மகிழ்ச்சியான கனவில் திளைத்திருந்த பாப்பாவுக்கு அம்மாவின் அதட்டலான அழைப்புக் குரல் நாராசமாய் விழுந்தது. அவளின் இனிய கனவினை அது கலைத்து நினைவுக்கு இழுத்து வந்தது.
“பாப்பா …பாப்பா எழும்பு. எழும்படி நேரம் ஐஞ்சாச்சு…”
பாப்பா சோம்பல் முறித்தபடி படுக்கையில் இருந்து எழுந்தாள். அவள் எழும்புவதற்கே காத்திருந்தது போல சுவர்க்கடிகாரத்திலிருந்து வெளிப்பட்ட சின்னக்குருவி ஐந்து தடவை கடிகாரத்தைக் கொத்தி ஒலி எழுப்பிவிட்டு மறைந்து போகிறது. லண்டனில் இருந்து மாமா அனுப்பிவைத்த கடிகாரம் அது.வந்த நாளிலிருந்து நாள் தவறாது தனது இன்பக் கனவுலகை அது கலைத்துச் சிதைப்பதனால் அதன் மீது பாப்பாவுக்கு அளவுகடந்த வெறுப்பு …கோபம்….
ஆனால் வெறுப்பையும் கோபத்தையும் தன்னுள்ளே விழுங்கிக்கொள்வதைத் தவிர அவளால் என்னதான் செய்ய முடியும்?அந்தக்கடிகாரம் போன்று, அம்மா என்ற பற்றரியின் இயங்கு விசையால் இயங்குவதற்கே பிறந்தவள் அவள்.
அம்மா அப்பாவுக்குச் செல்லப் பாப்பா ஆகவும் பாடசாலை ஆசிரியருக்கு மகிழினி ஆகவும் சக மாணவிகளுக்கு மகிழ் ஆகவும் விளங்கும் அந்தச் சிறுமி வேண்டா வெறுப்போடு சென்று தனது படிப்பு மேசையின் முன்பு நாற்காலியில் அமர்ந்தாள்.
தூக்கம் முற்றாகக் கலையாது தேங்கிவிட்ட கண்களைத் திறப்பதே பெரும் சிரமமாகவிருந்தது. திறந்த விழிகளைப் பாடப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் பூதமாய் மாறிப் பயமுறுத்தியது. ஆனாலும் அவள் ஆறு மணி ஆகும் வரை அங்கிருந்து அசைய முடியாது. படித்தே ஆகவேண்டும்.
படிப்பதுபோலப் பாசாங்கு செய்யவும் முடியாது.
அம்மாவின் கண்களும் காதுகளும் சர்வவல்லமை படைத்த கடவுளுடையவை போல சர்வவியாபகமானவை என்பது பாப்பா அனுபவபூர்வமாகப் பெற்ற முடிவு.
அன்றைக்குரிய பயிற்சிகளைச் செய்து முடிக்காவிட்டால் அம்மவின் பயங்கரக் கோபத்துக்கு ஆளாக நேரிடும் .பரதேசி மொக்கு சாக்கு என்று லட்சார்ச்சனையில் இறங்கிவிடுவா.
பாப்பா புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடையாவிட்டால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தலையிறக்கம். கௌரவக் குறைச்சல் ஏற்படுமாம்.
அப்பா வங்கி ஒன்றில் முகாமையாளர். அம்மா பாடசாலை அதிபர். அவர்களுக்குத் தங்கள் ஏகபுத்திரி தங்களிலும் சிறந்த படிப்பாளி என்று பெயர் எடுப்பது மட்டும் தான் நோக்கம் அல்ல. அப்பாவின் வங்கியிலே சிற்றூழியனாய் உள்ள முத்தையாவின் மகன் சென்ற வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாகச் சித்தி பெற்றதற்காக ,அவன் வாயெல்லாம் பல்லாக வந்து வங்கி ஊழியர்களுக்கு கன்டோஸ் வழங்கிக் கொண்டாடியது, இவர்களுக்கு மன உறுத்தல்.சாமானியன் மகன் சிறப்புச் சித்தி பெற்றால் சகல வசதிகளுமுடைய தங்களின் ஏக புத்திரி யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே முதன்மைச் சித்தி பெற வேண்டாமா..?அந்த வெற்றியை அவர்கள் பெரிய பாட்டி கொடுத்துக் கொண்டாடாதுவிட்டால் அவர்களின் கௌரவம் என்னாவது…?
பக்கத்து வீட்டுச் சேவல் பெருங்குரல் எடுத்து விடியலைக்கூவி அழைக்கிறது.
வெள்ளைவெளேர் என்ற பால்வண்ண மேனியும் இரத்தச் செம்மையோடு கூடிய சொண்டுமுள்ள அந்தச் சேவல் கம்பீரமாய் நடந்து வருவதைக் காணப் பாப்பாவுக்குக் கொள்ளை ஆசை. நான்கு பக்கச் சுவர்களுக்கிடையே அடைக்கப்பட்டுக் கிடக்கும் அவளுக்கு அந்தக் காட்சி என்றைக்கும் கானல் நீர்தான்.
காலைக் கதிரொலியிலே பொன்மணிகளாய் நெல்மணிகளைச் சுமந்து கொண்டு , மெல்லிய காற்றின் தழுவலிலே கிறங்கிப் போய் அசைந்தாடும் நெற்கதிர்கள, அவளின் சின்னஞ் சிறிய உள்ளத்திலே ஏற்படுத்தும் களிப்பினை என்ன என்பது..?.
பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு கிளித்தட்டு ,கெந்தல் ,கோக்கான் ,பசுவும் புலியும் ஆட்டம் முதலான விளையாட்டுக்களை விளையாடுகையில் ஏற்படும் உற்சாகம் அம்மா பழக்கும் பாற்மின்ரனில் அவளுக்கு என்றும் உண்டானதில்லை.
சென்ற ஆண்டு விடுமுறைக் காலத்தில் கண்டி சென்று அங்கு கண்ட அழகிய இயற்கைக் காட்சிகளிலே நெஞ்சைப் பறிகொடுத்தது இன்றும் நினைவிலே பசுமை அழியாமல் நிலைத்திருக்கிறது, பாப்பாவின் உள்ளத்திலே பொங்கிப் பூரித்து விரிகின்ற சின்னச் சின்ன ஆசைகள் பெரும்பாலும் நிறைவேறாமல் போவதுதான் வழக்கம்!
பாப்பா மேசையில் புத்தகத்தை விரித்த நிலையில் ,இன்னும் பாதிக் கண்களை மூடியபடியே கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்…
“நங் “ என்ற சத்ததுடன் அவளின் தலையில் பலத்த குட்டு ! அம்மாவின் இந்த எதிர்பாராத தாக்குதல் அவளை நிஜ உலகுக்கு அழைத்துவந்தபோது தலையில் எற்ற்பட்ட கொடிய வலி அவளை பதைபதைத்துக் கிறுகிறுக்க வைத்தது.
பாடசாலையில் அன்று நடைபெறப்போகும் ஆங்கிலப் பேச்சுப் போட்டியின் முதற்சுற்றுக்கு ஆயத்தம் செய்யாமல் மகள் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு தூங்கிவழிகிறாளே! அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் பலமான அந்தக் குட்டு.
பாப்பாவின் விழிகளிலே நீர் முத்துக்கள் உருண்டோடின.அம்மாவின் செய்கை சினத்தைனைக் கிளப்பியது.
அவள் சிறுமிதான்.ஆனால் பெரும் பிடிவாதக்காரி.கைகால்களை உதறியபடி …விம்மிப் பொருமியபடி ….ஓடிச் சென்று கட்டிலில் சுறுண்டு படுத்துவிட்டாள்.
இனி அம்மா என்ன ? ஆண்டவனாலும் அவளை அசைக்க முடியாது.
அம்மாவின் கோபம் ஆரோகண கதியில் ஏறியது.
சமையல் வேலை ஒரு புறம்,கடமைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் மறு புறம்.
அதிபர் வேலைப் பளு ,கணவனின் ஒத்தாசையின்மை,இத்தனைக்குமிடையே மகளின் குணமறிந்திருந்தும் அவளைச் சீண்டிவிட்ட குற்ற உணர்வு ,அதிகாலைப் பொழுதில் அவளின் தலையைப் பதம் பார்த்ததால் வந்த கழிவிரக்கம் …எல்லாம் சேர்ந்து அவவின் சீற்றத்தைக் கணவன்மீது திசைதிருப்பிவிட்டன.
வங்கியில் முதல்நாள் மாலையில் இடம் பெற்ற பிரியாவிடையில் கலந்து கொண்டு இரவு பத்துமணியளவில் நிறை வெறியுடன் வந்து படுத்தவர்தான, தலையணை ஒன்றைத் தழுவியபடி இன்னும் குறட்டை விடுகிறார்.
“இங்கையப்பா உங்கட செல்லப்பிள்ளையிண்ட திமிரப் பாருங்கோ. அவ இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகாமல் மட்டம் போடப் பிளான் போடுறா. வந்து பாருங்கோ ..”
அம்மாவின் குரல் அப்பாவின் காதைக் குடைந்தது. எரிச்சலோடு அவர் உருண்டு மறு பக்கம் படுக்கிறார்.
“பிள்ளையத் தலையில வைச்சுக் கூத்தாடிறதும் நீர்தான். இப்ப குட்டிப்போட்டு அழவைச்சதும் நீர்தான். எனக்கேன் சொல்லுறீர்.நீர்பாடு உம்மட பிள்ளை பாடு.” அப்பா தொடர்ந்து பேசவுமில்லை. படுக்கையிலிருந்து எழும்பி வரவுமில்லை..
“எனக்கென்ன ? அவள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.நீங்கள் குசாலாய் நித்திரை கொள்ளுங்கோ.”
விரத்தியின் விளிம்பில் தகப்பனையும் மகளையும் ஏசி விட்டு அம்மா அடுக்களைக்குள் நுழைந்து கொண்டா.
பாப்பாவுக்கு அப்பாவிலும் அம்மாவிலும் கோபம் கோபமாய்வந்தது.தன்னில் அவர்களுக்கு அக்கறையில்லை அன்பு இல்லை என்று அவ்வேளையில் நினைத்துக் கொண்டாள்.
“நான் காய்ச்சலாய் படுத்திருக்க வேணும்.இவையின்ற நடப்பு அப்பதான் தெரியும். இண்டைக்கு அம்மா எவ்வளவு கெஞ்சினாலும் சாப்பிடவே கூடது” என்று அவள் உறுதி செய்து கொண்டாள்.
ஆனால் பாடசாலை போவது..?
இந்த ஆர்ப்பாட்டத்தில் நேரம் 6.30ஐத் தொட்டுவிட்டது. 7.15க்கு பஸ் நிலையம் சென்றால் மட்டுமே பாடசாலை பஸ்சில் இடம் கிடைக்கும்.
பாபா பரபரப்போடு எழுந்தாள்.இன்று பாடசாலை போகாவிட்டால் நாளை லீவுக் கடிதமில்லாது வகுப்பாசிரியை வகுப்புக்குள் அனுமதிக்க மாட்டா. அம்மா கடிதம் தருவதும் சந்தேகம்தான்.அதோடு இன்று அவளின் பிரிய தோழி அவளுக்குப் ரோஜா பூக்கள் கொண்டுவந்து தருவதாக உறுதி அளித்திருக்கிறாள்.
வகுப்பாசிரியரின் கண்டிப்பும் தோழியின் ரோஜாப் பரிசும் பாப்பா பள்ளி செல்ல வேண்டும் என்பதை முடிந்த முடிவாக்கிக் கொள்ள வைத்தன.
பாப்பா அவசர அவசரமாக காலைக்கடன்களை முடித்தாள். வழக்கமான குளிப்பு அன்று இல்லை. அம்மாவின் உதவிகளையும் நாடமுடியாது.
பாப்பா முகம் கழுவி விபூதிபூசி படத்திலுள்ள தெய்வங்களுக்கு சலாம் போட்டு அரைகுறையாகப் பவுடரை முகத்தில் அப்பி தனக்குத் தெரிந்தபடி தலைவாரி பாடசாலைச் சீருடை அணிந்து பள்ளிக்குப் புறப்பட நேரம்7.00 என்று காட்டியது.
அம்மா சாப்பிட அழைத்தா.
“உங்கட சாப்பாட்டை நீங்களே சாப்பிடுங்கோ” என்று சீறி விழுந்துவிட்டு புத்தகங்களை அவசர அவசரமாகப் பைக்குள் திணித்துக்கொண்டு பஸ் நிலையம் நோக்கிப் புறப்பட்டுவிட்டாள்.
அம்மா பலவந்தமாகத் தந்த சாப்பாட்டுப் பெட்டியை பெற்ற போது அதன் கனத்திலிருந்து காலை மதியம் இரு நேரங்களுக்குமான சாப்பாடு அதனுள் இருந்தது தெரிந்தது.எனினும் மதிய இடைவேளைக்கு முன்பு சாப்பாட்டைத் தொடக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள்.
அம்மாவுக்கு “றற்றா” காட்டாமல் புறப்பட்டது என்னமோ போலிருந்தாலும் அவவின் கண்களிலே நீர் திரலுவதைக் கடைக் கண்ணால் பார்த்தபோதிலும் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பாப்பா பஸ்நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
பாப்பா விழுந்தடிக்குக்கொண்டு சாவகச்சேரி பஸ் நிலையம் வந்த போது பாடசாலை பஸ் புறப்படத் தயாராயிருந்தது. “ஏதோ வீட்டில வேலைசெய்து கொட்டிற மாதிரி வாற நேரத்தைப் பார். இண்டைக்கு உம்மால் ஐந்து நிமிசம் லேற்” என்று பஸ்நடத்துனரின் முணுமுணுப்பினைப் பொருட்படுத்தாமல் அவள் பஸ்சில் ஏறி மாணவக் கிழங்கடுக்கினுள் தானும் ஒருத்தியானாள்.
இதுவரைஅடக்கியிருந்த அழுகை மீறிக் கொண்டு வெளிவருவேன் என்று பயமுறுத்தியது.மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள்.
வாகன நெருக்கடி காரணமாக பஸ் ஆங்காங்கே நின்று தாமதித்தே செல்ல வேண்டியிருந்தது. ஒருவாறு பஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் மகளிர் பள்ளியை வந்தடைந்தது. தரிப்பிடத்தில் இறங்கி ஓட்டமும் நடையுமாய்ப் பாடசாலை சென்றடைந்தபோது நேரம் 8.35.
பிராத்தனை முடிந்து வகுப்புத் தொடங்கி ஐந்து நிமிடங்களாகி விட்டன.
நேரம் பிந்தி வந்ததற்காய் வகுப்பாசிரியை வெளியில் பத்துநினிடங்கள் நிற்குமாறு பணித்தா.
பசிக்களை, பஸ்ஸில் நசுங்குண்டகளை, ஓடியும் நடந்தும் வந்தகளை எல்லாம் சேர்ந்து அவளை அலைக்கழித்தன. கால்கள் கெஞ்சின.அனால் இன்னும் பத்து நிமிடங்கள் அங்கே நின்றாக வேண்டும். நின்றாள்.
வகுப்பில் நுழைந்தவளுக்கு பாடத்ய்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இரண்டாம் பாடம் தமிழ். ஆசிரியை தந்த பயிற்சிகளைச் செய்துவரவில்லை என்பதற்காக ஆசிரியையின் ஏச்சுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டாள். ஏற்கெனவே நொந்துகிடந்த அவளின் பிஞ்சு மனம் வகுப்பறையில் தனக்குக்கிடைத்த அவமானத்தால் வெதும்பிப் போயிற்று.
அடுத்து வந்த ஆங்கிலப்பாடமும் தொடர்ந்து வந்த இரு பாடங்களும் ஆங்கிலப் பேச்சு முதற் சுற்றுக்கென ஒதுக்கப் பட்டன.
ஒவ்வொரு தடவையும் ஆங்கிலப் பாடப் பேச்சில் முதலாவதாகவோ அல்லது இரண்டாவதாகவோ வருவதை வழக்கமாகக் கொண்ட பாப்பாவால் இன்று அது கைகூடவில்லை..அம்மவின் அச்சுறுத்தலால் பேச்சினைக் கரைந்த பாடமாக ஆக்கியிருந்த போதிலும் மன உடற்களைப்புகள் ஒருசேர இணைந்து அவளை ஐந்தாம் இடத்துக்குத் தள்ளிவிட்டன.முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களே அடுத்த சுற்றுக்குத் தகுதியடையமுடியும் .
அம்மாவை நினைக்க நினைக்க அவளுக்குப் பயமாக இருந்தது.
வெளிப்பட அழுவதற்கு கூசி மனதிற்குள்ளேயே குமுறியழுதாள் பாப்பா.தோழியின் ஆறுதல் மொழிகளும் அவள் தந்த ரோஜாப் பூக்களும் அவளின் கவலை நோவுக்கு ஒத்தடம் கொடுக்கத் தவறிவிட்டன,.
இடைவேளையில் சாப்பாடும் கசந்தது..அதன் பெரும்பகுதியை வெளியே வீசிய பொழுது வழக்கமாக வெளியே காத்திருக்கும் காகங்கள் சாப்பாடு நிலத்தில் விழ முன்பே “லபக்” என்று கவ்விக் கொண்டன. பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோழி well caguht girls என்று சொல்லிச் சிரித்தது அவளுக்கு ரசிக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்பு நடந்த பாடங்களும் அவளின் மூளைக்குச் செல்லவில்லை.அவளின் சோர்ந்து வாடிய முகத்தைக்கண்டு கணித பாட ஆசிரியை காரணம் கேட்ட போது தலைவலி என்று கூறிச் சமாளிக்க வேண்டியிருந்தது.
ஒருவாறு 2.30 க்கு பாடசாலை விடும் மணி அடித்ததும் வாசலில் நின்ற பஸ்ஸில் ஏறிக் கொண்ட போது பாப்பா முற்றாகக் களைத்திருந்தாள்.பஸ் சாவகச்சேரிப் பஸ் நிலையத்தை வந்தடைந்த போது நேரம் 3.43.
பாப்பா வீட்டை அடைந்த போது அம்மா இன்னும் பாடசாலையில் இருந்து வந்திருக்கவில்லை.இன்றுபாடசாலையில் ஆசிரியர் ஒன்றுகூடல் இருக்கிறது என்று நேற்று மாலை அப்பாவுக்குச் சொன்னது ஞாபகம்வந்தது.ஆங்கிலப் பேச்சுப் போட்டி முடிவு காரணமாக அம்மாவிடம் உடநடியாக ஏச்சு வாங்கத்தேவையில்லை என்றது பாப்பாவுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.
ஆனாலும் அந்த ஆறுதலை அனுபவிக்கமுடியாதபடிக்கு புலமைபரிட்சைக்கு ஆயத்தம் செய்வதற்காக அம்மாவால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆசிரியர் வந்து சேர்ந்தார். பாப்பாவுக்கு எல்லாமே சலிப்பாகவும் வெறுப்பாகவும் இருந்ததன,
உடைமாற்றி முகம் கால் கழுவி தாகத்துக்குத் தண்ணி அருந்திய பின் ஆசிரியரின் முன் வந்து அமர்ந்தாள். ஆசிரியர் திறமைசாலி. மிக நுணுக்கமாகக் கணக்குகளை விளக்கும் திறன் படைத்தவர்.அன்றும் அவர் தமது கடமையைச் சரிவரச் செய்தபோதிலும் பாப்பாவின் மூளைக்குள் அவை சென்று சேரவில்லை.
எல்லாம் சிதம்பர சக்கரமாக இருந்தன.
5.00 மணிக்குப்பாடம் முடிந்தது அம்மாவும் வந்தா.சோறு பரிமாறினா. அதிகாலையில் சமைத்த சோறு விறைத்துப் போயிருந்தது. பல மணி நேரம் பசி கிடந்த வயிறு ஓட்டிப் போய் சோற்றை விழுங்குவதே சிரம்மமாய் இருந்தது. அம்மாவின் பாடசாலையில் எதோ பெரிய பிரச்சனை நடந்திருக்க வேண்டும். வழமைபோல் பாப்பாவிடம் பள்ளியில் என்ன நடந்தது எனக் குடைந்தெடுக்காது ஏதோசிந்தனையில் ஆழ்ந்திருந்தா. பாப்பாவும் சாப்பிட்டதாய்ப் பெயர்பண்ணிவிட்டு எழுந்து நாட்டிய வகுப்புக்குத் தயாரானாள்.
நடனத்தில் பாப்பாவுக்கு மிகுந்த விருப்பம். அவள் வீட்டிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் ஆசிரியரின் வீடு இருந்தது. 5.30 இல் இருந்து 7.00 மணிவரை அந்தப் பயிற்சி தொடரும்.
நாட்டியத்தில் அவளுக்கிருந்த அபாரமான திறமை காரணமாக ஆசிரியை எதிர்வரும் சரஸ்வதி பூசை கலை விழாவில் அரங்கேரவிருந்த நடன நிகழ்ச்சியில் அவளுக்கு முதன்மையான பாத்திரத்தை வழங்கியிருந்தா.
நடன வகுப்புக்கு வரவிருந்தபோது இருந்த உற்சாகம் பயிற்சியின் போது பாப்பாவை விட்டு ஓடிவிட்டது. உடற் சோர்வும் களைப்பும் தாளம் தப்பி ஆடவைத்தன.பதத்துக்கும் பாவத்துக்கும் தொடர்பு அறுந்து போனது.வழக்கத்துக்கு மாறான அவளது தவறுகள் நடன ஆசிரியை முகம் சுழிக்கவைத்தன. ஆசிரியரின் மனநிலைவேறு பாப்பாவை கவலையில் ஆழ்த்தியது.
மாலை 7.00மணிக்கு வீடு வந்தவளுக்கு மேசையில் வடையும் தேநீரும் காத்திருந்தன. அவற்றை உண்டும் அருந்தியும் ஓரளவு சோர்வு நீங்கினாலும் களைப்பு வந்து அவளை மூடிக்கொண்டது.
சில மணித்தியாளங்களாவது படுக்கையில் சரிந்து ஆறுதல் கொள் என்று உடலும் மனமும் கெஞ்சின, ஆனால் அம்மா ஆங்கிலப் பாடம் படிக்கவறுமாறு அழைக்கிறா…
பாப்பாவுக்கு தலை சுற்றியது.கண்கள் மங்கி இருண்டு போயின. நாற்காலியிலிருந்து விழவிருந்த பாப்பாவை நோக்கி அம்மா பதற்றத்துடன் ஓடிவந்தா….