங்களை குணமாக்கும்.”


கலங்கிய கண்களோடு அம்மாவின் கைபிடிக்கிறாள்.

“எப்படிம்மா இருக்கே?”

“ம்… பிழைச்சுட்டேன் சுமதி.”

“நீ சொன்னபடி நான்… நீ சொல்றவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்மா.”

“நீ என் மகள்… என் மனசு வருந்த நடக்க மாட்டே.. நீ ராஜபோகமாக, சந்தோஷமாக வாழப் போற பாரேன்.” 

கலங்கிய விழிகளுடன் அருகில் நிற்கும் சாந்தியை பார்க்க…

அவள் கைகள் ஆதரவாக சுமதியின் கையை இறுக பற்றுகிறது. 


அடுத்து வந்த ஒரு மாதத்தில் எத்தனையோ நிகழ்வுகள். விஷயத்தை சொல்லி சாந்தி, க்ருபாகரனிடம் மன்னிப்பு கேட்க, பெருந்தன்மையுடன் கண்ணீருடன் அவன் விடைபெற எப்போதும் சூன்யத்தையே வெறித்து கொண்டிருக்கும் சுமதியிடம் பேசி, பேசி அவள் மனதை நிலைப்படுத்த சாந்தி முயற்சி பண்ண… குடும்ப சகிதமாக பெண் வீட்டிற்கு சென்று… பெண்ணின் அசத்தும் அழகில் மட்டுமல்ல அவர்கள் வீட்டின் முன்னால் அணிவகுத்து நின்ற கார்கள், பிரம்மாண்டமான பங்களா என்று அம்சவல்லியின் மனம் நிறைய… தினகரும், பரமானந்தமும் சாமர்த்தியமாக அபர்ணாவின் அண்ணன் முகிலனின் போட்டோவை மட்டும் சிவனேசனும். அம்சவல்லியும். பார்க்கும்படி செய்து அவர்கள் சம்மதத்தை வாங்க… அந்த இடத்திலேயே வெற்றிலை பாக்கு மாற்றி, திருமணத்திற்கு தேதியும் குறிக்கப்படுகிறது.

அத்தியாயம்-14

“கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு. இன்னும் மாப்பிள்ளையை நேரில் பார்க்கலை. அதுவே மனசுக்கு உறுத்தலா இருக்கு அம்மா”. 

“பாவம் சுமதி, உனக்காக தன் மனசை மாத்திக் கிட்டா. அவளுக்கும் நேரில் பார்க்கணும்னு ஆசை இருக்காதா”. 

தினகரும், அம்சவல்லியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள். கண் ஜாடையில் அம்மாவை அடக்கியவன்… 

“சுமதியே பேசாம இருக்கா. நீங்க ஏன்ப்பா அவசரப்படறீங்க. கல்யாணத்துக்கு நாலு நாள் இருக்கும்போது வந்திடுவாரு. சுமதியோட செல்போன் நம்பர் அவருக்கு கொடுத்திருக்கு. அவரே சுமதிகிட்டே பேசுவாரு”. 

சொன்னவன், அம்சவல்லியை பார்த்து 

“போ… போம்மா போய் அப்பாவுக்கு குடிக்க காபி கொண்டு வா” பேச்சை மாற்றுகிறான். 


“சுமதி நல்லாயிருக்கியா. உன் போட்டோ பார்த்ததுமே ஓகே சொல்லிட்டேன். உனக்கு என்னை பிடிச்சிருக்கா?” 

“ம்”

“என்னைப் பத்தி எல்லாம் தெரியுமா?”

“ம்”

சிரிக்கிறான். 

“எல்லா கேள்விக்கும் “ம்” தான் பதிலா, ஏதாவது பேசேன். உன் குரலை கேட்க எவ்வளவு ஆவலாக இருக்கேன் தெரியுமா.”

“என்ன பேசணும்”. 

“அப்பா… காதில் தேன் வந்து பாயுது”. 

“சுமதி உன் வாய்ஸ் ரொம்பவே ஸ்வீட்டா இருக்கு, என்னை நேரில் பார்க்கலைன்னு உனக்கு வருத்தமா.” 

“அப்படியெல்லாம் இல்லை. அப்பா, அம்மாவுக்கு பிடிச்சிருக்கு”.

“அப்ப உனக்கு பிடிக்கலையா?”

“நான் அப்படி சொல்லலை.” 

“பிடிக்கணும் சுமதி. அப்பதான் நம் வாழ்க்கை நல்லபடியா அமையும். எனக்கும் உன்னை நேரில் பார்க்கணும்னு ஆசையா இருக்கு.. சீக்கிரமே வேலை முடிச்சுக்கிட்டு புறப்பட்டு வரேன்.” 

போனை வைக்கிறான். 

“யார் சுமதி போனில்?”

“நாளைக்கு என் கழுத்தில் தாலி கட்ட போறவரு”. 

முகத்தை உம்மென்று வைத்திருக்கும் சுமதியின் முகவாயை பிடித்து நிமிர்த்துகிறாள் சாந்தி, 

“இன்னார்க்கு இன்னார்ங்கிறது கடவுள் எழுதி வச்ச தீர்ப்பு சுமதி. இவர்தான் உனக்குன்னு இருக்கும்போது அதை எப்படி மாத்த முடியும் சொல்லு”. 

“இல்லை அண்ணி. இது அண்ணனும், அம்மாவும் எழுதிய தீர்ப்பு. கோடீஸ்வர வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ணணுங்கிற அண்ணனின் ஆசை”. 

“காதல்ங்கிறது தப்பான ஒண்ணுன்னு நினைச்சுட்டு இருக்கிற அம்மாவின் கோபம்… இதனால் என் வாழ்க்கை பலிகடாயிடுச்சு.” 

“ப்ளீஸ் சுமதி… கல்யாணம் நெருங்கி வரும் சமயத்தில் இப்படி யெல்லாம் பேசக்கூடாது. உனக்கு எவ்வளவு சொல்லிட்டேன். பழசையெல்லாம் மறந்துடு சுமதி”. 

அடுப்பில் குழம்பை தாளித்தவள், மேடையில் இருக்கும் செல்போன் அழைக்க எடுக்கிறாள். 

“சாந்தி.. நான் சரவணன் பேசறேன்”. 

“சொல்லுங்க டாக்டர்.”

“அம்மா எக்ஸ்ரே பார்த்தேன். ஹார்டில் சின்னதா ப்ராப்ளம் இருக்கு. சொன்னாங்களா?”

“என்ன சொல்றீங்க டாக்டர்.” 

“பயப்படாதீங்க பெரிசா ஒண்ணுமில்லை. ஹார்ட் கொஞ்சம் என்லார்ஜ் ஆகியிருக்கு. அதிகமாக வேலைகள் செய்யாமல் ரெஸ்ட் எடுக்கணும். ஆனா பார்த்தா அப்படி தெரியலை. அவங்க மருமகள் வீட்டில் முக்கால்வாசி வேலையை அவங்களை தான் செய்ய சொல்றாங்க போலிருக்கு. அம்மா மேலே அக்கறை எடுத்து பார்த்துக்குங்க சாந்தி.”

“சரி டாக்டர்.” 

“ஒருநாள் அம்மாவை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வாங்க. மதுமிதா உங்களை பார்க்கணும்னு சொல்றா. என்னை ஆண்ட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு ஒரே தொந்தரவு. உங்க வீடு தேடி வந்தால் நல்லாயிருக்காதுன்னுதான் வரலை மதுமிதாவுக்காக நீங்க அவசியம் வரணும்”. 

“வரேன் டாக்டர். நாளைக்கு அம்மாவை பார்க்க வீட்டுக்கு. போவேன். பிரபுவையும் கூட்டிக்கிட்டு அம்மாவோடு வரேன்.” 


செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த சிவனேசன், பட்டுப்புடவை சகிதம் வெளியே புறப்பட தயாராக வரும் அம்சவல்லியை பார்க்கிறாள்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க? என் மருமகளுக்கு பிறந்தநாள் வருதாம். பவுன் நெக்லஸ் வாங்கணும்னு தினகர் சொன்னான். அதான் ரெண்டு பேரும் கடைக்கு கிளம்பறோம்.” 

“அதானே பார்த்தேன். சாந்தியை தான் சொல்றியோன்னு ஒரு கணம் சந்தோஷப்பட்டுட்டேன்.”

“ஆமாம். அவளுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல். கல்யாணம் நெருங்கிடுச்சி. வீட்டில் வேலை நிறைய இருக்கு. அதை விட்டுட்டு அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிடறா… வரட்டும் இன்னைக்கு.. காலையில் போனவ இன்னும் வரலை.”

“அவ அம்மா உடம்பு முடியாதவங்க… போய் பார்க்கிறதில் என்ன தப்பு. சும்மா அவளையே ஏதாவது சொல்லிட்டு இரு. நீ கடைக்குப் போற வழியைப் பாரு”. 

எரிச்சலுடன் சொன்னவர், ஹாலில் வந்து உட்காருகிறார். 

“அந்த மகராசியை ஒண்ணுமே சொல்லலை போதுமா. வந்தா ராத்திரி சப்பாத்தி, குருமா செய்து வைக்க சொல்லுங்க. நான் கிளம்பறேன்.”

காரில் ஏற, தினகர் காரை கிளப்புகிறான். 


பிரபுவும், மதுமிதாவும் சந்தோஷமாக சாமான்களை பரப்பி விளையாடுவதை பார்க்கிறார்கள். 

“சின்னப் பிள்ளைகள் எவ்வளவு சீக்கிரம் நட்பாகிடறாங்க பார்த்தீங்களா, அதுவும் மதுமிதா… தன் விளையாட்டு சாமான்களை எப்படி ஆசையா பிரபுகிட்டே கொடுக்கிறாள்.

கமலம் சொல்ல… 

“ஆமாம்மா. அதுவும் தனியா வளருகிறவ… அன்புக்கு ஏங்கிறா…”

“டாடி… எனக்கும், பிரபுவுக்கும் பீட்சா வாங்கித் தர்றீங்களா?”

“வாங்கித் தரேன் கண்ணு”. 

“அம்மா எனக்கு கேக் வேணும்”. 

பிரபு சொல்ல…

“பிரபு… சும்மாயிரு”. 

“எதுக்கு சாந்தி அவனை தடுக்கிறீங்க. இங்கே வா பிரபு. உனக்கு வேறென்ன வேணும் அங்கிள்கிட்டே சொல்லு.”

“கேக் மட்டும் போதும்.”

“என்ன கேக்”

“ப்ளம் கேக். ஸ்டாபெரி மேலே வச்சு தாத்தா வாங்கித் தருவாரு”.

“அப்படியா அதையே வாங்கித் தரேன்.”

“சாந்தி நீங்களும் வர்றீங்களா. கடைக்கு போய் பீட்சாவும், கேக்கும் வாங்கிட்டு வருவோம். பத்து நிமிஷம்தான் பக்கத்தில்தான் கடை. காரில் போயிட்டு வந்துடுவோம். அம்மா, பிள்ளைகளை பார்த்துக்கட்டும்”. 

சாந்தி தயங்க….

“போயிட்டு வா சாந்தி, பிரபுவுக்கு என்ன பிடிக்கும்னு உனக்குதான் தெரியும். தம்பி என்ன வேத்து மனுஷனா… நானே டாக்டர்னு கூப்பிடறதை விட்டுவிட்டு அன்பா தம்பின்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன்.”

அத்தியாயம்-15

“போதும் டாக்டர் எதுக்கு இத்தனை கேக் வாங்கறீங்க.”

“இருக்கட்டும். போகும்போது வீட்டுக்கு எடுத்துட்டு போங்க. பிரபு ஆசையா கேட்டான்.”

“அப்புறம் வயித்துக்கு ஏதாவது செய்ய போகுது.”

“கூட்டிட்டு வாங்க. நானே ட்ரீட்மெண்ட் கொடுக்கிறேன்”. 

சரவணன் சொல்ல… சிரிக்கிறாள் சாந்தி.

“நான் காருக்கு போறேன் வாங்க.”

“ஒரு நிமிஷம். இதோ நானும் வந்துட்டேன்”.

பணத்தை கொடுத்தவன், அவளுடன் நடக்க, 

எதிரில் இருந்த பழக்கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்த அம்சவல்லி அந்தக் காட்சியை பார்க்கிறாள். 

‘அது சாந்திதானே… யாரோ ஒருத்தனுடன் சிரித்து பேசியபடி காரில் ஏறுகிறாள். என்ன அநியாயம். அம்மாவை பார்க்க போவதாக சொல்லிவிட்டு எத்தனை நாளாக இந்த நாடகம். சை… இவளென்ன குடும்பத்து பொம்பளையா… வீட்டிற்கு வரட்டும். முதலில் இந்த சனியனை விரட்டுகிறேன்’. 

உடனே மூளையில் எச்சரிக்கை மணியடிக்க… 

வேண்டாம். இப்போது எந்த பிரச்சனையும் பண்ணக்கூடாது. சுமதி, தினகர் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும். அதுவுமில்லாமல் இந்த சுமதி, அண்ணி, அண்ணியென்று இந்த பாழாய் போனவள் சொன்னதைத்தான் கேட்கிறாள். 


“இந்த ஏழை வீட்டு பெண் அமுதாதான் எனக்கு ஏற்ற மனைவி, இவள்தான் இந்த வீட்டு மருமகள். தயவு செய்து என் மனநிலையை புரிஞ்சுக்குங்க. நல்லபடியா அபர்ணாவை தினகருக்கு கல்யாணம் பண்ணுங்க. எந்தப் பிரச்சினையும் வேண்டாம்”. 

வெறும் தாலி கயிறுடன் நிற்கும் அமுதாவை பார்த்து திகைத்து நிற்கிறார்கள் அபர்ணாவும், அவள் தாய் சங்கவியும்… 


அபர்ணாவின் கழுத்தில் புது மஞ்சள் கயிறு மினுமினுக்கிறது. இந்த கல்யாணம் நடக்குமா என்று தினகர் தவித்த தவிப்பு.. நல்லவேளை கோடீஸ்வர வீட்டு மாப்பிள்ளையாகிவிட்டான். மனம் சந்தோஷத்தில் துள்ளியது. 

சாந்தி அடுப்படியில் வேலையாக இருக்க… பின்புறம் நிற்கும் அம்மாவை தேடி வருகிறான். 

“எப்படியோ உன் கல்யாணம் நல்லபடியா நடந்துடுச்சு தினகர். சுமதி இப்படி பண்ணினதால சம்பந்தி கல்யாணத்தை நிறுத்திடுவாரோன்னு ரொம்ப பயந்தேன். அவளும் புருஷன் வீட்டுக்கு போயிட்டா. அபர்ணாவும் நம்ப வீட்டு மருமகளாக வந்துட்டா. இப்பதான் மனக நிம்மதியா இருக்கு” 

“ஆமாம்மா. அபர்ணாவை அண்ணியை போல நினைச்சுடாதே. அவ பெரிய இடத்துப் பொண்ணு. அவளை அதட்டி வேலை வாங்கிறதெல்லாம் வேண்டாம். புரிஞ்சு நடந்துக்க…” 

“இதுகூட எனக்கு தெரியாதா. அபர்ணா எப்பேர்ப்பட்ட இடத்திலிருந்து வந்திருக்கா. சாந்தி அவளுக்கு ஈடாவாளா. அவ இந்த வீட்டில் ராணி மாதிரி இருப்பா. கவலைப்படாதே. ஆமாம் அபர்ணா தூங்கி எழுந்தாச்சா?” 

“இல்லம்மா.தூங்கறா”. 

“தூங்கட்டும். அவளை எழுப்பிடாதே. அவ இஷ்டத்துக்கு எழுந்திருக்கட்டும்”. 

சொன்னவள் அடுப்படிக்கு வந்து சாந்தியிடம்… 

“மசமசன்னு வேலை பார்க்காம, கொஞ்சம் சுறுசுறுப்பா பாரு புரியுதா. பிரபுவை ஸ்கூலுக்கு கிளப்பற வேலையை அவர் பார்த்துப்பாரு. புள்ளை, புள்ளைன்னு அவன் பின்னாடி திரியாம, சமையல் வேலையை கவனி”.

அம்மாவின் நடவடிக்கையில் திருப்தியடைந்தவனாக மாடி ஏறுகிறான்.


“அபர்ணா உனக்கு காபி கலந்து மேடையில் வச்சிருக்கேன் எடுத்துக்க… ஸ்கூல் வேன் வந்திடும். பிரபுவை அனுப்பிட்டு வரேன்”.

வேகமாக வாசலுக்கு வருகிறாள் சாந்தி. அப்போதுதான் கடை போயிருந்த சிவனேசன் வெளி கேட்டை திறந்து உள்ளே வருகிறார்.

“வேன் வந்திடும்னுதான் அவசரமாக வந்தேன். நீ போம்மா. நான் பிரபுவை அனுப்பி வச்சுட்டு வரேன்”.

“வாடியம்மா… மகாராணி உனக்கு காபியை அபர்ணா கையில் கொடுக்கிறதைவிட அப்படி என்ன பெரிய வேலை”. 

“பிரபுவுக்கு ஸ்கூல் வேன் வந்திடும்னு போனேன்.”

“அவன் ஒருநாள் ஸ்கூல் போகாட்டி குடிமுழுகி போகாது புரியுதா, அபர்ணாவுக்கு வேண்டியதை கவனிக்கிறதுதான் முதல் வேலை. அதை புரிஞ்சுக்க. போய் பூஸ்ட் கலந்துட்டுவா, அபர்ணா காபி குடிக்க மாட்டாளாம்.”

அம்சவல்லி சாந்தியை முறைக்க… தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல கால் மேல் கால் போட்டபடி செய்தி தாளை கையில் பிடித்திருக்கிறாள் அபர்ணா.

“அபர்ணா காபி சாப்பிட்டியா?”

“ம்கூம். நான் பூஸ்ட் தான் குடிப்பேன். அதை கொடுக்க அரை மணி நேரமாகுது. அதுக்குதான் வெயிட் பண்றேன்.” 

“ஸாரி டியர். நீ ரூமுக்கு போ. நான் வாங்கிட்டு வரேன்” – அபர்ணா எழுந்து செல்ல… 

“அம்மா, உன்கிட்டே காலையிலேயே என்ன சொன்னேன்? ஏன்மா இப்படி பண்றே? அவ எழுந்துட்டான்னு தெரிஞ்சதும் கலந்து கொடுக்க வேண்டியதுதானே.”

கடுகடுக்கிறான் தினகர். 

“இல்லடா… அவ பூஸ்ட்தான் குடிப்பான்னு தெரியலை. எல்லாம் இந்த சாந்தியால் வந்தது”. 

அதற்குள் பூஸ்ட் டம்ளருடன் சாந்தி வர… அதை வாங்கி தினகரிடம் கொடுத்தவள். 

“நீ போ… நான் இவளை கவனிக்கிறேன்.”

“உன் மனசில் என்ன நினைச்சிருக்கே. வந்திருக்கவ உன்னை மாதிரி அன்னக்காவடி இல்லை தெரியுமா… என்னமோ, கடமைன்னு ஆடி அசைஞ்சு வேலை பார்க்கிறே”. 

“அம்சா, நீ பேசறது சரியில்லை. எதுக்காக எல்லார் முன்னிலையிலும் அவளை கரிச்சு கொட்டறே. காலையிலிருந்து உன்னை கவனிச்சுட்டு தான் இருக்கேன். எதுவும் பேசாம அப்பாவியாக இருக்கான்னு அவளை படுத்தி வைக்கிறே. அவளும் இந்த வீட்டு மருமகள்தான். உன் மகனோட மனைவி ஞாபகம் வச்சுக்க.” 

“ஆஹா… நல்லாவே ஞாபகம் வச்சிருக்கேன். என் மகனை வளைச்சுப் போட்டு அவனை பரலோகம் அனுப்பி வச்சுட்டு இப்ப இன்னொருத்தனோடு கொஞ்சி குலாவுறதை பார்த்தும் இந்த வீட்டில் இன்னும் இவளை வச்சிருக்கேனே என்னை சொல்லணும்.”

“அத்தை…”

அதிர்ந்து நிமிர… 

“என்னடி… நடிக்கிறே. போன மாசத்தில் அம்மா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லிட்டு கடைத் தெருவில் வாட்ட சாட்டமான இளைஞனோடு சுத்தி வந்ததை இந்த இரண்டு கண்ணால பார்த்தேன். கல்யாண சமயத்தில் நம்ப குடும்ப மானம் பறிபோக கூடாதுன்னு சும்மா இருந்தேன்”. 

“அம்சா… அபாண்டமா பொய் சொல்றதை நிறுத்தி வாயை மூடு”. 

“உங்களை மாதிரி அவளை நம்ப நான் தயாராக இல்லை. அவ அடிக்கடி அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்றதெல்லாம் சும்மா. அவனோடுதான் ஊர் சுத்தறா. அவளோட பசப்பு வார்த்தைகளை நீங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன்”. 

“இங்கே பாரு, இனிமே அம்மா வீட்டுக்கு போறேன். ஆத்தாவை பார்க்கப் போறேன்னு என்னை கேட்காம வெளியே போகக் கூடாது புரியுதா. என் பேரனுக்காக பார்க்கிறேன். இல்லாட்டி நடக்கிறதே வேறு”. 

“அம்சா வாயை மூடறியா.”

“என்னம்மா சாந்தி, ஏன் கலங்கறே. அவ மனசில் கொஞ்சம்கூட ஈரம் இல்லாதவ.”

“நீ தினம் தினம் திவாகரை நினைச்சு உருகுறது எனக்கு தெரியும். அவ சொல்ற எதையும் நான் நம்ப தயாராக இல்லை. நீ உள்ளே போம்மா.”

படுக்கையில் விழுந்தவள் உடல் குலுங்க வாய்விட்டு கதறி அழுகிறாள். 

அத்தியாயம்-16

பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்தவள்…

“அம்மா, எங்கேம்மா போறோம்.’ 

புரியாமல் கேட்கும் பிரபுவின் கைபிடிக்கிறாள்.

“நான் வரேன் திவா. இனியும் இந்த வீட்டில் நான் இருக்க முடியாது. உங்களையே மனசு நிறைய சுமந்துட்டு இருக்கிற என்னை அத்தை இப்படி பேசினாங்களோ… அந்த உறுத்தலே என்னை கொள்னுடும் திவா. நம் மகனுக்காக நான் வாழணும். இந்த வீட்டில்தான் இருக்கணுங்கிற என் வைராக்கியம் தளர்ந்துடுச்சி”

“எங்கேம்மா கிளம்பிட்டே”

“மன்னிச்சுடுங்க மாமா. என் நடத்தையை அத்தை சந்தேகப்பட்ட பிறகு இனியும் நான் இங்கே இருக்க விரும்பலை. அம்மா வீட்டுக்கு போறேன்.” 

“நீ எடுத்த முடிவு சரியாவதுதான்மா, நீதான் என்னை மன்னிக்கனும். என் காலம் உள்ளவரை உனக்கு உறுதுணையாக இருக்கணும்னு நினைச்சேன். அது முடியாது போலிருக்கு” 

“இனி சின்ன மருமகளுக்காக உன்னை வேலைக்காரியை விட கேவலமாக நடத்துவா… அதை தடுத்து நிறுத்தற அதிகாரம் எனக்கில்லம்மா… நீ கிளம்பு” 

பிரபுவை தூக்கி முத்தமிட்டவர், விடை கொடுக்கிறார். 


“என்னங்க ராத்திரி டிபன் கூட செய்யாம இந்த சாந்தி எங்கே போய் தொலைஞ்சா. தினகரும், அபர்ணாவும் சினிமாவுக்கு போயிருக்காங்க. நான் பக்கத்திலிருந்த கோயில் வரை போனேன். அதுக்குள் எங்கே போனா? அவ நடத்தையே சரியில்லை. என் பிள்ளையின் பேரை கெடுக்க வந்தவ” 

“திட்டு அம்சா. எவ்வளவு திட்ட முடியுமோ திட்டு. இனி அதை கேட்சு சாந்தி இங்கே வரமாட்டா.”

“என்ன சொல்றீங்க?”

திடுக்கிடுகிறாள். 

“அவ இந்த வீட்டை விட்டே போயிட்டாள்.”

“ஐயோ… என்ன சொல்றீங்க?”

“ஆமாம். இத்தனை வருஷமா உன் ஆட்டத்துக்கு ஆடினவ கால் வலித்து சோர்ந்து போயிட்டா. முடிஞ்சா உன் சின்ன மருமகளை ஆட்டி வை. போ… உன் மருமகளும், மகனும் வந்திடுவாங்க. போய் டிபன் பண்ணு நேரமாச்சு”. 

அத்தனை வேலையையும் இழுத்து போட்டு வாய் திறக்காமல் வேலை செய்தவள், நிமிஷமாய் போய்விட்டாளே. இனி என்ன செய்ய போகிறேன். எப்படி சமாளிக்கப் போகிறேன். பயம் நெஞ்சில் எட்டிப் பார்த்தது. 


டி.வி.க்கு முன் அமர்ந்திருந்த கணவனிடம் வந்தவள், அவன் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்கி டி.வி.யை நிறுத்துகிறாள். 

“என்ன கிரிஜா. ஏன் டி.வி.யை ஆஃப் பண்ணினே?”

“நம்ப வீட்டு பிரச்சினை தலைக்கு மேலே இருக்கு. கொஞ்சம் கூட அக்கறையில்லாம டி.வி. பார்க்கறீங்க” – சிடுசிடுக்கிறாள்.

“சரி, சொல்லு.”

“என்ன சொல்றது. உங்க தங்கையும், அவள் மகனும் நம்ப வீட்டுக்கு விருந்தாளியாக வரலை. நிரந்தரமா தங்க வந்திருக்காங்க”. 

“அப்படியில்லை கிரிஜா. அவங்க அத்தையோடு மனஸ்தாபமாக இருக்கும். நாலு நாளில் கிளம்பிடுவா.”

“ம்க்கும். உங்களுக்கு எதையும் விளக்கமாக சொன்னாதான் புரியும். அவ நடத்தையில் சந்தேகப்பட்டு வீட்டை விட்டு விரட்டி. அடிச்சுட்டாங்க. அந்த டாக்டரோடு இளிச்சு இளிச்சு பேசும்போதே நினைச்சேன். மனசை அடக்கணும். இல்லாட்டி இன்னொருத்தரை கட்டிக்கணும். இதெல்லாம் ஒரு பிழைப்பா?”

“கிரிஜா வாய்க்கு வந்ததை பேசாதே”. 

“எது எப்படியோ… அவ இங்கே இருக்கக்கூடாது. உங்கம்மாவை வச்சு பார்க்கிறதே பெரிய விஷயம். இப்படி எல்லாருக்கும் வடிச்சு கொட்ட முடியாது. வேறு எங்காவது தங்க இடம் பார்த்துக்க சொல்லுங்க. நாளைக்கு இவளால என் பேர் நாறிடப் போகுது”. 

பிரபுவுடன் வெளியே வருகிறாள் சாந்தி. 

“அண்ணி, நான் வந்தது உங்களுக்கு பிடிக்கலைன்னா நேரிடையாகவே என்கிட்டே சொல்லியிருக்கலாம். இந்த வீட்டை தாய் வீடாக நினைச்சு வந்தேன். நீங்க அண்ணன்கிட்டே பேசினப்ப தான் எனக்குப் புரிஞ்சுது. நான் கிளம்பறேன்.”

“சாந்தி… எங்கே போவே? வேண்டாம்மா…” தவித்த கமலம், உள்ளே போனாள். போன வேகத்தில் கையில் இரண்டு புடவைகளை திணித்த பையுடன் வருகிறார். 

“நில்லு சாந்தி. நானும் வரேன்.”

“அம்மா, நீ எங்கே போறே. அவ எங்காவது ஹாஸ்டலில் இருந்துப்பா. கோபப்பட்டு போய் நீயும் கஷ்டப்படாதே.”

“சி… வாயை மூடு… நீயெல்லாம் ஒரு பிள்ளையா. பெண்டாட்டி சொல்றதை கேட்க வேண்டியதுதான். அதுக்காக இரக்கமே இல்லாதவனாக இருக்கக்கூடாது. சுமந்து பெத்த தாயை வேலைக்காரி போல நடத்தறதை பார்த்துட்டு இருந்தவன்தானே…”

“உன் மனசில் எங்கே ஈரம் இருக்கும். கையில் மகளோடு பரிதவிச்சு நிற்கிறவளுக்கு ஆறுதல் சொல்லாமல், இப்படி பெண்டாட்டியும், புருஷனுமா விரட்டறீங்களே. இனியும் உங்க நிழலில் வாழணுமா.. தேவையில்லப்பா.. நீங்க நல்லாயிருங்க. நாங்க போறோம்.”

அதே கோபத்துடன் மருமகளை பார்க்கிறாள். 

“கடவுள் ஏன் இன்னும் குழந்தை பாக்கியத்தை தரலை தெரியுமா. உன் மனசில் அகங்காரமும், கோபமும்தான் இருக்கே தவிர, அன்பு துளியும் இல்லை. அன்பில்லாத ஒரு தாயை அந்த கடவுள் உருவாக்க விரும்பலை.”

பேரனின் கையை பற்றியவள், மகளுடன் நடக்கிறாள். 

– தொடரும்…

– பிறை தேடும் இரவு (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 2014, செல்வி பெண்கள் நாவல், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *