பனி விலகியது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 16, 2023
பார்வையிட்டோர்: 2,791 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் நினைவற்றுப் பாயில் சுருண்டு படுத்திருந்த குழந்தை சீனுவையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் பார்வதி. ஜூரம் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் குழந்தையின் முகத்தில் படரும் செம்மையும், திணறலும் எடுத்துக்காட்டின. 

போர்வைக்குள் கைவிட்டு உடம்பைத் தொட்டுப் பார்த்தாள் பார்வதி. “சீனு, சீனு” என்று முகத்தருகில் குனிந்து கூப்பிட்டாள், கண்களைத் திறக்காமலே, அரைகுறை நினைவுடன் “ஊம்” என்றான் சீனு. 

“தலையை வலிக்கிறதாப்பா?” 

“ஊம்…’ 

”உடம்பை என்ன பண்ணுகிறது உனக்கு?” 

“தூத்தம்!” 

“என்ன தூத்தமோ, என்ன தாகமோ, என் வயிற்றைக் கலக்குகிறதேடாப்பா…” என்ற முனகலுடன் அருகிலிருந்து வெந்நீரை எடுத்து “இந்தா, சீனு” என்றாள். 

“ஊம்…” 

“தூத்தம் கேட்டியே இந்தா.” 

பதிலில்லை, நினைவு தவறிவிட்டது என்பதை உணர்ந்து கொண்ட பார்வதியின் வயிற்றில் ‘சொரேர்’ என்றது! அழுத்திப் பிசைந்து கொண்டாள் வயிற்றை! போன வருஷம் இதே நாட்களில், இந்த குளிர் ஜுரம் கண்டு ‘தாகம், தாகம்’ என்று நீரைக் குடித்து, குடித்து, ஜன்னி பிறந்து கணவன் உயிரைக் கொண்டுபோய் விட்டதை எண்ணி நடுங்கினாள். 

கையிலிருந்த டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, குழந்தை மீது சாய்ந்து, கட்டியணைத்துக்கொண்டு, “சீனு…சீனுக் கண்ணு…” என்று முகத்தோடு முகம் பதித்துக் கொண்டு அழைத்தாள். 

பேச்சில்லை! 

‘அடே, என்தங்கமே, நீகூட உங்கப்பா மாதிரி என்னைக் கைவிட்டுப் போறியாடா?’ என்று ஓலமிட்டு அலரியது அவள் நெஞ்சம்! பெற்ற வயிறு துடித்தது! குழந்தையை விட்டு விட்டு நிமிர்ந்து கண் எதிரே நின்ற ஏழுமலையானின் திரு உருவைக் கூர்ந்து நோக்கினாள்! “அப்பனே, நீதாண்டா துணை. அவரைத்தான் அழைத்துக் கொண்டு விட்டாய். இந்த ஓர் ஆதாரத்தையாவது நிறுத்திவை. மலைபோல வந்த வினையைப் பனிபோல விலக்கிவிடும் கோவிந்தா-நீ கொடுத்த பிச்சை, இதற்கு உயிரைக்கொடு. நான் அநாதை, வைத்தியம் பார்க்கக்கூட வக்கில்லாத பாபி… நீதான் வைத்தியனாகி, குலதெய்வமாகி என் குழந்தையைக் காப் பாற்று. பிச்சையெடுத்துக் கொண்டு உன் சந்நிதிக்கு வந்து…”

”பாரு” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்த சுகந்தி, நெஞ்சிழந்து, கண்ணீர் சோர பார்வதி இறைவினிடம் இறைஞ்சும் கோலம் கண்டு துணுக்குற்றவளாக, குழந்தையிடம் வந்து தொட்டுப் பார்த்துவிட்டு. “அம்மாடி, நூற்றைந்து டிகிரி இருக்கும் போலிருக்கிறதே, யாரிடம் காண்பிச்சே? மருந்து…” என்றாள் 

“யாரிடமும் காண்பிக்கவில்லை! ஏழுமலையான் தான் வைத்தியம். அவன் பேரைச் சொல்லி ஏதோ கஷாயம்…” என்று பார்வதி சொல்வதைக் கவனியாமல், “சீனு, சீனு”, என்று அழைத்துப் பார்த்தாள் சுகந்தி. 

மூச்சுப் பேச்சில்லை! 

இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டார்கள். “என்ன பாரு, இவ்வளவுக்கு முற்ற விடலாமா? அத்தைக்குத் தெரியுமோ இந்த சமாசாரம்?” 

“தெரியும், ரோசத்தை விட்டு, மானத்தை விட்டு, வைராக்கியத்தையும் விட்டு, சபதத்தையும் மறந்து குழந்தை பிழைத்தால் போதும்னு நேற்றுப் பக்கத்து வீட்டு வாசுவை அனுப்பிப் பணம் கேட்டேன். சாமா, வீட்டிலில்லை, வரட்டும் என்றாளாம் உன் அத்தை! நேற்றுக் காலையிலிருந்து இன்னும் சாமா வரவில்லை வீட்டுக்கு…வந்துதானே யோசனை பண்ணி முடிவு பண்ணி, இரும்புப் பெட்டியைத் திறந்து, பணத்தை யெடுத்து, ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாக எண்ணி…” பார்வதி வயிற்றெரிச்சலின் அளவைக் கணித்து அறிந்து கொண்டாள் சுகந்தி. 

“அது சரி, நீ எனக்குச் சொல்லியனுப்புவதற்கென்ன? நான் இருக்கிறதே நினைவில்லையா உனக்கு ?” 

”உபயோகமேயில்லை சுகந்தி, அவர்கள் பணம் தரவே போகிறதில்லை, என் நிமித்தம் உனக்கும் அவர்களுக்கும் வீணாக மனஸ்தாபம் ஏற்படும். பேசாமலிரு. ஆயுசு இருந்தால் பிழைக்கட்டும்…” 

“அப்படி யெல்லாம் பேசாதே, நான் போய் கேட்டுட்டு வரேன்…” என்று கிளம்பினாள் சுகந்தி. 


பார்வதி பரப்பிரம்மமாக உட்கார்ந்திருந்தாள்! சாப்பாடாகி, படுக்கைக்குச் செல்லும் வீட்டுக்கார அம்மாள், மாடிப்படி ஏறப்போனவள், பார்வதியைப் பார்த்து விட்டு. ”குழந்தைக்கு எப்படி இருக்கு பாரு, ஜுரம் விட்டிருக்கா?” என்று கேட்டாள். 

“அப்படித்தான் இருக்கு மாமி. சாயந்திரத்திலிருந்து கண்ணையே திறக்க மாட்டேங்கறான், கூப்பிட்டாலும் பேசலே…ஓர் உபகாரம் பண்ணுகிறேளா..”

“என்ன செய்யணும், டாக்டரைக் கூப்பிட்டுக் கொண்டு வரச்சொல்லணுமா?” 

“டாக்டரையும் கூட்டிண்டு வரணும், அதோடு இந்தச் சமயம், பண ஒத்தாசையும் நீங்கள்தான் பண்ணணும். முப்பது ரூபா கொடுங்கோ, உங்கள் தருமத்திலே குழந்தை பிழைச்சு எழுந்திருக்கட்டும்? எங்கேயாவது அடிமையா உழைச்சு உங்கள் பணத்தைக் கொடுத்துடறேன் மாமி…” 

“தலையிலெழுத்தா உனக்கு? மலை மலையாய்க் களஞ்சியம் நிற்கிற வீட்டில் புகுந்துவிட்டு அடிமை வேலை ஏண்டி செய்யணும்?” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்து குனிந்து பார்த்தாள் குழந்தையை. கூப்பிட்டும் பார்த்தாள். தனக்குள் முடிவையும் நிச்சயித்துக் கொண்டவளாக, “நான் சொல்வதைக் கேளு பாரு, குழந்தையை எடுத்துத் தோளில் சாத்திக்கொண்டு விடுவிடுன்னு போ, குழந்தைக்கு வைத்தியம் பார்க்கிறாளா, இல்லைன்னுதான் தெரிஞ்சுக்குவமே.” 

“நான் இங்கேயிருந்துபோய், குழந்தை அவா கவனத்திற்குப் பாத்திரமாக்கிறதற்குள்ளே குழந்தைக்கு நெஞ்சுக் குழிக்கு வந்துவிடும் பிராணன்; அப்புறம் வைத்தியம் என்ன? அங்கே போய் அவர்கள் கண்முன் வாரிவிடுவதைவிட, கண் மறைவாக இங்கேயே வாரி…”

“அசடுமாதிரி உளராதே பாரு…குழந்தைகளுக்குச் சீக்கு வராமயே இருக்குமா?” 

“அந்தப்படுபாவிகள் மசிய மாட்டா மாமி, அநியாயமாக என் குழந்தை போயிடும். எப்படியாவது, எப்பாடு பட்டாவது உங்கள் பணத்தைக் கொடுத்துடறேன்…யோசனை பண்ணாதேங்கோ மாமி….” 

“இருந்தால் ஒருதரம் கேட்டதும் கொடுத்துடமாட்டேனா பாரு…இருந்ததையெல்லாம் சேர்த்துப்போட்டு நேத்திக்கித் தானே வரி கட்டினேன், என்ன பண்றது…?” 

இவ்விதம் தர்ம உபதேசம் செய்துவிட்டுப் போனாள் அந்த அம்மாள்! 

பாருவின் நெஞ்சம் படபடத்தது! “அடடா! என்ன உலகம். என்ன பணம் காசு, என்ன மனிதர்கள்! ஆயிரக் கணக்கில் புழங்கும் இடத்திலே, ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறவர்கள் கடன் கேட்டால் இருக்கும். சோத்துக்குத் திண்டாடுகிற பாரு கேட்டால் இருக்குமா? இருக்காதுதான்! என் கண்ணே, சீனுத் தங்கம், நீ வாயைத் திறந்து ‘அம்மா’ன்னு கூப்பிட்டு மூணு நாளேச்சேடா? மூஞ்சியைப் பிடிச்சுத் திருப்பித் திருப்பிப் பேசுவியே என்னப்பா… இல்லாத கொடு மையை உன்மேலே காட்டி, ‘உன் வாய்தான் சித்தே அடைக்காதா, கண்தான் மூடாதா’ன்னு திட்டிக் கொட்டினேனே சண்டாளி…ஒரேடியா கண்ணும், வாயும் மூடிண்டூட்டை யாடா? சீனு -என் சீனு-” 

கேவினாள் பார்வதி! 

விடிவிளக்கு எரிந்து கொண்டிருந்தது! மாடத்தில் ஸ்ரீனிவாஸப் பெருமான் பார்வதியின் – கேவி அலறும்- அழுகையையும், பாயில் குற்றுயிராகக் கிடக்கும் குழந்தையையும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டு நின்றார்! 


“ஏண்டி சுகந்தி…” 

“அது சரிதான் அத்தை, அவளுக்குக் கொடுக்க வேண்டியதை…” 

“யாரு இல்லேங்கரு? பிள்ளையை சாகக்கொடுத்த துக் கத்தைக்கூடப் பாராட்டாமல், கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி, தவாங்கட்டையைப் பிடிச்சுண்டு ‘குடும்பத்துலேயே இருந்துண்டு ஒத்தும் போனால்தான் எல்லாத்துக்கும் நல்லது’ன்னு கெஞ்சினேண்டி. என் பேச்சு எடுபடலை அப்போ…இப்போ கஷ்டப்படறா…” 

“அவள் நன்னா கஷ்டப்பட்டு, திண்டாடி, பட்டினி கிடந்து சாகட்டும், அவளைப் பத்திய கவலையில்லை இது. குழந்தை அபாயகரமான நிலையிலே சாகக்கிடக்கிறது; வைத்தியம்…”

“தெரியும்டீ, மலைமேலே மாடு மேஞ்சாலும் குட்டி கோனாருதுதாண்டி! தோப்பனை அள்ளி முழுங்கிப்பிட்டு அத்தையா, பாட்டியா என்னு சொல்லுமா உலகத்திலே, அதுமாதிரி அத்தை, பாட்டி உறவையெல்லாம் அறுத்துண்டு, அநாதையாகக் கிடக்கிறதுன்னா என்வயிறு மட்டும் கொதிக் காதா.. கேக்கறேன்…”

ஆவேசத்தோடு உறுமினாள் லட்சுமிப் பாட்டி. 

“யார் வயிறும் கொதிக்காமல் குளிர இருக்கணும்; உன் வம்சம் விளங்கிணும்னுதான் இந்தப் பத்துமணி வேளையில் வந்து கதவைத்தட்டி கூப்பிட்டுச் சொல்ல வருகிறேன். கெடுபிடி, இப்பவே வைத்தியம் பார்த்தாகணும், அப்புறம் அழுதால் வருமா? குழந்தையையும் போட்டுண்டு சந்திரமதி யாட்டமா அவள் தவிக்கிற தவிப்பு…” 

“சந்திரமதியாட்டமா யாரு தவிக்கச் சொன்னா அவளை? ஒரு அக்கோடி சேனைன்னா இருக்கோம் ?” 

“இருங்கோள் இருங்கோ, உன் பிள்ளை சினிமாவிலே இருந்து வந்ததும் பணத்தை வாங்கி வை. நான் வெடியகாலம் வருகிறேன் – ‘பாரு பிள்ளைக்குக் காய்ச்சல்’னு ராதா வந்து சொன்னாள். பார்த்துவிட்டு வரலாம்னு போனேன். இந்தக் கதியிலே இருக்கு; சமைச்சு நாலு நாளாச்சாம்” 

“இதெல்லாம் என் காதிலே போடாதே அவள் தலை யெழுத்து. பிள்ளைக் குழந்தை; சொத்து இருக்கு வரும், வாயிலே போட்டுக்கலாம்னு அண்ணனும் தம்பியும் வந்து அழைச்சுண்டு போனான்கள், நாங்கள் அவ்வளவு ஏமாளிகளா என்ன?” 

“இந்தக்கதை இப்போது எதுக்கு அத்தை? வைத்தியம் பார்க்காமல் குழந்தையை அநியாயமாகச் சாகக் கொடுக் காதே ஆமாம். பணம் ரெடியா இருக்கட்டும் – நான் வறேன்” என்று கூறிவிட்டு விருட்டென்று எழுந்துவிட்டாள் சுகந்தி. 

பார்வதியும், சுகந்தியும் இணைபிரியாத ஜோடி. பாலிய சிநேகம், உறவுப் பற்றுண்டு. இரண்டுவிதப் பிணைப்பு. பார் வதியை அவளுடைய மாமியாரும், தனது அத்தையுமான லட்சுமி படுத்திவைத்த பாடும் ஏழை வீட்டுப்பெண் என்று அவளை இளப்பம் செய்ததும், வேலைக்காரியின் ஸ்தானத்தில் அவளை வைத்து உதாசினம் செய்ததும் சுகந்திக்குத் தெரி யும். புருஷன் என்று ஒருவன் இருக்கும்போதே அவர்கள் அந்தப் பாடுபடுத்தியபோது, அவனும் போய்விட்ட பிறகு சும்மா விட்டுவிடுவார்களா – அதுவும் காளைபோல இருந்த பிள்ளை இரண்டு நாள் ஜுரத்தில் மாண்டு கிடந்ததைப் பார்வதியின் துரதிருஷ்டத்தைச் சாக்கிட்டு என்னவெல்லாம் பேசி எப்படிப்பட்ட வேதனைக்கு ஆளாக்குவார்கள் ? 

இதை நினைத்துத்தான், பார்வதியின் சகோதரர்கள் அவளை அழைத்துச் சென்றார்கள். அண்ணனும், தம்பியும் கூடப் பிறந்தவர்களே தவிர, அவர்களுடைய மனைவிகள்?.

யாரையும் துன்புறுத்த மனமில்லாமல், தன் கஷ்டத்தைத் தானே அனுபவித்துக் கொள்ளலாம் என்று, தன்மீது இருந்த உடைமைகளை விற்று, தையல் கற்றுக்கொண்டு பிழைப்பை நடத்திக்கொள்ளத் துணிந்து தனியாக வந்து விட்டாள் பார்வதி. 

இளம் பிராயம். தன் மீது அபவாதம் சாரக்கூடாது. என்று அடுத்த தெருவில், கணவன் வீட்டார்கள் நடமாடும் தெருவிலேயே குடியிருந்தாள் பார்வதி. மூன்று வயது நிரம்பிய குழந்தையை வைத்துக்கொண்டு, அவனுடைய வளர்ச்சியில் பொழுதைப் போக்கி, அவன் வளர்ந்து ‘ஆளான பின்பு’ அந்த நிழலில் இளைப்பாற்றிக் கொள்ளலாம் என்று நம்பி, அந்த ஊக்கத்தில் அயராது உழைத்த பார்வதியின் பாவத்தில் கை வைத்ததே விதி! 

இதைத்தான் இரவு பூராவும் எண்ணி எண்ணி மாய்ந்துத் தூக்கமில்லாமல் புரண்டு கொண்டு கடிகாரத்தை நிமிர்ந்து நிமிர்ந்துப் பார்த்துப் பொழுதை விரட்டிவிட்டு, விடியற்காலம் எழுந்து பல்தேய்த்து, காபிபோட்டு கணவனுக்குக் கொடுத்து விட்டு அத்தையின் வீட்டுக்குப் போகத் திரும்பியவள், குழந்தையைப் பார்க்கும் ஆவலில் பார்வதியின் வீட்டுக்கு ஓடிவந்தாள்! வரும்போதே “என்னமாக இருக்கு பாரு ?…’ என்ற கேள்வியோடுதான் வந்தாள் சுகந்தி. 

பார்வதி வெறித்த பார்வையுடன் நாவடைத்துப் போய் ஒடுங்கி உட்கார்ந்திருப்பதைக் கண்டு, குழந்தையைத் தொட்டுப் பார்த்தாள்… கை கால்களும், உச்சியும் ஜில்லிட்டிருந்தன! சூடு தணிந்து மூச்சு லேசாக வந்து கொண்டிருந்தது! 

“போய் டாக்டரைக் கூட்டிண்டு வரச் சொல்றேன். பாவி, நான் ஊரிலில்லாமல் ஒழிஞ்சு போய் விட்டேனடி சமயத்திற்கு…” என்று புலம்பிக்கொண்டு எழுந்து ஓடினாள் சுகந்தி. 

அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள், சுகந்தியின் கணவனும், டாக்டரும் உள்ளே வந்தார்கள். குழந்தையைப் பரி சோதித்த டாக்டர் மௌனமாக வெளியே வந்தார்- 

சுகந்தியும், அவள் கணவரும் தொடர்ந்தார்கள்! கார் வரையில் டாக்டருடன் சென்றவர், அவர் கூறிய செய்தி யோடு தொங்கிய முகமும் தானுமாகத் திரும்பி வந்த கணவ ரிடம் ஆவலாக, “என்ன சொல்லுகிறார் டாக்டர், ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணச் சொல்லுகிறாரா?” என்று பீதியுடன் கேட்டாள். 

“அந்த நிலைமையைத் தாண்டியாகிவிட்டது சுகந்தி; ‘கடைசி நேரத்தில் வந்து கூப்பிட்டால் என்ன செய்கிறது’ என்கிறார். இவ்வளவு வரைக்குமா சும்மா இருப்பாள் ஒருத்தி? இப்போது செய்த யோசனையை நேற்றே செய்திருந்தால்…”

பார்வதியின் சீரழிந்த அவல வாழ்வைப் பற்றிக் கணவ னிடம் விளக்கிக் கூறிக் கொண்டிருக்கும் சமயமா அது? 

“அடி பாவி. தங்க விக்கிரகம் போல குழந்தை…”

“போ…போ..உள்ளே போ, அவளிடம் போய் உளறி விடாதே சுகந்தி.” 

உள்ளே வரத் திரும்பியவள் இடைக் கழிக்கதவருகில் நின்ற பார்வதியைப் பார்த்துவிட்டாள் சுகந்தி. அவள் முகம் விகாரமாக மாறியது! 

“சுகந்தி. உங்கள் வீட்டுத் திண்ணையில் போட்டுக் கொள்ளலாமோ இல்லையோ ? இந்த வீட்டில் என் குழந்தை சாகவேண்டாமடி.. “

“பாவி சொல்லாதே. மயிரிழையில் ஆயுசு தப்பிவிட்டால் ஆகாதா? குழந்தை உள்ளே ஒண்டியாக இருக்கான் உள்ளே வா…”

“இன்னும் சிறிது நேரத்தில் ஒண்டியாகத் தானேடி எரிச்சுட்டு வரப்போறோம்? மேலே நடக்க வேண்டியதைன்னா இப்போ கவனிக்கணும் ?” 

”உள்ளே வாயேன் முன்னாடி..” 

“மாட்டேன். உள்ளே என்னவேலை? நீ போய் குழந்தையை எடுத்துண்டுவா. உங்காத்துத் திண்ணையிலே  போட்டுக்கலாமோல்லியோ?” 

“அடிபாவி…என்னடி சொல்றே ?” என்று வீரிட்டபடி லட்சுமிப் பாட்டி படியேறிவந்தாள்… பார்வதி மாமியாரை ஏற இறங்கப்பார்த்தாள், “மடியிலே என்னது பணம்தானே?” என்று கேட்டாள்… 

“ஆமாம்: ஆத்துக்கு அழைச்சுண்டுவா, அப்படி அவள் வரமாட்டேன் என்றால் பணத்தைக் கொடு என்றான் சாமா… இப்பவாவது சொன்னத்தைக் கேளூ. குழந்தையை எடுத்துண்டு வா வீட்டிற்கு…” 

“பணத்தை என்னிடம் கொடுக்கச் சொன்னாரா உங்க பிள்ளை?” 

“ஆமாம்.” 

“சரி, கொடுங்கோ அதை”. 

மாமியார் மடியிலிருந்த கத்தை நோட்டுகள் பார்வதி யின் கைக்கு மாறின ! அதை வெறித்துப் பார்த்தாள் பார்வதி. உள்ளே போயிருந்த சுகந்தி ‘ஐயோ’ என்று அலறிய சத்தம்கேட்டு “என்னடி பண்றே சுகந்தி, குழந்தையைச் சட்டுனு கொண்டுவா வெளியிலே…” மூர்த்தண்யமாகக் கத்தினாள் பார்வதி காட்டுக்கத்தலாக! 

குழந்தையைத் துவளத் துவளத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் சுகந்தி… 

கையிலிருந்த நோட்டுக்களை இரண்டாக்கி, நாலாகக் கிழித்து மாமியாரின் கைகளை எடுத்து அதில் வைத்துக் கீழே சிந்த “இந்தாருங்கள் உங்கள் பணம்” என்று சொல்லிவிட்டு விர்ரென்று நடந்து சுகந்தியைத் தொடர்ந்தாள் பார்வதி. 

ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு விரைந்த சுகந்தி குழந்தையை ரேழித் திண்ணையில் படுக்கவைத்து விட்டு உள்ளே ஓடினாள். கணப்பும், நீலகிரித் தைலமும் கொணர்ந் தாள். தைலத்தை உடம்பெங்கிலும் தடவி, தவிட்டை வறுத்துக் கொடுத்து பார்வதியை ஒத்தச் சொன்னாள். 

“எதற்கடி இந்த வீண் பிரயாசை ? உசிரு போன வருமா…” 

“இல்லேடி நெஞ்சுக்குழி தாழ்ந்து உசருகிறது பாரு நன்னா! மூச்சு இருக்கு. நான் ஓடிப்போய் ராமவாரியரைக் கூப்பிட்டுக் கொண்டு வறேன், குழந்தைக்குக் கண்டம் இருந்திருக்கிறது…’ 

வார்த்தையை முடிக்காமலே ராமவாரியர் வீட்டைப் பார்க்க ஓடினாள் சுகந்தி. 

பார்வதி ஒத்தடம் கொடுத்தவாறு, “அப்பா, ஸ்ரீனிவாஸா அநாத ரட்சகா, ஆபத்பந்துவாக வந்து என் குழந்தை ஆயுசைக்கொடுடா கோவிந்தா. எனக்கு உன்னைத் தவிர யாருடா கதி?” என்று கை நடுங்க, நா நடுங்க பெருமாளை இரந்து வேண்டினாள் பார்வதி. 

வயிற்றில் குடலே புரண்டு கொடுத்தது போன்ற வேதனை. தொண்டை காய்ந்து, அவன் மூச்சிலே அனல் பறந்தது! சில்லிட்ட உச்சி சூடுகண்டது, கை கால்களிலிருந்த குளிர்ச்சி நீங்கி, வெதவெதப்பு உண்டாயிற்று. மார்பிலே தைலத்தைத் தடவி முதுகிலே ஒத்தடம் கொடுக்கக் கொடுக்க குபுகுபுவென்று சூடு ஏறி உடல் சிலிர்த்தது குழந்தைக்கு. 

‘”அம்மா, குளிர்றதும்மா…” 

தொண்டை கம்மிய, கரகரப்பான ஈனக்குரல் பிறந்தது– சீனுவின் உயிர் தப்பியது என்ற அறிகுறிபோல! 

பார்வதிக்கு உடலும், உள்ளமும் பறவாகப் பறந்தது!

“குளிர்றதாடா தங்கம்? போத்தறேன், குளிர்போயிடும், உடம்பு நன்னா ஆயிடும்!” என்று கூறி போர்வையைப் போர்த்தி அணைத்துக்கொண்டாள் பார்வதி… 

“கஞ்சி வேண்டாம், இட்லித்தான் தின்பேன்…”

மீண்டும் சீனுவின் தொண்டை கட்டிய குரல் கீச்சிட்டது.

”ஓ! நெறைய, உடம்பு தேவலையாகட்டும்.. வேண இட்லி…” என்றாள் பார்வதி. 

அவள் ஆயுளிலேயே அநுபவித்திராத ஓர் அபூர்வ நிம்மதியும், நிறைவும் ஏற்பட்டன அவளுக்கு!

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *