பாவாடையை மாத்தாதே…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 7,563 
 

சோதிட சிகாமணி. .. ஸ்ரீலஸ்ரீ மார்க்கண்டேயன் தன் முன் பணிவாக வந்தமர்ந்த இளைஞனைக் உற்றுப் பார்த்தார்.

“பேர் சுரேஷ் !”அமர்ந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“அப்புறம். .?”

“வயசு 30. அரசாங்க வேலை. எழுத்தர் பணி. மாசம் முப்பதாயிரம் சம்பளம். மனைவி , ஒரு பொண்ணு, புள்ளைன்னு நிம்மதியான வாழ்க்கை.”

“அப்புறம் ஏன் இங்கே வந்தீங்க. .?”

“சின்ன சிக்கல். !”

“என்ன. .?”

“பேர் மாத்தனும். .’

“சுரேஷ் பேர் நல்லாத்தானே இருக்கு!”

“என் பேரை இல்லே அப்பா பேரை. .”

மார்க்கண்டேயன் ஒரு வினாடி திகைத்து திடுக்கிட்டார்.

சுரேஷ் தொடர்ந்தான்.

“நான் இப்போ எங்க அலுவலகத்துல ஒரு சங்கத் தலைவன். சிவனேன்னு இருந்த எனக்கு தானே தேடி வந்த பதவி அது. அதனால பல போராட்டங்கள், பொது கூட்டங்கள்ல பேச வேண்டி இருக்கு. ..”

“அதனாலென்ன. .?”

“என் அப்பா பேர் பாவாடை. சாதாரணமாய் பாவாடை சுரேஷ்னு அழைக்கிறது, பேசுறது, போஸ்டர் அடிக்கிறதெல்லாம் நல்லா இல்லே. பள்ளிக்கூடத்துல படிக்கும் காலத்திலேர்ந்து இந்த தொல்லை இருக்கு. என் பக்கமா பொண்ணுங்க வந்தா. .. “ஏ. .. பாவாடை சுரேஷ் !”ன்னு அழைச்சு கலாட்டா பண்ணுவானுங்க . பொண்ணுங்க சிரிச்சிட்டுப் போகும். எனக்கு அவமானமாய் இருக்கும். அப்போதிருந்தே அப்பா பேரை மாத்தனும்னு மனசுக்குள்ள வெறி, ஆத்திரம். இப்போதான் சமயம் கிடைச்சிருக்கு.”

“சரி. அப்பாவைப் பத்தி சொல்லுங்க. ..”

“அப்பாவுக்கு வயசு 65. அம்மா இருக்காங்க. எனக்கு அஞ்சு அக்கா தங்கச்சிங்க. மூணு பேருக்குத் திருமணம் ஆகி புள்ளைக்குட்டிகளோடு குறை இல்லாம இருக்காங்க. கடைசி ரெண்டுக்கும்தான் திருமணம் முடிக்காம 23, 25 வயசுல இருக்காங்க.”

“நீங்க ஒரே புள்ளையா. .?”

“ஆமா. ..”

“அம்மா, அப்பாவோட கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா. .?”

“இல்லை. நான் தனிக்குடித்தனம். !”

“ஏன். ..? ?”

“மனைவியும் அரசாங்க வேலைக்காரி. புள்ளைக படிப்பு வசதி , நாங்க ரெண்டு பெரும் வேலைக்குப் போறது எல்லாத்துக்கும் கிராமம் சரி இல்லே. சரியான போக்குவரத்து வசதி இல்லே. பேருந்து ஓடலை ஆகையினால் நகரத்துக்கு வந்துட்டோம். தனிக்குடித்தனம் வந்து மொதல்ல ஒரு வாடகை வீட்ல குடி இருந்தோம். அப்புறம் மனை வாங்கி ,லோன் போட்டு வீடு கட்டி, நிம்மதியாய் இருக்கோம்.”

“ஆக. .. அப்பா, அம்மா, தங்கச்சியெல்லாம் கிராமத்துல இருக்காங்க.”

“ஆமாம் !”

“அவுங்களுக்கு வருமானம். .?”

“சம்பளம் எடுக்குற அன்னைக்கு அப்பா, அம்மாவுக்கு ஆளுக்கு ஐநூறு கொடுப்பேன். மத்தபடி அப்பா விவசாய கூலி. அம்மா நடவுக்கு போகும். தங்கச்சிங்களும் நடவு, களை எடுக்கன்னு கழனிகளுக்குப் போகும்.”

“ரெண்டு மாச சம்பளம் எடுக்கிற நீங்க அப்பா அம்மாவுக்கு இன்னும் அதிகம் கொடுத்து உதவுலாமே. .”

“முடியாது சார். கையில இந்த அளவுக்குப் பணமிருந்தால் சிரமமில்லாமல் மாசம் ஓடும் என்கிறதைக் கணக்குப் பண்ணி வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கி இருக்கோம். எங்க பட்ஜெட்ல பைசா கொறைஞ்சாலும் சிரமம்.”

வரலாறுகளைக் கேட்ட மார்க்கண்டேயன். …

“அப்பாவுக்கு என்ன பேர் மாத்தலாம்னு யோசனை. .? “கேட்டார்.

சுரேஷ் கொஞ்சமும் தயக்கமில்லாமல்……….

“எனக்குத் தமிழ் பற்று அதிகம். பரிமேலழங்கர்னு வைக்க ஆசை. “சொன்னான்.

“நல்ல பேர். அப்பா ஜாதகம், உங்க ஜாதகம் கொடுங்க. .” மார்க்கண்டேயன் கை நீட்டினார்.

சுரேஷ் மஞ்சள் பையிலிருந்து ஒரு நோட்டை உருவி விழித்தான்.

“என்ன. .?”

“என் ஜாதகம் மட்டும்தான் இருக்கு. .”

“அப்பா ஜாதகம். .?”

“எடுத்து வரலை. .!”

“ரெண்டு பேர் ஜாதகத்தையும் பார்த்து, கணித்து , நல்லது கெட்டது ஆராய்ந்துதான் தான் பேர் வைக்கனும், மாத்தனும். போய் எடுத்து வர முடியுமா. .? “பார்த்தார்.

“ஒரு மணி நேரத்துல வந்துறேன். “சடன் எழுந்தான்.

இவன் வெளியே வந்து வண்டியை எடுத்தான்.

“அப்பாவிடம் விபரம் சொல்லித்தான் ஜாதகம் வாங்க வேண்டும் ! “மனசுக்குள் ஓடியது.

‘சம்மதிப்பாரா. .?….. நீ அப்பனா. . நான் அப்பனா. . என்றால்…?! அப்பா கேட்காவிட்டாலும் அம்மா கேட்பாள். முசுடு. ! “நினைக்கும்போதே என்னவோ போலிருந்ததுவயிற்றைக் கலக்கியது.

“வேண்டாம் பெயர் மாற்றம். திரும்பிடலாமா. .?”- நினைத்தான்.

‘சங்கத் தலைவன் ஆகி இருக்கே. எதிர்காலம் பிரகாசம் ! கூடாது. ! “அதுவே அனிச்சையாக மாறியது. . கிராமத்தில் நுழைந்து கூரை வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான்.

அப்பா வாசலை உட்கார்ந்து கீற்று முடிந்து கொண்டிருந்தார்.

குடிசைக்கு கதவு சாத்தி இருந்தது.

“அப்பா ! அம்மா இல்லே. .? “அவர் எதிரில் அமர்ந்து கேட்டான்.

“நடவுக்குப் போய் இருக்காள். .! “சொன்னார்.

“தங்கச்சிங்க. .?”

“அதுங்களும் அம்மாவோட கூலிக்குப் போய் இருக்கு.”

“அப்பா….. !”

“என்ன சுரேஷ் . .?”

“உங்க ஜாதக்கட்டு வேணும் ..”

“எதுக்குப்பா..?”

“பேரை மாத்தனும். .”

“மாத்தினா. .?!”

“என் எதிர் காலம் நல்லா இருக்கும். .”

“அதுக்கு ஏன் என் ஜாதகம் . .?”

“உங்க பேரைத்தான் மாத்தப்போறேன்.”

அவர் சிறிது நேரம் எதுவும் பேசாமல் தன் வேலையிலிருந்தார்.

“என்னப்பா யோசனை. .?”

“உன் எதிர் காலம் நல்லா இருக்கனும். அதுதான் எங்களுக்கு வேணும். அதுக்காக எதையும் தியாகம் செய்யவும் நாங்க தயாரா இருக்கோம். பேர்ல என்ன இருக்கு. .?”

“அப்போ பேர் மாத்துறதைப் பத்தி உங்களுக்கு ஆட்சேபனை இல்லே. .?”

“கண்டிப்பா இல்லே. பெத்தப்புள்ளை நல்லா இருக்கத்தான் என் அப்பனும் விரும்புவான். வீடு சும்மாதான் சாத்தி இருக்கு. திறந்து பரணியில் இருக்கும் டிரங்கு பெட்டியில இருக்கு. ஏறி எடுத்துப் போ.”

சுரேஷ் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தான்.

அப்பா சொன்னபடி இருந்தது. எடுத்துக்கொண்டு வெளி வந்தான்.

“வர்றேன்ப்பா. .”விடை பெற்றான்.

மார்க்கண்டேயன் இவனுக்காகவே காத்திருப்பது போயிருந்தார்.

“என்ன கிடைச்சுதா. . ? “தன் முன் வந்தவனிடம் கேட்டார்.

“கிடைச்சுது. .”

“கொடுங்க. .?”

அப்பா ஜாதகக்கட்டையும் தன் ஜாதக நாட்டையும் எடுத்துக் கொடுத்தான்.

மார்க்கண்டேயன் இரண்டையும் வாங்கி, விரித்து ஆராய்ந்தார்.

அடுத்து வெள்ளைத் தாளில் கட்டங்கள் போட்டு கணக்குகள் போட்டார். பின் ஒரு முடிவுக்கு வைத்தவராய். ..

“உங்கள் ஜாதகத்துல எந்த குறையுமில்லே. நீங்க நெனைக்கிறதைப்போல பெரிய ஆளாய் வருவீங்க. ஆனா. .. உங்க அப்பா ஜாதகத்துலதான் குறை. ஆள் பேரை எப்படி மாத்தினாலும் அவருக்குக் கஷ்டம். சாண் ஏறினால் முழம் சறுக்குவார். பரவாயில்லையா. .? “சுரேஷ் முகத்தைப் பார்த்தார்.

“பரவாயில்லே சார். ..”சுரேஷ் சடக்கென்று சொன்னான்.

“அதாவது. … நீங்க நல்லா இருக்க… அப்பா கெட்டுப்போனா பரவாயில்லே ! சரியா. .? “கேட்டு அவன் முகத்தை நேருக்கு நேர் ஆராய்ந்தார்.

சுரேசுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திணறினான்.

“சுரேஷ் ! தான் மட்டும் நல்லா இருக்க மத்தவங்க என்ன பெத்தவங்களே கெட்டுப்போகலாம்ன்னு நினைக்கிறது மடத்தனம். நல்ல எண்ணம் கிடையாது. மாத்த வேண்டியது பேரை இல்லே. உங்க எண்ணத்தை. எல்லோரும் நல்லா இருக்கனும், வாழனும், வளரனும் என்கிற நல்ல எண்ணத்தை வளர்த்துக்கோங்க. நல்லா வருவீங்க. உங்க எதிர் காலம் சிறப்பா இருக்கும். போய் வாங்க. ..”ஜாதகங்களைத் திருப்பினார்.

சுரேஷ் தலை குனிந்தபடி எழுந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *