கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,312 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிரத் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் நாகேந்திரனைப் போலக் கடல் பொங்கிக் குமுறியடித்துக்கொண்டிருந்தது. அநாதியான கடவுளைப்போல ஓயாது குமுறியடித்துக் கொண்டிருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக்கொண்டு, மரக் கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின் குரலும் சேர்ந்து ஒலித்தது. பொன்னும் மணியும், தூசுந்துகிரும், பூவும் புகையும், சுண்ணமுஞ் சாந்தமும் விற்பவர்கள் வீதியைப்பரப்பிக்கொண்டு வெகு வேகமாகப் போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். யவனர், துலக்கர், மிலேச்சர், தமிழர் அப்பப்பா! எத்தனை சாதிகள்!! எத்தனை குரல்கள்…

ஆனாற் பொறிக்கெட்டுகின்ற இத்தனை இரைச்சலுக்கும் மேலாக, யாரோ பரதேசி ஒருவன் சொல்லிய அந்த வரிகள், அவர் புலனைத் தொட்டு, அவர் அந்த ராத்மாவில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே’ என்று, அந்த ஒலிப்பிலேயே, வீதியின் இரு மருங்கிலும் வெள்ளம் போல வழிந்து கொண்டிருக்கும் ஜனக் கும்பலினூடாகத் தண்ணீரில் மிதக்கும் எண்ணெயைப்போலச் சென்று கொண்டிருந்தார் செட்டியார். பொருளைப் பொன்னாக மாற்றுவதற்காக தொண்டை வரளக் கத்திக்கொண்டி ருந்த அங்காடிக்காரர்களிடம் அவருக்கு ஓர் அனுதா பம், ஓர் பரிவு ஏற்பட்டது. இவர்கள் ஏன் இப்படிக் கத்திக்கொண்டிருக்கிறார்கள்? யாருக்காகச் சம்பாதிக்கி றார்கள்? ஏன் சம்பாதிக்கவேண்டும்? என்ற கேள்விகள் அவர் உள்ளின் உள்ளே ஒன்றன் பின் ஒன்றாய் சங்கிலிக் கோவையாய், அந்தமே இல்லாத சூக்கும தத்துவ மாய் எழுந்து கொண்டேயிருந்தன. அந்தக் கேள்விகளாற் குட்டை குழம்பிய அவர் மனதிலே, சேற்றிலே பட்டும் படாமலும் வேர்விட்டு, நீர்க் கீழ்ப்பரப்பில் அசைந் தாடிக்கொண்டிருக்கும் பாசித் திரையைப் போல அந் தப் பரதேசியின் வார்த்தைகள் அசைந்தாடிக் கொண் டிருந்தன. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங்கடை வழிக்கே ‘

இந்த வேதாந்த நடையிலேயே செட்டியார் சத்த மும் சந்தடியும் நிறைந்த அங்காடி வீதியை விட்டு வைசியர் வதியும் வீதிக்கு வந்துவிட்டார். அஸ்தமனச் சூரியனின் செங்கிரணங்கள் வீதியின் இருமருங்கும் நிறைந்து நின்ற வேயாமாடங்கள் மீதும், மாளிகைக ளின் மீதும், மான் கண்கள் போலக் கோலஞ் செய்த சாள ரங்களினூடே தோன்றும் சந்திரவதனங்கள் மீதும் பட்டு, அக்காவிரிப்பூம்பட்டினமே பசந்து பொன்னிற மூட்ட ப்பட்டதாய் அழகாகத் தோன்றிற்று! நேற்று வரை செட் டியாருக்கு மாலைச் செவ்வானம் தன் இளம் மனைவியின் நாணிய முகத்தைத் தான் நினைவூட்டிற்று. அதே செவ் வானம் இன்று கொழுந்துவிட்டெரியும் சிதைத் தீயாய், மனிதனின் ஆசாபாசங்களைச் சுட்டெரிக்க வல்ல நியம த்தீயாய், எப்படி யெப்படியெல்லாமோ அவருக்குப்ப ட்டது. ஆனாலும் தன்னைத்தானே பொசுக்கிக்கொள்ள மாட்டாத தீயைப்போல அவர் மனதிற் தோன்றிய விசாரங்களே ஒரு பேராசையாய், கட்டுக்குள் சிக்கி வராத சித்து விளையாட்டாய், எவ்வி எவ்விக் குதித்து அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. நேற்று இரு ந்த மன அமைதி இன்றைக்கில்லை. நித்திய மோனத்தை, மகா சாந்தியை அடைந்துவிட அவர் மனது பண்ணும் சேஷ்டைகளில் அவருக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. பேரமைதிக்கு முன் சீறியடிக்கும் பெரும் புயலா இது? ஒன்றுமே விளங்கவில்லை. செட்டி யார் நடந்துகொண்டேயிருந்தார்.

வீட்டிலே, தலை வாயிலிலே ‘அவள்’ காத்துக் கொண்டு நிற்பாள். அவள் அன்பு என்னை இடைமறிக்கும்…சை! அன்பாவது மண்ணாவது; எல்லாம் வெறுஞ். சாகசம்…அவர் மனம் வெறுத்துக்கொண்டது. மறுமடியும்…

பெற்று வளர்த்துப் பேராக்கிவிட்ட அன்னை, அவள் கண்ணீர் எதன் லட்சியத்திற்குக் குறுக்கே நிற்கும்? தங்கை ……. அவள் பிள்ளைகள்……. வேண்டாம் சம்சார பந்தத்தில் அல்லாடும் மனிதனுக்கு அவை வேறு இர ட்டைத் தாழ்ப்பாள்கள்! எல்லாம் மாயை. ஒன்றுமே சதமல்ல…… திரும்பவும் அவர் உள்ளச் சுவரிலே அந்த வரி மோதி எதிரொலித்தது. ‘காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.’

நடந்து கொண்டே வந்த செட்டியார் வீட்டு வாயிலை அடைந்துவிட்டார். தலைவாயிலிலே அவர் மனைவி பூசி மினுக்கிய குத்துவிளக்கைப் போல அவர் வரவைக் காத்து நின்று கொண்டிருந்தாள். ஆனால், செட்டியா ரின் “ஞானக் கண்களில்’ புழு நெளியுந் தசைக் கூட்டம் ஒன்று தான் பட்டது!

செட்டியாரின் குறாவிய முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மையார் வியப்போடு கேட்டாள் : “மரக் கலங்கள் இன்னும் வரவில்லையா?”

“ஏன் வரவேண்டும்? இந்தப் பொன்னும் மணியும் யாருக்கு வேண்டும்?” என்று விரக்தியோடு பதிலளித்து விட்டு மான் தோலிற் சம்மணங்கட்டிக்கொண்டு இருந் தார் செட்டியார்.

அவர் எதிர்பாராத போக்கைக் கண்ட மனைவி “ஏன் இப்படிக் கீழே இருந்துவிட்டீர்கள். கட்டிலில் இருங்கள். காலைப் பிடித்து விடுகிறேன்” என்றாள் பணிவோடு.

“கட்டிலும் பஞ்சணையும் ஏன்? இந்த ஊத்தைச் சரீரத்தைக் கிடத்துவதற்குக் கட்டாந்தரையே போதும். நீ போ; முன்னால் நிற்காதே; போ” என்று சீறிவிழுந்தார் செட்டியார்.

உரிமையோடு, ஊரறிய, ஒரே தலையணையில் தலை வைத்துப்படுக்க அனுமதி பெற்ற ஜீவனுக்குத்தான் அன்று தொடங்கிய வாழ்வு எந்தக் கதியில் போகும் என்ற உண்மை தெரிந்திருக்குமாம். அது எந்தக் கதி யில் போனாலும், இந்தக் கதிக்குப் போகுமென்று செட் டியாரின் மனைவி கனவுகூடக் காணவில்லை! இன்று அவர் போக்கைக் கண்டபோது அவள் தவியாய்த் தவித்தாள்.

செட்டியாரின் தங்கை ஒரு சந்தேகப் பிராணி. அண்ணனுக்குச் சித்தம் சுவாதீனத்தில் இல்லை என்றே தீர்மானித்து விட்டாள். காலங் காலமாக அரும்பாடு பட்டுத் தேடிய திரவிய மனைத்தையும், பிச்சைக்காரர் கட்கும், கோயில் கட்கும், பக்தர்கட்கும் அள்ளிக்கொடு த்துக் கொண்டிருப்பதை அவளாற் தாழமுடியவில்லை.

அநியாயமாக அள்ளிக் கொடுத்தது போக மீதிப் பொரு ளையாவது காப்பாற்ற அண்ணனைக் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட முயன்ற நாட்களும் உண்டு.

மகனின் போக்கு அன்னையின் அடிவயிற்றிலேயே நெருப்பைக் கொட்டியது போல இருந்தது. ‘பொன் போகட்டும், குடும்பத்தின் கௌரவமே தொலையட்டும்; ஆனால் மகன் மட்டும் ‘அந்தரத்தியானமாகி’ விடாமல் வீட்டோடு இருந்துவிட்டால் அது ஒன்றே போதும்’ என் றிருந்தது அவளுக்கு.

ஆனால்…….

இப்பொழுது செட்டியார், காவிரிப்பூம்பட்டினத் திலே வைசியருக்குள்ளேயே பெரிய கையாய், லகாரம் பொன்னுக்கதிபதியாய், திரைகடலெல்லாம் கப்பலோ ட்டும் வணிகர் அல்ல. அவர், மனைவி, அன்னை, உற்றார் சுற்றம் எல்லாவற்றையுமே உதறித் தள்ளிவிட்டுச் சட் டை கழற்றிய பாம்பைப் போலக் கிளம்பியும் வருட மாகி விட்டது! நாலு முழத் துண்டோடு, கையிலே கப் பறையை ஏந்திக் கொண்டு, கிடைத்ததைத் தின்று, மடத்துக்கு மடம் கொடுங் கைக்குக் கீழ் தலையை வைத் துத் தூங்கும் ‘கட்டையாக’ மாறிப்போனார். இந்த சூக்குமமான காரியம் இவ்வளவு சுலபத்தில் எப்படிக் கைகூடிற்று என்பது அவருக்கே ஆச்சரியமாக இருந் தது. சீனத்துப் பட்டையும், ஈழத்து முத்தையும், யவ னத்துப் பளிங்கையும், தமிழ் நாட்டுப் பொன்னுக்கு மாற்றுவதை எண்ணிக்கனத்துப் போயிருந்த அவர் நெஞ்சு, காற்றைக் கிழித்துக் கொண்டு ‘ஜிவ்’ வென்று பறக்கும் அடைக்கலாங் குருவியைப் போல இலேசாகச், சுதந்திரமாகப் போய்விட்டதே என்ற ஓர் ஆத்மதிரு ப்தி அவருக்கு.

ஆனாலும் பிரம்மச்சாரியின் மனதே தசமக்கடமாம். செட்டியார் பிரமச்சாரிகூட இல்லை. இளமையிலே பெண் ணின்பத்தை நுகர்ந்தவர். ஆறு உட்பகையையும் கடி ந்து நிர்மலனாகி விட்டதாக எண்ணிக் கொண்டாலும் அவர் ஐம்புலன்களாலும் அனுபவித்த பெண்ணாசை, வைக்கோற் போருக்குள் மறைந்து கிடந்த நெல் மணி யின் முளை போலப் பீறிக்கொண்டு தோன்றத்தான் செய் -தது. அந்த ஆசையை முளையிலேயே கிள்ளிவிட அந்தக் கட்டை பட்ட கஷ்டங்கள்…… அப்பாடா!

யாக்கை, அதன் நிலையாமை, தன்னையறியாமலே தன்னில் வளரும் மூப்பு, அதன் தொடர்ச்சியாகக் ‘கது ம்மென’ வரும் மரணம் என்றெல்லாம் தத்துவங்களை உள்ளே எழுப்ப வேண்டியிருந்தது. உலகின் இயற்கை யாய், இயற்கையின் நாளாந்த விளையாட்டாய் அந்த விளையாட்டே விளங்கிக்கொள்ள முடியாத சூட்சுமமாய், மாறி மாறி வரும் மரணதத்துவத்தில் தன்னையிழந்து, மூண்டெழும் காமத் தீயை அடக்க எதிராறு நீந்தினார் செட்டியார். தோல்வி மனப்பான்மை, பெண்ணைப்பற்றி விபரீத தத்துவங்களை எல்லாம் சிருட்டித்தது. ‘பெண் பேய், மனிதனைப் பாசவலையிற் பிணித்து, அவனை நேரே நரகக் குழிக்கு இட்டுச் செல்லவந்த பைசாசத் தூதன்’ என்றெல்லாம் அவர் மனம் ஆற்றாமையாற் குமுறியது. ஆனாலும் அவருக்குத் தான் வெற்றி பெற் றுவிட்டதாகவே நினைப்பு . நினைவிலிருந்து பெண்ணா சையை நீக்கிவிட்டேன் என்ற கர்வம்! எல்லாம் கழி பதுகாமுறும் ஈயைப்போலப் பேய் என்று வெறுத்துத் தள்ளிய பெண்ணையே இச்சிக்கும் அவர் மனத்தின் செய் கையை மறைத்துக் கொள்ள, அவர் இதயம் எழுப்பிய ஆற்றாமையின் எதிரொலி. இந்த எதிரொலிகட்கிடையே ஆயிரஞ் சங்குகட்கிடையே முழங்கும் பாஞ்சசன்யச் சங் குபோல அந்தக் குரல் கேட்டது, அப்பா; போறி யாடா மகனே” என்று.

உள்ளத்தில் அந்தக் குரல் ஒலித்ததும் அந்தக் கட் டை’ முடக்கிக்கொண்டு கிடத்தியிருந்த தன் கட்டை யை நிமிர்த்தி எழுந்து உட்கார்ந்தது. ஒன்றையும் காண வில்லை! “அம்மாவாவது என்னை அழைக்கவாவது? என்னைத்தான் அம்மையப்பன் அழைத்துக் கொண்டானே. அவனழைப்பை விடவா? எல்லாம் வெறும் பிரமை, மாயை” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டது ‘கட்டை.’

மடத்தின் எதிர்த்த மூலையிற் தூணிற் சாய்ந்து கொண்டு ‘சிவமூலிகைப்’ பிரயோகம் பண்ணிக் கொண்டிருந்த இன்னொரு கட்டை, “ஆமாம் என்னவோ பேசி க்கொண்டிருந்தீர்களே யாரோடு?” என்று கேட்டது. சிலிம்பியைக் கையிலெடுத்துக்கொண்டு.

“யாரோடுமில்லையே!” என்று வெட்கந் தோய்ந்த குரலிற் பதிலளித்தார் செட்டியார்.

“ஒகோ; பஞ்சத்துக்காண்டியா? சம்சாரத்தோடு கோவிச்சுக் கொண்டு வந்ததோ?” என்று சிரித்துக் கொண்டே கேட்டது இரண்டாவது கட்டை.

செட்டியாரின் மனதிற்குள் திக்கென்றது. ஆனாலும் சுதாரித்துக்கொண்டு “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை” என்றார்.

“எல்லாம் சரியாய்ப் போயிடும். இதில் ஒரு ‘தம்’ பிடி” என்று சிலிம்பியை நீட்டியது பரம்பரைச் சாமி!

* சிலிம்பி – கஞ்சா புகைக்கும் சூழல்சை! பாசபந்தங்களில் உழலும் மனதை ஒரு நிலை ப்படுத்தி மோன நிலையை அடைவதற்கு இது ஒரு குறு க்கு வழியா?” என்று கொண்டே வெறுப்போடு எழுந்து நடந்தார் செட்டியார். அவர் மனது சாந்தி பெறவில்லை.

குடமுடைத்து, கொள்ளிவைத்துப் பிதிர்க்கடனை நிறைவேற்றி, தன் குலத்தையே விளங்கவைக்க வந்த பிள்ளை கண் காணாமற் போய்விட்டானே என்ற ஏக்கம் கிழவியைப் படுக்கையிற் கிடத்திவிட்டது. முதுமையினாற் தளர்ச்சியடைந்திருந்த அவள் பேரிடி போன்ற இந்தச் செய்தியில் எமனையே எதிர்கொண்டழைக்கத் துணிந்து விட்டாள்! சத்திரங்கள், சாவடிகள் தோறும் ஆள்விட்டுத் தேடித்தேடி அலுத்துப் போன அவள், அன்று செத்தே போய் விட்டாள்!! அவள் மகனை எங்கிருந்து எப்படிக் கொண்டுவந்து அவளுக்குக் கொள்ளி வைப்பது என்ற கவலை கிழவியின் இனத்தவர்களை யெல்லாம் வாட்டி வதைத்தது. மூன்று வருடங்களாக அகப்படாதவன் இன்றைக்கா வந்துவிடப்போகிறான்? ஆனாலும் கிழவிக்கு அதிர்ஷ்ட மிருந்தால் ………?

தேடிக்கொண்டு வந்தவர்கள் அந்தச் சத்திரத்தி லிருந்த கட்டையைக் கண்டு மயங்கி நின்றனர். குழி விழுந்த கண்கள், விலாவெலும்பெடுத்துப் போயிருந்த உடல், சில நரை மயிர்களோடு கூடிப் பன்றி முள்ளைப் போலச் சிலிர்த்துக்கொண்டிருந்த கறுத்தத் தாடி, கொம்பன் புளியங்காயைப் போலச் சடையடித்துப்போய் க்கிடந்த தலை, எல்லாமே ஆளை உருக்குலைத்து வைத் திருந்தன. ஆனாலும் இவன் தான் அவன் என்று அவர் கள் மனம் காரணமற்றுக் கூறியது. பேரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்!

வந்தவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்ட கட்டைக்கு ஏனோ அழவேண்டும் என்றிருந்தது. சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. ஆனாலும் தன்னை வெளிக்காட்டினால் பந்தத்திலுழல வேண்டுமே என்ற எண்ணம் மேலிட வே – எனக்கு அப்படியெல்லாம் பேரில்லை. சும்மா கட்டையென்றே சொல்லுங்கள் அப்பா ” என்றது.

குரல் செட்டியாரைக் காட்டிக் கொடுத்துவிட்டது! வந்தவர்கள் இரண்டு மணிக்கட்டுகளையும் பிடித்துக் கொண்டார்கள் பலமாக. செட்டியார் திமிறினார்.

“உன் அம்மா செத்துப்போயிட்டா. நீ கொள்ளி வச்சிட்டு போற மாதிரிப் போ” என்றார்கள் பிடித்திருந்தவர்கள்.

“ஆ! உண்மையாகவா?” என்று தன்னை மறந்து அலறியது கட்டை. ‘அம்மா செத்துப் போய்விட்டாள்’ என்ற அந்த வாக்கியத்தைக் கேட்டதுமே மூன்றாண்டுக ளாக அசாத்திய சாதனையோடும் துணிச்சலோடும், போராட்டத்தோடும், அறுத்தெரிந்த எல்லாப் பாசங் களும் அந்தக் கட்டையிற் தொத்திக்கொண்டன! கண் களில் நீரை வழியவிட்டபடியே முன்னே ஓடிப்போனார் செட்டியார். இப்போது “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே’ என்ற பரதேசிக்குரல் அவர் உள்ளத்தில் ஒலிக்கவில்லை. தான் முன்னறிந்து பின் மற ந்த தெய்வமான அன்னை செத்துப்போய்விட்டாள் என்ற யதார்த்த உண்மைதான் அவர் மனதில் நிறைந்திருந் தது. வேகமாக-வேகமாகவே நடந்தார் செட்டியார்.

அடுக்கப்பட்ட சிதையிலே அன்னை கிடத்தப் பட்டி ருந்தாள். அந்தக் குறுகிய உருவத்தைப் பார்த்து ஆறாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் செட்டியார். ‘முகத்தோடுமுகத்தைப் பொருத்தி, மகனே என்றழை த்த இந்த வாய்க்கா அரிசியிடப் போகிறேன்? இந்த உடலுக்கா கொள்ளிவைக்கப் போகிறேன். ஐயோ……!’

எல்லாச் சடங்குகளும் முடிந்துவிட்டன! கடைசியாய்ச் சிதையிலே கொள்ளிவைத்துக் கொண்டே அவர் பாடினார்:

முள்ளையிட்ட தீ முப்புரத்திலே
பிள்ளையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யாறுமிட்ட தீ மூள்க மூள்கவே!

ஆம்; திருவெண்காடர் இட்ட தீ அவர் அன்னையின் சடலத்தைச் சுட்டெரித்தது. ஆனால், அவர் அன்னையிட்ட தீ, அவருக்குள் எதைச் சுட்டெரித்ததோ?

– சுதந்திரன்-16-8-53

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *