“ஓம் கம் கணபதயே நமஹ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர்.
நான்கு தெருக்கள் இணையும் பகுதி அது. கார்னரில் அமைந்திருந்த அந்த பல அடுக்கு அபார்ட்மெண்ட் வளாகத்தில் காம்பௌண்ட் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது அந்த சின்ன பிள்ளையார் கோவில். கோவில் என்பதை விட அழகாக அமைக்கப்பெற்ற ஒரு மண்டபம் என்றே கொள்ள வேண்டும் . அபார்ட்மென்ட்டில் வசிப்பவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.
மேற்கு திசை நோக்கி அமர்ந்திருந்த விசேஷமான பிள்ளையாரை அபார்ட்மெண்ட் வாசிகள், அக்கம் பக்கத்தார், பள்ளி செல்லும் பிள்ளைகள், வாட்ச்மேன் என எல்லோருமே பார்க்காமல், வேண்டாமல் செல்வதில்லை. அவ்வளவு ஏன் ….. தினம் வரும் பால்காரர்கள், காய்கறி விற்பவர்கள் கூட ஒரு கும்பிடு போடாமல் அந்த இடத்தை தாண்ட மாட்டார்கள். அத்தனை பேருக்குமே இஷ்ட தெய்வம்தான் அந்த பிள்ளையார்.
தினமும் காலை ஒன்பதிலிருந்து பத்து மணிக்குள் நிதானமாக ஒரு அர்ச்சகர் வந்து பூஜை செய்து வைப்பார். அர்ச்சகருக்கு அடுத்து முக்கியமான ஒரு நபரும் உண்டு. ஒல்லியான தேகம்; கருத்த நிறம்; கிட்டத்தட்ட 70 வயது மதிப்பிடலாம் போன்ற தோற்றத்துடன், வெள்ளை கதராடை அணிந்து தினமும் தவறாமல் வரும் ஒரு பெரியவர்தான் அவர்.
அர்ச்சகர் பிள்ளையாரின் பழைய அலங்காரங்களை களைந்து விட்டு, அன்றைய பூஜைக்கான ஏற்பாடுகளை செய்கின்ற இடைப்பட்ட வேளையில் இந்த பெரியவர் தான் கொண்டு வரும் மயில் தோகை கட்டு ஒன்றினால் பிள்ளையாரை சுற்றியும், மண்டபத்தையும் சுத்தம் செய்வார். பூஜையில் கலந்து கொள்வார். பிரசாதம் வாங்கி கொள்வார். அமைதியே உருவாக, மௌனமே மொழியாக சற்று நேரம் அங்கு அமர்ந்து இருப்பார். பிறகு சென்று விடுவார். யாரிடமும் பேச மாட்டார். சில நாட்களில் மாலை வேளைகளிலும் வந்து சற்று நேரம் அமர்ந்திருப்பார்.
“அடாது மழை பெய்தாலும் விடாது பிள்ளையாரை காண வருபவர் இவர்தான்” கூடியிருக்கும் பெண்கள் பேசி சிரித்துக்கொள்வார்கள் . அது பாராட்டா அல்லது கிண்டலா அவர்கள் மனதிற்குதான் தெரியும்.
“அடுத்த தெருவில்தான் இருக்காரு.. மகன், மருமகள் வேலைக்கு போறவங்க. ரெண்டு பேரப்பிள்ளைங்க. அதுவும் ஸ்கூலுக்கு போன பின்பு பெரியவருக்கு வீட்டில் என்ன வேலை. அதுதான் இங்கே வந்து உட்கார்ந்து இருக்காரு. பூக்காரம்மா சொன்னாங்க” என்றாள் கீழ் தளத்தில் வசிக்கும் கீதா.
“ஆமாமா. தினம், தினம் இங்கே வந்து பிள்ளையாருக்கு துணையாக உட்கார்ந்து கொண்டு ரோட்டில போறவங்க, வரவங்களை நோட்டம் பார்க்கறதுதான் வேலை . ம்…..ஹூம்” என்று அலுத்துக் கொண்டாள் இன்னொருத்தி.
“யார் கிட்டயாவது ஏதாவது பேசுகிறாரா. ரொம்பத்தான் அழுத்தம். என்ன மனுஷனோ” என்றாள் இன்னொருத்தி.
எல்லோரது பேச்சையும் கேட்டுக்கொண்டு இருந்த கோகிலாவிற்கு வருத்தமாக இருந்தது. அவளும் அந்த வீடுகள் ஒன்றில் வசிப்பவள்தான்.
“ஏன்பா ….. இப்படியெல்லாம் பேசுறீங்க ? அந்த பெரியவர் யார் வம்புக்காவது வருகிறாரா ? சாமி எல்லோருக்கும் பொதுவானவர் தானே. அவர் பாட்டுக்கு வருகிறார்; சாமியை பார்க்கிறார்; போகிறார். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல ஏன் இப்படி எல்லோரும் அவரை குற்றம் சொல்றீங்க” என்று சலித்துக்கொண்டாள்.
“ஆமாமா….. சாமிக்கு யாராவது போட்டு விட்டு போகும் சில்லறை காசுகளை மயில் தோகையால சுத்தப்படுத்தும் சாக்கில் எடுத்துக்கொள்கிறார். நான் ஒரு நாள் பார்த்தேன் ” என்றாள் எதிர் வீட்டு வள்ளி.
“தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. அவர் அப்படியெல்லாம் செய்யக்கூடியவர் போல தெரியவில்லை. அவர் காதில் விழுந்தால் கஷ்டமாக இருக்கும். பேசாமல் இரு” என்று வள்ளியை அடக்கினாள் கோகிலா.
ஒரு நாள் ஆர்வ மிகுதியில் கோகிலா தானே சென்று அவரிடம் பேசினாள். “அங்கிள் நாங்க இந்த பிளாட்ல தான் இருக்கோம். நீங்க எங்க இருக்கீங்க?” என்று பேச ஆரம்பித்தாள்.
மெல்ல நிமிர்ந்து பார்த்த பெரியவர் லேசாக சிரித்தபடி தலையாட்டி விட்டு “இங்கே பக்கத்து தெருவிலதான் இருக்கேன்” என்று மெதுவாக சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
இது போதுமே அவளுக்கு. அதன் பின் தினமும் அவர் கிளம்பும் முன் அவரிடம் ஏதாவது வார்த்தைகள் கொடுத்து பேச ஆரம்பித்தாள். “கீழ் தளத்தில்தான் எங்க வீடு. மாமனார், மாமியார் இருக்காங்க. வாங்களேன் எங்க வீட்டில கொஞ்ச நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அப்புறம் போவீங்களாம். வாங்க”. என்று ஒரு நாள் அழைத்தாள்.
“வேண்டாம்மா. என் வீட்டிற்கு யாரையும் கூப்பிட எனக்கு வசதி வாய்ப்பு இல்லாத போது நான் யார் வீட்டிற்கும் போவதில்லம்மா. எனது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நான் வரவில்லை” என்று மறுத்து விட்டார்.
மகன் குடும்பத்துடன் பேரப்பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஆசையின் காரணமாகவே தன் சொந்த கிராமத்தை விட்டுவிட்டு இங்கு வந்து வசிக்கிறார். கடமைக்காக காப்பாற்றும் மகன்; கடனே என்று உணவு தரும் மருமகள். ஆனால் அன்பான பேரப்பிள்ளைகள் மட்டுமே அவருக்கான ஆறுதல். வேளைக்கு சாப்பாடு ; வெராண்டாவில் உறக்கம்; பேரப்பிள்ளைகளுடன் பேச்சு; தினம் தினம் பிள்ளையார் தரிசனம்….. என்றுதான் அவரது அன்றாட வாழ்க்கை.. கிராமத்திற்கும் திரும்பாமல், முதியோர் இல்லத்திலும் சேராமல், மகன் வீட்டிலும் அன்பில்லாமல் திரிசங்கு சொர்க்கமாக அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இவை எல்லாம் கோகிலா அவரிடம் அவ்வப்போது துருவி துருவி கேட்டு தெரிந்து கொண்டவை.
“இங்கே எல்லோரும் உங்களை ஏதாவது குற்றம் சொல்ராங்களே. ஏன் பேசாம இருக்கீங்க” என்பாள்.
“என்னை பற்றி பிள்ளையாருக்கு தெரியும். எதுக்கு இவர்களுக்கு வீணா விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கணும். என் பேரப்பிள்ளைகளுக்கு அப்புறம் இந்த பிள்ளையார்தான் எனக்கு ஒரே பிரெண்ட். இப்போ நீயும்” என்றார் ஒருநாள். அதைக்கேட்டவுடன் கோகிலாவிற்கு கண்ணீரே வந்து விட்டது.
அன்று முதல் தினமும் அவருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருப்பது அவளது வழக்கமானது.
எத்தனை வற்புறுத்தினாலும் அவள் வீட்டிற்கு அழைத்தால் வருவதற்கோ, சாப்பிட எதுவும் கொடுத்தாலோ தீர்மானமாக மறுத்து விடுவார். உன் அன்பான வார்த்தைகளே போதும் என்பார்.
“அங்கிள் உங்களுக்கு பிடிவாதம் அதிகம்தான்” என்பாள் கோகிலா. “அது மட்டும்தான் மிச்சம். இருந்து விட்டு போகட்டுமே” என்பார் பதிலுக்கு.
கோடை விடுமுறைக்காலம். “அங்கிள்…. பசங்களுக்கு ஸ்கூல் லீவு. அண்ணன் பெண் கல்யாணம். அம்மா ஊருக்கு போகிறோம் . நாங்கள் திரும்ப வருவதற்கு எப்படியும் ஒரு மாதம் ஆகி விடும் நான் வந்தவுடன் உங்களுக்கும், பிள்ளையாருக்கும் இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை எல்லாம் எனக்கு சொல்ல வேண்டும்” என்று கிண்டலாக கூறி விட்டு கோகிலா ஊருக்கு போய் விட்டாள்.
ஊரிலிருந்து வந்தவுடன் வீட்டை ஒழுங்கு செய்வது, பிள்ளைகளின் பள்ளிக்கூட வேலைகள் என்று நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன .
“எங்கே அங்கிள் கோவில் பக்கம் வரவே இல்லை. என்ன ஆயிற்று? யாரிடம் கேட்பது ? ஊருக்கு போய் விட்டாரா, தெரியவில்லையே?” என்று கோகிலாவிற்கு கவலையானது.
பூக்காரியிடம் விசாரித்தபோது. “பெரியவருக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க பிள்ளைங்க சொன்னாங்கமா” என்றாள்.
“எந்த ஆஸ்பிடல்; கேட்டு கொண்டு வருகிறாயா நாம் போய் பார்த்து விட்டு வரலாம்”
சரிம்மா நாளைக்கு தெரிந்துகொண்டு வரேன். போகலாம் என்றாள் அவளும்.
ஆனால் மறுநாள் காலை தெருவில் ஒரே சாவு மேள சத்தம். பதறிப்போய் வாசலுக்கு ஓடினாள் கோகிலா. அவளுக்கு முன்பே தெரு முனை வரை சென்று பார்த்து வந்த அவள் கணவர் “பாவம். அந்த கதர் சட்டை பெரியவர். பிள்ளையாரை பார்க்க தினம் வருவாரே அவர்தான். நேற்றிரவு இறந்து விட்டாராம். எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். உனக்குதான் அவரை நன்றாக தெரியுமே. வரியா….. அவர் வீட்டிற்கு போய் பார்த்துவிட்டு வரலாம்” என்று அழைத்தார்.
அதைக்கேட்டு அதிர்ந்து போன கோகிலா “யாரையும் தன் வீட்டிற்கு அழைக்க முடியவில்லையே; தானே அங்கு அழையா விருந்தாளி; அதிகப்படி என்று அவருக்கு ரொம்ப வருத்தம். இப்போ அவர் இறந்த பின்பு அங்கே போய் அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. நான் வர மாட்டேன். நான் எப்போதும் பார்க்கும் பிள்ளையார் அருகில் உட்கார்ந்து இருக்கும் அந்த உருவமே என் மனதில் இருக்கட்டும்” என்று குமுறி குமுறி அழுதாள். அவள் கணவர் அவளை சமாதானப்படுத்தினார்.
“ஒரு நாள் தவறாமல் பிள்ளையாரை பார்க்க வந்து விடுவார். அவர் பாட்டுக்கு வருவாரு ; மண்டபத்தை சுத்தம் செய்வாரு. உட்கார்ந்து இருப்பாரு. போறவங்க வரவங்களை வேடிக்கை பார்ப்பாரு; போய் விடுவாரு, யாரிடமும் பேச மாட்டாரர் ரொம்ப அமைதி”. தெருவில் கூடியிருந்தவர்கள் பேசிக்கொண்டனர். அதே மனிதர்கள். அதே வார்த்தைகள்தான். சொல்லிய விதம்தான் வேறு. அன்று அலட்சியம்; இன்று அனுதாபம். கோகிலாவிற்கு அவர்களை பார்க்க, பார்க்க ஆத்திரம் மிகுந்தது. என்ன மனிதர்கள் இவர்கள் சே…
மனிதர்கள் மாறுவதில்லை.
அவர்களின் முகமூடிகளே
அவ்வப்போது மாறுகின்றன
என்று மனதில் தோன்றியது.
கிட்ட தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மேளம் என்ன; பட்டாசு வெடிப்பதென்ன; பூமாலைகள் என்ன; பூத்தூவல் என்ன… என்று பெரியவரின் உடலை தூக்கி சென்றனர். அட… போங்கடா பெரியவர் இருந்தவரை ஒரு கரிசனம் இல்லை; கவனிப்பு இல்லை. அன்பும் அனுசரணையும் இல்லை. இப்ப ஏக மரியாதை. என்று வெறுப்பாக வந்தது.
“அடடா பிள்ளையார் கோவில் க்ரில்லுக்கு திரை போட மறந்துட்டாங்கப்பா,”
“பரவாயில்லை. விடுங்க . இனிமேல் போய் போட வேண்டாம். நாளைக்கு குருக்களை புண்யாவசனம் பண்ண சொல்லி விடலாம்.” யாரோ பேசிக்கொண்டே சென்றனர் .
உள்ளே நின்றுகொண்டிருந்த கோகிலாவிற்கு எல்லாம் கேட்டது . சிறிது நேரத்திற்கு பிறகு பிள்ளையார் கோவிலுக்கு ஓடினாள். “பிள்ளையாரப்பா…. கடைசியாக உன்னை பார்த்து விட்டுதான் அங்கிள் போனாரா, அதுதான் திரை போடாமல் இருக்க வைத்தாயோ” என்று அழுதாள்.
“இல்லை. நிரந்தரமாக என்னிடமே அழைத்துக்கொண்டு விட்டேன்” என்பதை போல பிள்ளையார் பார்த்துக்கொண்டு இருந்தார். பிள்ளையாரின் இடது பக்கத்தில் சுவரோரமாக மயில் தோகை கட்டு சார்த்தி வைக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்த கோகிலாவுக்கு அழுகை தொண்டையை அடைத்தது. தாங்க முடியாமல் அங்கேயே அமர்ந்து “ஓ” வென்று அழ ஆரம்பித்தாள்.