பற்றுக பற்றினை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 8,118 
 
 

கணித ஆசிரியரான  நான் ஆறு ஆண்டுகளுக்குமுன் மலேசியாவின் சாரவாக் பகுதியில் பணிபுரிய அழைக்கப்பட்டு சென்றேன். மகன் இங்கு கல்லூரியில் சேர்ந்தபின்னர், என் மனைவி கல்யாணியும் அங்கு வந்து  உடனிருந்தாள்.   ஒப்பந்தகாலம் முடிவடைந்தநிலையில் சென்றவாரம் சென்னை திரும்பினோம். இப்போது பெங்களூரில் வேலை பார்க்கும் மகனும் இங்குவந்து பார்த்துச்சென்றான். இடையில் நாங்கள் இங்கு வராததால், சென்னை நிறைய மாறியிருப்பதுபோல் தோன்றியது. எதிர்பாராத இடங்களிலெல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகள்:மேடும் பள்ளமுமான சாலைகள் எங்கும்:பதட்டத்துடன் பறக்கும் ஒழுங்கற்ற வாகன ஓட்டம்:எதற்கு என்று தெரியாததுபோல விரைந்து கொண்டி ருக்கும் மக்கள் கூட்டம்:அண்ணாந்து பார்க்கவைக்கும் கூட்டமில்லாத மெட்ரோ ரயில்கள்: இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் சரிப்படுத்தமுடியாத சுவடுகள்.  இப்படி பல.

ஐந்தாறு நாட்களாக அடுத்தடுத்து முடிக்கவேண்டிய வேலைகள், கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வுகள்..  எல்லாவற்றையும் முடித்துக் கொண்டோம். நாளை இரவு ரயிலில் சொந்த ஊருக்குப்புறப்படவேண்டியதுதான். அதற்குள் சென்ற ஏழெட்டு  ஆண்டுகளுக்குமேலாக  எங்கள் தொடர்பு எல்லையிலிருந்து வெளியே சென்றுவிட்ட ஆனந்தியை சந்தித்தே ஆகவேண்டுமென்பது கல்யாணியின் விருப்பம். எப்படியோ அவள் கைபேசி எண்ணை மிகுந்த சிரமத்தின் பேரில் வாங்கி வைத்திருந்தாள். ஆனந்தியைத்தொடர்புகொண்டு விலாசத்தைப் பெற்று, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சந்திக்கும்போது பேசிக்கொள்ளலாம் என்பதுவரை ஏற்பாடு செய்துவிட்டாள். அடுத்தடுத்து பதவி உயர்வு காரணமாக வேலைப்பளு அதிகமிருந்தாலும், ஏன் முழுவதுமாக விலகிக்கொண்டாள் என்ற காரணத்தை அறிய நானும் ஆவலாக இருந்தேன்.

பாவம் ஆனந்தி! கணவனை ஒரு விபத்தில் இழந்து, இரண்டுவயது   குழந்தையுடன் பக்கத்துவீட்டில் வசித்துவ ந்தாள். துணைக்கு யாருமில்லை. கல்யாணிதான் கூடமாட உதவி செய்துகொண்டிருப்பாள் கருணையடிப்படை யில், கணவன் பார்த்த வேலையை அஞ்சலகத்தில் செய்துகொண்டிரு ந்தாள்.

இரவு படுக்கப்போகுமுன், கல்யாணி பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆனந்தியுடன் எவ்வளவு நெருங்கிப்பழகி வந்தாள் என்பதையும், மாற்றலாகி சென்னை சென்றடைந்தபோது கூட, நேரில் அடிக்கடி சந்திக்கமுடியாமல் போனாலும். ஆரம்பத்தில் கடிதங்கள் மூலமும், பின்னர் தொலைபேசி வழியாகவும், தொடர்பு கொண்டிருந்ததையும் நினைவுகூர்ந்தாள். எனக்கும் அப்போதைய நினைவுகள் வரிசையிட்டு நின்றன.

ஒருமுறை இப்படித்தான். தெருவில் நின்றிருந்த சோன்பப்டி விற்கும் தள்ளுவண்டியில் அஸ்வின் வாங்கிக்கொண்டிருந்தபோது, பைக்கில் ஒருவன் வேகமாக வர, அதில் அஸ்வின் சட்டை மாட்டிக்கொண்டு இழுத்துக்கொண்டே சென்றது. சற்றுதூரத்தில் தொப்பென குப்புற விழுந்தான் அஸ்வின். சில்லுமூக்கு அடிபட்டதால் முகம் முழுவதும் ரத்தம். பதட்டத்தில் ஒன்றும் புரியாமல் எல்லோரும் நிற்க, நான் அப்படியே அவனை அள்ளிக்கொண்டு  மெயின் ரோட்டிலுள்ள டாக்டரிடம் விரைந்தேன். டாக்டர் பள்ளியில் படிக்கும்போது என் மாணவர். அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். குடிக்க தண்ணீர் கொடுத்து என்னை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளச்செய்தனர். போலீஸ் கேசு என்று எதுவும் ஆகுமா,  புகார் கொடுக்கப்போகிறோமா என்று உறுதிசெய்துகொண்டார் டாக்டர். தலையில்  அடிபட்டால் காதுகளில் ரத்தம்வருமென்பதால், பார்த்தார். அப்படி எதுவுமில்லையென்றாலும் எக்ஸ்ரே எடுத்து பார்த்து பலத்த காயம் எதுவுமில்லை என்று உறுதிசெய்துகொண்டார். பின்னர் ஊசி போட்டு. மூக்கில் ஒரு பிளாஸ்திரி ஒட்டி அடுத்தநாள் வரச்சொன்னார். மூக்கில் தழும்பு அவனுக்கு இப்போதுகூட இருக்கும். வீட்டிற்கு வந்து பார்த்தால், ஆனந்தியை ஆட்டோவைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாகச்சொன்னார்கள். அஸ்வினுக்குக்கூட காயங்கள் ஆறி பள்ளி செல்ல ஆரம்பித்தான். ஆனால் ஆனந்தி தேறிவர பலநாட்களாகி விட்டன.

கல்யாணி . இதுபற்றி பேசும்போது, “ஆனந்தி அடிக்கடி  சொல்வாள்: அவள் வாழ்க்கையே குழந்தைக்காகத்தான். அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவள் உயிரோடு இருக்கமாட்டாள். அஸ்வினுக்கு என்ன நேர்ந்தாலும் அதேகதி, தனக்கும் ஏற்படட்டும் என்று தான் எப்போதும் நினைப்பாள். நிர்க்கதியான அந்த தாயின் மனசு எல்லோருக்கும் புரியுமா, என்ன?” என்றாள்.

அஸ்வின் ஐந்தாவது படிக்கும்போது. மாலை டியூசன் வகுப்புக்கு சென்றவன் திரும்பவில்லை. உடன் படிப்பவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் என அனைவரையும் விசாரித்து ஏமாந்து, பின்னர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்தோம். அழுது கதறிய ஆனந்தி சிலமுறை மயங்கி விழுந்தாள். எட்டரை மணிக்குமேல் சாவகாசமாக வந்த அஸ்வின், ஏழாவது படிக்கும் சௌம்யா அக்காவின் பிறந்தநாள்விழாவுக்காக அவள் வீட்டிற்கு சென்று வந்ததாகக்கூறினான். நானும் அவனைக்கடிந்து எதுவும் பேசவேண்டாமென்று சொன்னேன். ஆனந்தி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர பலநாட்களாயின.

இதுபோன்ற நினைவுகள் ஒவ்வொன்றாக வர அப்படியே தூங்கிப்போனேன். காலை சீக்கிரம் எழுந்து புறப்பட ஆயத்தமானோம். கால்டாக்சி ஏற்பாடு செய்து அந்த விலாசத்திற்கு சென்று அடைந்தோம்.

அது ஒரு புராதனமான கட்டிடம். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டி ருக்கும்போது, பெயர் பாதி அழிந்த ஒரு போர்டு கண்ணில் பட்டது. அது ஒரு அனாதைக்குழந்தைகளுக்கான இல்லம் என்பது தெரிந்தது. ஆனந்தி பெயரைச்சொன்னவுடன், பின்புறமுள்ள விடுதி போன்ற தங்குமிடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அவர்கள் கூப்பிட்டவுடன் கதவைத்திறந்தாள். அவளைக்கடைசியாகப்பார்த்தது ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன். பணி ஓய்வுக்கு கிட்டத்தட்ட இன்னும் பத்தாண்டுகள் பாக்கியிருக்கின்றன. வயதுக்கு மீறிய முதுமை. ஆனால் எங்களைப்பார்த்ததும் முகத்தில் அவ்வளவு மலர்ச்சி. கல்யாணி அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். ஆனந்தி உள்ளே வந்து அமரச்சொன்னாள். ஒருவர் மட்டுமே தங்குவதற்கு உகந்த இடம். நான்,       “ஏனம்மா, ஆனந்தி! இங்கு வந்து தங்கியிருக்கிறாய்? அஸ்வின் எங்கே?” பணியாள் கொண்டுவந்த காபியை டம்பளரில் ஊற்றிக்கொடுத்தாள். வெளியில் கூட்டுப்பிரார்த்தனைப்பாடல்கள் பாடும் ஒலி தவழ்ந்து வந்தது. ஐந்து சிறுமிகள், “பிரார்த்தனைக்கூடம் செல்கிறோம். நீங்களும் வருகிறீர்களா, அம்மா!” என்று அழைத்தார்கள். “நான் பின்னர் வருகிறேன். நீங்களெல்லாம் சென்று கலந்துகொள்ளுங்கள்” என்று அனுப்பிவைத்தாள். காலைச்சிற்றுண்டி இன்னும் அரைமணி நேரத்தில் வரும் என்றாள். பின்னர் தொடர்ந்தாள். “அண்ணா! இரண்டு மூன்று ஆண்டுகளாக இங்குதான் தங்கியிருக்கிறேன். வேலைக்கும் இங்கிருந்துதான் சென்று வருகிறேன். பகுதிநேர ஊழியர்போல், இங்குள்ள குழந்தைகளுக்கு ஆயாவாகவோ, அம்மாவாகவோ இருக்கிறேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின் முழுநேரமும் இவர்களுடன்தான் என்று முடிவு செய்துவிட்டேன்.”

“சரி. அஸ்வின் எங்கே?”

சற்றுநேரம் அமைதியாக இருந்தாள். எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தவிப்பதுபோல் தோன்றியது. பேச்சைமாற்ற கல்யாணி முயல, அதைக்கண்டுகொள்ளவில்லை.

“நான் அவனிடம் அதீதபாதுகாப்புணர்வுடன் நடந்துகொண்டேன் போலும். அவனுக்கு விவரம் புரிய ஆரம்பித்தத்திலிருந்து அந்த வளையத்தி லிருந்து வெளியேறவே விரும்பிவந்திருக்கிறான். எனக்கு வேறு கதி யில்லாததால் என் பிடியை ரொம்ப இறுக்கிவிட்டேனென்று நினைக்கிறேன். கல்லூரியில் சேர்ந்தபின்னரே என்னிடமிருந்து விலக ஆரம்பித்தான். வெறுப்பைக்கொட்டினான். கல்லூரி முடித்தபின் கிடைத்த வேலைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறான். ஆரம்பத்தில் எப்போதாவது போன் மூலம் தொடர்பு இருந்தது.. அங்கு மெக்சிகன் பெண்ணை திருமணம் செய்யப் போவதாகச் சொன்னான். நான் அவளை இங்க அழைத்துவரச் சொன்னேன். வரவில்லை. திருமணம் முடிந்துவிட்டது என்றான். நானும் எனக்கிருப்பது ஒரேபிள்ளை தானே என்று எதைச்செய்தாலும் பொறுத்துக்கொண்டுதானி ருந்தேன். ஒரு கட்டத்தில், ‘நானும் உன் முகத்தில் விழிக்கமாட்டேன்:நீயும் என் வழியில் குறுக்கிடாதே’ என்று நிர்தாட்சண்யமாக சொல்லிவிட்டான். சிறுவயதுமுதலே ஏமாற்றங்களைக்கண்டு பழகிப்போன நான், இதையும் தாங்கிக்கொண்டேன்.”  பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக்கொண்டாள். பக்கத்தில் அமர்ந்திருந்த கல்யாணி அவள் கையைப்பிடித்துக்கொண்டாள். “நாங்களும் இங்கு ஊருக்கு வந்துவிட்டோம். நீ பேசாமல் மாற்றல் வாங்கிக்கொண்டு எங்களுடன் வந்து தங்கு. காலப்போக்கில் எல்லாம் சரியாகிவிடும்” என்றால் கல்யாணி.

“அஸ்வினிடம் நான் பேசிப்பார்க்கிறேனம்மா! நான் சொன்னால் கேட்பான்.”

“”இல்லையண்ணா! இவ்வளவுதூரம் வெறுப்பு ஏற்படுவதுபோல் நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை. கடவுள் என்ன விதித்திருக்கி றாரோ அது நடக்கட்டும்”

“ஏன் ஆனந்தி இவ்வளவு விரக்தியுற்றுப்பேசுகிறாய்? சரி. நீ பேசாமல் வேலையை விட்டுவிட்டு அவனுடன் சென்றிருந்தாலென்ன?”

“ஆண்டுக்கணக்கில் நடந்தது எல்லாவற்றையும், அதற்குள்  சொல்லிவிடமுடியாது. நான் நன்கு யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்”

சரி எல்லாவற்றையும் துறந்து சாமியாராகிவிட்டாயா, என்ன?”

“பற்றற்ற நிலைக்குப்போய்விடவில்லையண்ணா! ஆரம்பத்தி லிருந்து எனக்கிருந்த ஒரே பற்று தாய்மையுணர்வுதான் அது அப்போது நான் பெற்ற அஸ்வினைப்பேணுவதாக மட்டுமிருந்தது. இப்போது இங்கிருக்கும் நாற்பத்து ஏழு பேரும் என் குழந்தைகள்தான். பாசத்திற்காக ஏங்கும் இந்த குழந்தைகளுக்கு நான் நிஜமான தாயாகி விட்டேன். அதில் கிடைக்கும் மனநிறைவு சொல்லிலடங்காது. சிறிய வாய்க்காலாக இருந்தது, இப்போது பொங்கிப்பிரவாகிக்கும் மகாநதி ஆகிவிட்டது. அது இன்னும் பெருகும். நான் துறவுநிலைக்கு சென்று விடவில்லை. : இங்குள்ள குழந்தைகளின் ஆசாபாசங்கள்தான் என்னுடையதும். தாய்மைப்பற்றினைப் பற்றியே மீண்டு வந்திருக்கிறேன்  இப்போது யார்மீதும், எக்காரணத்திற்காகவும் மனவருத்தம் இல்லை  நதி நீரைக்கொடுத்துக்கொண்டுதானே இருக்கும்: பிரதிபலனைப் பார்க்காது, இல்லையா? அது நில்லாது ஓடிக்கொண்டு தானிருக்கும்: சமுத்திரத்தை அடையும் வரை”

எனக்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை. மனம் மிகுந்த வலியையும் வேதனையையும் உணர்ந்தது. கடந்த காலத்தில் ஆனந்தி சிறு சோதனைகளைக்கூட தாங்கமுடியாமல் எவ்வளவு வலுவற்றிருந்தாள்? அந்த ஆனந்திதானா இது! இப்போதோ ஆனந்தியின் பேச்சின் முதிர்ச்சியும், மனதின் உறுதியும் மெய்சிலிர்க்க வைத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *